எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

manjam 25

subageetha

Moderator
Manjam 25

பல காலமாய் நிரஞ்சன் ஏங்கி கொண்டிருக்கும் குடும்ப அமைப்பு. கீழே சுகுமார் தன் குடும்பத்துடன். ‘அவனை திருப்திபடுத்ததானே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அந்த பெரிய மனிதர் கீழே சுகுமார் குடும்பம் நடத்தும் அழகில் லயித்து சிரிக்கிறார். நான் இங்க எரிந்து கொண்டிருக்கிறேன்’ என்று மனம் முழுவதும் எரியும் தீயில் மீண்டும் எரிந்துகொண்டே தன் அம்மாவை பார்க்க சென்றான். அவன் அம்மாவும் மீதம் வைக்காமல் சுகுமாரின் குழந்தைக்கு சட்டை தைத்துக்கொண்டிருக்க, பார்த்தவனுக்கோ தன் இழப்பு பெரிதாய் தெரிய,


லேசாக தொண்டை செருமலில் அம்மாவை அழைத்தான். இவன் வந்து விட்டதை நிழல் மூலமே தெரிந்து கொண்டு விட்டவளுக்கு, மகனிடம் என்ன பேச வேண்டும்... எப்படி ஆரம்பித்து என்றே யோசனை.

முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு, '’வா நீரு, இப்போவெல்லாம் சென்னைல இருந்தும், அதுவும் இதே நுங்கம்பாக்கம் ஏரியால இருந்தும் அம்மாவ பாக்க தோணலயா’'என்று அதிரடியாக தொடங்கினாள் நிரஞ்சனின் அம்மா.

. “இல்லம்மா, வேலை ஜாஸ்தி. அதான் நீங்க கூப்பிட்டா பிடிக்காத இடம்ன்னாலும் வந்திருக்கேனே!” என்றுவிட்டான் நிரஞ்சனும்.


“பழசை மறக்கப் பழகணும் நிரஞ்சன். இல்லாட்டி எதிர்காலம் சரியா அமையாது…”என்று இரட்டை அர்த்தம் சேர அவன் அம்மா சொல்லிவிட,

“நெவெர், நா உயிரோட இருக்கும் வரை பழைய ஞாபகங்கள் என் கூட வரும்” என்றான் அவனும் சளைக்காமல்.

இன்று இந்த பேச்சு சாதாரணமாக முடியப் போவதில்லை என்று இருவருக்குமே நன்றாக புரிந்திருக்கிறது. ஆனால் எவ்வளவு நாட்களுக்குத்தான் இந்த பிரச்சனையை அப்படியே தள்ளி போட முடியும்?

மகனுக்கு நல்ல பெண்ணுடன் திருமணம் நடந்த அவன் நன்றாக வாழவேண்டும் என்பது அவன் தாயின் ஆசை. ஒரு அம்மாவாக அவளது ஆசையை தவறு என்று யாராலும் தள்ளிவிட முடியாது. ஆனால் நல்ல பெண் என்பதற்கான வரையீடுகள் தான் இங்கு பிரச்சனையே!

அதிதி நல்ல பெண் இல்லை என்றால் யாராலும் சொல்லிவிட முடியாது. மிகவும் நல்ல பெண், அதிர்ந்து பேச தெரியாதவள். குடும்பத்தனமாக வளர்க்கப்பட்டு இருக்கிறாள். இவற்றுடன் அவளுக்கும் படிப்பு இருக்கிறது வளமான குடும்பம். ஆனாலும் அவளை மருமகளாக ஒப்புக் கொள்வதற்கு நிரஞ்சன் அம்மா அவர்களுக்கு சம்மதமில்லை. காரணம் ஏற்கனவே திருமணமாகி, கணவனுடன் ஒன்றி ஒழுங்காக குடித்தனம் செய்யத் தெரியாமல், விவாகரத்து பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டாள். அப்படிப்பட்ட அவளைத் தன் மகனுக்கு மனைவியாக ஏற்பதற்கு”நான் என்ன முட்டாளா'’ என்ற எண்ணம். இது எப்போதுமே உலக வழக்கம் தானே! பிரச்சனை யாரிடம் என்று யாரும் அலசுவது இல்லை. நம்மைப் பொறுத்தவரை ஆண்கள் பொதுவாக தவறு இழைப்பதில்லை. குடும்பம் எனும் அமைப்பு ஏதாவது ஒரு வகையில் சிதிலமடைந்தால் அதற்கு முழு காரணமும் பெண்தான்.

நோவும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். தன் வீட்டில் தன் பெண்ணிற்கோ, தனக்கும் தன்னை நெருங்கியவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நேர்கையில் ஆண்கள் முற்றிலும் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அதுவே வேறு யாராவது எனும் பொழுது பெண்ணிடம் தவறு காண்பது வழக்கம் என்றாகிவிட்டது. இதுதான் இங்கு நிரஞ்சன் அம்மா மனதிலும். அதிதி தவறான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் விவாகரத்திற்கு அவள் தான் காரணமாக இருக்க முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில், அந்தப் பெண் மறுமணம் செய்துகொள்வதற்கு தன் மகன்தான் கிடைத்தானா? அவள் போலவே விவாகரத்து ஆன எவரையுமோ, மனைவியை இழந்த யாரையுமோ திருமணம் செய்து கொண்டு நூறு ஆண்டுகள் சந்தோசமாய் வாழட்டும் என்று உள்ளுக்குள் எண்ணம் சுழல, வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தாள் அந்த பெண்மணி.


நிரஞ்சனுக்கோ பழைய சம்பவங்கள் நினைவடுக்குகளில் விழா நடத்த அவன் முகம் அப்பட்டமாய் உணர்வுகளின் அழுத்தம் காட்டும் கண்ணாடியாகி போனது.

அவன் அம்மாவுக்கு புரிந்துவிட்டது அவன் வேதனை. அதே விஷயங்கள் பற்றிய எண்ண அலைகள் அவரையும் ஆக்ரமிக்க கால சக்கரம் இருவருக்கும் பின்னோக்கி திரும்பி பார்த்தது.


அப்போது நிரஞ்சன் சி ஏ இன்டர் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு என்பதால் நிரஞ்சன் கர்ம சிரத்தையாக படித்துக்கொண்டிருந்தான். அவனது அறையில் அவனும் அவன் அம்மாவும். ஊரிலிருந்து சுகுமாரன் வருவதால் அவன் அம்மாவுக்கும் வேலை அதிகமாக இருந்தது. ஒருவழியாக சுகுமாரன் தில்லியில் படித்து முடித்து வேலையில் இருந்தவன், சென்னைக்கு மாற்றல் கிடைத்து இங்கேயே வந்து விட்டான். நிரஞ்சன் மனதில் நெருடல் தான். சுகுமாரன் என்றைக்குமே நிரஞ்சன் அம்மாவை மரியாதையாக பார்த்ததும் இல்லை பேசியதும் இல்லை. அதனால் சுகுமாரன் என்றாலே நிரஞ்சன் மனதினுள் சஞ்சலம் எனும் பொருளில் பதிந்து விட்டான்.


மதியம் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, சற்று நேரம் கண் அயர்ந்தார் நிரஞ்சனது தாயார். அந்த நேரம், வீட்டிலிருந்தே வேலை செய்துகொண்டிருந்த சுகுமாரன், மாடியில் தனது அறையில் இருந்து கொண்டு சிற்றன்னையை உரக்க அழைத்து தேனீர் கேட்டுக் கொண்டிருந்தான். தனது அறையின் கதவை சாத்திக்கொண்டு நிரஞ்சன் படித்துக் கொண்டிருந்ததால் சுகுமாரன் அழைத்தது தாய் மகன் இருவருக்குமே காதில் விழவில்லை. மதியம் அதற்குமேல் சுகுமாரன் யாரிடமும் எதுவும் இது பற்றி பேசவில்லை.


இரவு தனது தந்தை வந்த பிறகு , தான் இங்கு வந்திருக்கவே கூடாது. இந்த குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்டும் இங்கு வந்தது எவ்வளவு பெரிய பிழை. சித்தி தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டாள். இதற்கு நிரஞ்சனும் துணை. தனக்கு இங்கு மரியாதை இல்லை. அதனால் தான் வேறு வீடு எடுத்துக் கொண்டு தனியாக போய் இருக்கப்போவதாக, சுகுமாரன் பெரிய பிரச்சனை பண்ணிவிட்டான். தனது மனைவியை அடிக்க வந்துவிட்டார் நிரஞ்சனின் அப்பா. போதாத குறைக்கு 'வக்கத்து போய் ரெண்டாவதா வந்தவளுக்கு இவ்வளவு திமிரு 'என்றதும் நிரஞ்சன் மனதில் சுருக் எனும் வலி


அம்மாவை அடிக்க வந்த அப்பாவை தடுக்க வந்த நிரஞ்சனை, கண்டவாறு திட்டி, அடித்தும் விட்டார். பிரச்சனை பெரிதாகி விட நிரஞ்சனின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி, இனி இந்த வீட்டில் அவனுக்கு இடம் இல்லை. மீறி வீட்டிற்கு உள்ளே வந்தால் அவன் அம்மாவையும் சேர்த்து வெளியே தள்ளி விடுவேன் என்று உக்கிரமாய் கத்திவிட்டு கதவை சாற்றி கொண்டுவிட்டார். மாடியின் பால்கனியில் இருந்து நிரஞ்சன் கீழே நிற்பதை ஒரு ஏளனத்துடன் பார்த்து நின்று கொண்டிருந்தான் சுகுமாரன். அன்று இரவு எங்கு போவது என்று தெரியாமல் தனது நண்பனின் அறைக்கு சென்று அங்கேயிருந்த நிரஞ்சனை, அவன் படிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து பார்த்துவிட்டுச் சென்றார் அவன் அம்மா.


பரிட்சை மும்முரத்தில் இருந்த அதிதியின் காதுகளில் இந்த விஷயம் வந்து சேர காலதாமதம் ஆகிவிட்டது. அடித்து பிடித்துக்கொண்டு, வித்யாவை கூட்டிக்கொண்டு அதி சென்றது தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்னால். சி ஏ பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் அறை எடுத்து தங்கியிருக்க அங்கே ஐக்கியம் ஆகிவிட்டிருந்தான் நிரஞ்சன். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அடுத்த மாதம் வாடகை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாக வேணும். வீட்டிலிருந்து பணம் ‘கிடைக்குமா கிடைக்காதா’ என்றெல்லாம் தெரியாது. தேர்வு எழுதி முடித்துவிட்டால் இன்டர்ஷிப் பயிற்சிக்காக தங்கள் நிறுவனத்திலேயே சேர்ந்து கொள்ளுமாறு அதியின் அப்பா விஸ்வம் ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனால் அதுவரை மூன்று மாதங்கள் என்ன செய்வது என்று அவனுக்கு தயக்கமாக இருந்தது.


நிரஞ்சனை பார்த்துவிட்டுச் சென்ற அதிதி வீட்டில் என்ன செய்தாளோ தெரியாது. அவள் பார்த்து விட்டு சென்ற அடுத்த நாள் விஸ்வம் நிரஞ்சனை அலைபேசியில் அழைத்து தனது வீட்டு மாடியிலேயே தங்கி கொள்ளுமாறும், தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்காமல் தங்கள் அலுவலகத்திலேயே பயிற்சிக்கு வந்து சேருமாறும் பணித்தார். தேர்வுக்கு முதல் நாள் வேறுவழியின்றி நிரஞ்சனும் தனது பொருட்களுடன் அதிதி வீட்டு மாடியில் குடிபுகுந்தான். மாடி அறைக்கு வாசல் பக்கமாக படிக்கட்டுகள் உண்டு. வீட்டினுள்ளும் ஒரு படிக்கட்டுகள் உண்டு. வீட்டுக்குள் இருக்கும் மாடி அறைக் கதவை பூட்டி விட்டார் விஸ்வம்.

தங்களது வீட்டில் கொஞ்சம் நிலைமை சீரானதும் நிரஞ்சனின் அம்மா விஸ்வம் வித்யாவை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறியதுடன், தனது திருமணத்திற்காக தங்கள் பிறந்த வீட்டில் போட்டது என்று கையில் ஒரு ஜோடி தங்க வளையல்களை எடுத்து வித்யாவிடம் கொடுத்து, மேற்கொண்டு நிரஞ்சன் படிப்பதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். அவர்கள் எவ்வளவோ மறுத்து பார்த்தும் நிரஞ்சனின் அம்மா வளையல்களை திரும்பி வாங்கிக் கொள்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிகழ்வு அதிதிக்கும் நிரஞ்சனுக்கும் கலவையான எண்ணங்களை தோற்றுவித்தது. நிரஞ்சன் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு அவனது தந்தையும் அண்ணனும் ஒப்புக்கொள்ளவில்லை.

நிரஞ்சன் அதிதியின் வீட்டிற்கு வந்ததிலிருந்து, வித்யா அவர்கள் இருவருக்கும் சேர்த்து உணவு தயாரித்து கொடுத்தாள். இருவருக்கும் இடையே எந்த பாகுபாடும் அவள் பார்த்ததில்லை. விஸ்வம் மட்டும் ஏனோ அதிகம் நிரஞ்சனிடம் வைத்துக்கொள்ளவில்லை. அவரின் மனதிற்குள் அதிதி தன்னைவிட நிரஞ்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒரு பாவனை. அவ்வப்போது வீட்டுக்கு தெரியாமல் நிரஞ்சனை வந்து பார்த்துவிட்டுச் செல்வார் அவனது அம்மா. நிரஞ்சன் மனதிற்குள் இது ஆறாத ரணம்.


நிரஞ்சன் அம்மா கொடுத்த வளையல்களை வித்யா தங்களது வங்கி லாக்கரில் வைத்து விட்டாள்.

நிரஞ்சனுக்கு கல்யாணம் ஆகும்போது அவன் மனைவிக்கு கொடுக்க வேண்டியது இந்த வளையல்கள் என்பது அவளது எண்ணம்.

மாத உதவித்தொகை அலுவலகத்திலிருந்து நிரஞ்சன் அதிதி இருவருக்கும் கிடைக்கிறது. நிரஞ்சன் தனது கையில் இருக்கும் பணத்தை நேரே வித்யாவிடம் கொடுத்துவிடுவான். ஆனால் அவனுக்கு செலவுகள் அந்த பணத்தை வைத்து பார்க்கும் அளவில் இல்லாமல், அதிகமாக இருந்தது. அந்த பணத்தை வித்யா தனது மாத சம்பளத்தில் இருந்து செலவு செய்தாள். அவன் வகுப்புகளுக்கு செல்லவும், ரெஃபரன்ஸ் புத்தகங்கள் வாங்கவும் அதிதி தனது உதவி தொகையை செலவு செய்தாள். அவன் மனம் நோக்குமாறு வித்யா அதிதி இருவரும் ஒரு நாளும் நடந்து கொண்டதில்லை. விஸ்வம் அதிகம் பேசமாட்டாரே தவிர தனது மகளுக்கு தோழன் என்ற ஒரே காரணத்திற்காக தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் அவர் செய்து கொடுத்தார். வருமான வரியில் இருக்கும் நுணுக்கங்களை தனக்கு தெரிந்த எல்லாவற்றையுமே அலுவலக சமயத்தில் அவனுக்கு போதித்தார். சி ஏ இறுதி தேர்வில் அவன் அகில இந்திய அளவில் ரேங்க் வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணம். பயிற்சிக் காலத்தில் அவன் தன்னை முழுமையாக பட்டைதீட்டி கொண்டான். இன்று அவன் வாழும் வாழ்வு அதிதி குடும்பம் கொடுத்தது.


பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே அதிதி அவன் மனதில் காதலியாய் பதிந்து விட்டாள். ஆனால் வாழ்க்கையில் சாதிக்க நிறைய இருக்கிறது. ஒரு நல்ல நிலைமையில் இல்லாமல் அவளை கை பிடிக்க முடியாது என்ற நிதர்சனம் தெரிந்ததாலேயே அவன் தனது காதலை சொன்னான் இல்லை. அத்துடன் அவளது பால் மனதை காதல் என்ற போதை மருந்தை ஊற்றி மாற்ற மனது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக எங்கே அவளது நட்பை இழக்க நேரிடுமோ என்ற பயம் கூட அவனுக்கு உண்டு.


அந்த வீட்டிலிருந்து அனுப்பப்பட்டவன், இன்றுதான் தனது அம்மாவின் அழைப்பின் பேரில் வந்திருக்கிறான், மனது முழுவதும் வெறுப்பை சுமந்துகொண்டு. அவன் அப்பா வீட்டை போன்று இன்னும் பெரிய வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்தில் தான் மூன்று படுக்கை அறைகள் கொண்ட பெங்களூரு பிளாட் வாங்கியது. அதற்கான கடன் இன்னும் இருக்கிறது.

இத்தனை நிகழ்விற்கு பின்னும் அம்மா எதற்காக இங்கே தன்னை வரச்சொன்னார் என்ற கோபம் அவனை சுழட்டி அடிக்கிறது.


ஆனால் அவன் அம்மாவுக்கோ, இந்த குடும்பத்தின் மீது தனது மகனுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை அவன் எந்த நாளும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணம். அதேபோல் திருமணம் நிச்சயம் ஆனால் தன் மகனுக்கு மரியாதையை ஈட்டி தரப்போகும் இந்த உறவை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற யோசனை. அவன் அனாதையாக தனியாக நிற்பதைப் பற்றி அவரால் சிந்தனை கூட செய்ய முடியவில்லை.


பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்த இருவருக்கும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. இதுவரை தனது கோவத்தை நிரஞ்சன் தனது அம்மாவிடம் காட்டியது கிடையாது. ஆனால் இன்றோ தான் அனாதையாக நிற்பதற்கு தன் அம்மாவும் ஒரு காரணம் என்ற எண்ணம் அவனுக்குள் வந்துவிட்டது. பெங்களூருவில் தனியாக வீடு வாங்கி விட்ட போதும் அவன் அம்மா அவன் உடன் வந்து இருக்க சம்மதிக்கவில்லை. அப்படி என்றால் அவன் அம்மாவுக்கும் தனது கணவர் முக்கியம். அதை மீறித்தான் எல்லாம் என்றுதானே பொருள்!


தனக்காக சாப்பிடாமல் காத்திருந்த அதிதி, தனது இரு சக்கர வாகனத்தை அவனிடம் கொடுத்து ஓட்டச் சொன்ன பெண். என்னை ஒருத்தி காதலிக்கிறேன் என்றதற்காக என் காதல் வளர என்னை விட்டு விலகியவள்.ஒவ்வொரு முறையும் என் ஈகோ சீண்டப்படாமல் காப்பதற்காக தன்னை கீழிறக்கி கொண்ட அதிதி. இது போன்ற ஒரு தேவதை பெண்ணல்லவா தனக்கு மனைவியாக இருக்க வேண்டும். இதை ஏன் எனது அம்மா புரிந்து கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்கள்?

விவாகரத்து ஆனால் என்ன? என்ற வாதங்கள் அவனுக்குள் .

எப்படி ஆரம்பிப்பது என்ற ஒரு யோசனை அவனுக்குள். ஆனால் இதே வாதங்களை தான் அவன் தன் அம்மாவிடம் வைத்தான். அவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சொல்லி தனது காதலை புரிய வைக்க முயற்சி செய்தான்.


இவன் சொன்னவற்றை எல்லாம் பொறுமையாக கேட்டார் அவன் அம்மா. அவர் கேட்ட ஒரே கேள்வி 'அதிதிக்கு உன் காதல் தெரியுமா? அவளை சம்மதிக்க வைத்தாயா' என்பது தான்.


'இன்னும் இல்ல' என்றவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த அவன் அம்மாவுக்குள் சந்தோஷ பிரவாகம். இன்னும் அந்த பெண்ணின் சம்மதம் கிடைக்கவில்லை என்பது பற்றி.
 
Top