எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

20 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 20

மனோ கிளம்பி வந்தவள், மறுபடியும் நேராக பள்ளிக்கே வந்து பள்ளி நேரம் முடியவும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு வந்துவிட்டாள். வீட்டில் உள்ளவர்கள் மார்கண்டேயனை கேட்டதற்கு, "அவரோட மாமாவோட சொத்து தகராறு ஆகிடுச்சு. அந்த பஞ்சாயத்த தீர்க்க போயிருக்காங்க" என்றுவிட, பின் சொந்தங்கள் மூலம், பேச்சு பரவி, வீட்டிற்கும் முழுவிபரமும் தெரிந்துவிட்டது.

"அந்த மனுஷனான்னு இருக்குடி. இங்க வரும்போதுலாம் எப்படி இனிக்க பேசுவாரு தெரியுமா? நம்பின வீட்ட ஏமாத்திருக்காரே?" என ஆண்டாள் தான் புலம்பி தள்ளிவிட்டார்.

"இப்பவாது தெரிஞ்சதேன்னு சந்தோசந்தான் படணும். இடத்த மீட்க முடியாதோ? உன் மாமியாருந்தேன் கண்ண மூடிகிட்டா ஒருத்தர நம்புறது?" என்றார் மீனம்மா.

"அந்த கிஷோரு இவர் அனுப்புற ரூபாய்ல இஷ்டம்போல எடுத்து ஊர் சுத்துவான். அவர் மாமா, மாமியாருக்கும் மாமனாருக்கும் உடம்பு சரியில்லாதத காரணங்காட்டி ரூபாய வாங்கிடுவாரு. நா அங்க இருந்தப்ப கூட எனக்கு அனுப்புங்க நா பாத்துக்குறேன் பேசினதுக்கு. என்னோட மாமியாரும் அவங்க தம்பியும் ஆத்தின ஆத்துல எனக்கு மயக்கமே வந்துட்டு. அந்தகாலத்துல அவங்க எப்புடிலாம் பாசத்துல முங்கி எந்துச்சாங்கன்னு என்னைய போட்டு முக்கி எடுத்துட்டாங்க. அப்பவே அவர், இங்க உன் மாமனாரே இதுல தலையிட மாட்டாரும்மா, நீயும் அதையே பழகிக்கோ. என் தங்கச்சியையும் மாப்பிளையையும் நாந்தான் கடைசி வர பாப்பேன்னு பேசிட்டு போனாரு. அப்பவே எனக்கு பயங்கர டவுட் தான். அந்த மனுஷன் சிரிப்புல உண்மையே தெரியாது. நா சொன்னா கிருஷ்ணா அப்பா நம்பவே இல்ல. இதுக்காக சண்டையெல்லாம் கூட போட்ருக்கோம் நாங்க" என படபடவென்று பேசினாள்.

இந்த மனோ தான் அவர்களின் பழைய மனோ, வெளியே அமைதி என்றாலும் வீட்டில் கலகலப்பாக இருக்கும் பெண். திருமணத்தின் பின் கொஞ்சம் அமைதியானவள், கடந்த மூன்று வருடத்தில் அளந்து தான் பேசுவாள் என்றாகிபோயிருந்தது. மனதில் அடைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம், கணவனுக்கு அவன் குடும்பத்தை பற்றி தெரிந்துவிட்டது, இனி அவளை அங்கு தனித்து விடமாட்டான், அங்கு போக சொல்ல மாட்டான், அவளையும் கருத்தில் எடுப்பான், அவன் பிள்ளைகள் பொறுப்பை ஏற்பான். இதெல்லாம் கொடுத்தது தான் இந்த பழைய மனோவை மீட்டுவிட்டது போலும்.

"என் கண்ணு" என திருஷ்டி சுற்றிவிட்டார் மீனம்மா.

அவள் அவனை மன்னித்துவிட்டாளா, என்றால், 'எப்படி போட்டு படுத்துனான்' என்றும் தோன்றும், ஆனால் மறுபக்கம் பாவமாகவும் தோன்றி தொலைக்கிறது. அதனால் அவன் பேசினால் கூட, பொறுமையாக பதில் சொல்ல வைக்க துவங்கியிருந்தாள்.

அங்கிருந்து வந்தபின், "நா அங்க நடந்தத வீடியோ எடுத்தேன்" என அதையும் அனுப்பி வைத்தாள்.

"அதுல அவர் எங்கையுமே, 'ஏமாத்தி தான் வாங்குனேன்'னு சொல்லவே இல்ல மனோ. கிரிமினல்" என்றிருந்தான் பதிலாக. அதன்பின் அங்கு நடப்பதை அவ்வபோது அழைத்து கூறுவான், நடுவில் வந்து பிள்ளைகளுடனும் வெளியே அழைத்துச்சென்று வந்து இறக்கிவிட்டுச் செல்வான்.

"லீவு முடியுது மனோ?" என சொல்லவே இப்போது அழைத்திருந்தான்.

"அதுக்கு? ஒரு மாச லீவுன்னு தெரிஞ்சு தான எடுத்துட்டு வந்தீங்க?"

"ஆனா வந்தப்றம் உன்னையும் கூட்டிட்டு போற ப்ளானுக்கு வந்துட்டேன்ல?"

"அதுக்காக?"

"மனோ ப்ளீஸ்டி!"

"இனியும் அங்க தான் இருக்க போறீங்களா?"

"இல்ல. இங்க இவர சும்மாவா விடமுடியும்? இடத்த திரும்ப நம்ம பேருக்கு மாத்தணும் ஒன்றரை கோடி, என்னோட எத்தனை மாச உழைப்பு அது. அதுக்கு நா இங்க இருக்கணும். அதனால போய்ட்டு ரிசைன் பண்ணிட்டு வரலாம்னு பாக்றேன்"

"ஓ! அப்ப இங்க வேற வேலை?"

"புதுசா ஏதாவது ஆரம்பிக்கணும். உனக்கு அங்க வேலை புடிச்சுருக்குன்னு சொல்ற தானே? அதான் அங்கேயே எதாவது பிஸ்னஸ் பண்ற மாதிரி ப்ளான் பண்ணணும். வந்துட்டு அத யோசிப்போம். லேண்ட் பிரச்சனைய அதுக்கு முன்ன முடிச்சாகணும் அப்பதான் ரிலீஃப் கிடைக்கும்" என பேசவும்,

"போய்ட்டு வாங்க" என்றாள் அமைதியாக,

"உனக்கு ஓகேவா மனோ?"

"ஓகே இல்லன்னு சொன்னா?"

"இங்க தான் இனி வேலைன்னு ஆகிடுச்சேன்னு இருந்துக்க வேண்டியது தான்"

"ஒரு க்ளோஷர் குடுக்க வேணாமா அங்க உங்க கம்பெனில?"

"குடுத்தா, செட்டில்மெண்ட் எக்ஸ்பீரியன்ஸ் செர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டு வரலாம்"

"நீங்க ஸ்டே பண்ணிருக்க வீடு?"

"அது இஷ்யூ இல்ல வள்ளுவன் பார்த்துப்பான்"

"அவர நம்பலாமா?"

"பயந்தா யாரையும் நம்ப முடியாம போயிடும் மனோ. இனி ஆளுங்கள பார்த்து தேர்ந்து தான் பழகணும் வேறென்ன செய்ய? நா போனா எல்லாம் முடிச்சு அமௌன்ட்டும் க்ளியர்கட் பண்ணிட்டு வந்துடுவேன்"

"அப்ப சரி போய்ட்டு வாங்க"

"எங்கூட வரவே மாட்டேன்னு சொன்ன, இப்ப வாங்க வாங்கன்ற?"

"பாவம் ஏமாந்து நிக்றீங்களே? வேறென்ன பண்ண? நா உங்கள நம்பி ஏமாந்தப்போ எனக்கு கஷ்டமா இருந்தத விட இந்த துரோகம் தந்த ஏமாற்றமான வலி ஜாஸ்தியாச்சே? பாவமேன்னு மட்டுந்தான்"

"சேட்டை கூடிப்போச்சுடி, நேர்ல வந்து பேசிக்கிறேன்" என மிரட்ட,

"வைக்கிறேன்" என வைத்துவிட்டாள்.

ஊருக்கு கிளம்புமுன் வந்தவன், அவர்களுக்காக அன்று வாங்கி வந்ததை இன்றுதான் எடுத்து பிள்ளைகளிடம் கொடுத்தான், "அப்பா ஊருக்கு போய்ட்டு வரேன். டூ மந்த்ஸ்ல வந்துருவேன். வரும்போது என்ன வேணும்னு சொல்லுங்க வாங்கிட்டு வரேன்" என சொல்லியே கிளம்பினான்.

பாலா கூட, "போய்ட்டு வாங்க பாத்துக்கலாம், உழைச்ச காசு கண்டிப்பா அனாமத்தா போகாது. மீட்டுடலாம். நாங்களாம் இருக்கோம்ல" என சொல்லியே வழியனுப்பினான்.

கடைசியாக மனோவிடம் வர, அவளருகே வந்தவன், இறுக அணைத்தான். ஒரு முழுநிமிடம் அப்படியே தான் நின்றான். அனைவரும் விலகி வெளியே சென்றுவிட்டனர்.

உள்ளேயே தான் வைத்திருக்கிறான், அவ்வளவு வலித்தது. அவன் மாமா ஏமாற்றியதை அவனால் தாங்கிகொள்ளவே முடியவில்லை, முதலில் ஒரு வாரம் தூங்க கூட முடியாமல் அவதிபட்டுவிட்டான். மனைவியை தேடினாலும் அவளிடம் கூட முகம் நிமிர்த்த முடியவில்லை, "உனக்கு நல்லா வேணும்டா!" என்ற பார்வை பார்த்துவிடுவாளோ என்று பயமாகவும் இருந்தது அவனுக்கு.

அவள் பெயரிலேயே முடித்திருக்கலாமோ, கட்டியவளை கண்டுகொள்ளாமல் அழவிட்டு செய்ததன் பலனுக்கு தான் இவ்வளவு பெரிய தண்டனையோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். இதில் மீண்டும் அமெரிக்கா என்றதும் மொத்தமாக ஒதுக்கிவிடுவாளோ என்றுமிருந்தது. வேலையை வேணாம் என எழுதி கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் என அவன் சொன்னாலும் அவள் நம்ப வேண்டுமே, இதற்கு முன்னும் அப்படி சொல்லித்தானே கிளம்பி சென்றுவிட்டு வராமல் இருந்துகொள்வான், அதை இந்த முறை சொல்லவே பயமாக தான் இருந்தது அவனுக்கு. ஆனால் அவள் வெகு இயல்பாக அவனை அவன் வார்த்தையை நம்பி ஏற்றுக்கொண்டாள்.

அவள் அவனை எப்போதுமே நம்பியிருக்கிறாள், அவன் தான் அதை எல்லாம் அலட்சியம் செய்து வேடிக்கை பார்த்துவிட்டான்.

இதோ இப்போதும் அவள் முன் நிற்கிறான், எப்பவும் போலான பார்வை தான், அழுது சண்டையிட்டு வலியனுப்புபவள், அமைதியாக சிரித்தபடி நிற்கிறாள்.

அவன் அணைப்பை மெல்ல உள்வாங்கியது அவள் உடல். வெகுநாட்கள் கழித்து கிடைக்கும் அவன் ஸ்பரிசம். ஆழ மூச்செடுத்து அவனை ஏற்றாள். தள்ளிவிடவோ, மறுத்து நிறுத்தவோ மனம் வரவில்லை. ஒன்று வெகுதூரம் செல்கிறான், மற்றொன்று மனதில் பாரத்தோடு செல்கிறான். அதனால் அவனுக்குள் அடங்கி நின்றாள், தன்னால் முடிந்த ஆதரவாக உடலை தளர்த்தி நின்றாள்.

"சாரிடி மனோ!" என்றவன் நிமிர, அவள் தோளில் அவன் சாய்ந்திருந்த இடத்தில் ஈரம் உணர்ந்தாள்.

"போய்ட்டு வாங்க" என்பதை தவிற வேறெதுவும் கேட்டு, பேசி அவனை துவண்டு போக வைக்கவில்லை. நன்கு நிமிர்ந்தவனும், தலையசைத்து கிளம்பிவிட்டான்.

சென்னை சென்று அங்கிருந்து தான் விமானம், அக்கா வீடு செல்ல மறுத்தவனை சாம்பவி மூலம் அறிந்து பேருந்து நிலையமே தேடிவந்து வம்படியாக இழுத்துச் சென்றான் சுரேந்தர்.

"அப்படியே ஒதுங்கி இருந்துடுவியா நீ? உன் அக்கானா நாலு கொட்டு வச்சு கூட திருத்துவியா, விட்டுட்டு ஓடுற" என பிடித்து வந்திருந்தான்.

ஆனால் லதாவோ வந்ததும் வராததுமாக, "அமெரிக்கால வேலைய விட போறியாம்? விட்டுட்டு இங்க வந்து விவசாயம் பண்ண போறியா? அறிவே இல்லையாடா?" என தான் ஆரம்பித்தாள்.

"அது என் இஷ்டம் எனக்கு என்ன வருமோ அத செஞ்சுட்டு போறேன். உன் வேலைய நீ பாரு" என்றான் வெடுக்கென்று.

"ஏற்கனவே சேர்த்து வச்சு வாங்குனதும் போச்சு, இனியும் இங்க வந்துட்டா, பிள்ளைகள நா அங்க அனுப்பி படிக்க வைக்க உன்னையும் உன் வீட்டயும் தான நம்பி இருந்தேன்டா"

"நா மறுபடியும் அங்க போனா என் பொண்டாட்டி அப்படியே போயிருன்னு சொல்லிட்டா. பரவால்லையா?"

"அவளுக்காக நா என் பிள்ளைங்க படிப்ப கெடுத்துக்க முடியாது"

"நீ படிக்க வை. அங்க அனுப்பி தாராளமா படிக்க வை. என்னைய ஏன் சேக்குற இதுல?"

"என்ன படிக்க வைன்னா? அங்க அனுப்ப எவ்வளவு செலவாகும்? நீயும் கொஞ்சம் குடுத்து உதவினா தான முடியும்? நா என்ன வேலைக்கா போறேன்? தங்க வைக்ற செலவு அதுவேற தனியா வரும். எல்லாம் எப்படி நா மட்டும் பாக்க முடியும். நீயும் ஹெல்ப் பண்ணுவன்னு நம்பிருந்தேன்ல?"

"நா என் பொண்டாட்டி பிள்ளைங்கள எப்ப பாக்குறதுக்கா?" என்றான் இன்னும் நிதானமாக, சுரேந்துரும் மனைவி எதுவரை செல்கிறாள் என அறியவே அமைதியாக பார்த்தே இருந்தான்.

"ஏன் அவளுக்கு என்ன? வேலைக்கு போறா, ஃப்ரீயா அந்த பள்ளிகூடத்துலயே பிள்ளைகளையும் படிக்க வைக்கிறா. அவ அப்பா, அண்ணாலாம் செய்றதுக்கு கூடவே இருக்காங்க. அவளுக்கு என்ன குறையாம்?" என்றாள்,

"அவங்களாம் செஞ்சா நா பிள்ள பெத்துக்கவே லாய்க்கில்லாதவன்னு என் பொண்டாட்டி சொல்லிட்டா. அதனால இனி அவங்க மூணு பேரையும் கூட இருந்து பாத்துக்குறது தான் என் வேலை. உன்னால உன் பிள்ளைய படிக்க வைக்க முடியலனா நீ பிள்ளைய பெத்துருக்க கூடாது" என எழுந்தவன், "இதுக்குத்தான் நா இங்க வரலன்னு சொன்னேன். அக்கா பண பிசாசா மாறிட்டே வர்றா, கொஞ்சம் அடக்கி வைங்கத்தான். இல்லனா நாளைக்கு பிள்ளைங்க நிலைமை தான் கஷ்டம். நா ஏர்போர்ட் பக்கமே ரூமெடுத்து தங்கிக்கிறேன். பை" என கிளம்பிவிட்டான்.

"பாத்தீங்களா எப்படி பேசிட்டு போறான்னு. நா பண பிசாசா? தம்பியா பொறந்துட்டு அக்கான்ற பாசமே இல்லாம எப்படி பேசிட்டு போறான்னு பாருங்கங்க" என சுரேந்தரிடம் அவ்வளவு கோவமாக பிராது கூற,

சுரேந்தர் ஓங்கி ஒரு அறை வைத்ததில் வாயை கப்பென்று மூடிக்கொண்டாள், "நீ எல்லாம் எதுக்கு பிள்ளை பெத்தன்னு என்னைய கேட்காம கேட்டுட்டு போறான், உனக்கு அது அசிங்கமா தெரியல இன்னும் கெஞ்சிட்டு நிக்கிற? உன்னய பட்னியா போட்டு கொல்லுதேனா நானு? எதுக்கு இன்னும் வேணும் வேணும்னு அலையிற? வீட்ல சும்மா உட்கார்ந்துருக்கனால தான அடுத்தவன் சம்பாத்தியத்தோட அருமை புரியல? ஒரு மாசம் டைம் உனக்கு அலைஞ்சு திரிஞ்சுனாலும் வேலை தேடி, வேலைல உட்காருற. அதுவர க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ஜிபேன்னு எதுலயும் கை வைக்க கூடாது நீ. மூஞ்ச பாரு வந்துட்டா பாசமில்லையா ஹேரு இல்லையான்னுட்டு. அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இத்தன வருஷத்துல என்னத்தடி எடுத்து போட்டு தவிச்சு போய்ட்ட? அந்த பிள்ளைகளுக்கு அத்தைகாரி தான நீ? இங்க இருந்து அவன டிக்கெட் போட சொல்லி கிளம்பி பைய ஆட்டிட்டு போவியே, அவன் பொண்டாட்டி கூட தான அவன் சண்டை. பெரியவனனாலும் உன்கூட கூட்டிட்டு போய் காமிச்சுருப்பியா? நீ மட்டும் அவன் செலவுல உன் பிள்ளைகள ஆக்ஸ்ஃபோர்டுல படிக்க வைப்ப, அவன் பிள்ளைக நறுமணந்திய தாண்டிடவே கூடாது. என்ன கேவலமான எண்ணம்டி உனக்கு. நானும் பிள்ளைக பாசத்துல என்னத்தையாவது செஞ்சு தொலைக்குறன்னு அமைதியா போயிட்ருந்தா, இன்னைக்கு கஷ்டப்பட்டு சம்பாதிச்சத தொலைச்சுட்டு வந்து நிக்றவன்ட்ட நீ பேசுற பேச்சு? ச்சி போய் தொலை கண்ணு முன்ன நிக்காத" என அவளை தள்ளி அவன் முகத்தை சுழித்ததில், விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள் லதா.

"திருந்தாத ஜென்மம். வேலை ஞாபகம் இருக்கணும். இனி அம்மா வீடு ஆட்டுகுட்டி வீடுன்னு கிளம்பு கால ஒடிக்கிறேன்" எனவும் பேச, உள்ளிருந்து கேட்டவளுக்கு அழுகை பீறிட்டது. 'படிப்பை முடித்து பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது, இப்போது சென்று நின்றால் எவன் வேலை கொடுப்பான்' என முனங்கியபடி நின்றாள். வேறெதுவும் அநாவசியமாக யோசிக்காமலிருக்க அவள் மூளைக்கு வேலை வைத்துவிட்டான் சுரேந்தர்.

மார்கண்டேயன் அமெரிக்கா சென்றதும் முதலில் கொடுத்தது ராஜினாமா கடிதம் தான். மூன்று மாதம் கட்டாயமாக வேலை பார்த்தே அவன் அங்கிருந்து விலக முடியும் என்பது தகவல் தொழில்நுட்ப உலகின் கோட்பாடு. அந்த மூன்று மாதத்திற்குள் அவன் குழுவில் வேறொரு தலைமையை தேர்ந்தெடுத்து அவன் தகுதிக்கு அவனை மெருகேற்றி அந்த குழுவை மேம்படுத்திவிட்டே விலக வேண்டும். ஒத்துக்கொண்டான் மார்க்.

"வீட்டு லீச மொத்தமா உன் நேமுக்கு மாத்திக்கோடா. ஓனர வர சொல்லிருக்கேன் பேசிடலாம்" என திருவள்ளுவனிடம் சொன்னதற்கு, "நீ இல்லாம எப்பிடிடா இருக்க போறேன். சுவத்துட்ட பேசுற மாதிரியாவது பேச நீ இருந்த, இனி நீயும் இல்லைனா இவ்ளோ பெரிய வீட்ல நா என்னடா பண்ணுவேன்?" என வசனம் பேச,

"அப்ப சரி நா உனக்கும் வேணாம்னு சொல்லி க்ளைம் பண்ணிக்கிறேன். நீ ரோட்ல தூங்கு. நிறைய பேர் கம்பெனி கிடைப்பாங்க, சுவரே இல்லாம பேசலாம் நீ" என்றான்.

"ம்ச் என்னயும் கூட்டிட்டு போ மார்க்"

"ஹான் கூட்டிட்டு போயி?" என்றான் இவனும் கிண்டலாக. அவன் விளையாட்டாக பேசுவதாக நினைத்து இவனும் விளையாட்டாகவே பதில் கூறிக்கொண்டிருந்தான்.

"எப்டியும் ஊர்ல போய் பிஸ்னஸ் பண்ண போற தான? என்னையும் பாட்னராக்கிக்கோ மார்க்"

"உங்கப்பாவ எப்புடுறா சமாளிப்ப?"

"உன் கதைய சொல்லித்தான். அவன் சொந்த தாய்மாமாவே அவன ஏமாத்திட்டாரு. வெளிநாட்ல வேலை பாத்தேம்னா உங்களையும் ஏமாத்த இப்படி நாளு பேர் கிளம்பி வருவாங்கன்னு சொல்லி அல்ரெடி அவங்க மைண்ட்ட ரெடி பண்ணிட்டேன். அனுபவிக்க வேண்டிய வயசுல பொண்டாட்டி அங்கையும் நா இங்கையும் இருந்துட்டு, காலம்போன கடைசில போயா அவள கொஞ்ச முடியும்?" என பேச,

"நிஜமாவாடா சொல்ற?"

"ஏன் நானெல்லாம் என் பொண்டாட்டிய கொஞ்ச மாட்டேனா?"

"ச்சி டேய். நிஜமாவே வர்றேன்றியா?" என கைக்கருகிலிருந்த ரீமோட்டால் அவன் மண்டையில் அடி போட்டான்.

"ஆமா உன்ன வச்சுத்தான் ஊரு பக்கமே வந்துரலாம்னு பாக்றேன் நானும். விட்டு போயிடாதடா"

"டேய் நானே என்ன பண்றதுன்னு இன்னும் டிசைட் பண்ணலடா"

"இனி யோசிப்போம். நானும் வர்றேன் சேர்ந்து யோசிச்சு எதாவது பண்ணுவோம். நானும் சேர்த்து வச்சுருக்கேன்ல இன்வெஸ்ட் பண்றேன். பெர்சென்ட்டேஜ் ஷேர் பண்ணிக்லாம்" என ஆர்வமாக பேச, அவனை மேலும் கீழும் பார்த்தவிட்டு, மறுத்து தலையசைத்தான் மார்கண்டேயன்.

"ஏன்டா?"

"நா யாரையும் நம்புறதில்லன்னு முடிவு பண்ணிருக்கேன்"

"அடப்பாவி என்னைய கூடவா?"

"ஆமா முக்கியமா நீதான். ஒரே வீட்ல கூடவே வச்சுருந்தவன தான் நம்பவே கூடாதுன்னு தெளிவா இருக்கேன். நல்லா முழுசா என்னைய பத்தி தெரிஞ்சுட்டு எல்லாவகையிலும் ஏமாத்துறது"

"அடேங்கப்பா உன்னைய ஈகோ பிடிச்சவன்னும் தனியா தாந்தோனியா திரியிறவன்றதையும் தவிர உன்னய பத்தி நா தெரிஞ்சுக்க நீ என்னத்த என்ட்ட பேசிட்ட சொல்லு. உன் பசங்கள ஒருநா வீடியோ கால்ல காமிச்சிருப்பியாடா? நா என் குடும்பத்தையே உனக்கு இங்க இன்டரோ குடுத்தேன். நீ அப்படி கூட அவங்கள வரவைக்கல. உன் அக்கா அதுக்கு மேல, ஏதோ அவங்க வீட்ல நா வேற வழியில்லாம வந்து உட்கார்ந்துருக்க மாதிரி ஒரு பேஸ்கட்டோடயே சுத்தி வந்துட்டு போவாங்க. வேற என்ன தெரியும்னு உன்ன நா ஏமாத்திருவேன் ராசா. நீ என்னய ஏமாத்தாம இருந்தா சரி"

"முடிவே பண்ணிட்டியா?"

"என் டீம்லயே சொல்லிட்டேன். பேப்பர் போடணும் மெயில் அவ்ளோ தான்"

"சரி யோசி" என்றுவிட்டான்.

"கண்டிப்பாவா?"

"ஆமாடா. ஐடியா யோசி" என்றான் இவனும் யோசித்தவனாக.

"உன் மாமாவுக்கு எதிரா தேனீ பண்ணையே வச்சா என்ன?"

"அதுக்கு நா வேற ஐடியா பண்ணிட்டேன். எனக்கு அதுல அ, ஆ கூட தெரியாது. சோ அவர் பண்ணைல நல்லா வேலை தெரிஞ்ச நாலு பேர தனியா தூக்கிட்டேன். சம்பளத்துக்கு வேலை பாக்றவங்க எங்க அதிக சம்பளம் கிடைக்கோ மாறிப்பாங்க தானே, சோ மாத்தி அங்க உள்ள இன்னொருத்தர் தேனீ பண்ணைல சேர்த்து விட்ருக்கேன், அங்க ஃப்ராங்கைஸர் மாதிரி ஜாயின் பண்ணிருக்கேன். நீ சொன்ன அதே தான், லாபத்துல பங்கு எனக்கு. அவர மொத்தமா வீட்ல உட்கார வைக்குறவர எனக்கு உள்ளுக்க குத்திட்டே தான் இருக்கும். இனி எந்த பணத்தையும் வேஸ்ட் பண்றதா இல்ல எல்லாமே இன்வெஸ்ட்மென்ட் தான்"

"சரிவிடு செஞ்சதுக்கு கண்டிப்பா அனுபவிப்பார்டா. நீ சொல்லு வேற என்ன பண்ணலாம்?"

"முதல்ல எனக்கு அந்த யோசனை இல்ல. இப்ப நீயும் வர்றனா நாம ப்ரைவேட்டா ஐடி சொல்யூஷனே ஆரம்பிப்போமா? சின்ன சின்ன ப்ராஜெக்ட்டா ஸ்டார்ட் பண்ணுவோம். பட் உன் ஃபேமிலி சிட்யூவேஷனுக்கு ஒத்துவருமான்னு பார்த்துக்கோ. இங்க வாங்குற சம்பளம்லாம் உடனே எடுக்க முடியாது, வருஷமாகும் அதுக்கு"

"சூப்பர் மார்க். நமக்கு தெரிஞ்ச வேலை. ப்ராஜெக்ட் வாங்கத்தான் கொஞ்சம் மெனக்கெடனும் பட் அதுக்கு நம்ம அமெரிக்கா ப்ரொஃபைல் ஹெல்ப் பண்ணும்"

"உனக்கு ஓகேவா"

"டபுள் ஓகேடா"

"அப்ப சரி அதுக்கு என்ன ப்ரொசீஜர்னு பாப்போம்" என முடிவெடுத்தனர்.

அங்கிருந்தாலும் வழக்கிற்கு தேவையானவற்றை விசாரிக்கவும் செயல்படுத்தவும் அவன் நண்பனிடம் தான் பேசியிருந்தான். ஒரே காம்பவுன்டிற்குள் இருந்த வீடென்றாலும் மார்க்கின் வீடு அவன் அப்பா பெயரிலும், அவன் மாமா வீடு அவன் மாமா பெயரிலும் தான் இருந்தது. அதனால் இடத்தை மாற்ற வேண்டாம் என்றெண்ணியன், நடுவில் பெரிய சுவர் மட்டும் எழுப்பினான். ஊருக்கே அவர்கள் குடும்ப விஷயம் தெரிந்திருக்க, அவன் மாமாவை பேசாதவர்கள் இல்லை.

அவன் அம்மாவிற்கு உதவி வேலைக்கு என ஆட்கள் வைத்தான். கையில் செலவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, "ரெண்டு மூணு மாசம் தான் வந்துடுவேன் அதுவர இத வச்சுக்கோங்க" என சொல்லிவிட்டு தான் வந்திருந்தான். அதனால் அங்கு அவன் செல்லும்வரை சமாளித்துகொள்வர். அவன் மாமா மட்டும் எதுவும் பிரச்சனை செய்யாமல் இருக்க வேண்டும், தினமும் அழைத்து அதையும் விசாரித்து கொண்டுதான் இருக்கிறான்.

மனோவிடமும் பேச மறப்பதில்லை, எதையும் பகிர மறப்பதில்லை, "என்ன பண்றீங்க?" என தான் இன்றும் ஆரம்பித்தான்.

"ஸ்டடி டைம் இப்போ"

"எனக்கு ஈவ்னிங் அப்போ நீ ஸ்கூல் கிளம்பிட்ருக்க அதான் இப்ப கூப்பிட்டேன்"

"சரி சொல்லுங்க"

"வள்ளுவனும் அங்க வரேன்றான். நாங்க ஐடி சொல்யூஷன்ஸ் சின்னதா ஃப்ரீலான்ஸ் மாதிரி ஸ்டார்ட் பண்ணலாமான்னு பாக்றோம்"
 
"குட் தான். ந்யூவா ஒன்ன ஸ்டார்ட் பண்றதுக்கு பதில் இது ரொம்ப நல்லது"

"ம்ம் வந்துட்டு தான் அதுக்கானத பாக்கணும் மனோ"

"ஓகே, எங்க வச்சு பண்ணுவீங்க? நம்ம ஏரியால டவர் நெட்ஒர்க் இஷ்யூ வருமே?"

"அதெல்லாம் இப்ப பிரச்சனை இல்ல, ரூட்டர் வாங்கிக்கலாம். உனக்கு ஸ்கூல் போகணும்ல. சோ நாம அங்கேயே பண்ணலாம். வீடு மட்டும் வேற பாக்கணும். வரமாட்டேன்னு சொல்லாதடி" என அவனே முந்திகொண்டு சொல்ல,

"ஸ்கூல் ஸ்கூலுன்னு அதையே சொல்றீங்க? நா என்ன கவர்ன்மெண்ட் வேலையா பாக்றேன். சென்னை, பேங்களூர் மாதிரி நீங்க ஸ்டார்ட் பண்ணாலும் பண்ணுங்க. நா அங்க வந்து ஏதாவது ஸ்கூல்ல ஜாயின் பண்ணிப்பேன். ஆனா கண்டிப்பா வொர்க் பண்ணுவேன்" என்றாள். அவள் வரமாட்டாள் என்பதற்காக அவன் யோசிக்கிறான் என நினைத்து அவள் சொல்ல, அவளுக்காகவே அந்த இடத்தைவிட்டு போகவேண்டாம் என அவன் முடிவெடுத்திருந்தான்.

"வேண்டாம் நாம அங்கேயே இருக்கலாம். எனக்கு அங்க தான் இருக்கணும்" என்றுவிட்டான்.

இதற்கிடையில் அவன் வரும் மூன்று மாதத்திற்குள், அவர்கள் வழக்கு முதல் விசாரணைக்கு வந்தது. அதில் அவன் அம்மாவை அழைத்துச்செல்ல சுரேந்தரை தான் கேட்டிருந்தான் மார்கண்டேயன்.

அதற்காக சுரேந்தர் கிளம்பி வந்திருக்க, வருவேன் என அடம்பிடித்த லதாவை, 'வேலையை தேடு' என அடக்கிவிட்டு தான் வந்திருந்தான். இரண்டு மாதங்களாக தேடுகிறாள் வேலை கிடைத்தபாடில்லை. அதற்காக இப்போது படி என ஒரு கோர்ஸ் வகுப்பிலும் சேர்த்துவிட்டிருக்க, அதனோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறாள்.

சுரேந்தர் தான் வருகிறான் என மார்க் மூலம் அறிந்த மனோ, சுரேந்தரனோடு பேசி தானும் இணைந்துகொண்டாள்.

"அவங்களுக்கு நா சொல்லிக்கிறேன் அண்ணா. உங்களோட அத்தைக்கு துணைக்கு நானும் வரேன். ஒத்தைல பயந்துட்ருப்பாங்க" என்கவும்,

"சரிம்மா" என்றுவிட்டான்.

அங்கு விசாரணைக்கு மார்க்கின் அம்மா, அப்பா இருவரும் வந்து காத்திருக்க, இவர்களும் நேரே நீதிமன்றம் தான் சென்றனர். இவளை பார்த்ததும் அழுதேவிட்டார் சாம்பவி. அன்றைக்கு பார்த்தும் பேச முடியாமல் விட்டிருக்க, இன்று அவளே வந்து நிற்க கண்டு அவருக்கு தைரியம் கிடைத்ததுபோலிருந்தது.

"பயப்படாதீங்க. உங்களுக்கு தெரியாம நடந்தது தானே? அத அப்படியே சொல்லுங்கத்தே" என்றான் சுரேந்தர்.

"இடத்த விட்டுகுடுத்துருக்கான்னு வந்து கெஞ்சிட்டு நிக்றான் அவன். இவளும் பாவமா பாத்துட்டு நிக்றா. நாந்தான் திட்டி அனுப்பிவிட்டேன். என் பையன இவளும் சேர்ந்து ஏமாத்த போறாளோ என்னவோ?" என்றார் மார்க்கின் அப்பா விரக்தியாக.

"அவர இன்னுமா நம்புறீங்க?" என்றான் சுரேந்தர்.

"பழக்கதோஷம் என்ன செய்வேன் நான்?" என்றவர் பாவமாக மருமகளை பார்க்க, மனோ எதுவுமே பேசினாள் இல்லை.

அவன் மாமா குடும்பம் அப்போதுதான் வந்தது. மாமா முறைத்து கடந்து செல்ல, அவர் மனைவியும், கிஷோரும் பார்க்காமலே சென்றனர்.

விசாரணையின் போது, அவர் நேர்மையாக மாத்தி வாங்கினேன் என சொல்ல, சாம்பவி, என்னவென்று தெரியாமல் தான் கையெழுத்திட்டேன் என்றார். பணமும் தரவில்லை எனவும் சேர்த்தேசொல்லிவிட்டார்.

"நீங்கள் பணம் கொடுத்ததற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்" என மாமாவுக்கும், "உங்களை ஏமாற்றி தான் சொத்தை கைபற்றினார் என்பதற்கு சாட்சிகள் வேண்டும்" என சாம்பவிக்கும் சொல்ல, சாம்பவி பக்கம் உடனடியாக சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர்
அன்று சாட்சி கையெழுத்திட்டவர்களே வந்து, "அந்தம்மாக்கு அது என்னனு தெரியாது. பவர் மாத்தி வாங்குறதா சொல்லி ஏமாத்தி தான் அவங்க தம்பி கையெழுத்து வாங்கிகிட்டாரு" என கூறிவிட்டனர்.

மாமா பக்கம் வாய்தா வாங்கிகொள்ளப்பட்டது. கேஸ் அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எரிச்சலுடன் வெளியே வந்த மாமா முன் சென்று சின்ன சிரிப்புடன் நின்றாள் மனோ. இங்கு நடப்பதை அறிந்துகொள்ள காத்திருந்தவனுக்கு அவன் மாமாவும் அவன் மனைவியும் நேருக்கு நேர் நிற்கும் நிழற்படம் தான் அனுப்பிவைக்கப்பட்டது.

 
Top