எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 7

அத்தியாயம் - 7

"கார்த்திக் சார்! ஐ லவ் யூ!" என ஸ்கர்ட் டாப்ஸ் அணிந்திருந்த பதினைந்து வயதே நிரம்பிய மங்கையவள் குனிந்து கொண்டே கூறினாள்.​

வேலையில் இருந்து வீட்டிற்கு வந்தவன், திருமணம் பற்றிப் பேசிய விசாலாட்சியிடம் சண்டையிட்டு கீழே கார் பார்கிங்கிற்கு வந்த கார்த்திக்கிடம் தான் ஷ்ரேயா பேசிக் கொண்டிருந்தாள்.​

வேலைக்கு சென்றதால் போர்மல் சட்டை மற்றும் பாண்ட் அணிந்திருந்த கார்த்திக் இரு கைகளையும் மார்பிற்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, "உனக்கு என்ன வயசாகுது..?" என்றான் அதட்டலாக.​

தன் சட்டையின் நுனியை திருகிக்கொண்டே, "ப்ப பதினஞ்சு.." என தந்தியடிக்க கூறினாள் ஷ்ரேயா.​

அன்னையிடம் இருந்த கோபமும் சேர்ந்துக் கொள்ள, "ம்ம்ம் பத்தாவது படிக்கிற வயசுல உனக்கு லவ் கேக்குதா..? அறிவில்லை உனக்கு..?" எரிச்சலாக கேட்டான்.​

"அது.. நீங்க.. உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை தான? அதான் உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆச.." என ஷ்ரேயா முடிக்கும் முன் அவளின் தலையில் நறுக்கென கொட்டினான்.​

வலி தாங்க முடியாமல் கண்ணீர் நிறைந்த விழிகளால் அவனை ஏறிட்டு பார்த்தவளிடம், "கல்யாணம் ஆகலைனா..? என்ன வாழ்க்கை கொடுக்க போறீயா..?" என அவளை பொரிந்து தள்ளினான்.​

அவன் கூறியதைக் கேட்டவள் கண்களைத் துடைத்துக்கொண்டு நிற்க, அவளின் செயலில் மேலும் எரிச்சலடைந்தவன், "உன்னோட அம்மா அப்பா என்ன பண்ணுறாங்க? இப்ப வீட்ல இருக்காங்களா? வா அவங்க கிட்ட சொல்லுறேன்" என திரும்பி பார்கிங்கில் இருந்து செல்ல முயன்றவனை அதிர்ந்து பார்த்தவள்,​

"அம்மா அப்பா ரெண்டுபேரும் டாக்டர்ஸ். இப்ப வீட்ல இல்லை. அவங்க கிட்ட சொல்ல வேணாம் கார்த்திக் சார்.. ப்ளீஸ்” என தேம்பித் கொண்டே கெஞ்சிவளைப் பார்த்தவன்,​

"ரெண்டு பேரும் டாக்டர்ஸ்! நீ என்ன படிக்க போற..?" என்று சம்பந்தமில்லாமல் கேட்டான்.​

"நானும் டாக்டர் தான் ஆவேன்.." என கண்ணீர் நிறைந்த கண்களில் கனவு மின்னக் கூறியவளிடம்,​

"ம்ம்ம் நீ டாக்டர்க்கு படிக்கிறப்ப உனக்கே புரியும். இதெல்லாம் காதலே இல்லை. ஹார்மோன் செய்யுற வேலைன்னு.." என நிதானமாகக் கூறியவன்,​

தொடர்ந்து, "எனக்கு முப்பத்திரெண்டு வயசு. கொஞ்சமாச்சும் லாஜிக்கா யோசி! உன்னை நம்பி உன்னோட அம்மா அப்பா வீட்ல விட்டுட்டு போறாங்க அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யாத.." என்றான்.​

"நீங்க அம்மா அப்பாகிட்ட.." என தயங்கியவளிடம்,​

"நான் சொல்லமாட்டேன். நீ ஒழுங்கா படி" என பெரிய அறிவுரை ஏதுமில்லாமல் அவளை அனுப்பிவிட்டவன் தன்னுடைய காரினை எடுத்துக் கொண்டு சென்றான்.​

கார்த்திக் கிழே வரும்பொழுது தான் அங்கிருந்த தூணுக்கு அந்த பக்கம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய காவ்யா தூங்கி வழிந்த சித்துவை தூக்கிக் கொண்டாள்.​

அந்நேரம் ஷ்ரேயா, கார்த்திக் இருவரின் பேச்சையும் கேட்க நேர்ந்தவளுக்கு, “யாருமில்லைன்னு என்கிட்ட நெருங்க முயற்சி செய்த அந்த கெடுகெட்டவனுங்க வாழுற இதே சமூகத்துல தான்.. அந்த பொண்ணுக்கு புத்தி சொல்லி அனுப்புற கார்த்திக் மாதிரி நல்லவங்களும் வாழுறாங்க.." என கார்த்திக் மீது மரியாதை ஏற்பட்ட அதே சமயம் அவனுக்கு திருமணம் ஆகவில்லை.. என தெரியவர, 'இனி சித்துவை அவரோடு விளையாட அனுமதிக்கக் கூடாது' என முடிவெடுத்துக் கொண்டவள் தனது வீட்டினை நோக்கி சென்றாள்.​

காரை எடுத்துக்கொண்டு சென்ற கார்த்திக் நேராக சென்றது கடற்கரைக்குத் தான்.​

நேற்றிரவு கார்த்திக் வீட்டிற்கு வந்த அவனது அன்னை விசாலாட்சி இன்று காலையில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துக் கொண்டு வந்தார்.​

பின் கார்த்திக் வீட்டிற்கு வந்ததும், "நம்ம சாந்தி அத்தைக்கு தெரிஞ்ச இடத்துல ஒரு பொண்ணு இருக்காம் கார்த்திக்" என்றார்.​

இப்படி ஏதாவது சொல்லுவார்கள் என ஏற்கனவே அறிந்திருந்த கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். மகனின் அமைதியை உணர்ந்த சுந்தரம் தன் மனைவிக்கு ‘இப்பொழுது பேச வேண்டாம்!’ என சைகை செய்தார்.​

அதையெல்லாம் கண்டுகொள்ளாத விசாலாட்சி, "உன்ன பத்தி எல்லாமே சொல்லிட்டாங்களாம் கார்த்தி. இந்த ஞாயிறு நீயும் அந்த பொண்ணும் தனியா சந்திச்சு பேசுனா போதும்” எப்படியாவது இந்த சம்பந்தம் அமைய வேண்டும் என விசாலாட்சி கூறினார்.​

அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், "எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைம்மா. உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லுறது?" என எரிச்சலுடன் சொன்னான்.​

"இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சனை?” என கார்த்திக்கு நிகராக கத்திய விசாலாட்சி அவனின் உஷ்ண பார்வையில்,​

"ரெண்டு முறை கல்யாணம் தடைப்பட்டு போய்டுச்சினா, வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்காம இருக்கணுமா?” என பொறுமையாகக் கேட்டார்.​

இரண்டு முறை திருமணம் தடைப்பட்டதை விட சுற்றத்தாரின் தூற்றலில் மிகவும் காயமடைந்த கார்த்திக்கிற்கு அடுத்தும் திருமணத்தை ஏற்பாடு செய்து.. அதுவும் தோல்வியில் முடிந்தால் என்னவாகும்..? என்பதை அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.​

எனவே, "நீங்க சொல்லுற எந்த பெண்ணையும் நான் போய் சந்திக்க தயாராக இல்லை! எனக்கு கல்யாணமே வேண்டாம்!" எனக் கடுமையாக எச்சரித்துவிட்டு காரின் சாவியை எடுத்துக்கொண்டு தன் தந்தை தடுப்பதையும் பொருட்படுத்தாமல் சென்றான்.​

அவனின் உறுதியில் ஆடிப்போன விசாலாட்சி, "என்னங்க? நம்ம புள்ள இப்படி சொல்லிட்டு போறான்..?" என வருத்தத்துடன் கேட்க,​

"என்னென்ன நடக்கணும்னு இருக்கோ? அதெல்லாம் நடந்து தான் ஆகணும் விசா. சீக்கிரமா அவன் மனசு மறணும்னு அந்த மீனாட்சியை வேண்டிக்கோ" என விசாலாட்சியை ஆறுதல் படுத்தினார் சுந்தரம்.​

விசாலாட்சி எதிர்பார்த்ததைப் போல் கூடிய சீக்கிரமே கார்த்திக் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப் போகிறான், ஆனால் அதற்கு தானே முட்டுக்கட்டையாக இருக்கப் போகிறோம் என அறிந்திருக்கவில்லை.​

'ஏன் தான் எல்லாரும் கல்யாணம் கல்யாணம்னு அதையே பேசுறாங்களோ..?' என கடுப்புடன் நினைத்தவனை அழைத்த அவனின் தந்தை வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.​

“வரேன்..” என்று வைத்தவன் சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்றான்.​

அதன் பிறகு கார்த்திக்கிடம் எதுவும் பேசிக்கொள்ளாமல் விசாலாட்சியும் சுந்தரமும் மதுரைக்கு கிளம்பிவிட்டார்கள்.​

அன்று பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த அனைவரையும் பார்த்த கார்த்திக்கின் கண்கள் சித்துவையே தேடியது. சித்துவைப் பார்த்து முழுதாக இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.​

அன்று அஸோசியேட் கூட்டத்தில் பார்த்தது. 'அவனுடைய பாட்டி வீட்டிற்கு சென்றிருப்பானோ?' என எண்ணிக்கொண்டான். ஆனால் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் அவனைப் பார்க்காமல் அவனால் இருப்புக் கொள்ளவில்லை.​

தன் கால் உயரம் மட்டுமே இருப்பவன் "கார்த்தி அங்கிள்.." என பட்டாம்பூச்சியாய் தன்னை சுற்றி வந்தவனை அவன் மனம் மிகவும் தேடியது.​

அவனுடைய அம்மாவும் அப்பாவும் சண்டையிட்ட மறுநாளே ஊருக்குப் புறப்பட்டிருக்க! இரு வாரங்களாய் சித்துவையும் காணாதது அவனை மிகவும் வாட்டியது. இவ்வளவு நாட்கள் இல்லாத தனிமை அவனை வாட்டத் தொடங்கியது.​

ஆனால் கார்த்திக் நினைப்பதை போல் சித்து அவனின் பாட்டி வீட்டிற்கெல்லாம் போகவில்லை. சரியாக சனி, ஞாயிறு மாலை வேளையில் சித்துவை கோவிலிற்கு, மாலிற்கு, பீச்சிற்கு என கார்த்திக்கை தவிர்க்க வெவ்வேறு இடங்களுக்கு காவ்யா அழைத்துச் சொல்கிறாள்.​

அடுத்த வாரம் கண்டிப்பாக பார்க் போக வேண்டும் என அடம்பிடித்த சித்துவை கார்த்திக் வரும் நேரம் முன்பாகவே அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள். அவள் முடிவெடுத்தால் ஆகியதா..? அவளுக்கு முன்பாகவே கடவுள் முடிவெடித்திருக்கிறாரே!​

கார்த்திக் வரும் நேரம் கணக்கில் கொண்டு சரியாக ஒரு மணி நேரம் முன்னதாக சித்துவை அழைத்துச் சென்றாள்.​

ஆனால் அங்கே இவர்களுக்கு முன்பாக இருந்தவனைப் பார்த்து அதிர்ந்தவள், அவனிடம் செல்லாமல் சித்துவை சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.​

ஆனால் கார்த்திக்கை பார்த்துவிட்ட சித்து காவ்யாவின் கையை உதறிவிட்டு "கார்த்தி அங்கிள்.." என ஓடினான்.​

இருபது நாட்களுக்கு மேல் பார்க்காத சித்து, இப்பொழுது தன்னை நோக்கி மான் போல் துள்ளிக் குதித்து ஓடி வந்தவனை தலைக்குமேல் தூக்கி இருமுறை சுற்றி இறக்கியவன், "டூ வீக்ஸ் உங்க பாட்டி வீட்டுக்கு போனீங்களா?" என அவனின் உயரத்திற்கு குனிந்து கேட்டான்.​

கார்த்திக் தூக்கிச் சுற்றியதில் கிளுக்கி சிரித்த சின்னவன், "இல்ல கார்த்தி அங்கிள்! நாங்க கோவில், பார்க், பீச் போனோம்” என்றான்.​

'ஓ அவுட்டிங் போயிருக்காங்க போல' என்று எண்ணிக்கொண்டவன், "அங்கிள் உன்ன பாக்காம ரொம்ப மிஸ் பண்ணேன்.." என்றான்.​

"நானும் தான் கார்த்தி அங்கிள். அதான் இன்னைக்கு விளையாட வந்துவிட்டேனே!" என்றவனிடம் வந்த காவ்யா, "சித்து வா.." என அழைக்க,​

"மம்மி.. நா கார்த்தி அங்கிள் கூட விளையாட போறேன்" என குழந்தை கூறினான்.​

ஏற்கனவே தன் கையை உதறிவிட்டு வந்ததில் கோபமானவள், "இப்ப வரியா இல்லையா?" என வலுக்கட்டாயமாக சித்துவை இழுத்தாள்.​

அதில் சித்துவின் கை வலிக்க அவன் அழத் தொடங்கினான்.​

உடனே கார்த்திக், "சின்ன குழந்தைகிட்ட என்னங்க பண்ணுறீங்க..?" என காவ்யாவைப் பார்த்து கடுமையாகக் கேட்டான்.​

"அவன் என்னோட பையன்! நீங்க இதுல குறுக்க வராதீங்க" என முகத்தில் அறைந்தாற் போல் சொல்லியவள் சித்துவை வலுக்காட்டாயமாக தூக்கிக்கொண்டு சென்றாள்.​

அதில் சிலையாக சமைந்த கார்த்திக் 'ஒரு வாக்கியம் ஒருவனை எவ்வளவு காயப்படுத்தி முடியும்?' என உணர்ந்தான்.​

அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவன் "என்ன இருந்தாலும் அவனுக்கு அவங்க தான அம்மா? அதான் நம்ம சொல்லுறத கேட்க கூட இல்லை!" என தனக்குள்ளே கூறிக்கொண்டான்.​

ஏனோ சித்து அழ அழ அவனை இழுத்துச் சென்றதை அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ‘அப்படி நான் என்ன செய்தேன்?’ என யோசிப்பவனுக்கு விடைத்தான் கிடைக்கவில்லை.​

__________​

அந்த மருத்துவமனையில் காவ்யா வீட்டின் ஆட்களும், அவளின் புகுந்த வீட்டு ஆட்களும் குழுமி இருந்தனர்.​

காவ்யா அழுகையுடன் தன் தாய் மீது சாய்ந்திருந்தாள்.​

"சொல்லு காவ்யா? என்னோட பேரனை என்ன பண்ண? ஓடி ஆடி விளையாடுற பிள்ளையை இப்படி படுக்க வைச்சிருக்கியே..?" என காவ்யாவின் மாமியார் மங்கலம் அவளை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்.​

அன்று வலுக்கட்டாயமாக இழுத்து வந்த சித்து அழுத அழுகையில் அன்றிரவே அவனுக்கு காய்ச்சல் வந்திருந்தது. இரண்டு நாள் வீட்டிலே வேலை பார்த்துக்கொண்டு அவனைக் கவனித்தாள்.​

ஆனால் மூன்றாம் நாள் காலை அவனுக்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாகியது. கௌதமிற்கு அழைத்து விஷயத்தைக் கூறியவள் மருத்துவமனை அழைத்து வந்துவிட்டாள்.​

காவ்யாவின் வீட்டினர் மூலம் விஷயம் கேள்விப்பட்டு வந்த மங்கலம் இப்பொழுது காவ்யாவை மங்களம் பாடுகின்றார்.​

மருத்துவ அறையில் இருந்து வெளிவந்த டாக்டர், "பயப்பட ஒன்னுமில்லை! நல்லா ரெஸ்ட் எடுத்து மருந்து மாத்திரையை எடுத்துக் கொண்டால் சரியாகிடும்" என்றார். அப்பொழுது தான் அங்கிருந்த அனைவருக்கும் உயிரே வந்தது போல் இருந்தது.​

இது தான் சமயம் என எண்ணிய மங்கலம், "உன்னால குழந்தையை தனியா பார்த்துக்க முடியலனா? எங்க பேரனை எங்கிட்டயே கொடுத்துடு காவ்யா" என கேட்டார்.​

அவரின் கேள்வியில் காவ்யா வீட்டினர் அதிர, காவ்யாவிற்கு அவளின் மாமியாரைப் பற்றித் தெரிந்ததால் அதிராமல் எந்த ஒரு உணர்வையும் முகத்தில் காட்டாமல் இருந்தாள்.​

காவ்யா வாழ்வதே அவளின் பிள்ளை ஒருவனுக்காக என்று இருக்கும் பொழுது அவர் இப்படிக் கேட்டதை காவ்யா வீட்டினரால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.​

ரமேஷ் இறந்ததில் இருந்து, “எப்பொழுதும் எங்க பேரனை எங்க கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறா.." என குறை கூறிக்கொண்டே இருக்கும் மங்கலம் ஒருநாளும் மருமகள் எப்படி இருக்கிறாள்..? என்ன செய்கிறாள்..? என்று விசாரித்ததே இல்லை.​

டாக்டர் சென்றதும் அனைவரும் உள்ளே செல்ல, மருந்தின் வீரியத்தால் சித்தார்த் உறங்கிக் கொண்டிருந்தான்.​

வாடிய கொடி போல் படுத்திருந்தவனை வருடிய காவ்யா அவனது அருகிலே அமர்ந்துக் கொண்டாள்.​

வாட்ச்மேன் மூலம் சித்து மருத்துவமனையில் இருப்பதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தான் கார்த்திக்.​

கௌதமிடம் விசாரித்து எந்த மருத்துவமனை, எந்த அறை என்று கேட்டுக்கொண்டவன் அங்கு விரைந்தான்.​

சரியாக கார்த்திக் உள்ளே நுழையும் பொழுது மருந்து போடமாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தான் சித்து.​

காவ்யாவின் அம்மா தேவிகாவும் காவ்யாவும் அவனிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். காவ்யாவின் மாமியார் மங்கலம் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.​

கார்த்திக் வந்ததை முதலில் கவனித்த காவ்யா, 'இவர் எதுக்கு வந்தாரு..' என எண்ணிக்கொண்டே, "வாங்க.." என கூறினாள்.​

அவள் அழைத்ததை தொடர்ந்து மங்கலம், தேவிகா, சித்து அவனை பார்க்க, "கார்த்தி அங்கிள்.." என ஆர்ப்பரித்த சித்துவிடம் சென்றவன் சிறு குரலில் அவனிடம் பேசினான்.​

அந்நேரம் உள்ளே வந்த கௌதம், "வாங்க கார்த்திக்.." என வரவேற்க காவ்யா நிம்மதியாக உணர்ந்தாள். இல்லையென்றால் “யார் இவர்?” என்று மங்கலம் ஒரு விசாரணையே நடத்தியிருப்பார்.​

"சித்து இந்த ரெண்டு மாத்திரை மட்டும் போடு" என காவ்யா வம்படியாக அழைக்க, "போட மாட்டேன்" என அவனும் முரண்டு பிடித்தான்.​

கார்த்திக், "நீ டேப்லெட் போட்டு நல்லா ரெஸ்ட் எடுத்தாதான? அடுத்த வாரம் விளையாட முடியும்.." என அவன் போக்கிலே சென்று பேசியவன் காவ்யாவிடமிருந்து மாத்திரையை வாங்கி அவனை விழுங்க செய்தான்.​

இவ்வளவு நேரம் அனைவருக்கும் ஆட்டம் காட்டிய சித்து கார்த்திக்கிடம் சமத்தாக மாத்திரையை போட்டதை கண்டு அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர்.​

பின், "நான் கிளம்புறேன். அவனை நல்லா பார்த்துக்கோங்க.." என காவ்யாவிடம் கூறியவன் வெளியேறினான்.​

அதுவரை அமைதியாக இருந்த மங்கலம் யாரிவன் என ஆரம்பித்தார் "என்னோட நண்பன் அத்தை. காவ்யா இருக்குற பிளாட்ல தான் இருக்கான்" என்றதும் அமைதியானார்.​

பின் மறுநாளே சித்துவை டிஸ்சார்ஜ் செய்து காவ்யாவையும் சித்துவையும் கௌதம் அவனின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டான்.​

- தொடரும்.​

 
Top