எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 17

அத்தியாயம் 17​

“சொல்லுங்க அத்தை” என்றுமில்லாமல் அழைத்த மங்கலத்திடம் பேச தொடங்கினாள் காவ்யா.​

“சித்து எப்படி இருக்கான்?” குரலில் கொஞ்சம் அதிகாரம் இருந்தது.​

“நல்லாருக்கான்”​

“இல்ல ரெண்டு மாசமா வீட்டு பக்கம் வரவே இல்லையா? இன்னோரு கல்யாணம் பண்ணதும் என்னையதான் மறந்திட்ட. அதான் அவனையாவது நல்லா பார்த்துக்குறியான்னு கேட்டேன்” என்றார் நக்கல் குரலில்.​

“என்னோட பையனை பார்த்துக்க எனக்கு நல்லாவே தெரியும்” என்றவள்,​

“இந்த மாசம் சித்து பர்த்டே வருதே அத்தை! உங்கள எல்லாரையும் கூப்பிடலாம்னு தான் இருக்கோம்” என்றாள் பொறுமையாக.​

‘யார் பேரனின் பிறந்தநாளை யார் வீட்டில் கொண்டாடுவார்கள்?’ என வெகுண்ட மங்கலம் தன் காரியம் தான் இப்பொழுது முக்கியம் என்று உணர்ந்தவர்,​

“நான் உன்கிட்ட சித்துவை பத்தி பேச தான் ஃபோன் போட்டேன் காவ்யா” என பீடிகையுடன் பேச்சை தொடங்கினார்.​

‘சித்துவை பற்றியா?’ என யோசித்தவள், “சொல்லுங்க அத்தை?” என்றாள் குழப்பமும் பதட்டமும் நிறைந்த குரலில்.​

“உனக்கு தான் இரண்டாம் திருமணம் முடிஞ்சிடுச்சே காவ்யா. சித்துவை.. எங்க பேரனை எங்க கிட்டயே கொடுத்திடேன்? நாங்க உன்னோட வாழ்க்கைல குறுக்கிடமாட்டோம்” என கத்தியின்றி காவ்யாவின் இதயத்தை குத்திக் குதறினார்.​

அவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவள் ‘இதற்கு என்ன சொல்ல வேண்டும்?’ என்று நினைக்கக் கூட முடியாமல் ‘எங்கே ஏதாவது திட்டிவிடுவோமோ?’ என்று அலைபேசியை அணைத்துவிட்டாள்.​

அவளின் நிலையை பார்த்து அவளிடம் வந்த கார்த்திக்கிடம் அனைத்தையும் பகிர்ந்தவள் அழுகையில் கரைந்தாள்.​

“அழாத காவ்யா! நான் பார்த்துகிறேன்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் இருவரையும் அழைத்துக்கொண்டு மங்கலத்தின் வீட்டிற்கு சென்றான்.​

இப்படி திடீரென்று இவர்கள் வருவார்கள் என அறியாத அனைவரும் முழித்தனர்.​

மங்கலம், “வாங்க வாங்க.. நேத்து தான் ஃபோன் போட்டேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க?” என புன்னகையுடன் கூறியவர்,​

“வாங்க ராஜா! இனி பாட்டி கூட தான் இருக்க போறீங்க” என சித்துவை கொஞ்சினார்.​

அவர் பேசுவதை ஏதோ பாஷை புரியாததை போல் ராஜேஷும், பிரியாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.​

அவர்களின் நிலையை வைத்தே அவர்களுக்கு விஷயம் தெரியவில்லை என யூகித்த கார்த்திக்,​

“சித்து எங்களோட பையன் அம்மா. இனியும் எங்க கூட தான் இருப்பான்” என்றான் திடமாக.​

“என்னாச்சி? எதுக்கு எங்க அம்மாகிட்ட இப்படி பேசுறீங்க?” என கார்த்திக்கை கேள்வி கேட்ட ராஜேஷிடம் அனைத்தையும் காவ்யா சொன்னாள்.​

“அம்மா! என்ன பண்ணி வெச்சிருக்கீங்க?” என அதட்டல் போட்டான் ராஜேஷ்.​

“நான் என்னடா பண்ணட்டும்? என்னோட பையனும் என்னைவிட்டு போய்ட்டான். இப்ப எனக்கு என்னோட பேரன் வேணும். அதுகூட கேட்க எனக்கு உரிமை இல்லையா?” என்றார் வெடுக்கென்று.​

“நீங்க என்ன பேசுறீங்க? ஒருத்தரோட இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது தான். அதுக்காக முப்பது வயசுல இறந்த உங்க பையனுக்காக ஐந்து வயது குழந்தையை அவனோட அம்மா கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்க?” என்றான் கார்த்திக் நிதானமாக.​

“காவ்யா தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாளே! மறுபடி குழந்தை பெத்துக்கலாம் தான? சித்துவை எங்க கிட்ட கொடுக்க சொல்லுங்க” என்றார் மங்கலமும் விடாமல்,​

“ஒரு குழந்தை என்ன? பத்து குழந்தை கூட நாங்க பெத்துக்குவோம். ஆனா எங்களோட முதல் குழந்தை சித்து தான். அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம்” என்று குரலை உயர்த்தி கடுமையாக எச்சரித்தார் கார்த்திக்.​

“அவன் பேருல சொத்து இருக்குன்னு தான இப்படி பேசுறீங்க?” என மங்கலம் நக்கலாக சொன்னார்.​

கார்த்திக் திரும்பி காவ்யாவை ஒரு பார்வை பார்த்தான். அவனின் பார்வையை புரிந்தவள், “எங்களுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து நாங்க ஒரு பைசா கூட அந்த காசுல இருந்து எடுக்கல. அது அப்படியே தான் வங்கியில் இருக்கு” என்றாள்.​

“இப்ப கூட எங்களுக்கு அந்த சொத்து, அதுல இருந்து வர வருமானம் எதுவும் வேண்டாம். ஆனா சித்துவுக்கு வேணுமா? வேண்டமான்னு நாளைக்கு சித்து பெரியவனாகி முடிவெடுப்பான்” என்று காவ்யா முடித்துக் கொண்டாள்.​

சொத்தை வைத்து இவர்களை மடக்கலாம் என்று நினைத்த மங்கலத்தின் திட்டம் தோல்வியையே தழுவ சித்துவை பார்த்தார்.​

முதலில் மங்கலத்திடன் வந்தவன் பின்பு அவர்களின் விவாதத்தையும் அனைவரின் சண்டையையும் பார்த்து பயந்து காவ்யாவின் பக்கம் அமர்ந்து கொண்டான்.​

தன் பேரனே தன்னை மிரட்சியுடன் பார்ப்பதைப் பார்த்து மங்கலம் கீழிறக்கமாக உணர்ந்தார்.​

அவரின் நிலையை உணர்ந்த கார்த்திக், “உங்களுக்கு இன்னொரு பையன் இருக்குறதா நினைச்சிக்கோங்க. என்னைய தான் சொல்லுறேன். உங்க மருமகளையும், பேரனையும் நான் நல்லா பார்த்துக்குறேன்” என்றான் தன்மையுடன்.​

அவனின் இந்த செயலை அங்கிருந்த அனைவருமே ஆச்சர்யமுடன் பார்த்தனர்.​

“அடுத்த மாசம் சித்து பிறந்த நாளுக்கு கண்டிப்பா எல்லாரும் நம்ம வீட்டுக்கு வாங்க” என அழைப்பையும் விடுத்துவிட்டே கிளம்பினார்கள்.​

அங்கு யாராலும் கார்த்திக்கை மறுக்கவே முடியவில்லை. அவன் கூறியதற்கு மறுக்கவும் தோன்றவில்லை.​

_________​

"இப்ப இந்த ட்ரிப் கண்டிப்பா போகணுமா கார்த்திக்?"​

“ஆமா” என்றவன் பைகளில் அவர்கள் மூவரின் துணியை அடுக்கிக் கொண்டிருந்தான்.​

அன்று மங்கலத்தை பார்த்து வந்ததில் இருந்தே சித்து கலை இழந்திருந்தான். மேலும் கார்த்திக்கிடமும் சற்று ஒதுக்கம் காட்டினான். எனவே, பெரியவர்களின் சண்டையை நேரில் பார்த்ததால் தான் பயந்திருக்கான் என்று உணர்ந்த கார்த்திக் வெளியே எங்காவது சென்றால் சரியாகிவிடுவான் என்று யோசித்தான்.​

அதற்கு ஏற்றது போல் அவர்களின் அலுவலகத்தில் மூன்று நாட்கள் அனைவரும் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டனர். எனவே, அவனும் காவ்யா மற்றும் சித்துவை அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.​

பூனைக்குட்டியைப் போல் வீட்டை சுற்றிவந்தவன் இப்பொழுது ஓரிடத்தில் இருப்பதைப் பார்க்க அவளுக்கும் சிரமமாக தான் இருந்தது. ஆனால், இதுபோல் சித்துவை அழைத்து செல்லாததால் அவனுக்கு ஒத்துக்கொள்ளுமா? என்றும் தாயாக யோசித்தாள். இறுதியில் மூவரும் கொடைக்கானல் நோக்கி பயணப்பட்டனர்.​

சிவப்பு நிற ஸ்வெட்டர், குல்லா, கைக்கு க்ளோவ்ஸ், ஷூ என அணிந்து அழகிய பொம்மை போல் சித்தார்த் இருந்தான். வெளியிடம் என்பதால் கார்த்திக் மற்றும் காவ்யாவின் கையை பிடித்துக் கொண்டே நடந்தான்.​

சிறிது நேரத்தில் கார்த்திக் எதிர்பார்த்தது போல் சித்து உற்சாகமாக அனைத்தையும் பார்வை இட்டபடி கார்த்திக்கிடம் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தான். போட்டிங் செல்வது, பூங்கா செல்வது என அனைத்திற்கும் சென்றவர்கள் களைத்துப்போய் அறைக்கு திரும்பினர்.​

சாப்பிட்டுவிட்டு சித்துவிற்கு மருந்து கொடுத்து உறங்க வைத்தவள் அன்று எடுத்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அனைத்து படங்களிலும் பூவாய் மலர்ந்து சிரித்த சித்துவை பார்த்தவள், 'இது போல் சித்துவை எங்குமே அழைத்து சென்றதில்லையே!' என்று மனம் குறுகுறுத்தது.​

ரமேஷ் இறந்த பொழுது சித்துவிற்கு இரண்டு வயது தான். அன்றிலிருந்து இவர்கள் இருவரும் எங்கும் சென்றதில்லை. இப்பொழுது கார்த்திக்கின் வற்புறுத்தலால் வந்ததால் சித்துவின் மகிழ்ச்சியை கண்குளிரப் பார்க்க முடிந்தது. ‘தன்னால் தான் சித்து எதுவும் அனுபவிக்காமல் வளர்ந்தானோ?’ என்று நினைத்து வருந்தியவள், “இனி நீ மிஸ் பண்ணது எல்லாமே உனக்கு கிடைக்கும் சித்து கண்ணா!” என அவனின் நெற்றியில் இதழ் பதித்து உறங்க முயன்றாள்.​

அவர்களை கடந்து பால்கனியில் வந்து நின்ற கார்த்திக் பனி பொழியும் வானையே வெறித்தான்.​

அவனுக்குள் என்னென்னவோ உணர்வு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.​

அந்த ஏகாந்த இரவு நேரம், உயிரை ஊடுருவும் குளிர் என அனைத்தும் சேர்ந்து அவனது உணர்ச்சிகள் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தது.​

புது இடம் என்பதால் சித்து மட்டுமின்றி காவ்யாவும் கார்த்திக்கை ஒட்டிக்கொண்டே தான் நாள் முழுக்க சுற்றினாள். அவளால் தூண்டப்பட்ட உணர்வுகள் அவளை தீண்டாமல் அடங்காது அவனுள் பேயாட்டம் போட்டது. கம்பியை இறுக்கிப் பிடித்த கார்த்திக் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முயன்றான்.​

அந்நேரம், “இங்க என்ன பண்ணுறீங்க? குளிருது பாருங்க.. உள்ள வாங்க” என காவ்யா கார்த்திக்கை அழைத்தாள்.​

திரும்பி அவளை பார்த்தவனின் கண்கள் இரத்தமென சிவந்திருந்தது.​

“என்னாச்சி உங்களுக்கு? காய்ச்சல் இருக்கா?” என அவனின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.​

அவளின் கையை எடுத்துவிட்டு உள்ளே செல்ல முயன்றவனிடம், “என்னாச்சி கார்த்திக்? ஏதாவது வேணுமா?” என அவனின் கைபிடித்து கேட்டாள்.​

"எனக்கு நீ தான் வேணும் காவ்யா! உன்னால முடியுமா..?" என கத்திய பின்னே சுயநிலைக்கு வந்தவன்,​

தன் தலையைக் கோதிக் கொண்டே, "சா.. சாரி காவ்யா. எதோ உணர்ச்சி வேகத்துல பேசிட்டேன்.." என மன்னிப்புக் கேட்டான். பின் வேகமாக உள்ளே வந்தவன் சித்துவிற்கு அந்த பக்கம் சென்று படுத்துவிட்டான்.​

அவன் சொன்னதைக் கேட்டவள், ‘அவர் சொன்னது சரியா தான் என்னோட காதுல விழுந்ததா?’ என்று குழம்பிய நிலையிலே வந்து சித்துவின் மறுபுறம் படுத்துக் கொண்டாள்.​

மறுநாள் விடிந்ததும், “இப்ப எங்க போறோம் கார்த்திப்பா?” என ஆவலாக கேட்ட சித்துவிடம்,​

“முதல்ல சாப்பிடணும். அடுத்து கார்டன் போகலாம்” என்றான்.​

காவ்யா கார்த்திக்கின் முகத்தையே ‘தன்னிடம் எதாவது கூறுவானா?’ என பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் கார்த்திக் அவளை கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.​

அவளாக சென்று அவனிடம் பேசவும் தயங்கினாள். எனவே தேவைக்கு மட்டும் கார்த்திக்கிடம் காவ்யா பேசிக்கொண்டாள்.​

அன்றும் முழுவதும் வெளியே சுற்றியவர்கள், ஏற்கனவே பேசியதை போல் அலுவலகத்தில் இருந்து வந்தவர்களிடம் சொல்லிவிட்டு கார்த்திக்கின் மதுரை வீட்டிற்கு பயணப்பட்டனர். அங்கு சென்று இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சென்னை திரும்புவதாக திட்டம்.​

கார்த்திக் இப்படி மனைவி, குழந்தை என குடும்பமாக இருக்கமாட்டானா? என கவலையாக இருந்த விசாலாட்சிக்கு இவர்கள் மூவரும் குடும்பமாக வந்ததை பார்த்து கண்கள் கலங்கிவிட்டது.​

அங்கிருந்த இரண்டு நாட்களும் கார்த்திக் மற்றும் காவ்யா சரியாக பேசிக் கொள்ளாததை வைத்தே அவர்களுள் ஏதோ பிணக்கு என அறிந்து கொண்டார் விசாலாட்சி.​

கிளம்பும் அன்று, “உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு எனக்கு தெரியுது காவ்யா. சண்டை போடாம வாழ்க்கை முழுவதும் வாழவே முடியாது. கார்த்திக் கோபத்துல முன்ன பின்ன ஏதாவது சொன்னா? பொறுத்துப்போனு சொல்லமாட்டேன். ஆனா சண்டையை வளர்க்காத” என்று மட்டும் கூறினார்.​

வீட்டிற்கு வந்து அவரவரின் வாழ்க்கைக்குத் திரும்பினர்.​

சித்துவை புது பள்ளியில் சேர்த்துவிட்டனர். தினமும் அவர்களின் தெருவிற்கு வரும் பள்ளி வாகனத்தில் சித்து பள்ளிக்கூடம் செல்ல ஏற்பாடு செய்தார்கள்.​

கார்த்திக் மற்றும் காவ்யா ஓரளவு சகஜமாகப் பேசிக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.​

அன்று கொடைக்கானலில் நடந்ததை பற்றி இருவருமே பேசிக்கொள்ள முனைய வில்லை.​

“எங்கே அதை பேசி.. இருக்கும் மகிழ்ச்சியும் போய் விடுமோ?” என்ற பயம் இருவரிடமும் இருந்தது.​

அன்று சித்துவிற்கு ஐந்தாம் பிறந்தநாள்! காலையிலே வாழ்த்திய கார்த்திக் அவனுக்கு ஒரு சைக்கிளை பரிசாக கொடுத்தான்.​

“இப்பவே ஓட்டலாம்” என்று அடம்பிடித்தவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் அலுவலகம் கிளம்பினர்.​

ஊரிலிருந்து விசாலாட்சியும், சுந்தரமும் வந்திருந்தனர். மாலையில் சித்துவின் பிறந்தநாளுக்காக கௌதம் அவனின் குடும்பத்துடன் வந்திருந்தான். மங்கலம், ராஜேஷ், பிரியா, அவளின் குழந்தைகள் என அனைவரும் வந்திருந்தனர்.​

காவ்யா கைபிடிக்க கேக்கை வெட்டிய சித்து கார்த்திக்கிற்கு தான் முதலில் கொடுக்க முனைந்தான். காவ்யா மட்டுமில்லாமல் அனைவருமே அதை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.​

சித்துவின் கையை லாவகமாக பற்றிய கார்த்திக், “எப்பவும் முதல்ல அம்மாக்கு தான் கொடுக்கணும்” என்று கூறிவிட்டு சித்துவின் கையைப் பிடித்துக்கொண்டே காவ்யாவின் வாயில் கேக்கை ஊட்டினான்.​

கண்கள் கலங்க அதை வாங்கியவளை பார்த்தவன் கண்ணை மூடி திறந்து ஆறுதல் அளித்தான்.​

பின் அனைவரும் பரிசினை கொடுத்துவிட்டு, சித்துவை வாழ்த்திவிட்டுக் கிளம்பினர்.​

 
Top