எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 11

ரமேஷ் இறந்து ஒரு மாதம் சென்றதும் வெளியேயும் நிலைமை ஓரளவு சீராக தொடங்கியது. காவ்யா சித்துவுடன் தன் புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். அவர்களின் கடையை சீராக்கி ராஜேஷ் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.​

'ரமேஷ் இப்போது இல்லை!’ என்ற நிதர்சனத்தை அவர்கள் குடும்பத்தாரால் இன்னமும் கிரகிக்க முடியவில்லை.​

அதிலும் இவ்வளவு நாட்கள் அண்ணனின் நிழலில் வாழ்ந்த ராஜேஷ் மிகவும் சிரமப்பட்டான்.​

வீட்டின் பொறுப்புகள், கடையின் பொறுப்புகள் என அனைத்தும் ராஜேஷின் தலையின் மேல் விழுந்து அவனின் கழுத்தை நெருக்கியது. முதலில் திணறியவன் போகப் போக பழகிக்கொண்டான்.​

அன்று கடைசியாக ரமேஷுடன் பேசிவிட்டு வைத்த ஃபோனிற்கு, 'மீண்டும் அவனின் அழைப்பு வராதா..?' என்று காவ்யா ஏங்கிய நாட்கள் பல! அப்பொழுதெல்லாம் உண்மை அவளின் முகத்தில் அறைந்து அவளை நிகழ்விற்கு கொண்டு வரும்.​

இதற்கிடையில் "அப்பா.. அப்பா.." என அழும் சித்துவையும் அவள் தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.​

அன்று தான் ரமேஷின் ஃபோனை காவ்யாவிடம் ராஜேஷ் ஒப்படைத்தான்.​

ராஜேஷ் அதனை திறந்து பார்க்கவில்லை. காவ்யாவிற்கு அதை திறந்து பார்க்கத் தோன்றவுமில்லை.​

ஆனால் கௌதம் தான் காவ்யாவிடம் "அதில் எதாவது இருக்கும் திறந்து பார்" என கட்டளையிட்டான்.​

லாக்கை திறந்தவள் அதில் ரமேஷ் அவளுக்காக பேசி சேமித்து வைத்த குரல் பதிவைக் கண்டாள்.​

அந்தப் பதிவை முழுமையாக கேட்டவளிற்கு உயிர் போகும் வலி உண்டாகியது. அவன் இறக்கப் போகிறான் என முன்பே அறிந்தவன் போல், அவனுடைய சேமிப்புகள், வங்கிக் கணக்கின் பின் நம்பர் மற்றும் தொழில் சார்ந்த அனைத்து தகவல்களையும் கூறியிருந்தான்.​

இறுதியில் "நீயும் உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் காவ்யா.." என முடித்திருந்தான்.​

அவனது ஏற்பாட்டை நினைத்து காவ்யாவிற்கு மலைப்பாக இருந்தது. ‘இறக்கும் தருவாயில் கூட தன்னைப் பற்றியும் சித்துவைப் பற்றியும் எவ்வளவு யோசித்திருகிறார்’ என நினைத்துக் கலங்கினாள்.​

அதுவும் அந்தப் பதிவில் அவன் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இருமிக்கொண்டே பேசியது அவளின் நெஞ்சைப் பிசைந்தது.​

'இதனால் தான் அன்றைக்கு சித்துவை பார்த்துக்கொள்! என்று சொன்னாரா? நான் தான் அதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா?' என தன்னையே கடிந்து கொண்டவள் மனதளவில் மிகவும் சோர்ந்துவிட்டாள்.​

மேலும் ஒரு மாதம் சென்ற பிறகு ரமேஷ் கட்டிய இன்சூரன்ஸ் தொகை என பத்து லட்சம் வர ராஜேஷ் அதனை அப்படியே சித்துவின் பெயரில் வங்கியில் போட்டுவிட்டான்.​

"என்ன இருந்தாலும் அது அண்ணாவுடைய பணம். சித்துவிற்கு தான் செல்ல வேண்டும்" என்று நேர்மையாகத் தான் யோசித்தான்.​

சித்துவின் பெயரில் ரமேஷ் உருவாக்கிய கடை இருக்க, மீதி அனைத்தும் மங்கலத்தின் பெயரில் தான் இருந்தது.​

சித்துவின் பெயரில் இருப்பதையும் ராஜேஷே பார்த்துக்கொள்ள அவன் காட்டியது தான் கணக்கு என்ற நிலை வந்தது. அதுவும் அவன் அதை நிர்வாகிப்பதால் வரும் லாபத்தில் பாதி அவனுக்கு மீதி சித்துவிற்கு அதாவது காவ்யாவிற்கு என்று வந்தது.​

ஒருநாள் காவ்யா ஏதோ சந்தேகம் என கேட்க, மங்கலம் ஆடிவிட்டார். "ஏற்கனவே என்னோட பையன் இவ்வளவு பொறுப்புகளையும் தனியா பார்த்துக்கிட்டு இருக்கான். நீ சுகமா வீட்ல இருந்துட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற?” என காவ்யாவை பற்றி பேச தொடங்கிவிட்டார்.​

'அன்றே ரமேஷ் வந்து கடையை பார்த்துக்கொள்ள சொன்னார். அப்படி சென்றிருந்தால் ஓரளவு எனக்கு விபரம் புரியும். ஆனால் இப்ப என்ன செய்ய?' என ஒன்றும் புரியாமல் காவ்யா முழித்தாள்.​

மாதாமாதம் அவளின் செலவிற்கு வங்கியில் பணம் வந்துவிடும். ஆனால் காவ்யா, வாழ்வில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் நடைப்பிணமாக இருந்தாள். அவளின் தற்போதைய நிலை, சித்துவை நன்கு வளர்க்க வேண்டும் என்பது மட்டும் தான்.​

அதற்காக மாமியார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்ள முடிவு செய்தாள். ஆனால் அந்த முடிவும் நிலைக்கவில்லை!​

ஒருநாள் பிரியாவின் அம்மா அவர் மகளைக் காண வந்தார். வந்தவர் காவ்யா இருக்கும் பொழுதே தன் மகளிடம், "ஒருத்தர் வேலை பார்த்து தான பிரியா எல்லாருமே இங்க வாழ வேண்டியதா இருக்கு..?" என ஆரம்பித்தார்.​

பொறுப்பு கூடியத்தில் இருந்து சற்று அழுத்ததுடன் இருந்த ராஜேஷ் பிரியாவுடன் சரியாக பேசாததால், "ஆமா அம்மா. இப்பலாம் அவரு என்கூட பேசுறது கூட குறைஞ்சிடுச்சி. பாப்பாவையும் பார்க்க மாட்டிங்குறாரு.." என குறைப்பட்டுக் கொண்டாள்.​

பிரியாவின் தாய், "என்ன பண்ணுறது? எல்லாம் நேரம். நாம உழைக்க மத்தவங்க உட்கார்ந்து சாப்பிடனு இருக்குறாங்க.." என காவ்யாவை பார்த்துக்கொண்டே கூறினார்.​

மாமியாரின் பேச்சை பொறுத்துக் கொண்டவள் பிரியாவின் அம்மாவின் பேச்சிற்கு, "சித்து பேருல இருக்க கடையை பாத்துக்குறதுக்காக ராஜேஷ்க்கு லாபத்துல பாதி போகுது. இங்க யாரும் சும்மா ஒன்னும் உட்கார்ந்து சாப்பிடல. என்னோட புருஷன் அவர் பையனுக்குன்னு சேர்த்து வெச்சிட்டு போனதுல தான் நாங்க வாழுறோம். எங்களுக்கு யாரும் பாவம் பார்த்து இங்க எதுவும் செய்யல.." என பதிலடி கொடுத்தாள்.​

"நான் இல்லாம உன்னோட புருஷன் வந்துட்டானா? என்னோட முன்னாடியே அவங்கள இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசுற?" என அதுவரை ரூமிற்குள் இருந்த மங்கலம் காவ்யாவை சத்தம் போட்டார்.​

"அப்ப அவங்க பேசுனது சரியா அத்தை?" என கண்கள் கலங்கி உதடு துடிக்கக் கேட்டவளைப் பார்த்தவர், "பெரியவங்க ஏதோ பேசுறாங்கன்னு விட வேண்டியது தான.." என்றார்.​

அதற்குமேல் எதுவும் பேசாமல் அங்கு விளையாடி கொண்டிருந்த சித்துவை தூக்கிக்கொண்டு அவளின் அறைக்கு வந்துவிட்டாள். இப்படியே நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாக ஒருநாள் பிரியா அவளை விட்டுவிட்டு சித்துவைப் பேசத் தொடங்கிவிட்டாள்.​

தனக்கு என்கிற போது வந்த பொறுமை, நிதானம், தன் மகவுக்கு என்றதும் அனைத்தையும் உதறிவிட்டு சண்டையிட்டவள் தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள்.​

இங்கு வந்து தன் குடும்பத்திடம் அனைத்தையும் சொல்லியவளின் மனபாரம் சற்று குறைந்தது போல் தான் இருந்தது.​

அவள் கூறியதைக் கேட்டு அவர்களிடம் சண்டைக்கு செல்லத் துடித்த கௌதமை தேவிகாவும், ராமமூர்த்தியும் தான் அடக்கினர்.​

கையோடு அவள் எடுத்து வந்த அவளின் நகைகளை தன் அன்னையிடம், "நீங்களே இத பத்திரமா வையுங்க அம்மா.." என கொடுத்தவளின் கழுத்தில் மெல்லிய சங்கிலி; கையிரண்டிலும் மெல்லிய வளையல்; காதையொட்டி சிறிய கம்மல் என பார்க்க மிக எளிமையாக இருந்தாள்.​

பெற்றவர்களுக்கு மகளை அப்படிப் பார்க்க முடியவில்லை. இப்படி பாதியிலே தனிமரமாய் நிற்கவா அவ்வளவு சீரும் சிறப்புமாக வளர்த்து கல்யாணம் செய்து வைத்தோம் என மனத்திற்குள்ளே புழுங்கினர்.​

இதற்கிடையில் கௌதமின் மனைவி கண்மணி கர்ப்பம் தரித்தாள். வீட்டில் ஒரு குழந்தை வரப் போகிறது என்கிற நிலை அவர்களை சற்று மகிழ்ச்சிப்படுத்தியது.​

அப்பொழுது தான் "எங்கள் பேரனை எங்ககிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறாள்.." என்று காவ்யாவின் மாமியார் உறவினர் வட்டத்திடம் கதை கட்டிவிட, வாரம் ஒரு முறை மட்டும் அங்கு செல்வாள்.​

அங்கு இவளை கண்டு கொள்ளாதவர்கள் சித்துவை மட்டும் கொண்டாடுவார்கள்.​

ஒருவாரம் என்பது இருவாரம் ஆகியது. பின் அது மாதத்தில் வந்து நிற்க, மாதம் ஒருமுறை மட்டும் அவளின் மாமியார் வீட்டிற்கு செல்ல பழகிக்கொண்டாள் காவ்யா.​

__________​

இன்று,​

காலை மணி எட்டை கடந்ததும் தான் காவ்யாவிற்கு முழிப்பே வந்தது. எழுந்து முழித்தவள், ஒரு நிமிடம் கண்ணை மூட நேற்றிரவு நடந்தது, கார்த்திக் வந்து விட்டு சென்றது என அனைத்தும் நினைவிற்கு வந்தது.​

தனது ஃபோனை எடுத்து அலுவலகத்திற்கு விடுப்பெடுத்தவள் குளித்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.​

அங்கு சென்று பாலை காய்ச்சிக்கொண்டே கௌதமிற்கு அழைத்தவள் நேற்று நடந்த அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.​

"நீ நல்லது தான அம்மு பண்ணிருக்க? நீயும் சித்துக்குட்டியும் ரெஸ்ட் எடுங்க. முடிஞ்சா நா ஈவ்னிங் வந்து பார்க்கிறேன்" என்றான்.​

"ஐயோ அண்ணா நீ வரணும்னு இல்லை. உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு அதான்.." என இழுத்தவளைத் தடுத்தவன்,​

"பரவாயில்லை அம்மு இதுல என்ன இருக்கு? நான் ஈவ்னிங் வரேன்" என அழைப்பை வைத்தவன் மனதிற்குள் 'இன்று காவ்யாவிடம் கார்த்திக் கூறியதைப் பற்றி பேச வேண்டும்' என நினைத்துக் கொண்டான்.​

அங்கு அறையில் சித்து சிணுங்கும் சத்தம் கேட்க அவனை கவனிக்க சென்றாள் காவ்யா.​

மாலையில் அவர்களை பார்க்க வந்த கௌதம் சித்துவிற்கு பிடித்த உணவுப் பதார்த்தங்களை வாங்கி வந்தான்.​

சிறிது நேரம் அவனுடன் விளையாடியவன் அவனிடம் கலர் செய்ய ஸ்கெட்ச் பென்சில்களை கொடுத்துவிட்டு காவ்யா கொடுத்த காப்பியுடன் அமர்ந்துக்கொண்டான்.​

காப்பியை ஒரு மிடறு குடித்தவன் காவ்யாவிடம், "கார்த்திக்கை பற்றி நீ என்ன நினைக்கிற காவ்யா?" என கேட்டான்.​

அவனின் கேள்வியில் மனதில் ஒரு அலாரம் அடிக்க, "அவரைப் பற்றி நான் நினைக்க என்ன இருக்கு ண்ணா? அவர் யாரோ நான் யாரோ" என பட்டும் படாமல் பதிலளித்தாள்.​

‘இப்படி சொன்னா? இவளை என்ன செய்ய?’ என யோசித்த கௌதம் கார்த்திக் கூறியதை அப்படியே அவளிடம் சொன்னான்.​

"போதும் அண்ணா! அவங்க என்கிட்டயும் இப்படி தான் பேசுனாங்க, நான் திட்டிவிட்டுட்டேன். மறுபடி அதைப் பற்றி என்கிட்ட பேசாத" என சிறிது கோபம் கலந்த குரலில் சொல்ல,​

"கோவப்படாத அம்மு. அண்ணா உன்கிட்ட பேசிட்டு தான இருக்கேன்" என தன்மையாகவே கூறினான்.​

மூன்று வாரங்களாய் கார்த்திக்கை பற்றி அவன் விசாரித்தான். அனைத்து இடங்களிலும் அவனைப் பற்றி நற்சான்றிதழே வழங்கப்பட்டது. ஆகையால் அவனுக்கு காவ்யாவை கார்த்திக்கிற்கு கொடுக்க விருப்பம் தான். இருந்தும் தங்கையின் விருப்பமே இங்கு பெரியதாய் இருக்க அவளிடம் பொறுமையாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.​

அண்ணனின் தன்மையான பேச்சில் கோபத்தை விட்டவள், "இல்ல அண்ணா! எனக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை!" என மறுத்துவிட்டாள்.​

"சரி கார்த்திக் வேண்டாம். வேற என்ன பண்ண போற..?" என்று கேட்டான்.​

"என்னன்னா? எனக்கு புரியல? நானும் சித்துவும் தனியா தான இருக்கோம். யாருக்கும் பாரமில்லாம? யார் கையையும் எதிர்பார்க்காம?" என கண்கலங்கியவளைப் பார்த்தவன்,​

கோபத்துடன், "அப்படியே போட்டேன்னா தெரியும்.." என அவளை அடிப்பது போல் கை ஓங்கியவன் அவளின் வெளிறிய தோற்றத்தைப் பார்த்து கையை கீழே இறக்கி தன்னைத் தானே அடக்கிக் கொண்டான்.​

பின், "எவ்வளவு பேசுற அம்மு? அப்படி உன்னை விட்டுடுவோமா? உனக்கு இப்படி இருக்க பிடிச்சிருக்குன்னு தான் நான் அமைதியா இருக்கேன். அதை ஞாபகம் வெச்சிக்கோ" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,​

"ஒரு கல்யாணம் பண்ணதே போதும் அண்ணா. எனக்கு இன்னொரு கல்யாணம் எல்லாம் வேணாம். நான் இப்படியே சித்து கூட இருப்பேன்"​

"இங்க பாரு காவ்யா. உலகத்துல இருக்க எல்லாருக்கும் ஒரு துணை தேவை!" என்றவன் குறுக்கே காவ்யா பேச வருவதை தடுத்துவிட்டு,​

"இப்ப சித்து சின்ன பையனா இருக்கான், அதுனால உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கான். நாளைக்கே ஸ்கூல், காலேஜ், வேலைன்னு வெளிய போக தொடங்கிட்டா? நீ தனிமையா உணருவ அம்மு" என்றான்.​

அவன் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் கைகளில் பத்து விரலும் சரியா இருக்கிறதா என ஆராய்ச்சியை மேற்கொண்டாள்.​

கடுப்புடன் அவளைப் பார்த்தவன், "உனக்கு நாங்க இரண்டாவது திருமணத்திற்கு ஒரு வருஷம் முன்னாடில இருந்தே பார்க்கிறோம் தான காவ்யா?" என சத்தமாக கேட்டான்.​

எதற்கு இப்ப இதை கேட்கிறான் என்று புரியாமல், "ஆமா ஆனா அப்பவே எனக்கு இதுல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்"​

"உண்மைதான். ஆனா திருமணத்திற்கு சம்மதித்தவர்கள் எல்லாருமே நீ தனியா வந்தா கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னாங்க தான?" என வினவ,​

"ஆமா! ஆனா? எனக்கு என்னோட பையன் தான் முக்கியம் வேற எதுவும் வேண்டாம்னு உங்க கூட சண்டை போட்டத்தையும் நீங்க மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்?” என தன் அண்ணனிடம் வாதத்தை தொடங்கினாள்.​

"நான் இல்லைன்னு சொல்லையே அம்மு. இங்க மனைவியை இழந்து குழந்தை இருக்குறவனுக்கு கூட ஈஸியா இன்னொரு கல்யாணத்துக்கு பொண்ணு அமைந்து விடும். ஆனால் கணவனை இழந்தவர்களுக்கு, அதிலும் குழந்தை இருக்கிறவங்களுக்கு மாப்பிளை கிடைப்பது தான் ரொம்ப கஷ்டம்" என்றவன்,​

"சித்துவோட உன்னை ஏத்துகிறேன்னு கார்த்திக் சொல்லுறாரே காவ்யா. நீ ஏன் அதை யோசிக்க மாட்டிங்குற?" என தங்கையை யோசிக்க தூண்டினான்.​

"அண்ணா ப்ளீஸ்! எனக்கு யாரும் வேண்டாம்!" என மீண்டும் அவளின் நிலையிலே நின்றவளிடம்,​

"நீ உன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பியா அம்மு? சித்துவை பற்றி யோசிக்க மாட்டியா? என்னைக்கா இருந்தாலும் உனக்கு ஒரு வாழ்க்கை கண்டிப்பா நான் அமைத்து தான் கொடுப்பேன். ஆனா வர்றவங்க சித்துவிற்கும் பிடிக்கணும்னா? அது கார்த்திக்கா மட்டும் தான் இருக்க முடியும்" என்றவன் சித்துவை அழைத்தான்.​

கௌதமிடம் ஓடி வந்த சித்து, "என்ன மாமா..?" என கிள்ளை மொழியில் கேட்க,​

"உனக்கு கார்த்திக் அங்கிள் பிடிக்குமா சித்து?" என்றான்.​

அடுத்த நிமிடமே, "எனக்கு இவ்வளவு பிடிக்கும்" என தன் பிஞ்சி கைகளை முடிந்தளவு விரித்து கூறினான். அவனின் பதிலுக்கு கௌதம் மட்டுமில்லாமல் காவ்யாவும் அதிர்ந்தனர்.​

"பார்த்தியா அம்மு? நீ சித்துக்காகனு பார்க்கிற. உண்மையிலேயே அவனுக்கு இவரை இவ்வளவு பிடிக்குறப்ப நீ ஏன் யோசிக்க கூடாது? நல்லதாவே நினைப்போமே" என அவளின் தலையை தடவிக் கூறியவன்.​

நானும் சித்துவும் கார்த்திக் வீட்டிற்கு போய்விட்டு வருகிறோம் என எழுந்தவனை புரியாமல் பார்க்க, "உன்னோட சம்மதம் இல்லாம் இங்க எதுவும் நடக்காது. நான் இன்னும் அம்மா, அப்பா கிட்ட கூட சொல்லல. அவங்க கிட்ட சொன்னா உன்னைய வற்புறுத்துவாங்கன்னு எனக்கு தெரியும். இது நீயா முடிவெடுக்க வேண்டியது. நல்லா யோசி!" என்று அவளை யோசிக்க விட்டுவிட்டு சித்துவை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.​

அப்பொழுது தான் அலுவலகத்தை முடித்துவிட்டு மருத்துவமனை சென்று பரசுராமனையும், லட்சுமியையும் பார்த்துவிட்டு வந்தவன் காப்பி குடித்துவிட்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தான்.​

வாசலில் கேட்ட அழைப்பு மணிக்கு சென்று கதவை திறந்தவன் அங்கே கௌதமையும் சித்துவையும் எதிர்பார்க்கவே இல்லை.​

"வாங்க.. வாங்க.." என அவர்களை வரவேற்றவன் கிட்சனிற்குள் செல்லப் போக,​

"எதுவும் வேண்டாம் கார்த்திக். இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன்" என்றான் கௌதம்.​

பின் மூவரும் அங்கிருந்த சோபாவிலே அமர்ந்தனர்.​

சித்து, "கார்த்தி அங்கிள் உங்க வீட்ல டாய்ஸ் இல்லையா?" என வீட்டினை சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டான்.​

அதற்கு கௌதம், "கார்த்தி அங்கிள் வீட்ல சின்ன பசங்க இல்ல சித்து அதான். இனிமே உன்னை மாதிரியே ஒரு குட்டி பையன் வர போறான் அப்ப வீடு முழுக்க டாய்ஸ் இருக்கும்" என சித்துவிடம் கூறுவதை போல் கர்த்திக்கிடமும் சொன்னான்.​

"நீங்க என்ன சொல்லுறீங்க கௌதம்..?"​

"வெல்! நான் உங்கள பத்தி முழுசா விசாரிச்சிட்டேன். எனக்கு ஓகே! காவ்யா கிட்டயும் பேசிட்டேன் கார்த்திக். அவளுக்கும் ஓகேனா? நான் கண்டிப்பா வீட்ல பேசுறேன்" என்றான் மனம் முழுக்க மகிழ்வுடன்.​

"என்ன மாமா..?" என அவர்களின் பேச்சினை புரியாமல் பார்த்த சித்து வினவ,​

"ஒண்ணுமில்லை சித்துக்குட்டி" என்ற கௌதம் கார்த்திக்கிடம் விடைபெற்றான்.​

கௌதம் கூறியதைக் கேட்ட கார்த்திக்கின் மனதில் ஒருவித நிம்மதி பிறந்தது. 'கண்டிப்பா காவ்யாவும் ஒத்துப்பாங்க.. அப்புறம் சித்து என்கூடவே இருப்பான்' என்று நினைத்தவன் தன் வீட்டினரால் முட்டுக்கட்டை விழும் என யோசிக்கத் தவறினான்.​

 
Top