எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 4

Sathya theeba

New member
அகமேந்தி அவளிடம் பெயரைக் கேட்கவும் அவருக்குப் பதில் சொல்லாமல் ஏதோ சிந்தனையில் இருந்தாள். தன் பெயரைச் சொல்வதற்கு அவள் யோசிக்கவில்லை. தான் இங்கே எதற்காக வந்தேன் என்ற சிந்தனை அவளை ஆட்கொள்ளவே யோசித்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளது பார்வையையும் மௌனத்தையும் கண்டவர்,
"ஏன்டா நான் உன் பெயரைத் தானே கேட்டேன். அதற்கு ஏன் இப்படி தவிக்கிறாய்? இது ஒன்றும் கேட்கக் கூடாத கேள்வி இல்லையே?"என்றார்.

"அப்படி எதுவும் இல்லம்மா... நான் வேறு ஒரு யோசனையில் இருந்தேன். சாரிம்மா... என் நேம் ஆதிரா" என்று புன்னகையுடன் கூறினாள்.

அவளது புன்னகையும் பெயரும் பிடித்துப்போக,
"ரொம்பவும் அழகான பெயர், உன்னைப்போலவே... நீ எந்த ஊர்டா? இந்த ஊர் இல்லை என்று தெரிகின்றது. தனியாகவா இங்கே வந்தாய்?" என்று கேட்டார்.

'தனிமைதான் யாரும் இல்லாத அநாதையாகத்தானே இன்று வாழ்கிறேன். என் உறவுகளைத் தேடித் தவிக்கின்றேன்' என்று தனக்குள் புலம்பினாள்.

அப்போது வெளியே செல்ல ஆயத்தமாகி அறைக்குள் நுழைந்தார் மதிவாணன்.

"குட்மோர்னிங்மா.. நல்லாத் தூங்கியாச்சா?" என்று கேட்டவர், அவள் கையில் காஃபியை குடிக்காமல் அப்படியே வைத்திருந்ததைப் பார்த்ததும்,
"என் பொண்டாட்டி அகியின் காஃபிக்கு இந்த உலகத்தையே எழுதி வைக்கலாம். பட் இந்தப் பூமியின் உறுதி(நில உடமைப் பத்திரம்) என்னிடம் இல்லையா அதுதான் எழுதலை. இந்தக் காஃபியின் டேஸ்ட் சும்மா அள்ளும். பயப்படாமல் குடிம்மா..."

சிரித்துவிட்டுக் குடித்தவள்,
"ஆமாம்மா... காஃபி ரொம்ப நல்லாயிருக்கு" என்று பாராட்டினாள்.

அவள் காஃபியை குடித்து முடித்ததும், "ஆமா, நேற்று ஏன்மா அப்படி ஓடி வந்தாய்? எதையாவது பார்த்துப் பயந்திட்டாயா? அல்லது யாராவது உன்னைத் துரத்தினார்களா?" என்று பேச்சினூடே அவளைப் பற்றிய விவரத்தை அறிய முயன்றார்.

"ம்கூம்.. நான் கேட்ட கேள்விக்கே ஒரு பதிலைக் காணோம். நீங்க வேற அடுக்கடுக்காய் கேள்வியைக் கேட்குறிங்க"

"அப்போ நாங்க இரண்டு பேருமே உன்னைக் கேள்வி கேட்டே டாச்சர் பண்ணுறோமா?"

"நோ நோ.. டாச்சர் எதுவும் இல்லை சேர். நேற்று நான் ட்ரெயினில் இருந்து இறங்கி ஸ்டேஷனில் இருந்தன். அப்போது அங்கே வந்த இருவர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ளப் பார்த்தார்கள். அங்கேயிருந்து என்னைத் துரத்தினார்கள். தப்பிக்கத்தான் ஓடிவந்தன். நல்ல வேளையாக உங்க காரைக் கண்டேன். தலைசுற்றுவது போல் இருந்திச்சு. அவ்வளவுதான்... அப்புறம் என்னாச்சுன்னு தெரியல. இங்க இருக்கன்."

"ஓ ஓ... நீ ஓடி வருவதைக் கண்டுதான் நான் காரை நிறுத்தினேன். அப்போதுதான் நீ மயங்கி விழுந்திட்டாய். வீடு பக்கத்தில் என்பதால் இங்கேவீட்டுக்குக் கூட்டி வந்திட்டேன். உன் பெயர் என்னம்மா?"

"ஆதிரா"

"சூப்பர்டா... உன் ஊர்?"

"அதைத்தான் நானும் கேட்டேங்க. என் கேள்வி எதற்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறா" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் அகமேந்தி.

அவளைக் கூர்ந்து பார்த்த மதிவாணன்,
"ஓகேமா. உன்னைப் பற்றிய விவரங்களை உனக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்ல வேண்டாம். இங்கே யார் வீட்டுக்கு வந்தாய்? நீ இங்கே யாரிடம் போக வேண்டும் என்று சொல்லு. அவர்களிடம் உன்னைக் கொண்டு போய் விட்டு விடுகிறேன்." என்றார்.

அப்போதுதான் அவளுக்குத் தான் கொண்டு வந்த அந்த சிறிய பயணப் பையையும் ஸ்டேஷனிலேயே விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

"ஐயையோ, இப்போ நான் என்ன செய்வேன். அதற்குள்தானே அந்தப் லெட்டர் வைத்திருந்தேன்"

"என்னடா...? ஏன் பதறுகின்றாய்? என்ன லெட்டர்...?" என்று கேட்டார் அகமேந்தி.

"என் உறவினர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களைத் தேடித்தான் வந்தேன். என் பாக்கில்தான் அந்தப் லெட்டர் வைத்திருந்தேன். அதில்தான் என் பாஸ்போட், ட்ரெஸ் எல்லாம் கூட இருந்திச்சு. அதனை ஸ்டேஷனில் விட்டுட்டு வந்திட்டேனே. அந்த அட்ரஸ் கூட எனக்கு சரியாகத் தெரியாதே. இந்த ஊரின் பெயர் மட்டும் தான் எனக்கு நினைவிலிருக்கு." என்றவள் கண்களிலிருந்து கோடாகக் கண்ணீர் வழிந்தது.

"அழாதம்மா... ஏதாவது ஒரு வழி கிடைக்கும்."
என்றார் மதிவாணன்.

இவள் கனடாவிலிருந்து புறப்படும்போது தோழி சித்தாராவின் பெற்றோர் சில அறிவுரைகளையும் அவளுக்குக் கூறி அனுப்பியிருந்தனர்.

"தெரியாத ஊருக்குப் போகிறாய். அங்கே யாருமே அறிமுகமில்லாதவர்கள். எனவே அங்கே யாரையும் உடனேயே நம்பிவிடாதே. குறிப்பாக உன் செல்வநிலையை யாரிடமும் சொல்லாதே. இப்போது இருக்கும் சூழல் உன்னை ஏமாற்றிவிடும். இப்போது எவ்வளவு கதைகள் கேள்விப்படுகின்றோம். நீ இளம்பெண் வேறு. எப்போதும் ஜாக்கிரதையாய் இரு. உன் பணத்தைக் காரணமாய் கொண்டு, அதனையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டும் உன்னை ஏமாற்றி விடுவார்கள். அதிலும் உன் வயதுப் பெண்களுக்கு இந்தக் காலத்தில் ரொம்பப் பெரிய ஆபத்தெல்லாம் காத்திருக்கின்றது. அங்கே உன்னைப் பாதுகாக்க வேண்டியது நீ மட்டும்தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் உண்மையைச் சொல்லிவிடாதே" என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி அனுப்பினர்.

'ஆனால் இவர்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு என் அம்மா, அப்பாவைப் பார்ப்பது போலவே தோன்றுகின்றது. அவர்களுடன் பேசுவதும் பழகுவதும் இயல்பாக இருக்கின்றது. இவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வதற்கு எந்தத் தடையுமில்லை. இவர்களால் எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது' என்று மனமார நம்பினாள். அதனால் தன்னைப் பற்றிய விடயங்களைக் கூறினாள்.

"என் வாழ்க்கையில் புயல் வீசிய அந்த நாள் என் அடையாளத்தையே தொலைத்துவிட்டது. நான் யார்...? எனக்கு யாருமே இல்லை? என்பதை உணரவைத்த நாள். அந்த விபத்து என் மொத்த வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. என் உறவுகள்...? யாரென்றே தெரியாமல் தேடி வந்திருக்கிறேன். அவர்கள் இப்போதும் இங்கேதான் இருக்கின்றார்களா எனவும் தெரியாது. அடுத்து என் வாழ்வில் என்ன என்று புரியாமல் இந்த வாழ்வு..." என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தை அழுகையுடன் கொட்டித் தீர்த்தாள்.

தொடர்ந்து தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு கூறினாள்.

அன்று தங்கள் அலுவலகத்திற்கு செல்லவென ஆயத்தமாகித் தந்தைக்காகக் காத்து நின்றாள் ஆதிரா. ஆனால் நேரம்தான் சென்றதே தவிர அவர் வரவேயில்லை. இவளும் பல தடவை அவருக்கு அழைப்பெடுத்துப் பார்த்தாள். ஆனால் எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை.

மதியம்வரை அவர் வரவேயில்லை. பதட்டத்தில் இவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தனது சித்தப்பா விஷ்வப்பிரசாத்துக்கு அழைப்பெடுத்து தந்தையைப் பற்றிக் கூறினாள். அவர் வந்திடுவார். எங்கேயும் தொலைந்து போகமாட்டார் என்று சட்டென்று பதில் கூறிவிட்டு வைத்துவிட்டார். இதுதான் அவரது உறவினர்கள். அவரது தங்கையும் இதே பதிலைத் தான் கூறுவார் என்பது தெரிந்ததால் அவருக்கு அழைப்பெடுக்கவும் விரும்பவில்லை.

நேரம் செல்லச் செல்ல அவளின் எதிர்பார்ப்பு பயமாக மாறியது. அந்தப் பயம் உண்மையாகும் வண்ணம் அவளுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பொன்று வந்தது. சூரியப்பிரகாஷ் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. டிரைவர் உடேனயே இறந்துவிட்டார். சூரியபிரகாஷ் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆதிரா பதறும் நெஞ்சோடு அங்கே ஓடினாள். ஆனால் காலம்தான் கடந்துவிட்டது. அவள் அங்கே சென்று பார்த்த போது கண்மூடிக் கிடந்தார் சூரியப்பிரகாஷ். மீளமுடியாத தூக்கத்திற்குப் போய்விட்டார்.

திக்பிரமித்து அப்படியே நின்று விட்டாள் ஆதிரா. அவள் இருந்த நிலமையைக் கண்ணுற்ற வைத்தியர் அவர்களது மானேஜருக்குத் தகவலைத் தெரிவித்தார். அவரும் உடனேயே ஓடிவந்து செய்ய வேண்டிய காரியங்களை மளமளவெனச் செய்தார்.

இதோ அந்தப் பெரிய ஹாலில் கண்ணாடிப் பேழைக்குள் கண்மூடிக் கிடக்கின்றார் சூரிய பிரகாஷ். தந்தையின் உடலையே வெறித்து பார்த்தபடி அதன் அருகிலேயே அழுகையின்றி அப்படியே அமர்ந்திருந்தாள் ஆதிரா. சுற்றிப் பெருந்திரளான கூட்டம் இருந்தது. ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்லத்தான் அங்கே யாருமில்லை.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவந்து அவளை அணைத்தாள் சித்தாரா. ஆதிராவின் உயிர்த்தோழி. சிறுவயது முதல் அவளுடனேயே கூடித் திரிபவள்.

தோழி வந்து அணைக்கவும் உணர்வு வந்தவள் போல் "சித்து... அப்பா.." என்று கதறி அழுதாள். இதுவரை நேரமும் அவளைச் சுற்றி உறவினர் கூடியிருந்து தமக்குள் கிசு கிசுத்தனரே தவிர யாரும் அவளது சோகத்தைப் பகிர முன்வரவில்லை. எனவே தோழியைக் காணவும் தனக்குள் புதைத்து வைத்திருந்த துக்கம் கரைபுரண்டு ஓட வாய்விட்டு கதறினாள். சித்தாராவும் கண்ணீருடன் அவளைத் தன் தோளில் ஆதரவாக சாய்த்து அணைத்துக் கொண்டாள்.

"சித்து.. அப்பா.. என்னை விட்டுப் போயிட்டார்... இந்த உலகத்தில் என்னை அநாதையாகத் தவிக்க விட்டுட்டு அவர் மட்டும் அம்மாவிடம் போயிட்டாரே... நான் இப்போ என்ன பண்ணுவேன்" என்று கதறினாள்.

தோழிக்கு வார்த்தைகளால் தேறுதல் கொடுக்க முடியாதவள், அவள் தோளைத் தடவி விட்டபடி நின்றாள்.

அழுது ஓய்ந்தவள் சித்தாராவின் மடியிலேயே விசிம்பியபடி படுத்திருந்தாள்.

அப்பா கடைசி நேரத்தில் என்னைக் காணத் துடித்திருப்பாரே.. அவர் இறக்கும்போது என்ன நினைத்திருப்பார். கடவுளே என்னிடமிருந்து ஏன் என் அப்பாவைப் பறித்துக் கொண்டாய் என்று புலம்பியபடியே இருந்தாள். அழுதழுது ஓய்ந்தே போய்விட்டாள்.

யார் யாரோவெல்லாம் வந்தார்கள். ஆறுதலுக்கு இரண்டு வார்த்தை கூறிவிட்டுச் சென்றார்கள். சூரியப்பிரகாஷின் உடன்பிறந்தவர்கள் கூட மூன்றாம் மனிதர்கள் போலவே நடந்து கொண்டார்கள்.

மறுநாளே செய்யவேண்டிய சாங்கியங்கள் எல்லாம் ஒழுங்காக நடைபெற்றன. இவற்றையெல்லாம் கூடவே இருந்து ஒழுங்காக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மனேஜரும் சூரியபிரகாஷின் பால்ய நண்பருமான ரவிவர்மாவே முன்னின்று செயற்படுத்தினார். அவர் மனைவியும் மகனும் கூடவே துணைக்கு நின்றனர். சித்தாராவும் அவள் கூடவே நின்றாள். அவளது பெற்றோரும் அவள்கூடத் துணைக்கு நின்றனர்.

இரண்டாம் நாளே உறவுகளும் கலைந்து சென்றுவிட்டன.

அவள் தன் தந்தையின் புகைப்படத்திற்கு அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
அவளிடம் வந்த ரவிவர்மா,
"ஆதிராம்மா.." என்று அழைத்தார்.
"அங்கிள்"
"இங்க பாரும்மா, சூரியாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதுதான். ஆனால், அத்துடன் உன் வாழ்வில் இன்னும் சந்திக்க வேண்டிய அதிர்ச்சிகள் நிறைய இருக்கம்மா"

"அப்பா இல்லை என்றதை விட இந்த உலகத்தில் அதிர்ச்சியானது எனக்கு வேறு இல்லை அங்கிள்"

சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

"ஆதிராம்மா, உங்க அப்பா கடைசி வரை உனக்கு இந்த விஷயம் தெரியாமலே இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனாலும் அவனுக்கு தன் முடிவு ஏற்கனவே தெரிந்திருக்குமோ தெரியவில்லை. தனக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னிடம் இந்த உண்மையை சொல்லி உனக்கு யாரும் இல்லை என நினைக்க வேண்டாம் என்று கூறச் சொன்னான். அவனிருக்கும் மட்டும் உன்னை ஒரு மகாராணியை போலத்தான் நடத்தினான். அதில் அவன் எந்தக் குறையும் வைக்கவில்லை அவன் உன்னை விட்டுப் போகும்போது கூட உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. உன் பிறந்தநாள் அன்று தன் சொத்து முழுவதும் உன் பெயருக்கு மாற்றி எழுதி விட்டான்"

எதுவும் புரியாமல் அவரையே பார்த்திருந்தாள்.

"பிளீஸ்மா... நான் சொல்லப்போற விடயத்தை நீ மனதைரியத்தோடு கேட்கணும். உடைஞ்சு போயிடக்கூடாது. அது.. அது வந்து.. சூரியா உன்னை வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்துத்தான் வளர்த்தான்" என்று உண்மையை போட்டு உடைத்தார்.

"அங்கிள் என்ன சொல்றீங்கள்" என்றுஅதிர்ச்சியில் கேட்டாள். ஆதிராவின் முகத்தை பார்த்ததும் அவருக்கு உருகிவிட்டது.

"உண்மைதானம்மா.. இந்த விடயம் உன் சூரியாவின் குடும்பத்திற்கு நன்றாகத் தெரியும். எந்த சந்தர்ப்பத்திலும் அதை அவர்கள் பேசாத வகையில் அவன் அவர்களைக் கட்டுப்படுத்தியிருந்தான். அப்புறம் எனக்கும் என் மனைவிக்கு மட்டும் தெரியும். உனக்காக ஒரு கடிதத்தையும் எழுதி லாயரிடம் கொடுத்து வைத்திருக்கிறான். தான் இல்லாமல் போ..னால் இந்த உண்மை தெரிந்தே ஆகணும் என்று நினைத்திருக்கிறான் போலும்" என்றவர் தன் வசம் வக்கீல் கொடுத்துச் சென்ற கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

அவசரம் அவசரமாக அதேவேளை நடுங்கும் கரங்களால் அக்கடிதத்தைப் பிரித்தாள். தந்தையின் கையெழுத்தைப் பார்த்ததும் வந்த அழுகையை முயன்று கட்டுப்படுத்தியவள் அக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.

'குட்டிம்மா ,
உன் அம்மாவும் நானும் இதை உன்னிடம் சொல்லவே கூடாது என்றே எண்ணியிருந்தோம். ஆனால் இப்போதெல்லாம் எனக்குள் ஒரு பயம் என்னை அறியாமல் உண்டாகின்றது. உன்னைத் தனியாக விட்டு விட்டு நான் போய் விடுவேனோ என்று மனம் தவிக்கின்றது. அதற்குக் காரணம் புரியவில்லை. அதனால் தான் எப்படியாவது இந்த உண்மை உனக்குத் தெரிந்து இருக்க வேண்டும் என்பதால் இதை நான் எழுதுகின்றேன். என்னைச் சூழ எத்தனையோ உறவுகள் இருந்தாலும் நான் இல்லாவிட்டால் உன்னை அனாதையாக்கி விடுவாரோ என்று பயமாக இருக்கின்றது. ஏனெனில் அவர்கள் உன்னை இதுவரை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் இந்த உண்மையை நான் சொல்ல வந்ததே. நான் உன் அம்மாவைத் திருமணம் செய்யும் போது நீ ஒரு வயதுக் குழந்தை.
குட்டிமா... நீ உன் அம்மாவின் அக்காவின் மகள். அவர்களுக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள். ஐந்தாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் பெண் பிறக்கவும் நீ அவர்களுக்கு வேண்டாத பிள்ளையானாய். உன் அம்மாதான் உன்னை வளர்த்தாள். அவளை நான் திருமணம் செய்தபோது அவள் வீட்டில் அதை ஏற்கவில்லை. அவள் என்னுடன் புறப்பட்டு வரும்போது உன்னையும் கொண்டு சென்றுவிடுமாறு கூறிவிட்டார்கள். எனவே உன்னை முறைப்படி தத்தெடுத்துக் கூட்டி வந்தோம். உன் பெற்றோரும் சகோதரர்களும் இப்பொழுதும் ஸ்ரீலங்காவில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் முகவரி இறுதியில் குறிப்பிடுகின்றேன். ஒருவேளை நீ அவர்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் தாராளமாகச் சென்று அவர்களை சந்தித்துவிடு. அவர்கள் உன்னை இப்போது ஏற்றுக் கொள்ளக்கூடும். அதை நான் உறுதியாகக் கூற முடியாதுதான்.

உன்னைப் பெற்றவர்களும் பாவம்தான். அவர்களின் இயலாமையும் வறுமையுமே உன்னை எங்களிடம் தரக் காரணம். அவர்களிடம் கோபிக்காதே. அவர்கள் அப்படி எண்ணியதால் தான் எங்களுக்கு செல்வமகள் கிடைத்தாள். அது நாங்கள் செய்த அதிர்ஷ்டம்.

குட்டிமா நானும் உன் அம்மாவும் உனக்கு ஏதாவது குறை வைத்திருந்தால் மன்னித்துவிடு.

என்றும் உன் அப்பா சூரியபிரகாஷ்'

கடிதத்தை வாசித்து முடித்ததும் கண்ணீர் உகுத்தாள் ஆதிரா.

"ஆதிராம்மா பிளீஸ். இந்த விடயம் அதிர்ச்சியானதுதான். நீ யோசித்து முடிவெடம்மா" என்று கூறிய ரவிவர்மா சற்றுநேரம் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டுச் சென்றார்.

நன்கு யோசித்தவளுக்கு தான் அவர்களை ஒரு தடவை சந்தித்தால் நல்லது என்றே தோன்றியது. தன் முடிவை ரவிவர்மாவிடம் கூறினாள். அவரும் அதை சந்தோஷமாக வரவேற்றார். அவள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். அவளின் பாதுகாப்பிற்கும் உதவிக்குமென நான்கு பேரையும் அவளுடன் அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆனால் அவள் உறுதியாக அதனை மறுத்து விட்டாள். தானும் மிக எளிமையாகவே புறப்பட்டாள். வழியனுப்ப வந்த சித்தாராவும் அவளது பெற்றோரும் பல அறிவுரைகளைக் கூறினர். தங்கள் நிர்வாக நடவடிக்கைகளை ரவிவர்மாவிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டாள். இதோ இன்று இங்கே வந்து நிற்கின்றாள்

"இப்பொழுது அந்தக் கடிதமும் இல்லை. முகவரியும் இல்லை. எல்லாமே அந்த பாக்கில்தான் இருந்தது" என்றவள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்த ஏக்கம், வேதனை எல்லாம் கொட்டிக் தீர்க்க ஒரு வடிகால் கிடைத்ததால் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அவளின் நிலையை அறிந்து உருகிப்போனார் அகமேந்தி. அவளின் அழுகையைக் கண்டு தாயுள்ளம் பதற அவளை அணைத்துக் கொண்டார். அவள் அழுது ஓயும்வரை அவளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார். அவள் மனவேதனை தீர அழுகைதான் ஒரே வடிகால் என்பதை உணர்ந்ததால் சிறிது நேரம் அவளை அழவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த மதிவாணன்,
"ஸ்ஸ்... போதும்மா அழாத. நடந்து முடிந்த சம்பவங்கள் நினைவில் எப்போதும் அழியாதது. அதை நினைத்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. நம் வாழ்க்கையில் இந்த நிமிடம் மட்டுமே நிஜம். இறந்தகாலம் என்றும் யாருக்காகவும் திரும்பி வரப் போவதில்லை. இந்த நிமிடத்தை மட்டும் மனதில் வைத்து சந்தோசமாக வாழப் பழகணும். கடந்து போனது கடந்து போனதாகவே இருக்கட்டும். அதனைப் பார்த்துக் கொள்ளலாம். உனக்கு இப்போது தேவை ஒரு குடும்பத்தின் உறவுதானே. அது நம் வீட்டில் தாராளமாகக் கிடைக்கும். இந்த வீடும் அதிலுள்ளவர்களும் பிடிக்கவில்லை என்று எப்போது உனக்குத் தோன்றுகின்றதோ, அன்று உன்னை நான் பாதுகாப்பான இடத்தில் சேர்க்கிறேன். அதுவரை இங்கேயே இருப்பதில் உனக்கு கஷ்டம் இல்லையே...? இங்கே இருந்தபடி உன் உறவுகளைத் தேடு. என்னால் முடிந்தவரை நான் உனக்குக் ஹெல்ப் பண்ணுகிறேன்"

"அது எப்படி சார்... நான் இங்கே இருப்பது உங்களுக்குத்தான் தொந்தரவாக இருக்கும்..." என்று இழுத்தாள். அவளுக்குத் தான் போக்கிடம் என்று இங்கு எதுவுமில்லையே. கிடைக்கும் ஆதரவையும் தட்டிக் கழிக்க முடியவில்லைதான் ஆனாலும்...

"எங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை. சொல்லப் போனால் நீதான் எனக்கு உதவி பண்ணப் போகின்றாய். என் பொண்ணு தயாமதி கல்யாணம் பண்ணிப் போனதிலிருந்து நான் இந்த வீட்டில் தனியாக வாழ்வதாகத்தான் ஃபீல் பண்ணுவேன். அப்பாவும் பிள்ளையும் ஹொஸ்பிடலையே கட்டிட்டு அழுவார்கள். நான் இங்கே தனியாக இருப்பேன். எனக்கு மூச்சே முட்டிடும்"

"ஐயையோ செல்லம், நீ சொல்லவே இல்லை. எப்போ இப்படி மூச்சு முட்டுற மாதிரி இருக்கும்? ஒரு செக்கப் பண்ணிடுவோமா?" என்று பதட்டப்படுவது போலக் கேட்டார் மதிவாணன்.
அகமேந்தி அவரை முறைத்துப் பார்த்துவிட்டு,
"இவர்களுக்கு என்னைப்பற்றி எந்த அக்கறையும் இல்லை. நீ என் கூடவே இருந்தால் போதும்மா. எனக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த மாதிரி இருக்கும். நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்." என்றார்.

இருவரின் அன்பிலும் கரைந்து போனாள் அவள். யாரென்றே தெரியாத தன்னிடம் இவ்வளவு அன்பாகப் பேசுகின்றார்களே என்று உருகித்தான் போனாள்.
ஆனாலும், தான் இங்கே இருப்பதால் அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது என்று நினைத்தவள் சிறிதுநேரம் யோசித்தாள்.
"நான் இங்கே இருக்கும்வரை... அதற்கான செலவைத்.. தருகிறேனே" என்றவள்,

"அத்தோடு உங்களுக்கு ஏதாவது உதவி செய்யத்தான் ஆசை. ஆனால் எனக்கு வீட்டு வேலை எப்படி செய்வதெனத் தெரியாதே. சாரி... எனக்கு சமைக்கவும் தெரியா..து.." என்று இழுத்தாள். அவளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்,
"என்னடா நீ சமைக்கத் தெரியாதது ஒரு குற்றமா? மன்னிப்பெல்லாம் கேட்கிறாய். உன் வயதில் எனக்கும் டீ கூடப் போடத் தெரியாது. சமையல் என்ன பொண்ணுங்களுக்கென்றே விதிக்கப்பட்ட கடமையா? நம்ம ஆத்ம திருப்திக்குத் தான் செய்யுறோம். அப்புறம் இங்கே தோட்ட வேலைக்கும் நம்ம பப்பிஸ்ஸ பார்த்துக்கவும் ராமு அண்ணா இருக்கார். எனக்கு வீட்டு வேலைகளுக்கு ஹெல்ப் பண்ண வள்ளி வந்திட்டுப் போவாள். சமையல் எல்லாம் என் கைவண்ணம்தான். உனக்கு அப்பப்போ என்ன செய்யத் தோணுதோ செய்துக்கோ." என்றார்.

"சரிமா நான் கிளம்புறேன். டைம் ஆகுது. இப்போதைக்கு நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடும்மா." என்றுவிட்டுப் புறப்பட்டார் மதிவாணன். அவரை வழியனுப்பிவிட்டு வருவதாகக் கூறி அவருடன் கூடவே சென்றார் அகமேந்தி. அவர்கள் இருவரினதும் புரிதல் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. என் அப்பா அம்மாவும் இப்படித்தானே ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருந்திருப்பார்கள். என்ற எண்ணம் அவள் மனதில் எழுந்தது.

வெளியே வந்த மதிவாணன்,
"அகிம்மா.. உன்கிட்ட கேட்காமலேயே அந்தப் பெண்ணை நம்ம வீட்டிலேயே தங்கச் சொல்லிட்டேனே என்று மனதில் ஒரு பயம் இருந்தது. நீயும் அதற்கு ஆதரவாகப் பேசவும்தான் சந்தோசமாய் இருந்திச்சு"

"என்ன நீங்க... அந்தப் பொண்ணு நிலைமை தெரிந்தபிறகும் அவளை வெளியே அனுப்ப முடியுமா? அவளுடைய சொந்தங்கள் கிடைக்கும்வரை இங்கேயே நம்மகூடவே இருக்கட்டும்.ஃ. நம்ம வீட்டுப் பொண்ணாகவே இருக்கட்டும். அவளுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்குங்க"

"என் செல்லம் சொன்னபிறகு அதற்கு அப்பீல் ஏதும்மா... ஓகே மதி ஹொஸ்பிடல் கிளம்பிட்டானா?"

"மதிக்கண்ணா அப்பவே கிளம்பிட்டான். என் பையன் அவங்க அப்பா மாதிரி லேட்காமர்ஸ் இல்லை"

அகமேந்தியின் கன்னங்களைத் தன் இரு கைகளாலும் பற்றியவர், "அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே. பொண்டாட்டிகூட ரொமான்ஸ் பண்ணிட்டு புறப்பட வேண்டிய நிலை இல்லையே." என்று மையலாகப் பேசியவர் அவரின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு "பை செல்லம்..." என்று கூறிப் புறப்பட்டார். அவரை வழியனுப்பி விட்டு மலர்ந்த முகத்துடன் அவளைத் தேடிப் போனார் அகமேந்தி.
 
Top