எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனவலி!- கதைத்திரி

NNK34

Moderator
மனம் நிறைந்த புன்னகையுடன் தனது வானொலி நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு, தனது தலையில் கேட்பொறியினை (ஹெட்போன்) காதில் மாட்டிக் கொண்டு அவளுக்கு முன்னிருந்த அதிர்வெண் பொத்தான்களை சரிசெய்து கொண்டு கண்ணாடிக் கதவிற்கு அப்பால் இருந்த தோழிக்கு கட்டைவிரலை மேலே தூக்கி தம்ஸப் காட்டினாள், பிறைநுதழ்.


கண்களை மூடி ஓர் ஆழ்ந்த மூச்சிழுத்தவளுக்கு, மூச்சை இழுத்து வெளியேவிடும் அந்த சொற்ப நொடிகளில் நேற்றைய வாக்குவாதம் மனதில் வந்து போனது. இப்போது நடக்கவிருக்கும் இந்த நிகழ்வு சக பணியாளர் சுரேஷுடன் போட்டியிட்டு அவள் பெற்றது. அதில் அவனுக்கு இவள் மேல் அபார கோபம் தான்.


அவனோ திரை அல்லது சின்னத்திரை நடிக, நடிகையர்கள் யாரையேனும் அழைத்து அவர்களை பற்றி பேசி இடையிடையே பாட்டுக்கள் கொடுத்து ஓர் நிகழ்ச்சி நடத்த வேண்டி கேட்டிருந்தான். ஆனால் பிறை அவள் நிகழ்த்த விரும்பிய நிகழ்ச்சியை பற்றிய குறிப்பை கூறி அனைவரையும் தன்புறம் திரும்பியிருந்தாள்.


அந்த காரசார நிகழ்வினை மூச்சுடன் சேர்த்து வெளியேற்றியவள் அதிர்வெண் பொத்தான்களை மீண்டும் சரிபார்த்து 'ஏர் ஆன்' என்ற பொத்தானை அழுத்திவிட்டு துப்பாக்கியிலிருந்து உந்தித் தள்ளப்பட்ட தோட்டாவாக பேசத் துவங்கினாள்.


"ஹாய் ஹெல்லோ நா உங்க ஆர்.ஜே.பிறை நீங்க இப்போ கேட்டுட்டு இருக்குறது 93.5 மனதிற்கு போடாதீங்க கேட்டு(gate) கேட்டு மகிழுங்க ஒரு பாட்டு.. இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியோட சிறப்பே இது தான்.. மனதிற்கு போடாதீங்க கேட்டு.. உங்க மனசுல யாரிடமும் பகிர முடியாத நிறைய சோகமான தருணங்கள் இருக்கலாம், அல்லது வெளிய சொல்லிக் கொள்ள முடியாத வலிகள் இருக்கலாம். அதை இன்னிக்கு யாருனே தெரியாத என்னோட பகிர்ந்து உங்க மனபாரத்தை குறைச்சுக்கோங்க. அடடே கூட இருப்பவர்கள்கிட்டயே சொல்ல முடியாது. நீ என்னம்மா கேக்குறனு சில கெடா மீசைகளும், தடால் இளைஞர்களும் நினைக்குறது எனக்கு கேட்குது.. ரொம்ப திட்டாதீங்க ப்பா.. ஹெட்போன்ஸ் உடஞ்சுட போகுது" எனக் கூறி சிரித்துக் கொண்டவள்,


"நீங்க உங்க பெயரையோ உங்களை பற்றிய குறிப்புகளையோ இங்க பகிர்ந்துகொள்ள வேணாம். உங்க குரல் கூட கேட்கும் மற்றவர்களுக்கு வேறு குரலாதான் கேட்க போகுது.. அதனால பேசுவோம் மனம் விட்டு

இனி இதயத்துக்கு இல்ல கேட்டு" என்றாள்.அவளது வேகமான பேச்சில் அத்தனை உயிரோட்டமும் அவளது மலர்ந்த முகத்திலிருக்கும் சந்தோஷத்தின் சாரலும் கேட்போர் காதுகளெங்கும் எதிரொலித்தது.


"ஓகே நம்ம முதல் காலர் யாருனு பாப்போம்.. ஊப்ஸ்.. யாருனு சொல்ல முடியாதோ?? அப்ப நம்ம முதல் மனக்கதவினை பாப்போம்" என்றவள் அழைப்பை ஏற்று "ஹலோ சொல்லுங்க நான் உங்க ஆர்.ஜே.பிறை" என அவள் கூற "ஹாய் ஆர்.ஜே மேம்.. இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு. முக்கியமா என்னைபோன்ற இல்லத்தரசிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்" என அந்த முகமறியா பெண்மணி கூறினார்.


"நிச்சயமா உங்களுக்கு இதவொரு வடிகாலா இருந்தா மிக்க மகிழ்ச்சி. அப்றம் என்னை மேம்லாம் சொல்லவேணாம் பிறைனே கூப்டலாம்" என்றவள் "சரி சொல்லுங்க.. உங்க வாழ்க்கையில் பகிர முடியாத சோகம் என்ன?" என்று வினவினாள்.


"அதான் முதல்லயே சொன்னேனேமா இல்லத்தரசினு.. அதுதான் என்னுடைய பகிர முடியாத சோகம். என் அப்பா அம்மாவுக்கு நா ஒரே பொண்ணு. எங்கெங்கயோ அனுப்பி எப்படி எப்படியோ படிக்க வைச்சாங்க‌. இன்னிக்கு என் பீரோவுக்குள் துணிகளுக்கு இடையே தூங்குற என் பட்டங்கள் நா பீரோவை திறக்கும் நொடியெல்லாம் என்னை பார்த்து கைகொட்டி சிரிக்குது. நா வாழுறது கூட்டு குடும்பத்துல. என்னால நினைச்சாலும் வேலைக்கு போகமுடியாது"


"சரி குடும்பமே வாழ்க்கைனு வீட்டில் இருந்தாலும் கணவரோட தோழர்கள் குடும்பமா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னையும் நான் கட்டியிருக்கும் கரைபடிந்த புடவையையும் ஏற இறங்க பார்க்கும்போது உலகமே உடையுற போல இருக்கும். அவர்கிட்ட சொல்லவும் முடியாது. நாதான் உன்னை வேலைக்கு போனு சொல்லிட்டேனே பிறகு என்னனு கேப்பார். மூனு அண்ணன் தம்பிகள் குடும்பத்தோட ஒரே வீட்டில் குடியிருக்கோம். வயதான மாமனார் மாமியார். நானும் என் கடைசி கொழுந்தரோட மனைவியும் தான் எல்லாமே செய்வோம். ரெண்டாவது கொழுந்தரோட மனைவி கிடையாது"


"ஸ்கூல் காலேஜ்னு படிக்குற ஆறு பிள்ளைகள். இந்த கூட்டத்தில் எனக்குனு நா எப்படி வேலைக்கு போக முடியும்? ஆனா இதையெல்லாம் சொன்னா அவர் புரிஞ்சுக்குறதில்லை. அடிக்கடி சவுக்கடியா வீட்ல தான இருக்க, சும்ம தானே இருக்கனு நாலு வார்த்தையும் வரும். தாய்மை அப்படிங்குற ஒன்னு தான் ஒரு கட்டத்திற்கும் மேல பெண்களை புகுந்த வீட்டுல தங்க வைக்குது. இல்லைனா இதுபோன்ற ஏக்கங்களுக்கும் வலிகளுக்கும் பின்னே எந்த பொண்ணும் வாழ விரும்ப மாட்டா" என்றார்.


அத்தனை உருக்கமாக அவர் பேசியதில் பிறை ஒருநொடி பேச்சற்று தான் போனாள். தன்னை சமன் செய்து கொண்டவள் "உங்க கஸ்டம் புரியுது ம்மா. நிச்சயம் எல்லா ஹவுஸ் வைஃபும் இதை சந்திச்சுட்டு தான் இருக்காங்க. இப்ப உங்க கணவர் தரும் வலிய உங்க பிள்ளைகள் நாளைய தங்கள் இணைக்கு கொடுக்காம இருக்க இப்பவே உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உங்க பிள்ளைகளிடம் உதவி கேளுங்க. இப்பவுள்ள பிள்ளைகள் அட்வான்ஸ் டெக்னாலஜி அறிந்த பிள்ளைகள். நிறைய ஆன்லைன் ஜாப்ஸ் வந்துடுச்சு. உங்க துறைசார்ந்த வேலையை வீட்டுலயே அலைபேசி மூலமா நேரம் கிடைக்கும்போது செய்யுங்க. உங்க மனதில் கடைசி வரை இந்த ஏக்கம் இருக்க வேணாம்‌. இந்த நிலை மாற நாங்க எல்லாரும் வேண்டிக்குறோம் மா நன்றி" என்றாள்‌.


மேலும் அடுத்த அழைப்பை ஏற்றாள். ஓர் ஆணின் கரகரத்த குரல்.. "எ..என் மனைவி உயிரோட இல்ல ம்மா. இரண்டாவது திருமணம் செய்துகொள்ள மனசும் இல்லை. எனக்கு ஓரே ஒரு பெண்குழந்தை. ஒரு பெண்குழந்தைக்கு அம்மாவோட ஆறுதல் தான் ரொம்ப முக்கியம். என் மக பூப்பெய்தினதுக்கு பிறகு அவளுக்கு விசயங்கள எடுத்த சொல்லகூட எனக்கு முடியலை. எப்படி சொல்லுறதுனு ஏதும் தெரியலை. என் அம்மாகிட்ட விட்டேன்"


"அவங்களுக்கு என் பொண்ண அவ்வளவா பிடிக்கலை. அவங்ககிட்ட அவ நிறைய வசவுகள் வாங்கி எனக்காக அமைதியா அழுது கலங்கி நிக்கும்போதெல்லாம் என் மனைவிய நினைச்சு துடிப்பேன். அவளுக்கு பதிலா கடவுள் என்னைய எடுத்திருந்தா கூட எம்பொண்ணு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருப்பா.. கூலி வேலை பாக்குற எனக்கு அவகூட செலவழிக்க கூட நேரமில்லை. அத நினைச்சு யார்கிட்டயும் சொல்லவும் முடியாம அவ்வளவு பாரமா இருந்தது" என்றவர் இறுதியில் முடிக்கையில் அவர் குரல் முற்றிலும் உடைந்து போனது.


தன் கண்ணீரை மெல்ல துடைத்துக் கொண்ட பிறை "உங்க கஷ்டம் புரியிது சார். ஆனா உங்க கவலையை நீங்களே தான் போக்கிக்க முடியும். இப்ப காலம் எவ்வளவோ மாறிப்போச்சு. ஒரு தகப்பனா உங்க மகளுக்கு நீங்க அவளுடைய உடலையும் ஹார்மோனையும் பற்றிய புரிதலை தான் விளக்கப்போறீங்க. இதில் தவறும் வேணாம் தயக்கமும் வேணாம். வேலைக்கு போனாலும் இரவு உணவு உண்ணும் தருணத்தை மட்டுமாவது உங்க மகளுடன் செலவழிக்க முயற்சிங்க சார். எல்லாமே மாறும்" என்றாள்.


அடுத்தடுத்து அழைப்புகள் வந்தன. அவள் அதனை ஏற்க "நா ஒரு டீகடையில வேலை பாக்குறேன்மா. எ..எனக்கு பைல்ஸ் இருக்கு. வேலைக்கு லீவு கேக்கும்போது உடம்பு முடில உடம்பும் முடிலனு தான் கேப்பேன். எப்போபாரு என்னமா உடம்புக்கு முடியலனு ஓனர் கேக்கும்போது பதில் சொல்ல அவ்வளவு கூச்சமா இருக்கும். கொஞ்ச வருசம் முன்ன இதுபத்தி நா யார்கிட்டயாவது பகிரும்போது கேலியா பாக்குறதும் நக்கலா சிரிக்குறதும் எனக்கு அவ்வளவு மனவேதனைய தந்துச்சு"


"அதுவும் கட்டி மாதிரிதேன்.. ஆனா அது இருக்குமிடத்துனால இவ்வளவு கேலி கிண்டல். ஒவ்வொரு நேரம் முடியாம அழுதுகிட்டு கிடக்கையில எம்மவன் பதறிகிட்டு வந்து என்னம்மானு கேக்கும். அவன்‌கிட்ட கூட சொல்ல முடியாம தவிப்பேன். நோய் கூட வெளிய வாய்விட்டு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இங்க பைல்ஸ், எய்ட்ஸ், மார்பக புற்றுநோய், பீரியட்ஸ் வலி எல்லாம் இன்னுமும் வெளிய சொல்ல முடியிறதில்லை. நோயக்கூட கேலிபொருளா மாத்தினத நினைச்சு ரொம்ப வேதனையா இருக்கு ம்மா"

என்றவர் பேச்சிலேயே அவர் அழுதுகொண்டே பேசியது தெரிந்தது.


"நீங்க ஒன்னும் கவலை படாதிங்க ம்மா. உங்க உடம்பை நல்லா பாத்துக்கோங்க. உங்க பையன் வந்து என்னனு கேட்கும்போது இதுதான்பானு சொல்லுங்க. நீங்க அனுபவிக்கும் வேதனைய அவனுக்கு சொல்லுங்க. அப்பதான் உங்களை யாரோ காயப்படுத்தின மாதிரி அவன் வளர்ந்து வேற யாரையும் காயப்படுத்த மாட்டான். நாம்தான் மாற்றத்திற்கு முன்னோடியா இருக்கனும். இதை கேட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களும் இந்த தவறை இனி செய்யமாட்டாங்க ம்மா" என்றாள்.


அடுத்தடுத்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது. பெற்றோரை இழந்து சொந்தங்களின் விதியே என்ற அரவணைப்பில் வாழும் பிள்ளைகள், குழந்தைகளற்று சொந்தங்களின் ஏச்சு பேச்சுக்களை தாங்க முடியாமல் வாழும் தம்பதியினர், வயது ஏறிக் கொண்டே போனபிறகும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் மற்றும் பெண்களின் அவல நிலை, உடல் நலமற்று குண்டாகியதை புரிந்துகொள்ளாமல் கேலி செய்யும் வேதனை, கருப்பாக இருப்பதால் கேலி செய்யும் வேதனை, பிள்ளைகளால் முதியோர் இல்லத்திற்கு தள்ளப்பட்ட முதியவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் மனதின் பகிரமுடியா பக்கங்களை கிழித்து அவளது நிகழ்ச்சியில் வீசிக் கொண்டிருந்தனர்.


நிகழ்வு முடியும் நேரத்தில் கடைசியாக ஓர் அழைப்பு வரவே அதை ஏற்றவள் "சொல்லுங்க தோழரே நான் உங்கள் ஆர்.ஜே பிறை. இது மனதிற்கு வேணாம் கேட்டு (gate) கேட்டு மகிழுங்க பாட்டு. உங்க மனக்குறைகளை சொல்லுங்க" என்க "நா மனக்குறைய பகிர வரலைங்க. உங்கிட்ட ஒன்னு கேக்க தான் வந்தேன்" என்றார் ஒருவர்.


"தாராளமா கேளுங்க" என அவள் கூற "எல்லாரிடமும் கேட்டீங்களே உங்ககிட்ட அப்படி எந்த பகிராத பக்கங்கள் இல்லையா?" என்று வினவினான். அதில் கலகலவென சிரித்தவள் "ஏன் இல்லை. யாரிடமும் சொல்லாத ஒரு பக்கம் என்கிட்டயும் இருக்கு" என்றவள் "எனக்கு ஃபோர்த் ஸ்டேஜ் யூட்ரஸ் கேன்ஸர் இருக்கு. அதனால அடுத்த வாரம் வரைதான் என் உயிருக்கு கெடு விதிச்சிருக்காங்க" என புன்னகையுடன் கூறினாள்.


அதில் கேள்வி கேட்டவர் மட்டுமின்றி அவளது நிறுவனம், நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தோர் என யாவரும் அதிர்ந்து போகினர்!!

"அ..ஆ..பி..பிறை" என கேள்வி கேட்டவர் தட்டுத்தடுமாறி "உங்களுக்கு வருத்தமா இல்லை?" என்று வினவ "ஒரு வருடம் முன்னமே எனக்கு என் இறப்பு நெறுங்கியது தெரியும்.. இருக்கப்போற ஒரு வருடத்தை என் ஆசைபடி என் விருப்பம்படி நா வாழ்ந்துட்டேன். நேற்று தான் என் வாழ்நாள் கெடுவை மருத்துவமனைல சொன்னாங்க. எதிர்பாராம வரும் இறப்பு தான் பயம் கொடுக்கும். இது எனக்கு தெரிஞ்சது தானே? எல்லாருக்கும் ஒருநாள் இறப்பு வரும். அதையேவா நினைச்சுட்டு பயந்து வீட்டுக்குள்ளயே இருக்கோம்? இருக்கும் காலத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் மலர்ந்து சிரிக்கும் நம்ம புன்னகை மட்டும் தான் நமக்கு கைகொடுக்கும். வருந்தி இருக்கும் காலத்தையும் சோகத்தோட கழிக்காம எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டேன். இந்த சந்தோஷத்தை விட வேற என்ன வேணும்?" என்றவள் "இந்த கேள்வியை என்னிடமே திரும்ப கேட்டதற்கு ரொம்ப நன்றி" என்றுவிட்டு ஓர் பாடலை ஓடவிட்டாள்…



பளபளக்குற பகலா
நீ

படபடக்குற அகலா நீ

அனல் அடிக்கிற துகளா நீ

நகலின் நகலா நீ


மழையடிக்கிற முகிலா

நீ
திணறடிக்கிற திகிலா நீ

மணமணக்குற அகிலா நீ

முள்ளா மலரா நீ


சூடாக இல்லாவிட்டால்

இரத்தத்தில் வேகம் இல்லை

சேட்டைகள் இல்லாவிட்டால்

இனிமை இல்லை


கூட்டை தான்

தாண்டாவிட்டால்

வண்ணத்துப்பூச்சி இல்லை

வீட்டை நீ தாண்டாவிட்டால்

வானமே இல்லை


வானவில்லை போலே

இளமையடா தினம் புதுமையடா

அதை அனுபவிடா


காலங்காலமாக

பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா

நீ முன்னே முன்னே வாடா வாடா…



உங்கள் பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கருத்துத் திரியில் தெரிவிக்கவும் தங்கம்ஸ்🥰

 
Last edited:
Top