எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 11

kani suresh

Moderator
அத்தியாயம் 11


கமலி தன் கணவனைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாள்.

ரூமுக்குள் சென்ற கண்மணிக்குத் தலை வலிப்பது போல் இருந்தது. இப்படி ஒன்றை அவள் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை. தனக்கு அருகில் அவனது நிழலாடுவது போல் இருந்தது. அதுவும் தன்னை "திமிரு" என்று சொன்னது நினைவில் வந்தது. தலையை உலுக்கினாள்.

'இது சரிவராது, சொன்னா யாரும் கேட்கவும் மாட்டாங்க. அதுவும் கமலியைச் சமாளிக்க ரொம்பவே கஷ்டம்' என்று எதையெதையோ யோசித்து இறுதியில் தனக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, மணமேடை வரை வந்து தன் திருமணம் நின்றது அனைத்தும் நேற்று நடந்தது போல நினைவில் வர அவளுக்குக் கண்கள் கலங்கியது.

அப்பொழுது அவளது ரூம் கதவைத் திறந்து கொண்டு கவின் ஓடி வர, "கவி குட்டி" என்று அவனைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவனது தலையைக் கோதினாள். எழுந்து உட்கார்ந்து அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, "அத்தை ஏன் அழுவுற?" என்றான்.

"ஒன்னும் இல்ல டா கவிக்குட்டி" என்றாள்.

"பொய் சொல்லாத. உனக்கு ராகி அப்பாவைப் பிடிக்கலையா? நீ வேணாம்னு சொல்லிடு. ஆனா, ராகி பாவம் தெரியுமா? அம்மா இல்லனு ஃபீல் பண்ணி இருக்கா. எத்தனை நாள் எல்லாப் பசங்களும் அவங்க அம்மாவைப் பத்திச் சொல்லும் போது, ஏன் நானே உன்னை, எனக்கு நீ இன்னொரு அம்மா மாதிரி இருக்கன்னு சொல்லும்போது எல்லாம் உனக்கு ரெண்டு அம்மா இருக்காங்க, எனக்கு ஒரு அம்மா கூட இல்லடானு சொல்லி பீல் பண்ணி இருக்கா தெரியுமா? அவங்க அப்பா முன்னாடி அம்மா இல்லைன்னு சொல்லி வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவங்க அம்மாவப் பத்தி வீட்ல பேசவே மாட்டாளாம்.

அவங்க பாட்டி சொல்லி இருக்காங்க, அம்மா பத்திப் பேசினா அப்பாவுக்குக் கஷ்டமாயிடும்னு சொல்லி இருந்ததால அவங்க அம்மாவப் பத்திப் பேசவே மாட்டாளாம். நீ அவங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்ன மாதிரியே அவளையும் பார்த்துப்ப இல்ல. அவளுக்கும் உன்ன மாதிரி ஒரு நல்ல அம்மா கிடைக்கும் இல்ல." என்றான்.

"என்னோட கவிக்குட்டி எப்போ இவ்ளோ பெரிய மனுஷன் ஆனான்?" என்றாள். "அத்த" என்று சிணுங்கினான்.

அவளுக்குத் தெரியும், கவின் அவனாக தான் இவ்வளவும் பேசுகிறான் என்று. இது உண்மையாகவே கமலி சொல்லிக் கொடுத்து கவினைச் சொல்லச் சொல்லவில்லை என்று. கமலி தன்னை யோசிக்க தான் விடுவாளே தவிர பிளாக்மெயில் செய்வதுபோல் எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டாள்… என்று தன் தோழியைப் பற்றி அறியாதவளா கண்மணி. தன் கண்ணீரைத் துடைத்தவள். அவனது நெற்றியில் முத்தம் இட்டு விட்டு, "சரிடா கவி குட்டி , நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற? அத்தை யோசிச்சு சொல்றேன். அப்போ நான் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டேன்னா இந்த வீட்ல இருக்க மாட்டேன். அவங்க வீட்டுக்குப் போயிடுவனே உனக்குப் பரவால்லையா?"

"அத்தை" என்று முதலில் முறைத்தவன் பிறகு சிரித்துக் கொண்டே, "அத்தை, நீ எப்பக் கல்யாணம் பண்ணிட்டுப் போனாலும் வேற ஒரு வீட்டுக்குப் போவ தான போற. அதுவும் நீ அவங்க வீட்டுக்குப் போனா, நான் உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன் தானே. டெய்லியும் ஸ்கூல்ல பாப்போம் இல்ல" என்று சிரித்தான்.

"இந்த வயசுல ரொம்ப விவரம்" என்றாள்.

"எல்லாம் நீ சொல்லிக் கொடுத்தது தான் அத்தை" என்று அவளது இரண்டு தாடையையும் பிடித்துச் செல்லம் கொஞ்ச, "நானா… போடா, நல்லா ஐஸ் வைக்கிற" என்று சிரித்தாள்.

"உன்ன விட மாட்டேன்" என்று சொல்லிக் கிச்சுக்கிச்சு மூட்ட சத்தமாகவே சிரிக்கச் செய்தாள்.

அவளது சிரிப்புச் சத்தத்தில் ஹாலில் இருந்த ரகுபதி, காந்திமதி இருவரும் கிச்சனில் இருந்த கமலியைப் பார்க்க, கமலி சிரித்த முகத்துடன் "சீக்கிரம் சரி ஆகும்" என்று விட்டுத் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

தன் தங்கையின் சிரிப்புச் சத்தம் கேட்டு ரூமுக்குள் இருந்து வெளியில் வந்த சங்கர், கண்மணி ரூமைப் பார்த்து விட்டுத் தன் மனைவி கமலியைப் பார்க்க, மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது அருகில் சென்றவன், "அடியே, என்ன மூஞ்ச சிலுப்பிக்கிறவ" என்றான். அவனது வாயில் கை வைத்து மூடி விட்டுச் சுத்திப் பார்த்தாள்.

"யாரும் இல்ல டி. நீ நான் மட்டும்தான் இருக்கோம்" என்று சிரித்தான்.

"வர வர உனக்குக் கொழுப்பு கூடிப்போச்சு" என்று விட்டு அவள் அமைதியாக வேலையில் கவனத்தைத் திருப்ப,
"கமலி" என்றான் அவளது அருகில் நெருங்கி வந்து ஹஸ்கி வாய்சில்.

"மரியாதையா போயிடு" என்று காய் நறுக்கிக் கொண்டிருந்த கத்தியைக் காட்ட, அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவளது கன்னத்தில் பட்டும் படாமல் இதழ் பதித்து விட்டு ஓடி விட்டான்.

தனது கணவனின் செயலில் கூச்சத்தில் நெளிந்தாள். சுற்றி முற்றி யாராவது பார்த்துவிட்டால் என்று பார்க்க, சிரித்துக் கொண்டே கவினைத் தூக்கிக்கொண்டு வந்த கண்மணியும், கவினும் சங்கரின் செயலைப் பார்த்துக்கொண்டு சிரித்த முகத்துடன் கமலியைப் பார்த்துக் கொண்டிருக்க, கமலி தான் கணவனின் செயலில் நெளிந்தாள். "அது ஒன்னும் இல்ல, கண்மணி. உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது வேண்டுமா?” என்றாள்.

"நாங்க பார்த்திட்டோமே" என்று இருவரும் ஒரே போல் சொல்லி விட்டுச் சிரிக்க, "போங்கடா அந்தப் பக்கம்" என்று விட்டுச் சிரித்துக் கொண்டே திரும்பி விட்டாள்.

"அத்த, நான் ஹாலுக்குப் போறேன்" என்று ஓடி விட்டான் கவின்.

கமலியின் அருகில் வந்த கண்மணி அவளைப் பின் பக்கம் இருந்து கட்டிக் கொண்டு அவளது தோளில் தாடையைப் பதித்தவள், "நீ சந்தோசமா இருக்கியா கமலி? இல்ல, எனக்காக இப்படி இருக்க மாதிரி நடிக்கிறயா?" என்றாள்.

கமலியின் காய் நறுக்கிக் கொண்டு இருந்த கை தானாக அப்படியே நின்றது.

அவள் கேட்டது புத்தியில் உரைக்கத் திரும்பி அவளை முறைத்து விட்டு, "என்னப் பார்த்தா நடிக்கிற மாறி இருக்காடி" என்றாள் கோவமாக.

"இவ்ளோ நாள் தோணலடி. இன்னைக்கு இப்போ தோணுது" என்றாள்.

"ஓ" என்று விட்டுக் கமலி அமைதியாக, "சொல்லு கமலி" என்றாள்.
"நான் சந்தோசமா தான் இருக்கேன். உன் அண்ணன் எப்படி இருக்காருனு நீங்க அவர்கிட்ட வேணா போய் கேளுங்க மேடம்" என்று முகத்தைத் திருப்ப, "என்னப் பாருடி. என்னப் பார்த்துப் பேசு" என்றாள்.

"கொன்றுவேன் கண்மணி… நீ நம்பு, இல்ல நம்பாத. உனக்கு என்னால இந்த விசயத்துல விளக்கம் தர முடியாது" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கமலிக்குக் குமட்டிக் கொண்டு வர வேகமாக அவளைத் தள்ளி விட்டுவிட்டு பாத்ரூம் சென்று இருந்தாள்.

பின்னாடியே சென்ற சங்கர் அவளது தலையைப் பிடித்து விட்டு, முகம் கழுவி அழைத்துக் கொண்டு வந்தான். கண்மணி அதிர்ச்சியாக நிற்க, அவளது அருகில் வந்த சங்கர் நேற்று ஹாஸ்பிடல் போய் செக்கப் செய்து கொண்டு வந்த ரிப்போர்ட்டை அவளிடம் நீட்ட,

அதைப் பார்த்த கண்மணியின் கண்கள் கலங்கியது. கலங்கிய விழிகளுடன் கமலியைக் கட்டிக் கொள்ள வர அவளை விட்டு இரண்டு அடி தள்ளி நின்ற கமலி, "இன்னைக்கு இத உன்கிட்டச் சொல்ல நினைச்சேன். ஆனா மேடம் என்னமா கேள்வி கேட்கிறீங்க" என்று விட்டு அமைதியாக நகர,

வேகமாக ஓடிச் சென்று அவளைப் பின்பக்கம் இருந்து கட்டிக் கொண்ட கண்மணி, "சாரிடி, ஒரு வாரமா நீயும், அண்ணனும் சண்டை போடுற மாறி இருந்துச்சு. சரி புருஷன் பொண்டாட்டி பிரச்சனைனு அமைதியா இருந்தேன். நீ இன்னைக்கு விசயத்தைச் சொல்லவும், என்னால தான் அண்ணன் உன்கிட்டச் சண்டை போடுறாரு போலனு நினைச்சு…" என்று அமைதியாக,

"தோ பாரு, அவரு என் புருஷன். என் கிட்டச் சத்தம் போடட்டும், அடிக்கட்டும். அதுக்கு எல்லா உரிமையும் அவருக்கு இருக்கு. சரியா?" என்று விட்டுச் செல்ல, "பிளீஸ் டி, என்கிட்டச் சொல்லவே இல்ல" என்றாள்.

"எப்படிச் சொல்லச் சொல்ற மேடம், ராகினியைப் பார்த்ததில் இருந்து நான் தான் கண்ணுக்குத் தெரியலையே" என்று விட்டுக் கண்ணீரைத் துடைக்க, "கமலி" என்றான் சங்கர்.

"அண்ணா, விடு அவ பேசட்டும். அவ சொல்றது உண்மை தான். நான் இவ கிட்ட தினமும் உட்கார்ந்து பேசி ஒரு மாசம் ஆகப் போகுது. எங்க இவகிட்டப் பேசினா நான் ராகினி பத்தி யோசிச்சு கவலைப்படுறது இவளுக்குத் தெரிஞ்சிடும்னு பேசல." என்றாள்.

சிரித்த கமலி இப்போது சங்கரைப் பார்க்க, அவன் பாவமாகப் பார்த்துக் கொண்டே "சாரி டி" என்றான்.

"அண்ணா, நீ என்ன பண்ண இவளை…" என்று கண்மணி தன் அண்ணனிடம் சண்டைக்கு வர,

"இவளும் அதான் கண்மணி சொன்னா… நான் தான் புரிஞ்சிக்காம…" என்று விட்டு அமைதியாக,

"ஏதாவது தப்பா பேசிட்டியா?" என்றாள்.

அவனது தலை கீழே குனிய, "அண்ணா" என்றாள்.

அவன் அமைதியாக இருக்க கமலி புறம் திரும்பியவள், "அவரு அதாவது பேசினா உனக்கு எங்க போச்சு புத்தி, அறிவு இல்ல" என்றாள்.

"இப்பவும் சொல்றேன்… அவரு, என் புருஷன். எங்களுக்குள்ள என்ன இருக்குனு, நான் இங்க யாருக்கும் சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்" என்று விட்டுத் தன் அத்தை மாமாவைப் பார்த்தாள்.

இருவரும் அமைதியாக இருக்க, "இருங்க அத்தை, இன்னும் கொஞ்ச நேரத்துல சமையல் முடிஞ்சிடும்" என்றாள்.

"நீ உட்காரு, நான் செய்றேன்" என்று கண்மணி சொல்ல அவளை அமைதியாய் பார்த்து விட்டு, "இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நான் தான் பார்க்கணும்" என்று விட்டு உள்ளே சென்று விட, அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை உணர்ந்த கண்மணி, "இப்போ எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்" என்றாள்.

"அது உன் விருப்பம், நான் அதில் தலையிட மாட்டேன்."

"கமலி நீ என்ன…" என்று விட்டு அவளது முறைப்பில் அமைதியாக,

"என்ன சொல்ல வந்த? நான் உன்ன... சொல்லு, பிளாக்மெயில் பண்றனா? சொல்லு டி சொல்லு" என்று லேசாகக் கத்த,

ஓடி வந்த கண்மணி, "கொஞ்சம் அமைதியா இரு கமலி. இந்த நேரத்துல கத்துற. நான் அப்படிச் சொல்லல."

"வேற எப்படிச் சொல்ல வந்த" என்று விரக்தியாகச் சிரிக்க, "இப்பவும் நான் உன்னோட மணி தான்டி. எப்பவும் நான் உன்னோட மணி தான், சாரிடி" என்று அவளை இறுக்கி அணைத்தாள்.

காந்திமதி தான் "கண்மணி, அவளை விடு" என்றார்.

"அம்மா" என்று சொல்ல, "அவ இப்போ மாசமா இருக்கா, இந்த நிலையில் நீ அவளை இறுக்கி அணைச்சு இருக்கியே, அதுக்காகச் சொன்னேன். உன்னோட தோழியைக் கட்டிப்பிடித்து இருப்பதற்கு நான் எதும் சொல்லல கண்மணி…” என்றார்.

"அப்போ உங்களுக்கும் ஏற்கனவே தெரியும், எனக்கு மட்டும்தான் தெரியாதா?” என்று கேட்டாள்.

"எங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும்." என்றார்.

"அப்போ நான் தான் சுத்தி நடக்கிற எதையும் உணராம இருக்கேனா?" என்று கவலைப்பட்டாள்.

கவினிடம் சண்டைக்குப் போனாள்.
"உனக்கும் தெரியுமா? ஏன்டா என்கிட்டச் சொல்லல" என்பது போல.

"எனக்கே யாரும் சொல்லல. நான் உன்கிட்டச் சொல்லிடுவேன்னு சொல்லலையோ?” என்றான் பாவமாகக் கமலியைப் பார்த்து.

"நீ அவன்கிட்டச் சொல்லுவேன்னு அவ சொல்லாம இருக்கா கண்மணி" என்றான் சங்கர். அவளுக்கு வருத்தமாகியது. வருத்தத்துடன் கமலியைப் பார்த்தாள். “ஒன்றும் இல்லை” என்றுவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

"நான் சமைக்கிறேன் டி" சொல்லி அவளுடனே சமைக்கச் செய்தாள்.

கமலியும் பேசிக்கொண்டே கண்மணியுடன் சமைத்தாள்.

சாப்பிட்டுத் தூங்கப் போகும் வேளையில் கமலி மடியில் தலை சாய்த்துக் கொண்டு, "எத்தனை மாசம் டி" என்றாள்.

சிரித்துக் கொண்டே "இரண்டு மாசம் தான், நாள் தள்ளிப் போயிருக்குன்னு ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம், டெஸ்ட் எடுத்துட்டு கன்ஃபார்ம் பண்ணாங்க."

"உண்மையிலேயே நான் உன்னைப் பற்றி யோசிக்கல தான"

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை" என்று சிரித்த முகத்துடன் சொன்னாள் கமலி. "சரி" என்று விட்டு அமைதியானவள்,

"நேரமாகுது, நீ போய் தூங்கு கமலி" என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு, தன்னுடைய ரூமுக்குள் நுழைவதற்கு முன்பு, “நான் யோசிக்கிறேன் கமலி" என்றாள் கண்மணி.

சிரித்துக் கொண்டே கமலியும் தன்னுடைய ரூமுக்குள் நுழைந்தாள்.
 
Top