எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 12

zeenath

Active member

அத்தியாயம் 12​

மாடி ஏறிச் சென்றார்கள் அனைவரும். இவர்களோடு சேர்ந்து பாட்டி சிவகாமியும் எழுந்திருக்க​

"பாட்டி நீங்களும் மேல வரிங்களா? " என்று கேட்டாள் அகிலா.​

"ஆமா! மா, பைய ,பைய ஏறி வரேன். என் பேத்தி வாழ்ற அறையைப் பாக்க வேணாமா நானு." என அங்கலாய்த்துக்கொண்டார்.​

" சரி, சரி வாங்க. உங்களை யாரு வர வேணாம்னு சொன்னா.? என் கைய புடிச்சுக்கோங்க." என்றபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அகிலா.​

பின் திரும்பிச் சோபாவில் அமர்ந்திருந்த தாத்தாவைப் பார்த்து,​

"தாத்தா நீங்க வரலையா?.." எனக் கேட்க,​

"இல்லடா நான் வரல நீங்கப் போங்க முட்டு கால் வலியா இருக்கு."​

எனக் கூறியபடி தன் அருகில் அமர்ந்திருந்த அண்ணாமலையிடம் பேச ஆரம்பித்தார். இவர்களை ஒரு பார்வை பார்த்த அனைவரும் மேலே ஏறிச் சென்றனர்.​

மேலே ஏறி வந்ததும் முதலில் பார்வையில் விழுந்தது கண்களுக்குக் குளிர்ச்சியாக மனம் வீசும் பூக்கள் நிறைந்த மொட்டை மாடியைத் தான்.​

அவளைக் கேள்வியாகத் திரும்பிப் பார்த்த அத்தையின் பார்வையில்,​

"அவருக்குப் பூக்கள் மேல் ரொம்ப பிடித்தமாம், ரொம்ப பிடிக்குமாம் த்த." "ஓஹ்"என நிவிதா கேட்டுக்கொள்ள, இவர்கள் பின்னே பாட்டியுடன் வந்த அகிலா பலவண்ண நிறத்தில் பூத்திருந்த பூக்களைப் பார்த்து ஆவலுடன் அதன் அருகில் சென்றவள் ஆசையுடன் அனைத்து பூக்களையும் வருடியபடி சுற்றி வந்தாள்.​

சுவற்றின் ஓரமாக இருந்த மஞ்சள் நிற ரோஜாவைக் கண்டு குதுகளித்தவளாக, தான் போட்டிருக்கும் மஞ்சள் நிற குர்திக்கு மேட்ச் ஆக இருக்கும் என நினைத்துக் கொண்டு, ஆவலுடனும், மகிழ்வுடனும் அதைப் பறிக்க முற்பட. இவளின் சந்தோஷ ஆர்ப்பாட்டத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்த வினிகா அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை உணர்ந்து.​

"ஏய் அகி." என்றபடியே வேகமாக அவளின் அருகில் வந்தவள். அவள் பூவைப் பறித்து விடும் முன்பு அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டாள். தமக்கையின் செயலில் பதறியவளாக அவளை நோக்க,​

"பூவ பறிக்காத? அத்தானுக்கு பிடிக்காது." என்றாள் வேக வேகமாக.​

"ஏன் கா?.." என்று ஏக்கமாகக் கேட்டபடி, சுற்றிப் பார்த்தவள் அங்குப் பூத்துக் குலுங்கிய பூக்களைப் பார்த்தபடி,​

"நீ இங்க வந்து ரெண்டு நாள் ஆகுது. ஒரு பூவ கூட இப்ப வரைக்கும் பறிக்கலையா.? என்றாள் கேள்வியாக. இல்லை என்பதாக அவளின் கேள்விக்கு இவள் பதிலளிக்க, இவர்களின் சம்பாஷனைகளை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி​

"ஏன் த்தா இந்தப் பூவெல்லாம் செடியிலேயே இருந்தா வாடிச் சருகா உதிர்ந்து போகுமே? அதுக்கு தலையில வெச்சாலும் பாக்க அழகா இருக்கும்..."​

"இல்ல பாட்டி அவருக்குப் பூவெல்லாம் செடிலயே இருந்தா தான் பிடிக்குமாம் அதைப் பரிச்சா செடிகளுக்கு வலிக்கும்னு சொல்றாரு."​

"இது என்னடி புதுசா இருக்கு..? அப்பப் பூ வியாபாரி எல்லாம் என்ன செய்வாங்க..? அவங்க எல்லாம் பூவ பறிக்கும்போது அந்தச் செடிக்கு என்ன வலிக்கவா செய்து..? இது என்னடி மா அதிசயமா இருக்கு."என்ற படியே மூக்கின் மேல் விரல் வைத்துக் கொள்ள. பாட்டியையும் அகிலாவையும் சங்கடமாகப் பார்த்தாள் வினிகா.​

இவள் சங்கடத்தைப் பார்த்த நிவிதா,​

"பாட்டி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். அத நம்ம தப்புன்னு சொல்ல முடியாது. மோகனுக்கு பூக்களைச் செடியிலேயே பார்க்கத் தான் பிடித்து இருக்கும் போல. அவர் வளர்க்கும் பூ அவரோட விருப்பம். வாங்க நாம எல்லாம் உள்ள போவோம் அம்மா, சித்தி எல்லாம் அப்பவே அறைக்குள்ள போயிட்டாங்க. வாங்க.." என்றபடி அவர்களை அழைத்துக் கொண்டு அறையில் செல்ல நன்றியாகத் தன் அத்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள் வினிக்கா.​

"ஏன் அக்கா, அப்ப அத்தான் உனக்கு ஒரு பூவ கூட இப்ப வரைக்கும் பறித்துக் கொடுக்கலையா.? என்ற கேள்வியில்.​

"அகி இந்தப் பேச்சை விடு. உள்ள போகலாம் வாங்க." எனச் சற்று சத்தமாகக் கூறியபடி வினிக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைய இவர்களைப் பின்பற்றினர் பாட்டியும் அகிலாவும்.​

நல்ல விஸ்தாரமான அறை தான். அறையின் உள் நுழைந்ததும் நேராக ஒரு மேஜை நாற்காலி இருந்தது. அதில் சில புத்தகமும் தண்ணீர் நிறைந்த ஒரு ஜக்கும் இருந்தது இடது புறம் திரும்பினால் இருவர் படுக்கக்கூடிய அளவுக்கு ஒரு மரக்கட்டில் மெத்தையுடன் அழகான படுக்கை விரிப்பு விரிக்கப்பட்டு இரு தலையணையுடன் இருந்தது.​

அதற்கு அடுத்து மூளையில் சுவற்றின் ஓரமாக இரு கதவுகள் கொண்ட அலமாரி இருந்தது. அதற்குப் பக்கவாட்டில் ஒரு கதவு அதைத் திறந்து சென்றால் சற்று பெரிய பால்கனி.​

பால்கனியிலிருந்து அறைக்குள் வந்து நேராகப் பார்த்தால் மற்றும் ஒரு கதவு அது கழிவறை. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் வினிகாவின் தந்தை, சித்தப்பா, அம்மா மற்றும் சித்தியும்.​

இவர்களின் பின்னோடு வந்த பாட்டியை அகிலா அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு அவளும் தந்தைகளோடு சேர்ந்து கொண்டாள் அக்காவின் அறையை எப்படி அலங்கரிக்கலாம் என்ற ஆலோசனையில்.​

"ஏம்பா எல்லாம் தேக்கு கொண்டு செய்திடுவோமா.?"என மருதுபாண்டி தன் தம்பி முத்துப்பாண்டியை பார்த்துக் கேட்க,​

"வேணாம் பெரியப்பா எல்லாம் ரோஸ் வுட்ல செய்வோம்" என்றாள் அகிலா வேகமாக.​

"ஏய் சின்னக் குட்டி! அதெல்லாம் உன் கல்யாணத்துக்கு நீ கேக்குற மாதிரி செய்வோம். இப்ப அக்காளுக்கு என்ன வேணும்னு கேட்டு அதுபடி முடிவு எடுங்க." என்றார் பாட்டி நாற்காலியில் அமர்ந்தபடி இவர்களைப் பார்த்துக் கொண்டு.​

தந்தையும் சித்தப்பனும் கேள்வியாக வினிகாவை நோக்க,​

"எனக்கு எந்த ஐடியாவும் இல்லப்பா? நீங்களே பார்த்துச் செய்யுங்க." என்றாள் அவள்.​

இவளின் பதிலில் ஆரவாரமாக, "பாருங்க அக்காவே சொல்லிட்டாங்க. நான் அழகா பிளான் பண்ணி தரேன்..."என்றவள் வேக வேகமாகத் திட்டமிட ஆரம்பித்தாள்.​

"அப்பா சித்தப்பா நான் சொல்றபடி செய்ங்க சரியா.?" என்றவள்.​

"சரி தேக்குலேயே செய்து கொள்ளுங்கள். ஆனால் அனைத்தும் ஒரே நிறமா இருக்கணும். பாஸ்டல் கலர் தான் இப்போ ட்ரெண்ட். நம்ம மூர்த்தி அண்ணன் கிட்ட தானே கொடுக்கப் போறீங்க? அவங்க சாம்பிள் வச்சிருப்பாங்க அதைக் கொண்டு வந்து என்கிட்ட காட்ட சொல்லுங்க நான் செலக்ட் பண்றேன்."என்ற அவளின் சொல்லுக்குத் தலை ஆட்டிக் கொண்டார்கள் அப்பனும் பெரியப்பனும்.​

"மூன்று பேர் படுக்கும் அளவுக்குக் கட்டில், நான்கு கதவுகள் கொண்ட அலமாரி, ஒரு ட்ரெஸ்ஸிங் டேபிள், அங்க இருக்கு இல்ல அதே மாதிரி ஒரு மேஜயும் குஷன் வைத்த ஒரு நாற்காலியும். எல்லாமே ஒரே நிறம் ஒரே டிசைன் சரிதானே." என்றவளின் கேள்விக்குச் சரி என்பதாகத் தல அசைத்தார்கள் அனைவரும் மென் சிரிப்புடன்.​

சுசீலா மெதுவாகச் சென்று கழிவறையின் கதவைத் திறந்து பார்க்கப் பெரிதாகும் சுத்தமாகவும் இருந்தது. ஹீட்டர் இருக்கிறதா எனப் பார்க்க அது இல்லை என்பதை தெரிந்து கொண்டவர். அதையும் சேர்க்க வேண்டும் எனத் தன் கணவரிடம் கூறிக் கொண்டார்.​

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே இவர்களுக்கான குளிர்பானத்தையும் பாட்டிக்குக் கருப்பட்டி போட்ட காபியையும் எடுத்துக்கொண்டு மேலே வந்தார்கள் மோகனின் தாய் சித்தி மற்றும் அத்தை.​

இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே எடுத்துக்கோங்க எனக் கொடுத்த ரஞ்சிதம் வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. பாட்டியைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதால் தான் முன்னின்று எதுவும் பேசாமல் தன் நாத்தனார் மற்றும் தங்கையையே அனைத்தையும் பேச வைத்தார்.​

அதற்கேற்றவாறு மோகனின் சித்தியும் சுசிலாவிடம்​

"அப்புறம் அக்கா எல்லாம் பாத்துட்டீங்களா? என்னென்ன செய்யப் போறீங்க.?" எனக்கேட்டாள் சிரித்துக் கொண்டே.​

"நாங்க எதுவும் முடிவு பண்ணல அந்தச் சின்னக் குட்டி தான் எல்லாம் பார்த்து வச்சிருக்கா.." என்றார் சிரித்தபடி.​

இவரின் பதிலில் துணுக்குற்ற ரஞ்சிதம்,​

"அவளுக்கு என்ன தெரியும்? அவளே சின்னப் பொண்ணு? ஏன்மா, வினிகா நீ எதுவும் சொல்லலையா.?" எனக் கேட்டார் தன் மருமகளை பார்த்து.​

அவரின் கேள்வியில் சங்கடமாகப் பார்த்த வினிகா வைக்கண்ட அகிலா,​

"அத்தை என்ன இப்படி சொல்லிட்டீங்க? வாங்க, வாங்க நான் என்ன எல்லாம் பிளான் பண்ணி இருக்கேன்னு உங்களுக்குச் சொல்றேன். நீங்களே அசந்து போயிடுவிங்க! என்னை பாத்தா சின்னப் பொண்ணு சொல்றீங்க.?" எனச் செல்லமாக அவரிடம் பேசிக்கொண்டே அவர் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக எங்கெங்கே என்ன வரப்போகிறது என்பதை காட்டிக் கொண்டிருந்தாள்.​

அவளின் விளக்கத்தில் திருப்தி உற்ற ரஞ்சிதம்.​

"செல்லம்! எவ்வளவு அழகா பிளான் பண்ணி இருக்க. நீ சின்னப் புள்ள உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்." என்றார் அவளின் நாடி பிடித்து ஆட்டிக்கொண்டே.​

இவர்களின் சம்பாஷனைகளை பார்த்துக் கொண்டிருந்த வினிகா தன் அருகில் நின்றிருந்த அத்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள. அவள் கையின் நடுக்கத்தை உணர்ந்த நிவிதா. மெல்ல திரும்பிப் பார்த்தபடி, யார் கவனத்தையும் கவராமல், மற்றவர் அறியா வண்ணம் தன்னோடு அவளை இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு நகர்ந்து சென்றார்.​

"என்னடி ஏன் கை இப்படி நடுங்குது.?" என்றவரின் கேள்விக்கு​

"தெரியல அத்த.ஒரு மாதிரி பயமா இருக்கு. அவர் வேற கோவிச்சுக்கிட்டு கிளம்பி போயிட்டாரு. இப்போ எதுக்கு இதெல்லாம் தேவையா? இப்படியே விட்டுடுங்களேன்." என்றவளிடம்.​

"இதெல்லாம் ஒரு முறை நம்ம வழக்கத்துல செய்யறது தான். அது அவங்களுக்கும் தெரியும். நீ அதைப் பத்தி யோசிக்காத. அவங்க அம்மாவே மோகனுக்கு புரிய வைப்பாங்க." என்ற அத்தையின் பதிலில் சற்று தெளிந்தவளாக அமைதியானால் அவள்.​

இவர்கள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தார்கள் அனைவரும் அறைக்குள் இருந்து. இவர்கள் இருவரும் தனியே நின்றிருப்பதை பார்த்த மோகனின் அத்தை,​

"என்ன அத்தையும் மருமகளும் தனியா வந்துட்டீங்க. என்ன ரகசியம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்ல."எனச் சிரித்தபடியே பொடி வைத்துப் பேச.​

"அதுதான் ரகசியம்னு நீயே சொல்றியே. அதுக்கப்புறம் எப்படி அதை வெளியே சொல்லுவாங்க. அத்தைக்கும் மருமகளுக்கும் ஆயிரம் இருக்கும் பேச அதுல நாம தலையிட முடியுமா.?" என அவரின் வழியிலேயே சென்று ஒரு இடி இடித்தார் பாட்டி.​

பாட்டியின் பதிலில் இதற்கு மேல் பேசுவது சரியாக இருக்காது என உணர்ந்தவர்களாக அனைவரும் அமைதியாகிவிட.​

"சரி மா! கிளம்புறோம்." என்றார் மருது பாண்டி மகளிடம்.​

அனைவரும் கிளம்புவதாகச் சொன்னதும் மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொள்ள சஞ்சலத்துடன் தன் அத்தையை நோக்கி அவளின் பார்வையை புரிந்து கொண்ட நிவிதா. ரஞ்சித்தத்தை நோக்கி,​

"அப்புறம் அக்கா, எங்க வீட்டு மாப்பிள்ளை வந்தா சொல்லுங்க. இதெல்லாம் ஒரு முறை இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்னு. அவங்க வேற கோவமா போயிட்டாங்க."​

"அய்யய்யோ அவன் கோபம் எல்லாம் கொஞ்ச நேரம் தான் மா. புரியாம இருக்கான். நான் சொல்லிப் புரிய வைக்கிறேன். நீங்க ஒன்னும் விசனப்படாதீங்க."என்றார் சமாளிப்பாக அனைவரையும் பார்த்து.​

பின் அனைவரும் கீழ் இறங்கி வரத் தாத்தாவும்,​

"என்னப்பா எல்லாம் பார்த்தாச்சா.?" என மகன்களிடம் விசாரிக்க, "ஆமாம்பா எல்லாம் குறிச்சி வச்சிருக்கோம். நம்ம மூர்த்தி கிட்ட சொல்லிட்டா அவன் வேலையைச் சீக்கிரம் ஆரம்பிச்சிடுவான்.." என்றார் தந்தையின் கேள்விக்குப் பதிலாக.​

"சரி சம்பந்தி, நாங்க கிளம்பறோம். இன்னும் ரெண்டு நாள்ல ஆளுங்க வருவாங்க. என்ன? ஏதுன்னு பார்த்துக்கோங்க." எனக் கூறியபடி தன் பேத்தியின் அருகில் வந்தவர், அவளின் தலையை வருடி,​

"பயப்படாம இருக்கணும் தாத்தா இருக்கேன்." என்றபடி அவளுக்கு நம்பிக்கையும் மற்றவர்களுக்குத் தங்கள் பேத்திக்கு எது ஒன்று என்றாலும் முன் வந்து நிற்போம் என்பதையும் புரியவைத்து கிளம்பி சென்றார்கள் அனைவரும்.​

தாத்தாவின் சொல்லில் சற்று நிம்மதி பெற்றவளாக அனைவருக்கும் பிரியா விடை கொடுத்து அனுப்பினாள் தங்கள் வீட்டினரை வினிகா.​

வினிகாவின் வீட்டு ஆட்கள் சென்ற சிறிது நேரத்திலேயே உள்ளே வந்த மோகன். அமைதியாக இருக்கும் வீட்டைப் பார்த்தே தெரிந்து கொண்டான் அனைவரும் கிளம்பி விட்டார்கள் என்று. சட்டென்று கோபப்பட்டு தான் கிளம்பி சென்றது சரியல்ல என்பதை உணர்ந்தவனாக உள்ளே வந்தவன் கண்கள் தேடியது தன் மனைவியைத் தான்.​

மகனைக் கண்ட அண்ணாமலை "என்ன மோகன் இது? இப்படி பேசிட்டு இருக்கும்போது எழும்பிப் போகலாமா.?" எனக் கோபமாகக் கேள்வி எழுப்ப, அவரின் சத்தத்தில் அடுப்படியில் நின்றிருந்த ரஞ்சிதத்துடன் வினிகாவும் வெளியே வந்தார்கள். சங்கடமாகத் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தவன்.​

"இல்லப்பா ஏதோ ஒரு கோபம்." என்றான் மெதுவான குரலில்.​

"அப்படி என்ன உனக்குக் கோபம்? இதெல்லாம் நம்ம குடும்பத்துல வழக்கம் தான் உனக்குத் தெரியாதா.?" என்றார் சற்று குரல் உயர்த்தி ரஞ்சிதம்.​

அன்னையின் கேள்விக்கு அமைதியாக மனைவியை நிமிர்ந்து பார்த்தவன்,​

"போகப் போக எல்லாத்தையும் புரிஞ்சிக்கிறேன் மா." என்றபடி தன் அறையை நோக்கிச் சென்றான். இரு படிகள் ஏறியவன் திரும்பி மனைவியைப் பார்த்து,​

"வினிகா மேல வா." என்ற கூறியபடி மேலே ஏறிச் சென்றவனை பார்த்தவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. அன்னை தந்தையிடம் சமாதானமாகப் பேசியவன் தன்னிடம் கடித்துக் குதறுவானோ எனப் பயப்பந்து நெஞ்சில் எழும்பப் பயத்துடனேயே மாடியில் சென்றாள் வினிகா.​

இவள் பயந்தது போல இவளைக் கடித்துக் குதற காத்திருந்தானா மோகன்? என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்...​

மௌனம் தொடரும்...​

 
Top