அறை வாசலில் கனகாவின் குரல் கேட்டது
"யாழினி.. யாழினி.. "
"ஏன்மா?"
"ட்ரெஸ் மத்த திங்ஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்ட தானே?
அங்க போய் அதில்ல இதில்லன்னா அப்பா
திட்டுவாங்க"
"அதெல்லாம் பார்த்து ஒழுங்கா எடுத்துட்டேன் ம்மா,
அப்பாவோட டேப்லெட் மட்டும் நைட் வரும் போது தான் வாங்கிட்டு வருவாங்க போல"
"சரி..
வா சமையல பார்க்கலாம்"
இரவுணவுடன் அவளுக்கு ஆயிரம் அறிவுரைகளும் இறங்கியது.
வழமை போலவே அவள் அப்பா ஈஷ்வர் ஆரம்பித்திருந்தார்.
"அங்க போய் எல்லார் கூடவும் சேர்ந்து கூத்தடிக்காம
ஒழுங்கா இரு.
ஃபேமிலிக்குள்ளயே நிறைய பசங்க இருக்காங்க சோ கவனமா இருக்கணும்.
தனியா யார்கிட்டயும் பேசிட்டு நிக்காத.
சத்தமா சிரிச்சிப் பேசாம
அடக்க ஒடுக்கமா இரு.
போகும் போது இருக்கற சந்தோஷம் திரும்பி வரும் போதும் இருக்கணும்"
'ஸ்கூல், காலேஜ், ஃபேமிலி சர்க்கிள்ல ஏதும் பங்ஷன், ஏன் சாவு வீட்டுக்குப் போகும் போது கூட இதத் தானே சொல்லுவீங்க.
என் மேல அம்புட்டு நம்பிக்க உங்க ரெண்டு பேருக்கும்'
வலிக்க வலிக்க
மனதோடு நினைத்துக் கொண்டாள்.
"ஏன்க்கா..
எப்போ தீரும் இந்த அட்வைஸ் மழை?"
அறை வாசலில் வைத்து
யாதவ் கேட்க,
"அத அவங்க கிட்டயே கேளுடா"
சலிப்பாக சொல்லி அறைக்குள் புகுந்து கொண்டாள்.
காலையில்
பயணம் ஆரம்பமானது
"அப்பா சொன்னதெல்லாம்
ஞாபகம் இருக்குல்ல
கவனமா இரு"
"அலர்ட் பண்றாங்க"
யாதவ் கிண்டலாக கிசுகிசுக்க,
பொய்யாகப் புன்னகைத்து வைத்தாள்.
ஈஷ்வரின் குடும்பத்தில் ஒரு திருமணம்
அதற்கான பயணம் இது.
யாதவ் குதூகலமாக வர
இவளுக்கு சலிப்பாகத் தான் இருந்தது.
அறிவுரை கூறி அவள் மனதை காயப்படுத்தித் தான் எந்தப் பயணமும் அவர்கள் வீட்டில்.
மதியம் ஊருக்கு வந்து சேர திருமணவீடு மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்து வீடுகள் கூட விழாக்கோலம் பூண்டிருந்தன.
"அழகா இருக்குல்லக்கா"
"ஹ்ம்ம்ம்"
"ஏன்க்கா டல்லா இருக்க?
வழமையா அவங்க இப்பிடி தானே
நீ வருத்தப்படாத"
காதுக்குள் அவன் முனுமுனுக்க
"இல்லடா நான்
வருத்தப்படல்ல"
சொன்னவள் பெற்றோரைப் பின் தொடர்ந்து உள்ளே செல்ல
வரவேற்பு பலமாக இருந்தது.
இரவு சாப்பாட்டின் பின்
இளம் பெண்கள் மருதாணி வைத்துக் கொள்ள, இவளும் அங்கே உட்கார்ந்தவள் சிலருக்கு அழகாக வைத்தும் விட்டாள்.
"நீயும் வெச்சுக்கம்மா"
பாட்டி சொல்ல,
"தாயைப் பார்த்து வைத்தாள்"
சரியென்று அவர் தலையசைக்க
அதிகமில்லாமல்
உள்ளங்கையில்
மட்டும் வைத்துக் கொண்டாள்.
அடுத்த கைக்கு அவளின்
அத்தை மகள் வைத்து விட
"தேங்க்ஸ் கவி
நான் ஒரு கைக்கு போதும்ன்னு நெனச்சேன்"
"எல்லாரும் ரெண்டு கைக்கும் வெச்சிருக்காங்க
அதான் உனக்கும்"
"சரி யாழினி இன்னும் அரமணி நேரம் கழிச்சி
கைய கழுவிட்டு போய் தூங்கு. டிராவல் பண்ணதோட
நைட் ரொம்ப நேரம் முழிச்சிருந்தா தலை வலிக்கும்"
"இந்தா ஆரம்பிச்சிட்டாங்க,
இன்னும் என்னடா ஒன்னும்
சொல்லலன்னு யோசிச்சுட்டே இருந்தேன்"
அங்கே வந்த யாதவ் சொல்ல
"அடங்குடா.. அம்மா இங்கேயே தான் பார்க்கறாங்க"
"சரி நான் தூங்கப்
போறேன்"
சொன்னவன் ஓடிவிட,
"என்னவாம் உன் தம்பி?"
"அவன் அங்க அத்த வீட்டுல தூங்க போறானாம்
பெரியம்மா"
சொன்னவளும் சிறிது நேரம் கழித்து தூங்கி விட்டாள்.
அதிகாலையில்
சிலர் நடமாடும் சத்தம் இவளை எழுப்பி விட
போய் குளித்து, உடை மாற்றி வந்தவள் கையில்
வண்ண வண்ண கோலப் பொடியை திணித்த அவள் அத்தை,
"போ நீ அழகா கோலம் போடுவ தானே
வாசல நிறைக்குற மாதிரி பெருசா ஒன்னு போடு"
அழகான புன்னகையுடன்
சொல்ல சந்தோஷமாகப் போனவள் அடுத்த சில நிமிடங்களில் அனைவரது
கவனத்தையும் கவரும் வண்ணம் அழகிய கோலம்
ஒன்றைப் போட்டு விட்டு வந்தாள்.
எல்லோரும் அவளைப் பாராட்ட,
மனதில் கிலி பிடிக்க
"அப்பா கோவப்படுவாங்களாம்மா?
அத்த போடச் சொல்லவும் தான் போட்டேன்"
"இல்ல இதுக்கெல்லாம் அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க"
அதன் பிறகான நாட்களில் அவள் கோலங்கள் தான் முற்றத்தில்.
அன்று நிச்சயம் அடுத்த நாள் திருமணம் முடிய,
மறுவீடு சடங்கு, குல தெய்வ வழிபாடு என அடுத்தடுத்து வந்த வைபவங்களுக்கு இவர்கள் இரு வாரங்களுக்குத் தங்க
ஈஷ்வர் மட்டும் கிளம்பியிருந்தார்.
திருமணம் முடிந்த
நான்கு நாட்களில் பின்..
ஒரு மாலைப் பொழுது
யாழினியின்
வயதையொத்தவர்கள்
பூப்பந்து விளையாடிக் கொண்டிருக்க வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து கவிதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"வா யாழினி நாம ஒரு ஆட்டம் விளையாடலாம்"
"இல்ல கவி நீ விளையாடு நான் இருக்கேன்"
"அக்கா போ.. நீ நல்லா விளையாடுவ தானே?"
இழுத்துக் கொண்டு வந்து விட்டிருந்தான் யாதவ்.
அவனுக்கு எப்போதும் பெற்றவர்களின் அடக்குமுறை பிடிப்பதில்லை.
அவள் விளையாடி முடிய
அவள் செவிகளில் விழுந்தது,
"நீ எத்தனை வருஷம்
பேட்மிண்டன் கோச்சிங் போற யாழினி?"
என்ற பலரின் கேள்வியும்
ஒரு கைதட்டல் ஒலியும்.
"இல்ல நான் அப்பிடி எல்லாம் போகல்ல
யாதவ் கூட வீட்ல விளையாடுவேன்"
"கோச்சிங் போனன்னா
நீ வேற லெவல் பிளேயர் ஆகிடுவ தெரியுமா?"
'அதுக்கு எங்க வீட்ல விட்டாத் தானே'
நினைத்தவளுக்கு நெஞ்சுக்குள் ஒரு வலி ஓடியது.
கைதட்டும் ஓசையொன்று கேட்டது திடீரென ஞாபகம் வர சுற்றுமுற்றும் தேட யாரும் கண்களுக்குப் புலப்படவில்லை.
அன்று மதிய உணவை தயாரித்து எடுத்துக் கொண்டு குடும்பமே சேர்ந்து அவர்களின் சொந்த மாந்தோப்புக்கு கிளம்பியிருந்தனர்.
பெரியவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கதை பேச தோப்பு முழுவதும் சுற்றித் திரிந்தது இளையவர் கூட்டம்.
"யாழினி இந்தா பிடி
சாப்பிட்டு பாரு
சூப்பரா இருக்கும் இந்த மாங்கா"
ஒரு கடி கடித்தவள்
கண் மூடி
முகம் சுளித்த அழகு
அது தான் நடக்கும் என அறிந்த தேவேந்திரனின்
கைபேசியில் அழகான படமாகியது.
"ஏன் கவி இப்பிடி செஞ்ச?"
செல்லமாக் கோவிக்க
"சும்மா தான்"
என்றவள் கலகலவென்று சிரிக்க
"உன்ன என்ன பண்றேன் பாரு" விரட்டிக் கொண்டு ஓடினாள்.
"தேவ் அத்தான்..
ப்ளீஸ் நீங்க இப்போ எடுத்த படத்த டிலீட் பண்ணிடுங்க"
கெஞ்சலாக யாதவ் குரல்.
"ஏன் யாதவ்?"
"எங்க அப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சா அக்காவ அடிச்சி தோல உரிச்சு வெச்சிடுவாங்க"
"என்னடா சொல்ற?"
"ஆமா அத்தான் இங்க வரும்போது அவளுக்கு அவ்வளவு அட்வைஸ் பண்ணி தான் கூட்டிட்டு வந்தாங்க. இங்க மட்டும் இல்ல எங்க போறதுன்னாலும்
அவளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க காலேஜ் போகும்போது கூட அப்படித்தான்.
கலகலப்பா இருக்க மாதிரி தான் இருக்கும் ஆனா அவ மனசளவுல அப்பிடி இல்ல.
எங்க அப்பா, அம்மா ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு யோசிச்சு தான் எதையும் செய்வா.
நீங்க அவள படம் புடிச்சது மட்டும் எங்கப்பாவுக்கு தெரிஞ்சா அவளுக்குத்தான் கஷ்டம்.
அன்னைக்கு கல்யாண மண்டபத்துல வெச்சு அப்பாகிட்ட யாரோ அக்காவை பொண்ணு கேட்டாங்க. அதுக்கு அவ படிப்பு முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம் அப்படின்னு அப்பா சொன்னாங்க.
அப்பிடி இருக்க நீங்க பிடிச்ச படத்த யாரும் பாத்துட்டு எங்கப்பா கிட்ட சொல்லிட்டா பெரிய ப்ராப்ளம் வரும்.
அவளைப் படிக்க வைக்கிறதே ஃபேமிலில யாரும் ஏதாவது குறை சொல்லுவாங்கன்னு தான். ஏன்னு தெரியல அவ மேல நம்பிக்கையே இல்லை. யாரையாவது லவ் பண்ணிடுவாளோன்னு தான் நினைப்பாங்க"
'யாழினிய வேறு யாருக்கோ கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களா
அதுக்கு நான் விடுவேனா? நாளைக்கே உங்க அப்பா வரட்டும் நான் அவரோட பேசறேன்'
நினைத்தவன்
அடுத்த நாள் வந்த ஈஸ்வர் முன் போய் நின்றான்.
"மாமா, சித்தி கல்யாணத்தப்ப நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டேன் ஞாபகம் இருக்கா?"
"என்னப்பா என்ன கேட்ட? மறந்துட்டேனே"
"அப்போ எனக்கு பத்து வயசு யாழினிக்கு அஞ்சு வயசு. பெரியவனானதும் யாழிய எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களான்னு கேட்டேன்.
அதுக்கு நீங்க,
அதுக்கு என்னப்பா பண்ணிட்டா போச்சு என்று சொன்னீங்க. அப்போ நான் என் கையை நீட்டி சத்தியம் பண்ண சொன்னேன். நீங்க என் பிஞ்சு கைய புடிச்சு சத்தியமா என் பொண்ணு உனக்கு தான்னு சொன்னீங்க. சின்ன வயசுல விளையாட்டுத்தனமா கேட்டதுக்கு பண்ணின சத்தியம்ன்னு அத நீங்க மறந்திருக்கலாம்.
ஆனால் அந்த நெனைப்ப
நெஞ்சில வச்சு
தான் நான் இத்தனை
வருஷம் வாழ்ந்துகிட்டு இருக்கேன் மாமா.
இப்போ உங்க பொண்ண
கட்டிக்கப் கூடிய உறுதியான கையோடு நிக்கிறேன் மாமா.
அவளை எனக்கே
தந்துடுங்க. அந்த சின்ன வயசுல என் மனசுல என்ன நெனச்சிகிட்டு கேட்டேன்னு தெரில.
ஆனா டீன் ஏஜ் வயசுல எனக்கு புரிஞ்சது அவ மேல இருக்கறது ஆத்மார்த்தமான காதல்னு.
ஆனா அப்போ கூட நான் அவள டிஸ்டப் பண்ண விரும்பல்ல.
நான் உங்களுக்கு மாப்பிள்ளையா அவளுக்கு புருஷனா வரணும்னா,
என் தரத்தை உயர்த்தணும்
அதுக்கு படிச்சு நல்ல தொழில் ஒன்னு செய்யணும்னு நினைச்சேன். நான் நெனச்ச மாதிரியே இப்போ புதுசா பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன்.
ஒரு வருஷம் கூட ஆகல்லை ஆனா அடுத்த ரெண்டு வருஷத்துல நல்ல இடத்துக்கு வந்துடுவேன் அவளும் படிப்ப
முடிச்சுட்டுவா
அப்போ வந்து உங்ககிட்ட பொண்ணு கேக்கலாம்னு இருந்தேன். ஆனா
வேற யாரோ அவள பொண்ணு கேட்டதா கேள்விப்பட்டேன்.
அதனால தான் இப்பவே இத பேசுறேன்"
சொல்லி விட்டு சுற்றியிருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்தவன்
"அடுத்த ரெண்டு வருஷம் அவளைப் படிக்க வைக்கறதோட
அவ என்ன ஆசைப்பட்டாலும் அதை செய்ய விடுங்க. அவளோட திறமைகள வளர்த்துக்கட்டும்.
அதுக்கு சுதந்திரத்த கொடுங்க.
உங்க பொண்ணு மேல நீங்க நம்பிக்கை வைங்க
உங்க வளர்ப்பு அவ
ஒருநாளும் பிழையாகிட மாட்டா.
நான் கூட நினைச்சேன் நான்தானே அவளை மனசுல நெனச்சிகிட்டு இருக்கேன் அவ யாரையாவது விரும்பினா என்ன செய்றதுன்னு.
ஆனால் தன் கைக்கு மருதாணி போடவே அம்மாக் கிட்ட அனுமதி கேட்கறவ, தன் வாழ்க்கைத் துணைய தானாகத் தேடிக்க மாட்டான்னு இங்க வந்த முதல் நாளே புரிஞ்சுக்கிட்டேன்.
ப்ளீஸ் மாமா அவளை எனக்கே கொடுத்துடுங்க என்னை நம்பி கொடுத்துடுங்க.
அவள சந்தோஷமா வெச்சுக்குவேன்,
நானும் சந்தோஷம இருப்பேன்"
அவன் ஆழ்ந்து அவர் கண்ணைப் பார்த்துப் பேச ஈஷ்வருடன் சேர்ந்து சுற்றியிருந்தவர்களும் அசந்து விட்டார்கள்.
அவன் பேசுவதையே இமை வெட்டாமல் பார்த்து
'என்னப் பத்தி எவ்ளோ புரிதல் இருக்கு அத்தானுக்கு!
அம்மாக் கிட்ட நான் பேசக்கூட இல்ல ஆனா அவங்க சொல்லவும் தான் மருதாணி போட்டேன்னு கூட தெரிஞ்சிருக்கு'
சிந்தனையில் இருந்தவள்
திடீரென ஞாபகம் வந்தவளாக
தன் அருகில் இருந்தவளிடம் திரும்பி,
"என்னடி சொல்றாங்க
உங்க அண்ணா?"
"ஆ.. சொல்றாங்க சுரக்காக்கு உப்பில்லன்னு.
சின்ன வயசுல இருந்தே உன்ன தான் நெனச்சிகிட்டு இருக்காங்கன்னு சொல்றது புரியலையா உனக்கு?"
"அது புரியுது அவர் பேசுறத வெச்சி எங்கப்பா என்மேல கோபப்படுவாங்களோன்னு பயமா இருக்குடி"
"லூசா நீ?
எங்க அண்ண பேசுறதுக்கு உன்மேல எதுக்கு மாமா கோவப்படப்
போறாங்க. கோவப்பட்டா எங்க அண்ணன் மேல தான் கோவப்படுவாங்க"
"ஏம்ப்பா தேவ்
நீ மட்டும் விரும்பினா போதுமா அவளோட விருப்பத்தை கேட்க மாட்டியா?"
"இல்ல பாட்டி அவ யாரையும் மனசால வெறுக்கிறவ இல்ல.
நான் கேட்டு இருந்தாக் கூட மாமா சரி சொல்லாம,
எனக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டா.
எப்பிடியும் மாமா சொல்ற ஆளத் தான் அவ
கல்யாணம் பண்ணிப்பா. மாமா, நான் தான் அவளுக்கு புருஷன்னு சொன்னா அவ மறுக்க மாட்டா தானே?
மாமா காட்டுறவன் தான் அவளுக்கு புருஷன்
அது நான் தான்னு மாமாவே சொல்லணும் அதான் என்னோட ஆசை.
அவளை நான் சந்தோஷமா நல்லா பாத்துப்பேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னோட காதலும் என் நம்பிக்கையும் அவளுக்குப் புரியும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ்வோம் பாட்டி. அதுக்கு மாமா தான் மனசு வைக்கணும்"
சிறுது நேரம் மௌனமாக இருந்தவர்.
"சரிப்பா உனக்கே என் பொண்ண கட்டி வைக்கிறேன்"
சம்மதம் சொல்ல..
முதன்முதலாக மொத்தக் காதலையும் கண்ணில்
தேக்கி ஆசையாகப் பார்த்து வைத்தான் அவளை.
"அப்பிடியே
யாழினி கிட்டயும் நீங்களே சம்மதத்த கேட்டுடுங்க
மாமா"
சொன்னவன் திரும்பி அவள் முகம் பார்க்க,
"சம்மதம் தான்ப்பா"
அவர் கேட்க முன் சொல்லியிருந்தாள்.
அடுத்த நொடி
இளவட்டங்களின்
மகிழ்ச்சி ஆரவாரம்
வீட்டை நிறைத்தது.
அடுத்த நாள் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தவர்களிடம் வந்தவன்,
"அத்தை நான் யாழினி கிட்ட கொஞ்சம் பேசணும்"
"அவ மேல ரூம்ல தான் இருக்கா போய் பேசுப்பா"
"யாழி.. யாழி.."
மெதுவாக தட்டிய
கதவைத் திறந்தவள்,
"ஏன் அத்தான்?"
"இந்தா பிடி"
"என்னத்தான் இது?"
"பிரிச்சுப் பாரு யாழி"
"மொபைல்!
எனக்கு எதுக்கு அத்தான் இது?"
"என்கூடப் பேசணும்ல?"
"எங்கிட்ட ஒன்னு இருக்கு"
"அத தூக்கிப் போட்டுட்டு இத யூஸ் பண்ணு.
புதிய சிம் கார்டு ஒன்னு போட்டிருக்கேன். உன் பழைய சிம் கார்டையும் போட்டுக்க"
"தேங்க்ஸ் அத்தான்"
அவன் முறைக்கவும்
"தேங்க்ஸ் வாபஸ்"
என்றிருந்தாள்.
"இவ்ளோ நாள்
உன்ன டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு
பேசாம இருந்தேன்
ஆனா இனிமேல்
அப்பிடி இருக்க முடியும்னு
தோனல்ல. அதுக்காக
எந்த நேரமும் பேசிக்கிட்டே இருப்பேன்னு சொல்லல்ல
நீ படிக்கணும்,
நான் என் தொழில பார்க்கணும். இடைல கொஞ்சம் பேசிக்கலாம்.
நீ காலேஜ் போய் ஃபர்ஸ்ட் வேலையா பேட்மிண்டன்
க்ளப்ல ஜாயின் பண்ணு"
"நான் விளையாடுது உங்களுக்கு எப்பிடி?"
"அன்னைக்கு நீ
கவி கூட விளையாடி முடிய க்ளாப் பண்ணினது நான் தான்"
"ஆனா நான் தேடினேன் யாருமே இல்லயே?"
யோசனையாக கேட்க
"நான் ஒளிஞ்சிக்கிட்டேனே"
புன்னகையுடன் பதில் சொன்னான்.
"நீ நல்லா விளையாடுற யாழி. சோ இன்னும் உன் திறமைய வளர்த்துக்கோ"
"தேவ் அத்தான்! எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்கு. நேத்து பேசுனதுலயே புரிஞ்சது அக்காவ, நீங்க சந்தோஷமா வெச்சுக்குவீங்க"
வண்டியில் ஏறப் போனவன்
தேவ்விடம் சொல்ல.
"பதினஞ்சு வருஷமா என் மனசுல இருக்கா அவ.
அவளோட ஒட்டு மொத்த சந்தோஷத்துக்கும் நான் கேரண்டி"
வருடங்கள் கடந்தன.
"நீங்க எப்போ வருவீங்க?"
"இன்னும் ஒருமணி நேரம் ஆகும்டா"
"ஓகே.. நான் உள்ள போய்டுவேன். யாதவ் வெளிய வெயிட் பண்ணுவான் அவன் கூட நீங்க வந்துடுங்க"
"ஓகே டா. நல்லா விளையாடு. ஆல் தி பெஸ்ட்"
"லவ் யூ அத்தான்"
"லவ் யூ டூ டா"
தேங்க் யூ சொன்னால் முறைப்பவனுக்கு,
லவ் யூ சொல்லப் பழகி இருந்தாள்.
அவனின் உந்துதலும், வாழ்த்தும் அன்று அவளுக்கு
"இன்டர் கிளப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்"
தங்கப் பதக்கத்தை
கொடுத்திருக்க,
மனம் கொள்ளாப் பூரிப்புடன் மகளைப் பார்த்திருந்தார் ஈஷ்வர்.
அடுத்து இரண்டு நாளின் வரும் அவளது இருபத்திரண்டாவது பிறந்த நாளுக்கு
துணி எடுக்க யாதவ்வுடன் போனவன்
அழகான சேலையும் கை நிறையப் பொருட்களும்
மற்றவர்களுக்குத் துணியும் வாங்கி வந்தான்.
பிறந்த நாளன்று காலையில்
கோயிலுக்குப் போய்
அர்ச்சனை முடிய
தன் நிறுவனத்துக்கு
கிளம்பிய ஈஷ்வரை தடுத்து, மற்றவர்களையும்
சேர்த்து இழுத்துக் கொண்டு அவன் போனது
ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு.
"இங்க எதுக்கு தேவ்?
எனக்கு முக்கியமான வேலை இருக்குப்பா"
"அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் மாமா. இது எல்லாத்தையும் விட முக்கியம்"
சொன்னவனைப் புரிந்தும் புரியாத பார்வை பார்த்தான் யாதவ்.
"என்ன அத்தான் நடக்குது?
எதுக்கு இங்க?"
கேட்டவளின் கைகளில் தவழ்ந்தது, அவள் எழுதிய
நான்கு சிறுகதைகளும்
கவிதைகளும் புத்தகமாக.
"இது எப்பிடி?"
கண்கள் குளமாக் கேட்டவளுக்கு,
"இது உனக்கு என்னோட பர்த்டே கிஃப்ட்.
மத்ததெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போ வா பங்ஷன் ஸ்டார்ட் பண்ணலாம்"
அவன் பின்னால் சென்றவள் கண்டது
ஊரிலிருந்து வந்திருந்த
அவன் பெற்றோரையும் கவிதாவையும் பாட்டியையும் தான்.
"நீ இதெல்லாம் எழுதி ஒளிச்சி வெச்சிருக்கன்னு ஒருநாள் அத்தான் கிட்ட சொன்னேன். எல்லாத்தையும் எடுத்து அனுப்ப சொன்னாங்களா,
படிக்கத் தான் கேக்கறாங்க போலன்னு நானே போய் குடுத்துட்டு வந்தேன்க்கா.
ஆனா புக் பப்ளிஷ் பண்ணி
இருக்கார் பாரேன்.
அத்தான் செம்ம போ"
மகிழ்ச்சி கண்ணீரை நிரப்ப, யாதவ் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
விழா முடிய மதிய உணவை ஒரு பிரபலமான ஹோட்டலில் முடித்துக் கொண்டு வீடு வந்தவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க,
"அடுத்து என்ன பண்ணப் போற யாழி?"
"எம்பிஏ படிக்கணும் அத்தான்"
"யம்மா நீ எதன்னாலும் படி
நாங்க தடுக்க மாட்டோம்.
தடுக்க இவன், என் பேரன் விடவும் மாட்டான்.
ஆனா அதுக்கு முன்ன கல்யாணத்த பண்ணுங்க"
"ஆமா யாழினி..
நீ என்ன சொல்ற தேவ்?"
"ஓகே மாமா பண்ணிக்கறோம்.
அடுத்த ரெண்டு மாசத்துல
டேட் பிக்ஸ் பண்ணிடுங்க"
சந்தோஷமாக் கூறினான்.
மாலையில் ஈஷ்வரிடம் வந்து,
"மாமா நங்க வெளிய போயிட்டு வர்றோம்"
சொல்லி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பியவன், கடற்கரையில் போய் நிறுத்த
துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினாள்,
கரை தொட்டு ஓடும் அலைகளில் கால் நனைக்க.
உள்ளிருந்த குழந்தைத் தனம் எட்டிப்பார்க்க,
கதை பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்து,
"ஹாப்பியா இருக்கியா யாழிம்மா?"
அவன் கேட்க
"ரொம்ப ரொம்ப ஹாப்பி அத்தான். என் ஆசையெல்லாமே அந்த தொடுவானம் போல கைக்கு எட்டாமலே தான் இருக்கும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா எல்லாத்தையும் என் கைல கொண்டு வந்து சேர்த்துட்டீங்க.
நீங்க இல்லன்னா இதெல்லாம் நடந்தே இருக்காது.
லவ் யூ சோ மச் அத்தான்"
"லவ் யூ டூ டா"
தோள் தொட்டு அவன் அணைக்க பாந்தமாக ஒட்டிக் கொண்டாள் அவனுடன்..
சுபம்!!