எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அற்புதம் மறைந்த அரும்மருந்தே! - கதைத்திரி

NNK34

Moderator
தன்னை சுற்றி நடப்பவை ஏதும் புரியாத திக் பிரம்மை நிலையில் ஆரியா விழிக்க, பூமியே அதிரும்படியான அதிர்வை உணர்ந்தாள். அவளை சுற்றி இருந்த உருவங்கள் யாவும் எழுந்து தலைவணங்கி நிற்க பயப்படபடப்புடன் திரும்பி பார்த்தாள்.

ராஜாக்கள் அணியும் கிரீடமும், கையில் பெரிய வாளும் ஏந்தியபடி, உடன் ராணிக்கள் அணியும் கிரீடத்துடன் வந்த மங்குஸ்தான் பழத்தின் கைபற்றியபடி வந்தது கத்தரிக்காய்.

அவள் கையில் போடப்பட்டிருக்கும் விலங்கினையும் அவளையும் ஒரு பார்வை பார்த்த இருவரும் சென்று அரியாசனத்தில் அமர, பணிவுடன் வந்த வெண்டைக்காய் "அரசருக்கரசே வணங்குகின்றேன்" என்றது. இங்கு விலங்கும் கையுமாக நின்ற ஆரியாவின் வியப்பு எல்லையை கடந்தது.

காய்கறி மற்றும் பழங்கள் நடமாடுவதை காண்பதே அவளுக்கு பெரும் ஆச்சரியம், இதில் அவை தமிழில் பேசவும் இவளுக்கு தலைகால் புரியவில்லை. 'இது எந்த இடம்? நாம் எங்கு மாட்டிக் கொண்டோம்?' என்று மனதோடு கேட்க மட்டுமே முடிந்தவளுக்கு யோசிக்க முடியவில்லை.

"சொல்லுங்கள் மந்திரியவர்களே. யார் இந்தப் பெண்? இவளை எதற்கு நம் அரசபையில் விலங்குடன் நிறுத்தியுள்ளீர்?" என கத்தரிக்காய் கேட்க "இந்த பெண் மீது நமது சிற்றரசர்கள் யாவரும் புகார் சூட்டிய நிலையில் இவளை பூமியிலிருந்து நமது உலகத்திற்கு கூட்டிவரவேண்டியானது அரசே" என வெண்டைக்காய் கூறியது.

"அட இத்தனை நபர்களின் வெறுப்பை சம்பாதிக்குமளவு இந்தப் பெண் என்ன செய்தாள்?" என மங்குஸ்தான் பழம் வினவ "மன்னிக்கவேண்டும் ராணியாரே, நாங்கள் மட்டுமல்ல, எங்கள் மனைவிமார்களும் கூட இந்தப் பெண் மீது புகார் வைத்துள்ளனர்" என அங்கு சிற்றரசர்கள் இருக்கையிலிருந்து எழுந்து பணிவுடன் அவரைக்காய் கூறியது.

"அடடே! அவரை அவர்களே தங்கள் மனைவி மாம்பழம் முதல் முறை புகார் கூறுகிறார்களே! என்ன ஒரு ஆச்சரியம். சரி சரி நேர விரயம் வேண்டாம். புகார் என்ன என்பதை ஒவ்வொருவராகக் கூறுங்கள். அவரை அவர்களே முதலில் தாங்களே தங்கள் புகாரையும் தங்கள் மனைவியின் புகாரையும் கூறுங்கள்" என கத்தரிக்காய் கூறியது.

"அய்யா தங்களுக்கே என்னை பற்றி தெரியும். என்னிடம் எவ்வளவு சத்துக்கள் உள்ளன? நான் எவ்வளவு சிரத்தை எடுத்து என்னை உண்பவர்கள் ரத்தத்தினை சுத்தப் படுத்துகின்றேன்? இதற்காக இரவு பகலாக நான் உழைப்பதில் என் மனைவி மாம்பழமே என்னுடன் கோபித்துக் கொண்டுள்ளாள். இருப்பினும் என் பணியை செவ்வனே செய்து வருகின்றேன்.
இதய நோய் அண்டாதபடி அவர்கள் இதயத்தை பாதுகாக்கிறேன்" என அவரைக்காய் கூற "அட தங்கள் பணியில் குறை கூற நான் யார் அவரை அவர்களே? இதற்கும் இந்த புகாருக்கும் என்ன சம்மந்தம்?" என கத்தரிக்காய் வினவினார்.

"சம்மந்தம் உள்ளது அரசே. நம்முலகில் ராஜாங்க பங்கு வகித்து ராஜ போக வாழ்க்கையில் மரியாதையுடன் நடத்தப்படும் நான், பூமியில் புழுக்களும், மக்கிப் போன குப்பைகளுக்கும் இடையில் தான் என் உயிரை நீத்து திரும்புகின்றேன்" என ஊணை உருக்கும் குரலில் அவரைக்காய் கூற "ஆ! இதென்ன அநீதி? தங்களை அந்த நிலைக்கு கொண்டு சென்றது யார்?" என கத்தரிக்காய் கொதித்தெழுந்தார்.

"இதோ தங்கள் முன் நிற்கும் இந்த அபலைப் பெண் தான் அரசே. என் மனைவி மாம்பழம் உலகெங்கும் விரும்பப் படுபவள். ஆனால் அவளோ உண்ணுவதற்கு ஆளின்றி இதோ இந்த பெண் வீட்டில் அழுகிய நிலைக்கு சென்று மடிந்து கண்ணீருடன் என் மடி சாய்ந்து அழுத வேதனையை என்னால் தாழ இயலவில்லை அரசே. எங்கள் இருவருக்கும் இந்த பெண்ணால் அபல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் இப்புகார்" என கண்ணீருடன் துவங்கி கோபத்துடன் அவரைக்காய் முடிக்க "நல்லது. உங்களுக்கு நிச்சயம் நீதி கிட்டும். அடுத்த புகார்களையும் கேட்டுவிட்டு கூறுகின்றேன். மஞ்சள் முள்ளங்கி (கேரட்) அவர்களே, உங்கள் புகார் என்னவோ?" என அரசர் கத்தரி கேட்டார்.

"காய்கனி உலகின் அரசருக்கரசே, தங்களுக்கு என் கோடான கோடி வணக்கங்கள். அய்யா என்னிடம் பொட்டாசிய சத்து, வைட்டமின் ஏ, பி6 மற்றும் கே1 போன்ற சத்துக்கள் உள்ளன. நான் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், கண் பார்வையை தூய்மையாக்குவதிலும் வல்லவன். ஆனால் இந்த பெண் என்னை மிகவும் அவமானம் செய்கின்றாள். என்னை கண்டாலே ஏதோ அசிங்கத்தை கண்டது போல் முகம் சுழிக்கின்றாள். இவளது அன்னை திட்டானால் ஒழிய என்னை பெயருக்கு அரைகுறையாக மென்று விழுங்கி விடுகின்றாள். இல்லையேல் அவரையரசருக்கு நேர்ந்த நிலை தான் எனக்கும் நேருகிறது. அதிலும் என் மனைவியின் நிலை மிகவும் கவலைக்கிடம்"

"என் மனைவி குமளி (ஆப்பில்) குமுரி அழும் வகையில் பாடுபட்டுவிட்டாள் அய்யா. விருப்பிமின்றி வெட்டி பாதியோடு போட்டுவிட்டு பல்லிகளும் கரப்பான்களும் அவளை முத்தமிட்டு துன்புறுத்துவதாக கதறுகின்றாள்" என மஞ்சள் முள்ளங்கி கூற "அய்யோ என்ன ஒரு பரிதாபமான நிலை" என மங்குஸ்தான் வேதனைப் பட்டார்.

அடுத்து பணிவுடன் எழுந்த பொடலங்காய் "காய்கனிகளின் அரசே! தங்களுக்கு என் பணிவான வந்தனங்கள். இதோ இந்த பெண் வாழும் பூமியில் தற்போது பல நாகரீக உணவுகள் வந்துவிட்டன. அதிலும் இந்த 'மைதா' என்பவன் செய்யும் கோலாட்சியில் பலரும் மலச்சிக்கலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். நானும் எனது தமையன் கீரையும் அப்பிரச்சனையை வெகு விரைவில் குணமடையச் செய்வதில் வல்லவர்கள். நான் பலரின் குடல் புன்களை வேரறுத்த சாதனையை படைத்தவன். அந்த காலத்து மனிதர்கள் என்னை பெரிதும் விரும்பி கூட்டு வைத்து உண்டார்கள்" என இதுவரையில் பெருமையுடன் கூறியவர் சட்டென துளிர்த்த சினத்தில் "ஆனால் இந்தப் பெண்.. என்னை வீணாக்கி வந்து யாருக்கும் தெரியாமல் கால்வாயில் கொட்டிவிட்டாள். அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் கொதிக்கின்றது. அதிலும் என் மனைவி பப்பாளி மிகப் பாவம். நோய் கிருமிகளை இயற்கையாகவே வேரறுக்கும் அபார சக்தி கொண்ட என் பத்தினியை உண்ணுவதற்கு வாங்கி வைத்தால், அவளை அறைத்து வீணே முகத்தில் குழைத்து பத்தே நிமிடத்தில் துடைத்து எரிந்து விடுகின்றாள்" என ஆவேசமாக கர்ஜித்தார்.

"அய்யா புடலங்காய் அவர்களே, தங்கள் பத்தினியின் அவமானத்திற்கு நிச்சயம் நியாயம் கிட்டும். சற்றே பொருமை காக்கவும்" என்ற கத்தரி மன்னர் "அய்யா அக்காரைக்கிழங்கவர்களே (அக்காரைக்கிழங்கு - பீட்ரூட்) தங்களின் புகார் என்னவோ?" என்றார்.

"அய்யா.. என்னை உலகமே அறியும். ரத்தத்தின் அடர்த்தி அதிகமாக என்னையே பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைப்பர். கல்லீரல் பிரச்சனைகளை சரிசெய்ய என்னை மிஞ்சியவர் எவரும் இல்லை. ஆனால் நான் இந்த பெண் வீட்டிற்கு அதிகம் வந்தும் இப்பெண்ணின் தட்டை ஒருநாளும் எட்டியதில்லை. என்னை இவள் பார்க்கும் அருவருப்பான பார்வை என்னை வெகுவாக வேதனையடையச் செய்கிறது. தப்பித் தவறி இவளது மதிய உணவு பெட்டியில் நான் அடைபட்டு விட்டால், பின் அதிலேயே நான் மூச்சு திணறி மடிந்து தான் போகின்றேன். என் மனைவி கொய்யாப்பழம் இவளிடம் வெகுவாக மனவேதனை பட்டுவிட்டாள். இவளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக என் மனைவி ருசியாக இல்லை, புளிப்பாக உள்ளாள் என்றெல்லாம் அவள் மேல் பொய் புகார் விடுத்துள்ளாள்" என வேதனையுடன் அக்காரைக் கிழங்கு கூறி அமர்ந்தது.

பின்பு தன் முழு உயர்த்திற்கு எழுந்து நின்று தன் கரகரத்த குரலில் ஒரு உறுமலை போட்ட பாகற்காய் "வணக்கம் அரசே" என்க "வணக்கம் பாகற்காய் அவர்களே. தங்கள் பேரில் ஊரே புகார் கூறுகிறது. தங்களின் குணம் புரியா மானிடக் கூட்டம் தங்களை ருசியற்றவன் என்று பரிகாசம் செய்கிறது. அதை பொருக்க முடியாது கொதித்தெழுந்த என்னையே தடுத்தவர் நீர். தாமே தற்போது புகார் கூறும் நிலைக்கு வந்ததை எண்ணி மிகவும் வருந்துகின்றேன்" என அரசர் கூறினார்‌.

"என்ன செய்வது அய்யா? நார் சத்தில், அவரைக்காய் அவர்களும் என் மனைவியின் தமையன் வாழைக்காயும் கூட என்னிடம் போட்டியிட்டு தோற்றவர்கள். என் பயன் இந்த மானிட ஜென்மங்களுக்கு புரிவதில்லை. என்னை பற்றி புரியாது வாங்கமல் விட்டது கூட எனக்கு கவலையாக இல்லை. என் பயன் உணராத கோமாளிகளாகவே அவர்களை எண்ணினேன். ஆனால் என் பயன் உணர்ந்து வாங்கும் சில நல்லுள்ளங்களையும் இப்பெண் கலைப்பதை தான் என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதோ என் மனவை உங்கள் அனைவருக்கும் மிக செல்லமான வாழைப்பழம் வந்திருக்கின்றாள். இவளிடமே கேளுங்கள்" என பாகற்காய் கூற பணிவுடன் வந்த வாழைப்பழம் "வணக்கம் அரசரே, வணக்கம் அரசியாரே" என்றாள்.

"எங்கள் செல்வக் குமாரியே, உனக்கும் இந்த அபல நிலையா?" என மங்குஸ்தான் பழம் வினவ "ஆம் தாயே. பாவம் என் பதி. அவரை இந்த பெண்ணின் தாய் ஆசை ஆசையாக வாங்கி பிட்டலா சமைத்திருக்க 'அய்யோ கசப்பு! இதை மனிதன் உண்பானா?' என்றெல்லாம் கூறி அவமதிக்கின்றாள். என்னை தாங்கள் எப்படியெல்லாம் வளர்த்தீர்கள். இதோ இங்கிருக்கும் என் பதியின் வீட்டில் எத்தனை செல்வ செழிப்புடன் வளர்கின்றேன்? ஆனால் பூமியில் நான் வாழும் வாழ்க்கையே வெறுப்பாக உள்ளது. விசேஷ வீட்டில் தாரை தாரையாக என்னை வாங்குகின்றனரே ஒழிய, எவரும் என்னை சீண்டுவது கூட இல்லை. இதோ இந்த பெண் வீட்டில் இவளது தாய் தந்தையர் தினமும் என்னை ஒன்று சாப்பிடுகின்றனர். அந்த மட்டில் மகிழ்ச்சியாக இருந்த என்னை இவள் வெகுவாக சோதிக்கின்றாள். கடைகளில் என்னை வாங்கவே கூடாது என பிடிவாதம் பிடிக்கின்றாள். அவள் பெற்றோர் வாங்கி விட்டாலும், இவளை உண்ணக் கூறினாள் சத்தமின்றி எடுத்துவந்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுப் போகிறாள்" என கண்ணீருடன் வாழைப்பழம் கூறினாள்.

"அய்யோ செல்வ மகளே" என மங்குஸ்தான் கலங்க வெண்டைக்காய் அவர்கள் "அரசியே இன்னும் இங்கு வரமுடியாது, பணியில் இருக்கும் கொத்தவரங்காய், முட்டைகோஸ், பூசணி போன்றவர்களும் இவள் பேரில் குற்றம் சாட்டுகின்றனர். மானிட உலகிலும் ராஜாவாக வாழும் நமது உருளையவர்களே இவள் தன்னை எண்ணையில் பொரித்து சாகடித்தே உண்ணுகின்றாள் என வேதனைப்படுகின்றார். அரசே! மன்னிக்க வேண்டும், இவள் உங்களைக் கூட ஒதுக்கி தூர எறிகின்றாள். அறிவில் சிறந்தவன் என எண்ணை தாம் இப்பதவிக்கு கொண்டு வந்தீர். ஆனால் இவள் என்னை ஏரெடுத்தும் பார்ப்பதில்லை" என வெண்டைக்காய் கூறினார்.

அவளை தன் தணழ் கண்களில் சுட்டெரித்த கத்தரிக்காய் "பெண்ணே, உனக்கு ஆரோக்கியமாக வாழ ஆசையில்லையா?" என வினவ பயத்துடன் "உ..உள்ளது ஐயா" என்றாள். "பின் ஏன் இவர்களை இத்தனை தூரம் வேதனைப் படுத்துகின்றாய்? நீங்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கு நீரில் வெந்தும் எண்ணையில் பொறிந்தும் எங்களை வருத்திக் கொள்கிறோம். உங்கள் உடலில் நண்மையை ஏற்படுத்த இங்கு நாங்கள் படாத பாடு படுகின்றோம். கேட்டாய் தானே ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சத்துக்களை உள்ளடக்கியவர்கள் என்று? இங்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை வாழும் நாங்கள் உங்களுக்காக தானே பூமியில் அவதிப் படுகின்றோம்?" என வேதனையும் கோபமுமாக கூறிய கத்தரிக்காய் "மங்குஸ்தான்.. நீயே இந்த பெண்ணை என்ன செய்யலாம் என்று கூறு" என்றார்.

"அரசே! இத்தனை நேரம் இவள் நம்மை அவமானப் படுத்தியதை பற்றி தாங்கள் யாவரும் கூறினீர்கள். ஆனால் இவள் நம்மை மட்டும் அவமானப்படுத்தவில்லை. நம்மை படைத்த அந்த இறைவனான விவசாய பெருமானையே அவமானப்படுத்தியுள்ளாள். ரத்தமும் வேர்வையும் உழைப்பும் வாரி வழங்கி படைத்த நம் இறைவனின் உழைப்பை அல்லவோ இவள் அசிங்கப்படுத்தியிருக்கின்றாள்?
ஒரு படைப்பை கேவலப்படுத்துவதும், வீணாக்குவதும் அப்படைப்பை உருவாக்கிய இறைவனை அவமதிப்பதற்கே சமம். அந்த வகையில் இப்பெண் நம்மை மட்டும் அவமதிக்கவில்லை, நம் விவசாய பெருமானையும் அவமதித்துள்ளாள். ஆகவே இவளை வெண்ணீரில் வேகவைப்பதே இவளுக்கான தண்டனை" என ராணி மங்குஸ்தான் கூற யாவரும் அதையே ஒப்புக் கொண்டனர்.

"அய்யோ வேண்டாம்.. நான் இனி யாரையும் வீணாக்க மாட்டேன். யாரையும் அவமதிக்க மாட்டேன்" என கதறிய ஆரியாவை முருங்கைக்காய்கள் சேர்ந்து தூக்கிக் கொண்டுவந்து வெண்ணீரில் வீசியது. "ஆ.. வேண்டாம்" எனக் கத்திய ஆரியா பதறி எழ, அவள் முகத்தில் வியர்வை முத்துமுத்தாய் துளிர்த்திருந்தது. இரவு உணவை வீணாக்கியதற்கு அண்ணை கூறிய அகோர கதைகளின் விளைவு அவள் கனவில் பிரதிபழித்ததை புரிந்து கொண்டாள்.

வேகமாக அறையை விட்டு வெளியே வந்த ஆரியா முன் அவள் தந்தை பை நிறைய காய்கனிகளை வைக்க அதை கண்டவள் சட்டென தந்தையை அணைத்துக் கொண்டாள். "அட என்ன ரியா குட்டி?" என அவர் வினவ "நா இனிமே காய தூர எறிய மாட்டேன் ப்பா. சாரி ப்பா. நிஜமா காய் பழமெல்லாம் வேஸ்ட் பண்ண மாட்டேன்" என்றாள்.

சமையலறை வாசலில் சிரிப்புடன் இக்காட்சியை காணும் மனைவியை கண்டவர் புன்னகையுடன் மகள் தலைக்கோதி "குட் கேர்ள் டா. இனிமே பாப்பா சமத்தா எல்லா காயும் சாப்பிடனும்" என்க "கண்டிப்பா ப்பா" என தந்தையை மேலும் அணைத்துக் கொண்டாள்.


உங்கள் பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள்🥰👇

 
Last edited:
Top