அன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியை தாண்டியிருந்தது. அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அனைத்தையும் எடுத்து வைத்த கார்த்திக் அவனது அறையில் இருந்து வெளியே வந்தான்.
அவனிடம் வந்த ஸ்வேதா, "கார்த்திக்! என்னோட மேரேஜ்காக இந்த வார ஞாயிறு நம்ம டீம்ல இருக்க எல்லாருக்கும் ட்ரீட் தரேன். சோ லஞ்ச்க்கு எங்கக்கூட வந்து ஜாயின் பண்ணிக்கிறீங்களா?" என ஆர்வமாய் கேட்டாள்.
அவள் கேட்டதற்கு சிறிதும் யோசிக்காத கார்த்திக், "நோ ஸ்வேதா! இந்த போர்மாலிட்டி எல்லாம் வேணாம். நான் கண்டிப்பா வரமாட்டேன். நீங்க எல்லாரும் என்ஜோய் பண்ணுங்க.." என லேசாக உதட்டை பிரித்து சிரித்தவன் தன் லேப்டாப் பையுடன் வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான்.
அவன் கூறியதைக் கேட்ட ஸ்வேதாவின் தோழிகள், "நல்லா பாரு ஸ்வேத்.. அன்னைக்கு என்னமோ நல்லவருன்னு சொன்ன? இது தான் அவர். வேலைல ஹெல்ப் வேணும்னா பண்ணுவாரு ஆனா இப்படி டீம் லஞ்ச், அவுட்டிங்னு பர்சனலா பேசுனா கண்டுக்கவே மாட்டாரு" என கார்த்திக்கை ஒருத்தி வருத்தெடுக்க,
"சரி விடு ஸ்வேத்.. அவரோட சாப்பாட்டையும் நாங்களே சாப்பிடுறோம்" என மாற்றொருத்தி கூறி ஸ்வேதாவை சகஜமாக்கினர் அவளின் தோழிகள்.
வேலைக்கு சேர்ந்த புதிதில் கார்த்திக் அவ்வளவு உற்சாகமாக இருப்பான். டீம் லஞ்ச், அவுட்டிங் என அனைத்திலும் முன் நிற்பவன், பக்கத்து டீமில் உள்ளவர்களிடமும் நட்பு பாராட்டுவான். ஆனால் இன்று அனைத்தையும் விலக்கி அனைவரிடமுமிருந்து விலகி தன்னைத் தானே தனித்தீவாக சுருக்கிக் கொண்டான்.
மறுநாள் சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் அந்த அப்பார்ட்மென்டின் வளாகத்தில் 'பி' ப்ளாக்கில் வசித்து வந்த அனைவரும் கூடியிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கார்த்திக்கும் தவறாமல் கலந்துக் கொள்வான். காவ்யா சித்துவையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.
வழக்கமான தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்னையை பற்றி கலந்து பேசியவர்கள், "வேறு ஏதாவது பிரச்சனை இருக்கா..? இல்ல யாருக்காவது எதாவது சொல்லணுமா?" என அந்த பிளாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் அனைவரையும் பார்த்து வினவினார்.
காவ்யாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி, "இங்க வீடு விடுறப்ப யார்? என்னனு? விசாரிச்சி நல்ல பேமிலியா பார்த்து வீடு விட சொல்லுங்க.." என அதட்டலாக கூறினார்.
"கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க.." என அங்கிருந்தவர் சொல்ல,
"என்னத்த சொல்லுறது? ஒன்னு கல்யாணம் ஆகாத பேச்சிலருக்கு விடுறீங்க.. இல்லனா கல்யாணம் ஆகிட்டு தனியா இருக்கவங்களுக்கு விடுறீங்க. அவங்கள மாதிரி ஆட்கள் இருக்கப்ப எங்களை மாதிரி குடும்பமா இருக்கவங்களுக்கு வெளிய போக வர சிரமமா இருக்குல?" என மனசாட்சியே இல்லாமல் அடுத்தவர்களை வசைப்பாடினார்.
அதில் வெகுண்ட இளைஞன் ஒருவன், "ஏன் பாட்டி கடைசி மாடில நாங்க நாலுபேர் பிரென்ட்ஸ் இருக்குறது தான் உங்களுக்கு பிரச்சனையா? காலைல வேலைக்கு போனா நைட் தான் வரோம். நாங்க உங்கள என்ன பண்ணுறோம்? நீங்க சொல்லுற மாதிரி குடும்பமா இருக்கவங்க அந்த கடைசி மாடிக்கு குடிவர யோசிப்பாங்க.." என சூடாகவே பதிலடி கொடுத்தான்.
அவன் கூறியதைக் கேட்டுக் கொதித்தெழுந்த லட்சுமியை அடக்கிய தலைமை பொறுப்பில் இருந்தவர், "இங்க பாருங்க மிஸ்ஸஸ் லட்சுமி மேடம், பிளாட்டோட உரிமையாளருக்கு யார் யாரை அவங்க வீட்ல குடிவைக்கிறதுன்னு நல்லாவே தெரியும். நீங்க இதை பெரிய பிரச்சனையா ஆக்காதீங்க.." என கண்டிப்புடன் கூறினார்.
அவர் ஆரம்பத்தில் இருந்தே தன்னை தான் ஜாடையாக கூறுகிறார் என தெரிந்துக் கொண்ட காவ்யா அமைதியாக அந்த கூட்டம் முடிந்ததும் சித்துவுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அங்கு நடந்த அனைத்தையும் ஒரு பார்வையாளராக இருந்து கவனித்த கார்த்திக்கிற்கு கடுப்பாக இருந்தது. இதற்காக தான் அவன் யாரிடமும் பேசமாட்டான். எங்கே போனாலும், "தனியா இருக்கீங்களா?" என கேட்டு அதனை பெரிய விஷயமாக பேச ஒரு கூட்டமே இருக்கிறது என அவனுக்கு வாழ்க்கை புகட்டிய பாடங்களில் ஒன்று.
கார்த்திக்கிடம் வந்த அந்த இளைஞன், "என்ன சார் இவங்க இப்படி சொல்லுறாங்க? பேச்சிலரா இருக்குறது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? நாமளும் நம்ம குடும்பத்துக்காக தான ஓடுறோம்.." என அழுத்துக்கொண்டான்.
"சரி விடுங்க பாஸ்.. இதுக்கெல்லாம் ஒர்ரி பண்ணாதீங்க.." என்ற கார்த்திக்கிடம்,
"இங்கயே இவ்வளவு பேசுறாங்க.. அவங்க பக்கத்துக்கு வீடு காவ்யா மேடம் கூட தனியா தான் இருக்காங்க போல, அவங்கள என்னெல்லாம் சொல்லுறாங்களோ?" என யோசனையுடன் கூறிவிட்டு அந்த இளைஞன் அகன்றான்.
லட்சுமி பேசி முடித்தவுடன் காவ்யா கிளம்பியதை பார்த்த கார்த்திக்கிற்கு இப்பொழுது தான் மணி அடித்தது. "ஓ இவங்க இப்படி பேசுனதுக்கு தான் அவங்க விருட்டுன்னு கிளம்பிட்டாங்களோ?” என எண்ணினான்.
இங்கு வீட்டிற்கு வந்த காவ்யாவிடம், "மம்மி பார்க் போலாமா?" என சித்து தொல்லை செய்தான்.
அவளுக்கு வெளியே சென்று யாரையும் பார்க்கவே சங்கடமாக இருந்தது. எனவே, "இன்னைக்கு ஒருநாள் நீ டிவி பாரு சித்து, நாளைக்கு நம்ம பார்க் போகலாம்.." என்றாள்.
"முடியாது பார்க் தான் போகணும். கார்த்தி அங்கிள் கூட விளையாடணும்" என அடம்பிடித்தவன் தோளில் இரண்டடி போட்டவள், "அமைதியா டிவி பாரு இல்லனா உள்ள போய் தூங்கு.." என மிரட்டினாள்.
வலிக்கும்படி காவ்யா அடிக்கவில்லை என்றாலும், ‘தாய் தன்னை அடித்துவிட்டாள்’ என தேம்பியபடியே படுக்கையறைக்கு சென்றவன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.
பிள்ளையை அடித்த பிறகே அதனை உணர்ந்தவள், யாரின் மீதோ உள்ள கோபத்தையும் வருத்தத்தையும் அவனிடம் காட்டிய தன்னை நினைத்தே கோபம் வந்து, அது அழுகையாக மாறியது.
பின், பாலைக் கலந்தவள் சித்துவை எழுப்ப, அன்னை அடித்த கோபத்தில் அவனும் முகம் திருப்பினான். அவனை மெல்ல தன் மடியில் படுக்க வைத்தவள் கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி பாலை அருந்த வைத்தாள்.
'இங்க இருக்கக்கூடாது! இங்க இருக்கக்கூடாதுன்னு எல்லாரும் சொன்னா நாங்க எங்க தான் போகிறது..? இப்படி ஒரு பிரச்சனை ஆகியதால் தான் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு சென்றாள். அங்கேயும் அவளின் அண்ணி கண்மணி வீட்டுக்காரர்கள் மறைமுகமாக இவளை பற்றி பேசியதால் தனியாக வந்துவிட்டாள்..இப்பொழுதும் அக்கம்பக்கத்தில் உள்ளவர் இப்படி பேசினால் நான் எங்க போவேன்..?' என்ற எண்ணம் தோன்றி அவளை நிலைகுலைய வைத்தது. அதன் விளைவால் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
அதைப் பார்த்த சித்து, "அழாதீங்க மம்மி.. நான் பார்க் போகணும்னு சொல்லமாட்டேன்" என தாயின் கண்ணீரைத் தன் தளிர் விரல்களால் துடைத்து பெரிய மனிதனாகக் கூறியவனை கண்டு புன்னகைத்தவள்,
"அம்மா அழல சித்துக்குட்டி.. கண்ணுல தூசி" என மழுப்பினாள். பிறகு சித்துவை டிவி முன் அமர வைத்துவிட்டு இரவுணவை கவனிக்க சென்றாள்.
இங்கு பார்க்கில் சித்து வருவான் என எதிர்பார்த்த கார்த்திக்கை ஏமாற்றம் தழுவியது. பின் சிறிது நேரம் விளையாடியவன் தன் பிளாட்டிற்கு திரும்பிவிட்டான்.
மாலையில் நடந்த சம்பவம் அவளை வெகுவாக பாதித்தது. 'முன்பு லட்சுமி அம்மா மட்டுமே எனக்கு எதிரே வராதே! என கடும் சொற்களால் ஏசுவார். இனி வெளியே சென்றால் யாரெல்லாம், எப்படியெல்லாம் பேசுவார்களோ..?' என எண்ணத் தொடங்கிவிட்டாள்.
ஏற்கனவே அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் யாராவது விசேஷத்துக்கு அழைக்க வந்தால் இவளை கண்டு கொள்ளமாட்டார்கள். அதையெல்லாம் வைத்துத்தான் தனியாக செல்ல முடிவெடுத்ததே! ஆனால் இன்றும் அது தொடர்கதையாக தொடர்வதை அவளால் கடந்து செல்ல முடியவில்லை.
அதனை நினைத்துக்கொண்டே புரண்டு படுத்தவள் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு மாலை போட்டிருந்த ரமேஷின் புகைப்படத்தை விழியெடுக்காமல் பார்த்தாள். அவளின் நினைவு முதன்முதலில் ரமேஷை பார்த்த கணத்திற்கு சென்றது.
"இவர் பெயர் ரமேஷ் டா அம்மு. உனக்காக அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளை" என ரமேஷின் புகைப்படத்தை காவ்யாவிடம் காட்டினார் காவ்யாவின் தந்தை ராமமூர்த்தி.
போன மாதம் தான் தனது முதுநிலைப் படிப்பை முடித்த காவ்யா அடுத்து பிஎச்டி படிக்கும் ஆசையில் இருந்தாள்.
பெண்கள் படிப்பை முடித்து அடுத்து மேலே படிப்பதா..? இல்லை வேலைக்கு செல்ல ரெஸும் தயார் செய்வதா..? என முடிவெடுப்பதற்குள் பல வீடுகளில் அவர்களின் ஜாதகத்திற்கு பொருத்தம் பார்த்து முடித்துவிடுகின்றனர்.
காவ்யாவின் வீட்டிலும் அப்படித்தான் நடந்தது. காவ்யா தயக்கத்துடன், "அப்பா! நான் மேல படிக்க போறேன். இப்ப கல்யாணம் வேணாம் ப்பா.." என தந்தையிடம் மறுப்பை கூறினாள்.
"கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட நீ படிக்கலாம் அம்மு" என கூறிய தந்தையை தவிப்பாக பார்த்தாள் பெண்ணவள்.
மகளின் அமைதி அவளின் விருப்பமின்மையை கோடிட்டு காட்ட, "ஏற்கனவே உங்க அண்ணா வேலை செய்யுற இடத்துல ஒரு பொண்ண விரும்புறேன்னு வந்து நிக்கிறான். நீயும் அப்படி ஏதாவது பண்ணிட்டு இருக்கியா? அதான் கல்யாணம் வேணாம்னு சொல்லுறியா?" என அதட்டலுடன் கேட்க,
இவ்வளவு நாள் கேட்டது அனைத்தும் கைக்கு கிடைக்குமாறு எந்த ஒரு கஷ்டமும் கொடுக்காத தந்தையின் அதட்டலில் மிரண்டவள், "இல்.. இல்லப்பா. எனக்கு டாக்டரேட் படிக்கணும்னு ஆசை ப்பா.." என்றவளிடம்,
"நான் மாப்பிளை வீட்ல பேசுறேன் அம்மு, கல்யாணத்துக்கு பிறகும் நீ படிக்கலாம். நல்ல இடம். துணிக்கடை மூணு வெச்சி நடத்திட்டு வராங்க. வசதியான குடும்பம்டா" என அவளை சம்மதிக்க வைக்க முயன்றார்.
'தான் காதலிக்கிறோம் என்று கூறியதால் இவ்வளவு விரைவில் தந்தை காவ்யாவிற்கு மாப்பிளை பார்த்து கட்டிக்கொடுக்க வற்புறுத்துகிறாரா..?' என கவலையடைந்த கௌதம் தந்தையிடம் பேச,
"காவ்யா படிச்சி முடிச்சிட்டா. இனிமே கல்யாணம் தான? நீ தான் யாரோ வேலைக்கு போற பொண்ணை விரும்புற.. இப்ப காவ்யா படிச்சி வேலைக்குப் போய் தான் இங்க நிறையனும்னு நாம குறையா இல்லையே?" என கௌதமையும் பேசியவர் அறியவில்லை பிற்காலத்தில் அந்த வேலை தான் தன் செல்ல மகளை உயிர்ப்புடன் வைத்திருக்க போகிறது என.
தந்தையாக ராமமூர்த்தி சரியாகவே நடந்தார். இரண்டு டிகிரி முடித்து, இருபத்தி இரண்டு வயது நிரம்பிய தன் பெண்ணிற்கு கல்யாணம் செய்ய ஆசைப்பட்டார். அதற்கு அவர் பார்த்த மாப்பிள்ளை ரமேஷும் நல்லவன் தான். ஆனால் இதில் காவ்யாவின் கனவு கானலாய் போய்விட்டது.
மேலும் அவளின் திருமண வாழ்விலும் விதியின் சதிராட்டம் அரங்கேற காத்திருந்தது.
தந்தையின் ஆசைப்படி திருமணத்திற்கு காவ்யா ஒத்துக்கொண்டாள். ஒரே மகளின் திருமணத்தை நூறு சவரம் நகை, பாத்திரம், பண்டம் என வெகு விமரிசையாக நடத்தினார் ராமமூர்த்தி.
என்னதான் கல்யாணத்தில் விருப்பமில்லை என்றாலும் ரமேஷின் அன்பிலும் காதலிலும் அவனிடம் தன்னை விரும்பியே தொலைத்தாள் பெண்ணவள்.
திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் படிக்க போகிறேன் என்றவளிடம் ரமேஷ், "இப்ப படிச்சி என்ன பண்ண போற..? வேணும்னா நம்ம கடைக்கு வா. அங்க உனக்கு பிடித்த வேலை ஏதாவது பாரு.." என்றான் ரமேஷ்.
காவ்யாவிற்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை. அவள் மனதில் கரையானாய் படிக்கும் ஆசை அரித்துக்கொண்டே இருக்க அவளின் வீட்டில் ரமேஷிடம் வந்து பேசுமாறு தந்தையை அழைத்தாள்.
ராமமூர்த்தி, "மாப்பிள்ளை சொல்லுறத கேட்டு நட காவ்யா. அவர் என்ன உன்னை கொடுமை பண்ணுறாரா? இல்ல வரதட்சணை கேட்டு தொல்லை பண்ணுறாங்களா?" என மேலும் அறிவுரை வழங்க அத்துடன் தன் படிக்கும் விருப்பத்தை விட்டவள், தன் கனவு கலைந்ததை உணர்ந்து மெல்ல நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு வாழ தொடங்கினாள்.
"அம்மா.." என சித்து தூக்கத்தில் சிணுங்கி காவ்யாவை நிகழ்விற்கு அழைத்து வந்தான்.
உறக்கத்தில் அழுதவனை தட்டிக்கொடுத்தவளை சிறிது நேரத்தில் உறக்கம் தழுவியது.