priya pandees
Moderator
அத்தியாயம் 17
குஹன் எழுந்து கிளம்பி வந்தபோது, வரவேற்பரையில் தான் பிள்ளைகளுடன் அமர்ந்திருந்தாள் பௌர்ணமி. அவளுக்கு, பிள்ளைகளை விட்டு செல்வதா வேண்டாமா என யோசிக்க வேண்டியிருந்தது. ஹரிணி மட்டுமே அவ்வபோது குஹனுடன் வெளியே தனித்துச் சென்று தங்கியுமிருக்கிறாள். அவளை பற்றி பிரச்சினை இல்லை, கிருத்திக் தான் இவளை விட்டு இருந்து கொள்வானா என தெரியவில்லை. அவளால் முடியுமா என்பதையும் சோதித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவள் அந்த யோசனையில் இருக்க, அந்நேரம் குஹன், "ஃப்ரஷ் மார்னிங் மை லவ்ட் ஒன்ஸ்" என பௌர்ணமியின் முடியை கலைத்து விட்டு அவளை இடித்துக் கொண்டு வந்தமர, கண்டு கொள்ளவில்லை அவள்.
"சாப்டீங்களா எல்லாரும்?" என பொதுவாக கேட்க, பிள்ளைகள் இருவரும் தான் பதில் கூறினர்.
"இன்னைக்கு நைட் ட்ரைனுக்கு நானும் அம்மாவும் கிளம்புறோம் மாமா" என நிலன் பின்னிருந்து வந்தவாரே சொல்ல,
"இங்க உனக்கு வேலை முடிஞ்சதா நிலா?"
"ம்ம் நேத்தே முடிஞ்சது மாமா. இன்னைக்கு மதியம் போய் சைன் பண்ணி வச்சுருக்க ஃபைல வாங்கிட்டு வரணும் அவ்வளவு தான்"
"சரிடா. குழந்தை பிறக்கவும் சொல்லு நாங்க வரோம்"
"கண்டிப்பா மாமா. நீங்க வராம எப்படி?" என்றவன் அக்காவையும் ஓரபார்வை பார்த்துக் கொண்டான்.
"சரி பார்த்து போய்ட்டு வாங்க. அத்த நீங்க இருக்குறதுனா இருங்களேன். அம்மா இருக்காங்க தானே?" என காந்திமதியிடம் கேட்க,
"இல்ல மாப்ள. மருமகளும் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போய்ட்டா. இவன் தனியா தான் இருப்பான், பேத்தியையும் பாக்கணும். அதனால நானும் கிளம்புறேன். நீங்க பிள்ளைகள லீவுலயே ரெண்டு மூணு நாள் அங்க கொண்டு விடுறீங்களா?"
"இப்பவே கூட கூட்டிட்டு போங்க. உங்க மகள மட்டும் அனுப்ப மாட்டேன். இங்க நாந்தான் பத்திரமா பார்த்துக்குவேன்" என சிரிக்க, காந்திமதியும் மகளை தான் இப்போது ஓரபார்வை பார்த்தார்.
குஹன், பௌர்ணமி, ஏதோ பேசியிருக்கிறாள் என நிலன், காந்திமதி பார்வையில் கண்டு கொண்டான், ஆனால் எப்போதும் விடாமல் சலசலக்கும் அவன் அம்மா இன்னும் வாயை இறுக மூடி இருப்பதில், அவனுக்கு அது தனக்கு வேண்டாத ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்தது.
"என்னம்மா ஓவரா சைலண்ட்டா இருக்க?" என அவரை வம்பிழுக்கவே கேட்டான்.
"நானும் கிளம்பலாம்னு இருக்கேன். எனக்கும் அங்க புருஷன், மகன், மகன் பிள்ளைகன்னு இருக்காங்க. போய் பாக்கணும். உன் பிள்ளைகள அனுப்புறனா சொல்லு கூட்டிட்டு கிளம்பிருவேன். அந்த சிலுப்பிய என்னன்னு கேளு. சும்மா உங்க ரெண்டு பேரு வாய பார்த்துட்டு உட்கார்ந்திருக்க முடியாது" என்றார் அவர்.
"நீ நியூட்ரிஷியன் ஃபுட்டா குடுக்க மாட்டேன்னு தான் அவ பிள்ளைகள அனுப்ப பயப்படுறா" என்றான் அதற்கு மட்டும் பதிலாக.
"உனக்கு என்னத்த குடுத்து வளர்த்தேனோ அத குடுத்து என் பேரன் பேத்திகள எனக்கு வளர்க்க தெரியும் போடா" என்றார் அவர். பேச்சு இப்படியே செல்ல, குஹனுக்கு ஏதோ அழைப்பு வர, எழுந்து கொண்டவன், சாப்பிட்டு கிளம்பிவிட்டான்.
விசாலாட்சி, "நீ என்னத்துக்கு இப்பிடி வாய்ல பசை போட்டவ மாதிரி உட்கார்ந்துருக்க?" என்றார் குஹன் சென்றபின் பௌர்ணமியிடம்.
"இவங்க ரெண்டு பேரையும் நானே என்னோட கூட்டிட்டு போறேன்"
"ஏன் அவன் வச்சு பார்க்கட்டும். நீயே பார்த்துட்டு, நீதான் பார்த்தேன் நீதான் பார்த்தேன்னு சொல்லிட்டு திரியிறதுக்கா? விடேன் அவன்ட்ட அவனும் அது கஷ்டமான வேலையா இல்லையான்னு தெரிஞ்சுக்கட்டும்"
"நீங்க என்ன அனுப்பிட்டு உங்க கூட கூட்டிட்டு போக ப்ளான் பண்றீங்க"
"இதப்பாருடா! அப்படினாலும் என் வீட்டுக்கு தான கூட்டிட்டு போறேன், அதென்ன மனுஷங்க வாழ முடியாத இடமா?" என கடுப்பானார் அவர்.
"அத்த, ஒன்னு அவங்க என்ட்ட இருக்கணும் இல்ல உங்க பையன்ட்ட இருக்கணும். இப்ப இருக்க சிட்யுவேஷனுக்கு ஹரிணி நிறைய யோசிப்பா, அவள நாங்க ரெண்டு பேரும் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போனீங்கனா ரொம்ப குழப்பிப்பா. சோ அது வேணாம்" என தெளிவாக கூறிவிட்டாள்.
"சரிடியம்மா. ரெண்டு பேரும் இங்க அவன் பொறுப்புல இருக்கட்டும். நீ கிளம்பு"
"அவங்க பாத்துக்க மாட்டாங்க"
"நீ விட்டாதானே அவன் பார்ப்பான். சிலுப்பட்ட எனக்கு மண்டைக்கு ஏத்தாத. பிரியணும்னு முடிவு பண்ணிட்டல்ல, அப்ப ஆளுக்கொரு பிள்ளைன்னு தான கோர்ட்டும் தருவாங்க. அப்படி நினைச்சுகிட்டு இப்ப கிளம்பி போ" என்றுவிட, முறைப்புடன் தான் கிளம்பினாள்.
பிள்ளைகள் இருவரிடமும், "அம்மாக்கு டென் டேய்ஸ் ஈவன்ட் ப்ராஜெக்ட் இருக்கு, அம்மா போய்ட்டு வரேன். அப்பாட்ட இருப்பீங்களா?" என கேட்டே கிளம்பினாள். ஹரிணி உடனே சரியென்று விட, கிருத்தி மட்டுமே அவள் காலை கட்டிக்கொண்டு அழுதான்.
"அப்பா ட்ரீப் போறாங்க தானே அதுமாதிரி அம்மா போறாங்க கிருத்தி. நாம அப்பாவோட எதாவது அவுட்டிங் ப்ளான் பண்ணலாம். அம்மாக்கு பை சொல்லு" என சொல்லி கொடுத்தாள் ஹரிணி.
ஆனாலும் சிறிது நேரம் அவனை மடியில் அமர்த்தி பேசிபேசி சரிசெய்து தான் கிளம்பினாள். நிலனும், அவள் கிளம்பும் நேரத்தில் அவனையும் ஹரிணியையும் அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பிச் சென்றுவிட்டான்.
"இதெல்லாம் தேவையாடி? புருஷன் பொண்டாட்டி சண்டை ரொம்ப சாதாரணம். அத பெருசாக்கி, ஊரே பேசுற மாதிரி செஞ்சு. இப்ப பிள்ளைகளையும் இப்படி தவிக்கவிட்டு எங்கேயோ நிம்மதிய தேடி போறேம்னு கிளம்பிருக்க. அப்பப்ப சண்டை போட்டு சமாதானம் ஆகிக்றது தான்டி குடும்ப உறவே. சித்து சொன்னா கேளு. அனாவசியமா யோசிக்குறதெல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உன் குடும்பத்த பாக்குற வழிய பாரு" என்றார் காந்திமதி.
"அங்க பொம்பளைங்க முடி வெட்டுற கடையே கிடையாது. முடிஞ்சா கொஞ்சம் முடிய வளர்த்துட்டு வாடிம்மா" என்றார் விசாலாட்சி.
"மதினி?" என காந்திமதி பாவமாக பார்க்க,
"அதுங்களே இப்பத்தான், நா பொண்டாட்டி நீ புருஷன்னு ஒரு முடிவுக்கு வந்துருக்குதுங்க, அதை கலைச்சு விட பாக்குறியா நீ?" என முறைத்தார் பதிலுக்கு. பௌர்ணமி அதையும் கேட்டவாறே கிளம்பிவிட்டாள்.
அவளின் கீழ் வேலையில் இருப்பவர்களுக்கும் சொல்லிவிட்டு தான் கிளம்பினாள், "நா நம்ம ஈவன்ட்டுக்கு தான் திரும்பி வர்ற மாதிரி இருக்கும். அப்படி ப்ளான் பண்ணி தான் கிளம்புறேன். அங்க போய்ட்டு டிசைன் எல்லாம் நா மெயில் பண்றேன். ஸ்டிட்சிங் வொர்க் எல்லாம் பக்காவா இருக்கணும். சேம்பிள் எனக்கு நம்ம கிரண் மூலமா குடுத்தனுப்பிருங்க" என அனைத்தையும் பக்காவாக தயார் செய்து விட்டே கிளம்பினாள்.
கோயம்புத்தூருக்கு விமானத்தில் வந்திறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் நத்தம்பாளையம் என்ற கிராமம் அவள் நுழைகையில் மணி மாலை ஆறரை தொட்டிருந்தது. விசாலாட்சி ஏற்பாட்டில் பௌர்ணமியை அழைத்துச் செல்ல வண்டியும் ஓட்டுநரும் விமான நிலையத்திலேயே தயாராக இருந்தனர்.
எங்கு திரும்பினாலும் தென்னை மரங்கள் தான் வரிசையாக இருந்தது. சாலையின் இருபக்கமும் தோப்புகளும் வேலையை முடித்து கிளம்பும் மக்களும் தென்பட பார்த்தபடி வந்தாள். ஜன்னலை திறந்து வைத்திருக்க, இயற்கை காற்று முகத்தில் மோத, ஆழ்ந்து சுவாசித்தபடி வந்தாள். கடந்து செல்பவர்களும் காரைப் பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வது தெரிந்தது.
திருமணத்திற்கு முன்பும் சரி, பின்னரும் சரி குஹன் என்பவன் அவனும் இவ்வூர் பக்கம் வந்ததில்லை, இவளையும் பிள்ளைகளையும் கூட அழைத்து வந்ததில்லை. குஹனின் அண்ணனின் மேற்பார்வையில் தான் இங்கு அவர்களுக்கென்று இருக்கும் விவசாயம் கூட நடந்து கொண்டிருக்கிறது. விசாலாட்சி, இது அவரின் பிறந்த ஊர், பிறந்த வீட்டு சொத்து என்பதாலேயே இன்னும் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இதெல்லாம் கேள்வி பட்டிருக்கிறாள் ஆனால் வந்ததில்லை வரவேண்டும் என நினைத்ததுமில்லை.
வண்டி நின்றதும் சுயநினைவு பெற்று, திரும்பி பார்த்தாள். காம்பவுண்ட்டினுள் பழைய காலத்து இரண்டடுக்கு வீடு, முன்னால் நல்ல விஸ்தாரமாக இடம், அதில் தான் கார் நின்றது. இறங்கி சுற்றிலும் பார்க்க, ஆட்கள் வைத்து தொடர்ந்து பராமரிக்கப் பட்டு வருகிறது என காட்டும் விதத்தில் வீடும் இடமும் பழமையோடு சுத்தமாக இருந்தது.
"அமுது புள்ள!" என ஓட்டுநர் சத்தத்தில் அவரை திரும்பி பார்க்க, உள்ளிருந்து வேகமாக ஒரு பெண் ஓடி வந்தாள்,
"வாங்க அம்மிணி. சௌக்கியமா இருக்கியளா? வண்டி சத்தத்துக்குத்தேன் ஓடி வந்தேன், சீல அவுந்துருச்சு, எடுத்து சொருகிட்டு மறுக்கா ஓடியாரேன். உள்ள வாங்க. ஏண்ணே பெட்டிய கொண்டாருங்க"
"நா வரேம். நீ அம்மணிய கூட்டிட்டு போ" என்ற ஓட்டுநர், "நீங்க உள்ள போய் பார்த்து சொல்லுங்க அம்மிணி, எந்த அறைல வைக்கணும்னு சொல்லுதீகளோ அங்கன பொட்டிய கொண்டு இறக்கிடுதேன்" என்றார் அவளிடமும்.
"வாங்க அம்மிணி" என தேனமுது முன்னே நடக்க, பின் தொடர்ந்தாள் பௌர்ணமி.
"முன்ன தார்சால தேங்காயா அடுக்கி கிடக்கு அம்மணி. உங்களுக்கு அது புது வாடையா இருக்கும்னா மேல அறைகள்ல எதையாவது எடுத்துகிடுங்க" என சொல்லிக்கொண்டே வீட்டினுள் காலெடுத்து வைக்க, பௌர்ணமிக்கும் அந்த வீட்டிலிருந்து புதுவித வாசனை தான் வரவேற்றது.
"சாம்பிராணி போட்டேனுங்க. வெள்ளி, செவ்வாய்க்கு மட்டுந்தான் போடுவேனுங்க. மத்தபடி அத்த வாரன்னைக்கு போட்டு விடுறது வழக்கமுங்க. இன்னைக்கு நீங்க வாரீகன்னு சொல்லவும் போட்டுவிட்டேன். உங்களுக்கு ஒத்துகிடுங்களா?" என கேட்க,
"நா சென்னைல இருந்து தான் வாரேன். வெளிநாட்டுல இருந்து இல்ல அமுது. அமுது தானே உங்க பேரு?" என சிரித்தாள் பௌர்ணமி.
"தேனமுதுங்க அம்மணி. சும்மா வா போ ன்னு பேசுங்க. அத்த அப்படித்தான் பேசுவாக. நீங்க வெளிநாட்டு மனுஷியாட்டந்தேன் இருக்கீக" என்கவும் இவள் சிரிக்க, அவளும் வெகுளியாக சிரித்தாள்.
"இங்க அத்த எங்க தங்குவாங்க? வேற யாரும் வந்தா எங்க தங்குவாங்க?"
"அத்தயும் மாமாவும் அந்த வடக்கு பக்க இருக்க அறைல தங்குவாக. பெரியய்யா குடும்பம் வந்தா மேல ரெண்டு அறைல தங்குவாங்க. அம்மணி சின்னையன் நல்லார்க்காகளா? எம்புட்டு பெரிய நடிகராயிட்டாகல்ல? உங்கள கூட்டிட்டு ஒருக்கானாலும் வருவாகன்னு பாத்தோம் வரவே இல்ல. விசா அத்த வரும்போதுலாம் நாங்க கேட்போம், ரொம்ப பிஸின்னு சொல்லி போடுவாக" என பேசியபடி அவள் வர,
சிரிப்புடன் ஒவ்வொரு அறையாக ஆராய்ந்தவளுக்கு, ஒரு அறைக்குள் இருபது வயதில் இருக்கும் குஹனின் ஃபோட்டோ கண்ணில் பட, நின்று "இங்க யாரும் தங்குவாங்களா?" என்றாள்.
"இல்ல இது சின்னய்யன் ரூமுதேன். ஆனா அவுக வந்து தங்கி நானே பார்த்ததில்ல. நீங்க இங்கனயே இருக்கீகளா?"
"ம்ம் இங்க இருந்துக்குறேன்" என்றுவிட்டாள், அடுத்த நொடியே பெட்டியை கொண்டுவர சொல்ல வெளியே ஓடிவிட்டாள் தேனமுது.
மரகட்டில், சுவற்றோடு இருந்த மர பீரோல், குளியலறை என சுத்தமாக இருந்தது அந்த அறை. குஹன் சிறுவயது ஃபோட்டோக்கள் சுவற்றில் தொங்கி கொண்டிருக்க, பீரோவை திறந்து பார்த்தாள், அதில் ஒன்றிரண்டு அவன் சிறுவயது ஆடைகள் மட்டுமே இருந்தன. அதை மூடியபடி திரும்ப, கையிலிருந்த அலைபேசி அவன் பெயரைத் தாங்கி மிளிர்ந்தது.
அங்கிருந்த பெரிய ஜன்னலை திறந்து விட்டவாறு, ஃபோனை எடுத்து காதில் வைத்தாள்.
"எங்க இருக்க சித்து?" என்றான் எடுத்ததும் காட்டமாக.
"உங்கம்மா சொல்லல?" என்றாள் வெகு நிதானமாக. அவன் கோபமாக கேட்பது இவள் கிளம்பி வந்ததற்காக என்பதில் உள்ளுக்குள் ஒரு திருப்தி பரவுவதை தடுக்க நினைக்கவில்லை அவள். ரகசியமாக அனுபவித்துக் கொண்டாள்.
"அவங்க தான் உன்ன பேக் பண்ணதா? நம்ம டிவோர்ஸ்கான காரணத்த எதுக்கு அவங்ககிட்டயும் சொன்ன நீ? யாருக்கும் தெரிஞ்சா அப்படி நினைப்பாங்க இப்படி நினைப்பாங்கன்னு என்கிட்ட சண்டைக்கு நின்னுட்டு வைர்லெஸ் சோசியல் மீடியாக்கு சொல்லிருக்க நீ?"
"என்னடா சொல்லுத என்னைய?" என விசாலாட்சி குரலும் அருகில் அதட்டலாக கேட்டது.
"சித்து?"
"நத்தம்பாளையம் வந்துருக்கேன். நீங்க பேசுனது மன்னிக்க கூடியது தான்னு தோணும்போது உங்கள மன்னிச்சுட்டு கிளம்பி வரேன். இப்பவே வரணும்னா வந்து டிவோர்ஸ் தான் கேட்பேன். எனக்கு ரொம்ப ஸ்டெரஸ்ஸா இருக்கு. உங்களுக்கு நா அவ்வளவு ஈசியான்னு தோணுது. நா இல்லைனாலும் நீங்க சாதாரணமா ஹேப்பியா இருப்பீங்க தானே? இருங்க. ப்ளீஸ் குட்டீஸ கவனமா பாருங்க" என பேசி முடித்து அவன் கடுப்பை மேலும் ஏற்றிவிட்டு அமைதியாக வைத்துவிட்டாள்.
"விசாலாட்சி!" என அவன் அங்கு கத்துவதை கேட்டவாறே தான் வைத்தாள்.
"எம்பேரு சொல்லுவியா நீயி?" என விசாலாட்சி சண்டைக்கு செல்ல,
"எதுக்கு இப்ப அவள அங்க அனுப்பி வச்சுருக்க நீ? ஆமா உன் பேச்சு கேட்டு அவ எப்படி முதல்ல கிளம்புனா?" என்றான் விசாலாட்சியிடம்.
"அந்தளவுக்கு நீ அவள டார்ச்சர் பண்ணிருக்கடா"
"டார்ச்சர் நா பண்ணேனா?"
"ஆமா நா தெரியாம கேக்குறேன்? உன் நெனப்பு என்ன, நீ என்ன அமைதியான சாந்த சொரூபியவா கல்யாணம் பண்ணிருக்க? உங்கூட வாலில்லாம கிளைக்கு கிளை தாவிட்டு இருந்தவள கல்யாணம் பண்ணிருக்க, நீ மூணு கால்ல நின்னா அவ மூணே முக்கா கால்ல நிப்பான்னு உனக்கே தெரிய வேணாம்?"
"ம்ச் நா என்ன கேக்குறேன்? அவளா டிவோர்ஸ் வரைக்கும் போனப்ப கூட பேசாம வீட்டுக்குள்ள இருந்தா, நீ தான் இப்ப கிளப்பியே விட்ருக்கம்மா"
"ஏன்டா பின்ன உங்கள தூக்க மாத்திரைய திங்க விட்டு வேடிக்கை பார்க்கவா கறியும் சோறும் போட்டு வளத்துருக்கோம்?"
"இப்ப எதுக்கு அவள அனுப்புன நீ? நா கொஞ்சம் சமாதானம் பண்ணி வச்சுருந்தேன். உன்ன யாரு உள்ள வர சொன்னது?"
"நீ சமாதானம் பண்ணி கிழிச்ச லட்சனத்தத்தான் ரெண்டு நாளா பாக்கோமே நாங்களும். இங்க பாரு, பொண்டாட்டி தப்பு செஞ்சா, உனக்கு பிடிக்காதத செஞ்சா, பிள்ளைக பார்வைக்கு கூட வராம கண்டிக்கிறான் பாரு அவந்தான் ஆம்பள, நீ உன் ஃப்ரெண்ட்ஸ்ட்ட சொல்லி சிரிச்சியாமே? பொண்டாட்டிய பத்தி ஊரு உலகத்துக்கு சொல்லத்தான் கல்யாணம் பண்ணியா நீ?"
"தெரியாம ஒருதடவை செஞ்சுட்டேன், இத அவளே ஆயிரம் தடவை சொல்லி காமிச்சுட்டா. சாரியும் சொல்லிட்டேன் இன்னும் என்ன பண்ணணும்?"
"சாரிலாம் பத்தலையாம் உன் பொண்டாட்டிக்கு"
"வேற என்ன தான் பண்ணணும்?"
"யோசிடா. பொம்பள புள்ளையையும் ஆம்பள பிள்ளைகளையும் கட்டிபிடிக்க விடுறதுக்கு யோசிக்குற மூளைய இதுக்கும் கொஞ்சம் யூஸ் பண்ணு. நாப்பது வயசுல ஐடியா கேக்க வந்துட்டான். லவ் பண்ணும்போதே இந்த சிலுப்பட்ட கண்டிப்பா வேணுமான்னு யோசின்னேன் கேட்டியா நீ?"
"லூசு மாதிரி பேசாதம்மா"
"ஆமா நாந்தான டிவோர்ஸ் கேட்டுட்டு லூசு மாதிரி சுத்துறேன்"
"ம்ம்மாமாமா!" பல்லை கடித்து அவன் எழுந்ததில் தான் வாயை மூடினார் விசாலாட்சி.
குஹன் அப்படியே அமர்ந்துவிட, அவனருகில் வந்த நிலன், "அக்காவ லவ் பண்றீங்களா மாமா?" என கேட்டு நின்றான்.
"ஏன்டா அடுத்து நீயாடா?" என்றான் சலிப்புடன்.
"அக்காவுக்கு அதுல தான் டவுட் மாமா. நீங்க அவள லவ் தான் பண்றீங்களான்னு தெரியனுமாம். தெரிய வச்சுட்டீங்கனா, இந்த டிவோர்ஸ் ட்ராமாலாம் இல்லாம மறுபடியும் நீங்க சுதந்திரமா வாழலாம்"
"அடேயப்பா எனக்கு அந்த சுதந்திரமே வேணாம்ப்பா, உன் அக்கா மட்டும் போதும் வரசொல்லு" என குஹன் சொல்ல, சிரித்தான் நிலன்.
"உனக்கு சிரிப்பா இருக்குள்ள?" என குஹன் முறைக்க,
"என் பொண்டாட்டி மாதிரி, நம்ம விசா அத்த மாதிரி, என் அம்மா காந்திமதி மாதிரி ஆளுங்க பொண்டாட்டியா அமைஞ்சா அந்த புருஷன்மாறு புண்ணியம் பண்ணவங்க. என் அக்கா மாதிரி பொண்டாட்டி அமைஞ்ச நீங்க, பூர்வ ஜென்ம புண்ணியவான் மாமா" என இன்னும் சிரித்தான்.
"உனக்கு நக்கல்டா. ஆனா உண்மை தான் உன் பொண்டாட்டி வாயில்லா பூச்சி, உன் அம்மா வெகுளி, என் அம்மா ஆல் இன் ஆல் அழகுராணி, இவங்கள மாதிரி பொண்ணுங்கள சமாளிக்குறது ரொம்ப ரொம்ப ஈசி. ஆனா என் பொண்டாட்டி, ரொம்ப புத்திசாலி, அதிமேதாவி, டீப் திங்கிங் உள்ள ஆளு தெரியும்ல, சமாளிக்க எவ்வளவு புத்திசாலிதனம் எனக்கு வேணும்னு கொஞ்சம் யோசிடா. அப்ப இந்த இடத்துல பாராட்டபட வேண்டியவன் நாந்தான். நீ சும்மா பெருமை பட்டுக்காத" என பெருமையாகவே கூறினான். அதில் குஹனுக்கு மாற்று கருத்தே கிடையாது.
"என் பொண்டாட்டி திறமைசாலி. அவ அவளோட திறைமைல ஜெயிச்சு இந்த இடத்துல நிக்கிறா" என பெருமையாக தான் நினைப்பான், வெளியேவும் கூறுவான். அவளை அப்படி பெருமையாக நினைப்பதில் கர்வம் கூட உண்டு அவனுக்கு.
"சரிதான். அப்ப கரெக்ட் பண்ணுங்க உங்க பொண்டாட்டிய"
"கரெக்ட் பண்ணி இருபது வருஷம் ஆச்சுடா மச்சான்" என்றான் உல்லாசமாக.
"ஆனா அக்கா இல்லன்றாளே?"
"அவளுக்கு தெரியலடா"
"அதுசரி"
"அவளுக்கு நா எங்க பெர்சனல வெளில பேசிட்டேன்னு கோவம். அது இன்னும் நா அவகிட்ட பேச பேசத்தான் சரியாகும். பேசி பேசி சரி பண்ணிருப்பேன் அதுக்குள்ள என் அம்மாவ பாரு என்ன வேலை பாத்துருக்காங்கன்னு. இவங்களுக்கு என் மேல தான்டா காண்டு. சமயம் பார்த்து பழிவாங்குறத பாரு நிலா" என உள்ளறையில் காந்திமதியிடம் பேசிக் கொண்டிருந்தவரை பார்த்தே கூறினான்.
"அத்த நீங்க சேர்ந்துடணும்னு தான் நினைக்கிறாங்க, அக்கா தனியா இருந்தா தான் ஃபேமிலிய மிஸ் பண்ணுவா திரும்பி வருவான்னு தான் இப்படி செஞ்சாங்க"
"சேர்த்து வைக்க நினைக்குறதெல்லாம் சரிதான், அதுக்கு கிடைச்ச கேப்ல என்னைய பழி தீர்த்துக்குறாங்க அதான் உண்மை"
"ச்ச ச்ச இருக்காது மாமா"
"உனக்கு எங்கம்மாவ பத்தி தெரியல போ"
"அக்காவ தேடி போவீங்களா மாமா?"
"உடனே போய் நின்னா என் கெத்து என்னடா ஆகுறது?"
"ஈகோவா மாமா?"
"உன் அக்காவவிட கம்மி தான்"
"டேய் நானும் கிளம்பணும். எனக்கு நாளைக்குக்கு டிக்கெட் போடு" என வந்து நின்றார் விசாலாட்சி.
"அஹான்! அப்ப வீட்ல குட்டீஸ் கூட யாரு இருப்பா?"
"ஏன் நீதான் இருந்து பாக்கணும். எங்கூட கூட்டிட்டு போ கூடாதுன்னு உன் பொண்டாட்டி சொல்லிட்டு தான் போயிருக்கா. இங்கேயே அவ வர்ற வர உட்கார்ந்துருக்கவா நானு?"
"அப்றம் எதுக்கு அவள அனுப்புன நீ?"
"இப்ப என்ன உன்னால பாக்க முடியாதுன்னு சொல்லி நீயே வர சொல்லேன் அவள"
"இல்ல கிளம்பு நீ! என் குடும்பத்த நானே பாத்துக்குவேன்" என்றவன் அடுத்த நிமிடம் மறுநாள் அவர் கோயம்புத்தூர் செல்ல விமான முன்பதிவு செய்துவிட்டான்.
பௌர்ணமி அங்கேயும், குஹன் இங்கேயும் தங்களது பிரிவை சுவீகரிக்க துவங்கினர். இருவருக்கும் தனித்தனியாக இருப்பது புதிதான விஷயம் இல்லை. வேலை காரணமாக பல நாட்கள் பிரிந்திருக்கின்றனர். அப்போதெல்லாம் இல்லாத ஒன்று ஒருவருக்கு ஒருவரின் நினைவு. அவனுக்கும் அவளை நினைத்துப் பார்க்க எதுவும் இருக்காது, அவளும் அவனைப்பற்றி யோசித்துக் கொண்டு இருக்கமாட்டாள்.
கடந்த ஆறு மாதங்களாக தான் அவள் அவனை மட்டுமே அதிகம் யோசிப்பது. அவன் அதுவும் இல்லை, 'எங்க லைஃப் ஸ்டைல் இப்படிதான்' என அதை அப்படியே கடக்கவே துவங்கியிருந்தான். இப்போது மொத்தமாக அவள் போகிறேன் என்றதும் தான் இழுத்து பிடிக்க முயல்வதும்.
இருவரையும் இந்த பிரிவு யோசிக்க வைத்தது. முதல் நாள் இரவு அவளோடு இருந்ததையும் இன்று பிள்ளைகள் இருவருக்கும் நடுவில் இருப்பதையும் அவள் எங்கோ தனித்து இருப்பதையும் நினைத்து கலங்கினான்.
"ஏன் சித்து இப்படி பண்ற?" என மானசீகமாக பேசினான். அவளால் பிள்ளைகளை விட்டு தனித்திருக்க முடியாது என்று தெரியும், இருந்தும் அவனிடம் எதையோ எதிர்பார்த்து அங்கு சென்று தனியாக இருக்கிறாள் என நினைக்கையில் கொஞ்சம் பாவமாக கூட இருந்தது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவளை தவிர அவன் வேறு பெண்களை ரசிப்பதற்காக கூட பார்ப்பவனில்லை. அவன் ரசனைகள் அனைத்தும் அந்த கேமராக்களின் விழிவழி மட்டுமே வந்து சென்றுவிடும்.
ரொமாண்டிக்கான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை, உண்மையில் அதில் இருவருக்குமே நாட்டம் இருந்ததில்லை. இன்று திடீரென அந்த ரொமான்ஸை கொண்டு வர நினைத்தாலும் முடியாது அது செயற்கையாக தானே இருக்கும் என யோசித்தான்.
பிள்ளைகளை விட்டு விலகி தனியாக எழுந்து வந்து, அவளுக்கு அழைத்தான். எப்படியும் தூங்கியிருக்க மாட்டாள் என அப்படியொரு நம்பிக்கையில் அழைக்க அவள் எடுக்கவேயில்லை. இருமுறை அழைத்து பார்த்துவிட்டு, "தனியா இருக்கும் போது மட்டும் தூக்கம் வருதா சிலுப்பி?" என கொஞ்சம் கடுப்புடனே வைத்துவிட்டு, அதிக நேரம் நடந்து கொடுத்து விடியும் தருவாயில் தான் உறங்கச் சென்றான்.
அங்கு பௌர்ணமிக்கு, தேனமுது இரவிற்கு துணை இருக்கேன் என்க, "நா இருந்துப்பேன். நீ போ!" என அனுப்பி வைத்துவிட்டாள். வெளியே காவலுக்கு இருப்பவரும், வீட்டை பராமரிக்க இருப்பவர்களும் என மூவர் வாசலில் இருக்க, அவளுக்கு பயமொன்றுமில்லை. பிள்ளைகளை பற்றிய யோசனை மட்டுமே. ஏதோ அவள் சுயநலத்திற்காக அவர்களை கஷ்டப்படுத்துவதாகவே உறுத்திக் கொண்டிருந்தது.
"குஹன்!" என அடுத்ததாக அவள் கணவனிடம் அவள் நினைவலைகள் வரவும், புரண்டு படுத்தாள். அவன் கேட்ட மன்னிப்பை இப்போதும் யோசித்து பார்த்து, மூக்கைச் சுருக்கி கொண்டாள். அவன் அழைத்தபோது விழித்து தான் இருந்தாள், ஆனால் எடுக்க வேண்டாம் என இருந்து கொண்டாள். என்னவோ ஒரு அலைகழிப்பு போல் இருந்தது. அந்த இரவு இருவருக்கும் அவ்வாறு தான் கழிந்தது.
மறுநாள் காலையில் ஏதோ சத்தத்தில் தான் விழிப்பே வந்தது அவளுக்கு, எழுந்து ஜன்னலை திறந்து பார்க்க, பக்கத்து வீட்டில் தான் பயங்கர கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ஏதோ சண்டை போடுகிறார்கள் என்று மட்டும் புரிய சற்று நேரம் நின்றுவிட்டு காலை கடன்களை முடிக்க நகர்ந்து விட்டாள்.
குளித்து உடை மாற்றி வெளி வருகையில், தேனமுது காலை உணவை எடுத்து மர மேசையில் வைத்துக்கொண்டிருப்பது பட்டது.
"நாந்தான் எனக்கு செஞ்சுக்குறேன்னு சொன்னேனே அமுது?" என கேட்டுக் கொண்டே அங்கே செல்ல,
"அதனால என்னங்கம்மணி. எனக்கு வேலையே இதானுங்க. நீங்க இங்க இருக்குற வர நானே செய்தேன். இல்லனா அத்த வந்த நேரம் ஏகமா பேசிபோடுவாக அம்மணி"
தலையை அசைத்து கேட்டுக் கொண்டவள், "எனக்கு என்னென்ன வேணும்னு சொல்லிடுறேன் அத மட்டும் செய் போதும்" என்றுவிட்டாள்.
"சரிங்க அம்மிணி" என அவள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டாள். அந்நேரத்தில் மறுபடியும் வெளியே கூச்சல் அதிகமாக கேட்டது.
"பிள்ளை நல்லபடியா பிறந்துருக்கணுமே. இவுக சண்டையில பிறக்க பிள்ளை நோக்காடாகாம இருந்தா சரி" என அமுது அவள் போக்கில் பேச,
"ஓ! ப்ரெக்னன்ட்டா இருக்காங்களா? நா ஏதோ சண்டைன்னு நினைச்சுட்டேன்"
"சண்டை தானுங்க அம்மணி. நிறைமாசமா இருக்க பிள்ளைய தண்ணிய போட்டுட்டு வந்து மிதிச்சுட்டான் அவ புருஷன். நம்ம வீட்டுக்கு அடுத்த வீடுதேன் அவ அம்மா வீடு. அவள ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்க. இங்க அவனுக்கு இன்னும் போதையே தெளியல அவன பிடிச்சு அடிவச்சுட்ருக்காங்க"
"என்ன சொல்ற? போலீஸ்ல பிடிச்சு குடுக்கலாமே?"
"அதெல்லாம் செய்ய மாட்டாங்க. அவங்க எல்லாம் சொந்தம். அங்க சாக கிடக்காளே அவளே வந்து, எப்படி என் புருஷன நீங்க அடிக்கலாம் சண்டைக்கு தான் நிப்பா இதுல எங்கிருந்து போலீஸ்க்கு போக அம்மணி"
"ரெடிகுலஸ்"
"அப்படினாங்க?"
"அந்த பொண்ணுக்கு எதாவது ஆச்சுன்னா?"
"இவன்கிட்ட இன்னைக்கு சண்டை போட்டவங்களே மொத்த கூட்டா சேர்ந்து அடுத்த கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க"
"நல்ல ஊரு தான் போ. நேச்சர் நல்லாருக்கு ரொம்ப நல்ல ஊருன்னு நேத்து தானே நினைச்சேன்" என சகித்துக் கொண்டாள் பௌர்ணமி.
"ஊருக்கு என்னங்கம்மணி குறைச்சல். மனுஷங்க தான் அப்படி இப்படி மாறிபோயிட்டாங்க"
"என்ன மாறிட்டாங்க?"
"நிறைய இருக்குங்கம்மணி. இன்னைக்கு நிலவரத்துக்கு தன்னை கட்டிட்டு வந்தவளுக்கு உண்மையா இருக்கணும்னு எத்தனை ஆம்பளைங்க அம்மணி நினைக்கிறாங்க? பொண்ணுங்களாம் பாவம், மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, புருஷன் குடி, தொடுப்புன்னு இருக்குறதையும் சகிச்சுகிட்டு, பிள்ளை வரம் கிடைக்கலனா அதுக்கு வாங்குற வசவுகளையும் தனியா சகிச்சுகிட்டு, படிச்சுட்டும் வாக்கப்பட்ட வீட்ல வேலைக்கு விடலன்னு அடங்கி இருக்கிறது, அப்படியில்லனா வேலைக்கு போன்னு அஞ்சுக்கும் பத்துக்கும் அந்த பிள்ளைகள மாடா உழைக்க விடுறதும், பொண்ணு போட்டு வர்ற நகைய வித்து தான் வீட்டு பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணுறதும். நாலு பேர் முன்ன பொண்டாட்டிய போட்டு அடிக்குறவனுக்கு, 'ஆம்பள அப்படித்தான்!' ன்னு ஒத்து ஊதுறதும். அடேங்கப்பா எம்புட்டோ சொல்லிட்டே போகலாங்க அம்மணி. இது மாதிரி எதுவும் இல்லாம அமைஞ்ச வாழ்க்கை பிடிச்ச மாதிரி வாழ்ற பொண்ணுங்க ரொம்ப சொச்சம் தானுங்கம்மணி. அவங்களாம் ரொம்ப ரொம்ப குடுத்து வச்சவங்க அம்மணி" என அமுது பெருமூச்சுடன் சொல்லி நிறுத்த,
"ஐம் ஸ்டராங்க் எனஃப்" என எப்போதும் அவளுக்கு அவளே சொல்லிக் கொள்ளும் கோட்பாடு அவளை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.