எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

6 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 6

இரண்டு நாட்கள் கழிய, மனோ வேலைக்கு கிளம்பிவிட்டாள், கிருஷ்ணா தலையில் போடப்பட்டிருந்த கட்டு பிரிக்க இன்னும் மூன்று, நான்கு நாட்கள் ஆகும் என்பதால் அவனை விட்டுவிட்டுக் கண்ணனை மட்டும் கிளப்பிக்கொண்டு கிளம்பினாள்.

கிருஷ்ணாவிற்கு அதில் அவ்வளவு சந்தோஷம், கண்ணன் பள்ளிக்குக் கிளம்ப இவன் வீட்டிலிருக்கப் போகிறானே அதில் அவனுக்கு கால் தரையில் நிற்கமாட்டேன் என்றது. வரவேற்பரையிலிருந்த டிவி முன் பாய் விரித்து, அதன்மேல் போர்வை வேறு விரித்து அவனுக்கு இதமான தலையணை வைத்துப் படுக்க வைக்கப்பட்டிருக்க, கையையும் காலயும் ஆட்டிக் கண்ணனை மனோ அறியாமல் வாயைப் பிதுக்கிக் காண்பிப்பதும், விளையாட்டுப் பொருட்களை கைகாண்பித்து ரகசியமாக, 'நான் விளையாடுவேனே' என நக்கலாக சிரிப்பதுமாக இருந்தான்.

"ம்மா கிஷ்ணா வவணும்" என கண்ணன் உதட்டைப் பிதுக்க,

"அவன் இப்ப தாத்தா கூட ஹாஸ்பிடல் போவான் நீயும் போறியா?" என்றாள் மனோ.

"எதுக்கு ஹாஸ்பிடல்? நா போ மாட்டேன். எனக்கு காய்ச்சல் கூட இல்ல. தாத்தா சொல்லு நாம போ வேணான்னு சொல்லு" என வேகமாக எழுந்து சண்டைக்கு வந்தான் கிருஷ்ணன்.

"தலைலப் போட்டிருக்கக் கட்ட எடுத்துட்டு மருந்து வச்சு மறுபடியும் கட்டுவாங்க. அப்பதான் சீக்கிரம் ஆரும், அழிச்சாட்டியம் பண்ணாம போய்ட்டு வரணும், நேத்து பண்ண மாதிரி தான் பண்ணுவாங்க, வலிக்காது"

"ம்மா வேணாம்மா. வலிக்கும். இது ஆறிடுச்சு பாரு" என அவன் அழத் தயாராக.

"ஏமுத்தா இத இப்பவே சொல்லி அவன அழ விடணுமா? பெரிய சாரு கொஞ்சியே கூட்டிட்டுப் போய்ட்டு வந்துருப்பாருல்ல?" என்ற மீனம்மா, "நீ அழாத கண்ணு. மறுபடியும் காய்ச்சல் வந்துறபோவுது" என கிருஷ்ணனின் கண்ணீரைத் துடைத்து விட்டார்.

"அம்மாக்கு எம்மேல பாசமே இல்ல மீனம்மா" என வாகாக சொல்லி அழுதான் கிருஷ்ணன்.

"அப்ப உன் அப்பாகிட்ட போவமா கண்ணு? நல்லா ஜாலியா இருக்கலாம்? நிரம்ப விழிய பாசமா பாத்துகிடுவாரு" என்றார் மீனம்மா.

"அப்பாகிட்டயா?" என நிமிர்ந்து அவரிடமே கேட்டான்.

"ம்ம்"

"மீனம்மா!" மனோ அதட்டலிட,

"நீ கிளம்புத்தா நா பாத்துகிடுவேன்" என அவளுக்கு கண்ணைக் காட்டினார்.

"அவன் அமெரிக்கா போகணும்னு அடுத்து ஆரம்பிச்சாம்னு வச்சுக்கோ, நீதான் கொண்டு விட்டுட்டு வரணும் சொல்லிட்டேன்" என்றவள் ஆண்டாளிடம், "ம்மா மருந்து கட்டிட்டு வந்து சேட்டை பண்ணாம இருந்தா ஓகே. எழுந்து ஓட ஆட செய்ய இருந்தாம்னா, அப்பா கூட ஸ்கூலுக்கு அனுப்பி வச்சிடு நா பாத்துகிடுறேன்" என்றுவிட்டு தான் கிளம்பினாள் மனோ.

"அப்பா தான் அமெரிக்கால இருக்காங்களே மீனம்மா? எப்படி போறது?" என்ற அவன் கேள்வி காதில் விழவே வாசல் தாண்டினாள் மனோ.

"வந்து கூட்டிட்டுப் போறீங்களா என்னனு நீ அதட்டி கூப்பிட்டா வராமலா போயிடுவாரு?"

"வேணாம். அங்க போய் நா என்ன செய்ய? நா போமாட்டேன். என் ப்ரண்ட்ஸ்லா இங்க தான் இருக்காங்க. அப்றம் ஞான தாத்தாவும் அங்க வரமாத்தாங்க" என எழுந்து, அவனது கார் வகைகளில் ஒன்றை எடுத்து ஆராய அமர்ந்து விட்டான்.

"சரித்தான், நீ இங்கனயே நல்லா பழகிட்ட? நாளைக்கு அவர் வந்து கூப்பிட்டாலும் போ மாட்ட போல தெரியுதே!" என வாய்விட்டே சலித்தவர், "ஏத்தா ஆண்டாளம்மா, முதல்ல தாத்தாவையும் பேரனயும் பிரிச்சு வை அப்பத்தான் மகளையும் மருமகனயும் சேர்த்து வைக்க முடியும்" என்றார் சத்தமாக.

"எனக்கும் அப்படித்தான் தோணுது மீனம்மா. இங்க எவ்வளவு செல்லமா வளருதான் பின்ன எப்படி அப்பா, அப்பாவோட அம்மா அப்பாவலாம் தேடும் அவனுக்கு?" என காலை உணவோடு வந்து அமர்ந்தாள் மல்லிகா. அந்த நேரங்கள் மட்டுமே அறையிலிருந்து அவள் தரிசனம் மற்றவர்கள் பார்வைக்குக் கிடைக்கும்.

"அதுக்காக பிள்ளைகள ஏங்கவும் விட முடியாதுல்லத்தா? நா சும்மா விளையாட்டா சொன்னேன்" என மீனம்மா சொல்ல,

"பட் நா உண்மையா தான் சொல்றேன். ஓவர் செல்லம் ஓவர் சேட்டையாகிட்டு வருது" என சாதரணமாகவே சொல்ல, ஆண்டாள் முறைக்க, மீனம்மா மெல்ல கிருஷ்ணனை எழுப்பி வெளி வாசல் வந்துவிட்டார்.

சாதரணமாக இருந்திருந்தால் அன்று கிருஷ்ணா உடைத்த குழந்தை பொம்மைக்கு தனியாக ஒரு நமைச்சல், மல்லிகாவிடமிருந்து மனோவிற்கு கிடைத்திருக்கும். ஆனால் அதற்கான சூழல் அமையாமல் போய்விட, அதே போன்ற குழந்தை பொம்மை ஒன்றை அதே இடத்தில் இருந்ததுபோல் இருத்தியும்விட்டாள் மனோ, அதற்குமேல் எங்கிருந்து முகத்தைக் காட்ட என மல்லிகாவும் அமைதியாகிவிட்டாள்.

இங்கு மனோ, பள்ளிக்கு வந்ததும், கண்ணனை அவன் வகுப்பில் விட்டுட்டு அலுவலக அறைக்கு வேகமாக நடந்துவர, வரும் வழியில் தென்பட்டவர்கள் எல்லாரும் கிருஷ்ணனை விசாரித்து விட்டனர். நல்லதிற்கோ, கெட்டதிற்கோ இவளால் காரியம் ஆகும் என்றோ, இல்லாது நிஜமான அக்கறையிலோ விசாரித்து விட்டனர் அனைவரும்.

அவளிடத்தில் அமர்ந்து அவள் வராத கடந்த மூன்று நாட்கள் வேலையைப் பார்க்கத் துவங்கிய நேரம், சண்முகசுந்தரம் அலுவலக அறைக்குள் நுழைந்தார், "மனோ!" என அழைத்தவாறே அவர் அவரின் அறைக்குள் நுழைய, "வரேன் அங்கிள்!" என எழுந்து வெளியே வந்தாள். வீட்டில் மாமா என்றழைத்தாலும், பள்ளியில் அங்கிள் என்றே அழைக்க பழகியிருந்தாள்.

அவளை வேகமாக வந்து மறித்த தமயந்தி, "சியாமா பத்தி எதுவும் பேச கூடாது நீ!" என மிரட்டலாக இல்லாத உத்தரவு போன்ற பாவனையில் கூறிவிட்டு மீண்டும் அவரிடத்திற்கு சென்றமர்ந்தார். அவரை பெருமூச்சோடு பார்த்துக் கடந்து வந்தாள்.

"கிருஷ்ணா ஓகேவா மனோ?" என்றவர், அவர் மேசையிலிருந்த கோப்பைகளை ஆராய்ந்தார்.

"ஆமா அங்கிள் இப்ப வலி இல்ல அதனால காய்ச்சலும் இல்ல. ஆனாலும் இந்த வாரம் ஃபுல் லீவ் ஃபார்ம் குடுத்துடுறேன், கட்டுப் பிரிக்குற வர வீட்லயே இருக்கட்டும்"

"ஓ! சரி மனோ அப்ப மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்டும் ஆட் பண்ணணும் நீ"

"டாக்டர்ட்ட வாங்கிடுவேன் அங்கிள். பேசிட்டேன்"

"சரிமா" என கேட்டுக்கொண்டவர், "அப்றம் கம்ப்யூட்டர் லேப்கு எக்ஸ்ட்ரா மூணு கம்ப்யூட்டர் தேவைன்னு சொன்னியே? ஆர்டர் குடுத்தாச்சா? ஃபண்ட் இருந்துச்சா?" என்றவர் மேசை மேல் இருந்த அதன் பில் நகலை தான் கையில் வைத்திருந்தார்.

"மேனேஜ் ஆகிடுச்சு அங்கிள், வெல்ஃபேர் ட்ரஸ்ட்ல இருந்த அமௌன்ட் எடுத்து இதுல போட்டுட்டேன்"

"அதான் கேட்க நினைச்சேன். ஆடிட் அப்ப பேப்பர்ஸ் கரெக்ட் பண்ணிக்கணும்"

"எடுத்து ஃபைல் பண்ணிட்டேன் அங்கிள்"

"ஓகே மனோ. நீ போ, மத்தத நா பார்த்துக்குறேன்" என மற்ற தாள்களையும் பார்க்கத் துவங்க,

"சயின்ஸ் டீச்சர் ந்யூவா எடுக்கணும் அங்கிள். நெக்ஸ்ட் மந்த் பழைய ஸ்டாஃப் ரிலீவ் ஆகுறாங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இருந்தா கூட நமக்கு இன்னும் ஈசி தான்" என்றாள்.

"தெரிஞ்சவங்கலாம் வேலை செய்யன்னு வரமாட்டேங்குறாங்க மனோ, வேலை வேணும்னு தேடுறவங்கள எடுப்போம் அதான் நல்லது" என்றவர் ஞாபகம் வந்தவராக, "தமயந்தி!" என சத்தமாக அழைக்க, வேகமாக வந்து நின்றார் அவர்.

"உன் மகள எங்க? இன்னைக்காவது வந்துருக்காளா இல்லையா?" என கேட்க,

"வந்துருக்காண்ணா. அன்னைக்கு ஒரு சின்ன வேலை அத முடிச்சுட்டு வர இருந்தா, அதுக்குள்ள தான் மனோ பிள்ளைக்கு அப்படி ஆகிடுச்சு. இப்ப கிருஷ்ணா ஓகேவா மனோ?" என தமயந்தி திரும்பி மனோவிடம் கேட்டார்.

"ம்ம்" அவள் தலையை அசைக்க,

"பெர்மிசன் போடாம என்ன ஆஃப் உங்க இஷ்டத்துக்கு?" என்றார் சண்முகசுந்தரம்.

"ஒரு அவசரம் அதான்" என்ற தமயந்தி, "சொல்லு மனோ? சியாமா இதுக்கு முன்ன இப்படி நடந்துட்டது இல்லதான? உன் பிள்ளைக்கு அடிபட்ட அன்னைக்குன்னு பார்த்து அவளால வரமுடியாம போயிடுச்சு, அதுக்காக ஒன்னும் சொல்லாம கூட நிக்கிற?" என அதிருப்தி போல பேச,

"அவனுக்குன்னு இல்ல, அந்நேரம் யாருக்கு அடிபட்டிருந்தாலும் அதோட பொறுப்பு சியாமா சிஸ்டரோடது தான் மேடம். மெமோ உண்டு வந்து வாங்கிக்க சொல்லுங்க" என நேராகவே கூறினாள் மனோ.

"ஏதோ ஒரு தடவதானே, பாருங்கண்ணா உங்க முன்னவே எப்படி பேசுறான்னு" என இப்போது சண்முகசுந்தரத்திடம் பாவமாக திரும்பினார்.

"ரூல்ஸ்னா எல்லாரும் ஃபாலோ பண்றதுக்கு போடறது தான் தமயந்தி"

"இல்லண்ணா?"

"நா போட்டுமா அங்கிள்?" என்றாள் மனோ.

"சரிமா நீ வேலைய பாரு" என்றதும் அவள் சென்றுவிட,

"அண்ணா!" என்றார் அங்கு நின்ற தமயந்தி தயக்கமாக.

"இது ஸ்கூல் ரூல்ஸ் தமயந்தி, எல்லாருக்கும் இதுதான்னு தெரியாதா உனக்கு? இனி இப்படி அசால்ட்டா இருக்காம இருக்க பாரு" என்றவரும் அடுத்து பேச ஃபோனை கையிலெடுத்துவிட, தமயந்தி வெளிய வந்துவிட்டார்.

மெமோ தயாரித்து, சண்முகசுந்திரம் மேசையில் வைத்துவிட்டு, மகிமா மூலம், சியாமாவை வரவழைத்து, சில அறிவுரைகளோடு மெமோ அவள் கையில் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்து அன்றைய பொழுது சியாமாவிற்கு அழுகையில் தான் கரைந்தது.

மதிய உணவு நேரம், சண்முக சுந்தரம் கிளம்பிச் சென்றிருந்தார். அலுவலக அறையில் மஹிமா, விஜி இருவரும் உணவை முடித்து வந்தவர்கள், சியாமா முகத்தைத் தூக்கி வைத்து அமர்ந்திருக்க தமயந்தி சமாதானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்து விட்டனர்.

"அதையே நினைக்காதீங்க சியாமா சிஸ்டர். சாப்பிடுங்க, மேடமு சாப்பிடாம இருக்காங்க பாருங்க" என மஹிமா சொல்ல,

"பர்ஸ்ட் டைம் தானே ஒரு சின்ன எக்ஸ்க்யூஸ்ல விட்ருக்கலாம்ல? இது இனி இங்க நா வேலை வேணாம்னு வெளில வேலைக்கு போனாலும் மெமோ வாங்கினது பேராகிடும், வெளிநாடு போக ட்ரை பண்ணிட்ருக்காரு என் ஹஸ்பண்ட் அங்க வர இது ப்ளாக் மார்க்கா விழும் தானே? என் புருஷன சமாளிக்க முடியாது இப்ப என்னால! அன்னைக்கு அவங்க பையன் விழுந்ததுனால தான் இப்படி பண்ணிட்டாங்க" என வெகுவாக அழுது கரைந்தாள் சியாமா.

"அவ மாமியார் எப்படி தெரியுமா? சரியான குணங்கெட்டது, அது வாயில விழ வேணாம்னு தான், அவங்க வீட்டு பங்க்ஷன அட்டென்ட் பண்ணிட்டு வந்திடுன்னு சொன்னேன். இப்ப இப்படி ஆனதாலயே, இவள அந்தம்மா எவ்வளவு பேசுமோ தெரியல, நானும் இருக்கனால தான் வேலைக்கே விடுறாங்க" என எரிச்சல் பட்டார் தமயந்தி.

"வேலைனா அப்டி தானே மேடம். அவங்கட்ட நீங்க எடுத்து சொல்லுங்களேன்" என்றாள் விஜி.

"வயசு பிள்ளைகல்ல அதான் ஈசியா பேசுதீங்க. அந்த மனோக்கு மாமியார், புருஷன் வீடுன்னு எதாவது போக வர இருந்தா, இதெல்லாம் புரியும், அம்மா வீடு போதும்னு இருக்கா அதான் புரியல. உங்களுக்குலாம் என் பொண்ணுக்கு அமஞ்ச மாதிரி மாமியார் அமைஞ்சிருந்தா தெரியும் சங்கதி" என எரிந்துவிழ,

"என் மாமியாரும் திட்டுவாங்க தான். அதுக்காக இப்படி உட்கார்ந்து அழுதா என்ன கிடைக்கும்" என்றாள் மஹிமா.

"உங்களுக்குலாம் எங்க தலவலி புரியாதும்மா, சும்மா பேசணும்னு எதாவது பேசாதீங்க"

"தப்பு உங்க பொண்ணு பண்ணாங்க தானே அப்ப மெமோ வாங்கத்தானே வேணும். லீவே எடுக்கக் கூடாதுன்னு சொல்லலையே? சப்ஸ்ட்டியுட் வச்சுட்டு இவங்க எத்தன நாள் வேணா லீவெடுத்துருக்கலாம்" மஹிமா பேச,

"எல்லாம் அந்த மனோவால. அவளுக்கு இந்த பள்ளிக்கூடத்து மேல ஆசை. அவ புருஷனும் வேணாம்னு சொல்லிட்டான் போல. அதான் ரெண்டு பிள்ளைகள வளர்க்கணும்னு இந்த மனுஷன அங்கிள் அங்கிள்னு சுத்தி வாரா. ச்சை என்ன பழக்கவழக்கமோ" என ஆத்திரத்தில் பேச,

"மேடம்!" என மஹிமா, விஜி இருவருமே அதிர்ந்து விளிக்க,

"ஏய்!" என்றிருந்தாள் மனோ. அவள் எப்போது வந்தாள் என்றே நால்வரும் கவனித்திருக்கவில்லை. கண்ணனுக்கு உணவை ஊட்டி விட்டு தனது உணவை எடுக்க வந்தவள் கேட்டது, தமயந்தி பேசியதை தான்.

"ஏன்மா!" என சங்கடமாக அழைத்த சியாமா, "சாரி மனோ மேடம் அம்மா ஏதோ கோவத்துல" என பதறி வேகமாக சமாளிக்க.

"கோவத்துல? ஹும் கோவத்துல அவங்க மேல என்னத்த வேணா ஊத்தி நாறிக்க சொல்லுங்க, அடுத்தவங்க மேல எடுத்து ஊத்தாதீங்க. அசிங்கமாகிடும்" என விரைத்து நின்றாள். உள்ளுக்குள் ஒரு சில நொடிகள் படபடத்து தான் போனது. இப்படி ஒரு பேச்சு வரும் என கனவிலும் அவள் நினைத்ததில்லை. அழுகை முட்டி நின்றாலும் ஆத்திரத்தில் அதை அடக்கி நின்றாள்.

"ஏதோ இல்லாதத சொன்ன மாதிரி தான்" முனங்கவே செய்தார் தமயந்தி.

"வார்த்தை ரொம்ப முக்கியம் மேடம். என்னைய பத்தி இவ்ளோ நல்ல எண்ணத்தோட தான் இத்தன நாளா ஆர்டர் போடுற மாதிரிலாம் நடந்துட்டீங்களா?" என அருகே வர,

"நா அவருக்கு சித்தி மக, என்கிட்ட எதையும் சொல்லாம என்னைய நம்பாம உன்ட்ட எல்லாத்தையும் சொல்றாரு, ஒரு வருஷத்துல மொத்த ஸ்கூலும் நீ தான் அடுத்த ஹச்.எம் னு சொல்லுது, அப்ப அதுக்கு காரணம் என்ன? குடும்பம் இல்லாத மனுஷன் உனக்கு எதுக்கு இவ்ளோ செய்யணும்? இந்த காலத்துல காரண காரியம் எதுவும் இல்லாம இனாமா எவனாவது இத்துனுன்டு கருவேப்பிலை கொடுப்பானான்னு கேளு"

"ரொம்ப தப்பா பேசுறீங்க மேடம், உங்க வயசென்ன? இவ்வளவு கேவலமான எண்ணத்தோட இருக்கீங்க?" என்றாள் மஹிமா.

"இவகிட்ட வேலை ஆகணும்னு நீங்க வேணா இவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு சுத்துங்க. நா அதுக்கு ஆளில்ல. எதுக்குடி இன்னுமு மூஞ்ச இப்படி வச்சுட்டு உட்கார்ந்துருக்க, எந்துச்சு போ. இத விட்டா நமக்கு வெளில வேலை கொட்டி கிடக்கு. இவ செய்றத செய்யட்டும்" என்றவர், "போய் இன்னும் அந்த மனுஷன்ட்ட அதையும் இதையும் சொல்லி நல்லா ஏத்திவிடு போ, இந்தா இங்கிருக்க கேமராவையும் ஆதாரத்துக்கு போட்டு காட்டு" என மனோவிடமும் முறைத்து பேசி சென்றுவிட,

"சாரி மனோ மேடம்" என பயந்து நின்றாள் சியாமா.

"ச்சி!" என நகர்ந்து, அவள் அறை சென்று தலையைத் தாங்கி அமர்ந்து விட்டாள் மனோ. கோவம்! அவ்வளவு கோவம் வந்தது, ஒருவித எரிச்சல், அவர் பேசியதை இல்லை என்றாக்கிவிட வேண்டும் என வெறித்தனம் கூட தோன்றியது. ஆனால் பேச பேச இன்னும் அவ்விஷயம் வளரும், நம் மனமே நமக்கு துஷ்டனாகும். அவர் வேறு யாரிடமும் இதுபோல் பேசி, அவர்களும் நம்பி அந்த கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தால், யோசிக்க யோசிக்க தலை வின்வின்னென்று தெறித்தது.
தமயந்தி, அவர் ஆசைபட்ட விஷயம் நடக்காது என்ற ஏமாற்றத்தில் அவர் நிம்மதி பறிபோனதற்காக, இவள் நிம்மதியவும் கெடுப்பதற்கே சேற்றை வாரி இறைத்துவிட்டார். அது புரிய மூச்சை ஆள இழுத்துவிட்டாள். எல்லாவற்றிற்கும் காரணமானவன் அந்த ஒருவன்! அவன் மீது கொலைவெறியானது, பல்லைக் கடித்து வாய்க்குள் அவனைத் திட்டி மனதிற்கு அமைதி தர முயன்றாள்.

"ஏன்டா என்னைய இப்படி போட்டு படுத்துற, உன்னால உன்ன கட்டிகிட்டு இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதால, யாரெல்லாம் என்னலாம் பேசுறாங்கன்னு தெரியுமா? ஒருநாள் மனோவா இருந்து பாரு அப்பவாது என்னைய புரியுமா உனக்கு?" என சத்தமே வெளிவராமல் கதறிதான் துடித்தாள்.

தமயந்திக்கு தைரியம் தான், நிச்சயம் அவர் பேசியதை சண்முகசுந்தரம் வரை கொண்டு செல்ல மாட்டாள் என்று. அது அவளுக்கு தானே பெயர்கெடும் விஷயம், அதற்காகவே சொல்ல மாட்டாள் என தெனாவெட்டாக சுத்தி வந்தார். ஆனால் மனோ அதை தான் சொல்லவில்லையே தவிர்த்து, மற்ற எல்லாம் சரியாக செய்தாள். முன்போல அவர் சொல்லும் வேலைகளை செய்வதில்லை,

"உங்க வேலைய நீங்க பாருங்க மேடம். ஓசில சம்பளம் வாங்கிட்டுப் போக நினைக்காதீங்க" என திருப்பி நீட்டினாள்.

அவர் அப்படியும் செய்யாமலிருந்தால், அது பென்டிங்க் என குறித்து வைத்து மறுபடியும் அவர் மேசைக்கே சென்று சேர்ந்தது. வேலை அதிகம் சேர துவங்கவும் முறைத்து முனங்கி வேலையைப் பார்த்தார். மஹிமா, விஜி இருவரிடமும் கொடுத்தாலும், அவர்கள் இவரிடம் முகம் கொடுக்கவே மறுத்துவிட, அந்த ஒருநாள் பேச்சில் மொத்தமாக மரியாதை இழந்து செய்வதறியாது சுற்றி வந்தார். அதெல்லாம் கோபமாக மனோரஞ்சிதத்திடம் தான் மீண்டும் சென்று சேர்ந்து கொண்டிருந்தது.
 
Top