எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 2

kani suresh

Moderator
அத்தியாயம் 2

குழந்தைக்குப் பாரதியார் பற்றிய கவிதைகளையும், ஒரு சில வரிகளையும் ஏற்கனவே வினோத் சொல்லிக் கொடுத்திருக்க, அதன்படி குழந்தை ஆரம்பத்தில் திக்கித் திணறினாலும், கண்மணி அவ்வப்போது குழந்தையை நன்றாகப் பேசுமாறு உற்சாகமூட்ட, கண்மணியைப் பார்த்துக் கொண்டே தனது தந்தை தனக்குச் சொல்லிக் கொடுத்ததை, ஒரு வரி விடாமல் திக்காமல் திணறாமல் சொல்லச் செய்தாள் குழந்தை ராகினி.

ஆரம்பத்தில் இரண்டு வரிகளில் திக்கச் செய்தாள். திக்கக்கூடாது என்பது போல் கண்மணி செய்கையில் சொல்ல, தனது அப்பாவை மனதில் கொண்டு வந்த ராகினி கடகடவென்று பேசி முடிக்கச் சுற்றி இருந்த அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும், குழந்தைகளும் கைதட்டி, ராகினியின் பேச்சைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

ஐந்து வயதே ஆகும் ராகினி, நன்றாகப் பேசி இருக்க, அனைத்துப் பெற்றவர்களும் கைதட்டி உற்சாகமூட்டினார்கள்.

பேசி முடித்துவிட்டு ராகினி வேகமாக வந்து கண்மணியைக் கட்டிக் கொள்ள, ராகினியைத் தூக்கி கொஞ்சிய கண்மணி, “அவ்வளவு தான்டா தங்கம், இதுக்காக யாராச்சும் ஃபீல் பண்ணுவாங்களா?” என்று சொல்ல,

"இருந்தாலும், நான் பேசுவதைப் பார்க்க அப்பா இல்லையே ஆன்ட்டி” என்று இப்பொழுதும் தனது அப்பாவில் வந்தே நிற்க, பத்மாவைத் திரும்பிப் பார்த்த கண்மணி, “அப்பா வருவாரு டா செல்லம், ஆன்ட்டி ஃபுல்லா நீங்க பேசினதை ரெக்கார்ட் பண்ணிட்டேன்… வீடியோவோட பாட்டி போன்ல தான் பண்ணி இருக்கேன். சரிங்களா, அதை எடுத்துட்டுப் போயி நீங்க உங்க அப்பாகிட்டக் காமிங்க… உங்க அப்பாவும் சந்தோஷப்படுவாங்க. உங்க அப்பா வேணும்னு எதுவும் செய்யல என்று தங்கத்துக்குத் தெரியும் தானே.” என்று சொல்லிக் குழந்தையைக் கிச்சுக் கிச்சு மூட்டி ஏதேதோ பேசிச் சமாதானம் செய்தாள்.

தான் வாக்குறுதி கொடுத்தது போலவே, ஸ்கூல் கேண்டீனில் குழந்தைக்கு எந்தச் சாக்லேட் பிடிக்குமோ, அதை வாங்கிக் கொடுத்து குழந்தையை சந்தோஷப்படுத்திவிட்டு, “சரிடா தங்கம், அடுத்து டான்ஸ் போட்டி இருக்கில்ல, அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணி இருக்கீங்களா, ரெடியா?” என்று கேட்க,

"அத்தை, நான் இருக்க டான்ஸ்ல தான், இவளும் இருக்கா… என் கூட தான் சேர்ந்து ஆடுவா” என்று கவின் சிரிக்க,

“ஓ, இந்த ராகினி தங்கம் உங்க கிளாஸா கவின்” என்று கேட்க,

“ஆமா அத்தை, என்னுடைய பிரண்டு தான்.” என்று கவின் பல் வரிசைகள் தெரியச் சிரித்தான்.

தனது அண்ணன் மகனைக் கொஞ்சிய கண்மணி, “சரிடா, ரெண்டு பேரும் இப்போ டான்ஸ் ஆட ரெடியாகலாமா? நேரமாகுது பாருங்க. இன்னும் அரை மணி நேரத்துல கூப்பிடுவாங்க. அதுக்கு வேற மேக்கப் பண்ணனும் இல்ல.” என்று கண்மணி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேக்அப் செய்கின்ற ரூமுக்குச் செல்ல,

கண்மணியையே பார்த்துக்கொண்டு இருந்தார் பத்மா.

‘இவ்வளவு நேரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்த தனது பேத்தியை, 10 நிமிடத்தில் சமாதானம் செய்து விட்டாளே இந்தப் பெண். இவளைப் போன்ற ஒரு மருமகள் தனக்குக் கிடைத்தால், இவளைப் போன்ற ஒரு அம்மா தனது பேத்திக்குக் கிடைத்தால், இவளைப் போன்ற ஒரு மனைவி தனது மகனுக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே.’ என்று யோசித்தார்.

முதல் இரண்டு வரியில் சந்தோஷம் அடைந்த பத்மாவின் முகம், இறுதி வார்த்தை, அதாவது தனது மகனுக்கு மனைவியாக எண்ணி ஆசைப்பட்டதை நினைக்கும் போதே அவருக்கு உள்ளுக்குள் உதறியது.

இதைப் பற்றித் தன் மகனிடம் பேசினால், தனது மகனின் வாயிலிருந்து என்ன வரும், என்பதை அறியாதவரா பத்மா?

‘ஆனாலும், இந்தப் பெண் கண்மணி தனது வீட்டிற்குத் தனது பேத்திக்கு அம்மாவாக வந்தால் நன்றாக இருக்குமே’ என்று யோசித்தார்.

ஆனால், இவை அனைத்தும் நடக்குமா? என்று மேலே இருக்கும் கடவுளைக் கையெடுத்துக் கும்பிட்டவர்,

‘அப்படி ஒரு பாக்கியம் எனது பேத்திக்கு இருக்கா, இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு பாக்கியம் கிட்டினால் உனக்குக் கோடிப் புண்ணியம் ஈஸ்வரா… உன்னுடைய சன்னதிக்கு வந்து என்னால் முடிந்ததைச் செய்வேன். அனைத்தும் உன் கையிலே.’ என்று கையெடுத்துக் கும்பிட,

பத்மாவைக் கண்மணி அழைக்க, வேகமாக மேக்கப் செய்யும் ரூமுக்குள் சென்றார் பத்மா.


அத்தியாயம் 2

கண்மணி இரண்டு குழந்தைகளையும் மேக்கப் செய்து, மேடைக்கு அருகில் அழைத்துக் கொண்டு வர,

அடுத்து டான்ஸ் போட்டியும் ஆரம்பமாகியது. இரண்டு குழந்தைகளும் நல்ல முறையில் டான்ஸ் ஆடி முடிக்க, அதனையும் வீடியோ எடுத்துப் பத்மாவிடம் கொடுத்தவள், குழந்தையைக் கொஞ்சி சமாதானம் செய்தாள்.

"அப்பா இப்ப வர வரவே இல்ல ஆன்ட்டி" என்று புலம்பினாள்.

"தங்கம், அப்பா வரலைன்னா என்ன? முக்கியமான வேலை இருக்கப் போய் தானே வராமல் இருக்காரு.” என்று சமாதானப்படுத்தி விட்டு, "சரிடா தங்கம், ஆன்டிக்கு நேரம் ஆகுது. உங்களுக்கும் நேரம் ஆகும். வீட்டுக்குக் கிளம்புங்க, இருட்டிடுச்சு பாருங்க" என்றாள்.

“ஆமா மா” என்று பத்மா சொன்னார்.

"ஆன்ட்டி, கொஞ்சம் கீழ குனிங்க" என்று சொன்னாள் ராகினி.

கீழே குனிந்த கண்மணி, "என்னடா தங்கம்" என்று ராகினியின் இரு கன்னத்தையும் பற்றிக் கொஞ்சினாள்.

ராகினி அவளது கன்னத்தில் முத்தமிட்டவள், "சோ ஸ்வீட் ஆன்ட்டி நீங்க" என்று பல் வரிசை தெரியச் சிரித்தாள்.

கண்மணியும், "நீங்களும் ஸ்வீட் தாண்டா தங்கம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கவின் அப்பா சங்கர் அவளுக்கு போன் செய்தான்.

"நான் ஸ்கூலுக்கு வந்துட்டேன். நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க? வீட்டுக்குக் கிளம்ப வேண்டாமா, நேரம் என்ன?" என்றான்.

கண்மணி பத்மாவையும், ராகினியையும் பார்த்துச் சிரித்தவள், "சரிங்கம்மா, அண்ணன் வந்துட்டாரு, வீட்டுக்குப் போகணும்" என்றாள்.

"இவங்க அப்பா, அம்மா வரலையா மா" என்று பத்மா கேட்டார்.

"அண்ணா, அண்ணி ரெண்டு பேருமே வேலைக்குப் போயிட்டு இருக்காங்கமா. லீவு கேட்கிறேன் தான் சொன்னாங்க, இந்தப் பெரிய மனுஷன் தான் நீங்க ஆபீசுக்குப் போங்க, அதான், அத்தை இருக்கே பார்த்துக்கும்… என்று சொல்லி அனுப்பி வச்சான்" என்று சிரித்தாள்.

"ஏண்டா, அப்பா அம்மா வரணும்னு உனக்கு ஆசை இல்லையா?" என்றார் பத்மா.

"எனக்கு எல்லாமே எங்க அத்தைதான் பாட்டி" என்று சிரித்தான்.

"இப்படிச் சொல்லிச் சொல்லித் தாண்டா என்ன மயக்குற" என்று கண்மணி சிரிக்க,

"இருந்தாலும் கொடுத்து வச்சவன் தான் மா, உன் அண்ணன் பையன். நல்லாப் பேசுறான்" என்றார்.

"ஏன்மா அப்படிச் சொல்றீங்க, ராகினியோட அம்மா எங்கன்னு கேக்கணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்" என்று கேட்டாள்.

"அத்த, அவளுக்கு அம்மா…" என்று கவின் சொல்லும்போதே, அருகில் வந்த சங்கர், "என்ன, அத்தையும், மருமகனும் நாள் முழுக்க இங்கேயே நிக்கிற ஐடியாவா? அங்க உன் அண்ணி போன் மேல போன் பண்றா" என்றான்.

"போலாம் அண்ணா" என்று விட்டுச் சிரித்தாள்.

"சரிங்க மா, அப்புறம் பார்க்கலாம்.” என்று சொல்லி விட்டுக் கீழே குனிந்து ராகினியின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, “சரி டா, தங்கம் ஆன்ட்டி வரேன்" என்று விட்டு நகர்ந்தாள்.

"ஆன்ட்டி, உங்க போன் நம்பர் தாங்க" என்று வேகமாக ராகினி கேட்டாள்.

"எதுக்கு டா தங்கம்" என்று சிரித்துக் கொண்டே கண்மணி கேட்க,

"சும்மா தான், போன் பண்ணிப் பேசக் கூடாதா, தரமட்டிங்களா?" என்று அழகாகத் தலையைச் சாய்த்து ராகினி கேட்க,

கவின் சிரித்துக் கொண்டே, "ராகி, அத்தை நம்பர் நான் தரேன். நாளைக்கு ஸ்கூல்ல பாக்கலாம், வீட்டுல அம்மா தேடுவாங்க" என்று சிரித்தான்.

"சரி டா குட்டி மா, கவின் உனக்கு நாளைக்கு கண்மணி நம்பர் தருவான். நாங்க இப்போ வீட்டுக்குக் கிளம்பனும். கவின் அம்மா போன் பண்ணிட்டே இருக்காங்க" என்று ராகினியைப் பார்த்துச் சிரித்தான் சங்கர்.

"சரி" என்று ராகினி சிரித்துக் கொண்டே தலையை ஆட்ட, கண்மணி அவளது தலையைக் கோதி விட்டு, "ஒழுங்காப் படிக்கணும். பாட்டிகிட்ட ரொம்ப அடம் பண்ணக் கூடாது, சரீங்களா?" என்று சொல்லி விட்டுக் கண்மணி தனது அண்ணன் மற்றும் கவினுடன் சென்றாள்.

போகும் வழி எங்கும் கவின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டே ராகினியைத் திரும்பிப் பார்த்து கொண்டே சென்றாள். அவர்கள் மூவரும் இந்தப் பக்கம் கிளம்ப, அடுத்து சில நிமிடங்களில் அவர்களது அருகில் வினோத் வந்து நின்றான்.

ராகினியின் அப்பா, பத்மாவின் மகன்.

"ராகி மா" என்று கொஞ்சிக் கொண்டே வந்தான்.

ராகினி லேசான கோபத்துடன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, "நீங்க ஒன்னும் என்கிட்டப் பேச வேணாம் அப்பா, என்கிட்டப் பேசாதீங்க" என்று முகத்தைத் திருப்பினாள்.

"டேய் தங்கப் புள்ள, அப்பா வேணும்னேவா டா செஞ்சேன்?" என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான்.

"உங்களுக்கு உங்க வேலை தானே முக்கியம், நான் முக்கியம் இல்லல்ல." என்று முகத்தைத் திருப்ப,

"என் தங்கத்தை விடவா எனக்கு வேலை முக்கியம்? ஆனா அப்பா வேலை செய்யாம என் தங்கத்தை எப்படிப் பார்த்துக்க முடியும்?" என்று கொஞ்சிக் கெஞ்சி, அவளைச் சமாதானப்படுத்தி விட்டு, "நம்ப ஐஸ்கிரீம் சாப்பிட்டு வீட்டுக்குப் போலாமா?" என்று அவளைத் தாஜா செய்து ஐஸ்கிரீம் பார்லர் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவையும் வெளியே முடித்துக் கொண்டு தனது அம்மாவையும், மகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டிற்குச் சென்றவுடன் ராகினி செய்த முதல் வேலை, தனது பாட்டியின் போனில் இருக்கும் வீடியோ அனைத்தையும் ஓட விட்டவள், கண்மணியின் புராணமே பாட, தன் அம்மாவைப் பார்த்த வினோத் அமைதியாக இருந்தான்.


தன் மகளைப் பார்த்துச் சிரித்து விட்டு அனைத்தையும் பார்த்தவன், "சூப்பரா பண்ணி இருக்கடா தங்கம்" என்று சொல்லிக் கொஞ்சினான்.

"நீங்க சொல்லிக் கொடுத்தது தான் பா… ஆனாலும் நீங்க சொல்லிக் கொடுத்ததை, நான் கொஞ்சம் மறந்துட்டேன். திக்கித் திணறிச் சொன்னேன். கண்மணி ஆன்ட்டி தான் தைரியம் மூட்டினாங்க" என்றாள் சிரிப்புடன்.

"சரி டா தங்கம், நேரம் ஆகுது. வாங்க தூங்கலாம்" என்று விட்டுத் தன் மகளைத் தட்டித் தூங்க வைத்துவிட்டு, "யாரு மா, அந்தப் பொண்ணு?" என்று கேட்டான். "உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா?" என்றான்.

"இல்லடா, நம்ம ராகினி கிளாஸ்ல இருக்க கவின் ஓட அத்தையாம், ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா" என்று நடந்த அனைத்தையும் சொன்னார் பத்மா.

"தெரியாதவங்க கூட எல்லாம் ராகினியை எதுக்குமா பழக விடுற?" என்றான்.

"டேய் நல்ல பொண்ணு தான் டா" என்றார்.

"இருக்கட்டும் அதுக்குன்னு" என்றான்.

"கொஞ்சம் நம்பிக்கை வைக்கணும் வினோத், யாரையும் பார்க்காம, பேசாம தப்பா எடை போடக் கூடாது" என்றார்.

"நான் அப்படிச் சொல்லல மா, ஆனா நம்ப வாழ்க்கையில நடந்தது தெரிஞ்சும், நீங்க இப்படிப் பண்ணா? அதான்.." என்றான் ஆதங்கமாக.

"டேய் ஒரு டைம் ஏமாந்தா, ஒருத்தர் ஏமாத்தினால் எல்லோருமே அப்படி தான் இருப்பாங்களா?" என்று முறைத்தார்.

"சரி, எதையோ பண்ணுங்க" என்று விட்டு "நேரம் ஆகுது பாருங்க, நீங்க மாத்திரை போட்டுப் படுங்கம்மா" என்று தன் தாயையும் தூங்கச் சொல்லிவிட்டுத் தன் மகளைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டு அவனது ரூமுக்குச் சென்று விட்டான் வினோத்.

கவின் வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மா கமலியைக் கட்டிக்கொண்டு, "மா, நான் சூப்பரா டான்ஸ் ஆடினேன் தெரியுமா?" என்று சிரித்தான்.

"உங்க அத்தை சொல்லிக் கொடுத்த டான்ஸ்டா, அப்புறம் என் தங்கப் புள்ள ஆடாமலா விட்டுடும்" என்று கொஞ்சினாள் கமலி தன் மகனை.

"மா, இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?" என்று தன் அம்மாவிடமும், பாட்டி, தாத்தாவிடமும் குதூகலத்துடன் இன்று பள்ளியில் நடத்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

"அப்படி என்னடா தங்கம் நடந்துச்சு?" என்று அனைவரும் கேட்க,

"ம்மா, இன்னைக்கு அத்தை செமையா ஒரு விஷயம் பண்ணி இருக்கு தெரியுமா?" என்றான்.

"டேய் கம்முனு இருடா" என்று அவன் தலையில் கொட்டி விட்டுக் கண்மணி அருகில் உட்கார்ந்தாள்.

"என்ன டா, உன் அத்தையும் உன் கூடச் சேர்ந்து ஆடினாளா என்ன?" என்று சிரிப்புடன் கமலி கேட்டாள்.

"அண்ணி" என்று கண்மணி சிணுங்கினாள்.

“இல்ல மா, என் பிரண்டு எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு ராகினின்னு இருக்கு, சொல்லி இருக்கேன் இல்ல.”

"டேய், நீ என்கிட்டவே சொன்னதில்ல" என்று கண்மணி முறைக்க,

"சாரி, சாரி அத்தை" என்று இரு காதுகளையும் பிடித்து மன்னிப்புக் கேட்டான் கவின்.

சிரித்த கண்மணி அவனது கையெடுத்து விட்டு, அவனை இடுப்பில் கை ஊன்றி முறைத்து நின்றாள்.

"சரிடா அதுக்கு என்ன?" என்று கமலி கேட்டாள்.

கண்மணியின் அப்பா ரகுபதி, அம்மா காந்திமதி, அண்ணன் சங்கர், அண்ணி கமலி, அண்ணன் மகன் கவின். கண்மணியின் குடும்பத்தில் இருப்பவர்கள் இவர்களே.

"இன்னைக்கு அவ அப்பா வரலைன்னு சொல்லிட்டுச் செமையா அழுதிட்டு, நான் பேசமாட்டேன், மேக்கப் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தாளா, அத்தை தான் அவளைச் சமாதானப்படுத்தி அவளுக்குச் சொல்லிக் கொடுத்து, அவளுக்குத் தைரியமூட்டி அவளை ஸ்டேஜுக்குக் கூட்டிட்டுப் போனாங்க, தெரியுமா?" என்று தனது குழந்தைக் குரலில் இன்று நடந்த அனைத்தையும் சுருக்கமாகச் சொன்னான்.

அவனை அள்ளிக் கொஞ்சிய கண்மணி, "சாப்பிட்டுத் தூங்குங்க வாங்க, நேரம் ஆகுது கவிக் குட்டி" என்று அவனை அழைத்துக் கொண்டு சென்று சாப்பாடு ஊட்டித் தூங்க வைத்தாள்.

அனைவரும் ஒன்றாகச் சிரித்துப் பேசிக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு அவர்களது ரூமுக்குச் சென்றார்கள். கண்மணி மட்டும் ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து இருந்தாள். அப்போது, "தூங்கலையா கண்மணி?" என்று கேட்டுக் கொண்டே கமலி அருகில் வர,

"தூங்கணும். ஆனா, தூக்கம் தான் வரல" என்றாள்.

"ஏன் கண்மணி, என்ன ஆச்சு? உடம்புக்கு எதும் பண்ணுதா?" என்றாள் அக்கறையாகக் கமலி.

"இல்ல அண்ணி, உடம்புக்கு ஒன்னும் பண்ணல. நல்லா தான் இருக்கேன். ஆனா, மனசுக்குள்ள தான் ஒரு கேள்வி வண்டா குடையுது." என்றாள்.

"என்ன கண்மணி, இந்த நேரத்தில அதும்" என்றாள் கமலி.

"அண்ணி, அந்தக் குழந்தை ராகினி பத்தி "

"ஏன், அந்தப் பொண்ணுக்கு என்ன?"

"அண்ணி, அந்தப் பொண்ணோட அப்பா வேலை இருக்குன்னு வரல, ஏதோ மீட்டிங்காகப் போயிருக்காரு, வேலை விஷயமானு அவங்க அம்மா சொன்னாங்க. ஆனா, அவங்க அம்மா ஏன் அண்ணி ஃபங்ஷனுக்கு வந்து அவளுக்கு உறுதுணையாக நிக்கல. அவங்க பெத்த பொண்ணு தான, அவளை ஏன் அவங்க பாட்டி (பெரியவங்க) வயசான அந்த அம்மா கூடத் தனியா அனுப்பி விடனும்? அவளோட அழுகை இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குது அண்ணி" என்றாள்.

"அவங்களுக்கும் எதும் வேலையா இருக்கும்டி.”

"அது எப்படி அண்ணி, பெத்த குழந்தையை விட்டுட்டு வேலை முக்கியமா?" என்றாள் ஆதங்மாக.

சிரித்த கமலி, "இப்போ கவினுக்கு அப்பா, அம்மா நாங்க ரெண்டு பேரும் இருக்கோம். ஆனா, இப்ப அவனோட ஸ்கூல் ஃபங்ஷனுக்கு நாங்க ரெண்டு பேருமா வந்தோம். நீதானே போன… அந்த மாதிரி அவங்களுக்கும், ஏதாச்சும் சிட்டுவேஷன் இருக்கும் கண்மணி" என்று சிரித்தாள்.

"இல்ல அண்ணி, இருந்தாலும் எனக்கு ஏதோ ஒன்னு இடிக்குது"

"இங்கப் பாரு, அவங்க பர்சனல் லைஃப்ல ஆயிரம் இருக்கும்டி. நான் பார்த்துக்கிறேன், நீங்க வேலைக்குப் போங்கன்னு நீ சொன்னது போல அவங்க வீட்ல, அவங்க மாமியார் சொல்லி இருக்கலாம். தன்னுடைய மகளை மாமியார் பார்த்துப்பாங்க என்று நினைச்சு அந்தக் குழந்தையோட அம்மா வேலைக்குப் போய் இருக்கலாம். அதுக்கு நீ ஏன் இவ்ளோ யோசிக்கிற?

உன் தூக்கத்தை விட்டு, இப்போ நீ ஏன் அவங்களப் பத்தி யோசிக்கிற? போ, காலையில வேலைக்கு வேற கிளம்பணும். நீ இன்னைக்கே லீவ் போட்டு இருக்க, மறந்திடாத" என்றாள் கமலி.


கண்மணி யோசனையுடனே, “சரி அண்ணி, நீங்க தூங்கலையா?" என்று கேட்டாள்.

"தூங்கணும், நீயும் போய் தூங்கு. நேரம் ஆகுது பாரு" என்று அவளைக் கமலி அனுப்பி வைத்துவிட்டு, 'யார் என்று தெரியாத குழந்தைக்காக, இவ்வளவு வருந்துகிறாளே, இவளுக்கு எப்பொழுது தான் கல்யாணம் கைகூடுமோ இறைவா' என்று மனதிற்குள் எண்ணி விட்டுத் தன்னுடைய ரூமுக்குச் சென்றாள்.

இங்குத் தூக்கத்திலும் ராகினி, கண்மணியைப் பற்றிப் புலம்ப, எழுந்து உட்கார்ந்த வினோத், 'இவ ஏன், அந்தப் பொண்ணப் பத்தியே யோசிக்கிறா? என் பொண்ண அந்த அளவுக்கு அந்தப் பொண்ணு பாதிச்சிருக்காளா? இது சரி இல்லையே' என்று எண்ணினான் வினோத்.

தூக்கத்திலும் ராகினி கண்மணியை நினைக்க, தூக்கம் வராமல் புரண்டு கொண்டு குழந்தை ராகினியை நினைத்துப் படுத்துக் கொண்டிருந்தாள் கண்மணி.

இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலம் எதுவோ?
 
Top