எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘தீ’ –9

இவள் வசந் ‘தீ’ –9

இதுவரை வசந்தி…..

ராகவனுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராகவனின் தாயார் பத்து பவுன் வரதட்சனை பாக்கியை வைத்து திருமணத்தை நிறுத்துகிறாள். எல்லாரும் துயரத்தில் மூழ்கும் வேளையில் வசந்தியின் தாயார்பத்மா அவளது தம்பி மகன் இனியவனை வசந்தியை திருமணம் செய்யுமாறு கேட்க இனியவனின் தாய் ஒரு நிபந்தனையுடன் சம்மதிப்பேன் எனக் கூற அனைவரும் திகைக்கின்றனர். இனி……..

முடிவுத் ‘தீ ‘–9

இனியவனின் தாய் ஒரு நிபந்தனையுடன் என்று சொன்னவுடன் ம்ண்டபம் மீண்டும் திகைப்புக்குள்ளானது.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று நிகழ்வுகள் மிக முக்கியமானவை. அவை ஆரம்பத்தில் பிறப்பு, இடையில் திருமணம் மற்றும் இறுதியில் இறப்பு. இம்மூன்றும் எதிர்பார்த்து காத்திருந்து நடந்தாலோ அல்லது நடக்கவில்லையென்றாலோ அல்லது ஏதாவது ஒன்றில் தோல்வி கண்டோலோ மனம் வெறுக்கின்றான். இந்த மூன்றையும் தேடி கடவுளிடம் ஓடுகிறான். மற்றவைக்கு அவன் தானாக கடவுளை மறந்து ஓடுகிறான்.

கல்யாணம் கைகூடா நிலையில் கோபத்தில், வருத்தத்தில் மற்றும் விரக்தியில் இருந்த வசந்தி இப்பொழுது குழப்பத்தில் தலையை தூக்கிப் பார்த்தாள்.

சரோஜா அனைவரையும் பார்த்தாள் அனைவரின் முகங்களும் தன்னை நோக்கி ஆர்வமாய் காத்திருப்பது அறிந்து புன்முறுவல் பூத்தாள்.

“ என்னுடைய செல்ல மருமகள் என் மகனை கட்ட சம்மதித்தாள் மட்டுமே என் மகன் வசந்தியின் கழுத்தில் தாலி கட்டுவான். இதுதான் என் நிபந்தனை”.

சரோஜா சொல்லி முடித்தவுடன் பத்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள். ராகவன் கண்களில் நீர்மல்க கையெடுத்துக் கும்பிட்டார். நிஷாந்தி அக்கா அருகில் சென்று கைகளைப் பிடித்துக் கொண்டு அவளை ஆர்வமாய் பார்த்தாள்.

மண்டபத்தில் அனைவரும் சந்தோசப்பட்டனர். இப்பொழுது பார்வைகள் அனைத்தும் திரும்பி வசந்தியை உற்று நோக்கின.

பத்மா மகளை ஆர்வமாய் பார்த்தாள். ராகவனும் வசந்தி இருந்த பக்கம் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

வசந்தி மெதுவாக சற்று நிமிர்ந்தாள் . தன் அருகில் நிற்கும் தங்கை, தன்னை ஆர்வமாய் பார்க்கும் தாய் , தன்னை நோக்கி வரும் தந்தை மற்றும் அனைவரும் தன் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதைக் கண்டு என்ன பதில் சொல்வது , யாரிடம் சொல்வது , எப்படி சொல்வது என தெரியாமல் நின்றாள்.

’எத்தனையோ தடவை பேப்பரில் படித்த செய்தி “ மணமகன் மாயமானதால் மண்டபத்தில் இருந்த உறவுக்கார இளைஞரோடு திடீர் திருமணம் ‘ என்பது தன் வாழ்க்கையிலும் நடந்தது கண்டு வசந்தி திகைத்துப் போனாள்.

பத்மா இப்பொழுது மகள் அருகில் வந்தாள். இலக்கியனை வெறுக்கும் தன் மகள் இப்பொழுது வாழ்வு கொடுக்க இருக்கும் இலக்கியனை பற்றி என்ன சொல்லப் போகிறாள் அல்லது என்ன முடிவு எடுக்கப் போகிறாள் என தெரியாமல் சற்றே பயத்துடன் பார்த்தாள்.

“ என்னம்மா வசந்தி , என்னம்மா சொல்ல போற ? உனக்கு இலக்கியனை கட்ட சம்மதம்தானே .. பதில் சொல்லம்மா “

ராகவன் அருகில் வந்து மகளிடம் கேட்க , மகளோ தன் தந்தையை உற்று நோக்கினாள்.

பதில் ஏதும் பேசாமல் மணமகள் அறை நோக்கி நடக்க ஆரம்பிக்க , கூடவே நிஷாந்தியும் அக்காவுடன் நடக்க ஆரம்பித்தாள்.

ராகவன் பதில் சொல்லாமல் போகும் மகளை குழப்பாமாக பார்க்க பத்மா இப்பொழுது முகம் மலர்ந்தாள்.

“ மவுனம் சம்மதத்தற்கு அறிகுறி. தங்கச்சியோடு ரூமுக்கு போயிருக்கா. சீக்கிரம் தயாராகி புத்துணர்ச்சியோடு திரும்பி வருவா “

அதற்குள் யாரோ புது கல்யாண மாலையை எங்கிருந்தோ வாங்கி வந்திருந்தார்கள். மண்டபம் மீண்டும் களைகட்ட தொடங்கியிருந்தது. மேளக்கார்கள் மறுபடி தயாரானார்கள். போட்டோ எடுக்கும் நபர் மீண்டும் தயாராக ‘எப்பா பழைய கண்றாவியை எல்லாம் அழிச்சிட்டு புதுசா படம் எடுக்க தயாரா வாங்க தம்பி’ என்று யாரோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

ராகவனிடம் ஒருவர் வந்து மாப்பிள்ளை வீட்டார் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை ஒரு தட்டில் வைத்து கொடுத்து விட , ராகவனும் அவர்பங்குக்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுத்து கை எடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்தார்.

இலக்கியன் பக்கத்து மணமகன் அறைக்கு சென்று தயாரானான். அதற்குள் தகவல் தெரிந்து அவனது சில நண்பர்களும் வந்து அவனுக்கு உதவியாக இருந்தனர்.

வசந்தி திரும்ப மேடைக்கு வந்து அமர்ந்தாள். இலக்கியனும் வர பத்மாவும் சரோஜாவும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.

இலக்கியன் வசந்தியை திரும்பிப் பார்த்தான்.

அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனாலும் உதட்டு ஓரத்தில் சிறிதாய் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது போல இருந்தாள்.

எல்லாம் நல்லபடியாக முடிய எல்லாரும் மேடைக்கு வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவராக வந்து வாழ்த்த மண்டபம் முழுவதும் மகிழ்ச்சி அலையால் மூழ்கியது.

சிறிது நேரத்தில் மதிய சாப்பாடு முடிந்து மண்டபம் காலியாக மணமக்களும் அவர்கள் குடும்பத்தாரும் தனித்து இருந்தனர்.

மணமக்களைச் சுற்றி அனைவரும் அமர பேச்சுக்கள் ஆரம்பமாயின.

“ என்ன பத்மா சந்தோசம்தானே, கடைசியில கடவுளோட பிராப்தம் இப்படி அமையனும்னு இருக்கு.”

“ ரொம்ப சந்தோசம் சரோஜா. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன் . ஆனா நான் கும்பிடற கடவுள் என்னை கைவிடலை”

“ என்னம்மா வசந்தி, சந்தோசம்தானே ! உன்னை மருமகளா அடைய நான் கொடுத்து வச்சிருக்கேன்மா”

வசந்தி மெதுவாய் தலை அசைத்தாள். அவள் தலையாட்டலில் அவள் காது மாட்டல் அழகாய் ஆடியது பார்க்க அழகாய் இருந்தது.

“இல்லை அத்தை , நான்தான் கொடுத்து வச்சிருக்கனும்”

வசந்தி குரலைக் கேட்டு இலக்கியன் மகிழ்ந்தான். தன் மனைவியை ஆசையாய் பார்த்தான்.

“மாப்பிள்ளை ரொம்ப உத்துப் பார்க்காதீங்க. பொண்ணு பயந்துர்ற போறாங்க”

யாரோ வம்பிழுக்க இலக்கியன் இப்பொழுது வெட்கப்பட்டான்.

ராகவன் சிரித்துக் கொண்டே மகளின் மணகோலத்தை கண்டு மகிழ்ந்தார்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால்…….

வசந்தி வருவாள்……….
 

Attachments

  • images.jpg
    images.jpg
    6.3 KB · Views: 0
Last edited:
Top