எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 26

kani suresh

Moderator
மறுநாள் காலை 5 மணிக்கு அவளுக்கு போன் செய்ய, "எதுக்கு இந்த நேரத்துல போன் பண்றீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே? நைட்டே லேட்டா தான தூங்கினீங்க" உரிமையாக அவனை அதட்ட,

"சும்மாதான், எல்லாரும் ஜாக்கிங் போறாங்க அதான் உனக்குக் கூப்பிட்டேன்."

"சரி, பார்த்துப் போயிட்டு வாங்க" என்று விட்டு வைத்தாள்.

"காலை 8 மணி போல, போன் செய்து நான் கிளம்பிட்டேன். நீங்களும் பார்த்துப் போயிட்டு வாங்க. அம்மா நீங்க மாத்திரை டைமுக்குப் போடுங்க" என்று விட்டு வைத்தான்.

அப்படியே மூன்று நாள்களும் சென்றது. தினமும் காலை வேளையில் அம்மாவிடமும், மகளிடமும் பேசுபவன், இரவில் அனைவரும் தூங்கிய பிறகு 10 மணிக்கு மேல், தனது இதயத்தை வென்றவளுக்கு போன் செய்து அவளை வம்பு இழுத்து, அவளது பிபியை ஏற்றிவிட்டுத் தூங்கச் செய்வான்.

மூன்றாவது நாள் மாலையே அங்கிருந்து தனது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பியிருந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் மறுநாள் விடியலில் தான் கிளம்புவேன் என்று சொல்லியிருந்தான். ஆனால், அவனால் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. அவளை விட்டும் சரி, அவளிடம் தனது நேசத்தை மறைக்கப் பெரும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறான். இதற்குத் தீர்வு, தான் உடனடியாகச் செல்ல வேண்டும் என்று உணர்ந்தவுடன், மாலை வேலை முடிந்த உடனே ஆபீஸில் டிக்கெட் போடச் சொல்லி இரவு 11 மணி போல் தனது இருப்பிடத்திற்கு வந்திருந்தான்.

அவன் வீட்டிற்கு வரும் போது இரவு 12 மணி ஆகி இருந்தது. வீட்டிற்கு வந்துவிட்டு, ‘போன் பண்ணலாமா? இல்ல நம்மகிட்ட இருக்க சாவியை வைத்து உள்ளே சென்று விடலாமா?’ என்று யோசித்தான்.

என்ன செய்வது என்று புரியவில்லை. 12 மணிக்குக் கண்மணிக்கு போன் செய்தான். தூக்கத்தில் இருந்த கண்மணி, "சொல்லுங்க, இன்னும் தூங்கலையா? நாளைக்கு மதியத்துக்குள்ள வந்துருவீங்களா?" என்று அவனைப் பேச விடாமல் இவனிடம் கேள்விகளைத் தொடுத்தாள்.

"தூக்கம் கண்ணைக் கட்டுதுடி. நீ பக்கத்துல இல்லாம, ஏதோ ஒரு மாதிரி இருக்கு." என்றான்.

இவ்வளவு நேரம் தூக்கத்தில் அவனிடம் பேசிக் கொண்டிருந்தவள், அவனது வார்த்தையின் வீரியத்தில் அடித்துப் பிடித்து எழுந்து உட்க்கார்ந்து, “என்ன சொன்னீங்க?" என்றாள்.

"ஒன்னும் இல்லடி சும்மா" என்று விட்டு "எனக்குத் தூக்கம் வருது. நீ தூங்கு" என்று ஃபோனை வைத்து விட்டான்.

"இனி எங்க இருந்து தூங்குறது? அதான், என் தூக்கத்தை மொத்தமா குழி தோண்டிப் புதைச்சிட்டீங்களே" என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.

"இப்போ எதுக்கு இந்த நேரத்துல போன் போட்டு என் தூக்கத்தைக் கெடுக்கணும். இப்போ அவர் நிம்மதியா தூங்கப் போயிட்டாரு.” என்று முனகிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தவள், அந்த நேரத்தில் அங்கு வினோத்தை எதிர்பார்க்கவில்லை.

அவளிடம் போன் பேசி வைத்துவிட்டு, நேராகத் தன்னிடம் இருக்கும் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு மெதுவாகக் கதவைச் சாற்றி விட்டு, வீட்டுக்குள் நுழைந்து ரூமின் அருகில் வர தன் மனைவி முனகும் சத்தம் கேட்க, உள்ளுக்குள் புன்னகைத்து விட்டு லேசாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

லேசாக தான் கதவைச் சாற்றினான். இருந்தாலும், அவள் முழித்துக் கொண்டு இருந்ததால், கதவை அவன் மூடும் வேளையில் சத்தம் கேட்டுவிட வேகமாக "வி....வினோ..." என்ற கேவலுடன் அவனிடம் ஓடிச்சென்று நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.

அவனுக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்… அவளைத் தோளோடு அணைத்தவன், "கண்மணி" என்று சத்தம் வெளியே வராத குரலில் அழைக்க, நிமிர்ந்தவள் அவனைப் பார்த்து மென்னகை புரிந்து விட்டு, "வரேன்னு சொல்லவே இல்ல, நாளைக்கு மதியம் தான் வருவீங்கனு காலையில தான் சொன்னீங்க?"

"அப்படிதான் சொன்னேன். ஆ..ஆனா, ஆனா…"

"என்ன, உங்க பொண்ணப் பாக்காம இருக்க முடியலையா? என்றவுடன் அந்த நேரத்திலும், "ஆமாண்டி, என் பொண்ணப் பார்க்காம இருக்க முடியல. என் பொண்ணப் பார்க்கதான் ஓடோடி வந்தேன். இப்போ எனக்குத் தூக்கம் வருது, நான் தூங்குறேன்" என்று விட்டுத் தன் மகளைத் தாண்டி உள்ளே சென்று போய் படுத்தான்.

தூக்கம் முழுவதும் தொலைந்து இருந்தது கண்மணிக்கு. கோவம் வேறு வந்து விட்டது.

"ஓ! சார் அப்போ பொண்ணப் பார்க்க தான் இரவோடு இரவாக வந்தீங்க, அப்போ எனக்காக வரல" என்று முனகி விட்டு அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

"எவ்வளவு நேரம் அப்படியே நிக்கிறதா உத்தேசம்? லைட் ஆப் பண்ணு. எனக்குத் தூக்கம் வருது, எப்படித் தூங்கறது?"

அவள் அவனை முறைத்துக் கொண்டு அவன் மீது பார்வையைப் பதிக்க, அவளை அப்படிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வேறு. 'நீயே வராமலா போயிடுவ, இருடி உன்னப் பாத்துக்கிறேன்' என்று எண்ணி விட்டுப் படுத்து விட்டான்.

"உங்களுக்காக ஒருத்தி மூணு நாளா காத்துட்டு இருக்கேன். எனக்காகனு ஒரு போன் பண்ணல, என்னைப் பத்தின நினைப்பு இல்ல, நான் வேணாம் உங்களுக்கு. இல்லயா? உங்க பொண்ணு தான் வேணும். அப்ப நான் உங்க பொண்ணுக்கு அம்மா மட்டும்தான், உங்களுக்கு எதுவும் இல்லை.” என்று ஆதாங்கமாக ஆரம்பித்து இறுதியில் புலம்பலாக அவனது நெஞ்சில் அடித்துக் கொண்டே, அழுது கொண்டே சாய்ந்தாள்.

"அப்போ நான் உங்களுக்கு எதுவும் இல்லையா? நான் வேணாமா உங்களுக்கு?" என்று அவனது முகத்தை உற்று நோக்கினாள். அவனுக்கு சிரிப்பைத் தாண்டி உள்ளுக்குள் ஏதோ செய்தது. வேகமாக அவளை இறுக்கி அணைத்து அவளது நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றைக் கொடுத்தான்.

"நான் எப்படி அப்படிச் சொன்னேன் நீ எனக்கு வேணான்னு. உன்னை என் பொண்ணுக்கு அம்மாவா மட்டும்தான் நான் இதுவரைக்கும் பார்த்திட்டு இருக்கேனா? ராகிக்கு அம்மாவாவும், அம்மாக்கு மருமகளாவும் மட்டும்தான் பாக்கறேனா சொல்லு? எனக்கு மட்டும் ஆசையா என்ன, உன்ன விட்டுட்டுப் போக. சத்தியமா மனசு இல்லாம தான் போனேன். வருஷத்துக்கு இரண்டு டைம், ஆறு மாசத்துக்கு ஒரு டைம், வெளியே போயிட்டு தான்டி இருக்கேன்.

ராகிமா பச்சக் குழந்தையா இருக்கும்போதே அகி கிட்டச் சொல்லி விட்டுட்டுப் போவேன். அம்மாக்குத் துணைக்கு அகி வைஃபை நம்ம வீட்ல விட்டுட்டுப் போயிருக்கேன்டி. ஆனா இந்த டைம் உன்னை விட்டுட்டுப் போக அவ்வளவு யோசிச்சேன். இரண்டு நாள் டைம் கூட கேட்டு இருந்தேன் ஆபீஸ்ல. உன்ன விட்டுட்டுப் போக முடியாம தான்.

எனக்குச் சொல்லத் தெரியலடி, எனக்கே தெரியாம எனக்குள்ள வந்துட்ட நீ… முழுசா இப்போ இந்த நிமிஷம், ராகியை விட நீ மட்டும் தான்டி என் கண்ணுக்குத் தெரியிற. என் பார்வை உன்கிட்ட தான்டி வருது. அதை ஏன்டி உன்னால புரிஞ்சுக்க முடியல"

அழுத கண்களைத் துடைத்தவள், "இல்லை, நான் அப்படிச் சொல்லல... அ..அது…" என்று திணறினாள். அவளது தாடையைக் கைகளில் ஏந்தியவன், "எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு கண்மணி. சத்தியமா இந்த நிமிஷம் என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க. ஆனா, நான் உனக்கு இன்னும் எப்படி தான்டி என்னப் புரிய வைக்கிறது. உனக்கு எப்போ நான் இல்லாமல் இந்த உலகம் இல்லனு தோணுதோ, அப்போ என்கிட்டச் சொல்லு. அதுக்காக நான், நீ இப்பவே சொல்லணும்னு சொல்லல." என்றான்.

வேகமாக அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு, "நான் எப்போ அப்படிச் சொன்னேன். உண்மையாவே நான் இப்போ உங்களை விரும்புறேன். எப்போ இருந்துனு கேட்டா, எனக்கே தெரியல. ஆனா, முழுசா இப்ப நீங்க என் நெஞ்சுக்குள்ள இருக்கீங்க. நீங்க மட்டும் தான் இருக்கீங்க. நீங்க இல்லாம என் உலகம் இல்லனு இந்த மூணு நாள்ல தெரிஞ்சுக்கிட்டேன்.

மூணு நாளும் சொல்ல முடியாத வேதனை, மனசப் போட்டு அலட்டுச்சு. நீங்க அன்னைக்கு ஊருக்குக் கிளம்பும்போது என்கிட்டச் சொல்லலனு கோவம். அது உரிமையா தான் வந்துச்சு. அப்போதான் நீங்க எனக்குள்ள இருக்கீங்க என்று நான் உணர்ந்தேன். ஃபோன் எடுக்கல என்றவுடன் அப்படி ஒரு கோபம். போன் ரீச் ஆகல, அதுகூட உங்களால என்கிட்டச் சொல்ல முடியாத அப்போ நான் யாரோவானு தோணுச்சு…

நீங்க போன இந்த மூணு நாள்ல கமலிக்குகூட போன் பண்ணத் தோணல. அதான் உண்மையும் கூட. நீங்க போன அன்னைக்கே கமலி அவளா போன் பண்ணா… அதுக்கப்புறம் அவளும் எனக்குக் கூப்பிடல. நானும் அவளுக்குக் கூப்பிடல. அதையே இப்போதான் நான் உணருறேன். அந்த லூசு, எனக்கு போன் பண்ணவே இல்ல. நானுமே அவளுக்கு போன் பண்ணல. இது கூட அவ எனக்கு யோசிக்கக் கொடுத்த டைம்தான்" என்று விட்டு அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

"உண்மையா உனக்கு கமலி போன் பண்ணலையா?" என்று அவளது தாடையைப் பிடித்துக் கேக்க,

"இல்லை" என்றாள்.

"சரி, நீ ஏன் பண்ணல?"

"தெரியல, எனக்கு உங்க நெனப்பு தாண்டி வேற எங்கேயும் போகல. நான் யார்கிட்டயும் பெருசா பேசல. பாப்பாகிட்ட கூட எரிஞ்சு தான் விழுந்தேன்."

"ஒன்னும் இல்லடி" என்று அவளது கண்களைத் துடைத்துவிட்டு நெற்றியில் இதழ் பதிக்க,

ராகினி தூக்கத்தில் சிணுங்கினாள். இருவரும் ஒரே நேரத்தில் தட்டிக் கொடுக்க, "சரி தூங்கு கண்மணி, லேட் ஆகுது." என்றான்.

அவளுக்குமே தூக்கம் வர அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, குழந்தையைச் சுவரை ஒட்டிப் போட்டவன், நடுவில் அவன் படுத்துக்கொண்டு குழந்தையின் மீது ஒரு கையைப் போட்டுவிட்டு, கண்மணியை ஆதூரமாக அணைத்துக் கொண்டு, “நான்தான் நம்ப காதலை உணர்ந்துட்டேனே அப்புறம் ஏன் உன்னை விட்டுப் போகப் போறேன். இனி லைஃப் லாங் உன் கூட தான்" என்று தட்டிக் கொடுக்க,

சிறிது நேரத்தில் அவனைப் பார்த்துக் கொண்டே தூங்கி இருந்தாள்.

அவள் தூங்கிய பிறகு அவளது முகத்தைப் பார்த்தவன், 'இன்னும் உன்னோட நடுக்கம் குறையல கண்மணி. அந்த விஷயம் உன்னை இன்னும் பாதிச்சிருக்கு. நான் உன்னை இறுக்கி அணைக்கும் போதும், முத்தம் கொடுக்கும் போதும் உன் உடல் நடுங்குது. அதை உன்னால தடுக்க முடியல. இதை எப்படியாச்சும் மாத்தணும், சீக்கிரம் மாத்தணும். என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்' என்று எண்ணி விட்டுத் தூங்கி இருந்தான்.

காலை 7 மணி ஆகியது. கண்மணி இன்னும் எழவில்லை. மூன்று நாள்களுக்குப் பிறகு அசந்து தூங்கி இருந்தாள். பத்மாதான் எழுந்தவர், இன்னும் கண்மணி எழுந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்து விட்டு கதவைத் தட்ட வந்தார். கதவு தாழ்ப்பாள் போடாமல் சும்மா சாற்றி இருக்க, "கண்மணி" என்று அழைத்துக் கொண்டே வேகமாக உள்ளே வர,

தன் மகன் வந்திருப்பதைப் பார்த்தார். அவனும் கண்மணியும் அருகருகே படுத்திருப்பதைப் பார்த்தவுடன், மனதிற்குள் லேசான இதம் பரவ, ‘இவன் எப்போ வந்தான்? வரேன்னு சொல்லவே இல்லையே. இன்னைக்கு மதியம் போல வரதா தான சொன்னான்' என்று யோசித்தார்.

'எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி' என்று மூவரும் குடும்பமாக ஒன்றாக இருப்பதைப் பார்த்தவர் கதவை மெதுவாகச் சாற்றிவிட்டு கமலிக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
 
Top