எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 04

zeenath

Active member

அத்தியாயம் 4​

இரவு உணவிற்கு வராத மகனை அவன் அறையில் சென்று பார்த்த திலோத்தமை கண்களுக்கு மேலே கையை வைத்து அவன் படுத்து இருப்பதை பார்த்து அவன் அருகில் சென்றவர், மெதுவாக அவன் தலையைக் கோதி கொடுத்தார்.​

"ராகவ், என்ன ஆச்சும்மா? உடம்பு சரியில்லையா?" எனப் பரிவாகக் கேட்ட தாயின் மடிக்கு தலையை மாற்றியவன், நன்றாக முகத்தைப் புதைத்துக் கொண்டான் அவர் மடியில்.​

மகனின் செயலில் எதுவும் புரியாமல் அவன் சஞ்சலத்திற்கு என்ன காரணம் என்பதும் தெரியாமல் அமைதியாகவே அவன் தலையைக் கோதிக் கொண்டிருந்தார் திலோத்தமை.​

"அம்மா பசிக்குது மா"​

என்ற மகளின் அழைப்பில், குனிந்து மகனைப் பார்க்க, அவனும் கண் திறந்து அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,​

" போங்கமா வரேன்"​

என்ற படியே எழுந்து அமர்ந்தான்.​

மகனின் கூற்றில் எழுந்து வெளியில் வந்தவர்,​

" எதுக்குடி கத்தர? எடுத்து வச்சு சாப்பிடேன்"​

என்ற படியே வர, இவருக்காகக் காத்துக் கொண்டிருந்து மகளோடு கணவனும் அமர்ந்திருப்பதை பார்த்தவர், அவர்களுக்குச் சூடான சப்பாத்திகளோடு காலிஃப்ளவர் குருமாவையும் பரிமாற மகனும் வந்து அமர்ந்தான், அமர்ந்தவன் அன்னையையும் தன் அருகில் அமர்த்தி, அவருக்கான உணவை இவன் பரிமாற, பெருமையாகக் கணவனையும் மகளையும் ஒரு பார்வை பார்த்தவர், சாப்பிட ஆரம்பித்தார்.​

"உடம்பு எதுவும் சரியில்லையா ப்பா?"​

என்ற அன்னையின் கேள்விக்கு,​

" இல்லம்மா லேசா தலைவலி அவ்வளவுதான், இப்ப பரவாயில்ல"​

என்ற படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது அவன் தொலைபேசி அடிப்பதற்கான சத்தம் அதை எடுத்து வர எழ முயன்றவனை தடுத்தவர்,​

" இப்போ தான் சாப்பிட உட்கார்ந்து இருக்கே! சாப்பிட்டு போய் யாருன்னு பாரு"​

என்றவரின் கூற்றுக்கு இணங்க இவனும் உட்கார, அடித்துக் கொண்டிருந்த தொலைபேசியும் சத்தத்தை நிறுத்தி இருந்தது. அன்னையின் வற்புறுத்தலில் சாப்பிட அமர்ந்தவனுக்கு அதற்கு மேல் உணவு இறங்கவில்லை.. ஒரு சப்பாத்தியோடு மல்லு கட்டியவனுக்கு அவனின் தொலைபேசி அடிப்பதற்கான சத்தம் மறுபடியும் கேட்க, அதையே சாக்காக வைத்துக் கொண்டு வேகமாகக் கைக்கழுவி எழுந்தவனை கேள்வியாகப் பார்த்த அன்னையிடம்,​

"யாருன்னு தெரியல ம்மா?.. தொடர்ந்து கால் வந்துகிட்டே இருக்கு. என்னனு பாத்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பசிச்சா சாப்பிடுறேன்.." என்ற படியே வேகமாக நடந்தான் தன் அறையை நோக்கி.​

அடித்துக் கொண்டிருந்த போனை வேகமாக எடுத்தவன் கௌதம் என்ற பெயரைப் பார்த்தபடி ஆன் செய்து காதில் வைத்து..​

"என்னடா பிரச்சனை உனக்கு..? சும்மா கால் பண்ணிக்கிட்டே இருக்க என்ன தெரிஞ்சுக்கணும் இப்போ?.." என்றான் சற்று கோபமாக..​

"ஏன் டா?.. போன் எடுத்தவுடனே ஹலோனு சொல்ற பழக்கம் எல்லாம் இல்லையா..? எதுக்கு இப்ப வல்லுன்னு கத்துற.."என்றான் இவனும் சற்று எரிச்சலுடன்​

அங்குப் பதில் எதுவும் வராமல் அமைதியாக இருப்பதைக் கண்டு இவனும் தன் குரலைக் குறைத்தவனாக.​

"சும்மா தான்டா போன் பண்ணினேன். என்ன பண்றேன்னு தெரிஞ்சுக்க தான்.." என்றான் தன்மையாக..​

தன் மீது நண்பனுக்கு இருக்கும் அக்கறையைத் தெரிந்தவனாக இவனும் சற்று மெதுவாகவே​

"இப்போ தான்டாச் சாப்பிட உட்கார்ந்தேன்.." என்றவன் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே "ஓஹோ! சரி சரி சாப்பிடு, சாப்பிடு நான் அப்புறம் கூப்பிடுகிறேன்.." என்றபடி வைத்து விட்டான்.​

"டேய்! டேய்! திரும்பக் கூப்பிடாத" என்பதை கேட்கத்தான் அவன் அங்கு இல்லை லைனில்..​

"இவனோட முடியல.." என்று சலித்தவனாகப் போனை டேபிளில் வைத்துக் கண்மூடி அமர்ந்தவனுக்கு மறுபடியும் போன் அடிக்கும் சத்தம் மிகுந்த எரிச்சலையை கொடுத்தது...​

"செத்தடா நீ!.." என்று சப்தமிட்டபடியே கோபத்துடன் போனை எடுத்துப் பார்க்க அங்குத் தன்னவளின் பெயரைக் கண்டு என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கே புரியாமல் அதிர்வோடு போனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.. அதை அட்டென்ட் செய்ய வேண்டும் என்ற ஸ்வரனை இல்லாமல்..​

ஒரு முறை முழுதாக அடித்து ஓய்ந்த பின்பு தான் தன்னவள் எதற்குத் தன்னை அழைத்தாள் என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு.. அப்படி கேள்வி வரும் போதே தன்னவள் என அவளை அழைப்பதை நினைத்துத் தன்னவள் தானா அப்படி அவளைச் சொல்வது சரியாகுமா என்ற வேதனையில் போனை எடுத்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு தனக்குள்ளாகவே யோசிக்க ஆரம்பித்தான் எதற்கு அழைத்திருப்பாள் என்று..​

குழப்பத்தோடு சிந்தித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையைத் தடை செய்தது மறுபடி வந்த அழைப்பு.. சிறிது தடுமாற்றத்தோடும் பயத்தோடும் கையில் இருந்த போனை பார்த்தவனுக்கு மறுபடியும் அவளிடமிருந்து வந்த அழைப்பு என்பதை மூளை கிரகித்துக் கொள்வதற்கு முன்பே அவன் விரல்கள் சற்றும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றிருந்தன...​

எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் போனை காதில் வைத்தவன் அமைதியாக இருக்க​

"ஹலோ!"என்ற அவளின் இனிமையான எப்போதும் அவனை மயக்கும் குரல் கேட்டது.. ஆனால் அதில் சிறிது சோகமும் சலிப்பும் இருந்ததோ!.. என இவன் எண்ணுவதற்குள்ளாக மறுபடியும் "ஹலோ!" எனக் குரல் கேட்க, அதற்கு மேல் தாமதிக்காமல்.​

"ஹலோ வனி.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?.." என்றான் இவன் வேகமாக..​

"நல்லா இருக்கேங்க.. போனை எடுத்ததும் சத்தமே கேக்கலையா.. அதான் லைன் கட் ஆயிடுச்சோ அப்படின்னு நினைச்சேன்.. இதுக்கு முன்னையும் போன் பண்ணினேன், பெல் அடிச்சுட்டே இருந்தது நீங்க எடுக்கல.. ஒரு சமயம் லைன்ல தான் எதுவும் ப்ராப்ளமோ என்று நெனச்சேன்" என்றாள் அவளும்.​

"இல்லை இல்லைங்க லைன்ல எல்லாம் ப்ராப்ளம் எதுவும் இல்லை.. சாப்பிட்டுட்டு இருந்தேன் சத்தம் கேட்கல அதான்.."​

"ஓஹோ! சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?.."​

"ச்சேசே இல்ல, இல்ல, சொல்லுங்க.. என்ன விஷயம்?.." என்றான் தன் மனதில் இருக்கும் துயரத்தை மறைத்துக் கொண்டு..​

"எனக்குக் கல்யாணம் முடிவாயிருக்கு, அதான் உங்களை இன்வைட் பண்ணலாம்னு போன் பண்ணினேன்.. உங்களுக்கு வாட்ஸ் ஆப்ல இன்விடேஷன் அனுப்பி வைக்கிறேன் நீங்கக் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்.."​

"ஓ! அப்படிங்களா கங்கிராட்ஸ்.."​

"தேங்க்ஸ்ங்க கண்டிப்பா வந்துடுங்க"​

என்ற படியே போனை வைத்து விட்டுத் தன் அருகில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அத்தையை பார்த்து மெதுவாக உதட்டை இழுத்து புன்னகைப்பதாகப் பெயர் செய்து கண்களை மூடிக்கொண்டாள் அயர்வாக.​

வாழ்த்து சொன்ன அவனுக்கும் வார்த்தையிலும், மனதிலும் மகிழ்வு இல்லை. வாழ்த்தை வாங்கிய இவளுக்கும் வார்த்தையிலும் மனதிலும் மகிழ்வு இல்லை..​

தன் அருகில் அமர்ந்து வேறு யாருக்கேனும் தொலைபேசியில் அழைத்து, திருமணத்திற்கு அழைப்பு விடுவேனா.. என கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த அத்தையை பார்த்தவளுக்கு ஆயாசமாக இருந்தது..​

"என்னத்த? இங்கேயே உக்காந்து என்னையே பாத்துட்டு இருக்க போறியா? வேற வேலை இல்லையா உனக்கு? போ எந்திரிச்சு.."​

என்றாள் சலிப்பாக​

"என்ன தான்டிப் பிரச்சனை? சொல்லவும் மாட்டேங்கற.. உன் பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணுன்னு நானா சொன்னபிறகு ரெண்டு பேருக்குக் கூப்பிட்ட.. அதோட ஓஞ்சி உக்காந்துட்ட, இன்னும் இவ்வளவு பேர் இருக்காங்க பாரு.." எனக் கையில் வைத்திருந்த லிஸ்ட்டை அவளிடம் காண்பித்து முறைத்துக் கொண்டிருந்தாள் அவளின் அத்தை​

"ப்ச் கூப்பிடுறேன் அத்தை" என்றாள் சலித்தபடி.. அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த அத்தையை கண்டவள்​

"கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் அத்தை.. என்னை விடு, நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்"என்றாள் அவள்... இவளின் பதிலில் அதிர்ந்த அத்தை​

"கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் டி இருக்கு..இன்னும் எப்ப கூப்பிடுவ? இப்ப என்ன பதினோரு மணிக்குத் தூக்கம் உனக்கு.. ? எந்திரி முதல்ல.. முகத்தில் ஒரு கல்யாண கலையே இல்லடி உனக்கு.இப்படி இருந்தா பாட்டில இருந்து தாத்தாவரைக்கும் எல்லாரும் கேட்பாங்க. என்ன ஆச்சுன்னு? என்னன்னு சொல்லவும் மாட்டேங்கற..? மனசுலையே போட்டு மறுகிட்டு இருக்கே.. என்னடா செய்து உனக்கு? என்றாள் அவள் அருகில் அமர்ந்து அவளை லேசாக அனைத்து படி..​

எப்போது என ஏங்கிக் கொண்டிருந்தாள் போல். அத்தையின் அணைப்பை இறுக்கி கொண்டு அவள் தோளில் முகம் புதைத்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது... தன் அழுகை அத்தையை பாதிக்கும் என எச்சிலை கூட்டி முழுங்கி அழுகையை அடக்கினாள்.. அவளின் தவிப்பை பார்த்த அத்தைக்கும் மனம் தாங்கவில்லை மெதுவாக அவள் முதுகை வருடிக் கொண்டே​

"வினி மா என்னடாப் பிரச்சனை..? சொல்லு .."என்றாள் மெதுவாக.. 'தனக்கே தெரியாத ஒன்றை இவள் என்னவென்று தன் அத்தையிடம் சொல்வாள். தன் மனம் என்ன நினைக்கிறது. அது எதை வேண்டுகிறது என்பதே புரியாத நிலை பெண்ணுக்கு...அவளின் தவிப்பு எதனால் மனம் எதையோ கண்டு மறுகுகிறது, பயப்படுகிறது. என்பது மட்டுமே அவளுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது... ஆனால் அது ஏன் என்ற விளக்கம் தான் அவளுக்குக் கிடைக்கவில்லை.. அதை யாரிடமும் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் அவள் விரும்பவில்லை.. தான் பயப்படுவது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும் பயப்பட செய்ய வேண்டாம் என்ற நிலைதான் அவளுக்கு.. என்ன நடக்கிறதோ தன் தலையில் என்ன இறைவன் எழுதியிருக்கிறானோ அதுபடி நடக்கட்டும்..' என நினைத்தபடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள். தன் அத்தையின் அணைப்பிலிருந்து மெதுவாக வெளிவந்தவள் சிரிப்பைத் தன் முகத்தில் ஏற்றிக்கொண்டாள்..​

இவள் முகம் பார்த்த அத்தைக்கும் தன் அண்ணன் மகளின் முகத்திலிருந்து சிரிப்பு வெறும் முகமூடி என்பது புரிந்து இருந்தாலும் அவள் வாய் திறந்து சொல்லாதவரை தனக்கும் எதுவும் தெரியப் போவதில்லை என்ற நிலை புரிந்து அமைதியாக அவளின் கண்ணம் வருடி,​

"தூங்குறதுனா தூங்கு.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்" என்று கிளம்ப முயன்றாள்..​

"இல்ல அத்தை நான் ஓகே தான்.. இப்ப மற்றவங்களுக்கும் போன் பண்ணி இன்வைட் கொடுத்துடறேன் நீ கொஞ்சம் கூடவே இரு.." என்றாள் முகத்தைச் சுருக்கிக் கொண்டே​

"இது தான அப்போ இருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.." என்றாள் இவளும் சலித்தபடி..​

"சரி, சரி சலிச்சுக்காதே..என் செல்ல அத்தை ல்ல வா, வா நீ ஒரு, ஒரு நம்பரா படிச்சு சொல்லு நான் கால் பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படியே நீ டிக் பண்ணிக்கிட்டே வா ஓகே.." எனத் தலை சரித்து கேட்டபடி​

மறுபடியும் விடுபட்ட நண்பிகளுக்கு லிஸ்ட் பிரகாரம் அழைப்பு விடுக்க ஆரம்பித்தாள் திருமணத்திற்கு. முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடன்..​

எவ்வளவு காலம் நிலைக்கும் இந்தச் சிரிப்பு ஆண்டவனுக்கே வெளிச்சம்.. நாமும் காத்திருப்போம் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய..​

மௌனம் தொடரும்...​

 
Top