எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 8

Privi

Moderator

இப்படியே ஒரு மாதம் கழிந்திருக்கும். லில்லி அந்த இடத்தோடு கொஞ்சம் கொஞ்சமாய் பொருந்தி போக முயற்சி செய்து கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் மேக்னாவும் விரும்பியே தமிழ் வகுப்புக்கு செல்கிறாள்.​

அதற்கு காரணம் லில்லி கற்பிக்கும் வல்லமைதான். மாணவர்களுக்கு புரியும் படியும் அதே நேரம் வகுப்பு ஆர்வமாக இருக்க ஏதாவது புத்தி கூர்மைக்கான தமிழ் விளையாட்டு ஒன்றோடு வகுப்பை நடத்துவாள்.​

முதல் இரண்டு வாரத்தில் உயிர் எழுத்துக்களான அ ஆ இ ஈயையும் அதேபோல் உயிர் மெய் எழுத்துக்களான க கா கி கீ என்பனவற்றையும், மெய் எழுத்துக்களான ப், ட், த் என்ற வார்த்தைகளையும் கற்று கொடுத்தாள்.​

அவர்களுக்கு அ ஆ எழுத கற்று கொடுத்தாள். எழுத்து பயிற்சி கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாள். அதன் பின் ஒரு சொல் கற்று கொடுத்தாள். அம்மா, ஆமை, இலை, ஈட்டி என ஒள வரை முதலில் கற்று கொடுத்து பின் அதே போல் உயிர் மெய் எழுத்துக்களையும் கற்று கொடுத்தாள்.​

மாணவர்களும் ஆர்வமாகவே தமிழ் மொழியை கற்றனர். இங்கு மேக்னாவிற்கும் வாழ்க்கை இயல்பாக சென்றது. தமிழில் அவள் தினம் தினம் கற்றுக்கொள்வதை தந்தையிடம் பகிர்ந்து கொள்வாள்.​

ராயினும் அவன் அன்றாட வேலைகளை எப்போதும் போல் செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் ஒருநாள் ராகவியின் பெற்றோர் ராகவியை மேல்படிப்பிற்காக நியூ யோர்க் சிட்டிக்கு அனுப்ப போகிறார்கள் என்று ராகவிக்கு தெரிய வந்தது.​

அவளுக்கு ராயினையும் மேக்னாவையும் பிரிய மனதே இல்லை. இனிமேலும் தாமதிக்காமல் தன் மனதில் உள்ள காதலை ராயினிடம் கூற முடிவெடுத்தாள் ராகவி.​

காதலை எப்படி கூற வேண்டும் என கண்ணாடி முன் நின்று ஒத்திகை பாத்து விட்டே அன்றைய நடன வகுப்புக்கு புறப்பட்டாள் ராகவி. நடன வகுப்பில் அவள் கண்கள் ராயினை விட்டு வேறு எங்கும் நகரவில்லை. ராயின் இதனை அறிந்தாலும் அவள் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.​

இப்படியே அவர்களின் பொழுது கரைந்து வகுப்பும் முடிந்து விட்டது. ராயின் ஓய்வெடுக்க சிறிது நேரம் அங்கே இருக்கும் ஓர் இருக்கையில் அமர்ந்தான். அப்போது அவன் முன் சென்று நின்றாள் ராகவி.​

"சார் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்." என அனுமதி கோரி நின்றாள்.​

ராயின் மனதிற்கு எதுவோ சரியாக படவில்லை. இருப்பினும் "என்ன பேச வேண்டும். சரி வா" என வகுப்பிற்கு வெளியே கூட்டி சென்றான்.​

"இப்போ சொல் என்ன பேச வேண்டும்?" என கேட்டான்.​

அதற்கு ராகவி "சார், என கூறி கொஞ்சம் வெக்கப்பட்டு நின்றாள். பின் சற்றே தைரியத்தை வரவழைத்து "எ.. எனக்கு நியூ யோர்க் சிடியில் மேல் படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது. அம்மா அப்பா என்னை அங்கு அனுப்ப முடிவெடுத்து உள்ளனர்." என கூறினாள்.​

அதற்கு ராயினோ "நல்லது அங்கு சென்று படித்தாள் உன் எதிர்காலம் நல்லபடியாக அமையும், சென்று வா." என கூறினான்.​

அதற்கு அவள் மறுப்பாக தலை அசைத்து, "இல்லை என்னால் உ.. உங்களையும் மே.. மே.. மேக்னாவையும் விட்டு செல்ல முடியாது. நா.. நா.. நான் உங்.. உங்.. களை காத... என அவள் திக்கி கூறிக்கொண்டிருக்கும் போதே நிறுத்து எனும் விதமாக கை அசைவில் அவள் பேச்சை நிறுத்தியிருந்தான் ராயின்.​

"நீ சொல்ல வருவது எனக்கு புரிகிறது ராகவி ஆனால் என்னால் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பேச்சை இத்துடன் நிறுத்தி விட்டு நீ உன் படிப்பை சென்று பார்." என கூறினான்.​

அதற்கு அவளோ "ஏன் முடியாது?" என முட்டிக்கொண்டு வந்த அழுகையுடன் கேட்டிருந்தாள்.​

அதற்கு ராயின் "புரிந்துதான் பேசுறியா நீ. நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னை போய் காதலிக்கிறேன் என உளறிக்கொண்டிருக்கிறாய். இதெல்லாம் சரி வராது ராகவி நீ சென்று உன் படிப்பையும் உன் எதிர்காலத்தையும் பார்." என கூறினான்.​

அதற்கு ராகவி "தெரியும் இது எல்லாம் தெரிந்து தானே உங்கை விரும்புகிறேன். அதான் உங்கள் மனைவி இல்லையே.. இன்னும் என்ன பிரச்சனை.. எனக்கு நீங்கள் வேண்டும். ப்ளீஸ் என்னை வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள்." என அழுந்து கொண்டே கூறினாள்.​

இவனுக்கோ அய்யோடா என்றிருந்தது. "சொன்னால் புரிந்து கொள் ராகவி என்னால் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்."என உறுதியாக கூறினான் ராயின்.​

ராகவி “அதான் ஏன் என்று கேட்கிறேன். உங்களுக்கு தெரியுமா மேக்னா தாய் பாசத்திற்கு எப்படி ஏங்குகிறாள் என்று. என்னால் அவளை ஒரு தாயுக்கு நிகராக பார்த்துக்கொள்ள முடியும்.” என அவள் கூறி முடிப்பதற்குள், ஆனால் நீ அவள் தாய் இல்லையே…” என இப்போது சற்று கோவமாகவே பதில் அளித்திருந்தான் ராயின்.​

ராகவி "ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம்? போனவர்களை பற்றியே நினைத்திருந்தால் மீதி வாழ்வை எப்படி வாழ்வது?" என கேட்டிருந்தாள் ராகவி.​

அதற்கு ராயினோ "உனக்கு இன்னும் நான் எப்படி சொல்லி புரிய வைப்பது என்றே தெரியவில்லை ராகவி. எனக்கு மேக்னா படும் துயரம் புரிகிறது தான். ஆனால் என்னால் என் மனைவி என்னும் அங்கீகாரத்தை அவளை தவிர வேறு யாருக்கும் குடுக்க முடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ" என இப்போது மனா வேதனையில் கூறினான்.​

அவன் கண் முன்னே அவன் மனைவியின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சம் வந்து அவனை இம்சித்து கொண்டிருந்தது. அவன் அவனுக்குள் படும் வேதனை புரியாமல் தன் காதல் கை கூடாத கோபத்திலும்,​

அப்படி என்ன உயிருடன் இல்லாத மனைவியின் மீது அப்படி ஒரு காதல் என்ற ஆற்றாமையில் "அவள் என்ன அப்படி ஒரு ரதியா... இவ்வளவும் கூறியும் அவள்தான் முக்கியம் என்று பேசுறீங்க." என கேட்டு விட்டாள் ராகவி.​

அவளின் கேள்வியில் கோபமடைந்த ராயின் "போதும் நிறுத்து இன்னும் ஒரு வார்த்தை என் கண்ணம்மாவை பற்றி நீ பேச கூடாது. அவளை பற்றி உனக்கு என்ன தெரியும் என்று பேச வந்தாய்.​

என்ன கேட்ட அவள் ரதியா என்றுதானே. ஆம் அவள் ரதிதான் எனக்கு அவள் உலக அழகிதான். என் மலர், என் கண்ணம்மா.” என கூறும் போதே அவன் இதழ்கள் விரிந்தது. இன்று வரை மறக்க நினைக்கும் அவன் வாழ்வின் கருப்பு பக்கத்தை பல வருடங்கள் கடந்து இன்று ராகவியிடம் கூற ஆரம்பித்தான் ராயின்.​

இனி ராயின், (மன்னிக்கவும் அது லண்டனில் அவனுக்கு வைத்த பெயர். அவன் உண்மையான பெயர் ரணதீரன்.) இனி ரணதீரன் மற்றும் மலர் கதையை அவர்கள் ஊரிலிருந்து காண்போம். (மக்களே, ஊர் பெயர் கல்லூரி பெயர், எல்லாமே உண்மைதான் ஆனால் கதை மட்டும் கற்பனையே...)

ஊர் பெயரிலேயே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே ஊர் திருநெல்வேலி. "திரு" (மதிப்பிற்குரிய), "நெல்" (பயிர்), "வேலி" (பாதுகாப்பு) எனப் பொருள்படும், அதாவது நெல் வேலி (பாதுகாக்கப்பட்ட நெல் வயல்) என்று அழைக்கப்படுகிறது.​

திருநெல்வேலிகாரர்கள் நெல்லை அப்பர் உத்தரவின்றி எதுவும் செய்ய மாட்டார்கள் அதே போல் அவர்கள் வீட்டு விஷேஷத்திற்கு திருநெல்வேலி அல்வா இல்லாமல் விசேஷங்கள் கொண்டாட மாட்டார்கள்...​

அதே போல் திருநெல்வேலி வளர்ந்து வரும் மாவட்டம் ஆகும். அங்கு வள்ளியூர் என ஒரு கிராமம் இருக்கிறது. பெயருக்குத்தான் அது கிராமம் ஆனால் அதுவும் ஒரு மினி சிட்டி என்றுதான் சொல்ல வேண்டும்.​

என்னதான் வளர்ந்து வரும் ஊர் என்றாலும் அங்கு உள்ளவர்கள் இன்னும் பழமை வாதிகள்தான். இன்னும் ஜாதியை கட்டி கொண்டு அழுகிறார்கள். தன் பிள்ளைகளாகவே இருந்தாலும் வேற்று ஜாதியில் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் அவர்களை தன் கைகளாலேயே துடிக்க துடிக்க கொன்றுவிட்டுதான் மறுவேளையே பார்ப்பார்கள்.​

வள்ளியூரில் பெரிய தலை கட்டு என்றால் அது அந்த ஊர் மிராசுதாரர் மாணிக்கவேல் தான். அவர் சொன்னால் அதுதான் அந்த ஊருக்கு வேதவாக்கு. ஜாதியில் ஊறிப்போனவர்.​

அந்த ஊரில் யார் கலப்பு திருமணம் செய்தாலும் அவரின் தலைமையில்தான் அவர்களின் அடக்கம் நடக்கும். அவருடைய துணைவியார் மரகதம். கணவனுக்கு ஏற்ற மனைவி. ஜாதி வெறி, பண வெறி இவங்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.​

தனக்கு கீழ உள்ளவர்கள் எல்லாம் மேலே வரவே கூடாது என்று நினைக்கிற ஒரு நல் உள்ளம் கொண்டவர்கள். இந்த அருமையான தம்பதியருக்கு ஒரே மகன். எது எப்படியோ மரகதம் அம்மாவிற்கு மகன் என்றால் அப்படி ஒரு அலாதி பிரியம் .​

மாணிக்கவேலே அவனை மரகதம் முன்பு ஏதும் கூற மாட்டார். மகன் என்றால் போதும் மரகதம் பாகாய் உருகி விடுவார். ஆனால் இப்படி பட்ட பெற்றோருக்கு நேர் எதிரான குணம் உள்ளவன் தான் நம் கதையின் நாயகன் ரணதீரன்.​

எல்லா மக்களையும் சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என நினைப்பவன். அவன் அவனின் குருவாக நினைப்பது நம் பாரதியாரைத்தான். அவரின் சில கவிதைகளை வேதவாக்காக கொண்டு செயல்படுபவன். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்னும் கூற்றை வேதமாய் நினைப்பவன்.​

இனி பொறுத்திருந்து இவர்கள் வாழ்க்கை கதையும் ரணதீரன் ராயினாக மாறிய கதையையும் பார்ப்போம்.​

 
Top