புத்தம் புதுக் காலை வேளையது. தன் வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு சுற்றுப் புற இயற்கை எழிலை கண்களால் பருகிக் கொண்டு சுத்தமான காற்றை சுவாசித்து நுரையீரலை நிரப்பிக் கொண்டு முகத்தில் மோதும் காலை நேரக் காற்றை அனுபவித்தபடியே அலுவலக அறை வரை நீண்ட பாதையில் நடந்து வந்தாள் அவள். கடந்த வருடம் புதிதாக நியமனம் பெற்று இந்தக் கல்லூரிக்கு பேராசிரியையாக வந்ததில் இருந்து கல்லூரி வரும் நாட்களில் காலை நேரம் இப்படித் தான் அவளுக்கு. ஒரு தவம் போல் இயற்கையை ரசிப்பது ஒரு சுகம் அவளுக்கு.
அவள் மித்ரா. இருபத்தைந்து வயதுப் பெண்ணவளின் துறு துறு பார்வையும் பேச்சும் அவளுடன் பழகுபவர்களை கட்டி இழுத்து அருகிலேயே நிருத்திக் கொள்ளும். அதே போல மாணவர்களுக்கும் பிடித்தமான ஆசிரியையாகவும் இருந்தாள் அவள். ஆனால் இங்கு அந்த இந்த ஒரு வருடத்தில் இரண்டு மூன்று சக ஆசிரியர்களுடன் மட்டுமே நெருங்கிப் பழகியவளுக்கு மற்றவர்களுடன் பழகுவதில் பெரும் தயக்கம் இருந்தது.
"குட் மார்னிங் மித்ரா" என்ற அவளது சக ஆசிரியை வினிதாவின் குரலில் திரும்பி "குட் மார்னிங் அக்கா" என்றவள் அவளுடன் சேர்ந்து அலுவலக அறையை அடைந்தாள்.
பாட வேளை ஆரம்பித்து பரபரப்பாக அந்த நாள் சென்று கொண்டிருக்க இவளது ஓய்வு நேரமும் வந்தது.
ஆசிரிய ஓய்வறைக்குச் செல்ல ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த வினிதா யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். அங்கு வேறு யாருமே இல்லாதிருக்க அவள் இருந்த இடத்தை விட்டு ஐந்து இருக்கையில் தள்ளி எதிர்ப்புறமாக அமர்ந்தவள் தன் கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கிவிட்டாள்.
சற்று நேரத்தில் "ஓகே கேஷி நான் நாளைக்கு கால் பண்றேன்" என்று வினிதா சற்று சத்தமாகவே கூற அவள் கூறி பெயரில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் அழகிய புன்னகை.
"என்ன மேடம் சிரிப்பு?"
"கேசவன் சார் கூடவா பேசிட்டு இருந்தீங்க?"
"ம்ம்.. என்னோட ஸ்டூடண்ட் ஒருத்தனுக்கு ப்ராஜக்ட்க்கு கேஷி இருக்குற ஊருக்கு தான் போக வேண்டியிருக்கு அதான் அதப்பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தேன்" என்று சாதாரணமாக சொன்னவளுக்கு ஏதோ பொறி தட்ட "ஏய் மித்ரா என்ன இப்பல்லாம் வர வர அவனப் பத்தி அதிகமா விசாரிக்குற நீ?" என்று கேட்டே விட்டாள்.
"நல்லவங்களப் பத்தி விசாரிக்குறது தப்பில்லையே அக்கா? அதுவும் உங்க ஃப்ரெண்ட் ரொம்ப நல்லவர்னு சொல்லி இருக்கீங்க"
"ஆமா டா.. அவன் ரொம்ப நல்லவன், பொறுப்பானவன், ரொம்ப ஹெல்ப் ஃபுல், யாருக்கு என்ன வேணும்னாலும் தயங்காம செய்து கொடுப்பான். ஆனா ஒன்னு அதே போல ரொம்ப அமைதியானவன், ரொம்ப ரொம்ப அழுத்தமானவன்" என்று வினிதா கூற
"அந்த அழுத்தம் அன்புல கூட இருக்கும்ல க்கா?" என்றாள் மித்ரா சற்றென்று.
"ம்ம்ம்.. நெருங்கிப் பழகினா ரொம்பப் பாசக்காரன் தான் அவன்" என்றவளுக்கு ஏதோ புரிவது போல் இருக்க அடுத்து மித்ராவின் வார்த்தைக்காகக் காத்திருந்தாள்.
"அந்தப் பாசத்த அனுபவிக்கணும்னு ஆசையா இருக்கு க்கா, அவர் கூடவே இருக்கணும்னு மனசு கிடந்து தவிக்கிறது" என்றாள் தன் மனதை மறையாமல் சட்டென்று.
"ஹேய்.. என்ன உளறல் இது? அவனப் பத்தி என்ன தெரியும் உனக்கு?"
"நீங்க, அவரப் பத்தி என் கிட்ட சொன்னதெல்லாம் வெச்சித் தான் க்கா இப்படி ஒரு ஆசை எனக்கு" என்றவள் எழுந்து வந்து வினிதாவின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
"அடேய் இப்போ எட்டு மாசமாத் தான் என்னை உனக்குத் தெரியும்டா.." என்றாள் வினிதா படபடப்பு குறையாத குரலில்.
"இத்தனை மாசம் நிறைய விஷயம் பேசி இருக்கோம். நிறைய பேர் பத்தி சொல்லியும் நீங்க இருக்கீங்க. நீங்க சொன்னதுல நான் ரொம்ப ரசிச்ச கேரக்டர் கேசவன் சார் தான் க்கா"
"அவன் உன்னை விட ஏழு வருஷம் மூத்தவன் டா. அதோட அவன் ஒரு டிவோஸி அதுவும் உனக்குத் தெரியும் தானே?"
"தெரியும் க்கா. அதெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல. யாருமே இல்லாம தனியா இருக்குற எனக்கு அவரைப் போல ஒருத்தர் தான் சரியா வருவாங்க. இல்ல.. இல்ல.. அவர் தான் சரியா வருவார்" என்றாள் விடாமல்.
"அந்தப் பொண்ணு டிவோர்ஸ் பண்ணிட்டுப் போக இவனோட சைட்லயும் காரணம் இருந்தது. இவனும் தப்புப் பண்ணி இருக்கான்" என்றாள் வினிதாவும் விடாமல்.
"ரெண்டு பேருக்கும் இடைல மிஸ்- அண்டர்ஸ்டான்டிங் இருந்திருக்கும், கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கும் அதான் அவங்க பிரிய காரணமா இருந்திருக்கும் க்கா" என்றாள் சரியாகக் கணித்து. அத்தோடு விடாமல்
"ஆனா இப்போ அவருக்கும் ஃபாமிலி லைஃப் பத்தின மெச்சூரிட்டி இருக்கும்ல அதோட அவரோட இயல்பான கேர்னஸ் எல்லாம் சேர்ந்து என்னை நல்லா பார்த்துப்பார்னு நம்புறேன். நான் ரொம்ப சமத்தா வேற இருப்பேனே சண்டை எல்லாம் போட மாட்டேன்"
என்றாள் குறும்பாக கண் சிமிட்டி.
"விளையாடுறியா நீ? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்" என்ற வினிதாவை ஏறிட்டு
"ஏன் க்கா நான் சைல்ட்டிஷ்ஷா பிஹேவ் பண்றேன்னு அவருக்கு நான் பொருத்தம் இல்லைன்னு நினைக்குறீங்களா? நானும் அவர நல்லாப் பார்த்துப்பேன் க்கா. அழுத்தமா அமைதியா இருக்குறவங்க ஆழமான அன்பை எதிர்பார்ப்பாங்க அந்த அன்ப என்னால அவருக்குக் கொடுக்க முடியும்ற நம்பிக்க எனக்கு இருக்கு. அதே போல உங்களுக்கும் என்மேல நம்பிக்கை இருந்தா அவர் கிட்ட என்னைப் பத்தி சொல்லுவீங்க" என்று தீர்க்கமாக கூறியவளிடம் கடைசி அம்பை எய்தாள் வினிதா அவளை சோதித்துப் பார்க்க,
"அவன் நீ நினைக்கிற மாதிரி இல்ல, அழகே இல்ல கறுத்துப் பெருத்து உனக்கு பெரியப்பா போல இருப்பான் உருவத்துல" என்றாள்.
"நீங்களே இப்பிடி சொல்லலாமா க்கா? மனசு முழுக்க அழகா இருக்குறவரோட வெளித் தோற்றத்தப் பார்த்து இப்பிடி சொல்லியிருக்க வேணாம் நீங்க" என்றாள் மூக்கு விடைக்க.
"ஆமா ரொம்பத் தான் அழகு. சும்மா போ மித்ரா. நீ பேசுறதக் கேட்க எனக்கே பயமா இருக்கு" என்றவளைப் பார்த்து உதடு சுழித்தவள்
"உங்களுக்கு உங்க ஃப்ரெண்ட் மேல பாசமே இல்ல. இருந்தா இப்பிடி அவருக்கு கிடைக்குற நல்ல லைஃப்ப கெடுக்க ட்ரை பண்ணுவிங்களா?" என்றவள் தன் கைப்பையை எடுத்து கையில் இருந்த புத்தகத்தை அதற்குள் திணித்துக் கொண்டு விறு விறுவென்று வெளியேறி விட்டாள்.
இங்கே வினிதாவிற்குத் தான் மூச்சு முட்டி முழி பிதுங்கியது. ''இவள என்ன சொல்லி சமாளிக்கிறது? சின்னப் பொண்ணுன்னு பார்த்தா என்னமா வாய் பேசிட்டுப் போறா? இரு மவளே உன்ன என்ன பண்றேன்னு பாரு'' என்று தனக்குத்தானே முனுமுனுத்துக் கொண்டவளுக்கு புன்னகை ஒன்று தன்னால் மலர்ந்தது.
"இதுங்க ரெண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தினா எப்பிடி இருக்கும்.. அடேய் கேஷி உன்னப் பத்தி பேசப் போய் ஒரு புள்ள மனச கெடுத்து வெச்சிட்டேன் டா" என்று தலையில் தட்டிக் கொண்டவள் அறியவில்லை அடுத்த இரண்டாவது நாள் அவளுக்கு வைத்திருக்கும் அதிர்ச்சியை.
அன்று வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி விட அரை மணி நேரமே இருக்க வினிதாவிற்கு அழைத்த கேசவன் "நான் காலேஜ் கிட்ட இருக்குற பார்க்குல வெயிட் பண்ணுவேன் காலேஜ் முடிய அங்க வா" என்று விட்டு இவளின் பதிலைக் கேட்காமலே அழைப்பைத் துண்டித்தான்.
'இவன் எதுக்கு இப்போ அவசரமா இங்க வந்தான்? அதுவும் பார்க்ல மீட் பண்றேன்னு சொல்றான், இவன் இப்படியெல்லாம் வரமாட்டானே' என்று யோசித்துக் கொண்டிருந்தவள் கல்லூரி கலைந்தவுடன் கேசவன் சொன்ன பூங்காவிற்குச் சென்றாள்.
"எப்பிடி டா இருக்க? அவசரமா மீட் பண்ண வந்திருக்க என்ன விஷயம்?"
"மித்ராவ நான் பார்க்கணும் என்றான் எடுத்த எடுப்பிலேயே"
அதிர்ந்து போன வினிதா "அவள எப்பிடி உனக்குத் தெரியும்?" என்று கேட்க
"எப்பிடியோ தெரியும். அது உனக்குத் தேவையில்ல. எனக்கு இப்பவே அவள மீட் பண்ணனும்" என்றான்.
"அவ ஹாஸ்டலுக்குப் போய் இருப்பா. இப்போ நீ எதுக்கு அவள மீட் பண்ணனும்னு வந்து நிக்கிற?" என்றாள் அவனை உற்றுப் பார்த்து.
"சின்னப் பொண்ணு மனசக் கெடுத்து வெச்சிருக்கியே அதான் அவளோட பெரியப்பா போல இருக்கிறது நான் தான்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் அவனும் அவளைப் பார்த்துக் கொண்டு.
சட்டென்று புரிந்து விட "அப்போ நான் அன்னைக்கு அவ கூட பேசினத கேட்டுட்டு இருந்திருக்க?"
"யெஸ்.. நீ ஃபோன கட் பண்ணல்ல, நான் கட் பண்ண பார்க்கும் போது தான் மித்ரா என்னோட பெயர சொன்னது கேட்டுச்சி அதான் என்ன பேசுறீங்கன்னு தொடர்ந்து கேட்டுட்டு இருந்தேன்" என்றவனிடம்
"சாரிடா.. அவ சின்ன பொண்ணு.. அதான் அன்னைக்கு அப்படிப் பேசினேன்" என்றாள் இயலாமைக் குரலில் வினிதா. தான் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டானே எனும் உறுத்தல் அவளுக்கு.
"ஏன் டி அவள நான் நல்லா பார்த்துக்க மாட்டேனா?" என்றான் இவனும் மித்ரா கேட்டதைப் போலவே.
"அதுக்கு இல்லடா. அம்மா அப்பா யாருமே இல்லாம அனாதை இல்லத்துல வளர்ந்தவ.. உனக்கு சரியா வருவாளான்னு தான் எனக்கு தெரியல்ல" என்றவளின் குரலில் இருந்த தவிப்பைக் கண்டு கொண்டவன்
"ஏன் வினிதா என்னைப் பார்த்து பயப்படுறியா?" என்றான் ஆழ்ந்த குரலில்.
"லூசாடா நீ? உன்னப் பார்த்து பயம் இல்ல. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து நல்லா இருந்தா எனக்கு ஹாப்பி தான். ஆனாலும் ஏதோ ஒன்னு நெருடலா இருக்கு" என்றாள்.
"அன்னைக்கு அவ பேசினத எல்லாம் நான் கேட்டதுக்கப்புறம் தான் இந்த முடிவ எடுத்தேன் வினிதா. அவள நான் நல்லாப் பார்த்துப்பேன் அதே போல சின்னவளா இருந்தாலும் அவளும் என்னை நல்லா பார்த்துப்பான்னு நம்பிக்கைல தான் அவள மீட் பண்ண வந்தேன்" என்றவனை புரியாமல் பார்த்தாள் வினிதா.
"எனக்கு என்ன வேணும்னு அவளுக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு" என்று சன்னமாக புன்னகைத்தவன்
"அமைதியா அழுத்தமா இருக்குற எனக்கு ஆழமான அன்பு மட்டும் தான் வேணும் வினிதா" என்றான் ஆழ்ந்த குரலில்.
அடுத்த நாள் காலையில் தன் அலைபேசி ஒலியில் துயில் களைந்து எழுந்தவள், அதை உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.
"ஹலோ அக்கா.. குட் மார்னிங்"
"குட் மார்னிங் டா. இன்னைக்கு எதுவும் வேலை இருக்கா மித்ரா உனக்கு?"
சொல்லி முடிய அலைபேசி கைமாறி கீச்சுக் குரல் ஒன்று கானம் இசைத்தது அவள் செவிகளில்.
"மித்தா.. வா மித்தா.." என்ற குரலில் புன்னகை மலர
"வர்றேன் டா குட்டிப் பையா" என்றவள் சில வினாடிகள் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
வினிதாவின் வீட்டிற்குச் செல்ல அங்க அவளது கணவர் ரவியுடன் இன்னுமொருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இவளை வரவேற்ற ரவியைப் பார்த்துப் புன்னகைத்தவற் நேராக சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
"வா.. வா.. மித்ரா"
"ம்ம்ம்.. அதான் வந்துட்டேனே. சமையல் எல்லாம் பண்ணிட்டீங்க போல சாரி கொஞ்சம் லேட்டாச்சு க்கா" என்க
"பரவாயில்ல டா சர்வன்ட் எல்லாம் செய்து தந்துட்டு இப்போ தான் போனா" என்றாள் வினிதா.
"எங்க என்னை வரச் சொன்ன பெரிய மனுஷன்?" என்று மித்ரா கேட்க திகைத்து விழித்தாள் வினிதா.
அதைக் கவனிக்க விடாமல் குழந்தை நிதின் வந்து காலைக் கட்டிக் கொள்ள, அவனைத் தூக்கிக் கொஞ்சியவள் அவனுடனே ஐக்கியமாகிவிட்டாள்.
"அங்க இவன் அப்பா கூட பேசிட்டு இருக்குறது யாருன்னு தெரியுமா மித்ரா?"
"இல்ல க்கா. நான் பார்க்கவே இல்ல. யாரு மாமாவோட ஃப்ரெண்ட்டா இல்ல ப்ரதரா?"
"ம்ம்ம்.. ஃப்ரெண்ட் தான். எப்படி இருக்கார் ஆள்?"
"தெரியாதே.. நான் தான் பார்க்கவே இல்லைங்குறேனே"
"அடேய்.. வரும் போது பார்க்கல்லையா நீ?"
"இல்ல" என்ற தோளைக் குலுக்கி "நான் அங்க நிட்கவே இல்லையே, நேரா கிச்சனுக்கே வந்துட்டேன்" என்றவளுக்கு ஏதோ புரிவது போல் இருக்க
"ஆமா ஏன் இதெல்லாம் இப்போ கேட்குறீங்க?" என்றாள் சற்றுக் கடினமாக.
"ஒன்னுமில்லை டா. சும்மா தான்"
"இல்லையே எனக்கு ஏதோ காரணம் இருக்குன்னு தோனுதே" என்றவள் "எனக்கு நல்லது பண்ணணும்னு யோசிச்சீங்கன்னா முதல்ல கேசவன் சார் கிட்ட கேட்டுப் பாருங்க க்கா, அவரோட பதில கேட்டுட்டு அடுத்தது என்னன்னு யோசிக்கலாம்" என்றவள் நிதினைத் தூக்கிக் கொண்டு உள்ளறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளது கோவத்தில் பெரியவள் முகத்தில் புன்னகை படர்ந்தது.
உணவு வேளையில் வந்து அமர்ந்தவள் தன்னை விட்டு நகர மறுத்த குழந்தையை அருகே அமர வைத்து அவனுக்கு ஊட்டிக் கொண்டே தானும் உணவுண்டு கொண்டிருக்க,
"மேடம் தான் கேஷிய லவ் பண்ற ஆள்" என்றாள் வினிதா.
திடுக்கிட்டு விழித்தவள் நிமிர்ந்து பார்த்தவள் "நான் லவ் எல்லாம் பண்ணல்ல" என்றாள் எடுத்த எடுப்பில்.
"அடேய்.. அப்போ அன்னைக்கும் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடியும் நீ சொன்னதுக்கு அர்த்தம் என்ன?" என்றாள் வினிதா புரியாமல்.
"லவ் பண்ணினா சேரணும்னு நினைப்பாங்க. நான் அவர் கூட வாழணும்னு நினைக்கிறேன். இது லவ் இல்ல அதுக்கும் மேல ஒரு உணர்வு. யாருன்னே தெரியாதவர் மேல ஏற்பட்ட நம்பிக்கை, அபிமானம், பாதுகாப்பு உணர்வு, ஒரு சின்ன ஈர்ப்பு அதனால வந்த அன்பு. அவருக்கு அன்புக் கொடுத்து நானும் அதே அன்ப அனுபவிக்கணும்னு வந்த ஆசை" என்று படபடவென பொறிந்தவள் விருட்டென்று எழுந்து விட
அவளது கையைப் பிடித்து இழுத்து அமர வைத்த வினிதா.
"சாப்பிடு அப்புறம் சண்ட போடு" என்றாள்.
"காதலின் ஆணிவேர் பிரிதல் தானே. அது இவக்கிட்ட நிறைய இருக்கு, கேஷிக்கே கல்யாணம் பண்ணி வைங்க" என்ற அந்த நெடியவன், தன் உணவில் கவனமாக புரியாமல் பார்த்து வைத்தாள் அவனை மித்ரா.
அவளது பார்வையை பிரிந்து கொண்ட ரவி இவன் யாருன்னு தெரியுமா மித்ரா என்க, இல்லை எனும் விதமாக தலையாட்டி வைத்தாள் அவள்.
"உன் அக்கா பேசிப் பேசி உன் மனசுக்குள்ள உட்கார வெச்ச கேஷி இவன் தான்" என்றவன் தொடர்ந்து
"நீ எட்டு மாசம் அவனப் பத்தி வினிதா பேசினதக் கேட்டு இருக்க ஆனா ஒரே ஒரு நாள் நீ பேசின ஒரு வார்த்தைக்காக உன்னத் தேடி வந்திருக்கான்" என்க திரும்பி அவனைப் பார்த்தவளை நிமிர்ந்து பார்த்தவன் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.
"அன்னைக்கு ஸ்டாஃப் ரூம்ல நாம பேசினத கேட்டுட்டு இருந்திருக்கான் டா" என்றவ வினிதா அடுத்து நடந்த அனைத்தையும் கூற,
"அப்போ அன்னைக்கு பொய் சொல்லி இருக்கீங்கல்ல?" என்றாள் கேசவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த மித்ரா.
'சினிமா நடிகன் மாதிரி இல்லைன்னாலும் பார்க்க லட்சணமா உயரமா ஸ்லிம்மா தானே இருக்கார்' என்று நினைத்தவளுக்கு சன்னமாக ஒரு புன்னகை மலர்ந்தது.
"ம்ம்ம்.. பார்க்காமலே விரும்புறியே அப்படி ஒரு பிட்ட போட்டு பார்க்கலாம்னு சொன்னேன் ஆனா அதுக்கும் நீ என்கிட்ட தானே கோவிச்சிட்டு போன? கொஞ்சம் நாள் கழிச்சு உன் மனசு மாறல்லைன்னா மாமா கிட்ட கலந்து பேசிட்டு கேஷிக் கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் ஆனா என் ஃபோன் சதி பண்ணி அவன் முந்திக்கிட்டான்"
"இல்ல க்கா உங்க ஃபோன் எனக்கு ஹெல்ப் தான் பண்ணி இருக்கு" என்றவளைப் பார்த்து அனைவரும் சிரிக்க நாணம் கொண்டு தலை குனிந்து கொண்டாள்.
பார்வை பரிமாற்றங்களும் இல்லை
வார்த்தை பரிமாற்றங்களும் இல்லை
இருந்தும் உணர்வுகளைப் புரிந்து கொண்டன உள்ளங்கள்.
புரிதலில் தொடங்கிய இவர்கள் பந்தம் என்றென்றும் தொடரட்டும் காதலுடன் புரிதலுடன்!
என் சிறுகதைகளுக்கான கருத்துக்களை இங்கே பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாரா வாரம் ஒரு சிறுகதை பதிவிட எண்ணியுள்ளேன். சிறுகதையின் பெயரைக் குறிப்பிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்