எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இவள் வசந் ‘தீ’ – 6

இவள் வசந் ‘தீ’ – 6

இதுவரை வசந்தி……….

வசந்திக்கு கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க தந்தை ராகவனும், தாய் பத்மாவும் மும்முரமாக திருமண வேலையில் தீவிரமாக இருந்தனர். திருமண நாள் பிப்ரவரி 14 என்றும் , நிச்சயதார்த்தம் அதற்கு முந்தைய நாள் மாலை எனவும் முடிவு செய்யப்பட்டிருந்த வேளையில் வசந்தி தனது வருங்கால கணவனான சுந்தருடன் பேசுகிறாள். இடையில் முறைப்பையன் இனியவனையும் தாயையும் கண்டு வசதி குறைவால் தந்தையோடு சேர்ந்து வெறுக்க, தாய் பத்மாவின் பிடிவாதத்தால் அவர்களுக்கும் பத்திரிக்கை போய் சேருகிறது. நிச்சயாநார்த்த நாள் வருகிறது. அன்று…….



மகிழ்ச்சித் ‘தீ’ –6

அன்று நிச்சயதார்த்த நாள். பிப்ரவரி 13 மாலை பொழுது சாய்ந்தவுடன் மண்டபம் களைகட்ட தொடங்கியிருந்தது. ராகவன் குடும்பம் அனைவரும் மண்டபத்தில் இருக்க, அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரின் வருகைக்காக வாசல் பக்கம் கண்ணோடு கண்வைத்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

பத்மாவும் , ராகவனும் மண்டப கடிகாரத்தையும் , மண்டப வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க , வசந்தி தங்கை நிஷாந்தியுடன் மணமகள் அறையில் அமர்ந்திருக்க தங்கை அக்காவை கிண்டல் பண்ணிக் கொண்டு சீண்டி விளையாடிக் கொண்டு இருந்தாள்.

“ அக்கா இந்த ரூம் வெளிச்சத்தை விட உன் முகத்துல வெளிச்சம் பிரகாசமா தெரியுது. பேசாம ரூம்ல இருக்கற விளக்கை அணைச்சிருட்டுமா ?”

“ ஏய் , வாலு பேசாம இருக்க மாட்டியா ?”

“ அக்கா இப்ப நான் உன்கூட பேசினாதான் உண்டு. அப்புறம் மாமா வந்தபிறகு நீ அவர் கூட கண்ணாலேயும் , வாயாலும் மாறி மாறி பேசுவே. என் கூட பேச உனக்கு நேரம் இருக்காதே “

;; சும்மா இருக்க மாட்டியா, என்னமோ பேரன் பேத்தி எடுத்த கிழவி மாதிரி பேசிகிட்டு இருக்க. போடி அந்த பக்கம் “

“ பார்றா வெக்கத்தை, ரொம்ப வெட்கப்படாத முகம் ரொம்ப சிவப்பானா மாமாவுக்கு அடையாளம் தெரியாம போகப் போகுது”.

வசந்தி பக்கத்தில் இருந்த ஒரு பையை எடுத்து செல்லமாக தங்கையை அடித்தாலும் உள்ளுக்குள் அவள் சொன்னதை ரசித்தாள்.

“ ஏய் நாளைக்கும் உனக்கு கல்யாணம் ஆகும்ல, அப்ப பார்ப்போம்”

” போக்கா, உன்னை மாதிரி இப்படி ரூமுக்குள்ள கதவை சாத்தி உட்கார்ந்து இருக்க மாட்டேன். நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போய் கையை பிடிச்சு என்னய்யா லேட்டாக்குறன்னு கேட்டு மண்டபத்துக்கு இழுத்துட்டு வந்துருவேன்”.

“ சீ ! படிக்கற பிள்ளை பேசுற பேச்சா இது ? உன்னை…’

வசந்தி எழுந்து துரத்த முயல ரூமுக்கு வெளியே சத்தம் கேட்டது, கதவை திறந்துக் கொண்டு பத்மா உள்ளே நுழைந்தாள்.

“ என்னடி சின்ன பிள்ளைக மாதிரி ஓடிபிடிச்சு விளையாடிகிட்டு.. ஏ பெரியவளே மேக்கப் கலைஞ்சுற போகுது. மாப்பிள்ளை வீட்ல வந்துட்டாக, பேசாம உட்காரு. இந்தாடி சின்னவளே பேசாம வம்பு இழுக்காம இரு.”

நிஷாந்தி விடவில்லை.

“ ஆமா, ஆமா அக்காவுக்கு மேக்கப் கலைஞ்சா மண்டபம் மாறி வந்துருக்கோம்னு குழம்பி போய் உட்காருவாரு”.

பத்மா திரும்பி சின்னவளை முறைத்துவிட்டு கதவை சிறிது சாத்திவிட்டு செல்ல, வசந்தி தங்கைகாரியின் கிண்டல் காதில் விழாதவள் போல கதவிடுக்கு வழியே தெரிந்த சுந்தரை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

நிஷாந்தி அக்காவிடமிருந்து எதுவும் திட்டு வரவில்லை என்று ஆச்சரியமாக பார்த்தவள், பின் அக்காவின் பார்வை போன திசைக் கண்டு பார்த்து அக்கா முன் கையை குறுக்காக காட்டி ஆட்டினாள்.

வசந்தி தங்கை கையை தட்டிவிட்டு மறுபடி பார்க்க ஆரம்பித்தாள்.

“ எக்கா பார்த்தது போதும், அப்படியே முழுங்கிராதே. பாவம்கா அவர்”

“ போடி எனக்குத் தெரியும். பெரிய இவ சொல்ல வந்துட்டா”.

இவர்கள் அறைக்கு வெளியே இவர்களது தூரத்து சொந்தக்கார பாட்டி உட்கார்ந்து இருந்தாள்.

அவள் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்திருந்த இன்னொரு கிழவியுடன் பேசியது இங்கே கேட்டது.

“ எம்மா, இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரக இவ்வள்வு லேட்டா வந்துருக்காக. ஆறு டூ ஏழு –ன்னு சொல்லிட்டு லேட்டா வருவாகளா. இப்பவே இப்படின்னா..ம்ம் என்னமோ போடிம்மா “

வசந்திக்கு முகம் வாடிப் போனது. தூரத்தில் வசந்தியின் அப்பா யாரிடமோ ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவர் இவளைப் பார்த்ததும் அருகே வந்தார்.

“ என்னம்மா முகம் வாடி போய் இருக்கு. இதோ பாரும்மா யாரு வந்தாலும் உன்னோட தனிப்பட்ட கோபத்தை காட்டக் கூடாது சிரிச்ச மாதிரி முகத்தை வைச்சுக்கனும் . நான் யாரை சொல்றேன்னு புரியுதா ?”

வசந்தி புரிந்தமாதிரி தலையாட்டினாள். மீண்டும் மேடையை பார்க்க சற்று முன் பேசி\யது மறந்து போனது.

பத்மா வேகமாக வந்தாள்.

“ இங்க என்ன அப்பாவும் , மகளும் தனியா பேசிகிட்டு இருக்கிங்க. வாங்க மகளை கூப்பிடறாக”.

பத்மா சொல்லிவிட்டு முன்னே நகர, சிறிநு நேரத்தில் வசந்தி மேடையில் ஏறினாள். பக்கத்தில் இருந்த சுந்தரை ஓரக்கண்ணால் பார்க்க அவன் மிக அழகாக தெரிந்தான். சவரம் செய்த மழுமழுப்பான முகம். பார்த்தால் யாரையும் வசீகரிக்கும் ஒரு புன்னகை.

சம்பிரதாய சடங்குகளுக்கு பிறகு மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த சேலையை கட்ட அறைக்குத் திரும்பினாள்.

மீண்டும் மேடைக்கு திரும்பி சுந்தர் பக்கத்தில் அமர வைக்கப்பட்டாள்.

“ ஏய், அப்பா எத்தனை நாளாச்சு , இப்படி உன்னை பக்கத்துல பார்க்கனும்னு. இன்னைக்குதான் போன உசிரே வந்துருக்கு “

“ ஓ ! அப்படியா , அப்ப இவ்வளவு நாளா உசுரு எங்க இருந்துச்சு “.

“ அதுவா,என் உசிரு ஏழு கிலோ மீட்டரு தாண்டி, ஏழு தெரு தாண்டி, ஏழு வீடு தாண்டி இருந்த இந்த பைங்கிளிகிட்ட இருந்துச்சாம்”.

“ அடடா , இந்த ஆம்பளைகளுக்கு பக்கத்துல ஒரு அழகான பொண்ணைப் பார்த்தா கற்பனை பிச்சிகிட்டு வந்துருமே . கொஞ்ச நேரம் பேசாம இருங்க. எல்லாரும் இங்கேயே பார்க்கிறாக”’.

வசந்தி மேடையில் இருந்து தாயைப் பார்க்க, அவள் முகம் மாறியது கண்டு , தாய் பார்த்த திசை நோக்கி திரும்ப இனியவனும் அவன் தாயும் மண்டபத்தில் நுழைந்து கொண்டு இருந்தார்கள்.

வசந்தியின் முகம் கடுமையாக மாறினாலும், சுதாரித்துக் கொண்டு முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்.

பத்மா அவர்களை எதிர்கொண்டு அழைத்து உட்காரவைத்தாள். ராகவன் பெயருக்கு ஒரு வணக்கம் போட்டு வேறு பக்கம் நகர்ந்தார்.

அத்தை சரோஜாவும் , இலக்கியனும் முகத்தில் எந்தவித வருத்தமும் இல்லை. இயல்பாக அமர்ந்தார்கள்.

பக்கத்தில் யாரோ இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது

’நல்ல பொருத்தமான ஜோடி, முகப் பொருத்தம் நல்லா இருக்கு. பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்கு ‘

வசந்தி ‘பத்து பொருத்தம்’ என்ற வார்த்தையை கேட்டு உள்ளம் பூரித்தாள். பத்து என்ற வார்த்தையை கேட்டவுடன் சுந்தர் தடுமாறினான். பின் வசந்தியைப் பார்த்து முக மாற்றத்தைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

சற்று தள்ளி சுந்தரின் அம்மா , சுந்தரின் அப்பாவை தனியா கூப்பிட்டு பேச ஆரம்பித்தாள்.

‘ என்னங்க, பத்து பவுன் பாக்கிபத்தி எதுவும் அந்த ஆள், அதான் பொண்ணோட அப்பா எதுவும் சொன்னாரா ?”

“ இல்லைம்மா , நான் எதுவும் கேட்க முடியலை. அவரைச் சுற்றி அவக வழி சொந்தக்காரக நிறைய பேரு இருக்காங்க. நான் கேட்டு சொல்றேன். பொறுமையா இரு”

“ உங்களை நம்ப முடியாது. நான் போய் கேட்கவா ?”

“ இங்கப் பாரு , மேடையில நம்ம பையன் எவ்வளவு சந்தோசமா இருக்கான் பாரு. இந்த நேரத்துல எதுவும் பிரச்சனை பண்ணாதே.”.

சுந்தரின் அம்மா மவுனமானாள். திரும்பி மேடையைப் பார்க்க அவன் வசந்தியுடன் சிரித்து பேசியதைக் கண்டு முகம் மலர்ந்தாள்.

” சரிங்க, மகன் சந்சோசம்தான் முக்கியம் . பின்னாடி பார்த்துக்கலாம். இப்ப ஆகிற வேலையை பாருங்க “.

சுந்தரின் தந்தை பெருமூச்சு விட்டார்.

இரவு உணவு முடிந்து மண்டபம் காலியானது.

வசந்தி மறுநாள் நடக்க இருக்கும் திருமண நிகழ்வை எண்ணி சந்தோசத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாள்.

வசந்தியின் தந்தை பத்து பவுனுக்கு எப்படி வழி செய்வது , என்ன பதில் சொல்வது என தூக்கம் வராமல் தவித்தார்.

பத்மா, தன் மகளுக்கு எப்படியாவது நல்லபடியாக திருமணம் முடிய வேண்டும் என எல்லா கடவுளையும் கூப்பிட்டு படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தாள்.

சுந்தர் பலவித ஆசைகளுடன், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான்.

மறுநாள் பொழுது விடிந்தது.

பொழுது மட்டும்தான் விடிந்தது.

இனியவனை நாம் இனி இலக்கியன் என்றே அழைப்போம்.

ஆனால் வசந்தியின் வாழ்க்கை…….?

வசந்தி வருவாள்….
 
Top