எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 17

kani suresh

Moderator
வினோத் தான் கண்மணியின் செயலினால் உண்டான சிரிப்பை அடக்கிக் கொண்டு, "இங்க வாங்க கவிக்குட்டி" என்று அவனைத் தூக்கிக் கொண்டு, "மாமான்னு கூப்பிடனும், இப்ப நீங்க என்ன சொல்லணுமோ, சொல்லுங்க" என்றவுடன் ஒரு நிமிடம் தன் அத்தையைப் பார்த்தான். அவள் கண் மூடித் திறந்தவுடன் "நான் இங்க அப்பா, அம்மா கூடவே இருக்கேன் மாமா. நான் அத்தைய டெய்லி ஸ்கூல்ல பார்ப்பேன் இல்ல. ஏன்னா அப்பா ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டுருவாரு. இல்லன்னா, அத்தை ஆபீஸ் போறதுக்கு முன்னாடி என்ன வந்து கூப்பிட்டுப் போகட்டுமா? அத்தைக்கு லேட்டா தான் ஆபீஸ் டைம் ஸ்டார்ட் ஆகும். உங்களை மாதிரி சீக்கிரம் எல்லாம் கிடையாது." என்ற உடன் கமலி சிரித்து விட்டாள்.

கண்மணி தான் 'இந்த நேரத்தில் கூட என் மானத்தை வாங்குறானே இவன்' என்று முறைத்தாள். "அதனால அத்தை என்ன டெய்லி இங்க கொண்டு வந்து விட்டுட்டுக் கூட்டிட்டுப் போயிட்டு வரட்டுமா?" என்று கேட்டான்.

"அதுக்கு என்னடா கவின் குட்டி, நீயும், ராகிமாவும் உங்க அத்தை கூடவே ஒன்னா போயிட்டு, ஒன்னா வீட்டுக்கு வாங்க. சரியா?"

"ஐ... ஜாலி!" என்று இருவரும் குதித்தார்கள்.

"சரி மேற்கொண்டு பேச வேண்டியதைப் பெரியவங்க பேசி முடிவு பண்ணுங்க. சிம்பிளா கோவில்லயே கல்யாணத்தை வச்சுக்கலாம். உங்க பொண்ணுக்கு நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதைச் செய்யுங்க. ஆனா, எனக்கு ஆடம்பரமா எதுவும் வேண்டாம். அத்தியாவசியத் தேவைக்கான பொருள் எல்லாமே வீட்ல இருக்கு. நான் சொல்றது உங்களுக்குப் புரியும் நினைக்கிறேன் மாமா" என்றான். 'சரி' என்பது போல் தலையசைத்தார்.

'தன் மகளுக்கு நல்லவராக இருந்தால் போதும்' என்று மட்டும் தான் அவருக்குத் தோன்றியது. இரு வீட்டில் உள்ள பெரியவர்களும் பேசி முடிவு செய்து இன்னும் 20 நாள்களில் நல்ல முகூர்த்தத் தேதியும், கண்மணி தலை குளிக்காத தேதியும் இருக்க, அன்றுத் திருமணம் செய்வதாக முடிவு செய்தார்கள். நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல,

"என் பக்கம் பெருசா அப்படி யாரும் கிடையாது மாமா"

"எங்களுக்கும் பெருசா யாரும் இல்லப்பா, எல்லாமே உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்" என்றார்.

"தெரியும்" என்று அவன் கண்மூடித் திறந்தவுடன், "அப்புறம் என்ன விடுங்க, உங்களுக்கு யாரையாவது கூப்பிடனும்னு மனசுக்குப் பட்டா கூப்பிடுங்க. இல்லையா, நம்ம ரெண்டு குடும்பம் மட்டும் போய் கோவிலில் கல்யாணத்தை முடிச்சிட்டு வந்துக்கலாம். அதுக்காக இது திருட்டுக் கல்யாணம் மாதிரி ஆயிடக்கூடாது இல்லையா? ஒருத்தவங்க ஒரு வார்த்தை சொல்லற அளவுக்கு வந்திடக்கூடாது, அதுக்காகச் சொன்னேன்." என்றான்.

அவன் சொல்ல வருவதன் நோக்கம் புரிய, "சரிப்பா, நான் எங்க நெருங்குன சொந்தத்துக்கு மட்டும் சொல்றேன்." என்றார். சரி என்று அதன் பிறகு திருமணத்திற்குத் தேவையான அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்தது. அவ்வப்போது ராகினியை விட வரும் பொழுதும் கவினை விட வரும் பொழுதும் இருவரும் நேரில் பார்த்துக் கொள்ள நேரிட்டது.

துணி எடுப்பதற்கு, மற்ற விஷயத்திற்கு எல்லாம் ‘உனக்கு எப்படிப் புடிச்சிருக்கோ, அப்படி எடுத்துக்கோ. காசப் பத்தி எல்லாம் எதுவும் யோசிக்க வேண்டாம்.’ இந்த மாதிரிச் சில விஷயங்கள் பேசுவதற்காக மட்டும் வினோத் கண்மணியை அழைத்து இருந்தான்.

கண்மணியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அவளாக போன் பண்ணுவாள். மற்றபடி இருவரிடமும் போன் நம்பர் இருக்கின்றதே தவிர, பெரிதாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அப்போது இருவருமே குழந்தைகளை ஸ்கூலில் விட வரும்போது பார்த்தாலும், பெரிதாகப் பேசிக் கொள்ளாமல் சிரித்த முகமாகக் கடந்து விடுவார்கள். கமலி தான் சங்கரிடம் புலம்பச் செய்தாள்.

"உன் தங்கச்சி கல்யாணத்துக்கு மட்டும் தான் ஓகே சொல்லி இருக்கா, அவர்கிட்டப் பேசுற மாதிரியே தெரியல" என்று சொல்ல, "நீதாண்டி சொன்ன, கொஞ்சம் கொஞ்சமா தான் மாற்றம் வரும். அவகிட்டப் பெருசா எதுவும் எதிர்பார்க்காதீங்கன்னு. அப்புறம் நீயே புலம்புற"

“இருந்தாலும், அதுக்குன்னு உன் தங்கச்சியை இப்படியே செஞ்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கச் சொன்னாங்களா? உன் தங்கச்சி தான் அப்படி இருக்கானா, அதுக்கு மேல இருக்காரு வினோத் அண்ணன்" என்று புலம்பினாள்.

சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவான் சங்கர். நாள்கள் வேகமாகச் சென்று திருமண நாளும் வந்தது. வினோத்தும் ஒரு சில நெருங்கிய உறவினர்களை அழைத்து இருந்தான். எப்படியோ இது பிரியாவின் காதுக்கு எட்டி இருந்தது. திருமணத்தின் போது வந்திருந்தாள். பெண் யார்? என்று எல்லாத்தையும் விசாரித்தவள், கோவிலுக்கு வந்து சத்தம் போடச் செய்தாள்.

"ஏற்கனவே கல்யாணம், மணமேடை வரைக்கும் போய் ஒருத்தன் உயிரைப் பலி கொடுத்திருக்கா. இவதான் உங்களுக்குக் கிடைச்சாளா மாமா, ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா? நான் ஒருத்தி உங்களுக்காக வருஷக்கணக்கா காத்துட்டு இருக்கேன். என்னப் பாத்தா பொண்ணு மாதிரித் தெரியலையோ?" என்றாள்.

அவளை ஓங்கித் தாடையில் ஒன்று விட்டவன், "நீ காத்துட்டு இருந்தா எனக்கு என்ன வந்துச்சு, நீ யாரு எனக்கு? அதும் எனக்குப் பொண்டாட்டியா வரப்போற கண்மணி பத்திப் பேசுறதுக்கு" என்று கண்மணியைத் தோளோடு சேர்த்து அணைத்தவன்,

"உனக்கு என்ன தெரியும், இவளைப் பத்தி" என்றான்.

"அதான் ஊரே சொல்லுதே. அவளோட சொந்தக்காரங்களே சொல்றாங்களே. அப்புறம் என்ன நான் வேற தனியா சொல்லனுமா?"

"ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும். எனக்கு அது தேவையே இல்லாதது. சரியா? எனக்கும் என் குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கும் பிடிச்சிருந்தா போதும், கண்மணியைப் பத்தி எங்களுக்குத் தெரிஞ்சா போதும். உன்ன மாதிரி கழிசடைங்களுக்கும், அடுத்தவங்க வீட்டுப் பேச்சை வாய்க்குள்ள போட்டு மெல்லுறவங்களுக்கும், தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. சரியா?" என்று விட்டு அவளை முறைத்துப் பார்த்தான்.

"நீயா மரியாதையா போயிட்டனா நல்லது. இல்ல, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே உன் மேல எந்தக் கேசும் கொடுக்காமல் விட்டதுக்குக் காரணம் உங்க அப்பா. இப்பவும் உங்க அப்பா மனசுக்கு மட்டும் தான் பார்க்கிறேன். மரியாதையா போயிட்டனா நல்லது. இல்லன்னா, இப்பக் கூட போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும். எப்படி வசதி?” என்றான்.

லேசாக உள்ளுக்குள் நடுக்கமும், பயமும் ஏற்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு, லேசான தைரியத்துடன், "எப்படிக் கொடுப்பீங்க? என்ன ஆதாரம் வச்சிருக்கீங்க” என்றாள்.

"ஆதாரமா வேண்டும், ஆதாரம்!" என்றவன்,

"நீ பேசின அத்தனையும் என் போன்ல ரெக்கார்ட்ல இருக்குடி"

"எ..எது...து" என்றாள் ஒருவித பயத்துடன்.

"உண்மையா… போட்டுக் காமிக்கிட்டா" என்றான் நக்கலாக. அவள் ஒரு சில நொடி தயங்கிவிட்டு, 'உண்மையா இருக்குமோ? அதும் இத்தனை பேர் முன்பு மானம் போய்விடுமே' என்று உணர்ந்து அவனை முறைத்துவிட்டு, "எப்படி இரண்டு பேரும் சந்தோஷமா வாழப் போறீங்கனு நான் பார்க்கிறேன்.

இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணாம, என் அக்காவை தான் நினைச்சுட்டு இருக்குற மாதிரி நடிச்சீங்க. இப்ப என்னன்னா, வேற ஒருத்தி வந்த உடனே அதுவும் அவளைத் தோளோடு அணைச்சுக்கிட்டு, இத்தனை பேர் முன்னாடி நிக்கிறீங்க?" என்றாள். கண்மணி இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தாள். அவள் அவ்வாறு சொல்லவும் லேசாக நெளியச் செய்தாள்.

"நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு கண்மணி, இந்த மாதிரிக் கழிசடைகளுக்காக, நீ ஏன் தப்பா நினைச்சுக்கிற. நம்ப ஏன் இவளுக்குப் பயந்து போகனும்? இவ ஒரு கழிசடை, பச்சக் குழந்தைனு பார்க்காம என்ன என்ன வேலை பார்த்துச்சு?

அதை நீ ஏன் கேக்குற? நான் உன் அக்காவை மனசுல நினைச்சுட்டு இருந்தா உனக்கு என்ன, இல்ல தூக்கிப் போட்டு இருந்தா தான் உனக்கு என்ன? உனக்கு அது தேவையே இல்லாதது. கெளம்பு, ஏதாச்சு ரகளை பண்ணிக் கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று மட்டும் கனவு காணாத. என் கல்யாணம் நல்லபடியா நடக்கும். உன் கண்ணு முன்னாடி நல்லபடியா வாழ்வோம் பாரு. இப்போ உன்னைக் கல்யாணத்துக்கு யாரும் கூப்பிடலையே. உங்க அப்பாவ தான் கூப்பிட்டிருந்தேன். அதுவும் அவர் மேல உள்ள மரியாதைக்கு" என்று விட்டுத் தனது முன்னாள் மாமனாரைப் பார்த்தான்.

அவர் அவன் அருகில் வந்து, "இப்பதான் எனக்குச் சந்தோஷமா இருக்கு பா. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல, எப்போ இவ பண்ண வேலை தெரிஞ்சிதோ, அதிலிருந்து என் பேத்தியை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்னு கேட்கக் கூட எனக்கு மனசு இல்லை. எந்த மூஞ்ச வச்சிட்டுக் கேட்பேன்.

அது மட்டும் இல்லாம, இவ எந்த நேரத்தில் என் பேத்தியை ஏதாச்சும் பண்ணிருவாளோ? என்ற பயத்தில் நான் யோசிச்சே சாவணும். ஆனா ,என் மகளுக்கு அம்மாவாவும், உனக்குத் தாரமாவும் ஒரு பொண்ணு வந்து இருக்கிறதுல எனக்குச் சந்தோசமா இருக்கு. ரெண்டு பேரும் இன்னும் புள்ளகுட்டியோட நூறு வருஷம் நல்லபடியா இருக்கணும். என் பொண்ணையே நினைச்சுட்டு உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்காத வரை எனக்குச் சந்தோசம் தான். நல்லாப் பாத்துக்கோங்க மாப்பிள, அவர் உன்ன நல்லாப் பார்த்துப்பாருமா…” என்று கண்மணியையும் பார்த்துச் சொல்ல,

கண்மணி, "அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம்" என்றாள்.

"சரி" என்று இருவரும் ஆசிர்வாதம் வாங்க இருவரையும் வாழ்த்திவிட்டுத் தன் மகளின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்று விட்டார். அதன்பிறகு கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. கண்மணிக்கு லேசாகத் தாலி கழுத்தில் ஏறியவுடன் கண்கள் கலங்கியது. அவளது கையில் அழுத்தம் கொடுத்த வினோ, "என்னாச்சு கண்மணி?" என்றான். "ஒன்றும் இல்லை சார்" என்று தலையை ஆட்ட, "சரி" என்றான்.

"பேர் சொல்லியே கூப்பிடு கண்மணி" என்று சிரித்தான். அவன் சிரித்தவுடன் அவனது கன்னத்தில் குழி விழ, அந்த அழகில் அவனது முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்துச் சிரிக்கச் செய்தாள்.

கமலி, பத்மா இருவரும் இறைவனிடம், “இந்தச் சிரிப்பு இருவர் முகத்திலும் இப்போது போல எப்போதும் இருக்க வேண்டும் இறைவா, அதேபோல் இவர்கள் இருவரும் வீட்டில் இருப்பவர்களுக்காக, குழந்தைக்காக என்று யோசிக்காமல், மனதளவிலும் சீக்கிரம் இணைய வேண்டும்.” என்று வேண்டினார்கள்.

அதன் பிறகு, மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். ஆரத்தி எடுக்க பத்மா சங்கடமாகக் கமலியைப் பார்த்தார். "நீ எடு மா கமலி" என்றார்.

"அம்மா, நம்மள விட நம்ம வீட்ல இருக்கவங்க சந்தோஷமா வாழனும்னு நினைக்கப் போறது, வேற யாருமே கிடையாது. நீங்க ஏன் தடங்கலா நினைக்கிறீங்க, உங்க பையனும், உங்க மருமகளும் சந்தோஷமா சேர்ந்து வாழனும்னு உங்களைவிட வேற யாரும் நினைச்சுறப் போறது இல்ல, நீங்களே ஆரத்தி எடுங்கமா" என்றாள்.

கண்மணியும் "நீங்களே எடுங்க அத்தை" என்றாள். அதன் பிறகு, சரி என்று பத்மா ஆரத்தி கரைத்து எடுத்துக் கொண்டு வந்து கமலி கையில் கொடுக்க, "என்ன இருந்தாலும் எனக்கு மனசு வரலடா" என்றார்.
அப்பொழுது, "அவள் வேணாம் சம்பந்தி, ரெட்ட உசுரா இருக்கிறா… நான் வேணா எடுக்கிறேன்" என்றவுடன் அவருக்கும் அதுவே சரி என்று பட்டதால் காந்திமதியின் கையில் கொடுக்க, காந்திமதி ஆரத்தி எடுக்க மணமக்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள்.

கண்மணியை பூஜை ரூமில் விளக்கு ஏற்றச் சொல்லிக் குடும்பத்துடன் சாமியை வழிபட்டுவிட்டு வர பாலும், பழமும் கொடுக்கப்பட்டது. அனைத்தும் முடிய, மதிய உணவை வினோத் வீட்டிலே அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, மாலை நான்கு மணி போல் "சரிமா, நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம்" என்றார்கள். பத்மாதான் கமலியைப் பார்க்க, பத்மாவின் கையில் தட்டிக் கொடுத்தவள், “எல்லாம் சீக்கிரம் சரியாகும். நாம சம்பிரதாயத்துக்காக எதையும் செய்து அவங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம் மா. அவங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு உடனே புருஷன், பொண்டாட்டியா வாழ மாட்டாங்க என்று நமக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது சாஸ்திர, சம்பிரதாயம் சொல்லி எதுக்கு அவங்கள கஷ்டப்படுத்தணும்" என்று கேட்டாள்.

பத்மாவுக்கும் அதுவே சரி என்று பட்டதால், "இல்லடா, அத்த, மாமா எதுவும் நினைக்க மாட்டாங்களா?"

"அவங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லிப் புரிய வச்சிருக்கேன். இல்லன்னாலும், நான் திரும்ப இன்னொரு டைம் புரிய வச்சுப்பேன். நீங்க அதை நினைச்சு ஃபீல் பண்ண வேண்டியதில்லை" என்று சொல்லும்போதே அவர்களின் அருகில் வந்த காந்திமதி பத்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "எங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்ல சம்மந்தி. எங்க பொண்ணை நல்லபடியா, நல்ல மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்திருக்கோம். அந்தச் சந்தோஷமே எங்களுக்குப் போதும். ரெண்டு பேரும் சீக்கிரம் மனசு மாறி, அவங்களுக்கான வாழ்க்கையை வாழுவாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நம்புவோம், சீக்கிரம் வாழுவாங்க. எதையும் அடுத்தவங்களுக்காகச் செய்ய வேண்டியது இல்ல. ராகினியாலயே எல்லாம் நல்லபடியா நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதான் கமலியும் சொல்லி இருக்கா… எல்லாம் நல்லபடியா நடக்கும், பாத்துக்கலாம்." என்றார்.

"இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்க இருந்துட்டுப் போலாமில்ல சம்மந்தி"

"அங்க எல்லாம் அப்படியே இருக்கு. கமலி வேற மாசமா இருக்கா. ஓடியாடி ரொம்ப வேலை செய்து இருக்கா, அதான்" என்றார் சங்கடமாக.

அவருக்கும் புரிய "சரி" என்று அனுப்பி வைத்தார். அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கண்மணியிடமும், ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு ராகினியைக் கொஞ்சி விட்டு கமலி கிளம்ப, "அத்தை, கவின் இன்னைக்கு ஒரு நாள் இங்கயே இருக்கட்டுமே" என்று கேட்டாள் ராகினி. கண்மணியும் திரும்பிக் கமலியைப் பார்த்தாள்.
 
Top