எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 3

subasini

Moderator
மனம் - 3

அழகான பயணம்... இதழ்களில் மௌனம் குடியிருக்க, மனமோ காதலில் பல வார்த்தைகளை உச்சரித்தது.

இருசக்ரவாகணத்தில் அவளோடான இந்தப் பயணம் வாழ்க்கை முழுவதும் வேண்டும் என ஆசைப் பிறந்தது இளம் காதலனுக்கு.

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே அவனைக் காதல் வந்து ஆட்டிப்படைத்தது.

அவள் வீட்டின் அருகே சந்து ஓன்றில் வண்டியை நிறுத்த சொன்னவள். தன் வீட்டிற்குச் செல்ல அவன் வண்டியில் இருந்து இறங்கினாள்.

அந்த இருளில் தெரு விளக்கின் ஒளியில் அழகாக இருந்தாள் தாரிகா. அவள் அழகு அவனைச் சிறையெடுக்கச் சொன்னது.
மெல்ல அவளைப்பார்த்தவன் "அப்பறம் நாளைக்கு உன்னைக் காலேஜிற்குக் கூட்டிப்போக, நான் வரவா" என்றான்.

அவனின் இந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை தாரிகா.

"இல்லை வேண்டாம், நானே வந்திருவேன்" என்றாள்.

"ஓ அப்படியா, சரி நீ போ லேட் ஆகுது, நாம் நாளைக்குப் பார்க்கலாம்" என்றவன் மெல்ல அவள் கையைப் பிடித்து, "இன்றைய நாள் ரொம்ப அற்புதமாகவும், சந்தோஷமாகவும் மாறக் காரணம் நீ தான், ரொம்ப நன்றி தாரிகா" என்றான்.

அவனின் செயலில் என்ன சொல்ல என்று தெரியாமல் மெல்ல, தன் கைகளை அவனிடம் இருந்து உருவியவள் “சரி நான் போறேன். நீங்களும் சீக்கிரம் கிளம்புங்கள்” என்றாள்.

அவனின் செயலில் நட்பு மருந்துக்கும் இல்லை என உள்ளுணர்வு சொன்னது.

ஆனால் அவன் பேச்சும் தன்னைக் குளிர்விக்கும் அவன் வார்த்தைகளும் அவளுக்குப் பிடித்திருந்தது.

ம்ம் இன்னும் மூன்று வருடங்கள் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் வேகமாக வீட்டிற்குச் சென்றாள்.

ஏன் லேட் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்ல எனச் சிந்தித்தவள். வீட்டின் கேட்டிற்கு அருகில் வந்ததும் நளினிக்கு ஒரு மிஸ்டுக் கால் விட்டு , வேகமாக வீட்டினுள் வந்தாள்.

“ஏன் தாரிகா இவ்வளவு லேட் , ஃபோன் பண்ணிச் சொல்லாம் இல்லையா” என்று புனிதா, அவளிடம் கேள்விகளைப் கேட்டுக்கொண்டு இருக்கும் போது நளினி அவளை அழைத்தாள்.
தப்பித்தேன் என்று மனதில் நினைத்தவள் "சொல்லு நளினி அம்மாவிற்கு இப்போ எப்படி இருக்கு” என்று ஃபோனை ஸ்பீக்கரில் போட்டாள் தாரிகா.

"ரொம்ப நன்றி தாரிகா, கூடவே நீ இருந்ததால் தான், என்னால் தைரியமாக இருக்க முடிஞ்சது. நீ வீட்டிற்குப் போய் விட்டாயா, லேட் ஆனதுக்கு அம்மா திட்டினாங்களா, நான் வேணா அவர்களிடம் சொல்லாவா, என் அம்மாவிற்கு முடியாமல் போயிருச்சு அது தான் நீ லேட்" என்று அவள் பாட்டிற்குப் பேசிக்கொண்டே போனாள்.

"ஏய், பொறுமையாகப் பேசு டி, அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் அம்மாவிடம் பேசிக்கிறேன், உன் அம்மா எப்படி இருக்காங்க, இப்போவும் வலி இருக்கா" என்று விசாரித்தவள் ஃபோனைக் கட் செய்தாள்.

"சாரி அம்மா, அவள் அம்மா கீழே விழிந்துக் கால் அடிப்பட்டுப் பாவம் ரொம்பக் கஷ்டப் பட்டாங்க, அவள் தனியா எதும் பண்ணிருக்க முடியாது" என்று நடந்ததைக் கொஞ்சம் மாற்றிக்கூறித் தப்பித்தாள்.

"ம்ம் அப்படியா? நான் பயந்தே போய்ட்டேன் , ஆனாலும் கூப்பிட்டுச் சொல்லி இருக்கலாம். எதுவாக இருந்தாலும்சொல்லிரு டி, பயந்தேட்டு இருக்க வேண்டாம் இல்லையா?" என்றார், புனிதா.

"இப்போ அவங்க அம்மாக்கு எப்படி இருக்கு என்று விசாரித்தவர் சரி வா வந்து எதாவது சாப்பிடு" என்றவர் அவள் வயிற்றுக் உணவினைக் கொடுத்தார்.

எல்லாம் முடிந்து, தன் அறைக்கு வந்தவளுக்கு மனதில் சதீஷின் முகம் வந்து வந்து போனது. அவனை நல்ல தோழனாக ஏற்க மனம் விரும்பியது ஆனால் காதலனாகப் பயமாக இருந்தது. அவன் காணும் போது,பெரியக்குடும்பம் மிகப் பெரிய பணக்கார்கள் என்று தெரிந்துக்கொண்டாள். அவன் செல்வச்செழிப்பு மனதில் பயத்தை உருவாக்கி இருந்தது. மற்றப்படி அவனைப் பற்றி எந்தத் தகவலும் அவளுக்குத் தெரியாது.

அதனால் மனதில் அவன் பற்றிய எண்ணங்களில் தெளிவாக இருந்தாள். ஆனால் அவன் மனமோ காதலில் வலம் வந்தது. தன் கரங்களில் அவள் மென் கரத்தை ஏந்திய அந்த நோடிகளைத் திரும்பத் திரும்ப எண்ணிப்பார்த்து ஆனந்தம் அடைந்தது அவன் பிள்ளை மனம்.
கல்லூரயில் நளினி, தாரிகா, சதீஷ் மூவரும் நல்ல நெருங்கிய நட்பின் வளையத்தில் தங்களைப் பிணைத்துக்கொண்டனர்.

அவர்கள் நட்பில் பாசம் இளையோடியது. சதீஷின் காதல் புயல் தாரிகாவின் மேல் மையம் கொண்டதை உணர்ந்தாள் நளினி. தன் நண்பனுக்கு அவள் போல் அழகான பெண் கிடைத்தால் சந்தோஷம் தான் அவளுக்கும் என்று மனதில் நினைத்தாள்.

சதீஷின் காதலைக் கண்டு பிடித்தாள் அவன் உயிர் தோழி நளினி…
“ நான் வேண்டுமானால் தாரிகாவிடம் பேசவா” என்று கேட்டாள்…

"வேண்டாம்… வேண்டாம்… அவளுக்குத் தெரியும் நினைக்கிறேன்… ஏதோ ஒன்று அவளைத் தடுக்குது நளினி"…என்றான் சதீஷ்.

"என்ன டா டெலிபதி எல்லாம் வேலைச் செய்யுது போல... ஏன்டா எனக்கு மட்டும் இந்தக் காதல் வரலை… என்னைப் பார்த்தால் லவ் வராதா" என்று பாவமாகக் கேட்டாள்…

“உன் கூட நான் இருக்க வரைக்கும் யாரும் வரமாட்டாங்க” என்று சத்தமாகச் சிரித்தான் சதீஷ்…

"அடேய் என் காதலுக்கு எதிரியே நீ தானாடா" என்று‌அவனை அடித்தாள் நளினி…

" ஆண் நண்பனைப் பெஸ்ட் பிரண்டாகக் கூட வச்சு இருக்கும் பெண்களை, தேடிப் பிடித்துக் காதலிக்க மாட்டாங்க" என்றான்…

"புரிகிறது ... காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை சதீஷ்" என்றாள்…

"அது‌ உனக்கு" … என்றவன் தன்னவளுக்காகக் காத்திருந்தான்…

தாராவின் கல்லூரி முதல் நாள் என்பதால் அவளோடு தங்களுக்கு என்று பார்த்து வைத்திருக்கும் வீட்டிற்கு வந்திருந்தனர் தாரா‌ மற்றும் தாரிகா…

தாரா அவள் கல்லூரிக்குச் சென்றதால்.. தாயோடு, தாரிகாவும் சேர்ந்து எல்லாப் பொருட்களையும் அந்த வீட்டில் பொருத்திக் கொண்டிருந்தனர்…

"மெல்ல மகளிடம்.. தாரிகா, படிக்க மட்டும் செய்.. இந்த வயதில் காதல் வயப்பட்டுக் கஷ்டப் படாதே… ஆண் படித்தால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்… அதே பெண் குழந்தைப் படித்தாள் அடுத்தத் தலைமுறையே நன்றாக இருக்கும்" என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார்…

“புரியுது அம்மா” என்றவளுக்குப் புரிந்ததா என்பது கேள்விக்குறியே!


தாரிகா லீவ் எடுத்ததை நளினியிடம் குறுந்தகவல் மூலம் பகிர்ந்தாள்.

அதைப் பார்த்ததும்.. டேய், சதீஷ் உன் ஆளு இன்றைக்கு லீவு டா என்று கூறியதும்…
அவனுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய துயரம் ஆட்கொண்டது போலத் துடித்தான்…

இதைப் பார்த்த நளினி.. “அடேய் ஒன் சைட் லவுக்கே இப்படியெல்லாம் அலப்பறைப் பண்ணின‌வை.. வெளுத்துருவேன்” ‌என்று மிரட்டியவள் வா‌ க்ளாஸுக்குப் போகலாம் என்று‌ அவனை அழைத்துச் சென்றாள்.

சதீஷ் மற்றும் தாரிகா நட்பு மிகவும் பலமானதாக மாற்றிக்கொண்டு இருந்தான் சதீஷ்…

ஒரே கப்பில் டீ, பகிருவதில் இருந்து எல்லாம் நெருக்கமாக இருந்தது…
தாரிகாவோ எல்லாம் நட்பின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாள்…

இதெதுவும் புரிந்து கொள்ளாமல் அவளுக்குத் தன் மேல் விருப்பங்கள் உண்டு என மனதளவில் நினைத்தான் சதீஷ்.

அதை ஏதோ காரணங்களுக்காக மறைக்கிறாள் என நினைத்தான்…

தாரிகா மற்றும் அவள் தாய்ப் புனிதாவுடன் சேர்ந்து அந்த அறையை அழகாக மாற்றினாள்…
மாலையில் வந்த தாரா ரூமைப் பார்த்து…

“ பார்ரா…அம்மாவும் பொண்ணும் எனக்காக எவ்வளவு பண்ணியிருக்கீங்க… என்று கேலிச் செய்தாள்…

"ரொம்ப வாய் அடிக்காதே.. இந்தா வந்து டீயைக் குடி" என்று‌அவளுக்கும் ஒரு டம்ளர் டீயைக் கொடுத்தவள், தானும் கையில் மற்றோருக் கோப்பையுடன் அமர்ந்து.. "ம்ம் சொல்லு உன்னோட முதல் நாள் கல்லூரி அனுபவம் எப்படி இருந்தது" என்று கேட்டாள் தாரிகா…

தாயுடன் இரண்டு மகள்களும் கையில் தேனீர்க் கோப்பையோடு அமர்ந்திருந்தனர். அந்த மாலை நேரம் அவ்வளவு ரம்மியமாக இருந்தது மூன்று பேருக்கும்…

அன்றைய தினம் நடந்த எல்லாமே சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டே இருந்தாள் தாரா…

எல்லாம் கேட்ட, தாரிகாவிற்கு.. தன் காலேஜ் தினம் நினைவில் வந்தது…

தாராவின் அனுபவம் ரொம்பப் புரொபஷனலாக இருந்தது… அதை உணர்வும் செய்தாள் தாரிகா…

அப்பொழுது மனதில் இன்ஸ்டென்டாக நாமளும் சாதிக்க வேண்டும் என்று சத்தியப்பிரமாணம் செய்தாள்.

மாலையில் புனிதாவை அழைத்துப் போக மகேந்திரன் வந்திருந்தான்…

அவனுக்கும் குடிக்க டீயைக் கொடுத்தனர்…

டீயைக் கையில் வாங்கியன்.. “எல்லாம் வசதியாக இருக்கா உங்களுக்கு… எதாவது வேணும் என்றால் இப்போவே வாங்கிக்கலாம்… அப்பறம் நீங்கள் தேவை இல்லாமல் அலைய வேண்டி இருக்காது" என்றான்.

"இல்லை மாமா எல்லாம் இருக்கு.. அப்படித் தேவை என்றால், அடுத்த வாரம் நீங்கள் பார்க்க வரும் போது கேட்கிறோம்" என்றாள் தாரா…

பல‌ முறைப் பத்திரமாக இருக்க அறிவுரைக் கூறியப் பின்னரே அங்கிருந்து அவர்கள் கிளம்பினார்…

மனதில் கலக்கதோடு வரும் தன் அத்தையைப் பார்த்தவன் "என்ன அத்தை, ஏன் முகமே சரியில்லை" என்று கேட்டான்…

என்ன தெரியவில்லை … தாரிகா நினைச்சுக் கொஞ்சம் மனதில் பயம் வருது மகி, என்றார்.
"அதெல்லாம் நன்றாகப்படித்து நல்ல நிலையை எட்டிப்பிடிப்பாங்க, நீங்க தேவையில்லாமல் பயபடவேண்டாம் அத்தை" என்று தைரியம் கூறினான் மகேந்திரன்.

தாராவிற்குப் படிப்பதற்கும் அதற்கான ப்ராஜெக்ட் பண்ணவுமே நேரம் போதாமல் பறந்துக்கொண்டிருந்தாள். இதில் அவளுக்கு நல்லதோழமையும் கிடைத்தது. அதெல்லாம் அதன் வரைமுறையில் நிறுத்தி வைத்திருந்தாள். கேட்டதும் உயிரைத் தந்து உதவும் நண்பர்களையும் சேர்த்தி இருந்தாள்.

நல்ல முறையில் வழி நடத்தவும், ஒன்றாகப் படிக்கவும் செய்தனர். அவர்கள் நட்பில் கலப்படம் இல்லை. இதையெல்லாம் பார்த்தத் தாரிகா அதைச் சதீஷிடம் எதிர்பார்த்தாள்.

நண்பன் நல்ல காதலன் ஆகலாம், காதலனோ என்றும் நண்பனாக முடியாது என்பதைப் புரிந்துக்கொள்ள வில்லை அவள். நாட்கள் அதன் போக்கில் பறந்துக்கொண்டிருந்தது. கடைசி வருடத்தில் இருந்தனர் தாரிகா, நளினி மற்றும் சதீஷ்.

நளினிக்குக் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவுச் செய்திருந்ததால் அவள் வேலைக்கு எதுவும் முயற்சிப் பண்ணவில்லை.

சதீஷ் தன் அண்ணன் கம்பெனியில் வேலைக்குச் சேர்வதால் மேற்படிப்பிற்கு வெளிநாடுச் செல்லத் திட்டமிட்டு இருந்தான். அவன் போவதற்குள் தன் காதலை உறுதிப்படுத்தவேண்டும் என்பதில் திடமாக இருந்தான்.

இந்த மூன்று வருடமும் நட்பு ஊர்ச்சுற்றுதல் என்று ஜாலியாகக் கழிந்ததால் தாரிகாவிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவளுக்கு அதுவே மனதில் ஒரு குறையாக இருந்தது. ஆனால் தாரா, தன் திறமையால் மூன்றாம் வருடத்தின் இறுதியிலேயே நல்ல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். பரிட்சை முடித்ததும் வந்து சேரச் சொல்லி ஆடரும் கிடைத்தது. அவள் மகிழ்வாக இருந்தாள்.

இப்படி அவர்கள் படிப்பு அடுத்த லெவலுக்குப் போய்க்கொண்டிருந்தது. கல்லூரி முடியும் கட்டத்திற்கு வந்ததும் மனதில் பயம் வந்தது தாரிகாவிற்கு. விரும்பத்தாகாத ஏதோ நடக்கப்போகுது என்று அவள் உள்ளுணர்வுக் கூறியது. மனதில் உண்டான சோகத்திற்குக் கல்லூரி வாழ்க்கை முடியும் கட்டத்தில் இருப்பதால் தான் அப்படித் தோன்றுகிறது என்று நினைத்தாள்.

சதீஷ் தன் காதலை எப்படி அவளை ஏற்க வைக்க எனச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அதற்கு நளினியிடம் " நான் தாரிகாவை டேட் கூட்டிப் போகலாம் என்று நினைக்கிறேன், நளினி நீ என்ன சொல்லுகிறாய்” என்று கேட்டான்.
“உன்னோடு வருவதற்கு விருப்பம் இருந்தால் கூட்டிப்போ, இல்லை என்றால் விட்டுவிடு” என்றாள் தெளிவாக.

"புரியது நீ சொல்ல வருவது" என்றான் சதீஷ்.

“சரி நான் அவளிடம் பேசிட்டுச் சொல்லறேன்” என்றவன் அவளுக்கு அழைத்தான்.

“ஹலோ” என்று அவள் குரலைக் கேட்டதும் முகத்தில் உண்டான சந்தோஷத்தோடு "ஹாய், தாரிகா நமக்குக் காலேஜ் முடியப் போகுது, அதனால இந்த வரும் நாட்கள் எல்லாம் மிகவும் நினைவுள்ளதாக மாற்றலாமா?” என்று கேட்டான்.

தங்களோடு நளினியும் வருவாள் என்று மனதில் நினைத்தவள் அவனோடு செல்ல முடிவுச் செய்தாள் ..

“கண்டிப்பாகப் போகலாம் சதீஷ், நானும் நினைச்சேன், இனி இது போன்று நமக்கு நாட்கள் கிடைக்காது” என்றாள் தாரிகா.

அடுத்த நாள் இருவரும் சேர்ந்து அந்த ஊரின் அழகான ஏரிக்குச் சென்றனர். காதலர்களுக்கான இடமாக இருந்தது. அங்கே இருக்கும் அழகைக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகாக இருந்தது.

அங்கே மலர்கள் நிறைந்த பகுதிக்கு அவளை அழைத்துச்சென்றவன் மலர்களின் கூட்டத்திற்கு நடுவில் ஒரு தேவதையைப் போல அவளை நிற்க வைத்தவன், அவள் முன் மண்டி இட்டு, தன் கையில் இருக்கும் மோதிரத்தை அவள் முன் நீட்டி, தன் காதலைச் சொன்னான்.

" தாரிகா, உன்னை உயிரினும்மேலாகக் காதலிக்கிறேன். இதைக் கேட்கும் பொதுச் சினிமாவில் வருவது போன்று இருக்கும், ஆனால் என் கையில் இந்த வார்த்தைகள் மட்டுமே உள்ளது. எனக்கு உன் காதல் மட்டும் போதும் தாரிகா” என்று தன் மொத்தக் காதலையும் அவளிடம் கொட்டினான்.

இவ்வளவு நாட்கள் அவள் மனதில் இருந்த தயக்கம் மெல்லப் பனித்திரைப்போல விலகியது.
அவன் நீட்டிய மோதிரத்தை மெதுவாக வாங்கியவளின் செயலில் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றவன், அவள் அருகில் வந்து தன் இருகரங்களில் அவள் முகத்தைத் தாங்கிப்பிடித்தவன் மெல்ல அவள் இதழ்களில் தன் காதலின் அடையாளமாக முதல் முத்தத்தைப் பதித்தான். அதில் பதறியத் தாரிகாவின் பயத்தைப் போக்கியவனின் காதல் சுழியில் மெல்ல இழுக்கப்பட்டு அதில் அவளும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து அவன் முத்தத்தின் ஆழத்தை ரசித்து அதில் மயங்கி நின்றாள்.

காதலிக்கும் போது யாரைப்பற்றியும் எந்த நினைவும் வராது, அவளும் குடும்பம், தன்னோடு ஒட்டிப்பிறந்த தாரா எல்லாத்தையும் மறந்தாள். அவன் காதலை ஏற்றுக்கொண்டாள்.

தன் காதலின் சம்மதத்தை அவனைப்போலவே முத்தத்தால் கொடுத்தாள். நீண்டு நெடிய மூன்று வருடங்களுக்குப் பின் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள் அவனவள்.

இன்னும் நான்கு மாதங்களில் கல்லூரி முடியும் தருவாயில் இருந்தது. பரிட்சைக்காக மட்டும் அல்லாமல் தங்கள் காதலுக்காவும் நன்றாகப் படித்தனர். ஆம் காதலில் ஜெயிக்க வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் அல்லவா. எல்லாம் நன்றாகத் தான் போய்கொண்டிருந்தது காதலிக்கும் இந்தக் காதலர்களுக்கு.

எதிர்பாராததை எதிர்பார்பது தானே நம் விதியின் விளையாட்டு. இவர்களும் அந்த விதியின் கையில் விளையாட்டுப் பொம்மைகளாயினர்.

காதலில் உணர்வுகள் மட்டுமே அவர்களை வழி நடத்திச் சென்றதன் விளைவுகள் அவர்களை நோக்கிப் பயணித்து வந்தது மெதுவாக.

கல்லூரியின் இறுதிக் கட்டம் என்பதால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தினர் தாரிகா மற்றும் சதீஷ்.

அதில் தாரிகா, தன் உடல் நிலையில் கவனம் செலுத்தவில்லை. கடைசிப் பரிட்சையின் போது அவளுக்குத் தலைச்சுற்றியது. என்ன திடீரெனத் தலைசுத்துகிறது என்று நினைத்தவள் வேகமாகப் பரிட்சைக்குத் தாயாரகிறனாள். படிக்கிற டென்ஷன் காரணமாக இப்படி ஆகிறது என்று நினைத்தவளுக்கு வேற எதுவும் தோன்ற வில்லை.

எல்லாம நல்ல விதகாம எழுதினார்கள். நளினி அன்றைக்கே வேகமாக வீட்டிற்குச் சென்று விட்டாள் ஏதோ காரணம் கூறி, சதீஷ் தாரிகாவிடம் வந்தவன்" நான் ஊருக்கு நாளைக்கு நைட் தான் போவேன் தாரிகா. நீ எப்பொது வீட்டிற்குக் கிளம்புகிறாய்" என்று கேட்டான்.

"தாரா இங்கே தான் இருப்பாள், அது தான் யோசிக்கிறேன். அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்கணும்" என்றவள்.

"சதீஷ் நம் காதலை உங்க வீட்டில் ஏற்றுக்கொள்வாங்களா?" என்றாள் பயம் விழிகளில் தேங்கி நிற்க அவள் கேட்ட இந்தக் கேள்வியில் உருகிப்போனான் அவள் காதலன்.


"நிச்சியமாக நம் காதலுக்கு எங்கள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இருக்காது, தாரிகா. உங்க வீட்டில் என்ன சொல்லுவாங்க என்று தான் பயம். எனக்குப் படிக்க வெளிநாட்டிற்குப் போகணும், அதற்கு அண்ணா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாரு, அது வரைக்கும் நீ எப்படி உன் வீட்டில் சமாளிப்பாய் என்பது தான் என் கவலை" என்றான்.

"நான் மேலே படிக்கிறேன் என்று சொன்னால் சரி என்று சொல்லிருவாங்கள் சதீஷ், அதெல்லாம் பயமில்லை" என்றாள் தாரிகா.

"சரி எனக்கு ஒரு மாதரி இருக்கு நான் ரூமிற்குப் போகிறேன்" என்றவள் தங்கள் அறைக்கு வந்தாள்.
அங்கே எழுதிக்கொண்டிருந்த தாராவோ என்ன தாரிகா, உன்னோட பிரென்ட் நளினி, கிளம்பிட்டாளா?" என்று கேட்டாள்.

"அவள் பரிட்சை முடிந்தக் கையோடு போயிட்டாள் தாரா" என்று பேசிக்கொண்டிருந்தவள் சட்டென வாந்தி வர வேகமாகக் குளியலறைக்குப் போனாள்.

இரண்டு நாளாக வாந்தி எடுக்கும் தாரிகாவின் உடல்நிலையில் பயம் வந்தது தாராவிற்கு.

வேகமாக அவள் அருகில் வந்தவள் "என்ன தாரிகா என்ன ஆச்சு, இரண்டு நாட்களாகப் பார்க்கிறேன்... இப்படி வாந்தி எடுக்கிற, வா மருத்துவமணைக்குப் போகலாம்" என்றாள் தாரா.

அவளுக்கும் டாக்டரைப் பார்த்தாள் நன்றாக இருக்கும் என்று தோன்றவும் பக்கத்தில் இருக்கும் மருத்துவமணைக்குச் சென்றனர்.

அங்கே அவளைப் பரிசோதித்த மருத்துவர் " கல்யாணம் ஆகி எவ்வளவு நாட்கள் ஆச்சி, உங்களுக்கு மாதாந்திரம் மாதவிடாய் எப்போது வந்தது" என்ற அவர் கேள்விக்கு இரட்டையர்கள் இருவரும் அதிர்ச்சியாகினர்.

கண்களில் நீர்ப் பெருகியது தாராவிற்கு. அழுத விழியில் சினம் எட்டிப் பார்க்கத் தாரிகாவை முறைத்தாள் தாரா.

எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்று பயந்தோடு, தன் அருகில் இருக்கும் தாராவைப் பார்த்தாள் தாரிகா.

கல்லூரியில் படிக்கும் போதே பிள்ளைக்குத் தாயாகி நிற்பவளைப் பார்த்து என்ன செய்வது எனத் தெரியாமல் தினறினாள் தாரா.

பெண்கள் இருவரின் நிலையை உணர்ந்த டாக்டர், " அவங்க மாசமாக இருக்காங்க" என்றார் .
இருவரும் மௌனமாக இருப்பதைப் பார்த்தவர் " இப்போதிக்குச் சில மருந்துகள் எழுதித் தருகிறேன், பெரியவங்கள் யாரையாவது அடுத்த முறை வரும்போது கூட்டிட்டு வாங்கள்" என்று அனுப்பி வைத்தார்.

என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் வாயடைத்துப் போனது தாரிகாவிற்கு.

தாராவோ இவள் எப்படித் தாயானாள். காதலிப்பதாகக் கூடச் சொல்ல வில்லையே. இல்லை மறைத்தாளா, இப்போ என்ன பண்ண. இதை வீட்டில் கூற வேண்டுமா? இந்த விஷயத்தைச் சமாளிக்க எதாவது செய்யணுமா? எனப் பலவிதமாகச் சிந்தித்தவள், எப்படி அவர்கள் தங்கி இருக்கும் ரூமிற்கு வந்தனர் என்று தெரியவில்லை.

அறைகைக்கு வந்ததும் தன் கோபமெல்லாம் சேர்த்தி அவளை ஓங்கி அடித்திருந்தாள் தாரா.

" என் காரியம் பண்ணியிருக்க என்று தெரியுதா? நம்மள நம்பி இருக்கும் அப்பா அம்மாவை யோசிச்சியா? அப்படி என்னடி உனக்கு அவசரம் இந்த வயதில் அம்மா ஆகணும்" என்று அவள் முடியைப் பிடித்து ஆட்டினாள் ஆத்திரத்தில்.

“சாரி... சாரி... தாரா இப்படி ஆகும் என்று எனக்குத் தெரியாது” என்று அழுதாள் . அவளுக்கு இதெல்லாம் எப்படிக் கையாளுவதென்று தெரியவில்லை.

எதுவும் திட்டம் போட்டு நடக்கவில்லையே. காதலின் வேகம் தங்கள் நிலையை யோசிக்க விடவில்லை.

"இதெப்படி நடந்தது எனக்குச் சொல்லு யார் காரணம் சொல்லுடி" என்று அவளை உளுக்கினாள் தாரா.

"என் கூடப் படிக்கும் சதீஷ் . அவரும் நானும் காதலிக்கறோம்" என்றாள். என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்லி இருக்கார் என்றாள் தாரிகா.

"காதலிப்பவன் இப்படி உன்னைக் கர்ப்பமாக்க மாட்டான். நான் எதாவது சொல்லிவிடப் போறேன்" என்றாள் கோபத்தில்

"இல்லை தாரா அவர் ரொம்ப நல்லவர். அவரை எனக்கு ரொம்பபிடிக்கும்" என்று அழுதாள்.
"உனக்கு அவனைப் பிடிக்கட்டும், அவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ண முடியுமா, இப்போ அதைச் சொல்லு" என்றாள் தாரா. அவளின் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன தெரியாமல் தவித்தாள். அவனின் எதிர்காலத் திட்டங்கள் தான் அவளுக்குத் தெரியுமே, அந்த அச்சம் முகத்தில் பரவ நோக்கியவளின் செயலில்

"என்ன விளையாட்டு என்று நினைத்தாயா வாழ்க்கை, இல்லை நீ பார்த்து மகிழும் வலைதள வாழ்க்கை என்று எண்ணினாயா? இந்தச் சமூகத்தில் எப்படி நீ முகம் காட்டுவாய், என் அப்பாவோட மரியாதையை உன் காதலுக்கு விலைப் கேட்டாயா" என்று அழுதாள் தாரா.

"உன் காதல் எப்படிப் பட்டது என்று எனக்குத் தெரியாது, ஆனால் என் அம்மா அப்பாவோட கௌரவம் எல்லாத்தை விடப் பெரியது" என்றாள் தாரா. "அதற்கு நான் என்ன வேண்டுமானலும் செய்வேன்" என்று அவளை முறைத்துப் பார்த்தபார்வையில் செத்துக்கொண்டிருந்தாள் தாரிகா.

தொடரும்…
 
Top