Episode 1:
எழிலகத்தின் முன்னே வந்து கிரீச்சிட்டு நின்றது அந்த கறுப்பு நிற யுனிகார்ன் பைக். அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த சாலையில் அருகில் இருந்த எவரையும் கண்டு கொள்ளாது பைக்கை நிறுத்திய வேகத்தில் எழிலகத்திலும் நுழைந்து இருந்தான் பாரி வேந்தன். (பைக்கா? ஹீரோ கிட்ட கார் இல்லையானு யோசிக்காதீங்க………. ஹீரோக்கு பைக் போதும்னு சொல்லிட்டார்). எதுக்குத் திரும்பி பாரியப் பார்த்தாங்க? பைக் சத்தம் மட்டும் காரணம் இல்லை……..சார் கெட்டப் அப்படி……….
மாநிறத்தை விட சற்றே கூடுதல் நிறம். பனை மரத்தில் பாதி வளர்ந்தது போல் ஆறடிக்கும் சற்றே குறைவான உயரம்………சிக்ஸ் பேக்லாம் இல்லை……..உயரத்துக்கு ஏற்ற உடம்பு……..நடை, பாவனைகளில் மிதமிஞ்சிய அலட்சியம்………. தோள் வரை வளர்க்கப் பட்டிருந்த அடர்த்தியான நீளமான முடி…….. கறுப்பு நிற வளைவுகள் கொண்ட மெட்டல் கிளிப்பில் அடங்கியிருந்தது. (நம்புங்கள்……. இது நாயகன் அறிமுகம் தான்). அடர்ந்து காடு போல் வளர்ந்து இருந்த தாடிக்குள் தேடும் நிலையில் இருக்கும் முகமும் ரேபான் குளிர் கண்ணாடியின் உபயத்தால் முற்றிலும் மறைக்கப் பட்டிருந்தது.
அவன் எழிலகத்தில் நுழைந்த வேகத்தில் அங்கே வரவேற்பில் பேசிக்கொண்டிருந்த மூன்று பெண்களின் கவனமும் பாரியிடம் திரும்பியது. வரவேற்பில் அமர்ந்து இருந்த சங்கமித்ரா தன் எதிரில் நின்று இருந்த பெண்களிடம் இருந்து கவனத்தைத் திருப்பிப் புதியவனிடம் “என்ன சார் செய்யணும்? சொல்றிகளா?…….” என்று மென்குரலில் கேட்டிருந்தாள்.
“நான் ஏற்கனவே அருண் கிட்ட பேசிட்டுத் தான்வே வந்தேன்” என்றான் பாரி சங்கமித்ராவை ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே……….
பாரிக்கு சங்கமித்ராவின் உணர்ச்சியற்ற பார்வை ஒரு சுவாரசியத்தைக் கொடுத்தது. அங்கே நின்றிருந்த மற்ற இரு பெண்களின் கவனமும் ஒரு ஆர்வத்துடன் பாரியிடமே இருக்கும் பொழுது……….தன்னிடம் நேர் கொண்ட பார்வையில் பேசும் சங்கமித்ராவின் நிர்மலமான முகம் பாரியை ஈர்த்தது.
“அருண் ஒரு ச்சோலி பார்த்துக்கிட்டு இருக்காப்ல……..பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்……..அதுவரைக்கும் நீங்க அங்கன உட்காருங்க………” என்று எதிர் திசை சோபாவைக் கை காட்டியிருந்தாள் சங்கமித்ரா. மித்ராவின் கவனம் பெண்களிடம் திரும்பியதும் அவர்களும் விட்ட பேச்சைத் தொடர்ந்தனர்.
“யக்கா…… பிளீஸ்…….. யக்கா………. நீங்களே வாரிகளா யக்கா?...... எனக்கு நீங்க செய்றது தான் யக்கா பிடிக்கிது……. பிளீஸ்…….. யக்கா………” என்று ஒரு பெண் சங்கமித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். “யக்கா நீங்கதேன் வெரசா ச்சோலி முடிச்சிடுவீகல்ல…….. ச்சோலி ஆனதும் சுருக்கா எங்க ஐயா பிளசருல( அம்பாசிடர்) நீங்க வந்துடலாம்க்கா…….. யக்கா…….. பிளீஸ்……. யக்கா………” என்று வார்த்தைக்கு வார்த்தை பிளீஸ் போட்டு அவளின் தங்கை போல் இருந்த மற்றொரு பெண்ணும் சங்கமித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தில் பெண்களை சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டு இருந்தான். அவன் ஏன் அவர்களைக் கவனிக்கிறான் என அவனுக்கேப் புரியவில்லை………. இங்கு அவன் சங்கமித்ராவை இதற்கு முன்னர் கண்டதும் இல்லை. பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வந்ததில் இருந்தேக் கடந்த இரு வருடங்களாக இரு பாலருக்கும் பொதுவான இந்த எழிலகம் அழகு நிலையத்திற்கு தான் முடி மற்றும் தாடியைத் திருத்த வருகிறான்.
வரவேற்பில் வேறு ஒரு பெண் தான் கண்டிருக்கிறான். இந்தப் பெண் புதியவளாக இருந்தாள் பாரிக்கு. அவளின் தோற்றமும் அவனுக்குப் புதிராகத் தான் இருந்தது. வரவேற்பில் இருக்கும் பெண் நன்கு பளிச்சென்ற மேக்கப் செய்த தோற்றத்துடன் இருப்பாள். ஆனால் இவளோ எந்த விதப் பூச்சும் இல்லாமல் கழுவித் துடைத்த முகத்துடன் சாந்தமாக அலட்டல் இல்லாத மென் புன்னகையுடன் நின்று இருந்தாள்.
“இல்லை ம்மா…….முடியாது……..நான் பொண்ணு அலங்காரச் சோலி யாருக்குமே செய்றது இல்லை………லக்ஷ்மி யக்கா வருவாக……அவுக ச்சோலி தெளிவா செய்வாக………. வெரசாவும் முடிச்சிடுவாக……….அவுங்கதேன் வருவாகம்மா…….” என்று சங்கமித்ரா சற்று அழுத்தமாகவே அந்தப் பெண்களிடம் கூறி முடித்தாள்.
அந்த இரு சிறு பெண்களின் முகமும் சற்று வருத்தத்தை வெளிப்படுத்த……….இருவரில் சிறியவளாக இருந்தவள் கொஞ்சம் துடுக்காக “யக்கா……. நீங்க வாரதுனா வாங்க……. இல்லைனா நாங்க வேற பியூட்டி பார்லர் கண்டுக்கிறோம்கா” என்றாள். அப்பொழுதும் அதே மென்புன்னகையுடன் “சரிப்பா………. உங்க தோதுக்குப் பர்த்துக்கோக” என்று சொல்லி விட்டு சங்கமித்ரா ஒரு சிறிய குறிப்பேட்டில் எதையோ குறிக்கத் தொடங்கினாள்.
சற்று பெரியவளாக இருந்த பெண் சிறியவளிடம், “ ஏட்டி……செத்த நேரம் ச்சரவு இழுக்காம இருக்கியா தாயி……… நீ பேசாம இருந்தா பிறகாட்டி வீட்டுக்குப் போறப்ப மக்ரூன் வாங்கித் தாரேன்” என்று கடுகடுத்தவாறேக் கூற சிறியவளின் கண்கள் அப்பொழுதே மக்ரூனை எண்ணி விரிந்தன. மக்ரூன் பெயரைக் கேட்டதுமே நாவில் எச்சில் ஊற அமைதியாக ஒதுங்கி நின்று விட்டாள் சிறியவள்.
“யக்கா! சாரிக்கா! அவ சொன்னதுக்கு நான் மாப்பு கேட்டுக்குதேன் க்கா………. கோவிச்சுக்காதீக………யக்கா சாரி!!!! பிளீஸ் நீங்களே வாங்கக்கா” என்று பெரியவள் மீண்டும் கெஞ்சலைத் தொடங்க………. சங்கமித்ரா தன் முகத்தில் உறைந்த மென்சிரிப்பைத் தொலைத்து அழுத்தமாக “ நான் பொண்ணு அலங்காரச் சோலி எப்பவுமே செய்றதில்ல………. லக்ஷ்மி யக்கா தான் வருவாக…….. இஷ்டம்னா இப்போ முன்பணம் கொடுத்துட்டுப் போங்க………. இல்லைன்னா உங்க வசதிக்குத் தோதா வேற இடம் பாத்துக்கோக” என்று சற்று கோபம் கலந்த அழுத்தத்துடன் முடித்து விட்டு மீண்டும் தான் குறித்துக் கொண்டு இருந்த சிறிய நோட்டுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டாள். அந்தப் பெண்களின் முகத்தைப் பார்த்துப் பேசினால் தான் எந்த நிமிடமும் உடைந்து விடும் அபாயம் இருப்பதால் கலங்கிய கண்களைக் குனிந்து மறைத்துக் கொண்டாள்.
பெண்கள் இருவரும் சற்று வாடிய முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு……….பெரியவள் கொஞ்சம் சலிப்புடனேத் தன்னுடைய கைப்பையைத் திறந்து பணத்தை எடுத்து சங்கமித்ராவிடம் கொடுத்தாள். “லக்ஷ்மி யக்காவ வெரசா அனுப்பி விடுங்கக்கா” என சங்கமித்ராவிடம் சொல்லி விட்டுப் பெண்கள் இருவரும் வெளியேறினர்.
அவர்களுக்குப் பதில் மொழி கூட கூறாது………. தலையை மட்டும் அசைத்து விட்டு விட்டால் போதும் என்பது போல் பார்லரில் தனக்கென இருக்கும் சிறு அறைக்குள் வேகமாகச் சென்று விட்டாள். நடந்தவற்றைச் சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்த பாரிக்கு சங்கமித்ராவின் செயல் புதிராகவும்……. வியப்பாகவும்……. கோபத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது.
அவன் பெங்களூருவில் பணி செய்த பொழுது அங்கு இருக்கும் பார்லருக்குச் செல்லும் பொழுது பார்த்து இருக்கிறான். அங்கு அவனின் நண்பர்கள் திருமணத்துக்கு முன் பார்லர் செல்லும் பொழுது இவனும் உடன் சென்றிருக்கிறான். இவர்கள் பார்லருக்குச் செல்லும் தேவைகள் குறைவாக இருந்தாலும் அங்கே சென்று மணமகன் என்று சொல்லி விட்டால்……….. பார்லரில் இருப்பவர்கள் மேலும் என்ன என்ன செய்தால் இன்னும் அழகை மெருகூட்டலாம் என்று கூறி சில பல வேலைகளை மேலும் செய்து விட்டு மணப்பெண், தவிர வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களே சிறப்பாக அலங்காரம் செய்வதாகக் கூறி அதற்கு சில பல தள்ளுபடிகள் அறிவித்து தலைமுடியை அலசி விடுவதில் இருந்து………கை கால் நகங்களை சுத்தம் செய்து……..கை, கால், முகத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை அகற்றி………. புருவங்களைத் திருத்தி……….ஃபேஷியல், ப்ளீச் செய்து………. மெகந்தி இட்டு……….மணப்பெண் அலங்காரம் செய்து……..சேலை கட்டி விடுவது வரை அவர்களே சிறப்பாக செய்வதாகக் கூறி முழுக் குடும்பத்துக்கும் பேசி முடித்து விடுவர்.
கல்யாண பட்ஜெட்டில் அழகு நிலையத்துக்கும் ஏனைய திருமணச் செலவுகள் போல ஒரு பெரிய தொகை ஒதுக்கப் படும். அப்படி இருக்க சங்கமித்ராவின் செயல் பாரிக்கு மிகவும் அலட்சியமாகத் தோன்றியது. அழகு நிலையம் வைத்துக் கொண்டு மணப்பெண் அலங்காரம் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவளைக் கண்டு “இவளுக்கு என்ன கோட்டியாப் பிடிச்சிருக்கு?” என்று கேட்கத் தோன்றியது.
பழைய பாரி வேந்தனாக இருந்திருந்தால் அதை நேரடியாகவே சங்கமித்ராவிடம் கேட்டிருப்பான். அச்சிறு பெண்கள் இருவரும் சங்கமித்ராவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே புகுந்து சங்கமித்ராவை உண்டு….. இல்லை…… என ஒரு வழி செய்து இருப்பான்.
ஆனால் இவன்? இந்தப் பாரி வேந்தனின் அவதாரமும் புதிது அல்லவா!!! இப்பொழுது இருக்கும் பாரி அவனுடைய சுயத்தையேத் தொலைத்தவனாயிற்றே……….. சங்கமித்ராவைச் சொடக்கிட்டு அழைக்கத் துடித்த விரல்களைக் கட்டுப் படுத்தித் தன் தலை முடியை அழுந்தக் கோதினான். தன்னுடைய கவனத்தைத் தன் அலைப்பேசிக்கு உள்ளேயே புதைக்க முயன்றான். அவனுடைய முயற்சிகளை சங்கமித்ராவின் நிர்மலமான முகம் சுக்கலாக நொறுக்கியது. பாரி வேந்தனின் இயல்பான குணம் பூந்தொட்டியில் இருந்து சீற்றமாக வெளிவந்து சிதறும் மத்தாப்புப் போல் பொங்கிக் கொண்டு இருந்தது.
தனது சுயம் வெளிவருவது பிடிக்காமல் கோபம் எனும் முகமூடி அணிந்து வேகமாக அங்கிருந்து வெளியே செல்வதற்காக எழுந்தான். சரியாக அதே நேரத்தில் அருண் வேறு ஒரு வாடிக்கையாளர் உடன் உள்ளிருந்து வெளியே வந்தவன் பாரியிடம் வந்து “சாரி அண்ணாச்சி…….செத்த நேரம் லேட் ஆகிடுச்சு…….உள்ள வாங்க……….என்ன செய்யணும் அண்ணாச்சி?” என்று சற்று பணிவுடன் கேட்டான்.
அருணின் கேள்வியில் தன்னுடைய உணர்ச்சிகளைக் களைந்து விட்டுத் தன் தாடியைத் திருத்த அருணுடன் உள்ளே சென்றான். பாரியின் மனதில் அவனின் சுயம் சங்கமித்ராவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என முட்டி மோதிக் கொண்டிருந்தது. தனது எண்ணவோட்டங்களை வெளிப்படுத்தாமல் வெகு அலட்சியமாக இருக்கையில் அமர்ந்தான். தனது தாடியை நீவிக் கொண்டே “ட்ரிம் பண்ணுவே” என்று கூறி விட்டுக் கால் மேல் கால் போட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். “ஆங்….ச்சரிங்க அண்ணாச்சி” என்று பதிலளித்த அருண் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.
சங்கமித்ரா தன் அறையில் வழக்கம் போல் தன் கைப்பையில் இருக்கும் மார்பிளால் செய்த சிறு தவழும் குழந்தைக் கிருஷ்ணர் சிலையை எடுத்துத் தன் கரத்தில் வைத்துக் கொண்டு வெடித்து அழத் தொடங்கினாள். வார்த்தைகள் அற்ற அவளது அழுகையின் காரணம் பகவான் ஶ்ரீகிருஷ்ணருக்குத் தெரியாதா என்ன? அவளது மனக் குமுறல்களை அழுகையில் கரைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் நீடித்த இந்தக் கண்ணீர் ஶ்ரீகிருஷ்ணரின் குழந்தைச் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் அடைந்து சங்கமித்ராவின் அழுகையும் குறைந்தது. அழுகை குறைந்து மித்ராவின் மனத்தை கோபம் எனும் புயல் ஆட்கொண்டது. ஆனால் இந்தக் கோபப் புயலால் வார்த்தைகளை மழையாய்ப் பொழிந்தாள் கிருஷ்ணரிடம் சண்டை எனும் பெயரில். சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் சிலை மித்ராவின் மனதில் அமைதியையும், சிறு நம்பிக்கையையும் நூலிழையாய்க் கடத்திக் கொண்டிருந்தது.
இது எப்பொழுதும் மித்ராவின் வழக்கமே. அவளது உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்துவது ஶ்ரீகிருஷ்ணர் சிலையிடம் மட்டுமே. அவளுக்கு ஶ்ரீகிருஷ்ணர் சிலை அல்ல…….அவளது உற்ற நட்பு……..
Last edited: