எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 16

kani suresh

Moderator
கவினை ஏன் கமலி, கண்மணிகிட்ட விட வேணாம்னு சொன்ன…" என்று காந்திமதி கேட்க,

சிரித்துக் கொண்டே, "என்னைத் தப்பா நினைக்கிறீங்களா அத்தை" என்றாள்.

"இல்ல கண்மணி. ஆனா, காரணம் எனக்குப் புரியலையே"

"அவ கொஞ்சம் யோசிக்கட்டும்னு நெனச்சேன். அவளுக்குக் கொஞ்சம் தனிமை தேவைன்னு நினைச்சேன், மத்தபடி கவினை அவகிட்ட விடக் கூடாதுன்றது என்னோட நோக்கம் கிடையாது. அவளும் அவனை விட மாட்டான்னு எனக்குத் தெரியாதா? இல்ல, நான் ஏன் கவினைப் புடிச்சு வச்சுக்கப் போறேன்" என்று சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

அவளுக்குக் கை கொடுத்துத் தூக்கி விட்ட சங்கர், "ஏதாவது சாப்பிடுறியாடி" என்று கேட்டான். சுற்றி முற்றிப் பார்த்தாள் கமலி. தன்னோட அப்பா, அம்மா இருப்பதைப் பார்த்தவன், அந்த "டி" யை கமலியாக மாற்றிக் கொள்ள,

சிரித்துக் கொண்டே, "எனக்கு எதுவும் வேணாம்" என்று விட்டு ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். இங்குக் கண்மணியிடம் பேசிவிட்டு வினோத் ஹாலுக்கு வர, மடியில் ராகினியைப் படுக்க வைத்துக் கொண்டு பத்மா கதை சொல்லிக்கொண்டு இருந்தார்.

இருவரது அருகிலும் வந்து உட்கார்ந்தவன், தன் தாயின் தோளில் சாய்ந்து கொள்ள அமைதியாக அவனது தலையைக் கோதியவர், "என்ன ஆச்சு வினோ" என்றார்.

"ஒன்னும் இல்லை அம்மா" என்றான்.

"என் பையனப் பத்தி எனக்குத் தெரியாதா? எதுவும் பிரச்சனையா வினோ" என்றார்.
"பிரச்சனைலாம் எதும் இல்ல ம்மா" என்றுவிட்டுப் பத்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன், "நான் உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்" என்றான்.

"சொல்லுடா" என்று அவனது முகத்தைப் பார்க்க, ராகினியும் எழுந்து உட்கார்ந்து தனது அப்பாவைப் பார்த்தாள்.

"நான் அந்தப் பொண்ணு கண்மணியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான்.

ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருந்தவர் பிறகு சந்தோஷத்துடன், "உண்மையா தான் சொல்றியா, இல்ல, எனக்காகவும், ராகினிக்காகவும் சொல்றியா?" என்றார் .

"நிறைய யோசிச்சு தான்ம்மா இந்த முடிவு எடுத்திருக்கேன். உங்களுக்காகவும், ராகினிக்காகவுமானு கேட்டீங்கன்னா என்ன அர்த்தம்? நீங்க என்கிட்ட இந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்கும் போது என்னன்னு சொல்லிக் கேட்டீங்க?"

"டேய், நான் ராகிம்மாவுக்கு ஒரு அம்மா வேணும்னு யோசிச்சது உண்மை. அதே அளவுக்கு என் பையனுக்கு ஒரு பொண்டாட்டியும் வேணும். எனக்கு அப்புறம் என் பையனைப் பார்த்துக் கொள்வதற்கு. நீ எப்படி உன் பொண்ணுக்காக யோசிக்கிறியோ, அதுபோல. நான் சொல்றது புரியுதா? அதுக்காக, இப்பவே நீங்க புருஷன், பொண்டாட்டியா வாழனும்னு எதிர்பார்க்க மாட்டேன். உனக்குப் புரியும்" என்று விட்டு ராகி இருப்பதைக் கண்களால் உணர்த்தினார்.

கண்ணை மூடித் திறந்து சிரித்தவன், "புரியுதும்மா, எல்லாப் பக்கமும் யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கிறேன். நாளைக்கு நாம போய் அவங்க வீட்ல பேசலாம்."

"டேய், உண்மையா தான?"


"நான் இன்னைக்குக் கண்மணிகிட்டப் பேசினேன் மா" என்று விட்டு அவளிடம் பேசியதைப் பாதி விஷயங்களைச் சொல்லாமல், சிலதை மட்டும் தன் அம்மாவிடம் சொன்னான்.

அவரும் "சரி" என்று ஒத்துக் கொண்டவர், "சரிடா நாளைக்கு அவங்க வீட்ல போய் பேசலாம். உனக்குச் சம்மதம் தான" என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுக் கொண்டார். அமைதியாகத் தன் அப்பாவும், பாட்டியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ராகினி.

"எனக்குச் சம்மதம் மா" என்று விட்டு ராகினியைப் பார்க்க, அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "என்னடா ராகிமா" என்று கேட்டான்.

"அ..அப்பா…" என்று திணறியவள், "நீ..நீங்க..நீங்க… எ..எனக்காக ஒன்னும் ஒத்துக்கல இல்ல…"

"இல்லடா தங்கம்" என்று அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள,

"ரொம்ப தேங்க்ஸ்பா, நானு நீங்க அன்னைக்குப் பாட்டிகூடச் சண்டை போட்டதால, அப்போ இருந்து கண்மணி ஆன்ட்டிகிட்டப் பேசவே இல்ல. இனிமே பேசலாம் இல்ல. ஒன்னும் பிரச்சனை இல்லைல்ல… திட்ட மாட்டீங்கல்ல. இனி நீங்களும், பாட்டியும் சண்டை போட்டுக்க மாட்டீங்க இல்ல" என்று அழுகையுடனே கேட்டாள்.

தன் தாயைப் பார்த்தான். எனக்குத் தெரியாது என்பது போல் அவர் உதட்டைப் பிதுக்க, "ஏண்டா உன்கிட்ட வந்து கண்மணி ஆன்ட்டி எதுவும் பேசலையா?" என்று கேட்டான்.

"ஆன்ட்டியும் என்கிட்ட வந்து பேசல. கவின் மட்டும் பேசுவான். ஆன்ட்டி என்ன விசாரிச்சதா ஏதாவது சொல்லுவான். மத்தபடி ஆன்ட்டி வந்து என்கிட்டப் பேசல. நானும் அவங்களப் பார்க்கல. நான் அவங்க வந்து கவினைக் கூப்பிடுறதுக்கு முன்னாடியே ஆயாம்மா கூடப்போய் உட்கார்ந்துப்பேன்" என்று சொன்னாள்.

"சரிடா தங்கம். இனிமே நீங்க ஆன்ட்டியைப் பார்த்தா பேசுங்க சரியா?" என்று தலையைக் கோதினான்.

"இன்னம் என்னடா ஆன்ட்டி ஆன்ட்டின்னு சொல்லிட்டு இருக்க புள்ளகிட்ட. அதுதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டதான, அம்மான்னு சொல்லச் சொல்லிக் கூப்பிடச் சொல்லுடா" என்றார்.

ராகி அமைதியாகத் தன் அப்பாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க, "சரிடா" என்பது போல் அவன் கண்ணசைத்து விட்டு, "தூங்கலாமா?" என்று கேட்க,

"ஐ… ஜாலி! எனக்கும் எல்லாருக்கும் இருக்கற மாதிரி அம்மா கிடைக்கப் போறாங்க" என்று குதித்தாள் .


தன் மகளின் ஏக்கத்தைப் பார்த்தவன், 'தனக்காகவே அம்மாவும், மகளும் இத்தனை நாள்களாக அமைதியாக இருக்கிறார்கள்' என்று உணர்ந்து விட்டு, "சரிடா தங்கம், நேரம் ஆகுது வாங்க. அம்மா நீங்களும் போய் தூங்குங்க. நேரம் ஆகுது, நாளைக்குப் பேசலாம்" என்று விட்டு ரூமுக்குச் சென்று விட்டான்.

பத்மாவிற்குத் தன் மகனை அனுப்பி வைத்த உடன் அப்படி ஒரு சந்தோஷம். சந்தோஷத்துடன் போய் தூங்கினார். மறுநாள் விடியல் நன்றாக விடிந்தது. காலை டிபன் சீக்கிரமாக எழுந்து பத்மாவே செய்து கொண்டிருக்க, "அம்மா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நான் எழுந்து வருவதற்குள் என்ன அவசரம்? அதும், இன்னைக்கு லீவு தானே… வீட்டில் தான இருக்கப் போறேன். அப்புறம் என்ன உங்களுக்கு அவசரம்?" என்றான்.

"நீ அவங்க வீட்ல இன்னைக்குப் போய் பேசலாம் என்று சொன்னதுல இருந்து எனக்குத் தூக்கமே இல்லடா. அப்படி ஒரு சந்தோஷம்" என்று சிரித்துக் கொண்டே சொல்ல, தன் அம்மாவின் முகத்தில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இருக்கும் சந்தோஷத்தைப் பார்த்தவன், ‘ஒரு தாயாக என் வாழ்க்கைக்காக யோசித்து இருக்கிறார்’ என்பதை உணர்ந்தவன், "சரி நீங்க போயிட்டுக் கொஞ்ச நேரம் உட்காருங்க, நான் செய்யறேன்"

"நான் செய்றேன்டா, எனக்கு என்னடா நல்லா தான் இருக்கேன்" என்று விட்டு அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துவிட்டு, "நீயும், பாப்பாவும் போய் ரெடி ஆயிட்டு வாங்க" என்றார்.

"அம்மா, அதுக்குன்னு இவ்வளவு காலையிலயேவா…"

"டேய், நாம கிளம்பிப் போவதற்கு எப்படியும் பத்து மணி ஆகிடும் டா, இப்போ கிளம்ப ஆரம்பிச்சா கூட. அப்புறம் என்ன?" என்றார்.

"சரி" என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் குளித்து, ராகியையும் குளிக்க வைத்து அழைத்துக் கொண்டு வந்தான். மூவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார்கள்.

"டேய் ஆட்டோ இல்ல, கார் வர வைக்கணுமா?" என்று கேட்டார்.

"எதுக்கு மா, நம்ம சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்கு தான் போறோம். நம்ம மூணு பேரு மட்டும் தான, நம்ம வண்டியிலேயே போயிக்கலாம்" என்றான். அவருக்கும் அதுவே சரி என்று பட்டதால், ராகினியை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு அவர் பின்னாடி உட்கார்ந்து கொண்டார்.

காலை 11 மணி போல் கண்மணி வீட்டில் போய் இறங்க, இங்குக் கண்மணி தான் ஒருவிதப் படபடப்புடன் உட்கார்ந்து இருந்தாள். மற்றவர்கள் அனைவரும் எப்பொழுதும் போல் நார்மலாக தான் இருந்தார்கள். பத்மா அன்று போல் இன்றும், "வீட்டுக்குள் வரலாமா?" என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

"இது என்ன மா கேள்வி, இப்படிக் கேட்கிறீங்க, வாங்க…” என்று சிரித்த முகமாக வரவேற்ற கமலி, வினோத்தையும் வரவேற்று விட்டு, “ராகினி செல்லம், எப்படி இருக்கீங்க?" என்று அவளது நெற்றியில் இதழ் பதித்தாள்.

ராகினி தான் யார் என்று புரியாமல் முழித்தாள்.

"நான்தான், உங்க பெஸ்ட் பிரண்ட் கவியோட அம்மா…" என்றவுடன் சிரித்தாள்.

"அச்சோ ஆன்ட்டி, நீங்க தான் கமலி ஆன்ட்டியா" என்று சிரிக்க,

"ஆமாண்டா தங்கம்" என்று அவளது இரு கன்னத்தையும் பிடித்துக் கொஞ்சினாள். "என்ன சாப்பிடுறீங்க" என்று கீழே குனிந்து தூக்கப் போக,

"கமலி, இந்த நேரத்துல ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாத, கீழே குனிஞ்சு நிமிர வேணாம்" என்று சொல்லிக் கொண்டே கண்மணி வர, "ஏன், உடம்பு சரி இல்லையா ஆன்ட்டிக்கு" என்று ராகினி ஒன்றும் புரியாமல் கேட்டாள்.

"தங்கம், ஆன்ட்டிக்கு லைட்டா உடம்பு தான் சரியில்ல, கமலி ஆன்ட்டி வயித்துல இப்பக் குட்டி பாப்பா இருக்கு. நம்ம கவின் குட்டிக்குத் தம்பிப் பாப்பா வரப்போகுது. அதனால தான்" என்று கண்மணி சிரித்துக் கொண்டே ராகினியைத் தூக்கிக்கொண்டு கொஞ்சினாள்.

"என்னைக் கொஞ்சம் கீழே இறக்கி விடுங்க ஆன்ட்டி" என்று கண்மணியிடம் சொல்ல, கண்மணியும் இறுக்கி விட, கமலியின் வயிற்றில் முத்தமிட்ட ராகினி, "குட்டிப்பாப்பா சீக்கிரம் வந்துருமா நம்ம வீட்டுக்கு" என்று சந்தோஷமாகக் குதூகலத்துடன் கேட்டாள்.

"வந்துடுமே செல்லம்" என்று கமலியும் கொஞ்ச, "சரி ஆன்ட்டி" என்று சிரித்தாள். அதன்பிறகு, அவளுக்கு பிஸ்கட் கொடுக்க வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.

கமலி உள்ளே சென்று அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்தாள். அனைவரும் இதுவரை குழந்தைகளின் சம்பாசனைகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

பத்மா தான் பேச ஆரம்பித்தார்.

"என் மகன் உங்க வீட்டுப் பொண்ணு கண்மணியைக் கல்யாணம் பண்ணிக்க முழு மனதோடு ஒத்துக்கிட்டான். கமலி, இதுக்கப்புறம் நீங்கதான் சொல்லணும். உங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம்னு சொல்லி இருந்தீங்க. இதுக்கப்புறம் மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு சொன்னீங்கன்னா எல்லாம் ஒன்னு, ஒன்னா செய்யலாம். லேட் பண்ணாம கையோட முடிச்சிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்." என்றார்.

எங்கு 'தன் மகன் மனம் மாறி விடுவானோ?' என்று பயம் அவருக்கு. அதைத்தான் இங்குக் கண்மணி வீட்டில் உள்ளவர்களும் யோசித்தார்கள். "நாங்களும் அத தான் மா, யோசிச்சோம்.” என்று ரகுபதி பேச ஆரம்பித்தார்.

"என்ன பண்ணலாம்னு சொல்லுங்க அண்ணா. கல்யாணத்தைக் கோவில்ல வச்சுக்கலாமா? இல்ல, இது வேற கண்மணிக்கு" என்றவர் அமைதியாக நிறுத்திவிட்டார்.

"நாம கோவில்ல சிம்பிளாவே வச்சுக்கலாம் மா. உனக்கு விருப்பம்னா நீ சொல்லு. நெருங்குன சொந்தத்தை மட்டும் கூப்பிட்டா போதும். ரொம்ப விமரிசையா பண்ணனும்னு எல்லாம் எங்களுக்கு விருப்பம் இல்ல" என்றார் ரகுபதி. அவர் சொல்ல வருவது புரிந்த உடன் தன் மகனைத் திரும்பிப் பார்த்தார் பத்மா.

அவன் கண்மூடித் திறந்தவுடன் கண்மணியைப் பார்த்தார். அவளும் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்த உடன், "சரிங்க, நீங்க சொல்ற மாதிரியே பண்ணிக்கலாம். கொஞ்சம் நெருங்கி வர முகூர்த்த நாளா பாருங்க. அது மாதிரி, கண்மணிக்கு உகந்த நாளாகவும் பாருங்க" என்றவுடன் முதலில் ரகுபதி ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு இருக்க, காந்திமதி தான் "ஒன்னும் இல்லங்க, நம்ப கண்மணி தலை குளிக்காத நாளா பார்க்க சொல்றாங்க. வேற ஒன்னும் இல்ல" என்றார்.

"சரிமா தங்கச்சி, நாங்க கண்மணிக்குத் தேவையான எல்லாம் வாங்கி தான் வச்சிருக்கோம். நீங்க உங்க பக்கம் இருந்து இன்னும் என்னென்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா நாங்க செய்வோம்" என்றார். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வினோத் இப்பொழுது பேச ஆரம்பித்தான்.

"நான் பேசலாம்னு நினைக்கிறேன், தப்பா எடுத்துக்காதீங்க சார்" என்றான்.

"எதுக்கு மாப்பிள்ளை, சார்லாம்… இனிமே மாமானு உரிமையா கூப்பிடுங்க" என்றவுடன் சிரித்த முகத்துடன், "சரி மாமா, எனக்கு உங்கப் பொண்ணு கண்மணியைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம். அதுல எந்த ஆட்சேபனையும் இல்ல. ஆனா, கண்மணிக்கு நீங்க எதுவும் பெருசா செய்ய வேண்டாம். அதுக்காகச் செய்யவே வேணாம்னு சொல்ல மாட்டேன்.

ஒரு பொண்ணுக்கு ஒரு சில விஷயம் அம்மா வீட்டிலிருந்து அத்தியாவசியம், அவசியம். தனக்கானது அப்படின்ற உரிமையெல்லாம் கொடுக்கிற விஷயம். அதனால, நீங்க கண்மணிக்கு என்ன தர ஆசைப்படறீங்களோ, கண்மணி இங்கிருந்து என்ன எடுத்துட்டு வரணும்னு ஆசைப்படுறாங்களோ அதை மட்டும் பண்ணுங்க. அவங்களுக்கு எது தேவைன்னு இருக்கும். நீங்க கொடுக்கணும்னு நினைக்கிற எல்லாமே கண்மணிக்குத் தேவையானதா, ஆசைப்படுறதா ஆகிடாது. அதனால அவங்களுக்கு என்ன விருப்பமோ அது மட்டும் செய்யுங்க, நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்" என்று விட்டுக் கண்மணியைப் பார்த்தான்.

அவள் கண் மூடித் திறந்தவுடன், "அது மட்டும் கொண்டு வந்தா போதும். நம்ம வீட்ல தேவையானது எல்லாம் இருக்கு. அதே மாதிரி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்மணி வேலைக்குப் போகட்டும். நீங்க அங்க வந்தும் கண்மணியைப் பார்க்கலாம். கண்மணியை நானும் இங்க கூப்பிட்டு வருவேன், அவங்க ஆசைப்படுற நேரம். அதுபோல கவின், ராகினி ரெண்டு பேரும் இப்போ போல எப்பவும் இருக்கட்டும். யாருக்கு எங்க இருக்க விருப்பமோ அங்க இருக்கட்டும். எதுவும் பிரச்சனை இல்ல, இப்போ கமலி கேரிங்கா இருக்கிறதா கேள்விப்பட்டேன்" என்று விட்டுக் கமலியைப் பார்க்க, அவள் வினோத்தை அமைதியாகப் பார்த்தாள்.

"கவினை நான் கையோடு கூட்டிட்டுப் போற மாதிரி இருந்தாலும், கூட்டிட்டுப் போவேன். கமலி, நான் எதுக்காகச் சொல்ல வரேன்னு புரியும் என்று நினைக்கிறேன் மா. அப்பா அம்மாகிட்ட இருந்து புள்ளையைப் பிரிக்கணும்னு நினைக்கல" என்றவுடன் சிரித்துக்கொண்டே,

“அவனுக்கு எங்களை விட, அவன் அத்தையை தான் ரொம்பப் பிடிக்கும் அண்ணா… அதுக்காக நாங்க அவனை அங்க அனுப்பி வைக்க முடியாதே. நான் கேரிங்கா இருந்தா என்னால பாத்துக்க முடியாதா என்ன? கவின் அந்த அளவுக்கு அடம் பிடிக்கிற பையன் இல்ல, அவனுக்கு அத்தைகூட இருக்கணும் என்று நினைச்சா, நீங்க சொல்லாமலேயே அவனாவே வந்து நிற்பான் உங்க முன்னாடி. அவனுக்கு உலகமே அவன் அத்தைதான். அதுக்காக நான் உங்ககூட அவனை அனுப்பி வைக்க முடியாது. எனக்கும் என் பையன் வேணும் இல்லையா?" என்றாள் சிரித்த முகத்துடன்.

அவனுக்கும் புரிந்ததால் கவினைப் பார்க்க, கவின் சிரித்துக் கொண்டே "நான் இவரை என்னன்னு கூப்பிடனும்" என்று தன் அத்தையின் காலைச் சுரண்டினான். அவள் திருத்திருவென முழித்துக் கொண்டு நின்றாள்.
 
Top