எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 17


“வருணாக்ஷி கிளம்பலாமா?” இதோடு பத்தாவது முறையாக முகிலன் கேட்டிட,

“ம்ம் இதோங்க இன்னும் ஒரு அஞ்சு நிமிசம்.” என்றவள்‌ கடந்த அரை மணி நேரங்களை ஐந்து நிமிடங்களாக தான் கூறிக் கொண்டிருக்கிறாள்.

“ப்ச் வருணாக்ஷி!” என்றவனின் குரல் கண்டிப்பாய் வெளிவர,

“ப்ளீஸ்ங்க! ப்ளீஸ் லாஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்!” என கெஞ்சியவளுக்கு, இரவின் குளுமையில் வண்ண விளக்குகளால் சூழப்பட்ட மலையும்,
விபூதி, சூடம் வாசத்தோடு கலந்து வரும்,
“கந்தனுக்கு அரோகரா!” என பக்தர்களின்‌ கோசமும், மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் பொழுது தெரிந்த‌ ஊரின் அழகிய வ்ஃயூ பாய்ண்டும், கமகம மஞ்சள் வாசமும்,
அவளை அவ்விடத்தை விட்டு நகர விடாது செய்ததில் ஐயமில்லை.

அந்த இரவிலும் சாரைசாரையாய் முருகனை நோக்கி படையெடுக்கும் பக்தர்களும், அவர்கள் சுமந்து வரும் காவடியும், பால்குடமும், அலகு குத்தி வருவதையும் காண காண உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் சிலிர்த்தெழுந்தது இவளிற்கு.

“போதும் வருணாக்ஷி! வா போகலாம்.‌ டைம் ஆகிடுச்சு.” என்ற‌படி அவளை கையோடு இழுத்து வந்திருந்தான் முகிலன்.

யானைகள் செல்லும் பாதை வழி இறங்க சென்றவனைக் கண்டவள்,
“ஏங்க, ஏறும்போது‌ இந்த பக்கம் தானோ ஏறுனோம். இப்போ படிக்கட்டு பாதை வழியாக போவோம்ங்க.”

“நோ வருணாக்ஷி! இது சேஃப் இல்லை தொடர்ச்சியா‌‌ இறங்கும் போது கஷ்டம்‌ இந்த பாதை. யானைப் பாதைன்னா நம்மளுக்கு கொஞ்சம் ஸ்டெப்ஸ் தான் இருக்கும் ப்ளஸ் நம்ம ரெஸ்ட் எடுக்க, உட்காரா அங்க இடம்‌‌ இருக்கும்.” என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, அவனை இழுத்துக் கொண்டு படிக்கட்டு பாதையில் இறங்க ஆரம்பித்து விட்டாள் அவனது சொல் பேச்சு கேளா மனையாள்.

“வருணாக்ஷி!” என்றவனின்‌‌ அதட்டலை எல்லாம் காதில் வாங்கவில்லை அவள்.

அவளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இறங்கி கொண்டிருந்தவனுக்கு, எங்கே விழுந்து விடுவாளோ என்ற பயம் வேற மனதை கவ்வியதில், பல்லைக் கடித்துக் கொண்டு அவளது இழுப்பிற்கு சென்றான்.

ஆரம்பக்கட்ட ஆர்வத்தில் இறங்க ஆரம்பித்தவளுக்கு, நேரம் ஆக, ஆக வேகம் மட்டுப்பட, மூச்சிறைக்க ஆரம்பித்து, உடல் மெல்ல தொய்வடைய, வறண்ட தொண்டை தண்ணீரை கேட்க ஆரம்பித்தது.

ஆனால் அருகே இருப்பவனின் கோபத்திற்கு பயந்து, தன்னை சமாளித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தவளுக்கு, உடல் ஒத்துழைக்காமல் போக, தலை கிறுகிறுத்து, மெல்ல தள்ளாட,

அவளது நிலையை நொடியில் கணித்தவன், சட்டென அவளை இழுத்து, படியின் ஒரு மூலையில் அமர்த்தி விட்டான்.

அமர்ந்த பிறகும் அவளது தலை சுற்றிய வண்ணமே இருக்க, அருகே அமர்ந்து அவளது தலையை தனது நெஞ்சினில் அழுந்த பதித்துக் கொண்டான்.

சிறிது நேரம் கண்ணை மூடி அவனது நெஞ்சினில் சாய்ந்திருந்தவளுக்கு, சிறுக, சிறுக தலை சுற்றுவது நின்று, தாகம் எடுக்க,

மெல்ல தலையை நிமிர்த்தியவள்,
“தண்…!” என முடிக்கும் முன்பே அவள் முன் நீர்ப் பாட்டிலை நீட்டியிருந்தான்.

எதுவும் பேசாது வாங்கி அருந்தியவள், அவனிடம் அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள்.

அவள் ஆசாவாசப்பட, சிறிது நேரம் கொடுத்தவன்,
“போகலாமா? ஓகேவா நீ?” என எவ்வளவு அடக்கியும், அவனது குரலில் கோபம் வெளிப்பட்டிருந்து.

“ம்ம்ம்!” என தலையசைத்தவளை‌ அழைத்துக் கொண்டு, மெல்ல இறங்க ஆரம்பித்தான் அவன்.

முன்னே செல்லுபவனின் கரத்தை அவள் பற்றிட, அவன் திரும்பி அவளை‌ பார்க்க,

அவளது விழிகளை காணாது தலைக் குனிந்தவள்,
“சாரி‌ங்க!” என முணுமுணுக்க,

“வா!” என‌ ஒற்றைச் சொல்லோடு அவன் இறங்க ஆரம்பித்திட, அவன் பின் அமைதியாகி போனாள் அவள்.

கால்களின் நடுக்கத்தில் தன் மடத்தனத்தை உணர்ந்தவளுக்கு ‘அய்யோ!’ என்றானது.

இனி யானைப் பாதை வழியாகவும் செல்ல முடியாது அப்படி செல்ல வேண்டும் என்றால் மீண்டும் பல படிகளை ஏறி பின் அவ்வழியே திரும்ப வேண்டும் என நினைக்கையிலயே, தலை சுற்றியது அவளிற்கு.

‘எங்கே மயங்கி கீழே ஏதும் விழுந்து விடுவோமோ’ என பயம் வேற அவள் வயிற்றை கவ்விப் பிடிக்க, முகிலனை பற்றியிருந்த கையை இன்னமும் இறுக்கம் கூட்டி பற்றிக் கொண்டாள்.

அவளது தீடீர் இறுக்கத்தில், சட்டென முகிலன் மனையாளை திரும்பி பார்த்திட,

முகம் வெளிறி, கண்ணெல்லாம் கலங்கி, பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவாறு நின்றிருந்தவளின் தோற்றம் அவனை ஏதோ செய்திட,

“ஹேய் வருடா!” என்றபடி அவளது கன்னத்தினை தனது இரு கரங்களாலும்‌ பற்றிக் கொண்டவன்,

“என்னாச்சு வரும்மா? ஏன் முகம் இப்புடி வெளிறிப் போயிருக்கு?”

“கால்..கா…ல் எல்லாம் நடுங்குதுங்க, பயமா இருக்கு.‌ சாரிங்க இப்புடி ஆகும்னு எனக்குத் தெரியாது. கல்யாணத்துக்கு முன்னாடி வந்தப்பயும் அம்மா இந்த வழியா கூட்டிட்டு வர மாட்டாங்க, அன்னைக்கு நம்ம கல்யாணத்துக்கு முன்ன வந்தோம்ல அப்பவும் இந்த வழியா ஏறக் கூடாதுன்னு சொல்லித்தான் அனுப்பிச்சாங்க.

ஆனா எனக்கு இது வழியா இறங்கனும்னு ஒரு ஆர்வம். அதான் இன்னைக்கு நீங்க வேண்டாம்னு சொல்லியும், கேட்காம இறங்கிட்டேன்.

ஆனா, சத்தியமா இப்புடி ஆகும்னு தெரியாதுங்க எனக்கு, தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்.” என குரல் அடைக்க பேசியதின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் இறங்கிட,

“ஹேய் பைத்தியம்! இதுக்கு எதுக்கு அழற” என்றபடி அவள் விழி நீரை பெருவிரலில் துடைத்தவன்,

“இப்போ ஓகேவா நீ? நடந்துடுவியா.”

அவனின் மென்மையான பேச்சில் முகம் மலர்ந்தவள்,
“ம்ம் போகலாம்ங்க, நீங்க கோபத்துல இருக்கவும் லைட்டா பயந்துட்டேன்.” என்றவளின் குரலில் உண்மை இருக்க,

“யாரு நீயி எனக்கு பயந்த! அதை நான் நம்புனுமாக்கும். சரியான திருட்டுகோழி!” என்றபடி அவள் தலையில் வலிக்காமல் குட்டி, அவளை இலகுவாக்க, அது நன்றாக வேலை செய்தது அவளிடம்.

“ஓகே! என் கை பிடிச்சுக்கோ! சீக்கிரம் இறங்கனும், நேரமாகிடுச்சு.” என்றபடி அடுத்த பத்து நிமிடங்களில் மலையிறங்கியிருந்தனர் இருவரும்.

“ஏங்க, மாமாக்கும், பரணி மாமாக்கும் சேர்த்தே டிபன் வாங்கிட்டுப் போய்டலாமா?” அவள் கேட்டிட,

“இல்லை வருணாக்ஷி, இன்னும் இரண்டு நாள்ல தைப்பூசம்ன்றதால கூட்டம் வந்துட்டே இருக்கும். அவுங்க கடை அடைக்க லேட் ஆகும். வீட்டுக்கு வரும்போதே சாப்பிட்டுட்டு தான் வருவாங்க.” என,

இம்முறை அவனிடம் எதிர்த்து வாதிடாமல் சரியென்று கேட்டுக் கொண்டாள்.

பின், பழனியில் பெயர் போன உணவகத்தில், டிபனை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்றனர் இருவரும்.

“கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்க கூடாதா முகிலா? புதுசா கல்யாணமானவங்க இருட்டுல வரக் கூடாதுப்பா.” மிச்சமிருந்த விருந்தாளிகளில் ஒருவர் வாய் திறக்க,

“சரிங்க பெரியம்மா, என்னால் தான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு இனி லோட்டாக்காமா வந்திடுறோம்.” என வருணா உடனடி ஒப்புதல் அளித்திட,

“பரவாயில்லை பேச்சி, உன் சின்ன மருமக நல்லா சூதுவாது தெரிஞ்சப் பொண்ணு தான், பெரியவங்க சொன்னாங்கன்னா நல்லதுக்குத்தான் இருக்கும்னு தெரிஞ்சு, பட்டுன்னு ஒத்துக்கிச்சுப் பாரு,

இதுவே, பரணி கல்யாணத்தப்பயும் நான் சொன்னேன், ஆனா நம்ம சுபா‌ அப்போ மூச்சுக் கூட விடலை.” என அவர் மெல்ல பேச்சின் திசையை திருப்ப,

“அக்கா, வாங்க சூடு ஆறதுக்குள்ள சாப்பிட்டுடலாம்.” சட்டென முத்துப்பேச்சி அவரை அடுத்து பேச விடாது தடுத்தவர்,

“வருணா,டிபனை கொண்டுப் போயி மேகலாக்கிட்ட கொடுடா, உள்ளே கிச்சன்ல இருப்பா, ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்து வைக்க.” என்றபடி அவளை உள்ளே அனுப்பி வைத்தவர், மிச்ச மீதிருந்த உறவுகளை இரவு உணவு உண்ண அழைக்க சென்றார்.

“மேகலா அண்ணி!” என்றபடி அவள் உள்நுழைய,

“வருணா வந்துட்டியா!”

“ஆமா அண்ணி, இந்தாங்க கோவில் பிரசாதம், அப்பறம் இதுல டிபன் இருக்கு.” என அவள் இரண்டையும் கொடுக்க,

திருநீறை நெற்றியில் வைத்துக் கொண்ட மேகலா,
“நல்ல கூட்டமா!” என்றபடி டிபன்களை பிரித்து பாத்திரத்தில் போட்டுப் படி வினவ,

“ம்ம்ம் ஆமா அண்ணி” என்றபடி நானும் உதவியவள்,
“சுபாக்கா எங்க அண்ணி?” என்க,

“அவுங்க ரூம்ல இருக்காங்க அவுங்க அம்மா கூட.”

“பாரதி எங்கண்ணி?”

“சாத்வியும் அவளும் தான்டா வெளியே விளையாட்டுட்டு இருந்தாங்க.‌ சரி இதைக் கொண்டுப் போய் வெளியே வை வருணா, நான் தட்டெல்லாம் எடுத்துட்டு வரேன்‌” என்றபடி அவளிடம் சில பாத்திரங்களை கொடுத்து விட்ட மேகலா, பின்னோடு தட்டுகளை எடுத்து வந்திருந்தாள்.

பின், அங்கே இரவு உணவு ஆரம்பமானது.

“மேகலா, சுபா அம்மாவை கூட்டிட்டு வா.” என பேச்சி கூற,

“நீங்க பரிமாறுங்க அண்ணி, நான் போய் கூட்டிட்டு வரேன்.” என்றபடி சென்ற வருணா, சுபாவின் அறை வெளியே நின்று,

“சுபாக்கா! சுபாக்கா!” என்றழைக்க,

“என்ன வருணா?” என்றபடி சுபா வர,

“அம்மாவா சாப்பிட கூட்டிட்டு வாங்க அக்கா!”

“சரி வரோம்‌‌.” என்றதும் அவள்‌ நகர்ந்து விட,

“அம்மா, சாப்பிட போலாம் வாங்க.” என்றபடி தாயை அழைத்துச் சென்றாள் சுபா.

இவர்கள் சென்று அமர, மேகலாவும் வருணாவும் பரிமாற ஆரம்பித்தனர்.

“மேகலா, வருணா‌ நீங்களும் சேர்ந்து சாப்பிடுங்க, எல்லாரும் சாப்பிட்டாச்சு,” என பேச்சி குரல் கொடுக்க,

“அத்தை, சாத்வி?” என சுபா கேட்க,

“அப்பவே ஊட்டி விட்டுடேன் சுபா, பாரதியும் சாப்பிட்டுட்டா மேகலா.” என மகள் மருமகள் இருவருக்கும் பதில் கூறியவர்,

“வருணா நீ சாப்பிட்டுட்டு‌, முகிலனுக்கு எடுத்துட்டுப் போ.” என்க,

“சரிங்கத்தை!” என தலையாட்டிக் கொண்டாள்.

“என்ன இது, எல்லாம் எண்ணெய் ஐட்டமா இருக்கு. எனக்கு இது சாப்பிட்டா நெஞ்சு கரிக்கும்.இட்லி இல்லையா?” என‌ வள்ளியம்மை‌‌ கேட்க,

“இல்லம்மா இட்லி இருந்ததே, வாங்கினோமே!” என வருணா கூறியபடியே இட்லியை தேட,

“இட்லி எல்லாம் தீர்த்திடுச்சு‌‌ வருணா, முன்ன சாப்பிட்டவங்க இட்லி வேணும்னே‌ கேட்டு வாங்கிட்டாங்க.
கடைசியாக நாலு இட்லி இருந்ததை தான், பாப்பாங்களுக்கு ஊட்டி விட்டேன்.” என்றபடி முத்துபேச்சி வந்தார்.

“அச்சோ! அப்போ கொஞ்சம் நிறைய வாங்கியிருக்கனுமோ‌ அத்தை.” என‌ அவள் வினவ,

“ம்க்கும் நல்ல பொண்ணு போ, டிபன் வாங்கிட்டு வந்தா போதாது, வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க, அவுங்களுக்கு என்னெல்லாம் வேணும்னு கேட்டு வாங்க வேண்டாமா?”.

“சாரிம்மா, அப்புடி கேட்டு வாங்காம விட்டுடேன்.”

“என்னவோ போ, இதுவே சுபாவ இருந்தா, யாருக்கு எது புடிக்கும்? யாருக்கு என்ன தேவைன்னு, சரியா‌ பார்த்து வாங்கிட்டு வந்திருப்பா. உனக்கு தெரியலைன்னாலும் அவுக்கிட்டயாவது கேட்டுருக்க வேண்டாமா நீயி?” என வள்ளியம்மை பேசியபடியே செல்ல, கருணாவுக்கு இங்கே முகம் சுணங்கி விட்டது.


முதல் முறை ஆசையாக அவளது புகுந்த வீட்டில் ஒன்றை செய்து, அது குறையாகிப் போனதில், வருத்தம் அப்பிக் கொண்டது அவள் முகத்தில்.

அவளது சுணங்கிய முகத்தை கண்ட மேகலாவும், முத்துபேச்சியும்‌‌ எதுவோ கூற வாய்திறக்க,

“அம்மா என்ன‌ இப்போ? அதான் சப்பாத்தி இருக்குல்ல‌ அதை‌ சா
ப்பிடு. அது‌ ஒன்னும் செய்யாது. என்னமோ தினமும் இட்லியோ சாப்பிடுற‌‌ மாதிரி தான். பேசாமா சாப்பிடும்மா” என பேசி தன் தாயை அடக்கிய சுபாவை ஆச்சர்யமாய் பார்த்தாள் மேகலா.

 
Top