"ம்மா.. ஏந்திரிங்க ம்மா.. மார்னிங் ஆகிடுச்சு" என தளிர் விரல்களால் தன் அன்னையின் கன்னத்தை பற்றிய சித்து எழுப்ப முயன்றான்.
"இன்னைக்கு எனக்கும் ஆபிஸ் லீவ். உனக்கும் ஸ்கூல் லீவ் தான சித்து? கொஞ்சம் தூங்கு.." என தன் குட்டிக் கண்ணனிடம் உறக்கத்திலே கொஞ்சலுடன் கெஞ்சினாள் காவ்யா.
"ம்மா.. ஏந்திரி.." என தாயின் மேல் எறியவன் அவளை கட்டிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து முழித்துப் பார்த்த காவ்யா, "குட் மார்னிங் சித்து!" என அவனைக் கொஞ்சி நெற்றியில் முத்தமிட்டவள் பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றாள்.
தானும் பல்துலக்கி அவனையும் பல்துலக்க வைத்துவிட்டு அப்படியே அவனை குளிக்கவும் வைத்தாள். பின் அழகாக சித்துவிற்கு உடையணிந்து வராண்டாவிற்கு கூட்டி வந்தாள்.
எப்பொழுதும் அவன் பார்க்கும் ரைம்ஸை டிவியில் போட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
பாலை அடுப்பில் வைத்தவள், அப்படியே இருவருக்கும் காலை உணவிற்கு இட்லியையும் ஊற்றி மற்றொரு அடுப்பில் ஏற்றினாள். பின் சித்துவிற்கு மிதமான சூட்டில் பாலை கலந்துக் கொடுத்தவள், தனக்கும் காப்பியை போட்டுக்கொண்டு அவனுடன் அமர்ந்து கொண்டாள்.
இப்பொழுது இவள் இருப்பது இரண்டு படுக்கையறை கொண்ட வீடு தான். ஒன்று இவர்களுக்கு மற்றொன்று யாராவது வந்தால் தங்குவதற்கு. வாரநாட்களில் இவள் வேலை செய்யும் இடத்தில் அருகில் இருக்கும் பள்ளியில் சித்துவையும் சேர்த்துவிட்டாள்.
ஆனால் அவன் சிறுகுழந்தை என்பதால் அரைநாள் மட்டுமே பள்ளி. அவளுக்கு வரும் மதியவுணவு நேரத்தில் அவளும் சாப்பிட்டு அவனையும் சாப்பிட வைத்து அவளின் ஆபீஸிலே இருக்கும் டேகேரில் விட்டுவிடுவாள்.
மாலை வரும் பொழுது இருவரும் ஒன்றாகவே வருவர். இதற்கு தனியாக கட்டணமும் செலுத்துகிறாள்.
காப்பியை குடித்த காவ்யா சித்துவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு பத்தே நிமிடத்தில் குளித்து வந்தவள், வேகமாக சட்டினியை அரைத்து அவனுக்கு ஊட்டிக்கொண்டே அவளும் இட்லியை சாப்பிட்டாள்.
இவ்வளவு நேரம் அன்னையை விட்டதே போதும் என எண்ணியவன், அன்னையின் மடியில் ஏறி படுத்துக்கொண்டே டிவியில் தோன்றிய கார்டூனை பற்றி கண்களை விரித்து கைகளை அசைத்து கதை கூறிக் கொண்டிருந்தான் சித்து.
இதழில் தோன்றிய மென்னகையுடன் அவன் தலையை கோதிக்கொண்டே கதைக்கேட்டு கொண்டிருந்தவள் சிந்தனை மட்டும் அங்கில்லை!
அவர்கள் இந்த வீட்டிற்கு வந்து இரு வாரங்கள் ஆகிவிட்டன. இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில் அனைத்தையும் ஏறக்கட்டுவது, அடுக்கி வைப்பது என அனைத்தையும் முடித்துவிட்டு கடந்த ஞாயிறுதான் அவளின் குடும்பம் அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
"அப்படி அடம் பிடித்து அவசரமா எதுக்கு தான் இப்ப வீடு மாறுனியோ? அத பத்தி கேட்டா மட்டும் வாயவே திறந்திடாத.." என அன்னையின் கேள்விக்கான பதிலை தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
காவ்யாவிற்கு திருமணம் முடித்து இந்த வருடத்துடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன!
முதுநிலை படிப்பை முடித்தவள். படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்வேன் என சொன்னவளை,
"நல்ல வரன் வந்திருக்கு அம்மு.. கல்யாணம் பண்ணிக்கோ பாப்பா. வேலைக்கெல்லாம் சென்று கஷ்டபட வேண்டாம்" என அதையும் இதையும் கூறி வேலைக்கு செல்ல வேண்டும்; வெளியுலகை தெரிந்துக் கொள்ளவேண்டும் என அவளின் கனவு நிறைவேறாமலே சென்றது.
திருமணம் முடிந்த அடுத்த வருடத்தில் சித்துவும் வந்துவிட தன் கனவை தூக்கித் தூற வைத்துவிட்டாள். அடுத்த இரண்டாண்டுகளில் அவள் கணவன் ரமேஷ் இறந்துவிட மன அழுத்தத்தில் இருந்தவள், ஓராண்டு கழித்து வேலைக்கு செல்லும் முடிவை எடுத்தாள்.
அதற்கும் தனியாக பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் போராடி இப்பொழுது தான் ஒருவருடமாக வேலைக்குச் செல்கிறாள்.
அவள் தங்கியிருந்த பழைய வீடு அவளின் அப்பாவின் நண்பர் வீடுதான். அவரும் அவரின் மனைவியும் மட்டுமே இருக்க, மேல் தளத்தில் இவள் இருந்து கொண்டாள்.
அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க அவர்களோடு செல்ல முடிவெடுத்து அவர்கள் இருந்த கீழ்தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு புறபட்டனர். அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகியது!
அந்த வீட்டிற்கு புதிதாக குடித்தனம் வந்தவன் இவளை பார்க்கும் பார்வையும், பேசும் பேச்சும் சுத்தமாக சரியில்லாமல் இருக்க அதுவே அவளுக்கு மேலும் மன உளைச்சலைக் கொடுத்தது.
ஒருநாள் சித்து உறங்கிக்கொண்டிருந்த நேரம் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அப்பொழுது அவன் வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டான்.
எப்படியோ அவனிடமிருந்து தப்பித்தவள், 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு!' என நினைத்து, தன் அண்ணனிடம் கூறி இங்கு மாறி வந்துவிட்டாள். கௌதமும் இவளிடம் ஒரு வார்த்தை கேட்காமல் அவளிற்கு தேவையானதை செய்தான்.
"ம்மா.." என்ற சித்துவின் சத்தத்தில் சிந்தனை அறுபட நடப்பிற்கு வந்தாள்.
"ம்மா பார்க் போலாமா..?" படபடக்கும் பட்டாம்பூச்சி விழிகளை சிமிட்டிக் கொண்டே கேட்டவனை அள்ளி எடுத்து நெற்றியில் இதழ்பதித்தவள், "மதியம் சாப்பிட்டதும் போகலாம்" என அவனின் கன்னத்தை கிள்ளிச் சொல்ல,
சமத்தாக தலையசைத்தவனிடம், "போதும் டிவி பார்த்தது. இப்ப நீ பெயிண்ட் பண்ணு சித்து. அம்மாவும் வேலையை முடிக்கணும்ல?" என அவனை ஒரு வேலையில் மூழ்கடித்தாள். பின் துணி துவைப்பது; வீட்டை சுத்தம் செய்வது; மதிய உணவு தயார் செய்வது என அவளின் நேரம் இறக்கை இல்லாமல் பறந்தது.
அந்த தளத்தின் மேல் தளத்தில் கார்த்திக் வசித்து வந்தான். வாரயிறுதியில் எந்த ஒரு அலுவலக வேலையையும் வைத்துக் கொள்ளமாட்டான். அப்படி அவசரம் என்றால் மட்டுமே செய்வான்.
எப்பொழுதும் போல் காலையிலே எழுந்தவன் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கும் சமைத்தவன், வராண்டாவில் அவனுக்கு பிடித்த படத்தை டிவியில் போட்டு படுத்துக் கொண்டிருந்தான்.
நான்கு மணியளவில் கிரிக்கெட் விளையாட தேவையான மட்டை, பந்து மற்றும் இறகுபந்து விளையாட தேவையான ராக்கெட், இறகுபந்து என அனைத்தையும் அதற்குண்டான பையில் போட்டுக்கொண்டவன் அந்த அப்பார்ட்மென்டின் பார்க்கிற்கு செல்ல மின்தூக்கியில் ஏறினான்.
அது நான்காவது தளத்தில் நிற்க, அங்கே காவ்யாவும் அவளின் மகன் சித்துவும் எறிக்கொண்டனர்.
மகனிற்கு தேவையான தண்ணீர் பாட்டில், பந்து, ஸ்னாக்ஸ் என்று கையில் ஒரு பையில் வைத்திருந்தாள் காவ்யா.
அவளைப் பார்த்த கார்த்திக் ‘சிரிக்க வேண்டுமா?' என யோசிக்கையிலேயே மின்தூக்கியினுள் வந்த காவ்யா கதவை பார்த்தவாறு திரும்பி நின்றுக்கொண்டாள்.
காவ்யாவின் கையை பிடித்திருந்தாலும், அவனுக்கு தேவையான விளையாட்டு பொருளை அன்னை வைத்திருந்தாலும் சித்துவின் கண்கள் கார்த்திக்கிடம் உள்ள விளையாட்டு பொருட்களுக்கே சென்றன.
சித்துவை கண்டுகொண்டவன் இரு புருவங்களை உயர்த்தி 'என்ன?' என்னும் விதம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டதும் கூச்சத்தில் அன்னையின் பின்னே மறைந்து கொண்டவனைப் பார்த்த கார்த்திக் சிரித்துவிட்டான்.
கீழ் தளம் வந்ததும் சித்துவை அழைத்துக்கொண்டு விறுவிறுவென காவ்யா சென்றுவிட, கார்த்திக்கை பார்த்த மற்ற குழந்தைகள்,
"ஹே கார்த்திக் அங்கிள் வந்துட்டாங்க.."
"கார்த்திக் அண்ணா விளையாட வந்துட்டாங்க சீக்கிரமா வாங்க" என ஒலிபெருக்கி இல்லாமலே அவர்களின் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துக்கொண்டு சந்தோசமாக பார்க்கிற்கு ஓடினர்.
கார்த்திக் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி யாரிடமும் அதிகமாக பேசவேமாட்டான். ஆனால் அவனுக்கு இருக்கும் வேலை மற்றும் மன அழுத்தங்களை குறைப்பதற்கு வாரயிறுதியில் இப்படி குழந்தைகளுடன் விளையாடுவது அவனின் வழக்கம்.
தொடக்கத்தில் டீன் ஏஜ் பசங்களுடன் மட்டுமே விளையாடியவன் ஆட்கள் சேர சேர வயது வித்தியாசம் இன்றி அனைவருடனும் விளையாடத் தொடங்கினான்.
எப்பொழுதும் போனிலோ, கம்ப்யூட்டரிலோ இருக்கும் பிள்ளைகளை பெற்றவர்களும் விளையாட கார்த்திக்கை நம்பி முழுமனதுடன் அனுப்புவர்.
அவனிடம் வந்த குழந்தைகளை பார்த்தவன், "எல்லாரும் ஹோம் ஒர்க் முடிச்சிட்டீங்களா?" என்று தான் முதலில் கேட்பான்.
அவனின் கேள்விக்கு திரு திருவென முழித்தவர்களைப் பார்த்து அவர்கள் முடிக்கவில்லை என அவனே யூகித்து, "இப்ப விளையாடுங்க! நாளைக்கு காலைல முடிச்சிட்டு வந்தால் தான்.. நாளைக்கு விளையாட்டில் சேர்த்துப்பேன்" என டீல் பேசினான். அவர்களும் ஓகே கார்த்திக் அங்கிள் என கோரசாக கத்தினர்.
சின்ன குழந்தைகள் விளையாடும் ஊஞ்சலில் சித்துவை உட்காரவைத்து ஆட்டி விட்டுக் கொண்டிருந்தாள் காவ்யா.
சிறிது நேரம் அதில் விளையாடியவன் பந்தினை எடுத்துக்கொண்டு மற்ற குழந்தைகளுடன் விளையாட ஓடிவிட்டான்.
அந்நேரம் கைபேசியில் அழைத்த அன்னையிடம் பேசிக்கொண்டே சித்துவையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள், காவ்யா.
"நீ எப்ப அம்மு உன்னோட மாமியார் வீட்டுக்கு போக போற?"
"போகணும் ம்மா. வீடு மாறுறேன்னு சொல்லத்தான் செய்தேன். ஆனா ஒரு போன் கூட பண்ணி கேட்கவே இல்ல.." தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சித்துவை பார்த்துக்கொண்டே, "சித்து கிட்ட மட்டும் நாள் தவறாம பேசிடுவாங்க.." கசந்த புன்னைகையுடன் சொன்னாள்.
"அவங்க அப்படிதான! நீ ஒரு ரெண்டு வாரம் கழிச்சி போய்ட்டு வா அம்மு. இல்லனா உன்னை தான் குறை சொல்லுவாங்க.." அனைத்தையும் யோசித்த தாயுள்ளம் கூறியது.
"சரி ம்மா. நான் பார்க்ல இருக்கேன். அப்புறமா பேசுறேன்" என துண்டிக்க சித்து அவளை நோக்கி இரு கால் பாய்ச்சலில் ஓடிவந்தான்.
அவளிடம் வந்து தண்ணி குடித்தவன், "ம்மா.. கிரிக்கெட் விளையாட போகட்டா..?" அங்கு கார்த்திக்குடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக்கொண்டே ஆசையாகக் கேட்டான்.
திரும்பி அங்கு விளையாடுபவர்களை பார்த்தவள், "அவங்க எல்லாரும் ரொம்ப பெரிய பசங்களா இருக்காங்க சித்து குட்டி! நீ இங்கேயே விளையாடு!" என்றாள்.
"மாட்டேன்.. கிரிக்கெட் தான் விளையாட போவேன்" என காலை கையை உதைத்துக்கொண்டு அழுதவனை முறைத்தவள்,
"விளையாடியது போதும். இனி பார்க் போகணும்னு கேட்பல? அப்ப உன்னை கூட்டிட்டு வரேன்னான்னு பாரு.." என மிரட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல அவனை அழைத்தாள்.
அன்னையின் இந்த தாக்குதலை எதிர்பார்க்காதவன் வீறிட்டு அழத் தொடங்கினான்.
சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்ப, சங்கடமாக உணர்ந்த காவ்யா சித்துவின் முன் குனிந்து,
"அங்க போய் வேடிக்கை மட்டும் பார்க்கலாம் சரியா? அழக் கூடாது" என அவனின் கண்ணீரைத் துடைத்தவள் குடிக்க சிறிது தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அங்கு அழைத்துச் சென்றாள்.
ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க, "அம்மா நானும் விளையாட போகிறேன்.." என அடம்பிடித்தவனை பார்வையாலே அடக்க முயன்றாள்.
அவர்கள் வந்ததிலிருந்து சித்துவையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், "விடுங்க ஒரு ரெண்டு பால் போடட்டும்" என்றான்.
காவ்யா சரி என்று செல்வதற்குள் அவளின் கையை விட்டுவிட்டு கார்த்திக்கிடம் ஓடத் தொடங்கினான் சித்து. தன் கையை விட்டு ஓடியவனை பதட்டம் நிறைந்த குரலில், "பார்த்து சித்து.." என்ற காவ்யாவை பார்த்த கார்த்திக்,
"நான் பார்த்துகிறேன்" என நம்பிக்கை ஊட்டினான்.
கார்திக்கிடம் வந்து நின்ற சித்து, "நானு பேட் பண்ணுவேன் அங்கிள்" என்றான் மழலை குரலில் பேட் உயரமே இருந்த சித்தார்த்!
சிரிப்புடன் அவனை தன் கைக்குள் வைத்துக்கொண்ட கார்த்திக், "உன்னுடைய பெரு சித்துவா?" என விசாரித்தான்.
"இல்ல சித்தார்த்.." என்றவனை இரண்டு பந்துகளை அடித்துவிட்டுப் போகவிட்டான்.
அங்கிருந்த குழந்தைகள் அவனை கூப்பிடுவதை பார்த்த சித்து, "தேங்க்ஸ் கார்த்தி அங்கிள்" என தலையை சாய்த்து சிரிப்புடன் உரைத்துவிட்டு சிட்டாக தன் அன்னையிடம் பறந்துவிட்டான்.
உடனே காவ்யா அவனை மேலே கூட்டி வந்துவிட்டாள். அப்பொழுதுதான் வீட்டினை பூட்டிவிட்டு வெளியே வந்த லட்சுமி பார்த்தது, ஆடி களைத்து மின்தூக்கியில் இருந்து வெளியே வரும் சித்துவையும் காவ்யாவையும் தான்.
உடனே தன் கணவர் பரசுராமனை பார்த்தவர் "சகுனம் சரியில்லை வாங்க வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சிட்டு அப்புறம் கிளம்பலாம்" என அடுத்தவரைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் விருட்டென கூறிவிட்டு சென்றுவிட்டார்.
கணவரை இழந்த காவ்யாவிற்கு இதுபோன்று அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. அதனைக் கேட்டவளுக்கு வலிக்கவே செய்தது. ஆனால் அதனை முகத்தில் காட்டாமல் வீட்டினை திறந்து சித்துவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
ஏழு மணிபோல் மேலே வந்த கார்த்திக் அலுப்புத்தீர குளித்துவிட்டு வந்தான். பின் கைபேசியில் அன்னையுடன் பேசத் தொடங்கினான்.
"எப்ப தான் கார்த்தி கல்யாணம் பண்ணிக்க போற?" எங்கே தன் மகன் காலம் முழுவதும் இப்படியே இருந்துவிடுவானோ? என்ற கலக்கத்துடனே விசாலாட்சி கேட்டார்.
மாவிற்கு ஊறப்போட்ட அரிசியை கழுவிக்கொண்டே விசாலாட்சியிடம் பேசிக் கொண்டிருந்தவன் அவரின் கேள்வியில் ஒரு நொடி அமைதியானான்.
"இந்த கேள்வியை கேட்டா மட்டும் வாய தொறக்க மாட்டியே?" என மீண்டும் தொடங்கிய தாயிடம்,
"ஏன்? ஒருமுறைக்கு இருமுறை நான் அசிங்கப்பட்டது பத்தாதாம்மா உங்களுக்கு..?" வல்லென்று அவரிடம் விழுந்தான்.
தன் மகன் பேசியதில் வலித்தாலும் அப்படியாவது அவன் மனக் குமுறலை வெளியிடட்டும் என்று நினைத்த தாயுள்ளம், "சரி கார்த்தி. உடம்ப பார்த்துக்கோ" என வைத்துவிட்டார்.
பின்பு மாவை அரைத்து வைத்துவிட்டு பேருக்கு இரவுணவை சாப்பிட்டவனுக்கு சித்துவின் ஞாபகம் தான் வந்தது.
சின்ன டவுசர், டீஷர்ட் அணிந்து அவன் அன்னையின் கையைப் பிடித்துக்கொண்டு மின்தூக்கியினுள் வந்தவனை அள்ளி அணைக்கவே ஆசைப்பட்டான்.
ஆனால் ஏதாவது கூறுவர்களோ? என நினைத்துவிட்டு அமைதியாகிவிட்டான்.
பின் பார்க்கிலும் தன் அன்னையிடம் சேட்டை செய்துகொண்டே முயல் போல் துள்ளிக் குதித்து விளையாடியவனை சேட்டைக்காரன் என மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
அவனிடமே வந்து விளையாடிவிட்டு செல்லும் பொழுது அழகாக நன்றி வேறு உரைத்தவனை மிகவும் பிடித்துவிட்டது கார்த்திக்கிற்கு!
குழந்தைகள் என்றாலே அதிகமான பிரியம் கொண்டவனிற்கு சித்துவை பிடித்தது ஆச்சரியப்படும் அளவிற்கு இல்லை தான்.
ஆனால் இப்பொழுது தோன்றிய இந்தப் பிடித்தம் கார்த்திக்கின் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்குமா?
காவ்யா மற்றும் கார்த்திக்கை இணைக்கும் பாலமாக சித்து இருப்பானா? காலமும் நேரமும் தான் பதில் சொல்ல வேண்டும்.