எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

மின்னலடி உன் பார்வை-3

Status
Not open for further replies.

L.keerthana

Moderator
பார்வை-3

எப்போதுமே அலாரம் அடிக்காமல் சுயமாகவே எழும்பி பழக்கமுற்ற ஆதிரை, எங்கோ தூரத்தே ஒலித்த ஹாரன் சத்தம் கேட்டு விழித்து, கையை நீட்டி கைப்பேசியை எடுத்து மணி பார்க்க, அது மணி ஐந்தை காட்டியது. எழுந்தவள் மெதுவாக காலைக்கடனை முடித்து விட்டு வழைமைபோல காப்பகத்தில் கற்றுக்கொண்ட சில யோகா ஆசனங்களையும் செய்துவிட்டு நடை பயிற்சிக்கு கிளம்பினாள்.

இங்கு வந்த மறு தினம் காப்பகத்தைப் போலவே இங்கும் அவளது உடற் கடிகாரமே சரியாக ஐந்து மணிக்கு எழுப்பி விட, அறையை விட்டு வெளியில் வந்தவள் வீட்டில் எந்த அரவமும் இல்லாதிருக்கக் கண்டு தன் அறைக்கே திரும்பி சென்றிருந்தாள். பின் விசாரித்த போது இங்குள்ள குளிர் காரணமாக ஆறு மணிக்கு பிறகே தாங்கள் வேலையை ஆரம்பிப்பதாகவும் ஏழு மணிக்கு காலை டீ அல்லது காப்பி அவரர் தேவைக்கேற்ப தயாரித்து கொடுப்பதாகவும் காவேரி அக்கா தெரிவித்திருந்தாள்.

அன்றிலிருந்து காலை ஆறு மணிக்கு பிறகு ஸ்வெட்டர் , ஸ்கார்ஃப் சகிதம் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த அந்த அழகிய நடை பாதையில் நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் ஆதிரை.

அன்றும் வழைமை போல நடந்து விட்டு, அன்றைய தினம் புதிதாக பூத்த பூக்களையும் பார்த்து ரசித்துவிட்டு, வீட்டிற்குள் செல்ல திரும்பியவளின் எதிரே மிக அருகில் கண்களில் கூர்மையும் உதட்டில் இளமுறுவலுமாக நின்றிருந்த ஒரு நெடியவனைக் கண்டு திகிலடைந்து இரண்டெட்டு பின்னடைந்தாள்.

இந்த அதிகாலை வேளையில் இப்படி தனியாக நடப்பது தவறோ என எண்ணியவள், ‘இந்த தோட்டக்காரனை எங்கே காணவில்லை’யென கண்களால் துலாவினாள். ‘இல்லை இதை நாம் தான் டீல் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் இனிவரும் நாட்களில் இங்கே எப்படி தைரியமாக வேலை செய்வது’ என தன்னைத் திடப்படுத்திக்கொண்டு,

“யாரு சார்... நீங்க?.... உங்களுக்கு யாரு வேணும்?... இவளோ காலைல யார பார்க்க வந்து இருக்கீங்க..?” என கேள்விகளை அடுக்கினாள்.

அந்த நெடியவனோ அவளது கேள்விகளுக்கு பதில் சொல்லாது அவளையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருக்க,

‘ஒரு வேள.... கா..து கேக்காதோ....?’ என நினைத்தபடி சைகை மொழியில் அவனிடம் இதே கேள்வியைக் கேட்டாள்.
அவளது செயலில் பக்கென சிரித்தவன் ,

“எனக்கு காது நல்லாவே கேட்கும்” என்றான் நக்கலுடன்.

அவனை முறைத்து பார்த்தவள், “ஹலோ மிஸ்டர்..... என்ன நக்கலா..... இங்க எல்லாம் இப்படி வர கூடாது.... மொதல்ல வெளிய போங்க..” என்றாள் குரலில் கடுமைகாட்டி.

‘பரவால்ல உஷாரா தான் இருக்கா..’ என நினைத்தபடி,

“நான் அகிலாண்டேஷ்வரி மேடம பார்க்கணும்..” என்றான் வந்தவன் போலியான பணிவுடன்.

“அத தானே நீங்க முதல்லயே சொல்லி இருக்கணும்”என்று விட்டு,

“இவ்ளோ.... காலைல எல்லாம் அம்மாவ பார்க்க முடியாது.. போய்ட்டு பத்து மணிக்கு மேல வாங்க..” என்றாள் சற்று காட்டமாக.

“அப்போ அஜய் சார பார்க்கலாமா மேடம்..?” என அவனும் விடாமல் கேட்க,

“அது..... அஜய் சார கேட்டுட்டு தான் சொல்ல முடியும். நீங்க யாரு என்னன்னு இன்னும் சொல்லயே..” என அவனுக்கு குட்டு வைத்தாள்.

ஜாகிங் செய்துவிட்டு திரும்பிய அஜய் வெளியே அவளது குரல் வந்த திசையை நோக்கி, என்னவென்று பார்க்க வந்தவன்,

“அண்ணா....குட்மார்னிங்.....” என வந்து அவனை அணைத்துக் கொள்ள,

“ஏது.... அண்ணாவா ?..”என அதிர்ந்து விழிகளை விரித்தாள் ஆதிரை.

“ஏர்லி மார்னிங் வந்ததால கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பீங்க.. கொஞ்சம் லேட்டா பாக்கலாம்னு நினைச்சேன்” என்றான் தொடர்ந்து அஜய்.

‘ஆக காலையில் இவன் வந்த கார் ஹாரன் சத்தம் கேட்டு தான் நாம் விழித்தோமா’ என்ற சிந்தனை உள்ளே ஓட அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள் ஆதிரை.

அவளது விரிந்த விழிகளை புன்னைகையுடன் பார்த்துக் கொண்டே,

“அப்புறம்.. நான் இல்லாம இந்த டூ வீக்ஸ் நல்லா என்ஜாய் பண்ணினாயா?” என அஜயிடம் கேட்டுவிட்டு தனது தம்பியின் தோள்களை தனது வலது கரத்தால் வளைத்துகொண்டான் அண்ணனான ஆதவன்.

“அண்ணா ....நீங்க இல்லனா எனக்கு ஒவ்வொரு நாளும் மலையை நகர்த்துற மாதிரியே இருக்குது.....இதுல என்ஜாய்மெண்ட் மட்டும் தான் குறைச்சல் ... ப்பா... இனிதான் நிம்மதி” என மலைப்பில் ஆரம்பித்து ஆசுவாசத்துடன் முடித்தான் அஜய்.

“கம்ஒன்... அஜய்...எவளோ நாள் என்னையே டிபென்ட் பண்ணி இருக்க போற.... எல்லாத்தயும் தனியா ஹாண்டில் பண்ண பழகு” என்றான் கனிவாக.

அவனும் “ம்ம்ம்.. ஐல் ட்ரை மை பெஸ்ட்” என தலையை ஆட்டினான் அஜய்.

ஆசிரமத்தில் வளர்ந்த ஆதிரைக்கு இந்த அண்ணன் தம்பி பாசம், குறிப்பாக தாயை பிரிந்த கன்று போல் அஜய் ஆதவனிடம் ஒட்டிக்கொண்டதை பார்க்க சற்று கூச்சமாக கூட இருந்தது.

அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த ஆதிரையை நோக்கி திரும்பிய ஆதவன்,

“பரவால்ல..அஜய்..கல்கி மேடம்..... உன்கிட்ட சொன்ன மாதிரியே ஆதிரை.. கொ...ஞ்...சம்... பொறுப்பான பொண்ணு தான்” என்றான் அடக்கபட்ட சிரிப்புடன்.

அவனை யோசனையுடன் பார்த்த அஜய் “இப்ப தான.. பார்த்தீங்க....அதுக்குள்ள எப்படி கண்டுபிடிச்சீங்க?..”என ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டான்.

“அதுவா........”என விஷம புன்னகையுடன் எதையோ சொல்ல தொடங்க,

ஆதவனை பார்த்த ஆதிரை, ‘ஐய்ய.. வேண்டாமே’ என்பது போல் கண்களால் அவனிடம் கெஞ்ச,

“அப்படி என்ன டெஸ்ட் அண்ணா வச்ச?..”என கேட்ட அஜய் “என்னவோ போ.... எனக்கு ஒன்னுமே புரியல” என அலுத்துக் கொண்டான்.

“எல்லாம் போக போக புரியும்” என அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு, அஜயின் தோள்களில் கையை போட்டவாறு வீட்டின் உள்ளே சென்றான் ஆதவன்.

அவனது இந்த செய்கை அவனுக்கு இயல்பானதோ என்னவோ அவளுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. திகைத்து விழித்துக் கொண்டிருந்த ஆதிரை உடனே தலையை குலுக்கிக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தாள்.

அஜய், ஆதிரையுடன் வீட்டின் உள்ளே வந்த ஆதவனை பார்த்த அகிலாண்டேஷ்வரி,

“ஆதி.. எப்பப்பா வந்த..? இப்போதான் முருகன்கிட்ட நீ வந்துட்டியானு கேட்க நினைத்தேன்” என சொல்ல ,

“ம்மா.... ஏர்லி மார்னிங் தான் வந்தேன்..... உங்களயும் அஜயையும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு முருகனுக்கு கால் பண்ணி கதவ தொறக்க சொல்லி உள்ள வந்துட்டேன்” என்றான் புன்னகையுடன். முருகன் சற்று வறுமை நிலையிலுள்ள அவர்களுடைய தூரத்து உறவு பையன். அவர்களின் உதவியுடன் குன்னூர் கான்வென்டில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் வரை அங்கேயே தங்கி இருப்பவன்.

அவனது பயணம் குறித்த விசாரணை, மற்றும் இங்குள்ள விபர பகிர்வுமாக அவர்களது காலை காப்பி நேரம் கழிய, அவள் டைனிங் அறைக்கு சென்று டீயை குடித்து விட்டு, தன்னறைக்கு சென்று உடை மாற்றி திரும்பி வர, அதே நேரம் அஜயும் வெளியே செல்ல தயாராகி கீழே வந்திருந்தான்.

அப்போது வித்தியாசமான மென்மையான பர்ஃப்யும் வாசனை ஒன்று அவள் நாசியை வருடி செல்ல நிமிர்ந்தவள், மாடிப்படிகளில் வெண்ணிற முழுக்கை சட்டையின் கையில் பொத்தான்களை சரிசெய்து கொண்டே, தடதடவென இறங்கி வந்த ஆதவன், தன் தோளில் கிடந்த கோர்ட்டை அங்கிருந்த சோஃபா மீது வீசுவதுவரை மூச்சுவிட மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் அணிந்திருந்த இள நீல நிற பாண்ட் அவனது உயரம் ஆறடியை விட அதிகமென காட்ட, ஜெல்லிட்டு வாரியது போன்ற சிகை, டிரிம் செய்யப்பட்ட தாடி என அவனது அலட்டலற்ற இயல்பான அவனுக்கென்றே பொருந்திப் போன அசாத்திய கம்பீரத்தையும் பார்த்து, “ஊப்ஸ்” என அதுவரை வெளிவிட மறந்த மூச்சை வெளிவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கி தன்னை சமன் படுத்திக்கொண்டாள்.

இது எதையும் அவதானிக்காத அஜய் டைன்னிங் ஹால் செல்ல தொடங்க,

“எங்கப்பா ஒருத்தரையும் காணோம்....” என்று வந்த அகிலாண்டேஷ்வரி,

“வாங்கப்பா சாப்பிடலாம்”என அவர்கள் இருவரையும், “நீயும் வா... மா..” என ஆதிரையையும் அழைத்தார்.
அவர்கள் இருவரும் முன்னே சென்று விட,

“எனக்கு பசிக்கல...மா... நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்” என்றாள் மெதுவாக அவருக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

அவனுடன் அமர்ந்து சாப்பிட அவளுக்கு சங்கடமாக இருந்தது. மற்ற இருவரும் அவளை அந்த குடும்பத்தில் ஒருத்தி போலவே இத்தனை நாட்களாக நடத்தியிருக்க முதல் ஓரிரு தடவைகள் தவிர பிறகு தயக்கம் களைந்து இயல்பாக உணவருந்தினாள்.

ஆனால் இன்று அவனே முதலாளி எனும் பட்சத்தில் இதை எப்படி எடுத்துக்கொள்வானோ என்று தயக்கமாகவும் இருந்தது. சந்தித்து இந்த சிறிய நேரத்தில் அவன் அவளிடம் கடுமை காட்டினான் என்பதற்கில்லை. சொல்லப்போனால் கேலியாகவும், கனிவாகவுமே நடந்து கொண்டான். கொஞ்சம் கூடுதல் கனிவோ?.... என்று அவள் தயங்கிக் கொண்டிருக்க,

“அட... வா.. மா” என அவளது கையை பிடித்து அழைத்து வந்து அங்கு முன்னமே அமர்ந்து சாப்பிட தொடங்கி இருந்த ஆதவனின் எதிர்புற இருக்கையில் அமர வைத்து, கவேரியை உணவை பரிமாற சொல்லி “சாப்பிடு ஆதிரை” என்றார்.

அவளும் மெதுவாக சாப்பிட ஆரம்பிக்க, அதே சமயம் அவளையே மென்மையாக, ஒரு இளம் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்த ஆதவனிடம்,

“அண்ணா.... அமர் கால் பண்ணானா?” என கேட்டான் அஜய் சாப்பிட்டபடி.

அவளில் இருந்து பார்வையை திருப்பிய ஆதவன்,
“ஆமாடா... டூ டேஸ் பாக் கால் பண்ணான் .....அவனோட ஃபைனல் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சிருச்சாம்.... இன்னும் ஒன் வீக்ல வந்துருவேன்னு சொன்னான்” என்றான் ஆதவன்.

“ரொம்ப சந்தோஷம்... ஆது கண்ணா... என்னோட பிள்ளைங்க மூணு பேரும் என் கண் முன்னாலேயே இருக்கணும்.... அது தான் எனக்கு வேண்டும்..” என்றார் ஆகிலாண்டேஷ்வரி கண்ணோரம் துளிர்த்த கண்ணீருடன்.

“எமோஷனல் ஆகாதீங்க அம்மா.. நாங்க எப்பவும் உங்க கூட தான் இருப்போம்..” என்றான் அஜய்.

“உங்க இரண்டு பேரையும் பத்தி எனக்கு கவலை இல்லப்பா.. உங்க இரண்டு பேருக்கும் விட்டு குடுக்குற குணம் ரொம்பவே இருக்கு....என்னோட கவலை எல்லாம் அமர் பத்தி தான்....அவன் ரொம்ப பிடிவாதக்காரனாச்சே.... நினைச்சதை சாதிக்குற ரகம்... இதோ இந்த ஐஞ்சு வருஷமா இன்னமும் என்கூட பேசாமதானே இருக்கான்.. எல்லார் முன்னலாயும் வச்சி அடிச்சேன் தான்.. ஏன் ஒரு அம்மாவா எனக்கு அந்த உரிம கூட இல்லயா? ” என்றார் கண்ணீருடன்.

“அம்மா... அப்போ அவனுக்கு சின்னவயசு.. இப்போ வயசுக்கு ஏத்த மெச்சூரிட்டி வந்திருக்கலாம் ...எல்லாம் ஓகே ஆகும்.. பீல் பண்ணாதீங்க” என இடது கையை நீட்டி அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினான் ஆதவன்.

தனது ஃபோன் திரையில் நேரத்தைப் பார்த்தவன் “அம்மா கிளம்பணும்......”என கை கழுவ சென்றான்.

ஏற்கனவே அங்கு கை கழுவ சென்றிருந்த அஜயிடம் ஏதோ ஜோக் ஒன்றை சொல்லி சிரித்து கொண்டு இருந்தாள் ஆதிரை.

“என்ன ஜோக்.... சொன்னா நானும் சிரிப்பேனே ..” என அவர்கள் அருகே வந்தான் ஆதவன்.

அவனை கண்டவுடன் அவளது சிரிப்பு சட்டென்று நின்றது.

“ஏன்.... என்ன ஜோக்ன்னு என்கிட்ட சொல்ல கூடாதா ஆதிரை.....? ம்ம்ம்..” என கேட்டான்.

“அண்ணாவும் என்ன மாதிரி ஜாலி டைப் தான் ஆதிரை.. அவர்கிட்டயும் நீ ஃப்ரீயா பேசலாம்” என்று அஜய் கூற.

“ம்ம்ம்..” என தயக்கத்துடன் தலையை ஆட்டியபடி அவள் வெளியேற, செல்லும் அவளது முதுகையே சற்று

யோசனையுடன் பார்த்து கொண்டிருந்த ஆதவன் அஜயிடம் திரும்பி “நாம கிளம்பலாமா?” என கேட்டான்.

“ஓ...கே.... அண்ணா.....ஆனா ஆதிரைக்கு இன்னும் ஜாப் டிஸ்கிரிப்ஷன் தரலயே?.. அவ இன்னும் டியூட்டி ஸைன் பண்ணல” என்ற அஜயிடம்,

“ம்ம்..” என நெற்றியை தடவியவன் “அஜய் இன்னைக்கு ஆபீஸ் போய், நம்ம வேலைய கொஞ்சம் பார்ப்போம்..... நாளைல இருந்து ஆதிரைக்கு ஒரு பத்து நாள் ட்ரைனிங் ஏற்பாடு பண்ணிருக்கேன்.... அண்ட் அதபத்தி ஈவ்னிங் டிஸ்கஸ் பண்ணுவோம்..” என்று அவன் சொல்ல கேட்டுக்கொண்டே அஜயும் ஆதவனும் அங்கிருந்து கிளம்பினர்.

டைன்னிங் ஹாலில் இருந்து தனது அறைக்கு வந்த ஆதிரைக்கு ஏனோ பட படப்பாக இருந்தது. அஜயிடம் இயல்பாக பேச முடிந்த தன்னால் ஏன் ஆதவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை என சிந்தித்தவளுக்கு அதற்கான காரணம் பிடிபடவில்லை.

அவனது பார்வை அடிக்கடி தன்னில் படிந்து மீள்வதையும் உணர்ந்தே இருந்தவள், அன்று காலை அவனே முதலாளியென்று அறியாமல் அசட்டு தனமாய் நடந்து கொண்டதை நினைத்து வெட்கினாள். வந்து ஒரு வாரமே ஆன நிலையில் கொஞ்சம் அதிகப்படியாகத் தான் நடந்து கொண்டோமோ? அவன் தன்னை என்னவென்று நினைத்திருப்பான்? என்றெல்லாம் எண்ண அலைகளால் ஆட்கொள்ளபட்டவள்,

‘இப்படியே எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பது’ என நினைத்தபடி கீழே சென்று சற்றும் முற்றும் பார்த்தாள்.

‘அப்பாடா போய்ட்டாங்க’ என நினைத்தபடி வெளியே சென்று தோட்டத்தில் உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். மலைப்பாங்கான அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த தோட்டமும், தூரத்து மலைகளும் அழகு தான் என்றாலும் இன்றைய மனநிலை அதில் லயிக்க விடவில்லை.

மறுபடியும் காலை சம்பவங்கள் மனதில் ஓட, அவனது கனிவிற்கான காரணம் ஒருவேளை அவளது நிலை குறித்த பரிதாபமோ?என்று சந்தேகம் எழ, அந்த எண்ணமே அவளுக்கு கசந்தது. அவள் ஒருபோதும் தன் நிராதரவான நிலை குறித்து வருந்தியதில்லை. அதைவிட தனக்கு கிடைத்த ஒரு பாதுகாப்பான கூடாகவே கல்கி காப்பகத்தை கருதினாள். முடிந்தவரை தன்னையும் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்வாள். கல்கி இவளை இந்தளவு நேசிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

காப்பகம் நினைவு வர, கல்கி தொடங்கி ஒவ்வொருவராக அவள் மனதில் வலம் வர இலக்கின்றி வெறித்தவாறு அமர்ந்திருந்தவளை, அருகே யாரோ அமர்வதை போன்ற உணர்வு திரும்பி பார்க்க வைத்தது.

அவள் அருகே அமர்ந்து இருந்த ஆதவனை பார்த்ததும் அவளது விழிகள் அகன்று, இது கனவா? அல்லது நிஜமா? என அவள் மனது பட்டிமன்றம் நடத்த,

அவளை திரும்பி பார்த்தவனோ ‘என்ன’ என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.

ஒன்றும் இல்லை என்பது போல் “ம்ஹூம்” என வேகமாக தலையை ஆட்டினாள்.

காலையில் இவன் வந்த BMW X5 காரஜில் நின்று கொண்டிருக்க, அஜயின் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மஞ்சள் நிற ஜீப்பிலேயே இருவரும் ஆபீஸ் சென்றிருந்தனர். இப்போது கார் வந்த சத்தமும் கேட்கவில்லை.... இது கனவே தானோ என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அவன் கையிலிருந்த சற்று தடிமனான பைல் ஒன்றை இருவருக்கும் இருந்த இரண்டடி இடைவெளியில் சொத்தென்று போட்டான்.

அந்த சத்தம் உண்மையிலேயே வந்திருப்பது அவன்தான் என அவள் மூளைக்கு செய்தி அனுப்பி அவளை விழிப்பு நிலைக்கு கொண்டுவந்தது.

என்ன பேசுவதென அவள் விழித்து கொண்டிருக்க, அவனோ அந்த கல் பெஞ்சின் சாய்வு பகுதியில் அவனது இடது கையை நீட்டி இலகுவாக சாய்ந்து அமர்ந்து கொண்டு,

“அப்புறம்.... ஊர் எப்படி?....பிடிச்சிருக்கா?..” என அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“ம்ம்..” என தலை அசைத்தாள்.

“கல்கி மேடம்.. அண்ட் ஹோம ரொம்ப மிஸ் பண்...றியா.. சாரி மிஸ் பண்றீங்களா? என்றான் தன்னை திருத்தி கொண்டு.

கல்கி என்ற பெயரை கேட்டதும் தானாக அவளது கண்களில் கண்ணீர் துளிர்க்க,

“சாரி.... ஆதிரை..... நான் உன்ன... ஹர்ட் பண்ண கேக்கல....பிளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ ..” என்றான் மென்மையாக.

இவன் அருகில் ஏன் அடிக்கடி கட்டுப்பாட்டை இழக்கிறோமென புரியாது, உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்கியவள், அவனை நிமிர்ந்து பார்த்து,

“அது.... வந்து.... சாரி... சார்..... காலைல வேற யாரோ....னு நினைச்சி..... அப்படி பேசிட்டேன்” என்றாள்.

“அதுல உங்க தப்பு எதுவும் இல்ல ஆதிரை.. நீங்க யாருனு எனக்கு தெரியும். பட் நா யாருனு சொல்லாம விட்டது என்னோட தப்பு தானே...ஆஸ் அ ஸ்ட்ரேஞ்சர் நீங்க டீல் பண்ண விதம் ஓகே..” என்றான்.

“அண்ட் ஃபார் யோர் இன்ஃபர்மேஷன்.. இங்க எங்க செக்யூரிட்டி சிஸ்டத்தை தாண்டி அப்படி யாரும் உள்ள வர முடியாது...... தெரிஞ்சவங்க தவிர....” என விளக்கமும் கொடுத்தான். அதை அவன் சொன்ன விதம் காலையில் நடந்த சம்பவத்தை ரசித்தாற் போன்று இருந்தது.

“ அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் கூட நீங்க ஒழுங்கா சாப்பிடல.... லாஸ்ட் வீக்லலாம் நீங்க எப்படி இங்க ஃப்ரீயா இருந்தீங்களோ அதே மாதிரி இனியும் இருங்க.... நான் வந்ததுனால எதுவும் மாறத் தேவை இல்ல..” என்றான் புன்னகையுடன்.

‘சரி’என தலையை ஆட்டினாள் ஆதிரை.

நெற்றியை சுருக்கி ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அவளை பார்த்தவன்,

“எல்லாத்துக்கும் இப்படி தலையை மட்டும் ஆட்டாம... எதையாவது பேசுங்க ஆதிரை....ஏன்னா இந்த தலையாட்டி லாங்குவேஜ் கத்துக்கறதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லம்மா....நான் நாளைக்கு நான் ஏதும் கேட்க போய் இப்படி தலையை தலையை ஆட்டுனா என் நிலம என்னாகுறது....” என நக்கலாக கூற,

‘என்ன கேட்பானாம்..’ என்று அவள் யோசிக்க,

“வேலை விஷயமா..” என அவள் மனதை படித்தவன் போல கூற,

‘ஐயோ! இது வேறயா......மைண்ட் ரீடிங் தெரிஞ்சவனுக்கு தலையாட்டலுக்கு அர்த்தம் தெரியாதாமா?’ என அவளுள்ளிருந்து குரல் ஒலிக்க, ‘ம்ம்’ என்ற மெல்லிய தலை உலுக்களுடன்,

“சா.. ர்..ரி... சா..ர்... நீங்க பாஸுங்கிறதால கொஞ்சம் நர்வஸா இருந்ததுன்னு நினைக்கிறேன்..” என்றாள்.

“அப்பா.... ஒரு வழியா பேச வைச்சிட்டேன்..” என்றவன் சிரித்துக் கொண்டே,

“ஓ.கே. ஆதிரை இந்த ஃபைல் எடுக்கத்தான் மறுபடி வந்தேன்..நீங்க இங்க சோகமா உக்காந்து இருக்குறத பார்த்து.... பேசிட்டு போகலாம்னு வந்தேன்.... இப்ப நான் கிளம்புறேன் .....ஈவினிங் மீட் பண்ணுவோம்... பை....” என ஒரு தலையசைப்புடன் வேகமாக அங்கிருந்து கிளம்பும் போது அவன் கையை உயர்த்தி காட்ட, வீட்டினருகிலிருந்து சத்தமில்லாமல் ஒரு கார் வர, அதிலேறி கிளம்பியவனை விழியசையாது பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.















 
Status
Not open for further replies.
Top