subageetha
Moderator
மஞ்சம் 2
பள்ளி திறந்து எத்தனை மாதங்கள்ஆகிறது..ஆனபோதும் அதிதி தனது புதிய நண்பர்களுடன் அதிகம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முனையவில்லை.
என்ன என்றால் என்ன ... அவ்வளவுதான். தனியாக இருப்பதையே அதிதி நிறைய விரும்பினாள்..அவளை புரிந்து கொண்டு நட்பு பூக்க செய்யும் இஷ்டமும், பொறுமையும், அவசியமும் மற்ற குழந்தைகளிடம் இல்லை. குழந்தைகளின் உலகம் வேறு. அவர்களிடம் மெச்சுரிட்டி எதிர்பார்க்க முடியாது.
எப்போதும் சிரித்த முகம்.அதிர்ந்து பேச அதிதியால் முடியாது. வகுப்பில் இருக்கும் மற்ற தோழிகளுடன் ஒப்பு நோக்கி,சண்டக்காரி என சக மாணவிகளைக் கடிந்துகொள்ளும் இவளது வகுப்பு தோழர்களும் சில சமயங்களில் இவளது அமைதியில் ஈர்க்கப்பட்டு இவளுடன் நட்பு பாராட்ட முனைந்தனர்.சுத்தமாக இவளை ஒதுக்கி வைத்தார்கள் என்று சொல்லிவிட முடியாது.
வகுப்பில் எப்போதும் முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்று அவளுடையது.அதிதியை பொறுத்தவரை யாராவது பாட சம்மந்தமாக குழம்பி நின்றால்,நிச்சயம் இவளது உதவிக்கரம் உதவி செய்யவென அவர்களை நோக்கி நீளும்.
ஆனாலும்,ஏனோ நட்பு எனும் வட்டத்தில் நிரஞ்சன் மட்டும் தனக்கு போதும் என்று அவள் நினைத்தாள். நிரஞ்சன் மட்டும் எப்போதும் அவளுடன் இருப்பானா என்பது பற்றி எல்லாம் அவளுக்கு தெரியவில்லை.
மற்றவர்களுடன் பழகுவதற்கான அவளது தயக்கம் சக மாணாக்கருக்கு ஏன்,அவளது தோழன் நிரஞ்சனுக்கும் கூட புதியது. நிரஞ்சனின் பதினொரு வயதில் அவனுக்கு இவள் பெரும் குழப்பமாக இருந்தாள்.
பல சமயங்களில், ‘யாரோ யாருடனோ’ எங்கோ சண்டையிட்டால்கூட அவள் அதிதி பயத்தில் நடுங்குவாள். அவள் உடல் பயத்தில் தூக்கிவாரி போடும். கண்களில் ஒருவித கலக்கம் தென்படும்.
அவளது நெருங்கிய தோழன் நிரஞ்சன் அவ்வாறு செய்யும்போது முதலில் கஷ்டப்பட்டாள்,
அதன் பிரதிபலிப்பாக, அவள் அதன் தாக்கத்திலிருந்து வெளி வரும்வரை நிரஞ்சனுடன் பேசவும் மாட்டாள். மிகமிக அமைதியாகிவிடுவாள்.
அவள் பேசவில்லை என்றால், அவனும் மற்ற நண்பர்களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக்கொள்வான். இவளைப் பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டான். அந்த சமயங்களில், அதிதி தனிமையாக இருப்பாள்.மனதளவிலும் தனிமையாகவே உணர்வாள். ஏனோ,உணர்வுகளை வேகமாக வெளிப்படுத்த,அவளால் முடியவில்லை.கோவத்தில் நிரஞ்சனை திட்டி கொட்டியிருந்தால் அவள் உணர்வுகளுக்கு வடிகால் கிடைத்திருக்கலாம்.
ஆனால் அவள் கொடுத்து கொள்வது தானக்குதானே தண்டனை. இது அந்த குழந்தைக்கு புரியவில்லை.மாதங்கள் கடந்து முழு ஆண்டுத் தேர்வு வரை வந்தாயிற்று.ஒருவாறாக அதிதி புதுப் பள்ளியை ஏற்றுக்கொண்டாள்.தன்னை அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டாள்.
ஏனோ, வயது கூடியும் அவள் குணம் மாறவில்லை.
"டீன் ஏஜ் , என சொல்லபடும் நிலைக்கு முந்தய நிலை இந்த பதினொரு,பன்னிரண்டு வயது. புரிந்தும் புரியாமலும்,பல விஷயங்கள். தெரிந்துகொள்ளும்-புரிந்துகொள்ளும் விஷயங்களில் ஏதேனும் மாறுபாடு இருப்பின் சரி செய்வது கடினம்தான்."ஒருவேளை வளரும் சமயங்களில் எண்ணங்களின் பரிமாணம் மாறுபடலாம்".
'டேய்,நிரஞ்சா, உன்னோட ஃப்ரெண்ட் எங்ககிட்டவெல்லாம் பேச மாட்டாளாமா... உன்னோடையே சுத்துறா? எங்களோடே பேசக்கூட மாட்டேங்குறா'என இவன் தோழர்களும் தோழிகளும் இவனிடம் கேட்கவாரம்பிக்க என்னவென்றே புரியாமல் அவனும் என்ன பதில் சொல்லுவான்?
அதிதியிடம், இதைப்பற்றி பேச முனைய அவள் கண்களோ குளம் கட்டியது. “அழாதே, அதி, எல்லா பசங்களும் நம்ம ஃபிரண்ட்ஸ் தான். நீ யாரோடையும் பழகாம இருந்தா உனக்கு விளையாட யாரு இருப்பா? நா ரெண்டு நாள் லீவு போட்டா என்னடி பண்ணுவ? தனியாவே உக்காருவையா? படிக்கும் போது டவுட் வந்தா யாரு கிட்ட கேப்ப? திடீர்னு போய் நின்னா யாரும் வர மாட்டாங்க அதி.”
தனக்குத் தெரிந்த அளவில் அவளுக்கு புரியவைக்க முயன்றான்.
'சரி,இனி,எல்லார்கிட்ட யும் பேச ட்ரை பண்ணுறேன்”. என்றவளுக்கு, வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை. அவனிடம் சொன்னதுபோல சக மாணவர்களிடம் பேசிப் பழக முயற்சி செய்தாள் தான். ஆனால்,வெறும் முயற்சி.
பொறுத்து. பார்த்த நிரஞ்சன் ,ஒருநாள் மாலை அதிதியை அழைக்க வந்த வித்யாவிடம் “அத்தை...இங்க இவ சேர்ந்து இந்த வருஷமே முடியபோகுது. பட்,என்னைத் தவிர கிளாஸ்ல வேற யாரும் ஃபிரண்ட்ஸ் கிடையாது. மேடம் யாரோடையும் பேசறது,விளையாட வரது கிடையாது. இவளை விட்டு நா மட்டும் விளையாட போகவும் கஷ்டமா இருக்கு. பாய்ஸ் விளையாட்டு தனி,கேர்ள்ஸ் விளையாட்டு தனி. இவளுக்கு கேர்ள்ஸ் யாருமே ஃபிரண்ட்ஸ் இல்ல.என்னோட கிளாஸ் கேர்ள்ஸ் இவ வந்தா,குரூப்ல சேத்துக்கறேன்னு சொல்றாங்க.இவ போகமாட்டேங்குறா.
நீ வேணும்னா போயி உன்னோட ஃபிரண்ட்ஸ் கூட இருன்னு அதி கோவப்படுறா. பிளீஸ் அத்தை, வீட்டுல கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க” என ஒரு பெரிய மனித போஸில் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு தயக்கமின்றி பேசிய நிரஞ்சனை முத்தமிட வேண்டும் என்று தோன்றியதை வித்யா அடக்கிகொண்டு
அவனிடம் பேசினான். இப்படி ஒரு மகன் அல்லது மகள் இருந்திருந்தால், அதிதி அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பாள்.
வித்யாவுக்கு பிரச்சனையின் காரணம் தெரியும். தீர்வு?குழந்தையை கவுன்சிலிங் கூட்டி போலாமா என்று வித்யா விஸ்வத்திடம் கேட்கும்போது அங்கு கேட்டுக் கொண்டே வந்த விஸ்வத்தின் அம்மா பெரிய பிரச்சனை செய்து விட்டார். அதிலிருந்து வித்யா இவற்றை பற்றி யோசிப்பதை கூட நிறுத்தி விட்டாள்.
வித்யாவுக்கு கணவன் மேல் கோவமாய் வந்தது. எல்லாவற்றுக்கும் அவரிடம் இருந்தும் முதலில் வருவது மறுப்புதான்.ஒற்றை மகளாய் அதிதி மகிழ்ச்சியாய் இல்லை என்பது புரிகிறது அவளுக்கு புரிகிறது.
விஸ்வத்தை பொறுத்தவரை,இந்த விஷயங்கள் வகுப்பு சார்ந்த, பிள்ளைகளிடையே நடக்கும் சிறு விஷயம். ஏதோ ஒரு வகையில் மகள் தன்னை கூட்டுக்குள் சுருக்கி கொள்கிறாள். அவளை தேற்றுவது ஒன்றும் கஷ்டம் இல்லை. அவள் தேவை என்ன என்று அவரால் மகளை புரிந்துகொள்ள முடியவில்லை.
எட்டு வயதிலிருந்து தனியாக உறங்கும் பழக்கத்தை அதிதிக்கு உண்டாக்கி இருந்தனர். குழந்தைக்கு தைரியம் தன்னம்பிக்கை வளரும் என்று வித்யா ஏதோ பெண்கள் இதழில் படித்திருந்தாள்.அதன் விளைவுதான் இது.
ஆனால்,தனக்குத்தானே பேசிக்கொண்டும்,கதைகள் சொல்லிக்கொண்டும் ,வெகுநேரம் விழித்துக்கொண்டும் இருக்கும் மகளை சமீப காலமாக வித்யா-விஷ்வம் இருவரும் காண்கிறார்கள்.
வீட்டிலும் அவள் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. முன்பெல்லாம்,விஷ்வம் அவரது அப்பா-அம்மா இருவரும் இவளுக்கு கதை சொல்லுவதும்,தங்களுடன் இருத்திக்கொள்வதுமாக இருந்தது. ஆனால்,விஷ்வத்தின் அப்பா இறந்த பிறகு, அவரது அம்மா தன்னை சுருக்கிக்கொண்டார். அவரது உடல் நிலையும் வெகுவாக தளர்ந்துவிட்டது.
பேத்தியுடன் நேரம் கழிக்க அவரால் முடியவில்லை.சதா சர்வகாலமும் இணையுடன் மனதில் பேசிக்கொண்டும், என்னை எப்போ கூப்புட்டுப்பீங்க?என்னால இங்க நீங்க இல்லாம இருக்க முடியல என்று மருகுவதுமாக இருந்த பாட்டிக்கு பேத்தி பற்றி கவலை அற்று போயிட்டு. அவர் உலகம் மட்டும் அல்ல அதிதியின் உலகமும் தனியாயிற்று.
கணவனுடன்,வீட்டிலிருந்த படியே, கணக்கு வழக்குகளை கவனிக்கும் வித்யாவிர்க்கு இவளுடன் விளையாட நேரம் இல்லை. வித்யா சி.ஏ இண்டர் வரை முடித்தவள். அவளுக்கு,மாதம் விஷ்வம் அலுவலகத்தில் இருந்து சம்பளம் வருகிறது.’வீட்டு வேலை,இவளை பள்ளிக்கு அழைத்து சென்று வருதல்,மாலை அவளுக்கு பாடம் சொல்லித்தருவது, கணவரது அலுவலக வேலை,’என்று அவளை சுழற்றி அடிக்கிறது. அவளை குற்றமென சொல்ல முடியாதுதான். வேலை செய்யும்பொழுது,அவள் புத்துணர்ச்சியோடு உணர்கிறாள்.கஷ்ட பட்டு படித்த படிப்பு. காலை ஆறு மணிக்கு வகுப்புக்கு சென்றிருக்கிறாள். வீணாக்க எப்படி முடியும்?
இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றால் காலம் கடந்துவிட்டது. இப்பொழுது குழந்தை பிறந்தால், அந்த குழந்தை அதிதிக்கு தோழமையுடன் இருக்க வாய்ப்பு அறவே இல்லை. வயது வித்யாசம் பாசம் காட்ட மட்டுமே அனுமதிக்கும். நட்பு பாராட்ட அல்ல. மேலும் மற்றவர்கள் என்ன எல்லாம் யோசிப்பார்கள், என்ன சொல்வார்கள்...என்றெல்லாம் கவலை எல்லாவற்றுக்கும் மேல் விஸ்வம் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை. குழந்தைப்பேறு பார்ப்பதற்கும் ஆளில்லை.
மேலும், அதிதியை கவனிக்க நேரம் கிடைக்காமல் போகலாம்.
யோசிக்க,யோசிக்க வித்யாவிர்க்கு தலை சுற்றியது. அதிதி பிறந்து இரண்டு வருஷங்கள் முடிந்த பிறகு , இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தலையால் தண்ணீர் குடித்து பார்த்தாயிற்று. விஷ்வம் அசைந்து கொடுக்கவில்லை. ஒற்றைக் குழந்தைகள் படும் அவஸ்த்தைகள்,தன் மகளும் இப்பொழுது அனுபவிக்கிறாள்."அது தனிமை"
இனி,அலுவலக வேலைகளை விடுத்து,மகளுடன் அதிக நேரம் செலவிட வேணும்.அவளுடன் விளையாடவும்,அவளுக்கு தோழியாகவும் இருந்தால்தான் மகளை தனிமையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என முடிவு செய்தவள் அன்றே விஷ்வத்துடன் பேச முடிவெடுத்தாள்.
அவள் இப்பொழுது முடிவெடுத்தாலும்,கைகளில் உள்ள வேலைகளை முடித்துக் கொடுக்க நிர்வாகம் நிர்பந்திக்கும்.வேறு வழியே இல்லை.முழு ஆண்டு தேர்வு சமயமும் மார்ச் மாத வருஷ கணக்கு முடிவும் ஒரே சமயம்.உண்மையை சொன்னால் விஷ்வம் ஜூன் மாதம் வரை அலுவலகத்திலிருந்து வீடு வருவதே அபூர்வம்தான். குளியல்,உணவு உறக்கம் அனைத்துமே அலுவலகத்திலேயே. அவரது கிளைண்டுகளுக்கு அவர் மீது நம்பிக்கை அதிகம்.அவருக்கு வருமானமும் அதிகம். கணவனின் வேலை சுமையை குறைக்க என தொடங்கியதுதான் வித்யாவின் வேலை.
வித்யாவால் அவரை புரிந்துகொள்ள முடிந்ததால் தான் அவள் அவருடன் பணியில் ஈடுபட்டதே.ஆனால்,அவர் ஒரு பார்ட்னர் தான். குடும்ப ரீதியாக அலுவலக முடிவுகள் அவரால் எடுக்க முடியாது.இத்தனை உழைப்பின் பலன்களும் ஒற்றை மகளுக்காகத்தானே?
வித்யாவால் நினைத்த மாத்திரத்தில் முடிவுகள் எடுக்க முடியும். செயல் வடிவம் கொடுப்பதுதான் கடினம்.
இன்றைய நிலயில் இந்த வயதில் நிரஞ்சன் அதிதியை புரிந்துகொள்ள முடியுமா? அவனே சிறுவன். அவன் வீட்டில் சொல்ல முடியாத ஆயிரம் விஷயங்கள்.
அதிதி –நிரஞ்சன் இருவரும் கடக்க வேண்டிய பாதை அதிகம். முழு ஆண்டு தேர்வுடன் அவர்களது பந்தம் முடியப்போவதில்லை. வித்யாவால் தன் மகளை சரி செய்ய முடிகிறதா?
நிரஞ்சன் -அதிதி எப்படி வளர்கிறார்கள், அவர்கள் பயணம் எப்படி செல்கிறது, என்ன ஆகிறது? குழந்தை வளர்ப்பு கத்தி மேல் நடப்பது போல. சில சமயங்களில் தவறாகிப்போகும் விஷயங்கள் முதல் கோணல் முற்றும் கோணலாய் மாறிப்போகும் அபாயம் உண்டு.அதிதி -நிரஞ்சன் இவர்கள் நட்பு பாய்மர கப்பல் நடுக்கடலில் புயலில் சிக்கும் போது...
மீண்டும் அடுத்த அத்த்யாயத்துடன் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் தோழமைகளே. இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையாக இருக்கலாம். ஆனால் ஒற்றைக்குழந்தைகள் படும் உணர்வுப் போராட்டங்கள் சொல்லி முடியாது. திருமணம்,குழந்தை பிறப்பு என்று எல்லாவற்றையும் தள்ளிப்போடும் இன்றைய தலைமுறை தமது வருங்கால சந்ததிக்கு அதிகமாக கொடுப்பது தனிமை தான் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் அவசியம் என்று நினைக்கிறேன். எமது சொந்த கருத்துதான் இது.