நித்தமும் நின் ஸ்வப்னங்கள்
அத்தியாயம்-01
1990ம் ஆண்டுகளில்
இரவின் நிறம், கார்காலத்தின் மொத்த நிறம், கூவும் குயிலின் நிறம்,அது கருமை நிறம்.. நீள் வானம் அந்த இருண்ட நிறத்தை அள்ளி மேனி எங்கும் பூசிக்கொள்ள, ஏகாந்த பொழுது மயான அமைதி, யட்சனிகள் நடமாடும் நடுநிசி நேரம் ,சுற்றிவர இருள் தனித்திருப்பவர்கள் நெஞ்சம் ஒரே ஒரு கணமேனும் திக்கென துடித்து நிற்கும்..
சுற்றிலும் மயான மரண ஓசை, பார்க்கும் திசை எங்கும் விடலைப் பெண்ணின் கண் மை போல அடர் இருள். இடை அளவு வளர்ந்த புற்கள், நடைபாதைக்கென இடை இடையே இரு பாதங்களின் அளவு இடைவெளி. இருபது அடி தூரத்தில் ஒரு மெல்லிய வெளிச்சம். அருகில் நெருங்கினால் மட்டுமே அறியக்கூடிய சலசலப்பு, அது ஒரு நெற்களஞ்சியம். பார்வைக்கு மட்டும் தான் ஆனால் நிஜத்தில் மீண்டுமொரு வேள்வியின் மகளின் துகில் உறிக்கப்படும் நவீன அஸ்தினாபுரம்..
புஜபலம் நிறைந்த ஐந்து மாவீரர்களின் கொண்டாளின் மானம் பறித்த கொடூரத்தின் நவீன கலியுகம்.
அவள் வேள்வியின் மகள்.. இவளோ காலனின் மாதா அதை இவர்கள் அறியவில்லையே.
“ஆஆ! டேய் நீங்க மானபங்கம் படுத்த நினைப்பது ஒரு பெண்ணை மட்டும் அல்லடா,ஒரு தாயை. என்னை விட்டுடுங்க. அப்படி நான் செய்த பிழைதான் என்ன? பிறரின் நலன் காக்க எண்ணியது பிழையா? உங்களைப் போன்ற கொடூடர்களின் அரக்கத்தனத்தை அழிக்க நினைத்தது தான் பிழையா? டேய் என்னை விடுடா..
அடேய் பாதகா! உன் சகோதரனோட மனைவியிடம் தான் நீ முறை தவறி நடக்க நிலைப்பது. பெண் பாவம் பொல்லாததுடா. கிட்டே நெருங்காத! பின்னாலே போங்கடா..”
கயவர்கள் கையில் சிக்கிய பெண்ணரசியோ தன் மானத்தை காத்துக்கொள்ள திமிறிக்கொண்டிருந்தாள். கொண்டவன் மட்டும் காண உரிமை கொண்ட அவள் பெண்ணுடலை வஞ்சகன் காண அனுமதிக்காதவளாய், அந்த நரிகளின் கூட்டத்துக்குள் அங்குமிங்கும் துடித்தோடிக் கொண்டிருந்தாள்.. ஆனால் பரிதாபம் இங்கோ அன்றொரு நாள் தன் சகியின் மானம் காத்த பார்த்தசாரதி இல்லாது போனானே..
“ஹா.. ஹா.. ஹா..” அகோரிகளின் கொடூர நகையைத் தொடர்ந்து..
“இதோ சொன்னீயே இது, இதுதான் காரணம். நீ மணந்த என் வம்சத்தின் வாரிசு! என்ன ஜாதி? நீ என்ன ஜாதி? பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிக்கு பட்டுக் குஞ்சமா?”
“ஐய்யோ! டேய் வேணாம் விடுங்கடா.. ஆ! ஆ.. அம்மா.. முடியவில்லை விடுங்கடா என்னை.. நான் வயிற்று பிள்ளைக்காரிடா. உன் இனத்து வாரிசை தானே என் வயிற்றில் நான் சுமப்பது இதை நினைத்துக்கூட உங்களுக்கு மனம் இறங்கவில்லையா? தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்.”
“ம்.. சாவுடி என்ன சொன்ன அரசாங்க அதிகாரியா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. உன் முந்தானை நுனியை கூட தொட முடியாதா. இப்போ பார்த்தீயா உன் மானம் எங்கள் கையில்.. பஞ்சம் பிழைக்க வந்தவளை வாழ விட்டதே தவறு இதில் எங்களை நீ எதிர்ப்பதா? இது எங்கள் கோட்டைடி.. அழிப்பதும் ஆக்குவதும் நாங்களே. ஆம்பளடி நாங்கள் ஆண் பிள்ளைகள். ஆளப் பிறந்தவர்கள் நாங்கள். இன்றோடு உன் ஆட்டம் முடியப் போகுது.”
என்றான் அந்த கொடூரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு. அவன் வார்த்தையில் தான் எத்தனை அகங்காரம். ஆண் எனும் சொல்லில் தான் எத்தனை ஆணவம். ஆனால் அந்த அகம்பாவிகள் அறிவார்களா ஆண் திமிர் கொண்ட துச்சாதனன் தொடை பிளக்க மண்ணில் வீழ்ந்ததும், ஆணவம் கொண்டு சிரம் தாழ்த்தா இலங்கேஸ்வரன் சிரம் சிதைய மாண்டதும் இந்த ஆண் எனும் அகம்பாவத்தில் தான் என்பதை அவர்கள் அறியவில்லை. அது அவர்களின் விதி. பிரம்பன் வடித்த நியதி.
“நோ.. ஐயோ.. அம்மா.. ஆ.. ஆ..”
என்ற வானை எட்டிய அலறலை அங்கு கேட்பாறோ அல்லது கேட்டு காப்பாற்றுவாறோ யாரும் இல்லை.. அந்த மயான இருளில் இரண்டு காமுகர்களால் ஒரு காரிகையின் மானம் கதறக் கதறப் பறிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அறியவில்லையே பெண் என்பவள் லட்சுமி தேவியின் அவதாரம் மட்டுமல்ல மகாகாளியின் அவதாரமும் கூட..
சதை தின்னும் அசுரர்கள் சூழ்ந்து நின்ற அசோகவனமது. அங்கே சிதைந்து கொண்டிருந்தாள் ஒரு சீதை. இந்தச் சீதையை மீட்க அஞ்சனை புத்திரனும் அங்கு இல்லையே.
“டேய் தம்பி இவ ரொம்ப பேசினாளில்லையா? ஹ்ம்.. அரசாங்க அதிகாரியாயிற்றே.. சட்டம் பேசுனாங்க. பெரிய நீதி தேவதையாயிற்றே அம்மணி.. ஆமாம் அன்றைக்கு இவள் என்ன சொன்னா தம்பி உன்னைப் பார்த்து மறந்துவிட்டேன் ?”
என போலியாக யோசித்த தமையனைப் பார்த்து.
“அதுவா அண்ணா, நாம அராஜகம் பண்றமாம், மக்கள் தந்த மந்திரி பதவியை வைத்துக்கொண்டு தனி அரசாங்கம் நடத்துகிறோமாம், ஜாதி வெறியில் கொலை பண்ணுகிறோமாம், கூடவே கௌரவ கொலை, கள்ளிப்பால் ஊத்தி பிறந்த குழந்தைகளையும் கொல்லுறோமாம் அதுக்கெல்லாம் அம்மணி கையில் நமக்கு எதிராக ஆதாரங்கள் உண்டாம். அதை வைத்து எங்களுக்கு தண்டனை வாங்கித் தரப் போகிறாங்களாம்..
ஹா.. ஹா.. யாரடி ஜெயிலில் போடுவ எங்களையா? ஹம்.. எங்களையல்ல எங்களில் ஒரு துரும்பைக் கூட உன்னால் அசைக்க முடியாது.”
என்றான் அந்த காமுகன் நக்கல் தொனிக்கும் குரலில்.நாலு மாத சிசுவை சுமந்த அந்த வயிற்றுப் பிள்ளைக்காரியின் வயிற்று சிசு கலைய, அவள் ஆடைகள் கலைந்து, அங்கங்கள் அந்த காமுகர்களினால் சீரழிக்கப்பட்டு, கால்வழியாக அவள் சுமந்த உயிர் மொட்டு உதிரமாக ஓட..
“ம்.. ஹக்..”என்ற முனகலோடு அழிந்து, சிதைந்து,துடித்து நின்றது அந்த அஜந்தா ஓவியம்.
“ஹா.. ஹா.. என்ன தம்பி இவள் மேல் கொலைவெறியில் இருக்கிறாய் போல?”
“பின்ன என்ன அண்ணா லேசா இவள் மேல கை பட்டதற்கு என்னை எத்தனை திமிராக அறைந்தால் அன்று, இன்று என்ன செய்ய முடிந்தது இவளாள்? இதோ எங்கள் காலடியில் செல்லாக்காசாகி கிடக்கிறாள் பாருங்க”
என்ற அந்த இரண்டு வக்கிர காமுகர்களின் ஒருவன் அவள் தாடையை அழுத்தப் பிடித்து, விரல் நகத்தால் அவள் கன்னத்தில் அழுத்தி அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் முகத்திலே உமிழ் நீரை உமிழ்ந்தான்.
“ஏய் நாங்கள் ஆண்பிள்ளைகள்டி, ஜாதி வெறி தான், உயர் குலத்தில் பிறந்த வெறி தான்டி இந்த நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் உள்ளது. இப்போ என்ன செய்ய முடிந்தது உன்னால். உன் கீழ் ஜாதி என்றும் எங்கள் காலுக்குக் கீழ் தானே வீழ்ந்து கிடக்கிறது..”
என்றவன் அவள் வயிற்றில் எட்டி உதைத்தான். வெறிபிடித்த அந்த மனிதப் பிண்டத்துக்கு சிறிதும் மனம் உறுத்தவில்லை. தானும் நிறை மாத கர்ப்பிணி பெண்ணின் கணவன் என்பதை அந்த கணம் மறந்தான்.
இங்கு சிதைந்து கொண்டிருப்பது தங்கள் குடும்ப வாரிசை மணந்த பெண் தெய்வம் என்பதையும் மறந்தான். ஆனால் அவனைப் படைத்த பிரம்மன் அவன் இழைக்கும் அநீதியின் கணக்கை காலனின் கைகளில் எழுத மறக்கவில்லை.
“ஆ.. அம்மா..” என்ற அலறலோடு வயிற்றை இரு கைகளால் இறுக்கிப் பிடித்தவள், இரு முழங்கால்களையும் வலி மிகுதியில் வயிற்றோடு இறுக்கியவாறு அந்த அசுரர்களை நோக்கி முகத்தை நிமிர்த்தி,
“ச்சீ.. தூ.. நாயே! ஜாதியா? உயர்குலமா?"
என தலையை மறுப்பாக இரு புறமும் அசைத்தவள்..
"ம்.. தாயாக பார்க்கவேண்டிய ஒருத்தியின் மானத்தை மஞ்சத்தில் பறிப்பது தான் உன் உயர்குலமா? உங்களைப் போன்ற பேய்களுக்கு உங்கள் தாய் கொடுத்த தாய்ப்பாலையும் விஷமா மாற்றிடீங்க. அதுவும் பிற உயிரைகளை ஈவு இரக்கமின்றி கொல்லும் கொடிய விஷமாக..
கருவை சுமப்பவளை கர்ப்பகிரகத்தில் இருக்கும் கடவுளாக பார்க்க நினைப்பவன் தான் உயர்ஜாதி. அதுதான் மனித ஜாதி. நீங்கள் மிருக ஜாதியில் இணைய கூட தகுதியற்றவங்கள். ஜாதிகள் இல்லையடி பாப்பானு கோஷமிட்ட ஒரு பாரதி இல்லைடா, ஆயிரம் பாரதிகள் வந்தாலும் உன்னை மாதிரி விஷக்கிருமிகளை அழிக்க முடியாது”
என்ற அந்த கற்புக்கரசி அத்தனை வலியிலும், வேதனையிலும் தான் பாரதி கண்ட புதுமைப்பெண் என நிரூபித்தாள்.
அப்போது அவள் கார் கூந்தலை பிடித்து முகத்தை நிமிர்த்திய ஒரு கொடூரன்..
“என்ன பேச்சுடீ பேசுகிறாய்? இன்னும் உன் திமிர் அடங்கல்லையா? உன்னைப் போல பெண்கள் எல்லாம் என்றைக்கும் எங்க காலுக்கு கீழ தான்டி இருக்கனும். நாங்க அடக்கும் வம்சம் நீங்க எங்களில் அடங்கிப்போகும் வம்சம்..”
என்றவன் தன் தமையனுக்கு கண்ஜாடை காட்டிய மறுநொடி அவள் தலையை வேகம் கொண்ட மட்டும் அங்கே மூளையில் இருந்த இரும்பு மேசையில் மோதினான்..
“ஆ.. ஆ.. அம்மா.. ஹக்..”
என்ற அலறலோடு பின் தலை வெடித்து குருதி பெருக, நெற்றி ,மூக்கு பிளந்து ரத்தம் கசிய, அந்த அகோர வலியிலும் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மத்தியில், காலனின் பாசக்கயிறு தன் கழுத்தை இறுக்கி விட்டதை உணர்ந்த அந்த மாதரசி முகத்தில்..
அந்த வலியையும் மீறி ஒரு நிமிர்வு, ஒரு பிரகாசம், முகத்தில் திடீரென்று தோன்றிய ஒரு தேஜஸ்.. அந்நொடி அந்தப் பெண்ணரசியின் முகமோ வாக்கின் மைந்தனின்(பீஷ்மர்) வம்சத்து வாரிசுகள் நிறைந்த அஸ்தினாபுர சபையில் தன் மானத்தை வார்த்தையாக மாற்றி சாபமிட்ட நொடி பாஞ்சாலியின் முகத்தில் தெரிந்த வெளிச்சம், அதே உயிர்ப்பு பிரதிபலிக்க.. உயிர் பிரியும் வலியில் கண்கள் இருள, நா பிறழ வெறி கொண்ட பெண் வேங்கையாக சிலிர்த்து நின்ற அந்த பத்தினி பெண்ணின் முகத்திலும், கண்களிலும் சிறிதும் குறையாது பிரதிபலித்த அக்கினியோடு தன் கண் முன்னே நின்ற ஆடவர்களை நோக்கி..
“ஹக்.. ஜாதி வெறி..யும் ,பணம் ப...கட்டும், ஆள்பலமு...ம் ,பதவி அந்தஸ்தும் தானே உங்களை எல்லாம் ஆட வைக்கிறது. ஒ.. ஒருநாள், அந்த ஒருநாள் வரும்டா.. நீ சொன்ன உன் வம்சம் அழிய. அ.. அம்மா..”
ஆழமாக மூச்சை இருமுறை இழுத்து விட்டவள்.
“எது எல்லா..ம் உ.. உங்க குலத்தின் பெருமை என்றா..யோ. அதே உங்க குலத்தி..ன் பெருமை பக...டையாக உங்க முன்னே உருட்டப்ப..டும்.. எ..என்னை ஒரு பெண்ணாக, தாயாக என்னாது சிதைத்த உங்கள் வ..ம்சத்தின் வேரறுக்க வித்திடப் போவதும் பெண் தான்டா..”
“டேய் தம்பி இன்னமும் இவள் வாயும், திமிரும் அடங்கல்லை பாரேன். அது சரி அம்மா சட்டம் படித்த பாரதி கண்ட புதுமைப்பெண் இல்லையா அதுதான் இந்த நிலையிலும் தில்லாக பேசுகிறாங்க.
பெரிய பத்தினி தெய்வம்னு நினைப்பு.. இத்தனை நடந்தும், இவள் மானத்தை அழித்தும், இந்த நிலையில் எங்கள் முன் இருந்தும் இவள் திமிர் அடங்க வில்லையே பாரேன்..”
என்றவன் அவளை நான்கு உதைகள் காலால் ஓங்கி உதைத்தான். தன் சிசுவை சுமந்த மணி வயிற்றை வலியால் அழுத்தி பிடித்துவள். “அம்மா..” என்று கதறலோடு..
“டேய்! வெறி பிடித்த நாய்களா நான் பத்தினி தான்டா. சிதைந்தது என் உடல் தானே ஒழிய எ..என் ஆன்மா இல்ல.
நா.. நான் பத்தினி என்பது உண்மைனா வருவாண்டா உன் குலத்தை நாசம் செய்ய, உன் வம்சத்தை வேரறுக்க..
எந்த ஆண் எனும் மமதையில் ஆடுகிறீர்களோ.. அந்த ஆண் எனும் ஆணவத்தை அழிக்க, உங்கள் ஆண் இனத்தின் வித்தே உங்களை களையெடுக்க வருவாண்டா. உன்னைப் போல மாற்றான் மனைவியை பெண்டாள நினைக்கும் ராவண இனத்தை அழிக்க ஒரு ராமன் வருவான்டா..
இந்த ஏகாந்த இருளின் கருமையில் என் கற்பை அழித்த உங்களை அக்னியின் வெளிச்சத்தில் இறையாக்கி, உன்னைப்போன்ற நரிகளை வேட்டையாட பிடரி முடி சிலிர்க்க ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் சிங்கத்தை போல ஒரு உண்மையான ஆண்மகன் வருவான்டா.. அந்த நொடி மரணத்தை நேரில் காண்பிங்க.
அவன் உங்களைப்போல் அதர்மிகளுக்கு நரகத்தை காட்டும், ஒரு பெண் தீயின் உயிர் பால் குடித்து வளர்ந்த ரத்தமாக மாறி உங்களை அழிப்பான்டா.. இதோ குருதியாக ஓடும் சிதைந்த என் சிசுவின் ரத்தத்தின் மீது நான் தரும் சாபம்!”
என்று வெறி கொண்ட மட்டும் நயன நேத்திரங்கள் சிவக்க சாபமிட்ட அந்த கண்ணகியின் மறு விம்பம்.. மரணத்தை தழுவும் முன் ஒரு நொடி ,காதை அடைக்கும் மரண ஓலத்திற்கு நடுவே, ஒரே ஒரு இடத்தில் அந்த மங்கையின் பார்வை குத்தும் கூர்முனை வாளின் கூர்மையோடு அழுத்தமாக, ஆவேசமாக, ஆழமாக பதிந்தது. பார்வையை பதித்தவளோ தான் நோக்கியதை கண்களின் வழியே இதயம், மூளை, ஆன்மா என முழுதாக நிரப்பியவள் உடல் கூட்டிலிருந்து உயிர் மறுநொடி பிரிந்தது..
அந்தக் கூர் விழியில் இருந்தது என்ன? வலியா?, பாவமா?, வாஞ்சையா?, வஞ்சகமா? இல்லை ஆசையா? அந்தப் பார்வையின் பொருளை அம்மங்கை மட்டுமே அறிந்தவள். இமை மூடும் இம்மி இடைவெளிலும் அந்த இரு விழிகளில் ஒரு ஸ்வப்னம்..
“டேய் தம்பிகளா.. ஹா.. ஹா.. ஹா.. உயர் அதிகாரி செத்துட்டாங்கடா. பெரிய பதவியில் இருந்தவங்க இல்லையா ராஜ மரியாதையோடு அனுப்பி வையுங்கள்.”
“ஹா.. ஹா.. ஹா.. அப்படியே செய்திடுவோம் அண்ணா.”
என்றவன் தன் சகாக்களுடன் சேர்ந்து அந்த நெற்களஞ்சியத்துக்கு தீ மூட்டினான். அந்த தீக்குள் எரிந்தது ஓர் நல் மங்கையின் சிதை மட்டுமல்ல கூடவே ஒரு நீதிதேவதையின் நேர்மையின் பக்கங்களும் கதற கதற தீ மூட்டப்பட்டது.
பெண் என்பவள் அக்கினிப் பிழம்பாவாள்.
சீதை எரிந்து பவித்திரம் தந்த அக்கினி!
வேள்வியின் மகள் உதிர்த்த வானுயர்ந்த அக்கினி!
கண்ணகியின் கற்பு காத்த ஆவேச அக்கினி!
மண்டோதரி உடன்கட்டை ஏறிய அர்ப்பணிப்பின் அக்கினி!
சுட்டெரிக்கும் தீயில் வெந்து சாக நான் வெறும் சருகல்ல சரித்திரம்!
மீண்டும் வருவேன்..
மீண்டு வருவேன்..
நின் ஸ்வப்பனங்கள்.