எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 20

kani suresh

Moderator
கமலியின் பார்வை முழுவதுமாகக் கண்மணியிடம் இருக்க சிரித்த கண்மணி, "அவங்க சொன்னது, நான் என் வாழ்க்கையைத் தொடங்கிட்டேனா, இல்லையானு தெரிஞ்சுக்கிறதுக்காக. அத்தையை நீ புரிஞ்சுக்கலையா? இல்ல என் மேல இருக்க பாசத்துல அத்தையோட நல்ல மனசு கூட உன் கண்ணை மறைச்சிருச்சா?" என்றாள்.

சிரித்த கமலி கைகளைக் கட்டிக்கொண்டு, "அவங்க என்னோட அம்மாடி. அவங்களப்பத்தி எனக்குத் தெரியாதா?" என்று கேட்டாள்.

"அப்புறம் ஏன் கமலி, இவ்வளவு கொஸ்டின் பண்ற?"

"நான் கொஸ்டின் பண்ணது, அவங்க இப்படிப் பேசினதுக்கு நீ ஒரு நிமிஷம் ஃபீல் பண்ணி இருந்தா… அவங்க இப்படி வந்து உன்கிட்ட நேரடியாப் பேசி இருக்காங்களேன்னு. ஆனா, இப்போ நான் கேட்டது, நீ சொன்னதுக்காக… நீ என்கிட்ட என்ன சொன்ன? அவங்க தப்பா எதுவும் சொல்லல என்று சொன்ன…"

"ஆமாம், இப்பவும் அதான் சொல்றேன்"

"நான் அதைக் கேட்கல கண்மணி. உன்னோட வாழ்க்கைக்கான அடுத்த ஸ்டெப் எடுத்து வச்சிருக்கியா, அப்படின்னு நான் கேட்க மாட்டேன். எடுத்து வைக்கலன்னு எனக்குத் தெரியும். ஆனா, அதைப்பத்தி யோசிச்சிருக்கீங்களா, நீயும், அண்ணனும். அது மட்டும் தான் என்னோட கொஸ்டின். அது இப்போ அம்மாவே பேசலனாலும் நான் கேட்டு இருப்பேன்.

என்னோட தோழியா இருந்தாலும் சரி, இந்த வீட்டு மருமகளா உன்னோட அண்ணியா இருந்தாலும் சரி, எனக்கு என் நாத்தனார் வாழ்க்கை முக்கியம். அதுக்காக நீ இப்பவே சேர்ந்து வாழணும்னு சொல்லல. அதைப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா என்று கேட்கிறேன். நான் கேட்க வருவது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். இல்ல, இன்னும் விளக்கமா கேட்கணுமா?" என்று சொல்லும் பொழுதே லேசாக சிரித்த முகத்துடன் அங்கு வந்து வினோத், கண்மணியின் தோளில் கை போட்டவன்,

"உனக்கு என்ன கமலி தெரியணும்?" என்று கேட்க, இவ்வளவு நேரம் நன்றாக வாதாடிக் கொண்டிருந்த கமலிக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

"இ..இல்ல அண்ணா, அ..அது" என்று திணற, "நீ அண்ணியாவோ இல்ல, பிரண்டாகவோ கேட்ட எதுவும் தப்பு இல்லை. நாங்க லைஃப்ல அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறதப்பத்தி யோசிச்சிருக்கமா? என்று கேட்டு இருக்க. அந்த அளவுக்கு நாங்க இன்னும் யோசிக்கல. ஆனா, முன்ன இருந்ததுக்கு இப்போ எங்ககிட்ட கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. பிரண்ட்லியா இருக்கோம். அப்படிதான் சொல்லணும்.

இதை நான் அம்மாகிட்டயும், அத்தை மாமாகிட்டயும் சொன்னாலும், அவங்களால புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியாது. உன்னால புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன். நான் சொல்றது நாங்க ரெண்டு பேரும் எந்தெந்த சிட்டுவேஷன்ல இருந்தோம். அதுல இருந்து எந்த அளவுக்கு வெளியே வந்து இருக்கோம் அப்படின்றது உனக்குப் புரியும், தெரியும். எங்களை மாத்திக்கிறது கஷ்டம். அதுக்காக நாங்க வாழவே மாட்டோம்னு சொல்லிட மாட்டேன். என்னால வாழ முடியாது அப்படின்னு நினைச்சிருந்தா, நான் கண்மணி கழுத்துல தாலி கட்டி இருக்கவே மாட்டேன்" என்று கண்மணியைப் பார்க்க,

அவள் தான் இப்பொழுது பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு இருந்தாள்.

"என்னால என் லைஃப்ல இன்னொரு பொண்ண ஏத்துக்க முடியாதுன்னு தோணி இருந்தா, சீரியஸா நான் கண்மணி கழுத்துல தாலி கட்டியிருக்க மாட்டேன் கமலி. உனக்கு அந்தப் பயம் வேணாம். ஆனா, இப்போதைக்கு அப்படின்றது உண்மையா மனசளவுல கிடையாது. அடுத்தவங்களுக்காக யோசித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொல்ற மாதிரி, அடுத்தவங்களுக்காக யோசித்து, வேண்டும் என்றால் நாங்க பிஸிக்கல் ரிலேசன்ஷிப் வச்சுக்கலாம்” என்று சொல்ல, இங்கு கண்மணிக்கு உடல் உதறியது.

அவளது தோளில் இன்னும் அழுத்தம் கொடுத்தவன், "ஆனா, எனக்கோ இல்ல கண்மணிக்கோ அப்படி ஒரு எண்ணம் கிடையாது. எங்க வாழ்க்கையை நாங்க எங்களுக்காக வாழ ஆசைப்படுகிறோம். எங்களால சேர்ந்து வாழ முடியும் என்று என்னைக்குத் தோணுதோ, அன்னைக்கு எங்க வாழ்க்கையைத் தொடங்குவோம். எனக்கு என் லைஃப்ல ஒரு துணை தேவைப்பட்டுச்சு. கண்மணிக்கும் அது போல ஒரு துணை தேவைப்பட்டுச்சு.

அது எனக்கு அவளாவும், அவளுக்கு நானாவும் இருந்தா பெட்டர் என்று தோணியதால், தான் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு ஸ்டெப் எடுத்து வச்சோம். அதே மாதிரி, ஒவ்வொரு ஸ்டெப் எடுத்து வைக்க நாங்க நிதானமா யோசிக்க வேண்டியது இருக்கு. எங்களுக்குத் தோணும். அன்னைக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்றான்.

சிரித்த கமலி லேசாகக் கைதட்டி விட்டு, "உங்ககிட்ட இருக்கற இந்த தைரியமும், மெச்சூரிட்டியும் இன்னும் அவகிட்ட வரல அண்ணா… நான் சொல்றது புரியும். நீங்க கொஞ்ச கொஞ்சமா உங்க லைஃப்ல நடந்த விசயத்துல இருந்து வெளியே வந்திருக்கப் போய் தான், என்கிட்ட இப்ப இவ்வளவு தைரியமா அடுத்த ஸ்டெப் நான் எடுத்து வைப்பேன், என் லைஃப்ல இன்னொரு பொண்ணு வேணும்னு யோசிச்சிருக்கேன்… அப்படின்ற வார்த்தையே சொல்றீங்க.

ஆனா, இப்ப நீங்க ஃபிஸிக்கல் ரிலேசன்ஷிப்னு சொல்லும்போது கூட அவ உடல் நடுங்கதான் செய்யுது. அதை நீங்க உணர்ந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு என் பிரண்டு அதிலிருந்து வெளியே வரவேண்டும். அது உங்களால மட்டும்தான் முடியும்னு நினைக்கிறேன். நீங்க சொன்னது தான், இது எல்லாத்தையும் நான் போயிட்டு அத்தை கிட்டயும், அம்மா கிட்டயும் பேச முடியாது. உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். தோழியா இருந்தாலும் சரி, இல்ல அவ அண்ணியா இருந்தாலும் சரி, அவ லைஃப் பத்தின கவலை எனக்குள்ள இருக்கதான் செய்யுது" என்றாள் கண்கள் கலங்க.

லேசாக அவளது கையில் அழுத்தம் கொடுத்தவன், "என்னை நம்பி தான கட்டி வச்சுருக்க?" என்று கேட்கச் சிரித்துக்கொண்டே,

"நம்பாமலா அண்ணா…" என்றாள்.

"இதுக்கு முன்னாடி, இவளுக்காக நீ தனிப்பட்ட முறையில் எத்தனையோ மாப்பிள்ளையைப் பார்த்திருப்பியே" என்றான்.

கண்மணி அதிர்ச்சியுடன் வினோத்தைப் பார்க்க, கமலி சிரித்துக் கொண்டே "நல்லாதான் அண்ணா என்னைப் புரிஞ்சு வச்சிருக்கீங்க, பார்த்து இருக்கேன். ஆனா, நான் பார்த்த யாரும் அவளுக்கு லைப் பார்ட்னரா செட் ஆவாங்களான்னு யோசிச்சிருக்ககேன்."

"என்னைப் பத்தியும் விசாரிச்சு இருப்பியே…" என்றான் சிரித்துக் கொண்டே.

கமலியும் சிரித்துக்கொண்டே, "விசாரிக்காமலா அண்ணா. அம்மா வந்து பேசிட்டுப் போன நாளிலிருந்து உங்களை நிறைய விசாரிச்சு இருக்கேன். அம்மா பேசிட்டுப் போனதுக்கு அப்புறம் என்று கூடச் சொல்லிட மாட்டேன். கண்மணி எப்போ ராகினி விஷயத்துல அஃபெக்ட் ஆகி இருக்கா என்று நான் உணர்ந்தனோ, அந்த நிமிஷத்திலிருந்து ராகினியிலிருந்து உங்க வரைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துட்டு தான் இருந்திருக்கிறேன்" என்ற உடன் கண்மணி அதிர்ச்சியுடன் கமலியைப் பார்த்தாள்.

சிரித்த வினோத், "தெரியும் கமலி, உன்னை விட கண்மணி லைஃப்ல நல்லது நடக்கணும் என்று நினைக்கிற ஜீவன் வேற யாரும் இருக்க முடியாது." என்றான்.

அப்போது அங்கு சங்கர் வர, "என்ன மூணு பேரும் இங்க தனியா நின்னு பேசிட்டு இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே வந்த உடனே, கண்மணி வேகமாகக் கண்களைத் துடைக்க, "ஒன்னும் இல்ல மச்சான், நாத்தனாரும், அண்ணியும் ஏதோ காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. அதான்" என்றான்.

"என்ன கமலி?" என்று சங்கர் கேட்டான்.

"ஒன்னும் இல்ல, சும்மா தான் பேசிட்டு இருந்தோம்… அண்ணா அவரா வந்து எங்களை வம்பு இழுத்துட்டு, இப்போ உங்ககிட்டயும் கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறாரு" என்று சிரித்தாள் கமலி.

ஆனாலும், அவளை நம்பாத பார்வை பார்த்த சங்கர் அவள் முகம் வாட்டமாக இருக்கவும், "உடம்பு ஏதும் பண்ணுதா?" என்றான்.

"நல்லாதான் மச்சான் பொண்டாட்டியப் பார்த்து இருக்கீங்க" என்று சிரிக்க,

"நீங்க உங்க பொண்டாட்டியப் பாத்துக்குறது விடவா, என் தங்கச்சி ஓடியாடி வேலை செய்யும் போது கூட உங்க பார்வை என் தங்கச்சியை விட்டு நகரவே இல்லையே" என்று சொல்ல,

இப்பொழுது அதிர்ச்சியாக கண்மணி வினோத்தைத் திரும்பிப் பார்க்க, வினோத்தின் பார்வை வேறு எங்கோ சென்றது. குழந்தைகள் இருவரும் "வாங்க விளையாடலாம்" என்று கூப்பிட நால்வரும் குழந்தைகளுடன் விளையாடினார்கள்.

விளையாட்டு, சிரிப்பு, கும்மாளம் என்று அன்றைய பொழுது நன்றாக முடிய, மாலை போல் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு, ஆட்டோவில் தன் அம்மாவையும், ராகினியையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தான் வினோத்.

"நானும், கண்மணியும் கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்." எனவும் கண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், பத்மாவிற்கு உள்ளுக்குள் ஆனந்தம். ‘தன் மகன் அவனது வாழ்க்கையைப் பற்றி யோசித்து இருக்கிறான். அதற்கான முதல் படியாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்.’ என்று மனதிற்குள் எண்ணி விட்டுக் கமலியையும் பார்த்துச் சிரித்தார்.

அவளும் தலை ஆட்ட ஆட்டோ பிடிக்கலாம் என்று கிளம்பினான்.

சங்கர் தான், "நான் கொண்டு போய் விட்டுடறேன் மச்சான்" என்று சொல்ல,

"இல்ல மச்சான், வேணாம். ரெண்டு பேருமே கொஞ்சம் அசதியா இருக்காங்க. போகும்போதே ராகிமா தூங்கினாலும் தூங்குவா… ஆட்டோ கொஞ்சம் வசதியா இருக்கும் ரெண்டு பேத்துக்கும்." என்றவுடன் சங்கருக்கும் சரி என்று பட்டதால் அமைதியாகி விட்டான்.

"சரி" என்று விட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கண்மணியை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றான்.

அதுவரை அமைதியாக வந்த கண்மணி, "நம்பளும் வீட்டுக்குப் போய் இருக்கலாம் இல்ல" என்று கேட்டாள்.

"போலாம், வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? கொஞ்ச நேரம் கழிச்சுப் போலாம். உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்" என்றான்.

"அதை வீட்டிலேயே பேசி இருக்கலாம் இல்ல"

"வீட்ல வச்சுப் பேச முடியாது. தனியாப் பேசனும் அதான்" எனவும் அவனை அமைதியாகப் பார்த்தாள்.

"நான் வீட்ல கமலிகிட்டப் பேசிட்டு இருக்கும்போது, பிஸிக்கல் ரிலேசன்ஷிப் என்று சொல்லும் போது உனக்கு ஏன் உடல் நடுங்குது கண்மணி?” என்று கேட்டான் அவளது கையில் அழுத்தம் கொடுத்துக் கொண்டு. அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவள் அமைதியாக இருக்க அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்து, "கமலிக்கே தெரியாமல் உன் லைஃப்ல வேற ஏதாச்சும் ஒரு விஷயம் இருக்கா? இதுவரை என்கிட்டயும் சரி, கமலி கிட்டயும் சரி மறைச்சிருக்க விஷயம்னு…" என்று நேரடியாகவே கேட்க, கண்மணி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

"உன்ன தான் கேட்கிறேன், சொல்லு" என்றான் லேசாகக் குரலை உயர்த்தி.

அவள் அமைதியாக இருக்க, "அப்ப ஏதோ ஒன்னு இருக்கு இல்லையா? கமலிக்குத் தெரியுமா, தெரியாதா?" என்றான்.

"இல்லை" என்பது போல் தலையாட்ட, "அப்போ என்கிட்டச் சொல்லலாம் இல்லையா? அப்படி என்கிட்டச் சொல்ல முடியாத அளவுக்கு ஏதோ ஒன்னு உன் லைஃப்ல இருக்கா?" என்றான்.

வேகமாக அவனது நெஞ்சில் வந்து சாய்ந்து கொண்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், இப்பொழுது அவள் அரவணைப்பைத் தேடும் குழந்தை போல் தெரிய அவளது தலையைக் கோதிவிட்டு, "சொல்லு கண்மணி" என்றான்.

"அ..அந்தக் கல்யாணம் நின்னுச்சு இல்ல" என்று திக்கினாள்.

"ஆமாம், அதுக்கு என்ன?"

"கல்யாணம் நின்ன ரெண்டு நாள் கழிச்சு அந்த மாப்பிள்ளையோட தம்பி வீட்டுக்கு வந்தான்.

"சரி, வந்து…" அமைதியாக அவள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தான்.

"அ..அப்போ, மாப்பிள்ளையோட தம்பி, அ..அவன்… அவனுக்கு என்னைப் புடிச்சிருந்திருக்கும் போல…"

"புரியல!"

"எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்களே, அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் அன்னைக்கு வீட்டுக்கு வந்தான். "எப்படியும் உன்ன இனி எவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டானுங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே நீயும், என் அண்ணனும் ஒன்னா ஒரே ரூம்ல இருந்து இருக்கீங்க. உங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சி இருக்கும்… எங்க வீட்ல நான் பேசுறேன், என்னை நீ கட்டிக்கோ… என்று வந்து நின்றான். அப்போ கோவத்துல, என்ன நெனச்சிட்டு இருக்க, பொறுக்கி நாயே… என்று சொல்லி நான் அவனை அடிச்சுட்டேன்.

உன்னால தான்டி என் அண்ணன் செத்துட்டான், உன் ராசியால தான்... எப்படியும் அவன் கூட எத்தனை நாள் இருந்தியோ, யார் கண்டா? நானா இருக்கப் போயி சரின்னு ஒத்துக்கிறேன். என் அண்ணனோட குழந்தை கூட உன் வயித்துல வளரலாம்… அப்படின்னு இன்னும் எவ்வளவு அசிங்கமாய் பேச முடியுமோ, அவ்வளவு அசிங்கமாய் பேசினான்." என்று சொல்லும் போதே அவளுக்கு உடல் உதறியது.

அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான். "ஒன்னும் இல்ல கண்மணி" என்று தேற்றினான்.

“அவன் என்னைக் கட்டிக்கச் சொல்லிக் கேட்ட டைம்ல எல்லாரும் வெளியே போயிருந்தாங்க, யாரும் வீட்ல இல்ல. என்னோட கல்யாணம் மணமேடை வரை போய் நின்ன வருத்தத்தில் இருந்தாங்க. என்னையும் கூப்பிட்டாங்க, நான் தான் வரலன்னு சொல்லிட்டேன். கமலி தான், அவளுக்குக் கொஞ்சம் தனிமை கொடுங்க, அவளை யாரும் ஃபோர்ஸ் பண்ணாதீங்கன்னு சொல்லி, எல்லாரையும் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிருந்தா.

அப்போ அம்மா, அப்பாவையும் தேத்த வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்துச்சு. சோ, நீ அமைதியா இரு. எதையும் போட்டுக் குழப்பிக்காத. நடந்ததைப் பத்தி நீ யோசிக்காத, உனக்குனு ஒரு லைஃப் இருக்கு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசினு சொல்லிட்டு மத்தவங்களை மட்டும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போயிருந்தா... என்கிட்ட ஆயிரம் பத்திரம் சொல்லிட்டு தான் போயிருந்தா, கதவை லாக் பண்ணிக்கோ என்று சொல்லிட்டு தான் போயிருந்தாள்.

அந்த டைம்ல தான் அவன் வந்திருந்தான். அ..அவன் என்கிட்ட, அ..அந்தப் பொறுக்கி நாயி…” என்று திணறிவிட்டு வினோத்தின் சட்டையை இறுக்கிப் பிடித்தவள், “என்கிட்டத் தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சான். என்னுடைய ஷாலைப் புடிச்சி இழுத்து…" என்று சொல்லும் பொழுதே அவளது உடல் மேலும் நடுங்க,

"ஒன்னும் இல்ல கண்மணி…" என்று அவளை இன்னும் தோளோடு இறுக்கி அணைக்க, அவளது நடுக்கம் அதிகம் ஆகியதே தவிரக் குறையவில்லை. அந்த நிமிடம் அவனுக்கு என்ன தோன்றியதோ, அவளை நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்தவன்,
அவளது நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றைக் கொடுத்தான். கண்மணிக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்.
 
Top