எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 8

kani suresh

Moderator
அத்தியாயம் 8

பத்மா அனைவரையும் பார்த்துவிட்டு மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"அவ அதுக்கு முன்னாடியே அவங்க அப்பா, அம்மாகிட்ட நாங்க பொண்ணு கேட்டு போகும்போதே, என் பையனைப் புடிச்சிருக்கு, எனக்குக் கட்டி வைங்கன்னு கேட்டுருப்பா போல. அவங்க அப்பா தான், எனக்குப் பெரிய பொண்ணு இருக்கு, அவள விட்டுட்டு உன்னை முதல்ல கட்டிக் கொடுக்க மாட்டேன். அதுவும் இவர் அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை. அவளுக்கும் பிடிச்சிருக்கு, மாப்பிள்ளைக்கும் அவளப் புடிச்சிருக்கு அப்படின்னு சொல்லிக் கட்டிக் கொடுத்திருக்கிறாரு.

அந்தப் பொண்ணு அதே வன்மத்தோட இருந்திருக்கும் போல. கல்யாணம் ஆன அடுத்த மாசமே என் மருமகளுக்குக் குழந்தை தங்கிடுச்சு. அவளுக்கு வளைகாப்பு முடிஞ்சு கூட நாங்க அவளைப் பொறந்த வீட்டுக்கு அனுப்பி விடல. அவங்க வீட்டுல கூப்பிட்ட அப்பவும் நாங்க அனுப்பல, எங்க மருமகளும் நான் இங்கே இருக்கேன், அப்படின்னு சொல்லிட்டா. திரும்பக் குழந்தை பிறக்க பத்து தேதி இருக்கப்ப இங்க வந்தாங்க.

குடும்பத்தோட மூணு பேரும் தான் வந்திருந்தாங்க. அப்போ என் மருமககிட்ட அவ தங்கச்சி, மரியாதையா நீ இப்போ எங்களோட நம்ம வீட்டுக்கு வந்திடு. நீ இங்க இனி இருக்கவும் கூடாது, மாமா கூட வாழவும் கூடாது. எனக்கு அவரைப் புடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கா… இது எனக்கான வாழ்க்கை, அவரை விட்டுப் பிரிஞ்சு போயிடு, அவ்வளவு தான் உனக்கு மரியாதை… என்று சொல்லி என் மருமகளை நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது மிரட்டி இருக்கிறாள்.

இன்னும் நிறையப் பேசியிருப்பா போல. அதையே நினைச்சுட்டு என் மருமக ஒன்பதாவது மாசத்துல இருந்து என் மகன்கிட்ட இருந்து ஒதுக்கம் காமிச்சிருக்கா. அவளுக்கு மனதுக்குள் நிறைய வலி இருந்திருக்கு, அதுக்காக என் பையனைச் சந்தேகப்பட்டுட்டா என்று அர்த்தம் இல்ல. என் தங்கச்சி உங்க மேல ஆசைப்படுறா என்று என் பையன்கிட்டச் சொல்ல முடியாம தவிச்சிருந்திருக்கா. அந்த நேரத்துல அவ ரொம்ப வீக்காவே இருந்தா. அவளுக்கு ஒன்பது மாசம் முடியுற நேரத்துல வந்து அவங்க அப்பா, அம்மா முதல் பிரசவம் நாங்க தான் பார்க்கணும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அழைச்சுட்டுப் போனாங்க. முதல் பிரசவம் பெண் வீட்டில் பார்க்க வேண்டும் என்பதால், நான்தான் என் மகனையும், மருமகளையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

அது மட்டும் இல்லாமல், அவளுடைய அப்பா கெஞ்சிக் கேட்டுக் கொண்ட காரணத்தினாலும், அரை மனசாக தான் அவளும் கிளம்புனா. என் மகனும் அரை மனசா தான் அனுப்பி வச்சான். ஆனா, அப்படிப் போனவ பிணமா தான் திரும்பி வருவான்னு நாங்க எதிர்பார்க்கல. அவ அவங்க வீட்டுக்குப் போன அஞ்சாவது நாளிலேயே அவளுக்கு வலி வந்துருச்சு.

நாங்க அதை வலின்னு தான் நினைச்சோம். ஆனா அது வலி இல்ல. அவளோட தங்கச்சி பிரியா, அவள மேல மாடியில் இருந்து கீழே தள்ளி விடவும், படிக்கட்டில் உருண்டு வந்து கீழே விழுந்து இருக்கா. அப்போ, என் மருமகளுக்கு வயித்துல அதிகமாவே அடிபட்டு இருக்கு. ஏற்கனவே ஒரு மாசமா தங்கச்சியோட பேச்சால் மனம் உடைந்து போயிருந்தவளுக்கு, தன் புருஷன் மேல இருக்க ஆசையால் தான், நிறைமாதமாக இருக்கும் நிலையில் கூடக் கீழே தள்ளிவிட நினைத்திருக்கிறாள். அந்த அளவுக்குக் கொடுமைக்காரியா தன் தங்கச்சி என்று எண்ணி பயந்து இருக்கிறாள். அப்போது அவளுக்கு பனிக்குடம் உடைந்து இருக்கு.


என் மருமகளைக் கீழே தள்ளி விட்டுட்டு, ஒன்னும் தெரியாதது போல் அவ தங்கச்சி எங்களுக்கு போன் பண்ணி, அக்கா நடந்து வரும்போது படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துட்டா. அவளுக்கு வலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. நான் இப்போதான் அப்பாவுக்கு போன் பண்ணி இருக்கேன். நீங்களும் சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு வாங்க… என்று சொல்லிட்டு வச்சுட்டா. நாங்களும் அதை உண்மைன்னு நம்பி ஹாஸ்பிடலுக்கு அடிச்சுப் புடிச்சு ஓடினோம்.

ஹாஸ்பிடல்ல டாக்டர், என் பையன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு, ரெண்டு உசுரில் ஏதோ ஒரு உசுரைதான் காப்பாற்ற முடியும், வயிற்றில் அடி பலமாக இருக்கிறது… என்று சொன்னார்கள். என் மகன் அழுதுகிட்டே, எனக்கு ரெண்டு உசுரும் வேணும்… என்றான். ஏதோ ஒரு உசுரு தான் காப்பாத்த முடியும், கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கன்னு சொல்லும்போது கூட எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம். அவ இருந்தால் தான் அடுத்த குழந்தை பற்றிக் கூட யோசிக்க முடியும்… என்று என் மகன் கண்ணை மூடிட்டுச் சொல்லிட்டான்.

அப்பக் கூட என் மருமக, நான் வேணாம் மாமா… உங்க கூட எப்பயும் என்னோட இடத்தில் இருந்து உங்களப் பார்த்துக்க நம்ம மகள் இருப்பா மாமா. பாப்பா வேணும்னு சொல்லிக் கையெழுத்துப் போடுங்க மாமா என்று கெஞ்சிக் கொண்டே, என் மகனின் கையைப் பிடித்துக் கொண்டே என் மருமக உசுர விட்டுட்டா...

அதுக்கப்புறம், அவசரமா குழந்தைக்குத் துடிப்பு இருக்குன்னு சொல்லிட்டு, டாக்டர் ஆபரேஷன் பண்ணிக் குழந்தையை மட்டும் வெளியே எடுத்தாங்க. ஹாஸ்பிடல்ல இருந்து உடனே வாங்கிட்டு வந்து என் மருமகளை அடக்கம் பண்ணிட்டோம். கையோடு எங்க பேத்தியை நாங்களே வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துட்டோம்.

முழுசா நானும், என் மகனும் தான் என் பேத்தியைப் பார்த்துகிட்டோம். அப்பக் கூட, என் மருமகளோட அம்மா பார்த்துக்குறேன்னு சொன்னதுக்கு, இல்ல நாங்களே பார்த்துக்கிறோம் என்று சொல்லிட்டுப் பச்சிளம் குழந்தையோடு வீட்டுக்கு வந்துட்டோம். ஒரு மாசம் ஆகி இருக்கும். ஒரு மாசம் கழிச்சுத் தனியா எப்படிக் குழந்தையைப் பார்த்துப்பீங்க, என்கிட்டக் கொடுங்கன்னு கேட்டாங்க மருமகள் வீட்டில். இல்ல, என்னோட மகளை நானே பார்த்துக் கொள்கிறேன். யாரோட உதவியும் எனக்கு வேணாம் அப்படின்னு கறாரா சொல்லிட்டான்.

அப்போ தான், நான் வந்து உங்களுக்குத் துணைக்கு உங்க வீட்டில் இருந்தே குழந்தையைப் பார்த்துக்குறேன்… அப்படின்னு சொல்லி என் மருமகளோட தங்கச்சி பிரியா வந்தா. சரி அவ அக்காவோட குழந்தையைப் பார்த்துக்க, அக்கா மேல இருக்க பாசத்துல தான் வந்து இருக்கா… அப்படின்னு நினைச்சு தான் நாங்க அவகிட்டக் குழந்தையை விட்டு இருந்தோம். அப்போ எனக்குக் கொஞ்சம் உடம்பு முடியாம இருந்துச்சு.

என் மகனோட வாழ்க்கை இப்படிப் பாதியிலேயே போயிடுச்சு. என் மருமக இல்லையே, கைக்குழந்தையை வைத்துக்கொண்டு என் மகன் இந்த வயதில் தனி மரமாக நிற்கிறானே… என்று எண்ணி வருந்தி வருந்தி எனக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

அந்த வருத்தத்தில் கொஞ்சம் உடைந்து போய் இருந்தேன். அந்த நேரத்தில் பிரியா வந்திருந்தது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆகையால் குழந்தையின் பொறுப்பை அவளிடம் விட்டுவிட்டு நான் சிறிது நேரம் ஓய்வு எடுக்ப் படுத்திருந்தேன். என் முன்னாடி அக்கா குழந்தையாக இருந்தாலும், தன் குழந்தை போல் பாவித்து நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள்னு நினைச்சு, இந்தப் பொண்ணைக் குழந்தையைக் காரணம் காட்டியாவது மகனுக்குக் கட்டி வச்சா என்ன? சொந்த அக்கா குழந்தையைத் தன் குழந்தை போல் பார்த்துக்க மாட்டாளா? என்று நினைச்சேன்.

ஆனா, அவளால் தான் என் மருமகளே இறந்தாள் என்று நாங்க அன்னைக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டோம். என் மருமக இறந்ததில் இருந்து மனைவி இவ்வுலகில் இல்லை, கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? என்று துக்கத்தில் இருந்தவன், வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அந்த நேரத்தில் குழந்தை அழுகிறது என்று சொல்லிக் குழந்தையை ரூமுக்குள் அழைத்துச் சென்ற பிரியா, புட்டிப்பால் கொடுக்கிறேன்னு என் பேத்தியை ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போனா... அப்பவும் குழந்தை அழற குரல் நிற்காமல் கேட்டுக்கொண்டே இருக்க, என் மகன் தான் என்ன ஆயிற்று என்று எண்ணி ரூமுக்குள் சென்றான். அப்பொழுது அவன் கண்ட காட்சியில் அவனுக்குக் கை கால்கள் நடுக்கம் எடுக்க, உடல் உதறியது.


என் மருமகளோட தங்கச்சி பிரியா, என்னோட பேத்தி பச்சக் குழந்தை முகத்தில் தலகாணியை வைத்து அழுத்திக்கொண்டு இருந்திருக்கிறாள். அவள் அழுத்தம் கொடுத்த வேகத்தில் தான் குழந்தை வீறிட்டு அழுது இருக்கிறது. அதை நேருக்கு நேராகப் பார்த்த என் மகனுக்கு எந்த அளவிற்கு மனம் பதைபதைத்து இருந்திருக்கும்.

அவள் செய்த செயலில் வேகமாக அவளை இழுத்துக் கீழே தள்ளியவன், அவளது இரு தாடைகளிலும் அறைந்திருந்தான். குழந்தையைப் பார்த்துக்க வந்திருக்கேன் என்று சொல்லிட்டு, என்ன வேலை பார்த்துட்டு இருக்கடி… என்று குரலை உயர்த்திக் கத்தச் செய்தான். அவன் கத்திய வேகத்தில் தான் நானும் உள்ளே சென்றேன். இனி, உனக்கு இந்த வீட்ல இடமில்லை, வெளியே போடி என்று கத்தினான்.

நான் ஏன் வெளியே போகணும்? இது எனக்குச் சொந்தமான இடம். இந்தச் சனியன் இருக்கப் போய் தான், இன்னும் நீங்க எனக்குக் கிடைக்காம இருக்கீங்க. இந்தச் சனியனும் அன்னைக்கே அந்தச் சனியனோட போய் தொலைந்து இருந்தா, எனக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அந்த அனாதை நாயோட, இந்த அனாதை நாயும் போய் தொலைஞ்சிடும்னு நினைச்சேன்… என்று ஆவேசமாகக் கத்தினாள். அன்றுதான் அவளுடைய முழு சுய ரூபத்தையும் நானும், என் மகனும் பார்க்க நேரிட்டது.

அதிர்ச்சி ஆகி நாங்கள் இருவரும் அவளைப் பார்க்க, “யாருடி ஆனாதை?” என்று வினோத் கத்தினான். "உன் பொண்டாட்டி தான், வேற யாரு? அவளுக்குப் பிறந்த இந்தப் பிள்ளையும் அனாதை தான். நான் தான் உன் பொண்டாட்டியை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டேன். என்னால தான் அவ செத்தா… அப்படின்னு எல்லாக் கதையும் அவளே அவ வாயால் சொல்லச் செய்தாள்.

அவ வாயாலே எங்களுக்குத் தெரியாத எல்லாம் உண்மைகளையும் கேட்டதுக்கு அப்புறம், எங்களுக்கு எப்படி இருக்கும்? அவளை நம்பி தான் எங்க பேத்தியைப் பார்த்துக்கச் சொல்லி விட்டோம். அதிலிருந்து தான் என் மகனுக்கு ராகினியை, யார்கிட்ட விடவும் பயமா இருக்கு. என்ன தான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், சொந்தமாக இருந்தாலும் இப்போ வரை அவனுக்கு உள்ளுக்குள் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த விஷயம் நடந்ததிலிருந்து முழுக்க முழுக்க, ஒரு வருஷம் ராகினியை அவன் தான் பார்த்துக்கிட்டான். வீட்ல இருந்து வேலை செஞ்சான். ராகினி அடி எடுத்து வைக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், நான்தான் அவனை வீட்டிலேயே இருந்தால் எப்படிடானு கேட்டு வேலைக்கு அனுப்பி வச்சேன். அப்பவும் என்கிட்ட ஆயிரம் பத்திரம் சொல்லிட்டு தான் போவான்.

இதெல்லாம் நான் இப்ப உங்ககிட்டச் சொல்றதுக்குக் காரணம், என் மகன் அவன் பொண்டாட்டி கூட சந்தோஷமா தான் வாழ்ந்தான். அதுக்காக இனி அவன் வாழ்க்கையில் வரப் போகிற பொண்ணு கூடச் சந்தோஷமாக வாழ மாட்டான்னு கிடையாது. ஆனா இப்போ அவனுக்குக் கல்யாணத்தில் ஈடுபாடு இல்லை. நானும் இப்போ வரைக்கும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கெஞ்சிட்டு தான் இருக்கேன். பண்ண மாட்டேன்னு சொல்றான்.

நீ கேட்ட மாதிரி தான் மா… ஒரு அம்மாவாக என் இடத்தில் இருந்தும் கொஞ்சம் யோசிக்கணும். நீ கேட்டது என்னவோ நியாயம் தான். ஆனால், இதுவரைக்கும் என் பையனுக்கு நான் பார்த்த எல்லா இடத்திலுமே பேத்தியை நான் வளர்க்கணும். இல்லனா, அவங்க அம்மா வீட்ல விடனும் என்ற மாதிரிக் கேட்டு இருந்தாங்க. ஆனா கண்மணி எங்க வீட்டுக்கு வந்தா என் மகனோட வாழ்க்கையும் நல்லா இருக்கும். என் பேத்தியும் வாழ்க்கை முழுசும் எங்களுடன் இருப்பா, என்ற நம்பிக்கை வந்துச்சு. அந்த ஒரே காரணத்துக்காக தான் இப்ப இங்க வந்து நிக்கிறேன்.

அது மட்டும் இல்ல, என் பேத்தியை உங்க பொண்ணு ரொம்பவே பாதிச்சு இருக்கா… அது எந்த வகையில அப்படின்னு எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. இந்த நிமிஷம் வரைக்கும் வார்த்தைக்கு வார்த்தை, இப்பத் தொடர்ந்து ஒரு வாரமா என் பேத்தி வாயில இருந்து வர வார்த்தை கண்மணி ஆன்ட்டி மட்டும் தான். அந்த ஒரே காரணத்துக்காக தான் இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்…” என்று கையெடுத்துக் கும்பிட்டவர்,


“நீங்க யோசிச்சு ஒரு பதில் சொல்லுங்க, நான் வரேன். தப்பா எடுத்துக்காதீங்க" என்று தன்னுடைய போன் நம்பரை எழுதி வைத்துவிட்டு அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அவரது வீட்டை நோக்கிக் கிளம்பி விட்டார் பத்மா.


 
Top