கோமதியை வீட்டிற்கு அழைத்து வந்து ஒருவாரம் கடந்திருந்தது. அவரை பக்கத்தில் இருந்து சாருமதி தான் கவனித்து பார்த்துக் கொள்கிறாள்.
கோமதியை மருத்துவமனையில் சேர்த்த பொழுது ஒருமணி நேரம் என்று மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல, சிறிது நேரத்தில் கண்விழித்துவிட்டார் கோமதி. அவரின் கையை பிடித்து, “எங்களை விட்டு போக பார்த்தல கோம்ஸ்? உனக்கென்ன அவ்வளவு அவசரம்?” என அழுகையுடன் கேள்வி கேட்ட சாருமதியை கண்ணில் கண்ணீருடன் ஏறிட்ட கோமதி அழாதே என செய்கை செய்தார்.
அதன் பின் மூன்று நாட்கள் மருத்துவமனை வாசம் முடித்து வீட்டிற்கு திரும்ப சாருமதியும் அவரை பார்த்துக்கொள்ள அவருடன் வந்துவிட்டாள்.
முதல் நாள் சாருமதியின் கூடவே இருந்த தேவா அடுத்த நாள் வேலைக்கு சென்றுவிட்டு மாலை மட்டும் வந்து கோமதியை பார்த்தான். அவனுடன் செல்வராணியும் வந்து அவர்களுக்கு தேவையானதை செய்துக்கொடுத்தார்.
ஒருவாரம் யாரேனும் உதவியை எதிர்பார்த்த கோமதி சற்று தேறியதும் அவரே அவரின் வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டார். கோமதி சற்று தேறியதும் சாருவை அவள் வீட்டிற்கு போக சொல்ல, “இன்னும் ஒரு வாரம் இருக்கேன் கோம்ஸ்” என மறுத்துவிட்டாள்.
அதற்குமேல் சாருவிற்கும் தேவாவை பிரிந்து இருப்பது கஷ்டமாகவே இருந்தது. இருந்தாலும் ஒருவாரம் இருப்பதாய் சொல்லிவிட்டு கிளம்பவும் அவளுக்கு மனசு வரவில்லை.
காலையில் எழுந்ததும் தேவாவின் முகத்தில் விழிப்பது, அவனுடன் சண்டை போட்டுக்கொண்டே ஒரே கண்ணாடியில் இருவரும் இடித்துக்கொண்டு கிளம்புவது, மாலையில் அவனுடன் செலவிடும் த(இ)னிமையான பொழுதுகள்.
எல்லாவற்றிக்கும் மேலாக இரவில் அவள் கண்விழித்து செய்யும் வேலைக்கு அதட்டி கண்டிக்கும் அவனின் அக்கரை நிறைந்த தருணங்கள் என அனைத்தையும் அவளின் மனம் தேடியது.
இந்த பிரிவில் தான் அவளுடனும், அவளின் வாழ்க்கையுடனும் தேவா எவ்வளவு இன்றியமையாததாக கலந்திருக்கிறான் என்று உணர்ந்தாள்.
ஒருவாரம் முடிந்து அன்று மாலை வேலை முடித்து அப்படியே தேவாவின் வீட்டிற்கு சென்றாள் சாருமதி. அறையெங்கும் தேவாவின் பிரத்தியேக வாசம் அவளை கட்டிக்கொள்ள தனக்கு சொந்தமான இடத்திற்கு வந்த உணர்வு தோன்றியது.
மாலை தேவா வந்ததும் அவனின் தோளில் மாலையாக கைப்போட்டவள், “நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ண தேவ்!” என அவனின் மார்பினில் முத்தமிட்டாள். புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தவன், “ஆஹான்.. அப்புறம்?” என்றான் சீண்டலாக.
“நான் இப்படி இருந்ததே இல்லை தெரியுமா? காலைல உங்க முகத்துல முழிக்காம, நைட் உங்ககிட்ட லேப்டாப் யூஸ் பண்ணி திட்டு வாங்கிட்டு உங்கள கட்டிபிடிச்சு தூங்காம எனக்கு எதுவுமே ஓடல..” என சிறிது கண்கலங்க அவனை நிமிர்ந்து பார்த்து கூறியவள்,
“என்னை எவ்வளவு மாத்திட்டீங்க தேவ்? எங்க போனாலும்.. என்ன பண்ணாலும்.. எல்லாத்துலயும் உங்களை தான் தேட தோணுது. இது தான் காதலா? நீங்க இல்லாமா என்னால ஒரு அணுவையும் அசைக்க முடியலையே!” என அவனின் முகத்தை வருடி சொன்னவளின் மனதிலும் கண்ணிலும் காதல் கரைபுரண்டு ஓடியது.
அவள் சொல்ல சொல்ல தேவாவின் அணைப்பும் இறுக, “ஹ்ம்ம். இருக்கலாம். நீ சொல்லு காதல்ன்னா எப்படி இருக்கணும்னு நினைக்கிற?” என்றான் தெரிந்துக்கொள்ளும் ஆவலில்.
அவளும் அவனுடன் நன்றாக ஒட்டிக்கொண்டு, “என்னை பொறுத்தவரைக்கும் காதல்னா நம்பிக்கை தான். இவங்கக்கூட இருந்தா பாதுகாப்பா இருக்கும். இவங்க கூட நாம நாமலா இருக்கலாம். இவங்கள கண்ணை மூடிட்டு நம்பலாம் அப்படின்னு தோணனும்” என்றாள் தீவிரமாக.
“தோணாமையா கல்யாணத்துக்கு சரி சொன்னேன்? உங்கள நம்பிதான் கல்யாணத்துக்கு சரி சொன்னேன்! எல்லாம் சிவமயம் மாதிரி இப்ப எல்லாமே எனக்கு தேவமயமா இருக்கு!” என்றவளின் கண்களில் அவனுக்கான மின்னல் மின்னியது.
‘ஐ லவ் யூ! நான் உன்னை காதலிக்கிறேன்!’ என்ற வார்த்தைகள் தராத பூரிப்பையும் நிறைவையும் ‘நான் உங்களை நம்பினேன்! எனக்கு எல்லாமே நீங்கதான்!’ என்ற வார்த்தைகள் தேவாவிற்கு அளித்தது.
தன்னுடைய காதலை அவளிடம் இன்னும் பகிரபடாத நிலையில், ‘தன்னவள் தன்னை நம்பினாள்! தன்னை தேடியிருக்கிறாள்!’ என்பதை எண்ணி அவன் உள்ளம் கர்வம் கொண்டது.
அவளின் சிவந்த முகத்தை விரல்களால் கோலமிட்டப்படியே, “நானும்..” என அவன் உணர்ந்த காதலை சொல்ல துவங்கிய பொழுது சரியாக அவனின் அலைபேசி அதனின் இருப்பை உணர்த்தியது.
அழைத்தது அவனின் உயர் அதிகாரி என்பதால் தவிர்க்க முடியாமல் ‘கரடி!’ என சொல்லிவிட்டு அழைப்பை ஏற்று பேசிவிட்டு வந்தவன்,
“வாவ் தேவ்! பிப்ரவரி! பெங்களூர்! வலன்டைன்ஸ் டே! செம்ம டைமிங் தெரியுமா? நானும் வரேனே..” என்றவளை ஏமாற்ற விரும்பாமல் சரி என்று ஒப்புக்கொண்டவன், ‘வலன்டைன்ஸ் டே அப்பவே நம்ம காதலை சொல்லிக்கலாம்’ என காதல் சொல்வதை தள்ளியும் வைத்துவிட்டான்.
ஒருவாரம் சென்ற நிலையில் சாருமதிக்கு மாதவிடாய் வந்தது. அன்று வேலையிலிருந்து வரும் பொழுதே களைத்துப்போய் சோர்வாக வந்தவள் செல்வராணியிடம் கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.
இரவில் படுக்கும் பொழுது தேவா, “அடுத்த மூணு நாள் உனக்கு லீவ்! ஜாலிதான்” என கிண்டலாக கூறினான்.
ஏற்கனவே கடுப்பில் இருந்தவளுக்கு தேவா கிண்டலாக கேட்டதும் சேர்ந்துவிட, “என்ன மூணு நாள் லீவ்? வேலை செய்யுற எல்லா இடத்திலேயுமா பொண்ணுங்களுக்கு லீவ் கொடுக்குறாங்க? இந்த டைம்ல யாரையும் உடலை வருத்தி எக்ஸ்சர்சைஸ் பண்ண நாங்களே அலோவ் பண்ண மாட்டோம். அப்படி இருக்கப்ப நாங்க மட்டும் எப்படி பண்ணுவோம்? அதுமட்டுமில்ல இந்த மாதிரி நேரத்துல லீவ் எடுத்தோம்ன்னா கூட வேலை செய்றவங்களுக்கு தான் ரெண்டு, மூணு செஷன் அதிகமாகும்” படபடவென எண்ணையில் இட்ட கடுகாக பொறிந்தாள்.
“இங்க பாருங்க” என ஃபோனில் அவளின் டையட் வீடியோவிற்கு ஒருவன் போட்டிருந்த கமெண்ட்டை காண்பித்தாள்.
அதில், “பொண்ணுங்க குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்தாலே போதும். அம்மிலே அரைச்சு உரல்ல ஆட்டி வேலை பார்த்த வரைக்கும் நல்லா தான் இருந்தாங்க. இப்ப காலம் மாறின உடனே உடம்ப குறைக்க ஜிம் போறது, டையட் இருக்கிறதுன்னு என்னலாம் பண்ணுறாங்க..” என சற்று கேலியும் கிண்டலுமாக சொல்லியிருந்தான்.
தேவாவும் அவளுக்கு வரும் எதிர்மறை கருத்துக்களை பார்த்திருக்கானே! அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பவளை பார்த்து அதிசயிக்கவும் செய்திருக்கிறான். ஆனால் இப்பொழுது என்னவென்று அவளை ஏறிட,
“பொண்ணுங்க ஜிம் போறது ஒன்னும் அவ்வளவு சாதாரணம் இல்லை தெரியுமா? ஒரு ஆம்பிள்ளையால தொடர்ந்து ஜிம் போக முடியும். ஆனா பொண்ணுங்களுக்கு அப்படி இல்ல! மூணு வாரம் போனாங்கன்னா.. நாலாவது வாரம் பீரியட்ஸ் வந்துரும். அது முடிந்த உடனே சிலருக்கு ஒர்க்கவுட் ஸ்டார்ட் பண்ண முடியாது. ரெண்டு நாள் கார்டியோ பண்ணி உடம்பை கொஞ்சம் ரெக்கவர் பண்ணிட்டு தான் ஒர்க்கவுட் ஸடார்ட் பண்ண முடியும். இதெல்லாம் இவனை மாதிரி பூமர்ஸ்கு தெரியுமா? இவனை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பொண்ணுங்க வீட்ல சட்டியை உருட்டி இவனுக்கு ஆக்கி போடணும். இவனோட டிரஸை துவைச்சி வைக்கணும். பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்சதுன்னு எதுவும் செய்ய கூடாது! அப்படிதான?” என மைக்கில்லாமல் மேடையில் பேசுவது போல் பேசியவளிடம் தண்ணீரை நீட்டியவன்,
“இப்ப டிசம்பர் தான் மதி. மார்ச் வர இன்னும் மூணு மாசம் இருக்கு..” என்றதும் மார்ச் மாதத்தில் வரும் மகளிர் தினத்தை தான் குறிப்பிடுகிறான் என்று புரிந்தவள் சிரித்துவிட்டாள்.
“அப்பாடி சிரிச்சிட்டியா? இதுக்கெல்லாம் நீ இவ்வளவு டென்ஷன் ஆக மாட்டியே? என்னாச்சி?” என்றான் அவளின் கூந்தலை கோதிக்கொண்டே,
அவனின் மார்பில் தலைவைத்து படுத்தவள், “நான் பேபியை எதிர்பார்த்தேன் தேவ்!” என்றாள் உள்ளே போன குரலில்.
“அவ்வளவு தான அடுத்த மாசத்துக்குள்ள சரி பண்ணிடலாம். நானே எங்க அம்மாக்கு ரெண்டு வருஷம் கழிச்சி தான் பிறந்தேன் மதி” என்று சமாதான படுத்தியவனின் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டே “ஹ்ம்ம்” என்றாள். இருவரின் இதய துடிப்பும் சேர்ந்து ஒரே லயத்தில் இயங்க இருவரும் உறக்கத்தை தழுவினர்.
இரு ஜோடிகளும் தலை பொங்கல் கொண்டாடி, வந்தனாவிற்கு ஏழாம் மாதம் தொடங்கி வளைகாப்பையும் முடித்து அவளை தாய்வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.
அன்று தேவா பெங்களூர் கிளம்பிக் கொண்டிருந்தான். துணிகளை எடுத்து வைத்துவிட்டு சட்டை பட்டனை மாட்டிக் கொண்டிருந்தவனையே கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள் சாருமதி.
அவளை அழைத்து செல்கிறேன் என்றவன் கடைசியில் முடியாது என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது. அவனுக்கும் தான் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவளை அழைத்து செல்ல முடியாத சூழல்.
அவனருகில் நெருங்கி அவனை கட்டிபிடித்தவள் சற்று நேரத்திற்கு முன் அவன் அணிந்திருந்த சட்டையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கசக்கிவிட்டாள்.
“மதி! குழந்தை மாதிரி பண்ணாத. பிசினஸ் ட்ரிப் தான போறேன்” என்றவன் கசங்கியிருந்த சட்டையை கழட்டி அங்கரில் மாட்டிவிட்டு வேறொரு சட்டையை எடுத்தவன் சாருமதியை பார்த்தான்.
அவள் பார்வையாலே இந்த சட்டையையும் கசக்குவேன் என்று மிரட்டல் விட்டாள். எடுத்த சட்டையை போடாமல் ஓரமாக வைத்தவன் அவளை கொஞ்சி, கெஞ்சி சமாதான படுத்திவிட்டே சட்டையை அணிந்து கிளம்பினான்.
தேவா சென்று இரண்டு நாட்கள் சென்றிருந்த நிலையில் வந்தனாவை பார்க்க அவர்களின் உறவினர் ஒருவர் வந்திருந்தார். செல்வராணியும் வந்தனாவுமே அவருடன் பேசுக்கொண்டிருக்க சாருமதி காஃபி போட்டு எடுத்துவந்தாள்.
காஃபியை குடித்துவிட்டு, “ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல தான கல்யாணம் நடந்தது” என கேள்வியை துவங்க அங்கிருந்த மூவருக்குமே சங்கடமாகியது. அடுத்து கேள்வியின் திசை எங்கு செல்லும் என்று அனைவரும் அறிவர்.
“ஹ்ம்ம். தங்கச்சி கல்யாணம் நிற்க கூடாதுன்னு மாப்பிள்ளையோட தங்கச்சியை தேவா கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என அவர்பாட்டுக்கு உளற இங்கே சாருவின் முகம் வெளிறியது.
“அப்டிலாம் இல்லை பெரிம்மா. தேவா பிடிச்சி தான் கல்யாணம் பண்ணான்” என செல்வராணியும் அவரின் வாயை அடைக்க பார்த்தார்.
“சும்மா சொல்லாத செல்வா.. வந்தனாவுக்கு கல்யாணம் முடித்து ஒருவருடம் கழித்து தான தேவாவுக்கு முடிக்கிறதா என்கிட்ட சொன்ன? அவங்க வீட்ல சொன்னதும் எங்க வந்தனா கல்யாணம் நின்னுடுமோன்னு தேவாவிற்கு கல்யாணம் பண்ணிட்டீங்க..” என அவர் ஒரு கதையை புனைந்தார்.
எப்படியோ அதற்குமேல் அவரை பேசவிடாமல் செல்வராணியும் வந்தனாவும் பேசி அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் கூறியதற்கு சாருமதி ஏடாகூடமாக யோசிக்க தொடங்கிவிட்டாள்.
சாருமதியின் நிலையை கணித்த செல்வராணி அவளிடம் செல்ல, “எனக்கு ஒன்னுமில்ல அத்தை” என சிரிக்க முயன்று அறைக்குள் சென்றுவிட்டாள்.
இரவில் அழைத்த தேவாவிடமும் சரியாக பேச முடியாமல், “தூக்கம் வருது” என்று சொல்லிவிட்டு வைத்தவளிற்கு தொண்டையளவு துக்கம் தான் வந்தது.
அறையின் தனிமை இன்னும் வாட்ட எழுந்து வீட்டிற்கு பின் உள்ள தோட்டத்திற்கு சென்றாள். அங்கு சென்றதும் தேவாவின் நினைவே அவளை துரத்தியது.
கல்யாணம் முடிந்த புதிதில் இருள் சூழ்ந்த மாலை வேளையில் இதே தோட்டத்தில் தான் இருவரும் தனித்திருந்தனர். வானில் நட்சத்திரங்களின் துணையுடன் நிலா உலா வந்துக்கொண்டிருந்தது.
தேவாவின் வீட்டில் சாருமதிக்கு மிகவும் பிடித்த இடமென்றால் இந்த தோட்டத்தை தான் கூறுவாள்.
“எல்லாம் உங்களால தான். நீங்க அன்னைக்கு கிச்சன் உள்ள வந்து அத்தை முன்னாடியே என்னை கட்டிபிடிச்சத்துல இருந்து ஈவ்னிங் நீங்க வீட்டுக்கு வந்ததும் அத்தை கடைக்கு, கோவில்குன்னு போய்டுறாங்க” என்று அழுத்துக்கொண்டவளை,
“சின்னன்சிறுசுங்கன்னு அம்மாவுக்கு தெரியுது உனக்கு தான் தெரியல” என்றவனை மடியில் இருந்து தள்ளிவிட்டவள், “இந்த தோட்டம் ரொம்ப அழகா இருக்கு தேவ். அத்தை எப்படி தான் இவ்வளவையும் மைண்டைன் பண்ணுறங்களோ?” என கேட்டாள்.
“இது பாதி தான் மதி. மீதியை விற்றுவிட்டோம்” என்றவனை ‘உண்மையா?’ என அதிர்ந்து பார்த்தாள்.
“ஆமா. அப்பா இறந்தப்ப எனக்கு பதினாறு வயசு தான். எங்களுக்குன்னு இருந்தது இந்த வீடும் இதுக்கு பின்னால இருக்க தோட்டம் தான். அதுவும் பரம்பரையா வந்த சொத்து”
“அப்பா இறந்தப்ப சொந்தகாரங்களாம் இந்த வீட்டுக்கு விலை பேசினாங்க. ரெண்டு பிள்ளை வெச்சிருக்க. நல்ல விலைக்கு வித்துடுன்னு சொன்னாங்க. ஆனா அம்மா இந்த தோட்டத்துல பாதி மட்டும் வித்துட்டு வேலி போட்டுட்டாங்க”
“யாரை நம்புறதுன்னு கூட தெரியல. எனக்கு இருந்தது ரெண்டே வழி தான். ஒன்னு என்னை உயர்த்தி வீட்டையும் பார்த்துக்கணும். இல்லை என்னோட படிப்பை நிறுத்திட்டு வீட்டை பார்த்துக்கணும். ஆனா, அம்மா எக்காரணத்து கொண்டும் படிப்பை நிறுத்த விடல. இந்த தோட்டத்தை விற்று தான் என்னோட படிப்பை முடிச்சேன். அப்புறம் அப்படியே போய்டுச்சி..” என அன்று அவனின் வாழ்க்கையின் நிகழ்வுகளை பகிர்ந்தது இன்றும் அவளுக்கு நினைவில் இருந்தது.
சாருமதி திருமணத்திற்கு முன்னே கேட்க நினைத்த கேள்வி இப்பொழுது அவளுக்கு ஞாபகம் வந்தது. “உங்க தங்கச்சி கல்யாணத்துக்காக தான் நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்களா?” என்று கேட்க நினைத்தவளுக்கு அதை கேட்க கூட பிடிக்கவில்லை. அப்பொழுதே இருவருக்கும் நடுவில் யாரையும் வரவிட அவளுக்கு விருப்பமில்லை.
“தீடீர்னு முடிவான கல்யாணம் தான? அதான் லோன் போட்டேன்” அன்று தேவா கூறியது இன்று அவள் மனதில் எழுந்தது. ‘ஆமா லோன் போட்டு கல்யாணம் செய்ய அவசியம் என்ன?’ என தப்பும் தவறுமாக யோசிக்க ஆரம்பித்தாள்.
‘அப்ப உண்மையிலேயே அவரோட தங்கச்சி கல்யாணம் நிற்க கூடாதுன்னு தான் என்னை கல்யாணம் செய்தாரா? அதான் முதல் சந்திப்பிலேயே அவர் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதா?’ இரவின் தனிமையில் அனைத்தையும் முன்னுக்கு பின் முரணாக யோசித்தாள்.
‘அவங்களுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களான்னு தேவ் கிட்டயே கேட்கலாமா? அதுக்கு ஆமான்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது?’ என்று ஒரு மனம் புலம்பி தவிக்க, ‘உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒன்பது மாசம் முடிஞ்சிருக்கு சாரு! இதுவரைக்கும் தங்கச்சிக்காக கல்யாணம் பண்ண மாதிரியா உன்கிட்ட நடந்துகிறாரு? கல்யாணம் முடிவானதுல இருந்து ஒவ்வொன்னுத்துக்கும் உன்னோட விருப்பம் கேட்டு தான செஞ்சாரு? அதுலயே அவர் உன்மேல வெச்சிருக்க அன்பு உனக்கு புரியலையா?’ என்று இன்னொரு மனம் வாதிட்டது.
தேவா அவளிடம் காட்டிய அன்பு, பாசம், அக்கரை, கோபம், தாபம், மோகம் என அனைத்தும் உண்மை என்று அவளுக்கும் புரியவே செய்தது. ‘ஆனா அவர் யாரை கல்யாணம் பண்ணிருந்தாலும் இப்படி தான..’ என்று அவளால் யோசிக்க கூட முடியாமல் கண்ணீர் வந்தது.
‘அப்ப ஒரு கட்டாயத்தின் பெயரில் தான் என்னை கல்யாணம் செய்தாரா?’ என்று மேலும் மேலும் குழம்பியவள் கண்ணில் வழிந்த கண்ணீருடன் அறைக்குள் வந்தாள்.
அன்று இருவரும் சேர்ந்து கசக்கிய சட்டை காற்றில் அசைய தேவாவே கைவிரித்து அவளை, “வா!” என அழைப்பது போல் தோன்ற ஓடி சென்று அந்த சட்டையை எடுத்து அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் மேலும் குழம்பி ஏமாற்றம், குழப்பம் என அனைத்து உணர்வுகளும் தேவாவின் மேல் கோபமாக உருமாறியது.
பெங்களூர் சென்றவனும் சென்ற வேலை திருப்திகரமாக முடிய மகிழ்ச்சியுடனே வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்த சாருமதி முறுக்கிக்கொள்ள, “இன்னுமா உன்னை கூட்டிட்டு போகலனு கோவிச்சிகிற?” என்று கேட்டுவிட்டு ரிப்போர்ட் செய்ய அலுவலகத்திற்கு சென்றுவிட்டான்.
அன்று இரவில் சாருமதி கீழே படுக்க அவளை யோசனையுடன் பார்த்த தேவா தேதியை பார்த்தான். பின், “இன்னைக்கு எத்தனையாவது நாள்?” என்றிட,
“ஓ.. இதுகூட உங்களுக்கு மறந்துடுச்சா?” என்று கேட்டு முறைத்தவள், “மூணு” என்று முணங்கி கொண்டே படுத்துவிட்டாள்.
‘இந்த முறையும் அவள் எதிர்பார்த்து ஏமார்ந்துவிட்டாள் போல, அதான் அது கோபமாக நம்மிடம் காண்பிக்கிறாள்’ என்று புரிந்துக்கொண்டவன் அவளின் அருகில் படுத்து, “அடுத்த மாசம் தீயா வேலை செய்யலாம் மதி” என சொன்னவனை இமைக்காமல் பார்த்தாள்.
“என்ன டி?” என மென்மையாக கேட்டு அவளை அணைக்க முயன்றான். இதற்குமேல் அவனை பார்த்தால் தொண்டைவரை உள்ள கேள்வியை கேட்டுவிடுவோம் என்று அவனின் கையில் சிக்காமல் திரும்பி படுத்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்தவன், “என்ன தான் டி உனக்கு பிரச்சனை? நானும் ஊருக்கு போய்ட்டு வந்து மூணு நாள் ஆகுது. மூஞ்சியை திருப்பிக்கிட்டே போற?” என்றான் அலுவலகம் கிளம்பிக்கொண்டே,
“நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணீங்க தேவ்?” என மொட்டையாக கேட்க,
“உ..உங்க தங்..தங்கச்சி வந்..வந்தனா கல்யாணம் நிற்க கூடாதுன்னு தான் என்னை கல்யாணம் பண்ணீங்களா? சொ..சொல்லுங்க தேவ்?” என ஒருவழியாக அவ்வளவு நாள் மனதில் உருத்தியதை கேட்டேவிட்டாள்.
அவளின் கேள்வி பிடிக்காதவன் கையை ஓங்கிவிட, பின் நிதானித்து கையை அந்தரத்தில் நிறுத்திவிட்டான். அதிர்ந்து கலங்கி திகைப்புடன் பார்த்தவளின் தாடையை வலிக்க பிடித்தவன், “இன்னொரு வாட்டி இப்படி எதாவது உளருன? தொலைச்சிடுவேன்..” என அவனின் உயரத்திற்கு நிமிர்ந்து மிரட்டினான்.
இவ்வளவு நாட்கள் காதல் தேவனாக தோன்றிய அவளின் தேவ், ருத்ரதேவனாக காட்சியளிக்க பயத்தில் அவளின் கண்கள் விரிந்தது.
பின் அவனின் கையிலிருந்து விலகி தன்னை சரிசெய்தவள் அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் வேலை பார்க்கும் அகாடமி கிளம்பிவிட்டாள்.