எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 1

Sathya theeba

New member
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம் (தாண்டவம்)

காதுகளில் அணிந்திருந்த 'புளுரூத்'தில் ஒலித்த இப்பாடல் அவன் மனக்கிடங்கில் எங்கோ புதைந்திருந்த நினைவுகளை மெல்லத் தட்டியெழுப்பியது. அந்நினைவுகள் தந்த வலி அவனது தெளிந்த வதனத்தில் வேதனையின் சாயலைத் தோற்றுவித்தது. அவன் கால்களோ தன் இயல்பாக சைக்கிளின் பெடலை மிதித்தன.

இலங்கைத் திருநாட்டின் அழகுராணி.. பசுமையின் கொடை… சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி.. இவ்வாறெல்லாம் கூறக்கூடிய மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது நுவரேலியா மாவட்டம். இலங்கையின் இதயபூமியும் அதுவே. ஐரோப்பிய இனர்த்தவர்களையே படையெடுத்து வரவழைத்த செழிப்பும் வளமும் கொட்டிக் கிடக்கும் பூமி. வெண்பஞ்சு மேகங்கள் குடையென அவ்வூரையே மூடித் தவழ்ந்தன. சாலையின் இரு மருங்கிலும் பச்சைப் பசேலென ஓங்கி உயர்ந்திருந்த மரங்களும் பார்க்கும் இடமெல்லாம் வளைந்து நெளிந்திருந்த மலைத் தொடர்களும் அந்த மாவட்டத்திற்கே பெரும் அழகை வாரியிறைத்தன. அந்த மலைத் தொடர்களுக்கெல்லாம் பசுமையை வாரியிறைத்தன அடுக்கடுக்காய் காணப்பட்ட தேயிலைத் தோட்டங்கள்.

அந்த மலைமகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் எண்ணத்தில் தன் பொற்கதிர்களைக் காணும் இடமெங்கும் வாரியிறைத்தபடி மெல்ல எட்டிப் பார்த்தான் ஆதவன். அந்த ஆதவனின் வரவைக் கண்டு குதூகலித்த புள்ளினங்கள் எங்கெங்கினும் தங்கள் இனிய குரலில் கீதம் பாடி அச் சூழலையே ரம்மியமாக்கின. அந்நகருக்கே உரிய இயல்பாகக் கரிய மேகங்களும் வெண்பஞ்சு மேகங்களும் ஆங்காங்கே மரங்களையும் கட்டடங்களையும் தொட்டுத் தழுவிச் சென்று கொண்டிருந்தன. எங்கும் பனிமூட்டமாகவே காணப்பட்டது.

அதிகாலைக் குளிரிலும் சில்லென்று வீசிய குளிரைத் தாங்கிய தென்றல் காற்று உடலை ஊடுருவ அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது, பாட்டைக் கேட்டபடி சைக்கிளில் மெதுவாக சென்று கொண்டிருந்தான் மதி என அழைக்கப்படும் இளமதியன்.

இளமதியன் இருபத்தொன்பது வயது நிரம்பியவன். ஆண்களிலேயே சற்று உயரமானவன். உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடம்பும் அவனது உயரமும் அவனது அழகுக்கு மேலும் வலுவூட்டின. அடர்ந்து விரிந்திருந்த புருவங்களுக்குக் கீழே தீர்க்கமான பார்வையுடன் விரிந்த கண்கள். கூர் நாசி, எப்போதும் அளவாக வெட்டப்பட்டு பராமரிக்கப்படும் அடர்ந்த மீசை, அழகிய ரோஜா நிறத்தில் அழுத்தமான உதடுகள் என வசீகரிக்கும் அழகன்.

அரசாங்க வைத்தியசாலையில் பொது மருத்துவராகப் பணியாற்றுகின்றான். எனினும் தன் ஆத்ம திருப்திக்காக, அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று அந்நகரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு வாரத்தில் ஒருநாள் சென்று வைத்தியம் பார்த்து வருகின்றான். அவன் தேடிச் செல்லும் ஊர்களிலுள்ள மக்கள் வறுமையில் இருந்தபோதும் இவன் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருந்தனர். அவன் தங்களைத் தேடி வந்து இலவசமாக வைத்தியம் செய்வதையும் மருந்துகளை அவன் தன் செலவிலேயே வாங்கித் தருவதையும் அறிந்ததால் அவனைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நேசித்தனர். தங்களால் அவனது வைத்தியத்துக்குப் பணம் கொடுக்க முடியாவிட்டாலும் அன்பை வாரிக் கொடுக்க முடியும் என்பதை உணர்த்தினர். தங்கள் அன்பை அவன்மீது வாரி வழங்கினர்.

'சார், எங்க வீட்டு நாட்டுக் கோழி முட்டை, உங்களுக்காகக் கொண்டு வந்தோம்.'

'இந்த கரட், நம்ம வீட்டுத் தோட்டத்தில் விளைஞ்சது சாமி' என்று அவர்கள் தங்கள் நன்றியைச் செலுத்தினார்கள்.

ஆரம்பத்தில் அவன் அவர்களிடமிருந்து அவற்றை வாங்க மறுத்துவிட்டான். ஆனால், அவற்றை வாங்காததால் அவர்கள் முகம் வாடிச் செல்வதைக் காணவும் அன்போடு அதனை வாங்கிக் கொண்டான். பதிலுக்கு அவர்களின் குழந்தைகளுக்கு வேண்டிய கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும் விடுவான்.

அன்றும் வழமை போல அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து தனது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த ஏரிக்கரைக்குச் சைக்கிளில் சென்றவன், கரையின் மணல்பரப்பில் ஓடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். இது அவன் உயர்தரம் கற்க ஆரம்பித்த காலம் முதல் அவனது தினசரி வழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் அவனது தந்தையும் அவன் கூடவே ஓட வருவார். இப்போதெல்லாம் அவருக்கு நேரம் இல்லாததால் வீட்டிலேயே அவர் உடற்பயிற்சியைச் செய்வதால் இவன் தனியாகவே வருகின்றான். அவனது ஊர் மலைப் பிரதேசமானதால் சைக்கிள் ஓட்டுவதே மிகக் கடினமான உடற்பயிற்சிதான். ஆனாலும் உடலை ஊடுருவும் குளிரையும் பொருட்படுத்தாது ஏரிக்கரைக்கு சென்று ஓடி உடற்பயிற்சி செய்வதே அவனுக்குத் திருப்தியைத் தந்தது. ஓடி முடித்ததும் சிறிது நேரம் அங்கே போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து மலைகளின் ஊடே மெல்ல எட்டிப் பார்க்கும் சூரியனின் அழகை ரசிப்பான். ஆறு மணியானதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருவான்.

இன்றும் சைக்கிளை நிதானமாக மிதித்தபடி, பாடலைக் கேட்டபடி வந்து கொண்டிருந்தான்.

தனது வலது கரத்தில் கட்டியிருந்த கடிகாரத்தில் அவனது பார்வை பதிந்து மீண்டது. நேரம் ஆறு பத்தாகிவிட்டது. இனி வேகமாக வீடு சென்று ஆயத்தமாகி வைத்தியசாலை செல்ல வேண்டும் என்று எண்ணியவன் சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்தான். திடீரென குறுக்கே வந்து நின்ற காரை அவன் எதிர்பார்க்காததால் தடுமாறிப் போனான். காலை ஊன்றி சமாளித்தவன் ஆத்திரத்துடன் விழித்தான்.

கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள் மயூரி. டெனிம் ஜீன்ஸ், ரீசேட், அதற்கு மேல் குளிருக்கான கம்பளி கோட், உயரே தூக்கிப் போட்ட கொண்டை என வந்தவள் மிகவும் அழகாக இருந்தாள். அசப்பில் கடல் பட நாயகி துளசி போல இருந்தாள். அவளது உயர்ந்த ஹீல்ஸ் செருப்பு சத்தமிட நளினமாக நடந்து அவனருகில் வந்தவள்,

"ஹாய் மதி டியர் குட்மோர்னிங்... உன்னை இன்று மீட் பண்ணுவேன் என்று நான் எதிர்பார்க்கல. வட் எ சப்ரைஸ்" என்று வார்த்தைகளை மிக அழகாக உச்சரித்து- மிழற்றி- கூறினாள்.

அவளைக் கண்டதும் சந்தோசப்படுவான் என்ற அவளது எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக அழுத்தமாக நின்றான் அவன்.

எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாது "குட்மோர்னிங் மயூ" என்று மட்டும் கூறினான்.

உள்ளூர உண்டான எரிச்சலை சிரமப்பட்டு முகத்தில் காட்டாது மறைத்தவள்,

"வெறும் குட்மோர்னிங் மட்டும்தானா டியர்? எவ்வளவோ எதிர்பார்த்தேன். ம்ம்.. ஏமாத்திட்டாய்" என்றாள். அதற்கு அவன் எந்தப் பதிலும் கூறாது நிற்பதைக் கண்டதும்,

"ஓகே மது டியர், பக்கத்தில இருக்கிற ஷெராடன் ஹோட்டலுக்கு போவோமா. அங்கே போய் ஒரு டீ குடிச்சிட்டுப் பேசுவோம்" என்று இயல்பாக அவனது கையைப் பிடித்து அழைத்தாள். அவளிடமிருந்து கையை மெதுவாக விடுவித்தவன்,

"சாரி மயூ.. இன்று எனக்கு டைம் இல்லை. பிறகு ஒருநாள் பார்ப்போமே" என்று விட்டுத் தனது சைக்கிளை எடுத்தவன், அவளது காரைச் சுற்றிக் கொண்டு ஓட்டிச் செல்ல முயன்றான்.

முன்னே வந்து சைக்கிளின் ஹான்டிலை எட்டிப் பிடித்தவள்,

"என்ன மதி அவ்வளவு அவசரம்... நான் எத்தனை நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கேன். பார்த்ததும் ரொமாண்டிக்கா பேசாவிட்டாலும் பரவாயில்லை, டீ குடிக்கக் கூப்பிட்டேன். அதற்கும் வர மாட்டேன் என்கிறாயே.. அட்லீஸ் உன் வீட்டுக்காவது என்னை இன்வைட் பண்ணலாம்தானே? அங்கிள், ஆன்ரியைப் பார்த்து எத்தனை நாளாச்சு. என்ன மேன் யா நீ... இட்ஸ் ஓகே, நான் இப்போ எங்கே போறேன் தெரியுமா...?"

"தெரியல. நீதான் சொல்லணும்"

"நம்ம அகிலன் வீட்டுக்குத்தான் போறேன்.. அங்கே மகாவும் வருவாள். அவர்களைப் பிக்கப் பண்ணிக் கொண்டு பெரெதேனியா கார்டனுக்குப் போகப் போறோம். எங்க கூட நீயும் வந்தால் எவ்வளவு ஹாப்பியா இருக்கும் தெரியுமா?"

"சாரி மயூ, எனக்கு இப்போ ரூர் போவதற்கெல்லாம் டைம் இல்லை... என்னால் லீவெல்லாம் இப்போதைக்குப் போட முடியாது. அப்புறம் நான் இன்று நேரத்திற்கே ஹொஸ்பிடல் போகணும்... சோ இப்போது நின்று பேசவும் டைம் இல்லை... அப்புறமா ஒருநாளைக்குப் போவோம். ஓகேயா... நாம பிறகு சந்திக்கலாம். ஃபாய்" என்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

"இவன் எப்போதும் மாறவே மாட்டானா?" என்று கோபத்துடன் தனக்குத் தானே கேட்டவள், காலைத் தரையில் உதைத்துவிட்டு தன் காரில் ஏறிச் சென்றாள்.

மயூரி அவனுடன் சிறுவயது முதல் உயர்தரம் கற்கும் வரை ஒன்றாகவே படித்தவள். அத்துடன் அவனது தந்தை வழியில் தூரத்து உறவு முறை வேறு. உயர்தரத்தில் இளமதியன் விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்த போது அவன் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காகவே தானும் விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்து கற்றாள். உயர்தரத்தில் இளமதியன் சிறப்பு சித்தியைப் பெற்று மருத்துவப் பிரிவுக்குத் தெரிவானான். ஆனால், மயூரிக்குப் போதியளவு பெறுபேறு கிடைக்கவில்லை. அவளது தந்தையின் பணபலத்தால் அவள் ரஷ்யாவில் உள்ள கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்துவிட்டு வந்தாள். தற்போது கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறாள்.

சிறு வயது முதலே அவளுக்கு இளமதியன் மீது ஒரு ஈர்ப்பு என்றே கூறலாம். அது காலப் போக்கில் காதலாக மாறிவிட்டது. தன் காதலை அவனிடம் அவள் நேரிலேயே பலமுறை கூறி விட்டாள். அதனை அவன் மறுத்த போதும் இன்றுவரை விடாமல் அவனைத் தொடர்ந்து காதலிக்கின்றாள். அதனை அவனுக்கு அடிக்கடி உணர்த்தவும் செய்கின்றாள்.

ஆனால், இன்றுவரை அவனுக்கு அவள் மீது காதல் மட்டுமல்ல சாதாரண ஈர்ப்புகூட ஏற்படவில்லை. நட்புடன் பழகவே முயன்றான். ஆனால், அவளது நடவடிக்கையால் இப்போது அதுவும் அவனால் முடியவில்லை. அவளை மட்டுமல்ல வேறு யாரையும் அவன் காதல் செய்ய விரும்பவில்லை. இளமதியன் எல்லோர் மீதும் அன்பு காட்டுவான். ஆனால் காதல் என்பது மட்டும் அவனுக்கு இப்போது பிடிக்காத வார்த்தையாகிப் போனது.

இளமதியனின் உயிர் நண்பனே அகிலன். அவனும் சிறுவயது முதல் ஒன்றாகப் படித்தவனே. அவன் ஒரு உல்லாசப் பேர்வழி. எப்போதும் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். அவனது தந்தை நாலைந்து நகைக்கடை வைத்து நடத்துகின்றார். எனவே அவன் படிப்பிலும் அக்கறையின்றி, தொடர்ந்து எந்தத் தொழிலையும் செய்ய முனையாமல் ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறான்.

ஏற்றமும் சற்றே வளைவுமான வீதியின் முடிவில் இளமதியனின் வீடு அமைந்திருந்தது. பெரிய தோட்டத்தின் நடுவே அழகாகப் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரிய பங்களா என்று சொல்லும் அளவிற்கு இல்லாவிடினும் போதுமான வசதிகளுடன் பங்களாவை ஒத்த தரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.

சூரியன் இன்னும் மேலே வராததால் பனியில் குளித்த தோட்டம் ஈரமாகவும் பசுமையாகவுமே இருந்தது. இயற்கையின் கொடையே மலைப் பிரதேசங்களின் இந்தப் பசுமையே. காணும் இடமெல்லாம் பசுமையான சூழலையும் நீர்வளத்தையும் இயற்கையன்னை மலைமகளுக்கு வாரி வழங்கியிருக்கின்றாள். இளமதியன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும்போதே தோட்டத்தில் மலர்ந்த பூக்களும் அவற்றின் நறுமணமும் அவனின் கண்களையும் நாசியையும் நிறைத்தன. கேட்டின் ஆரம்பத்திலேயே வளைவான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலில் படர்ந்திருந்த கொடியில் குண்டுமல்லிகை மலர்கள் நட்சத்திரங்கள் போன்று பூத்துக் குலுங்கின. பல வண்ண ரோஜாக்கள் இயற்கை வாசனையோடு அந்த தோட்டத்தில் நிறைந்திருந்தன. அலரி, போகன்வில்லா, எக்சோரா, செண்பகம் என்று பலவகையான செடிகளும் கொடிகளும் மரங்களும் என தோட்டம் முழுவதும் வாசனைப் பூக்கள் நிறைந்து காணப்பட்டன. வீட்டின் பின்புறம் சென்றால் தூரத்தே மலைகளைக் காணலாம். அம்மலையிலிருந்து இறங்கிய நீர்வீழ்ச்சி ஒன்று காண்பவர் கண்களை மட்டுமன்றி மனதையும் மயக்கும். அந்நீர்வீழ்ச்சியில் உருவான சிற்றாறு ஒன்று இவர்கள் வீட்டின் பின்னால் சற்றுத் தூரத்தில் ஓடியது. பின்புறமும் மரக்கறிப் பயிர்கள் தாராளமாகப் பயிரிடப்பட்டிருந்தன. தவிர எலுமிச்சை, தோடை, ஃபெசன்புரூட், றம்புட்டான் எனப் பழப் பயிர்களும் ஆங்காங்கே இருந்தன.

இளமதியனுக்குத் தோட்டத்தைப் பராமரிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதெல்லாம் அவனது தாயின் கைவண்ணத்தில் உருவானவை. இளமதியனுக்குத் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு குளிர்மையும் இதமும் பரவுவதை எப்போதும் உணர்வான். எனவே தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் திட்டத்திற்குச் சென்று அங்கே போடப்பட்டிருக்கும் கல் பெஞ்சில் அமர்ந்து ரசிப்பான்.

அவன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து பூக்களின் சுகந்தத்தைத் தன் நாசியால் உள்வாங்கியபடி சென்று சைக்கிளை அதற்குரிய இடத்தில் நிறுத்தினான். அப்போது அவன் முன்னே ஓடிவந்து நின்றன அவனது செல்லப் பிள்ளைகளான றொனியும் சுவீட்டியும். அவனைக் கண்ட சந்தோஷத்தில் இரண்டும் துள்ளிக் குதித்தன. இருவரையும் அன்போடு தடவிக் கொடுத்தவன் "ஹாய் குட்டிஸ்.. இன்று உங்களோடு விளையாட எனக்கு டைம் இல்லை. நான் வேர்க்குக்கு நேரத்துக்கே போகணும். சோ, நாளை விளையாடுவோமா ஹாய்ஸ்" என்று செல்லம் கொஞ்சினான். அவன் பேசியது அவர்களுக்குப் புரிந்தது போலும். வாலை ஆட்டிவிட்டு துள்ளிக் குதித்து ஓடின.

அவன் உள்ளே வரவும் மணக்க மணக்க காபியுடன் வரவேற்றார் அவனது அன்னை அகமேந்தி. தினமும் தன் மகன் உடற்பயிற்சி முடித்து வரும் நேரத்தை அறிந்து மகனுக்காகக் காஃபி போட்டுத் தயாராகிடுவார் அவர். அவன் உள்ளே நுழைந்து சோஃபாவில் அமரும் போதே காப்பியுடன் எப்போதும் மலர்ந்த முகத்துடன் அவன் முன்னே நிற்பது அந்தத் தாயின் வழமை. அந்த அதிகாலைக் குளிரிலும் குளித்து, பூஜை வேலையையும் முடித்துவிட்டு மகாலட்சுமியாகத் தோன்றும் தன் அன்னையைக் கண்டதும் களைப்பு நீங்கி புதுப்பொலிவு பெற்றது போல் உணர்ந்தான் இளமதியன்.

"குட்மோர்னிங்மா..."

"குட்மோர்னிங் கண்ணா.. இதோ இந்தக் காபியைக் குடிச்சிட்டு ரெடியாகிட்டு வாம்மா.. உனக்காக அம்மா இட்லி, வடை, சட்னி என செய்து வச்சிருக்கன்" என்றார்.

"நான் கஷ்டப்பட்டு வேர்க்கவுட் பண்ணுவேனாம். நீங்க அதற்கு மாறாய் இட்லி, வடை என்று சமைச்சுப் போடுவிங்களாம்.."

"கண்ணா என் சாப்பாட்டால் நீ ஒன்றும் வெயிட் போட்டிட மாட்டாய்" என்றுவிட்டு அவனுக்குக் காஃபியைக் கொடுத்த அகமேந்தி மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

அவன் அன்றைய தினசரியைப் புரட்டியபடி காஃபியைக் குடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது "மதி..." என்று அழைத்தபடி அங்கே வந்தாள் மகிழினி.

"ஹாய் மகிக்குட்டி.. குட்மோர்னிங்" என்றபடி அவளது கையைப் பிடித்து தன்னருகே அமர வைத்தான்.

"மதி... இந்த மம்மியோட இம்சை தாங்க முடியல. நீ ஒரு வார்த்தை கேட்க மாட்டியா?" என்று சிணுங்கிக் கொண்டே முறையிட்டாள் பத்து வயதான மகிழினி.

"இன்று என்ன கொம்ளைன்ட் என் மகிக்குட்டிக்கு"

"நான் என்ன ஒரே கொம்ளைன்ட் பண்ணுறேனா?" என்று விட்டு கோபத்தில் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"அச்சோ.. குட்டிம்மா சாரி.. நான் இனி எதுவும் சொல்லலை. சாரிடா என்ன விஷயம் சொல்லுடா"

"ம்ம்.. மதி என் அம்மாவுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரல"

"சொல்லுவடி சொல்லுவ. எனக்கா அறிவு வளரல.. உங்க கூட இருக்கிறதால என் அறிவு மங்கித்தான் போச்சு. அப்பா ஒரு பக்கமும் பிள்ளை ஒரு பக்கமுமாக இருந்து என் தலையைத்தான் உருட்டுதுங்க." என்று தலையிலடித்துக் கொண்டு எதிரே இருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள் தயாமதி.

"என்ன அக்கா, குட்டிம்மா போல நீயும் சலிச்சுக்குற?"

"மதி... அம்மா கதையைக் கேட்காத. நான்தானே முதல்ல வந்தன்"

"ஓகே ஓகே... மகிக்குட்டி நீயே முதல்ல சொல்லு"

"இந்த அம்மா ரொம்ப மோசம்.லீவு விட்டு நுவரேலியா வரும்போது ரென் டேய்ஸ் ஸ்ரே பண்ணுவம் என்று சொல்லித்தான் கூட்டி வந்தாங்க. இப்போ பைவ் டேதான் ஆச்சு. இன்று ஆஃப்ரனூனே எங்க வீட்டுக்குப் போகணுமாம். ரெடியாகச் சொல்லி புலம்புறாங்க. ஓகே.. நாளை மட்டுமாவது இங்கே தங்கிட்டு மண்டே போவோம் என்று நான் சொன்னால் கேட்கவே மாட்டேங்கிறாங்க. நீயாச்சும் சொல்லேன்"

"என்னக்கா ஒருநாள்தானே, தங்கிட்டுப் போயேன்"

"எப்படி மதி? மண்டே ஸ்கூலில் எக்ஸ்ரா கிளாஸ் ஸ்ரார்ட் ஆகுதாம். கட்டாயம் வரணும் என்று மெசேஜ் போட்டிருக்காங்க. இன்று சற்றர்டே. இன்றே போனால்தானே... ரகு வேற இன்னும் கிளம்பலையா என்று போன் போட்டு என்னைத்தான் திட்டுறார்"

"யாரு யாரு... ரகு அத்தான் உன்னைத் திட்டுறாரா...? ம்கூம் திட்டிட்டாலும். மகிக்குட்டி உங்க அப்பா.. அம்மாவைத் திட்டுறாராம்... இதை நாங்க நம்பணுமாம்..."

"ஆமா மதி. நாங்க நம்பிட்டோம்..." என்று கிளுக்கிச் சிரித்தாள் மகிழினி.

அந்த நேரம் பார்த்து சோஃபாவின் முன்னே சிறிய மேசையில் வைத்திருந்த தயாமதியின் அலைபேசியில் இனிய பாடல் ஒன்று ஒலித்து அழைப்பு வருவதைக் காட்டியது. அவள் அதனை எடுக்கமுன் பாய்ந்து எடுத்த மதி அதனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான். மகிழினியோ தன் தாயின் வாயைப் பொத்தினாள்.

"தயாக்குட்டி... மோர்னிங் எழுந்ததும் உனக்கு இந்த மாமனின் நினைப்பே வரலையா ? மோர்னிங் கிஸ் இன்னும் வரலையே. டியர்... சீக்கிரம் வீட்ட வந்திடுடா. என்னால்...."

"ஐயையோ அத்தான்.. நானும் உங்க பொண்ணும் இங்கதான் இருக்கோம். சென்சார் சென்சார்..." என்று சொல்லிவிட்டு அலைபேசியை தயாமதியிடம் கொடுத்தான்.

"அக்கா இந்தா உன் மொபைலைப் பிடி. உங்க ரொமான்ஸ் தாங்கல" என்று சிரிக்க அவனுடன் சேர்ந்து மகிழினியும் வாய்விட்டுச் சிரித்தாள்.

"ஹலோ, உனக்கு விவஸ்தையே இல்லையா? ஹோலை யார் ஆன்ஸர் பண்ணுறது என்று அறியாமலேயே பேசுறதா" என்று தன் கணவனைத் திட்டினாள்.

"சாரிடி தயாக்குட்டி"

"ஓகே நான் அப்புறமாய் பேசுறன்"என்று கூறி அழைப்பை நிறுத்தியவள்,

"போதும் போதும் உங்க சிரிப்பு.. இப்போ உனக்கு என்னடி ப்ராப்ளம்? உன் அப்பன் கிட்ட போறதில் உனக்கு என்னதான் கஸ்டம்" என்று மகளிடம் கேட்டாள்.

"எனக்கு எங்க அப்பாகிட்ட போறதில எந்த ப்ராப்ளமும் இல்லை. நாளை ஒரு ஸ்பெஷல் டே அதுதான்.."

"அப்படி என்னடி ஸ்பெஷல் டே?"

"நாளை என் பப்பிம்மாவோட பேர்த்டே. அதுதான் நாளை மட்டும் இங்கே இருக்கணும்கிறன்."

"ஓ... அம்மாவுக்கு நாளைக்கு பேர்த்டே இல்லையா. மறந்தே போயிட்டேன்"

"மறந்திட்டிங்க.. எனக்குத் தெரியும். பம்பிம்மாவிடம் இதைப் போட்டுக் கொடுக்கிறேன் பாருங்க"

"ஓகே... ஓகே டி.. விடு விடு. அப்போ நாளைக்கு ஈவினிங் கிளம்புவோம் சரியா?"

"ம்ம்" என்று மனமில்லாமல் தனது சம்மதத்தைச் சொன்னாள் மகிழினி.

"மதி, நாளைக்கு பப்பிம்மாவுக்கு என்ன கிஃப்ட் கொடுப்போம்." என்று தன் மாமனிடம் ஆலோசனை கேட்டாள்.

"இன்று நான் நேரத்துக்கே ஹொஸ்பிடல் போகணும். சோ, லஞ்சுக்கு வரும்போது டிஸ்கஸ் பண்ணுவோம். ஓகே டீல்."

"ஓகே டீல் மதி"என்றாள்.

இளமதியன் அவசர அவசரமாக வைத்தியசாலைக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்தான்.

"மகி, உங்க மம்மி எங்க?"

"உள்ளதான் டாடியோட பேசிக்கிட்டிருக்காங்க."

"அப்போ எங்க மம்மி"

"கிச்சனில் உருட்டிக்கிட்டிருக்காங்க" என்றாள்.

இருவரும் சமையலறைக்குள் புகுந்தனர்.

"அம்மா, எனக்கு டிபன் வேணாம். என் வார்டில் நைட் டியூட்டிக்கு நின்ற கேதீஸ் ஹோல் பண்ணினான். அவன் அவசரமாகப் போகணும்னான். சோ, நான் இப்பவே கிளம்புறன். பிரேக்பஸ்ட் கன்ரினில் சாப்பிட்டுக்குறன்."

அவன் சொல்லி முடிக்கமுதல் சிரித்துக் கொண்டே கையில் வைத்திருந்த தட்டிலிருந்து இட்லியைப் பிய்த்து சட்னியில் தோய்த்து அவனுக்கு ஊட்டிவிட்டார்.

"அம்மா... ரைம் ஆகுது."

"இரண்டு இட்லிதான் சாப்பிடு கண்ணா." என்றுவிட்டுத் தொடர்ந்து ஊட்டிவிட்டார்.

"பப்பிம்மா... நானும் இங்கதான் இருக்கேன்"

"தெரியும் கொஞ்சம் பொறுடா மாமாக்கு கொடுத்திட்டு அப்புறம் உனக்குத் தாறேன்" என்றுவிட்டு அவனுக்கு ஊட்டினார்.

"அப்பா இன்னும் வரலையாம்மா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னர்தான் வந்தார். குளிக்கப் போயிருக்கார்"

அவர் பேச்சினூடேயே இரண்டு இட்லிகளையும் ஒரு வடையையும் மகனுக்கு ஊட்டி விட்டுவிட்டார்.

இரவுப் பணி முடித்து வந்த மதிவாணன் குளித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

"என்ன இங்க குழந்தைக்கெல்லாம் சாப்பாடு ஊட்டிவிடுற மாதிரி இருக்கு?" என்றார்.

"ஆமா..., இங்க நான் சின்னப் பிள்ளையா? இல்லை மதி சின்னப் பிள்ளையா என்று தெரியல. நானும்தான் கூட வந்தேன். என்னைக் கண்டுக்கவே இல்லை. காலையில் இருந்து ஒரு டீ கூட இந்தப் பப்பிம்மா எனக்குத் தரல" என்று சோகமாகக் காட்டிச் சொன்னாள்.

"ஆமாடா செல்லம். எனக்குக் கூட ஒரு காஃபி வரல பார்த்தியா" என்றபடி அங்கே வந்தாள் தயாமதி.

"அழகாக மாமா என்று கூப்பிடத் தோணுதா உனக்கு. மதி என்று பேர் சொல்லிக் கூப்பிடுறாய்" என்று பேத்தியைக் கண்டித்து விட்டுக் கணவரிடம் வந்தார்.

"ஆமா இப்போ உங்களுக்கென்ன அவசரம். வேலைக்குக் கிளம்பிட்டிங்களா? இல்லைத்தானே.. ஆறுதலாகவே குடிச்சுக்கலாம். தயா உனக்குக் காபி போட்டுவைச்சு அது ஆறியும் போயிடுச்சு. திரும்ப போட்டுத் தாறேன். கொஞ்சம் பொறுடா."

"சரிம்மா"

"அப்பா, ஆபரேஷன் சக்ஸஸ்தானே?" என்று தந்தையிடம் வினவினான் இளமதியன்.

"கொஞ்சம் கிரிட்டிகலாத்தான் இருந்திச்சு. இப்போ டபுள் ஓகே"

"குட்பா... நான் இன்று சீக்கிரமாய் ஹொஸ்பிடல் போகணும். பிறகு வந்து பேசுறன்" என்று சொல்லியவன் வைத்தியசாலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

இளமதியனின் தந்தை ராகவேந்திரா மதிவாணன். அவரும் ஒரு டாக்டரே. அவர் ஆரம்பத்தில் சிறிதாக ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்தார். அது இன்று நுவரேலியா நகரிலேயே மிகவும் பிரசித்தமானதாகிவிட்டது. 'அகமேந்தி வைத்தியசாலை' என்ற பெயரில் மிகப் பெரிய வைத்தியசாலையாக இன்று இயங்கி வருகின்றது. அவரது வைத்தியசாலையில் எப்போதும் வறுமை என வருபவர்களுக்கு இலவசமாகவே வைத்தியம் நடக்கும்.

தாய் அகமேந்தி, மதிவாணனைக் கல்யாணம் செய்வதற்கு முன்னர் அரச பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்தவர். இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களில் மதிவாணனின் தாய் நோயால் இறந்துவிட்டார். அதனால் அவரின் இரு தங்கைகளின் பொறுப்பையும் வீட்டுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டவர் அதற்காகத் தன் வேலையை விட்டுவிட்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் தயாமதி. பார்ப்பதற்கு மட்டுமல்ல குணத்திலும் அழகானவள். அவள் பிறந்து எட்டு வருடங்களின் பின்பே இளமதியன் பிறந்தான். அவனை தயாமதியும் ஒரு தாயாகவே வளர்த்தாள்.

தயாமதியின் கணவர் ரகுபரன். இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் படித்தவர்கள். நட்பு காதலாக மாறி படிப்பு முடித்ததும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். தயாமதி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டாள். ரகுபரன் தனியார் வங்கியில் சாதாரண கணக்காளராகச் சேர்ந்தவன், மேற்படிப்பு மூலமும் தனது அயராத முயற்சியாலும் தற்போது முகாமையாளராகப் பணியாற்றுகின்றான்.

அவர்களின் ஒரே செல்ல மகள் மகிழினி. ரொம்பவும் சுட்டிப் பெண். வீட்டிலுள்ள அனைவருக்கும் அவள் செல்லம்.
 
Last edited:
Top