எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 5

Sathya theeba

New member
தன் தந்தை ஏஎஸ்பியின் சாம்ராஜ்யத்தில் முடிசூடா இளவரசியாக, எந்தக் கவலையுமில்லாத பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவள். தந்தையின் பிரிவு வரை துன்பம் என்றால் என்னவென்றே அறியாதவளாகவே வாழ்ந்தாள். இன்று அநாதையாய் கவலைகளின் ஒட்டுமொத்த உருவமாய் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றாள்.

அவளது தாய் இறந்தபோது விவரம் அறியாத சிறு குழந்தையவள். அதன் பின்னரும் தாய் இல்லையே என்று அவள் உணர்ந்து வேதனைப்படாத வகையில் ஒட்டுமொத்த பாசத்தையும் கரிசனையையும் காட்டி அவளை வளர்த்தவர் சூரியப்பிரகாஷ். இப்போது ஒட்டுமொத்த ஏக்கத்தையும் அவளுக்குப் பரிசளித்து விட்டுச் சென்றூவிட்டார்.

எப்போதுமே அவள் அறைக்குள் அடைந்து கிடக்க மாட்டாள். ஆனாலும் அவள் இப்போது புதியவர்கள் வீட்டில் தங்கியிருக்கிறாள் என்ற உணர்வே அவளை அறைக்குள் கட்டிப் போட்டது. அறைக்குள் பல மணி நேரமாய் தனித்திருந்ததோ என்னவோ அவள் மனதுக்குள் பல எண்ணக் கலவைகள் தோன்றி அவளைத் தடுமாற வைத்தது. மூச்சு முட்டுவதுபோல் உணர்ந்தாள். அடிக்கடி அவளை வந்து பார்த்த அகமேந்தியும் அவளுடன் அமர்ந்து கதை பேசினார்.

மதியம் ஆனதும் அவளால் அறைக்குள் இருக்க முடியவில்லை. அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைவுகள் அவள் மனதில் பெரும் பாரமாய் அழுத்தியது.

அவளது தந்தை இறந்ததும் அவள் தத்தெடுத்த மகள் என்று அவளுக்குத் தெரிந்தது போல சகலருக்கும் தகவல் பரவிவிட்டது. அதனைக் கேள்வியுற்ற தர்மேந்திராவும் அவளைச் சந்திக்க வந்தார். ஆனால் அவர் வந்து கூறிய தகவல் அவளுக்கு அதிர்ச்சியாய் இல்லாவிட்டாலும் சற்றே மனதை வருத்தியது.

வழமையான நல விசாரிப்பிற்கு பின்னர் மெல்ல விடயத்தை ஆரம்பித்தார் தர்மேந்திரா.
"ஆதிரா, நீ தப்பா நினைக்கலைன்னா நான் ஒரு விஷயம் சொல்லவா?"

"சொல்லுங்க அங்கிள்"

"முதல்ல என்னை நீ மன்னிக்கணும்"

"என்ன அங்கிள் நீங்க போய் என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்குறிங்க. என்னவானாலும் பரவாயில்லை சொல்லுங்க"

"என் சூழ்நிலை அப்படியாச்சும்மா.. கட்டாயமா இதை தடுக்க முடியாது. அதுவந்து.. என் வீட்டில்.." என்று சற்று தயங்கியவர்,
"ஓகே நான் நேரடியாகவே விஷயத்துக்கு வாறேன். உங்க அப்பா ஏஎஸ்பி இருக்கும்போது உனக்கும் சர்வேஷுக்கும் மரேஜ் பண்ணுவதாய் முடிவெடுத்திருந்தோம். ஆனால், இப்போ வீட்டில கொஞ்சம் தயங்குறாங்க.. அதனால.. இந்த மரேஜ் நடக்காதும்மா" பட்டென்று சொல்லி விட்டார். அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவர் மீது கோபமோ வெறுப்போ எதுவுமே ஏற்படவில்லை. ஏற்கனவே இதைவிடப் பெரிய இடியெல்லாம் அவள் தாங்கிவிட்டாளே. இதுவும் இப்போது சற்றே மனவலியைத் தந்த போதும் இதனைக் கடந்துதான் ஆக வேண்டுமென்ற நிதர்சனம் உணர்ந்தவள் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

"ஆதிரா, எங்க வீட்டில பாரம்பரியம், சாதி சனம் என்று நிறையப் பார்ப்பார்கள். ஏஎஸ்பியின் குடும்பம் பாரம்பரியமானது. அது பிடிச்சுப் போய்தான் கல்யாணப் பேச்சு எடுத்தோம். இப்போ.."

"பிளீஸ் அங்கிள், எனக்குப் புரியுது. இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம். நீங்க எனக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. நீங்க சொல்ல வர்றது எனக்கு நல்லாப் புரியுது. சோ, விடுங்க அங்கிள்" என்று அவள் மென்குரலில் கூறினாலும் அந்தக் குரலில் இருந்த வெறுமை அவருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

சிப்பந்தியை அழைத்து அவருக்கு சிற்றுண்டி கொண்டு வரப் பணித்தாள் ஆதிரா. அதனை மறுத்தவர், அவசர மீட்டிங் ஒன்று இருப்பதாகக் கூறிக் கிளம்பி விட்டார்.

அவளுக்கு இந்த விடயத்தில்கூட ஆறுதல் சொல்ல யாருமின்றி தனியே தாங்கி நின்றாள். சித்தாரா அவ்வப்போது வந்து தன் தோழிக்கு ஆறுதலாகக் கூடவே இருந்து விட்டுச் செல்வாள் தான். ஆனாலும் அவள் மேற்படிப்பிற்காக அவுஸ்திரேலியா செல்ல இருப்பதால் அது தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். தொடர்ந்து தன் நண்பியோடு அவளால் இருக்க முடியவில்லை. சிறுவயது முதல் எந்த ஒரு விடயத்திலும் கூடவே இருந்த தந்தை இன்று இல்லாதது அவளுக்கு எப்போதுமே பேரிழப்பாகவே இருந்தது.

அன்று அவர் சொல்லிய விடயம் இப்போது நினைக்கும்போதும் மனதிற்குள் சற்றே வலித்தது. அவள் சர்வேஷைக் காதலிக்கவில்லைதான். ஆனாலும் நிச்சயம் முடிந்ததால் அவனுடன் சகஜமாகப் பேசிப் பழகியிருந்தாள். எனவே சற்று ஏமாற்ற உணர்வு தோன்றியது. ஆனால் அவன்கூட இதுகுறித்து ஒரு வார்த்தை பேசவில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது.

அறையை விட்டு வெளியே சென்றால் மனதுக்கு இதமாக இருக்கும் எனத் தோன்றவும் மெல்ல வெளியே வந்தாள். அகமேந்தி அவளிடம் கூறிவிட்டுத் தங்கள் அறைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஹாலில் வேறு யாரையும் காணவில்லை எனவும் தோட்டத்திற்குச் சென்றாள்.

அங்கே பூத்துக் குலுங்கிய மலர்களை அருகில் கண்டதும் இவளுக்கு மிகவும் ஆனந்தமாகிவிட்டது. மனதிலிருந்த வேதனை, அழுத்தம் எல்லாம் எங்கேயோ மாயமாகி மறைந்துவிட துள்ளிக் குதித்தபடி ஓடிஓடி பூக்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தாள்.

அப்படியே சென்றவள் பின்புறத் தோட்டத்திற்கு வந்துவிட்டாள். அங்கே கண்ட இயற்கையெழில் அவளை மெய் மறக்க வைத்தது. சற்றே தூரத்தில் தெரிந்த நீர்வீழ்ச்சியும் அதிலிருந்து வந்த சிற்றாறின் சலசலப்பும் அவள் மனதைத் தன்பால் ஈர்த்தன. தன்னை மறந்து அப்படியே அந்த இயற்கையை ரசித்தபடி நின்றுவிட்டாள்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியவில்லை. திடீரென அவள் பின்னால் உறுமல் சத்தம் கேட்கவும் சுயநினைவு வந்தவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அங்கே இரண்டு பெரிய நாய்கள் இவளையே பார்த்தபடி நிற்பதைக் கண்டதும் இவளுக்குச் சர்வமும் நடுங்கியது. ஏற்கனவே இவளுக்கு நாய் என்றால் மிகவும் பயம். சிறு வயதில் ஒரு தடவை இவள் நாய் ஒன்றுடன் விளையாடியிருக்கிறாள். அப்போது தெரியாமல் அதன் வாலை இவள் மிதிக்க, கோபம் கொண்ட அதுவும் இவளது காலைப் பதம் பார்த்துவிட்டது. அன்றிலிருந்து இவளுக்கு நாய் என்றாலே மிகவும் பயம்தான்.

இப்போது அவள் எதிரே நின்ற அந்தப் பெரிய நாய்களை அவள் ஏதோ அவளைப் பிடித்து விழுங்கக் காத்திருக்கும் அரக்கர்களைப் பார்ப்பது போல் மிரட்சியுடன் பார்த்தாள். அவையும் இந்தப் புதியவள் யார்? என்ற எண்ணத்தில் இவளை முறைத்தன. இவளது பயந்த பார்வையும் அவைகளுக்கு சந்தேகத்தை உண்டாக்க தங்கள் உறுமல் சத்தத்தைக் கூட்டின. அந்தச் சத்தமே இவளுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தியது. பயத்தில் கால்களை மெல்ல மெல்லப் பின் நகர்த்தினாள். ஆனால் அவைகளும் இவள் நகர்வதைக் கண்டதும் தாமும் நகர்ந்து உறுமியபடி முன்னே வந்தன. இன்று என் கதை அவ்வளவுதான் என்று நினைத்தவள், திரும்பி வீட்டை நோக்கி ஓட்டம் எடுத்தாள்.

தன்னைத் துரத்தி வந்த நாய்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடியவள் எதன் மீதோ மோதி தடுமாறி கீழே விழுந்தாள்.

திடீரெனத் தன் மீது மோதி கீழே விழப் போனவளை தாங்கிப் பிடிக்க நினைத்தான் இளமதியன். ஆனாலும் எதிர்பாராமல் வந்து மோதியதால் திகைத்துத் தடுமாறியவன் அப்படியே தானும் சரிந்து விழுந்து விட்டான். அவன் கீழே சரியவும் பிடிப்பற்று அவன் மீதே சரிந்து விழுந்தாள் பெண்ணவள். பஞ்சுப் பொதியெனத் தன்மீது விழுந்தவளை அணைத்தபடி நிமிர்ந்து பார்த்தான் அவன். அவன் கோபத்துடன் பார்க்க நினைக்கவும் அக் கோபத்தையே மறக்கடித்தன அவளது கண்கள். அவளது வசீகரிக்கும் கண்கள் அப்படியே அவனைத் தனக்குள் இழுத்துக் கொண்டன. அந்தக் கண்களில் உண்மையில் காந்தம்தான் இருந்ததோ புரியவில்லை. அதிலேயே பல நொடிகள் லயித்திருந்தான். தங்கள் தோட்டத்து மலர்களின் நறுமணத்தை விட இந்த மங்கையின் தேகத்தின் சுகந்தம் அவன் நாசியை நிறைத்து அவனது சிந்தனையை மழுங்கடித்தது. அவளது அந்தப் பூ முகம் அவனுள் இருந்த ஏதோவோர் மென்மை உணர்வைத் தட்டி எழுப்பின. தன்னை முழுதும் அவளுள் தொலைத்து அப்படியே ஸ்தம்பித்து விட்டான்.

அவனது மூச்சுக் காற்று அவள் கன்னம் உரசி அவள் உணர்வுகளைத் தீண்டின. முதல் பார்வையிலேயே தன் மனம் அவனிடம் பறி போவதை அவளும் உணர்ந்தாள்.

தாங்கள் இருக்கும் நிலையை இருவருமே மறந்துவிட்டனர். இருவரது கண்களும் ஒன்றையொன்று மோதிக் கொண்டன.

அவளைத் துரத்தி வந்த நாய்கள் தங்கள் எஜமானைக் கண்டதும் வாலைக் குழைத்தபடி நின்றன. அப்பொழுது அவ்வழியே சென்ற கிளிக் கூட்டத்தின் இனிமையான குரல் அவனை சுய உணர்வு பெற வைத்தது. யாரென்றே தெரியாத பெண் மீது கிறங்கி நிற்கின்றேனே என்ற உணர்வு அவனை எரிச்சலடையச் செய்யவும் அது விளைவித்த கோபத்தில்,
"ஹலோ, கொஞ்சம் என் மேல இருந்து எழும்புகிறாயா?" என அதட்டினான். அவன் அப்படிச் சொல்லவும் தன்னிலை உணர்ந்தவள் அவசர அவசரமாக எழுந்து நின்றாள். அவனை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கித் தலைகுனிந்து நின்றவள், எழும்பாத குரலில் "சாரி" என்றாள்.

எழுந்து நின்ற அவனும் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு,
"பார்த்துவரத் தெரியாதா? இப்படியா வந்து மேலே மோதித் தள்ளுறது" என்று குரலில் எரிச்சலை வரவழைத்துக் கேட்டான்.
"நான் வேணுமென்றா வந்து விழுந்தேன். அந்த நாய்கள்.." என்றவளுக்கு அப்பொழுதுதான் அவற்றின் நினைவு வரவும் பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். அங்கே அவை இரண்டும் துள்ளிக் குதித்து விளையாடியபடி நின்றன. என்ன நடந்திச்சு இவைகளுக்கு என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். அவைகளோ தங்கள் எஜமானைக் கண்டதும் சாந்தமாகித் துள்ளிக் குதிப்பது அவளுக்குப் புரியவில்லை.

"ஓகே சாரி, தெரியாமல் வந்து மோதிட்டேன்"

"ம்ம்" என்றவன் காலையில் தாய் கூறியதை மறந்து,
"அதுசரி, யார் நீ?" என்று வினவினான்.
அவளுக்குக் கோபம் உண்டானது, தான் இருக்கும் இடத்திற்கே வந்து யார் என்று கேட்டது மட்டுமல்லாமல் நீ என்று ஒருமையில் விளிக்கின்றானே என்ற எரிச்சலில்,
"ஹலோ மிஸ்டர், முதல்ல யார் நீ? திறந்த வீட்டுக்குள்ள எதுவோ போல நுழைந்ததுமல்லாமல், என்னையே யார் என்று கேட்கிறாய்?" என்று தானும் ஒருமையிலேயே விளித்து அவனது அழைப்புக்கு அசராமல் பேசினாள்.

அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. தன்னையே ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல் நாய் என்றும் நாசூக்காகச் சொல்கின்றாளே என்ற சினத்தில்,
"பெரியவங்களிடம் மரியாதையாகப் பேசத் தெரியாதா உனக்கு?" என்றான். "பெரியவங்களா? அப்படி இங்கே யாரும் வரலையே?" அவனுக்குப் பின்னால் எட்டிப் பார்த்தபடி கூறினாள். அவன் முறைத்துக் கொண்டே நிற்பதைக் கண்டவள்,
"முதல்ல நீங்க மரியாதை கொடுத்துப் பேசணும். அப்பத்தான் அது திரும்பக் கிடைக்கும்" என்றாள்.

அப்போதுதான் அவனுக்குத் தான் அவளை ஒருமையில் அழைத்தது உறைத்தது. ஆனாலும் அதற்கு மன்னிப்புக் கேட்கத் தோன்றவில்லை.

"நான்தான் ஓடிவந்ததில் கவனிக்கவில்லை. அப்போ நீங்களாவது கவனிச்சு வந்திருக்கலாமே?, பட் என்னைக் குறை சொல்லுறிங்க. உங்களுக்கு கண்ணில் ஏதும் கோளாறா? அப்படி இருந்தால் சொல்லிடுங்க. நான் உங்களை மோதியது தப்பென்று ஒத்துக் கொள்கிறேன்" என்று நக்கலாகக் கேட்டாள்.

வீண் வாதம் செய்ய விருப்பமில்லாத இளமதியனும்,
"ஓகே அதைவிடு.. விடுங்க. நீங்க யார்?" என்றான்.

"அதைத்தானே நானும் கேட்டேன். நீங்க யார்?"

"ம்ம்.. நான் இந்த வீட்டில் இருக்காங்களே மதிவாணன், அகமேந்தி. அவங்களோட மகன். இப்போ சொல்லுங்க..."

'அச்சச்சோ... இவர் அவங்களோட மகனா? நானும் இது தெரியாமல் வாயாடி விட்டேனே.. இப்போ என்ன செய்வது' எனத் தடுமாறி நின்றாள் பெண்ணவள்.
அவள் தான் பேசியது தப்பென உணர்ந்து நாக்கைக் கடித்தபடி கண்கள் அங்குமிங்கும் அலைபாய நின்றதைக் காண அவனுக்கு உள்ளூர சிரிப்பாய் இருந்தது. ஆனாலும் வெளியே விறைப்பாய் நின்றபடி,
"இன்னும் நீங்க யாரென்றே சொல்லலையே, அல்லது யாரென்றே மறந்திடுச்சோ? ஒருவேளை மறதி வியாதியோ?"

"எனக்கு எந்த வியாதியும்.." என்று தொடங்கியவள் மீண்டும் தன் நாக்கைக் கடித்தாள்.
"சாரி... நான்.. இங்கே நேற்று.. சார் அழைத்து வந்தார்.. நான்.." தொடங்கியவள் தன்னை எப்படி அறிமுகப்படுத்துவது என்று புரியாமல் தடுமாறினாள்.

அப்போதுதான் அவனுக்கு நினைவு வரவும்,
"ஓகோ.. அப்பா நேற்று அழைத்து வந்ததாய் கூறினாரே, அது நீங்கதானா? சாரி" என்றான்.
"ம்ம்" என்று தலையாட்டியவள் சங்கடத்துடன் நெளிந்தபடி நின்றாள். அவளைப் பார்த்தவன்,
"ஓகே நீ.. நீங்க உள்ளே போங்க.நான் ரொனியையும் ஸ்வீட்டியையும் அவங்க பிளேஸில் விட்டு வாறேன்" என்று அவன் கூறவும் விட்டால் போதும் என்று தான் இருந்த அறைக்குள் ஓடி ஒளிந்தாள்.


தன் அறைக்கு வந்து உடைமாற்றி தன்னை சுத்தப்படுத்திவிட்டு வந்தவன் அறையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான். அவனுக்கு தன்மீது மெத்து மெத்தென்று மோதிய அந்த பெண்ணின் நினைவு எந்தக் கேள்வியும் இல்லாமல் மீண்டும் அவன் முன்னே தோன்றியது. மலங்க விழித்த அந்த கண்களில் தான் ஆழப் புதைந்தது போல் உணர்ந்தான். அந்த விழிகளும் அந்த அமுதூறும் இதழ்களும் அவனுக்குள் இப்பொழுது புகுந்து நாட்டியமாடின. அந்த நினைவுகள் அவனுக்கு ஒருவித இன்பத்தைத் தருவதை உணர்ந்தான். அந்த இதழ்களில் முத்தமிடத் தோன்றிய அவனது ஆசையை எண்ணி அவன் அதிர்ந்தான்.
'டேய் மதி, உனக்கு என்னடா நடந்தது? ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? அவள் யாரோ விருந்தாளியாக வந்தவள். அவளைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறாய்? ஏற்கனவே ஒரு சூடு பட்ட பின்னரும் இந்த மனம் ஏன் இப்படித் தறி கெட்டு அலைகின்றது. ஒரு தடவை பட்ட காயமே போதும். மீண்டும் ஒரு தடவை அடிபட நான் தயாராயில்லை என்று தனக்குத் தானே கூறினான்.

இங்கே அவளும் அவன் நினைவுச் சுழலிலேயே சிக்கித் தவித்தாள். தன் மனம் அவனிடம் பறிபோவதை எண்ணி அவளும் மிரண்டாள்.
அவனது அணைப்பிலும் அந்தப் பார்வையிலும் உருக முயன்ற மனதை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினாள். நானே ஓர் அநாதையாக உறவுகளைத் தேடி வந்தேன். அதற்குள் ஏன் இந்தத் தடுமாற்றம். முதல் வேலையாக அகமேந்தி அம்மா எழுந்ததும் அவரிடம் கேட்டு ரவிவர்மா அங்கிளுக்கு ஹோல் பண்ணி நடந்த விஷயத்தைச் சொல்லணும். அவர்களைப் பற்றி வேறு ஏதாவது தெரியுமா என்றும் கேட்கணும் என்று எண்ணியவள் சற்றே கண்ணயர்ந்தாள்.

மாலை ஓய்வெடுத்து விட்டு வந்த அகமேந்தி தனக்கும் ஆதிராவுக்கும் டீ போட்டு வைத்துவிட்டு அவள் இருந்த அறைக்குள் சென்றார். அவளும் தூங்கி எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள்.

"என்னடா நீ காலையிலிருந்து அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறாய். வாடா நம்ம கார்டனைச் சுத்திப் பார்த்தபடி டீ குடிப்போம்"
என்று அழைத்தார்.

"இல்லம்மா, நான் மதியம் கார்டனுக்குச் சென்று சுற்றிப் பார்த்தேன். சூப்பரா மெயின்டெயின் பண்ணுறிங்க"

"குட். ஓகே வாடா அப்போ டீ குடிப்போம்" என்று அழைத்துக் கொண்டு சென்றார். போர்டிக்கோவில் வந்து அந்தக் குளிர்மையான சூழலிற்கு இதமாக டீ குடித்தபடி அவருடன் கதை பேசியது அவள் மனதிற்குப் பாந்தமாக இருந்தது. டீ குடித்ததும் அவளை அழைத்துச் சென்று ரொனி, சுவீட்டியை அவளுக்கு அறிமுகப்படுத்திப் பழக வைத்தார். இப்போது அவை இரண்டும் சமர்த்தாக அவளுடன் ஒட்டிக் கொண்டன. பயத்தில் அவற்றின் முதுகில் நடுங்கும் கைகளை வைத்தாள்.

இவர்கள் இருவரும் உள்ளே வரவும் மாடியிலிருந்து சட்டையின் கைகளை மடித்தபடி இறங்கி வந்தான் இளமதியன். அவனைக் கண்டதும் இவளுக்கு மதியம் நடந்த சம்பவம் நினைவு வந்தது. அவன் மேலே விழுந்ததும் நினைவு வர ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.

"என்ன கண்ணா எப்போது வந்தாய்? லஞ்ச் சாப்பிட்டாயா? திரும்பப் புறப்பட்டு விட்டாயா?" என்று கேட்டார் அகமேந்தி.

"அம்மா நான் வெளியே லஞ்ச் முடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு திரும்பவும் ஹாஸ்பிடலுக்குப் புறப்பட்டுட்டேன்மா"

"இன்று ஈவினிங் உனக்கு ஃப்ரீ இல்லையா கண்ணா"

"ப்ரீதானம்மா.. இன்று பேஷன்ட் அதிகம்மா. சோ எக்ஸ்ட்ரா டியூட்டி கேட்டாங்க. அதுதான் போறேன்"

"டீ போட்டு தரவா?"
"இல்லை வேணாம்மா" என்றவன் அவளை கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்லக் கால் வைத்தான்.

"கண்ணா" என்ற தாயின் அழைப்பில் அப்படியே நின்றவன்,
"என்னம்மா?" என்றான்.

"சொல்ல மறந்துட்டேன் காலையில் கூறினோம் அல்லவா, அந்தப் பெண் இதுதான். பேர் ஆதிரா" என்றவர்,
"ஆதிரா, இது என் பையன் இளமதியன். கவர்ன்மென்ட் ஹொஸ்பிடலில் வேர்க் பண்றான்" என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவனும் மதியம் எதுவும் நடந்ததாகக் காட்டிக் கொள்ளாமல்
"ஹாய், வெல்கம்" என்று மரியாதை நிமித்தம் பேசிவிட்டு அளவாய் புன்னகைத்தான்.
இவளும் பதிலுக்கு
"ஹாய்... தாங்ஸ்" என்று கூறி வைத்தாள்.

"ஓகேம்மா.. பாய்" என்றுவிட்டு அவன் புறப்பட்டான்.

அவன் வெளியே செல்லும் போது அவனைப் பின்புறம் பார்த்து மனதிற்குள் ரசித்தாள். என்ன ஒரு கம்பீரம். இவன் உண்மையில் டொக்டரா? அல்லது ஜிம் மாஸ்டரா? என்று அவள் மனம் எண்ணமிட்டது.

அவன் சென்றதும் அகமேந்தியிடம் அலைபேசியைக் கேட்டுப் பெற்றவள், ரவிவர்மாவிற்கு அழைப்பெடுத்தாள். விஷயத்தை அறிந்ததும் அவர் பதறிவிட்டார். ராணியாக இருக்க வேண்டியவள். இப்படி தெரியாத நாட்டில் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா? என்று எண்ணியவர், உடனேயே தான் புறப்பட்டு வருவதாகக் கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்தவள், தனக்கு இவர்களுடன் இருப்பது பிடித்திருப்பதாகவும் இங்கிருந்தே மற்றைய அலுவல்களைப் பார்ப்பதாகவும் கூறிவிட்டாள். அவளது குடும்பத்தைப் பற்றி அவருக்கும் வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை.

மாலையே அவளை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்ற அகமேந்தி அவளுக்கு வேண்டிய உடை மற்றும் இதர பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.

அன்றே பொலிஸ் நிலையம் சென்ற மதிவாணன் அவளிடம் கேட்டு தகவல் அறிந்து அவளது பயணப்பையையும் கைப்பையையும் புகையிரத நிலையத்தில் தவற விட்டதைப் பதிவு செய்துவிட்டார்.

மறுநாள் காலை நேரத்திற்கே எழுந்தவள் தனது காலைப் பணிகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
சமையலறைக்குள் சென்றவள் அங்கே காலைச் சமையலில் ஈடுபட்டிருந்த அகமேந்திக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாள். மதியம்வரை தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை அவருக்குச் செய்து கொண்டிருந்தாள்.

மதியம் சந்தோசத்துடன் வந்தார் மதிவாணன்.

ஆதிரா விட்டுவந்த கைப்பை கண்டெடுக்கப்பட்டு விட்டதாகவும் அதனை உறுதிப்படுத்திக் கொடுப்பதற்கு அவளை பொலிஸ் அழைத்துவரச் சொன்னதாகவும் கூறினார். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள் அவருடனேயே அதனைப் பெற புறப்பட்டுச் சென்றாள்.
 
Top