எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மணிமேகலை - கதை திரி

Status
Not open for further replies.
1678798705672.jpg


ஒரு சின்ன intro :


இந்த தளத்தில் என்னுடைய முதல் கதை! ஒரு திகில் சிறுகதை!
படித்து பார்த்து கருத்துக்கள் தெரிவிக்கவும் 🙏


 
மணிமேகலை
அத்தியாயம் 1 :

தொலைபேசியை , எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாயோடு சேர்த்து வைத்து , வேறு எவருக்கும் கேட்காத வண்ணம் , கிசுகிசுப்பாக பேசினேன்.
மாதவி அத்தை குறுக்கும் நெடுக்கும் , என்னை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நடந்தபடி வேலையாக இருந்தாள்.
யாரு ? புருவம் உயர்த்தி கண்களால் கேட்டாள்.
தாத்தா ! வாய் அசைத்து ஓசை இல்லாமல் பதில் உரைத்தேன் . தலையாட்டிவிட்டு ,மீண்டும் அதே புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றாள்.
"என்ன ஊரு தாத்தா இது ? எனக்கு பிடிக்கவே இல்லை . எங்க பாத்தாலும் ஒரே காஞ்ச இலையா கெடக்கு " என்றேன் . தாத்தா அட்டகாசமாக சிரித்தார் .
"எனக்கு பிடிக்கலேன்னு சொல்தேன் , நீ சிரிக்கியா?"
"லேய் ! வேற என்ன பண்ண சொல்லுத? இங்க நம்ம ஊர்ல வேற நல்ல காலேஜ் இல்லேல்லா ? படிப்புதாம்மா முக்கியம் " என்றார் தாத்தா .
"அதுக்கு , இப்படியொரு ஊரா"?
"போதும் போதும் ! இந்த ஊரு கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் " என்று ஆச்சி உரக்கச்சொல்லுவது கேட்டது .
"இப்போ இந்த கிழவிக்கு என்ன வேணுமாம் ? வந்தேன் அவ்ளோதான் " என்றேன் பற்களை கடித்தபடி . ஆனால், அவள் குரல் கேட்டதும், மூளை , அவளை பார்த்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது என்ற செய்தியை கண்களுக்கு நொடி பொழுதில் அனுப்பியது . கண்களை மலங்க விழித்து அழுகையை முழுங்கினேன்.
" அவ கெடக்கா ! நீ என்ன இவ்ளோ ஆவலாதி சொல்லுத ? உன்ன ஹாஸ்டெல்ல விட மனசில்லாம , சொந்த ஊரவிட்டு, சொந்த வீட்டை விட்டு , உங்க அப்பா அம்மாவும் உன்கூடவே வந்துட்டாங்க . அப்பறம் என்னல?"
"எனக்கு சொல்ல தெர்ல தாத்தா ! பசுமையா,துடிப்பா இருந்த ஊரவிட்டு , ஏதோ சிமெண்ட் சுடுகாட்டுக்கு வந்தமாதிரி இருக்கு. இங்க வீடுங்க எல்லாம் ரொம்ப பெருசு பெருசா இருக்கு . உள்ள ஆள் இருக்கிற சுவடே இல்ல. எப்பவும் அழுது வடியுது"
"புது இடமில்ல! கொஞ்ச நாள்ல பழகிரும். உங்க வீடு பிடிச்சிருக்குல்ல?"

நான் ஒர கண்ணால் மாதவி அத்தையை பார்த்துவிட்டு சொன்னேன்
"இந்த வீடு அதுக்கு மேல ! எப்பவும் இருளோன்னு இருக்கு . அப்பாவோட friend வீட இல்லாம இருந்தா இதுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டேன் . வீட்டுக்கு உள்ள இருந்து நம்ம portionக்கு படிக்கட்டு போது. அது ஒன்னுதான் எனக்கு பிடிச்சிருக்கு. அம்மா சொன்ன மாதிரி safe ."
"சரியாப்போயிரும்ல ! உனக்கு set கு ஒரு பொண்ணு இருக்கால்ல அங்க ?"
"என்னைவிட ரெண்டு வயசு சின்னவ "
"சரி ! அவளை friend பிடிச்சுக்கோ . நான் சீக்ரம் வாரேன்"
"சரி தாத்தா ! சீக்ரம் வா! அந்த கிழவியும் கூட்டிட்டு வா ."
இணைப்பு துண்டிக்கப்பட்ட பீப் ஒலி கேட்டு மனமில்லாமல் தொலைபேசியை வைத்துவிட்டு நகர்ந்தேன் .
முதல் கட்டிலிருந்து செங்குத்தாக எரிய படிகளில் ஏறி எங்கள் வீட்டிற்கு (தற்போது குடிபெயர்ந்துள்ள ) வந்தேன் .
அப்பாவும் அம்மாவும் வீடு ஒதுக்குவதில் முனைந்திருந்தார்கள் . உதவி வேணுமா என்றேன் .
"இப்போதைக்கு தொந்தரவு பண்ணாத . அதுவே பெரிய உதவி " என்றார்கள் .
அந்த சிறிய வீட்டை மெல்ல அளந்தேன் . படிக்கட்டு ஏறியது ஒரு பெரிய பட்டாளை(hall ). பட்டாளைக்குள் நுழைந்ததுமே இடது பக்கம் ஒரு கதவு , தட்டடிக்கு செல்ல . அந்த வாசலை தொட்டடுத்து இன்னொரு கதவு, அடுத்த அறை. அதை ஒட்டி சமையலறை மற்றும் குளியலறை . வீட்டின் வலது பக்கத்தில் ஒரே கதவு . ஒரே தாசா(balcony ).
என்னவோ இங்கே எனக்கு ஒட்டவில்லை . ஏதோ ஒன்று மனதில் குறுகுறு என்று இருக்கிறது.
'சாமி ரூம் எங்க செட் பண்ண?" அம்மா கேட்டாள் .
"இடமே இல்லையே அதுக்கு "

"ஆமாம் ! இளங்கோ அப்பாக்கு சாமி நம்பிக்கை இல்லை .
இவங்க வீட்ல எல்லார் பேரையும் பார்த்தாலே தெரியுமே" என்றார் அப்பா .
"அது வேறயா "??

அந்த தாத்தா இப்போது உயிரோடு இல்லை என்பது எனக்கு தெரியும் . ஆனால் அவர் நாத்திகர் என்பது தெரியாது .
மெல்ல தட்டடிக்கு வந்தேன் . எதிரே திறந்தவெளி தோட்டம் இருந்தும் ஏனோ
பசுமை இல்லை . வறட்சியாகவே தோன்றியது .
மேலே அண்ணாந்து வானத்தை பார்த்தேன் . மேகங்கள் விரைவாக ' இங்கே இருந்து நீயும் ஓடு ' என்பது போல ஓடியது . இப்படி வேகமாக விரையும் மேகங்களிலும் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது . காற்று என் கூந்தலை மொத்தமாக விரித்து பின்னுக்கு தள்ளி அலைக்கழிக்கும் வரை காற்றின் வேகம் கூடியதை நான் உணரவில்லை . கண்களில் திரண்ட நீரை அப்படியே உறுஞ்சி எடுத்தது காற்று . இப்போது காற்றில் ஆடும் ,எதிரே உள்ள தோட்டம் வேறு விதமாக தெரிந்தது .
இவ்வளவு நேரம் இதை எப்படி கவனிக்காமல் போனேன் !
தோட்டத்தின் நடுவில் , தலைவிரி கோலமாக நான்கு கைகளை அகல விரித்து பிரம்மாண்டமாய் நின்றது ஒரு மாமரம் . மற்ற மரங்கள் ஒவ்வொரு திசையில் இதற்கு அரணாக நிற்பது போல இருந்தது . பலமான காற்றில் மாமரம் பேயாட்டம் ஆடியது . அப்போது , அதன் தண்டு பகுதியில் யாரோ செதுக்கியது போல ஒரு உருவம் மெல்ல விரிந்தது .
மரப்பட்டைகள் , வரிகள் இவைகள்தான் அப்படி தெரிகிறதா ? பொதுவாக இப்படி உருவங்களை மேகங்களில் காணலாம் . ஆனால் இது எத்தனை முறை பார்த்தாலும் அதே உருவம் ! முழுக்கை ஜிப்பா மற்றும் வேஷ்டி அணிந்து , என்னை கூர்ந்து பார்த்து சிரிக்கும் ஒரு தாத்தாவின் உருவம் ! உடல் புல்லரித்தது . கால்கள் பின்னுக்கு தாமாக நகர்ந்தது .
"அம்மாஆ! இங்க வா "
"எங்க டி? "
"வாயேன் "
"என்ன சொல்லு "
அம்மாவை தர தர என்று இழுத்து வந்தேன் .
"அங்க ஏதாது உருவம் தெரிதா மரத்துல ?"
அம்மா என்னை எற இறங்க பார்த்தாள்.
"சும்மா என்னத்தாயது சொல்லிக்கிட்டு இருக்காத!"
"பாரும்மா "
"எனக்கு ஒன்னும் தெரில " சொல்லிக்கொண்டே போய்விட்டாள் .
"அப்பா ! நீ சொல்லு . மரத்துல ஏதாது உருவம் தெரிதா"
"எங்க?"
"மேல இல்லப்பா ! உடம்புல , நடுல "
அப்பா கூர்ந்து பார்த்தார்
"பூனையா"
"இல்லை ஒரு தாத்தா . முன்மண்டை வழுக்கை "
அப்பா தன் தலையை தடவிவிட்டு
"அங்கேயும் வழுக்கையா? " என்றார் .
"வெளயாடாதப்பா "
"சங்கரி ! நீதான் வெளயாடற. பேசாம உள்ள வா "
நான் மறுபடி பார்த்தேன் . எனக்கு பார்த்த உடன் அந்த உருவம் விரிந்தது . எப்படி ?எல்லாரும் பொய் சொல்கிறார்களா ? இல்லை எனக்கு மட்டும் தெரிகிறதா ?
எனக்கு வேஷ்டி மடிப்பு கூட கச்சிதமாக தெரிகிறதே ! 'வந்துட்டியா ' என்பது போல ஒரு சிரிப்பு . எனக்கு வியர்க்க ஆரம்பித்தது .
"சங்கரி ! அங்க ஒன்னும் இல்ல . உள்ள வா " அம்மா கூப்பிட்டாள்.
"எனக்கு தெரியுது . ஏன் உங்களுக்கு தெரியல ? கொஞ்சம் கூடவா யாருக்கும் தெரில ?" கத்தினேன் .

"எனக்கு தெரியுது " என் தோளுக்கு மிக அருகே கேட்டது ஒரு குரல் . சுழன்று திரும்பினேன் . கூந்தல் காற்றில் மிதக்க , சந்தன நிறமும் கன்னக்குழி சிரிப்புமாய் , கையில் ஒரு கருப்பு நிற பூனைக்குட்டியை தடவியபடி நின்றிருந்தாள் மணிமேகலை

தொடரும்..
 
மணிமேகலை :
அத்தியாயம் 2 :

வசந்த காலம் அதன் உச்சத்தை மெல்ல மெல்ல எட்டி பிடித்தது . மென்மையான தென்றலும் , சாரலும் கொஞ்சம் என் மனதை மாற்றியது . கல்லூரி பற்றி சொல்வதற்கு பெரிதாக ஏதுமிலை . நல்ல நண்பர்கள் அறிமுகமானார்கள் . பிடித்த துறை .
வீட்டிலும் மாதவி அத்தை மணிமேகலை என்று பொழுது கழிந்தது . அப்பாவுக்கு அவர் நண்பரும் அம்மாவுக்கு அவள் தோழியும் , எனக்கும் ஒரு தோழியுமாக ஒரே குடும்பம் போல நன்றாகத்தான் இருந்தது . தட்டடிக்கு செல்வதை மட்டும் குறைத்துக்கொண்டேன் . அத்தியாவசியம் இன்றி செல்வது இல்லை .சென்றாலும் மரத்தை பார்க்காமல் ஓடி வந்துவிடுவேன் .
வேறு ஒன்றும் அமானுஷ்யமான நிகழவில்லை .
அன்று , என்றும் போல ஒரு சாதாரண நாள் . மாலை கல்லூரி முடிந்து , குல்மோஹர் மலர்கள் மலர்ந்து சிவந்த வீதி வழியாக மெல்ல நடந்து வந்து வீட்டிற்குள் வந்தேன் . என்றுமில்லாமல் வீடு இருட்டாக இருந்தது .
"அம்மா ! அத்தே !" பதிலில்லை .
"மணி !"
சத்தமாக கூப்பிட்டேன் .
மியாவ் ! என்றது பூனை . சட்டென்று அவர்கள் வீட்டு உபாயோகமில்லாத பாழடைந்த பூஜை அறையாக இருந்த ஒரு அறையிலிருந்து மணிமேகலை வெளிப்பட்டாள்.
முகத்தில் பதட்டம் தெரிந்தது ,
"இங்கேயா இருக்க ? என்ன பண்ணுத?"
"ஒன்னுல்லக்கா ! என்னோட பழைய பாட்டு புஸ்தகம் ஒன்னு கிடந்தது , அத தேடிட்டு இருந்தேன் " என்றாள்.
ஏன் இவ்வளவு தடுமாறுகிறாள் ?
"சரி அம்மா எங்க ?
"இன்னிக்கு பிரதோஷம் , அம்மாஸ் எல்லாம் கோவிலுக்கு போயிருக்காங்க "
இதான் சமயம் ! தாத்தாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லிவிடலாமா ?
அம்மா எச்சரித்தது நினைவுக்கு வந்தது . ' ஏதாவது சொல்லி தாத்தாவை பயமுறுத்தாத '
"மணி ! உங்கிட்ட ஒன்னு கேக்கணும் "
சோபாவில் அமிழ்ந்தபடி கேட்டேன் .
"உனக்கு அந்த தாத்தா உருவம் எவ்ளோ நாளா தெரியுது ?"
யோசித்தாள்!
"நீங்க வாரத்துக்கு கொஞ்ச மாசத்துக்கு முந்தி , எங்க அப்பாகூட வேல பாக்கிற ஒரு aunty ம் அவங்க பொண்ணும் இங்க கொஞ்ச நாள் இருந்தாங்க . பாவம் அவ அப்பா இறந்துட்டார் . அதனால வேற இடத்துல கொஞ்ச நாள் இடம்மாறி இருக்கலாமேன்னு இங்க வந்தாங்க . அவங்க வந்து கொஞ்ச நாள் கழிச்சு எனக்கு தாத்தா உருவம் தெரிஞ்சுதுன்னு நெனைக்கிறேன் " என்றாள்.
ஏதோ சரியில்லை !
"அப்பறம் ! அவங்க ஏன் காலி பண்ணிட்டு போய்ட்டாங்க ?"
"அயோ! அந்த பொண்ணுக்கு ரொம்ப உடம்பு சோமில்லம போச்சு அக்கா . ரொம்ப நாள் ஹோஸ்பிடல்ல வச்சு பாத்தாங்க "
என் இதயம் ஏனோ வேகமாக துடித்தது ,
"பெறகு? "
"செத்து போய்ட்டா அக்கா " என்றாள் .
சுளீரென்று நடு உச்சியில் வலித்தது .
" என்னட்டி சொல்லுத?"
"ஏதோ காச்சல் அக்கா "
நான் அப்படியே அமர்ந்துவிட்டேன் . மனம் , என்னை அந்த பெண் நிலையில் வைத்து பார்த்து , ஏராளமான பயத்தை அள்ளி தெறித்து கூத்தாடியது .
"உங்களுக்கு குடிக்க ஏதாது கொண்டுவாரேன் "
நான் அசையவில்லை .
காலடியில் ஏதோ பிரண்டுவது உணர்ந்து உதறினேன் . பூனை !
மணிமேகலை சிரித்தாள் .
"பயந்துட்டிங்களா அக்கா ?"
"இந்த சனியனை தூக்கி எரியேன். கன்னங்கரேல்னு கன்றாவியா " என்றேன் .
மணிமேகலை சிணுங்கினாள்
"போங்க அக்கா ! சனியன்னு சொல்லிட்டீங்க ! இவன் பேரு அழகு ராஜா." என்றாள் .
அவள் சோபாவில் கால் நீட்டி படுத்துக்கொள்ள அவள் கால் மாட்டில் அவள் பாவாடை மேல் மெத்தென்று படுத்து என்னை முறைத்தது அழகுராஜா !
அடுத்த இரண்டு நாட்கள் ஏன் மனம் முழுவதும் அந்த இறந்துபோன பெண்ணும் அவள் தாயும் மாறி மாறி வந்து வ்யாபித்திருந்தனர் . இதை விட கொடுமை இருக்கமுடியுமா ?
அதற்கும் இந்த அமானுஷ்ய தாத்தா உருவத்திற்கும் சம்மந்தம் இருக்குமா ?
யாரிடமும் பேசாமல் அமைதியாகி போனேன் .
அன்று மாலை, அதே நேரம் , அதே போல வீடு இருட்டு . வீட்டில் யாருமில்லை . இன்று பௌர்ணமி . மாலை கோவிலுக்கு போவோம் என்று அம்மா சொல்லிவிட்டிருந்தாள். வர நேரமாகும் . அதே போல அழகுராஜா காவல் இருக்க மணிமேகலை அதே அறையில் .
நன் ஓசை எழுப்பாமல் , அறைக்கதவை சட்டென்று திறந்தேன் .
ஒரு சிறிய விளக்கொளியில் மணிமேகலை மடியில் ஏதோ புத்தகத்தோடு அமர்ந்து இருந்தாள். எதிரே ஏதோ கோலம் வரையப்பட்டிருந்தது .
என்னை பார்த்ததும் பதறி எழுந்தாள் .
ஒரு புறம் பீதி இருந்தாலும் மறுபுறம் இவள் என்ன ரகசியமாக செய்துகொண்டிருக்கிறாள் என்ற குழப்பம் , ஆர்வம் .
"என்ன பண்ற மணி ?"
"அக்கா ! அது வந்து .. நான் "
"சொல்லபோறியா இல்லையா " குரல் உயர்த்தினேன் .
"சொல்றேன் சொல்றேன் ! இதை பாருங்க " என்று புத்தகத்தை நீட்டினாள் .
'ஆவிகளோடு பேசுவது எப்படி ' எழுதியவர் மணிமேகலையின் தாத்தா !
தொடரும் .....
 
மணிமேகலை
அத்தியாயம் 3 :

"வேணாம் மணி ! எனக்கு என்னவோ இது சரியாப்படல" என் குரல் எனக்கே கேட்கவில்லை . முழுதாக ஏதோ ஒரு தீய எண்ணத்தின் வழி மனம் திரும்பியபின் மெலிதாக தலைதூக்கும் நல்லெண்ணத்தின் பலவீன குரல் அது . தன்னை கவனிக்கமாட்டார்கள் என்று அறிந்தும் இந்த குரல் தன் கடமையை செய்துகொண்டுதான் இருக்கும் .
மணிமேகலை எதையும் காதில் வாங்கவில்லை . எங்கள் வீட்டு நடு பட்டாளையில் அமர்ந்து எதிரே கோலம் வரைந்துகொண்டிருந்தாள். சுழித்து சுழித்து ஏதோ கோலம் . எல்லா திசைகளையும் சேர்த்து நடுவில் ஒரு முடிச்சு போல. பிறகு எலுமிச்சம் பழங்களை ஒவ்வொரு இடமாக பார்த்து வைத்தாள். கோலத்திற்கு நடுவே ஒரு விளக்கு ஏற்றி வைத்தாள். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவுடன் நெய் கலந்து ஏதோ வைத்திருந்தாள். செவ்வரளிப் பூக்களை சின்ன மாலையாக கட்டி அந்த விளக்கைச் சுற்றி வட்டம் அமைத்து இருந்தாள்.
"இங்க ஏண்ட்டி வந்து பண்ணுத? உங்க வீட்லயே செய்யலாம்ல ?"
"அக்..கா.... ! " பெரிய சொற்பொழிவு ஆற்றும் தொனியில் ஆரம்பித்தாள் .
"எங்க வீட்ல அந்த ரூம் பல வருஷமா , பூஜை அறையா இருந்தது . எங்க தாத்தா தான் பூஜை பண்ணாம பாழடைய விட்டுட்டாங்க . அதனால , அங்க வச்சு இது பண்ணா ஒர்கவுட் ஆகல . இது எங்க தாத்தா இருந்த இடம் . so easy !" என்று தோள்களை குலுக்கினாள் .
எனக்கு திக்கென்றது ! ஏதேதோ வார்த்தைகள் வெளியில் வராமல் தொண்டையில் இம்சை பண்ணியது . வேண்டாம் வேண்டாம் ! என்று மனம் இடைவிடாது அலறினாலும் ஏதோ ஒரு குருட்டு தைரியம் அல்லது ஆவல் உந்தி தள்ளியது .
"பயமாருக்கா அக்கா ?" என்றாள்.
இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தது போல "ஆமான்ட்டி" என்றேன் .
"அப்போ ! இன்னிக்கு சக்ஸஸ் தான் . எனக்கு பயமே வரமாட்டேங்குதா , அதான் ஒரு தடவ கூட , நான் கூப்டு ஏதும் வரல . "
"அடிப்பாவி ! அப்போ இதுக்கு முன்னாடி கூட இப்டி பண்ணிருக்கியா ?"
"ம் ! அந்த அக்கா , அதான் செத்துபோனாங்கனு சொன்னனே, வைஷ்ணவி அக்கா , அவங்க இங்க இருந்தப்போ ஒரு வாட்டி பண்ணேன் . "
சர்வ சாதாரணமாக உதிர்ந்த வார்த்தைகள் என்னை பீதியின் உச்சத்தை தொடவைத்தது . உள்ளங்கைகள் சில்லிட்டு போனது .
"ரெடி ஆ?" சட்டென்று ஒற்றை விளக்கு பொருத்தி வைத்து , புத்தகத்தின் ஒரே வரியை திரும்ப திரும்ப சொல்ல தொடங்கினாள் . நான் முதலில் பார்த்தது போலவே கைகளில் ஏதோ முத்திரை வைத்து அரைக்கண் மூடிய நிலையில் வாய் மட்டும் லேசாக முனுமுனுக்கும் மணிமேகலையை பார்க்கும்போது ' இவள் உண்மையிலேயே மணிமேகலை தானா!!' என்பது போல சற்று திகில் ஆகத்தான் இருந்தது.
பட்டென்று நிறுத்தி விட்டு சுற்றி பார்த்தாள். எனக்கு இதயம் தாறுமாறாக அடிக்க தொடங்கியது .
"லைட் ஆப் பண்ணிடுவோம் . அப்போதான் ஒரு feel வரும் " என்று ஓடி சென்று tubelight ஐ அணைத்துவிட்டு மீண்டும் வந்து கோலத்தின் முன் அமர்ந்தாள் .
" இந்த கோலத்துல ஓரமா இருக்கிற எலுமிச்சை எல்லாம் கொஞ்ச நேரத்துல அப்டியே சுத்தும் . அப்போ தெரிஞ்சுக்கலாம் " என்று கண்களில் பேரார்வம் ஒளிர கூறினாள்.
நான் அவளை நெருங்கி அமர்ந்துகொண்டேன் . தொண்டை வறண்டு தாகம் எடுத்தது . ஹூஹூம் ! அசையக்கூடாது !.
அவள் மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க காற்றின் வேகம் மெது மெதுவாக அதிகரித்தது . அரை கண் மூடி இவள் உதடு மட்டும் துடிப்பதை பார்ப்பதற்கே அமானுஷ்யமாக இருந்தது . தொட்டால் காற்றில் பறந்து மறைந்துவிடுவாளோ!! என்பது போல தான் அந்த மெல்லிய விளக்கொளியில் மணிமேகலை காட்சி தந்தாள்.
உச்சரிப்பு ஸ்பஷ்டமாகி , குரல் உயர உயர , காற்று சுழன்று அடித்தது . மரங்கள் ஊழித்தாண்டவமாடியது . இத்தனை காற்றுக்கும் ஏற்றி வைத்த தீபம் அசையவேயில்லை .
ஏதோ பெரிய , அசாதாரணமான நிகழுவு ஒன்று இப்போது அரங்கேற போகிறது . சரியா? தவறா? தெரியாது . ஆனால், ஏதோ ஒரு விசித்திரம் நடக்கவிருக்கிறது . பயப்படக்கூடாது என்று மனதை திடப்படுத்தினாலும் , சிறு வயது முதல் பார்த்த அத்தனை பேய் படங்களும் மண்டைக்குள் ஓடின .
ஆர்ப்பாட்டமாக சுழன்று அடித்த காற்று சட்டென்று நின்றது . இரவின் சில்வண்டுகளின் குரல்கள் பேரிரைச்சலாக கேட்டது . அறையில் நிசப்தம் . ஏதோ ஒரு மந்திர தொனியில் இவள் குரல் மட்டும் கேட்டது . பேரிரைச்சல் தராத பயத்தை இந்த கொடும் அமைதி தந்தது . சட்டென்று தலையில் குட்டியது போல உரைத்தது.
' என்ன செய்துகொண்டிருக்கிறேன் ! கடவுளே !'
மணிமேகலையை பார்த்தேன் .
"மணி ! போதும் நிறுத்து . இது வேணாம் . பயத்துலயே செத்துருவேன் போல . விடு" என்றேன் அந்த எலுமிச்சம் பழத்தையே பார்த்துக்கொண்டு. அசைகிறதோ??? அவள் நிறுத்தவில்லை .
"மணி !! உன்ன பார்த்தாலே பயமா இருக்குடி. ப்ளீஸ் நிறுத்து! "
அசையவில்லை . என் பயம் மேலும் அதிகரித்தது . இருட்டுக்குள் மெல்ல கண்களை சுழற்றி பார்த்தேன் .
'பார்க்காதே ! எதையாவது பார்த்து வைக்காதே '! சட்டென்று விழியை தாழ்த்திவிட்டு மீண்டும் கூப்பிட்டேன் . இந்த முறை அதட்டலாக
"மணி ! நிறுத்த போறியா இல்லையா "?
அப்போது லேசாக தீப சுடர் அசைந்துகொடுக்க , ஒரே ஒரு எலுமிச்சை மட்டும் லேசாக நிமிர்ந்தது.
அவ்வளவுதான் !
"மணிய்ய்ய் ! நிறுத்துடிஇஇஇ"! கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு அலறினேன் . தீப சுடர் பட்டென்று அணைந்தது .
"அக்கா ! ஏன் இப்படி பண்ணீங்க?" என்றாள் பதட்டமாக . இருள் கவிழ்ந்த அடுத்த நொடி எழுந்து குருட்டாம்போக்கில் ஓடினேன் . ஓடிய வேகத்தில் யாரோ தோளில் கைவைத்து என்னை திருப்ப , என்னையும் அறியாமல் நான் திரும்ப, திரும்பிய வேகத்தில் தன்னிச்சையாக பின்னுக்கு நகர, கழுத்தில் சுளீரென்று ஏதோ வலிக்க, கழுத்தை தடவிக்கொண்டே அப்படியே மல்லாந்து விழுந்தேன். அடுத்த நொடி அறையில் வெளிச்சம் பரவியது .
"என்னக்கா ! விழுந்துட்டிங்க ?" என்றாள் மணிமேகலை, கண்கள் விரிய எதிரே , சுவிட்ச் போர்டு அருகே நின்றுகொண்டு .
நிமிர்ந்து உக்கார்ந்து முகத்தை துடைத்துக்கொண்டேன் . உடல் இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருந்தது . மூச்சிரைத்தது. வலித்த கழுத்தை தடவியபோது விரல்களில் ரத்தம் ஒட்டிக்கொண்டது.
பயம் , கோவம், அவமானம் , வலி அனைத்தும் ஒன்றுசேர கத்தினேன்.
" இருட்டுல ஓடிப் பிடிச்சு விளையாடுறியா? நீதான கீறின?
"நானா ? நான் லைட் போட இந்த பக்கம் வந்துடனே. "
"இல்லை நீதான் என் தோளைத் தொட்ட, திருப்பின, அப்புறம் நகத்தாலே கீறின. பாரு! கழுத்த பாரு ".
"நான் ஏன் கீற போறேன் உங்கள ?" ஆத்திரத்தில் அவள் கண்கள் கலங்கியது . மூக்கு விடைத்தது.
"பின்ன ! நான் பொய் சொல்றேனா ? நான் என்ன லூசா ? பாரு டி! உன் நகக்கீறல் கூட இருக்கு . நீதான் பேய் மாதிரி நகம் வளத்திருக்க ".
கோபத்தில் அவள் முகம் சிவந்து உதடு துடித்தது .
"என்னை பேய்ன்னு சொல்லிட்டீங்கள்ல . பாருங்க உங்கள என்ன பன்றேன்னு " என்று தன் முட்டை கண்கள் மேலும் விரிய சவால் விட்டுவிட்டு விருட்டென்று படிக்கட்டுகள் இறங்கி போய்விட்டாள் .
எழுந்து முகத்தை துடைத்துவிட்டு , அவசர அவசரமாக கோலத்தை அழித்தேன். விளக்கையும் பூக்களையும் அகற்றி, அரிசிமாவு கிண்ணத்தை சிங்கில் கொட்டி எலுமிச்சை பழங்களை ரோட்டில் வீசி எறிந்ததுவிட்டு திரும்ப என்ன அது?????திறந்த சாக்கடை நோக்கி ஓடிய அதனை எலுமிச்சைகளுக்கு மத்தியில் ஒன்று மட்டும் நின்று, நிதானமாக மறுபடியும் வீடு நோக்கி உருள, இதயம் தாறுமாறாக அடித்து வியர்த்து பயத்தில் வேகவேகமாக சுவாமி படங்களுக்கு முன்நின்று நெற்றி நிறைய விபூதி அள்ளிப் பூசிக் கொண்டு அம்மா வரும் வரை வாசல் படிக்கட்டிலேயே அமர்ந்திருந்தேன் .
இரவு உணவின் போது அம்மா கேட்டாள்.
"இது என்னடி கழுத்துல கீறல் ?"
ஒரு கணம் திகைத்தேன் .
"மணிமேகலை கீறிட்டா". என்றேன் .
"சண்டையா? அதான் மூஞ்சி சரியில்லையா ? "
இரவு அம்மாவை ஒட்டி படுத்துக்கொண்டேன் .
புரண்டு படுக்கவே பயமாக இருந்தது . மார்கழி மாதத்தில் திடீர் என்று இப்படி ஒரு காற்று ஏன் அடித்தது ? ஏன் விளக்கணைந்தது ? அப்படி ஒரு காற்று அடித்தபோது கூட அசையாத சுடர் , காற்று சற்றும் இல்லாதபோது எப்படி பட்டென்று அணையும் . அணையும் முன் ஒரு எலுமிச்சை அசைந்தது போல பார்த்தது உண்மையா ? ப்ரம்மையா ? மீண்டும் ஒரு எலுமிச்சம்பழம் வீடு நோக்கி உருண்டது தற்செயலா? இயற்பியலா?அல்லது அமானுஷ்யமா?
என்னை தொட்டது மணிமேகலை இல்லையென்றால் யார் ? அல்லது எது ? 'எது' என்ற வார்த்தையே என்னை உலுக்கியது . அம்மாவிடம் சொல்லிவிடலாமா ? பயத்தில் ஒடுங்கி கிடந்தவளுக்கு , அப்போது கேட்டது ஒரு ஓசை . காதை நன்றாக தீட்டி கேட்டேன் . அந்த கனத்த இரவின் , அடர்ந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு மெல்ல மிக மெலிதாக கேட்டது ஒரு விசும்பல் !
 
மணிமேகலை
அத்தியாயம் 4 :

காற்றில் மெல்ல மிதந்த விசும்பல் ஒலி என்னை உறைவித்தது . கண்களை இறுக்கி முடியும் காதுகளை இறுக்கி முடியும் பலனில்லை . லேசான விசும்பல் என்றாலும் அதில் என் உடல் நடுங்கியது .
"மா ! யாரோ அழுற மாதிரி சத்தம் கேக்குது". கிசுகிசுப்பாக கூறினேன் . அம்மா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
போர்வைக்குள் புதைந்துகொண்டேன் . 'காக்க காக்க கனக வேல் காக்க ' மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். இப்போது விசும்பல் இல்லை , ஆனாலும் தலை உயர்த்தி பார்க்கும் துணிவும் இல்லை .
மறுநாள் காலை அம்மாவிடம் சொன்னேன் .
"அது ஒண்ணுமில்ல . மணிமேகலையோட பூனையா இருக்கும் . பூனை கத்துறது மனுசங்க அழுகை மாதிரியே இருக்கும் " என்றாள்.
பூனை பெண் போல விசும்புமா?
அன்று கல்லூரி முழுவதும் இதைத்தான் கேட்டேன் .
பூனை பெண் போல விசும்புமா ?
பலர் ஆமாம் என்றனர் . சிலர் பயமுறுத்தினார்கள் . அந்த சிலர் வார்த்தைகளில் தான் மனம் சிக்கிக்கொண்டது .
இரவும் வந்தது .
புரண்டு புரண்டு படுத்தேன் . காதுகளை தீட்டி வைத்து கேட்டேன் . இல்லை! எந்த சத்தமும் கேட்கவில்லை . சரி பூனை தான் . எனக்கு தான் அப்படி தோன்றியிருக்கவேண்டும் . நேற்று சம்பவத்தால் மிகவும் பயந்திருப்பேன் என்று சமாதானம் செய்துகொண்டேன் .
தொண்டை வறண்டது . எழுந்து தண்ணீர் குடிக்க சென்றேன் . அம்மா திட்டினாலும் பரவாயில்லை என்று எல்லா லைட்டுகளையும் எரிய விட்டேன். வாட்டர் பில்டரில் தண்ணீர் இல்லை . அடுக்களைக்கு நடந்தேன் . தண்ணீர் குடித்துவிட்டு திரும்போது

அது!அது என்ன?

கண்ணில்பட்டுவிட்டது , ஒரு மூலையில் சுருள் சுருளாக, மச மசப்பாக ஏதோ ஒன்று . ஒரு நொடி மூச்சடைத்து , அடுத்தநொடி வீல் என்று அலறினேன் .
"என்னடி என்னாச்சு ? வாயத்தொற ' அம்மா உலுக்கினாள் . கண்கள் நிலைகுத்தி நின்றது .
"அங்க... அங்க... ஏதோ பாத்தேன் "
"எங்க ?"
நடுங்கிய கையை நீட்டினேன் .
"அங்க ஒண்ணுமில்ல . பாரு பாருட்டி கண்ண தொற ".
இறுக்கி மூடிய கண்களை மெதுவாக திறந்தேன்.
ஒன்றுமில்லைதான் . அப்போது நான் பார்த்தது ?
"ரொம்ப பயந்திருக்கா! திருநார் பூசிவிடு " என்றார் அப்பா .
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை . விழைவு, காலை எழுந்திருக்கவில்லை .
சரி தூங்கட்டும் என்றாள் அம்மா .
மணிமேகலையும் அன்று விடுப்பு எடுத்திருந்தாள். காரணம் தலைவலி .
அப்பா அம்மா இருவரும் வேலைக்கு சென்றபின் மெல்ல எழுந்து முகம் கழுவி அமர்ந்தேன் . பசிக்கவில்லை . இப்போது பயமில்லை ஆனால் ஏதோ சங்கடம் செய்தது .
சரி ஏதாவது படிப்போம் , சிவகாமியின் சபதம் முதல் 100 பக்கத்தோடு நிற்கிறது .
புத்தகத்தை திறந்தேன் .
மணிமேகலை மெல்ல மேலேறி வந்தாள். இன்னும் கோவமாகத்தான் இருந்தாள் .
'நானா வரல ! அம்மாதான் போசொன்னா" என்றாள் . நான் ஏதும் பேசவில்லை .
அவளும் கையில் புத்தகம் வைத்திருந்தாள். வாரமலர் !
இருவரும் மெளனமாக படித்தோம் .
"அக்கா " அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னாள்.
'சத்தியமா நான் உங்கள தள்ளிவிடல".
எனக்கு இப்போது மனம் இளகியது .
"சரி விடு மணி!"
அவளுக்கு அந்த வார்த்தைகளே போதுமானது போல கண்களை உருட்டி கேட்டாள்.
"உங்களுக்கு ஏதாது தெரிஞ்சுதா அப்பறம் "?
"மணி ! சும்மா இரு . இதை பத்தி பேசுனா அடி வாங்குவ "
அவள் உதட்டை சுழித்துவிட்டு புத்தகத்தில் முகத்தை மறைத்துக்கொண்டாள் .
நானும் கதையில் லயித்தேன் .
'ரத்தப்பூக்கள் நிறைந்த சாலை வழியாக பரஞ்சோதியும் வீரபாகுவும் குதிரையில் சென்றுகொண்டிருந்த போது , என் கை மீது ஒரு கை படிந்தது . கூப்பிடுவது போல தடவியது .
சட்டென்று தலை உயர்த்தி பார்த்தேன் . மணிமேகலை புத்தகத்தில் தான் இருந்தாள் .
'மணி ! என்னை தொட்டு கூப்டியா "?
"இல்லையே அக்கா "
என் புறங்கையை பார்த்தேன் . விரல் படிந்த இடம் சிவந்திருந்தது .
திக்கென்ற உணர்வில் கண்கள் கலங்கியது .
"மணி! ப்ளீஸ் டி விட்று! நீதாண்டி என்னவோ பண்ற . எனக்கு பயமாருக்கு "
அழுதேவிட்டேன் .
அவளும் கண்களில் கண்ணீரோடு கூறினான்.
"நான் இல்லை அக்கா . சத்தியமா ! நேத்து நீங்க எதையோ பாத்து கத்துனிங்கனு அம்மா சொன்னா. எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை அக்கா . நிஜமா "
"உன்னாலதாண்டி ! கண்டதையும் பண்ணாதன்னு சொன்னேன் கேட்டியா?'
"சாரி அக்கா " அவள் என்னை கட்டிக்கொண்டு அழுதாள் .
"சரி நீங்க என்ன பாத்தீங்க? எங்க பாத்தீங்க"? என்றாள்.

'இ...ங்.. க... தா.. ன் '!!!

காற்றில் கிசுகிசுப்பாக மிதந்து வந்தது ஒரு பெண்குரல் . அவள் மிரண்டு என்னைப்பார்த்தாள் . நான் கையால் வாயை மூடிக்கொண்டு 'நானில்லை ' என்று கண்களில் பயத்தோடு தலைசைத்தேன் . அவள் கண்கள் மேலும் விரிந்தது , ஒரு நிமிடம் அப்படியே நின்றாள் . பின் தட தட என்று கீழே ஓடினாள் . நானும் பின்தொடர்ந்து ஓடினேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"ஹலோ தாத்தா ! நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது . உடனே கெளம்பி சாயந்தரத்துக்குள்ள இங்க வர "
"என்னல ஆச்சு?"
"ப்ளீஸ் வா தாத்தா ! உங்கிட்ட ஒன்னு சொல்லணும் ".
"சரி ! கிளம்பிட்டேன் ".
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தாத்தா வரும்வரை வீட்டிற்குள் செல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன் . கீழயே இருந்தோம் . மாலை சுமார் நாலரை மணிக்கு தாத்தா வந்தார் . கூடவே ஆச்சியும் . ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கொண்டேன் .
"வெயில்ல ரொம்ப அலையுதியா? ஏன் இப்படி கருத்து போயிட்ட"? என்றாள் ஆச்சி .
"நீங்க மொதல்ல மேல வாங்க "
மேலே எங்கள் வீட்டிற்கு வந்தோம் .
"இதான் வீடா? பரவால்ல நல்லாருக்கு " என்றபடி நாற்காலியில் அமர்ந்தார் .
இரண்டே நிமிடங்களில் அவர் முகம் மாறியது .
"தாத்தா உங்கிட்ட ஒன்னு சொல்லனும்". அவர் கை உயர்த்தி 'இரு' என்றார் .
முகம் வேதனையை காட்டியது .
"என் உடம்பு முழுக்க எரியுதே . இங்க ஏதோ சரியில்ல! ஏதோ தப்பா இருக்கு " என்றார் . நான் கண்கள் விரிய பார்த்தேன் .
"நாங்க வரும்போது கீழ ஒரு பிள்ளை, செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருந்ததே அது யாரு ?" என்றார்.
"அவதான் மணிமேகலை ! இந்த வீட்டு பிள்ளை! "
"அவ கண்ணு வித்யாசமா இருந்துது . கருவிழி கொஞ்சம் பெருசா கண்ணையே அடச்ச மாதிரி . நீ கவனிச்சது இல்லையா "?
என் முகம் வெளிறியது .
"அவளுக்கு பெரிய கண்ணுதான் . ஆனா வித்யாசமா நான் பாக்கலையே!"
மிடறு விழுங்கினேன் .
ஏதோ யோசித்த தாத்தா "அவளை கூப்டு " என்றார் .
நான் மேலிருந்தே கத்தினேன் "மணிய்ய்"!
'வாரேன் "!
அவளும் பதில் குரல் கொடுத்தாள். இரண்டே நிமிடத்தில் மேலே வந்தாள் . நான் அவள் கண்களை உற்று நோக்கினேன் . ஒன்றும் தெரியவில்லை .
"இவதான் மணிமேகலையா? " என்றார் தாத்தா .
"ஆமா தாத்தா " என்றாள் அவளே .
"இதே முகம் தான் . ஆனா நான் பாத்தது மணிமேகலை இல்லை " என்றார் தாத்தா .
 
மணிமேகலை :
அத்தியாயம் 5 :
எல்லோரும் தூங்கிய பின் கிசுகிசுப்பான குரலில் மெல்ல கேட்டேன்
"தாத்தா ! ஒருவேளை மணிமேகலைத்தான் ஏதாது செய்தாளோ? உங்கள என்ன பண்றேன் பாருங்க னு சவால் விட்டு போனா"

"ஷ் ! பேசாம போய் படு காலைல பாத்துக்கலாம் . அங்க என்ன ரகசியம் னு உங்க ஆச்சி கேப்பா அப்புறம்"

"அங்க என்ன ரகசியம் ?" ஆச்சி குரல் கேட்டது . இருவரும் சத்தம் வராமல் சிரித்தோம் .
"சரி தூங்கு. "
தாத்தா, இருந்த ஒரே கட்டிலில் தூங்க , நான் அப்பா அம்மா அருகே படுக்கை விரித்து பட்டாளையில் படுத்தேன் .
இன்றும் குரல் கேட்குமா ? எவ்வளவு தெளிவாக கேட்டது ?
'இங்கதான் ' என்று . வெகு நேரமாகிவிட்டதா என்ன ?
தாத்தாவின் குறட்டை ஒலியை தவிர ஏதும் கேட்கவில்லை.
மெதுவாக கண் திறந்து பார்த்தேன் .மெல்ல விடி விளக்கு வெளிச்சத்தில் மேலே விட்டத்தில் ஒரு கீறல் , அது மெல்ல வளர்த்து ஒரு முகமாக மாறியது . ஐந்து விரல்களை முன்னால் நீட்டி அப்படியே என்னை தொட்டுவிடும் நோக்கத்தோடு , விரிந்த உள்ளங்கை அந்த முகத்தை மறைக்க கண்கள் மட்டும் தெரியும் ஒரு பெண் முகம் . திடுக்கிட்டது ! முகத்தை திருப்பி வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன் . சுவர் முழுவதும் முகம் , முகங்கள் . ஒரு பெண் அழும் முகம் , உறங்கும் முகம் , அலறும் முகம் . அப்படியே கண்கள் தத்ரூபமாக உணர்வுகளை பிரதிபலிக்கும் பிம்பங்கள் . என் உடல் நடுங்கியது . கண்களை மூடினேன் . ஆனால் மனதிற்குள் புதைந்த பிம்பத்தை மூட முடியவில்லை . என்னையும் அறியாமல் வீட்டின் நேற்று பார்த்த 'அந்த ' மூலைக்கு கண்கள் சென்றது . ஹாலில் உள்ள நிலைக்கண்ணாடி வழியே பார்த்தால்
'அந்த ' மூலை தெரியும் .
அதோ!!! அ...அது என்ன?!!
நான் பார்ப்பது நிஜம் தானா??
ஒரு பெண்தானே?? ஆமாம்! ஒரு பெண்ணே தான். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அதில் முகத்தை புதைத்துக்கொண்டு! கடவுளே!!!!!! குரல் சிக்கிக்கொண்டது.
இதயம் துடிப்பை மறந்தது . அதே சமயம் லேசாக சத்தம் கேட்டது . விசும்பலா? இல்லை பூனை தான் இது . ஆம் பூனையே தான் . சத்தம் எங்கிருந்து வருகிறது?. நான் லேசாக திரும்ப , என் காலடியில் புசு புசு என்று ஏதோ தட்டுப்பட , அடுத்த நொடி கை கால்களை உதறி கிரீச் என்று அலற , என் காலடியில் சுருண்டு கிடந்த அழகுராஜா தெறித்து பாய்ந்து அப்பா மேல் அமர்ந்தது . பட்டென்று லைட் போட்டாள் அம்மா . அப்பா தூக்கத்திலிருந்து வெடுக்கென எழுந்திருக்க , பூனை ஓட இடம் தெரியாமல் குருட்டாம்போக்கில் பாய,நேர நிலைக்கண்ணாடியில் போய் விழ, அதே கண்ணாடி வழியே வீட்டின் 'அந்த ' மூலையில் தெரிந்த பெண்ணின் பிம்பம் இப்போது தத்ரூபமாக உண்மையிலேயே தெரிய, கண்ணாடி தூள் தூளாக சிதறும் முன்,அந்த பெண்ணின் முகம் நெற்றி வரை தெரிந்தது . குப்பென்று வியர்த்து கண்கள் இருண்டு அப்படியே சரிந்துவிட்டேன் .
விடிந்ததா?இல்லை இன்னும் இரவு கொடுமைதானா? புரியாத அவஸ்தை நிலை நிலை. நெற்றியில் அம்மாவின் கை ஈரமாக படிந்தது. அம்மாவும் தாத்தாவும் பேசுவது கேட்டது . அம்மா என் தலைமாட்டில் அமர்ந்து நெற்றியில் ஈர துணி வைத்துக்கொண்டே சொன்னாள்.
"என்னப்பா , நீயும் இவகூட சேந்துக்கிட்டு பேசுத?"
"இங்க பாரு! எனக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தொடனேயே தெரிஞ்சுட்டு , இது ஒரு ஆக்கங்கெட்ட வீடுன்னு . பூஜை எல்லாம் பண்ணி வச்சு இருந்தாதானே வீட்டுக்கே விருத்தி . இங்க ஏதோ ஒரு கெட்டது இருக்கு . சீக்ரம் இங்கேந்து போய்டணும் " என்றார் .
"யப்பா ! திடீர்னு போனா என்ன நினைப்பாங்க ? நம்ம பூஜை எல்லாம் பண்றோம் நம்ம வீட்டுக்கு எப்படி வரும் அதெல்லாம் ?"
"ஏய் ! உனக்கு புரிதா இல்லையா ? நம்ம வீட்டுக்கு அது வரல . அது எடத்துக்குத்தான் நம்ம வந்திருக்கோம் ".
தெரிந்த டாக்டர் என்று ஒருவரை கீழ் வீடு மாமா அழைத்துவந்தார் . டாக்டர் என்னை பரிசோதித்து பார்த்தார் . கண்விழிகளை திறந்து பார்த்தார் .
'ஏதும் infection இருக்கிற மாதிரி இல்ல . fever இதுனாலன்னு இப்போ சொல்லமுடியாது . மருந்து கொடுங்க . மூணு நாள்ல கொறயலைனா அட்மிட் பண்ணித்தான் பாக்கணும் . " என்றார் .
"temperature எவ்ளோ இருக்கு? " அம்மா கேட்டாள்
"104 ! கொஞ்சம் severe தான் . Fits மாதிரி ஏதாது வந்தா உடனே அட்மிட் பண்ணுங்க " என்றார் .
இதே போல ஒரு மர்ம காய்ச்சலில் இங்கே இருந்து உயிரைவிட்ட,
மணிமேகலை ஒரு நாள் சொன்ன , அந்த பெண் தான் என் நினைவில் வந்தாள். ஒரு வேளை அவள் ஆன்மா தான் இங்கே இருப்பதா ?அவள் உருவதைத்தான் நான் வீடு முழுவதும் பார்த்தேனா ? மூலையில் அழுதுகொண்டிருப்பது அவள்தானா ? ஆனால் மணிமேகலை போல ஒரு பெண் என்று தாத்தா சொன்னாளே!! இந்த பெண்ணிற்கும் மணிமேகலைக்கும் என்ன சம்மந்தம் ?
நெற்றியின் முத்துமுத்தாக வியர்த்ததும் உடலில் ஒரு தெம்பு பிறந்தது .
தாத்தா என்னருகில் அமர்ந்து பேசினார் என் கைகளை அழுத்தி பிடித்தபடி.
"இங்க பாரு பிள்ளை ! இப்போ உன்னோட உடம்பு ஒத்துழைக்காது , அதனால மனச திடப்படுத்திக்கோ. இப்போ உனக்கு ஒரு போராட்டம் ஆரமிச்சிருக்கு . இந்த போராட்டத்தில நீதான் ஜெயிக்கணும். எதுவா இருந்தாலும், குனிஞ்சு பயந்து ஓடாம, நின்னு நிமிந்து பாரு . face பண்ணு. உன்கூட நாங்க எல்லாரும் இருக்கோம் .
நல்ல நியாபகம் வச்சுக்கோ . நீ எக்காரணத்தை கொண்டும் எங்களை விட்டு போகமுடியாது . இன்னொன்னு! பயப்படவே கூடாது . " நெற்றியில் தடவி கொடுத்தார் . கண்களில் கண்ணீர் வழிய தலையசைத்தேன் .
"சீக்கிரமா எல்லாம் சரியாகிடும் . இங்கேந்து போய்டலாம் . " சக்தி இல்லாமல் துவண்டு போன என் கையை தன்னோடு இறுக்கிக்கொண்டார் தாத்தா .
"அப்பா எங்க ?"
"அப்பா , உனக்கான வேண்டுதல் நிறைவேத்த அச்சன்கோவிலுக்கு போயிருக்கா. நாளைக்கு வந்துருவா ".
"நாங்கெல்லாம் இருக்கோம்ல , பயப்படாம இரு " என்றாள் அம்மா .
கொஞ்சம் காற்றோட்டமான இடத்தில் என்னை படுக்கவைக்கவேண்டும் என்பதாலும் , தாத்தாவிற்கு கீழே படுக்கமுடியாது என்பதாலும் , தாத்தா உள் அறையில் கட்டிலில் படுக்க , ஆச்சி வழக்கம் போல வழியில் போர்வை விரித்து படுக்க , நான் மெத்தை போட்டு ஹாலில் படுக்கவைக்கப்பட்டேன் .
ஏதோ திடீர் துஷ்டி வீடு என்று கீழே அத்தையும் மாமாவும் சென்றுவிட , மணிமேகலையின் பாட்டி மட்டும் கீழே ஒற்றைக்கு படுத்திருந்தார் . வெளியே மழை அடர்ந்து பெய்தது . இடியும் மின்னலும் காதுகளை கிழித்தது . இங்கே எனக்கு உடல் நெருப்பாக தகித்தது . சுயநினைவும் மயக்க நிலையும் மாறி மாறி வந்து என்னை இம்சித்தது.
தடாலென்று கீழே ஏதோ விழும் சத்தம் கேட்டது .
"ஐயோ! என்னனு தெர்லயே ! அந்த ஆச்சி மட்டும் தானே கீழ இருக்கா. இருடி நான் என்னனு பாத்துட்டு வாரேன்". அம்மா வேகமாக படி இறங்கி போனாள்.
அவள் படி இறங்கின அடுத்த நொடி யாரோ படி ஏறுவது போல கொலுசொலி கேட்டது . மூன்றே மூன்று படிகள் . சில் ..சில் ..சில் ..
என்ன இந்த அம்மா இப்போத்தானே கீழ போனா. ஏன் மறுபடி மேல வாரா ? அதும் இவ்ளோ நிதானமா ? தலை உயர்த்தி பார்த்தேன் . செங்குத்தாக இறங்கிய படிக்கட்டு தவிர வேறு யாருமில்லை . கண்களை மூடிக்கொண்டு தாத்தா சொன்னதை திரும்ப திரும்ப கூறினேன் . பயப்படக்கூடாது !
'அதர்வண பத்ரகாளியே போற்றி !" மனதிற்குள் பாராயணம் செய்யத்துவங்கினேன் . தட்டடியின் கதவு பட்டென்று அடிக்கும் சத்தம் கேட்டது. என் இதயம் அதிர்ந்தது. தொடர்ந்து , தட்டடியில் இருந்து உள் அறைக்கு நடந்து போவது போல அதே மூன்று முறை கொலுசொலி என் தலைமாட்டில் கேட்டது . தடாலென ஒரு இடி ஆக்ரோஷமாக எங்கோ விழுந்தது . எண்சாண் உடலை ஒரே ஜானாக்கி சுருண்டு கிடந்தேன் . பயம் கூடாது ! அருகே , மிக அருகே மூச்சுக்காற்று உஷ்ணம் உணர்தேன் . காது மடல்கள் குறுகுறுத்தது . என்னோடு படுக்கையில் யாரோ ஒன்றாக படுத்திருப்பது போல .
குரல் எழும்பவில்லை , கண்களை மூடிக்கொண்டு பாராயணத்தை தொடர்ந்து கூறினேன் .
தட்டடி கதவு இடுக்கு வழியாக மழை தண்ணீர் வடிந்து அறைக்குள் வரும் சத்தம் கேட்டது . நெருப்பாகக் கொதித்த என் நெற்றி மீது பனிக்கட்டி போன்ற மூன்று விரல்கள் பதிந்த போது பட்டென்று லைட் போடப்பட்டது . நெற்றி நெறய திருநீர் பூசிக்கொண்டு ஆச்சி என்னருகில் வந்தாள் . என் நெற்றியில் திருநீறு பூசினாள். என்னருகே படுத்தாள் .
"ஆச்சி ! என்னாச்சு " என்றேன் . இப்போது எனக்கு , சற்றுமுன் எனக்கு நிகழ்ந்தது அனைத்தும் உண்மையா? இல்லை கனவா? இல்லை கற்பனையா? என்றே குழம்பியது . சுரவேகத்தில் மனம் கண்டதையும் நினைக்குமாம் .
"தட்டடிலேந்து மழை தண்ணி உள்ள வந்து என் போர்வைய நனச்சிருச்சு . சரி உங்கிட்ட படுக்கலாம்னு வந்தேன் . நெத்தில திருநாறு இல்லை . அதான் பூசிவிட்டேன் " என்றாள் .
"இப்போதான் என்கிட்ட வாரியா ?"
"ஆமாம் . மணி ரெண்டு . நீ தூங்கலை?" என்றாள் .
அதற்குள் அம்மாவும் மேலே வந்துவிட , மறுபடி படுத்தோம் . அதிசயம் ஒன்றுமே நிகழவில்லை . சட்டென்று மழை நின்று சில்வண்டுகள் சப்தம் மட்டுமே இரவு முழுவதும் கேட்டது . ஆனால் , காய்ச்சல் குறைந்தபாடாக இல்லை
 
மணிமேகலை :
அத்தியாயம் 6 :
ஏதோ ஒரு , உயர்ந்த உத்தரங்களும் நீண்ட தாழ்வாரங்களும் கொண்ட வீட்டில் தனித்து படுத்து உருண்டுகொண்டிருப்பது போல அவ்வப்போது திடுக்கிட்டு விழிப்பேன் . அப்போது தலை நிலையாக நில்லாமல் வீடே தட்டாமாலை சுற்றும் . மீண்டும் பொத்தென்று மெத்தையில் விழுந்துவிடுவேன் . என்னருகே தாத்தா எப்போதும் இருந்தார் என்று மட்டும் உணரமுடிந்தது . புத்தி தெளியும் போது, தாத்தாவிடம் நேற்று நடந்ததை கூற நினைப்பேன் . நேற்றா ? இன்றா? நேரம் என்ன ? பகலா ? இரவா? ஏதும் புரியாத ஒரு அரை மயக்க நிலையில் தான் இருந்தேன் .
சில சமயங்களில் தனித்து இருக்கிறோமா ? துணைக்கு இருப்பது யார் ? அல்லது 'எது' என்ற தெளிவே இல்லாமல் கிடந்தேன் .
வற்புறுத்தி எனக்கு அளிக்கப்பட்ட தெளுக்கஞ்சி , உள்ளே போன வேகத்தில் வெளியே வந்தது .
வீட்டின் நிலைமையே முற்றிலுமாக மாறியது .
மாதவி அத்தை அவ்வப்போது வந்து பார்த்தாள். கூடவே மணிமேகலையும் . இரண்டு முறை அவள் கண்ணீரோடு என் அருகே அமர்ந்திருப்பது தெரிந்தது .
மாற்றி மாற்றி ஒவ்வொரு கரமாக என் கை பிடித்து , எனக்கு தெம்பூட்ட முனைந்தார்கள் .
என் மீது இவர்களுக்கு இத்தனை அன்பு இருக்கிறதா ? இவர்களை விட்டு எங்கே போவேன் ? மாட்டேன் ? என்னை மீறி என்ன நடந்துவிடும் ? புத்தியே நிலையாக நில்! பயத்தை ஒதுக்கு ! தாத்தா வார்த்தைகள் மட்டுமே காதில் ரீங்காரமிட்டது .
"அப்பா ! நீ இவளை பாத்துக்கோ . இன்னிக்கும் நான் கீழ தான் படுக்கணும் . கீழ ஆச்சி மட்டும் தனியா இருக்கா. அவங்க நாளைக்கு விசேஷத்துக்கு இப்போவே கிளம்பிட்டாங்க " என்ற அம்மாவின் வார்த்தைகள் காதில் கேட்டது .
தூக்கமா ? அரை விழிப்பா என்று தெரியாமல் நான் புரண்டு புரண்டு படுத்தபோது , என் கண்ணிமைகளை மெல்ல வருடும் ஸ்பரிசத்தை உணர்ந்தேன் .
கண் திறந்து மெல்ல பார்த்தேன் . வீட்டின் 'அந்த ' மூலை மட்டும் பிரகாசமாக தெரிந்தது . தலையிலிருந்து முட்டு வரை முடி மறைக்க கவிழ்ந்து உக்காந்திருக்கிறாள் அவள் .
மூச்சு தடுமாறியது ! அவள் மெல்ல தலை உயர்த்தினாள் . மெல்ல , நெற்றி , புருவம் , கண்கள் , மூக்கு , வாய் , நாடி , முழு முகமும் உயர்த்தி என்னை பார்த்தாள்.
மணிமேகலை !!!
மணி! நீதானா???
அவளேதான் ! பார்த்தேவிட்டேன் ,
அவள் மெல்ல எழுந்து நடந்து என் தலைமாட்டில் நின்றாள் .
கண்களை மூடு! மனம் உத்தரவு போட்டது . ஏனோ முடியவில்லை. கண்கள் நிலைகுத்தி அவளையே வெறித்து . அவள் மெல்ல நடந்து , இல்லை நகர்ந்து பலகணியின் சாத்திய கதவு அருகே சென்று மிதந்தாள் . கதவு பட்டென திறந்து , ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் அவளை சுற்றி வளைத்து அவள் மேல் அமர்ந்து சிறகடித்து . அந்த ஊதா நிற ஒளியில் மின்மிமணி பூச்சிகள் வைத்து வரைந்த ஓவியம் போல,ஒரு தேவதை போல இருந்தாள் மணிமேகலை!!! இன்னும் மிதந்து கொண்டுதான் இருந்தாள் .
நான் பார்க்கும் காட்சியின் கணம் என்னுள் மெல்ல இறங்கியது . என்ன இது? நான் பார்ப்பது உண்மைதானா ? மணிமேகலைத்தான் இந்த அருவமா? அப்போது கீழ் வீட்டு பெண் ? இவள் கருவிழிகள் பெரிதாக , விழியை அடைத்து நிறைந்திருந்தது . தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது . தாத்தா !! ஆச்சர்யம் ! ஆச்சரியம்! எனக்கு பயம் வரவேயில்லையே ஏன் ? எப்படி ?
இவள் மணிமேகலை என்பதாலா? கோரமாக இல்லாமல் தேவதை போல இருப்பதாலா? அல்லது இதற்கு மேல் என்ன என்ற அசட்டு தைரியமா ? இல்லை இந்த அற்புத காட்சியின் தவிர்க்க முடியாத ஏதோ ஒரு மாயவிசையின் ஈர்ப்பா ?
கண்களை அகற்ற முடியாமல் அவளை பார்த்தேன் . அவள் புன்னகைத்தாள் . என் முகத்திலும் புன்னகை விரிந்தது .
அவள் கரம் நீண்டது . என் கரத்தை பற்றியது . "வா " என்ற தலையசைப்போடு என்னை மெல்ல எழுப்பினாள். எழும்பியது என் உடல் , அவள் மேலே இன்னும் சற்று மேலே உயர்ந்தாள். கூடவே நானும் , ஆனால் நான் அத்தனை லகுவாக மிதக்கவில்லை . ஏதோ ஒன்று என்னை பிடித்து நகரவிடாமல் வைத்து இருக்கிறதா? அது என்ன? அல்லது யார்?
தாத்தாவின் வார்த்தைகள் மனதின் ஆழத்தில் கேட்டது.
' நீ எங்களை விட்டு எங்கேயும் போகமுடியாது '!

போக மாட்டேன்! போக மாட்டேன்!
சட்டென்று சுதாரித்தேன் . எதையும், யாரையும் என்னால் லகுவாக உதரமுடியாது, இவள் போல பறக்க . என் மற்றொறு கை கொண்டு அவள் பிடிமானத்தில் இருந்த என் கையை மெல்ல விலக்கினேன். மெத்தையில் மீண்டும் பொத்தென்று விழுந்தேன் . அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. நான் கேட்டு கேட்டு பழகிய விசும்பலோடு அவள் கண்கள் விரிந்தது . செந்நிறமாக மாறியது . செம்மை கனத்து பெரிதாகி , பெரிதாகி , அவளே சிவந்த திட்டு போலாகி , பின் சிதறிப்போனாள், அறையில் வெளிச்சம் பரவியது . மீண்டும் ஆச்சி !
"எந்திரிச்சி உக்காந்து என்ன பாக்க ? தூங்கலையா?" என்றாள் நெற்றியில் திருநீறு பூசியபடி .
"இன்னிக்கு என்னாச்சு ஆச்சி ?'
"இன்னிக்கும் போர்வை நனஞ்சிபோச்சு ".
"மழையே இல்லையே "!
அவள் என் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.
"காச்சல் விட்டுட்டு
ஆமா! மழை இல்ல , இந்த பில்டர் ல தண்ணி அதிகமா ஊத்திட்டேன் போல , பில்டர் ஒழுகி , தண்ணி பாஞ்சு , என் போர்வைய நனைச்சிட்டு . சரி அதான் இங்க படுக்கவந்தேன் . நீ படு " என்றாள்.
"மணி என்ன 2 ஆ ?" கேட்டேன் .
"ஆமா ரெண்டுதான் "
எனக்கு ஏதோ புரிவது போல இருந்தது . எல்லாம் தெளிவது போல . சட்டென்று அனைத்தும் ஒரு வடிவத்துக்குள் விழுவது போல இருந்தது .
ஒரே ஒரு கேள்வி தவிர ! மணிமேகலை யார் ?
 
மணிமேகலை :
அத்தியாயம் 7 :
எல்லா ஜமான்களும் அட்டைபெட்டிக்குள் அடிக்கப்பட்டு , வீடே காலியாகி இருந்தது . நானும் தாத்தாவும் தட்டடியில் மாமரத்தை பார்த்து நின்றிருந்தோம் .
"என்ன ! இந்த மரத்துல இன்னமும் அந்த தாத்தா உருவம் தெரியுதா ?"
இல்லை என்று தலையசைத்தேன் . மணிமேகலை எங்கள் பின்னால், சத்தமில்லாமல் நின்றிருந்தாள் . நான் அவளை பார்த்தேன் .
"நிஜமாவே நீங்க போணுமா அக்கா ? என் மேல கோவமா ?" கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது .
நான் அவளை ஆள் சேர்த்து அணைத்துக்கொண்டேன் .
"அதெல்லாம் இல்ல ! இவ்ளோலாம் நடந்தப்றம் இங்க இருக்க அம்மா அப்பா பயப்படுவாங்க . அதான் . உன் மேல என்ன கோவம் ? இப்போவது உங்க அத்தையை பத்தி உண்மையை சொன்னியே " என்றேன் .
அவள் கண்களை துடைத்துக்கொண்டு
"இந்தங்கக்கா எங்க அத்தை மணிமேகலையோட போட்டோ . யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வந்தேன் ". என்று அவள் கைக்குள் பத்திரப்படுத்தியதை என் உள்ளங்கையில் திணித்துவிட்டு சென்றாள்.
நான் கை இடுக்கில் இருந்த சின்ன புகைப்படத்தை பார்த்தேன் . இவள் அத்தை மணிமேகலை அப்படியே இவள் உருவமே ! அச்சில் வார்த்தது போல .
"என்ன நடக்குது "???
"தாத்தா ! இவ்ளோ நாள் இங்க பிரச்சனையா இருந்தது மணிமேகலைத்தான் . நான் பாத்தது , நீ பாத்தது எல்லாம் மணிமேகலைத்தான் . ஆனா அது நம்ம கூட இருக்கிற இந்த மணிமேகலை இல்லை. இவளுக்கு ஒரு அத்தை இருந்திருக்கா. அந்த அத்தையோட பேரு தான் மணிமேகலை! அவ சின்ன வயசுலேயே செத்துப்போயிட்டா. அவ பேரத்தான் இவளுக்கு வச்சிருக்காங்க. இதோ " என்று புகைப்படத்தை காட்டினேன் .
தாத்தா ஒரு கணம் பார்த்துவிட்டு கண்கள் மூடி புருவம் சுருக்கினார்.
" எப்படி செத்து போனா? "
" ஏதோ காய்ச்சல்! மூணே நாள்ல செத்து போயிட்டாளாம். அவ அத்தையோடு ரூம் இந்த மாடி ரூம் தானாம். இங்கே! இதே ஹால்ல வெச்சி தான் செத்துப் போய் இருக்கா. அதுக்கு அப்புறம் தான் மணிமேகலையோட தாத்தா இதே ரூமிலேயே இருந்து ரொம்ப தீவிரமா ஆவிகளோடு பேசுவது எப்படி அப்படிங்கிற ஆராய்ச்சியில இறங்கி இருக்காரு. அந்த புக்கை எடுத்து வச்சிக்கிட்டு இந்த கிறுக்கு பிள்ளையும் எதோ ட்ரை பண்ணி இருக்கு அப்பப்போ! " என்றேன்.

தாத்தா நெஞ்சில் கைவைத்து கண்மூடி அமர்ந்து இருந்தார்.
" இன்னொரு பொண்ணும் இந்த வீட்டில் செத்து போயிருக்கு அப்படித்தானே?" விழி மூடியபடியே வேதனையுடன் தாத்தா கேட்டார்.

" ஆமாம் தாத்தா! உனக்கு எப்படி தெரியும்?? அப்போவும் இந்த மணிமேகலை ஏதோ ட்ரை பண்ணி இருக்கா! பாவம் தாத்தா! அந்த பொண்ணு செத்தே போச்சு.
நல்ல வேலை என்ன கடவுள் காப்பாத்திட்டார். "

கண்கள் கலங்கின.

"சரி இதோட போச்சே ! விடு . உனக்கு அதுக்கப்புறம் ஒன்னும் .."??
"இல்லை தாத்தா ! ஒரே அதிசயமா இருக்கு! ஒன்னும் கேக்கல , பாக்கல . எப்படி அவ கைய தொட்டு வெலக்கினேன்னு எனக்கே புரில"!
"அதான் மனசோட சக்தி !"
" அப்போ! சாமி காப்பாத்த லயா? "
தாத்தா அட்டகாசமாகச் சிரித்தார்.
"லேய்! சாமி எங்க இருக்கு? உன் மனசுக்குள்ள தானே இருக்கு!
எத்தனை வருஷமா அம்பாள் உபாசகம் பண்றேன் . அவ கை விடமாட்டாம்மா."

"அம்பாளா? இல்லை ஆச்சியா?" சிரித்தேன் .

" இந்த ஆச்சி அம்பாளா?? அவ காளி ஆச்சே! அதான் அவ கிட்ட வந்ததும், உன்கிட்ட ஒன்னு வந்துச்சே அது ஓடியே போச்சு!"

மனம் லேசாகி உற்சாகமாக சிரித்தோம்.

"நீ இல்லேன்னா என்ன ஆகிருப்பேன் தாத்தா "?

"எங்க போவேன் உன்னைவிட்டு . அப்டியே போனாலும் உன் பக்கத்துலயே தான் இருப்பேன் . அப்போ, என்ன பாத்து பயப்புடுவியா ?" தாத்தா சிரித்தார் .
"போ தாத்தா ! இந்த மாதிரி பேசினா எனக்கு கோவம் வரும் ".
காலியான வீட்டில் எங்கள் குரல் எதிரொலித்தது . ஒருமுறை வீட்டை திரும்பி பார்த்துவிட்டு படி இறங்கி வந்துவிட்டோம் . கீழே தாத்தா மட்டும்
அவர்களோடு வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார் .
நான் மணிமேகலையிடம் வந்தேன் .
"இனிமே இந்த மாதிரி அசட்டு வேலை பண்ணாத புரிதா ?"
"இல்லை கா ! என் லட்சியமே ஒரு வாட்டி எங்க அத்தைக்கூட பேசுறது தான்."
"ஏண்டி ! ஏன் இப்டி பண்ற ? "
"ஏன்னா! அது என்னோட முன் ஜென்மம் னு நெனைக்கிறேன் . "
"உளறாத! முன் ஜென்மம்னா? நீதான் இங்க இருக்கியே . அப்புறம் எப்படி உன் முன் ஜென்மம் அருவமா சுத்தும் ?"
"தெரில க்கா! பட் உங்களுக்கு தெரிஞ்சது நான் எப்போ பாக்கபோறேனோ "?
"நீ திருந்தவே மாட்ட . ஒழுங்கா இதெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு படி "
என்றேன் . தலையாட்டினாள் .
நாட்கள் வேகமாக ஓடியது ! முதல் வருடம் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினோம் . கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன் . அவர்கள் வீட்டில் பின் ஏதும் அசம்பாவிதம் நிகழவில்லை. அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவாள் . நான்தான் அங்கே போவதை தவிர்த்தேன் .
மேலும் அவர்கள் வீட்டை முற்றிலுமாக திருத்தி கட்டினார்கள் . பெரிதாக கணபதி ஹோமம் வளர்த்து புது பூஜை அறை நிறுவினார்கள் .
அன்று மணிமேகலை பிறந்த நாளென்று எங்களை அழைத்தார்கள் .
அப்பா 'நேரமாகிவிடும் நீங்கள் போங்கள்' என்று சொல்லிவிட்டார் . அம்மாவிற்கு அன்று உடம்பு முடியவில்லை .
"நீயும் போகலேன்னா நல்லாருக்காது . போய்ட்டு சீக்ரம் வந்திரு " என்றாள்.
தயக்கத்தோடு தான் சென்றேன் . ஆனால் புது வீட்டையும் அதில் மிளிர்ந்த ஐஸ்வர்யத்தையும் பார்த்த போது தயக்கம் பறந்து போனது .
மாதவி அத்தை வரவேற்றார்கள் .
"வீடு புதுசா கட்டின அப்புறம் இப்போதான வார நீ ? பாரு! " என்றாள் .
கிழக்கு திசை நோக்கி மிக பிரம்மாண்டமாக பள பள என்று வேலைப்பாடுகளோடு கூடிய பூஜை அறை என்னை கவர்ந்தது . மிக பெரிய பெருமாளும் அலமேலு மங்கையும் பிரதானமாக காட்சி தர, மற்ற அணைத்து தெய்வங்களும் இந்தா இடம் என்று தாராளமாக இடமளித்திருந்தார்கள் .
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ! எப்படி இருந்த வீடு !!
"அத்தை ! மணிமேகலை எங்க ?"
"ரூம்லதான் இருப்பா".
பூஜை அறைக்கு சற்று தெற்கே தள்ளி அமைந்துள்ள பெரிய படுக்கைகள் கொண்ட அறைக்கு சென்றேன் . மணிமேகலை, கையில் அழகுராஜாவை ஏந்தியபடி , ஜன்னல் வழியாக வெளியில் ஏதோ வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள் .
"ஹேய் பர்த்டே பேபி ! எப்படி இருக்க "!
அவள் காதில் விழவில்லையா ? அப்படி என்ன பார்க்கிறாள் ?
"அடியேய்! உன்னைத்தான். மணிமேகலை!!" சற்று உரக்க கூப்பிட்டேன் .
"ஆ ! யாரு ? சங்கரி அக்காவா? இதோ வந்துட்டேன் "! மணிமேகலையின் குரல் பின்னாலிருந்து கேட்டது. சுழன்று திரும்பினேன் . வாய் நிறைய தண்ணீர் வைத்துக்கொண்டு 'வருகிறேன் ' என்று சைகை செய்தாள். கருவிழிகளை மட்டும் மெதுவாக நகர்த்தி என் முன்னால், ஜன்னல் அருகே நின்றவளை பார்த்தேன் .
கூந்தல் காற்றில் மிதக்க , சந்தன நிறமும் கன்னக்குழி சிரிப்புமாய் , பெரிய விழிகளோடு , பூனை குட்டியை தடவியபடி நின்றிருந்தாள் மணிமேகலை !
முற்றும் .
 
Status
Not open for further replies.
Top