எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 6

Sathya theeba

New member
அன்று மாலையே மதிவாணன் ஆதிராவைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். தன் கைப்பையின் அடையாளங்களையும் அதிலிருந்த பொருட்களையும் தன்னுடையது என உறுதிப்படுத்தியவள் அதனைப் பெற்றுக் கொண்டாள். இவள் பயத்தில் ஓடும்போது புகையிரத நிலையத்திலேயே விட்டுச் சென்று விட்டாள். அங்கே கிடந்த கைப்பையை யாரோ எடுத்துள்ளார்கள். அதற்குள் இருந்த பணத்தையும் இரண்டு அலைபேசிகளையும் மட்டும் எடுத்துவிட்டு ஏனைய பொருட்களுடன் வீதியோரம் அதனைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். அதனைக் கண்டெடுத்தவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கூடிய விரைவில் அவளது அலைபேசிகளைத் திருடியவர்களையும் கண்டுபிடித்து மீட்டுத் தருவதாகப் பொலிஸார் நம்பிக்கை அளித்தனர்.


அதனைப் பெற்றுக் கொண்டவள், முதலில் அதற்குள் தன் தந்தையின் கடிதம் உள்ளதா என்று படபடக்கும் இதயத்துடன் ஆராய்ந்தாள். அதுமட்டுமே தற்போது அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கருவி என்பதே அவளது எண்ணம். உள்ளே அக் கடிதத்தைக் கண்டதுமே அவளுக்குப் பெரும் நிம்மதி உண்டானது.


வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் ஆதிராவின் முகத்தில் ஒரு தெளிவைக் கண்ட அகமேந்திக்கும் மனம் முழுவதும் நிறைந்தது. அப்பாடா இந்தப் பிள்ளையின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்ற நிம்மதி அவருக்கும் உண்டானது. ஆனாலும் அவரது மனதின் மூலையில் சிறு வருத்தம் இருந்தது. அவள் தன் உறவுகளைக் கண்டதும் உடனேயே தங்களை விட்டுப் பிரிந்து விடுவாள் ஏன்ற ஏக்கமே அது. ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் நின்றார்.


மனைவியின் முகத்தைப் பார்த்ததும் அவரது எண்ணவோட்டத்தைக் கணித்தவர் அவர் அருகில் சென்று அவர் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார். அகமேந்திக்குக் கண்களாலேயே ஆறுதல் கூறினார்.


"ஆதிரா…"


"சொல்லுங்க சேர்"


"நாம நாளைக்கு காலையிலேயே அந்த அட்ரஸூக்குப் போவோம்மா. அங்கே உன் பேரண்ட்ஸைப் பார்த்து உன்னை ஒப்படைத்தால்தான் எனக்கும் நிம்மதி"


"தாங்க்ஸ் சேர், எனக்கு இன்றே போய் அவர்களைப் பார்க்க மாட்டோமா என்று இருக்கு"


"ஓகோ. எங்களை விட்டு போறதில் உனக்கு அவ்வளவு அவசரமாடா?" என்று வருத்தம் போல் காட்டிக் கேட்டார் அகமேந்தி.


"என்னம்மா நீங்க இப்படி கேட்குறிங்க? நான் அப்படி யோசிக்கவேயில்லை. இங்கே உங்ககூட இருக்கும்போது என் அப்பாகூட இருந்ததைப் போன்ற ஃபீல்தான் எனக்கு உண்டாகுது. நான் எப்போதும் உங்களை மறக்கவே மாட்டேன்" என்று கண்கள் கலங்கக் கூறினாள்.


அவள் கலங்குவதைக் காணவும் மனம் இரங்க அவள் அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டார் அகமேந்தி. அந்த அணைப்பு அவளுக்கு பெரும் ஆறுதலைத் தர நிம்மதியாக அவர் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.


"நான் சும்மாதான் கேட்டேன்டா."


"ம்ம்.."


"ஆதிரா… உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா? வசதியாய் இருக்கா? உனக்கு நாங்க இங்கே ஏதாவது குறை வச்சிருந்தா எங்களை மன்னிச்சிடும்மா"


"அச்சோ அம்மா.. ஏனம்மா நீங்க இப்படி மன்னிப்பென்று பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்க? யாரென்றே தெரியாத என்னை உங்க வீட்டில தங்க வச்சதுமில்லாம, உங்க வீட்டுப் பெண்ணாக என்னை நடத்துறிங்க. இந்த மனசு யாருக்கும் வராதும்மா. நான் இதுக்கான நன்றிக்கடனை எப்படித் தீர்ப்பேன் என்றே தெரியலை" என்று உளமார உணர்ந்து கூறினாள்.


அன்று இரவு அவளால் தூங்கவே முடியலை. காலையில் தன் பெற்றவர்களைக் காணப் போகின்றோம் என்ற எண்ணம் அவள் உறக்கத்தைக் கலைத்தது என்றால், இன்று முழுவதும் ஒரு தடவை கூட அவனைக் காணவில்லையே என்ற ஏக்கம் அவள் மனதை அரித்தது. ஆம் அவள் காலையிலிருந்தே இளமதியனைக் காண ஆவல் கொண்டாள். அங்குமிங்கும் அவள் கண்கள் அடிக்கடி அலைபாய்ந்து அவனைத் தேடியது. ஆனால் அவள் தேடலுக்குரியவனின் தரிசனம் அவள் கண்களுக்குக் கிடைக்கவேயில்லை. ஏனெனில் அவன் அன்று அதிகாலையிலேயே கிளம்பி வழமையாகச் செல்லும் கிராமத்திற்கு இலவச மருத்துவ முகாம் நடத்தச் சென்றுவிட்டான். இதை அறியாத பேதை அவளும் அவனைக் காண ஏங்கி நின்றாள். தான் ஏன் அவனைக் காண ஏங்க வேண்டும் என்று யோசித்தவளுக்கு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. அவளது ஆழ்மனதில் அவன் குடிகொண்டு விட்டான், அவளது மனம் அவன் பக்கம் சரிந்து விட்டது என்ற உண்மை அவளுக்கு உறைக்கவும் திகைத்துத்தான் போனாள்.


'இது எப்படி சாத்தியமாகும்? இது என்ன முட்டாள்தனமல்லவா?அவனை முழுதாக அரைமணி நேரம்கூடப் பார்த்ததில்லை. அவனைப் பற்றி எந்த விவரமுமே தெரியாது. அவன் நல்லவனா கெட்டவனா என்றுகூட அவள் அறியவில்லை. அவ்வளவு ஏன்? அவன் திருமணமானவனா? அல்லது யாரையேனும் காதலிக்கின்றானா என்றுகூடத் தெரியாது. இந்த லட்சணத்ததில் அவனை இந்த மனம் தவிப்புடன் தேடுவதேனோ? ஏய் ஆதிரா, உனக்கு என்ன மூளை குழம்பிடுச்சா?' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.


'என் வாழ்க்கையே எவ்வளவு விசித்திரம் நிறைந்தது. எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, மறுபடி பிறந்த இடத்திற்கே வந்து நிற்கின்றேன். அப்பாகூட சந்தோசமாய் வாழ்ந்த காலத்தில் இப்படியெல்லாம் என் வாழ்க்கை தடம் மாறும் என்று கனவிலும் எண்ணவில்லையே' என்று அங்கலாய்த்தபடி விடிகாலையில்தான் கண்ணயர்ந்தாள்.


அவள் யாரை எண்ணி தூக்கமின்றித் தவித்தாளோ அவனும் தன் அறையில் உறக்கம் தொலைத்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டின் பின்புறம் நிலவின் ஒளியில் தகதகத்த நீர்வீழ்ச்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தனது பணிமுடித்து வரவே இரவு பதினொரு மணியாகிவிட்டது. வந்ததும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு படுத்தவனுக்கு தூக்கம்தான் அவன் பக்கத்தில் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது. புரண்டு புரண்டு படுத்தவன் முடியாமல் எழுந்து தன் அறை ஜன்னலின் திரையை விலக்கினான். தெளிவான கண்ணாடியூடாகத் தெரிந்த பால்நிலவும் நீர்வீழ்ச்சியும் அவன் மனதை நிறைக்கவில்லை. அவன் மனம் முழுதும் ஆதிராவே நிறைந்திருந்தாள். அவளைக் காண முடியவில்லையே என்று அவன் மனம் தவித்தது.


'சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள். ஆனால் என் மனம் அதையெல்லாம் பொய்யாக்கி விட்டதே... ஒரு தடவை பட்ட வடு ஆறமுன்னரே ஏன் இன்னொருத்தியைக் காண இப்படித் தவிக்க வேண்டும்' என்று அங்கலாய்த்தான். அன்று இருவருக்குமே உறக்கம் தொலைத்த இரவாகித்தான் போனது.


மறுநாள் காலை அவள் புதுத் தெம்புடன் எழுந்து தன் பணிகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கே அமர்ந்து அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார் மதிவாணன். மெதுவாய் அவர் அருகில் சென்றவள் மலர்ந்த முகத்துடன்,

"குட்மோர்னிங் சார்" என்றாள்.


"குட்மோர்னிங்மா, நைட் ஹப்பியா தூங்கினாயா?"


"ஆமா சார்"


"குட்.. ஆதிரா அந்த அட்ரஸை எடுத்திட்டு வாம்மா. அது எங்கே இருக்கென்று தெரிந்தால் நாம போறதுக்கு ஈசியாய் இருக்கும்"


"ஓகே சார்" என்றவள் உள்ளே சென்று தந்தையின் கடிதத்தை எடுத்து வந்தாள். அவள் வரவும் அவர்களுக்கு காஃபி எடுத்துக் கொண்டு அங்கே வந்தார் அகமேந்தி. இருவருக்கும் கொடுத்தவர் தனக்கான காஃபியை எடுத்துக் கொண்டு இன்னுமொரு சோஃபாவில் அமர்ந்தார்.


அவளிடம் முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்ட மதிவாணன்,

"கொஞ்சம் தொலைவுதான். பட் போயிடலாம். நான் ரெடியாகி வந்ததும் புறப்படுவோம்" என்றவர் காஃபியை பருக ஆரம்பித்தார். சற்று யோசனையுடன் இருந்த அகமேந்தி, "ஆதிராம்மா.. இப்போ சொன்ன அந்த அட்ரஸை ஒரு தடவை திரும்பச் சொல்லுடா" என்று கேட்டார். அவள் கூறவும் பபரப்புடன்,

"உங்க அம்மா பெயர் என்னடா?" என்று மீண்டும் கேட்டார்.


"அருள்நிதி அம்மா"


"அப்போ உன்னை வளர்த்த அம்மா பெயர்?"


"மலர்விழி" என்றாள்.


அதைக் கேட்டதும் அதிர்ச்சியிலும் சந்தோசத்திலும் ஒரு நிமிடம் உறைந்து நின்றார் அகமேந்தி. முகவரியைக் கேட்டதும் ஐயம் கொண்டவர், தனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவே தாயின் பெயரைக் கேட்டார். அவர் சந்தேகம் தீர்ந்ததும் எழுந்துபோய் ஆதிராவை கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.


"நீ.. நீ என் மலரின் குழந்தையா? என்னால் நம்பவே முடியவில்லை?" என்று சந்தோஷத்தில் கண்ணீர் வடித்தார்.


"என் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா அம்மா?" என்று கேட்டாள் ஆதிரா.


"நான் நினைப்பது சரி என்றால் அவள்தான் உன் அம்மாவாக இருக்க வேண்டும். உன்னிடம் மலரின் போட்டோ இருக்குதா?"


"இல்லையே அம்மா. நான் என் மொபைலில் சேவ் பண்ணி வைச்சிருந்தேன். பட், அதுதான் தொலைஞ்சிடுச்சே" என்று சிறு குழந்தையைப் போல உதட்டைப் பிதுக்கிக் கூறினாள். அதைப் பார்த்ததும் அகமேந்திக்கு சிரிப்புத்தான் உண்டானது.


"ஓகே ஓகே விடும்மா. இப்போதான் நாம நேரில் பார்க்கப் போறோமே. அப்போது தெரியும்தானே. அகி நீயும் எங்க கூட வாறியா?" என்றார் மதிவாணன்.


"ஆமாங்க. நான் கட்டாயம் வாறேன்"


"என் அம்மாவை உங்களுக்கு எப்படித் தெரியுமம்மா?" என்று தயக்கத்துடன் கேட்டாள்.


"நானும் மலர்விழியும் ஓஎல் வரை ஒன்றாக ஹொஸ்டலில் தங்கித்தான் படித்தோம். லீவில் இரண்டு மூன்று தடவை மலரைப் பார்க்க அவள் ஊருக்குப் போயிருக்கேன். அவள் ஏஎல் வேற கோர்ஸ். அதனால வேற ஸ்கூலும் மாறிட்டாள். அப்புறம் அவளை ஒரேயொரு தடவைதான் கண்டேன். அதன்பின் அவளைக் காணவே முடியல. இப்போது போலெல்லாம் அந்தக் காலத்தில் போன் வசதியெல்லாம் இல்லையே. இதோ நீ சொல்லித்தான் அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது எனக்குத் தெரிகின்றது" என்று கண் கலங்கியவர், "ஓகேடா.. நானும் ரெடியாகி உன்கூடவே வாறேன்" என்றவர் தயாராக உள்ளே சென்றுவிட்டார்.


"ஓகேம்மா.. நானும் ரெடியாகிட்டு வாறேன். நீ காஃபியைக் குடி" என்றுவிட்டு மதிவாணனும் உள்ளே எழுந்து சென்றார்.


இவளது மனம் பெரும் படபடப்புடன் காணப்பட்டது. கையில் வைத்திருந்த காஃபியைக் கூடக் குடிக்கத் தோன்றவில்லை. தன் பெற்றோர், சகோதரிகளைக் காணப் போகிறோம் என்று வந்தவளுக்கு தன் தாயின் தோழி என அருமையான குடும்பமும் கிடைத்துள்ளது என்ற எண்ணமே அவளை சந்தோசத்தில் மூழ்கடித்தது.


இரவு வெகுநேரம் கண்விழித்த இளமதியனும் விடியும் வேளையிலேயே கண்ணயர்ந்தான். எனவே காலையில் நேரம் சென்று எழுந்தவன் வைத்தியசாலை செல்லத் தயாராகி வெளியே வந்தான்.


தனது வலது கையில் கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு, க்ரீம் நிறத்தில் சட்டையும் கருநீலத்தில் பாண்டும் அதற்கேற்ற காலணியும் அணிந்து கம்பீரமாக இறங்கி வந்து கொண்டிருந்தான் இளமதியன்.

கீழே இறங்கி வந்தவன் படிக்கட்டு முடியும் இடத்தில் நின்றுவிட்டான்.


அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவளைக் காணவும் அவன் உள்ளம் துள்ளியது. அவளிடம் பேசிடத் துடித்தான். ஆனால் என்ன பேசுவதென்றுதான் புரியவில்லை. தடுமாறி நின்றவனின் தோள்களைத் தட்டி

"என்ன கண்ணா, இன்று வாக்கிங் கூட போகலை போல? ஓகே வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று அழைத்தார் அகமேந்தி.


"இல்லம்மா, இப்போ எனக்கு பசிக்கல. அப்புறமாய் சாப்பிடுறேன். நீங்க எங்கேயோ புறப்பட்டுட்டிங்களாம்மா?" என்றான்.


தாங்கள் ஆதிராவுடன் செல்வது குறித்து மகனிடம் கூறிய அகமேந்தி,

"பரவாயில்லை. நீ சாப்பிட்டதும் நாங்க போகிறோம். பேசாமல் சாப்பிட வா" என்றவாறே அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கச் சென்றார். தாயின் வார்த்தைகளை மறுத்துப் பேச முடியாதவன் அவரின் பின்னேயே சென்றான்.


காஃபி அருந்திக் கொண்டிருந்தவளுக்கு அவனின் குரல் கேட்கவும் ஆர்வத்துடன் திரும்பினாள். தாயிடம் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் அவள் ஒருவித இன்ப உணர்வைத் தனக்குள் உணர்ந்தாள். இமை கொட்டாமல் அவனையே பார்த்தாள்.

அவனைக் காணவும் தன் மனம் ஏன் இப்படி பரபரக்கின்றது. தன் மனதின் செய்தி அவ்வளவு உவப்பானதாக இல்லையே என அவள் அறிவு இடித்துரைத்தது. ஆனாலும் அவனது கம்பீரமும் ஆளுமையும் பார்க்கப் பார்க்க அவளுக்குத் திகட்டவில்லை.


அவன் அமர்ந்து உண்ணவும் அவளிடம் வந்தவர்,

"ஆதிராம்மா, வா… உனக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்"


"இல்லைம்மா.. இப்போதான் காஃபி குடிச்சேன். லேட்டா சாப்பிடுறேனே" என்றாள்.


அவன் மளமளவென சாப்பிட்டுவிட்டு தாயிடம் கூறிக் கொண்டு புறப்பட்டான். அவளை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான்.


'ஏன் ஒரு வார்த்தை பேசினால் குறைந்து விடுவாரா? சிடுமூஞ்சி..' என்று மனதிற்குள் அவனுக்குத் திட்டையும் கொடுத்தாள்.


சற்று நேரத்திலேயே மதிவாணனும் வந்துவிட மூவரும் புறப்பட்டு சென்றனர். காரில் செல்லும் வழியெல்லாம் அவள் மனம் பெரும் தவிப்புடன் இருந்தது. அது என்ன வகையான உணர்வென்று அவளாலேயே வரையறுக்க முடியவில்லை. தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம் இது என எண்ணியவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.


"ஆதிரா.. இதுதான் நீ சொன்ன ஊர். இனி இடத்தைக் கேட்டுப் போனால் சரி" என்று மதிவாணன் சொல்லவும் ஆதிராவிற்குத் தன் தாயைப் பார்க்கப் போகும் உச்சபட்ச சந்தோஷம் ஒருபுறமும் அவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் மறுபுறமுமாகத் தவித்தாள். அவள் கைகள் நடுங்க வெளியே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த அகமேந்தி அவளது உணர்வைப் புரிந்துகொண்டு அவள் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். "ஆதிராம்மா யோசிக்காதடா.. எல்லாம் நல்லபடியாகவே முடியும்" என்று அவளுக்கு ஆறுதல் கூறினார். அவள் கூறிய முகவரியை வந்து சேர்ந்ததும் அகமேந்திக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. இது தன் தோழி வாழ்ந்த வீடுதான். எத்தனை வருடம் சென்றபோதும் அந்த இடம் சற்றும் மாற்றமின்றி அப்படியே இருந்தது. ஒருசில வீடுகள் மட்டும் புதிதாக முளைத்திருந்தது.


அவர்கள் தேடிச் சென்ற வீட்டை ஒரு சிறுவன் அடையாளம் காட்டவும் அங்கே சென்றார்கள். சிறிய செங்கல் வீடொன்று. அங்கே வாயிற்படியில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். அவரை யார் என்று தெரியவில்லை. எனவே அவரிடமே வினவினார்கள்.


"ஐயா, இது மலர்விழியின் வீடுதானே" என்று மதிவாணன் கேட்டார்.

"மலர்விழியா? யார் அது?" என்று கண்களைச் சுருக்கி அவர்களைப் பார்த்து கேட்டார். அப்பொழுது உள்ளே இருந்து வந்த ஒரு பெண்,


"நீங்கள் யாரை தேடி வந்திருக்கிறீர்கள்" என்று வினவினாள்.


"இங்கே நாங்கள் மலர்விழி.. அருள்நிதியைத் தேடி வந்திருக்கிறோம்" என்றார் மதிவாணன்.


"அருள்நிதி எங்கள் அம்மா தான். ஆனால் இப்பொழுது அவர் இல்லையே.. உயிருடன் இல்லையே" என்று கூறினாள். அதைக் கேட்டதும் ஆதிராவுக்கு சகலமும் வெறுத்துவிட்டது. தான் யாரைக் காண இவ்வளவு தூரம் ஓடி வந்தாளோ, அவரே இல்லை எனும் போது மனசெல்லாம் மிகவும் வலித்தது. கண்கள் கண்ணீரால் நிறைந்தது. வாய்விட்டுக் கதறனும் போல இருந்தது.


"அம்மாவைத் தேடுறிங்க என்றால் நீங்கள் யார்?" என்று மீண்டும் கேட்டாள் அப் பெண்.


"உள்ளே சென்று பேசலாமா?" என்று கேட்டார் மதிவாணன்.


"மன்னிச்சுடுங்க. உள்ளே வாங்க" என்று அழைத்துச் சென்றாள். அங்கு கிடந்த இரண்டு இருக்கைகளில் பெரியவர்கள் இருவரையும் அமர வைத்தவள், ஒரு சிறிய பாயை விரித்து அதில் ஆதிராவை அமருமாறு கூறினாள்.


அப்பொழுது உள்ளிருந்து ஒரு சிறு பெண்குழந்தை ஓடிவந்தது.


"அம்மா… பசிக்குது.. அப்பா இன்னும் வரலையா?" என்று சிணுங்கலுடன் கேட்டது. சங்கடத்துடன் இவர்களைப் பார்த்து சிரித்தவள்,

"உள்ளே போ.. இப்போ வந்திடுவார்" என்று அக் குழந்தையை உள்ளே அனுப்பி வைத்தாள். ஆதிராவிற்கு மனம் வலித்தது.


"அம்மாவிற்கு என்ன நடந்தது?" என்று வினவினார் மதிவாணன்.


"அப்பாவின் வேலைக்காக நாங்கள் கொஞ்சக்காலம் கிளிநொச்சியில் தங்கியிருந்தோம். அப்போது அங்கே யுத்தம் நடந்தது. அங்கிருந்து எங்களால் வெளியே வரமுடியவில்லை. இடம்பெயர்ந்து முல்லைத்தீவுக்கு நாங்கள் சென்றபோது அங்கு விமானக் குண்டுவீச்சில் அம்மாவும் அப்பாவும் ஒரு தங்கச்சியும் இறந்து விட்டார்கள். தப்பிய நாங்கள் மட்டும் இங்கே வந்து விட்டோம்." என்றாள்.


அதனைக் கேட்டதும் துக்கம் தாளாமல் கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டாள் ஆதிரா. அவளை ஆதரவாக அணைத்து நின்றார் அகமேந்தி. அவள் அழுவதை யோசனையுடன் பார்த்து நின்றாள் அப்பெண்.


அவளது சந்தேகத்தைப் போக்கும் விதமாக அவளிடம் பேசினார் மதிவாணன்.


"உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தது தெரியுமா? உங்கள் சித்தி மலர்விழி கூட அழைத்துச் சென்றாரே?" என்று கேட்டார்.


"எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு அப்போது பத்து வயதிருக்கும். எங்கள் அம்மா அவளை நினைத்து நினைத்து தினமும் அழுவார். ஆனாலும் அவள் எந்த கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பாள். நாங்கள் தான் இங்கே தினமும் கஷ்ட படுகின்றேன் அவளாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்று மனதை தேற்றிக் கொள்வார். எங்கள் வறுமைதான் அவளை சித்தியிடம் கொடுக்கக் காரணம்" என்று கூறினாள்."இவள் உங்கள் தங்கை ஆதிரா" என்று அவளைக் காட்டினார்.
 
Top