கிரீன் ஸ்ட்ரீட், வெஸ்ட் ஹம், மஸ்ஜித் கம்யூனிட்டி பில்டிங், அல்மேரா சோல் ஒப் டான்ஸ் (ALMERA Soul Of Dance) என்ற ராயினின் நடன பள்ளியில் அன்று மிகவும் கவனத்துடனும், உற்சாகத்துடனும் ஒரு பிரபலமான தமிழ் பாட்டிற்கு குழு முறையில் நடனம் ஆடி பயிற்சி எடுத்து கொண்டிருந்தனர்.
ஆம் லண்டனில் நடை பெறவிற்கும் தமிழ் கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு ராயின் நடன பள்ளியில் இருந்துதான் நடன மாட அழைத்திருந்தனர். ஐந்து பாடல்களுக்கு ஆட வேண்டும் என கேட்டு கொண்டதால். அதற்கான குழு அமைத்து ஐந்து பாடல்களுக்கும் பயிற்சி எடுத்து கொண்டிருந்தனர்.
இந்த கலை நிகழ்ச்சியால் ராயினுக்கு வேலை பளு அதிகமாகவும் அதனால் களைப்பு கூடுதலாகவும் இருக்கிறது. அன்று மாலை நேரம் போல் அரை மணி நேரம் ஓய்வு கொடுத்து விட்டு அவனும் தண்ணீர் பருகி அமைதியாய் அமர்ந்திருந்தான்.
அப்போது பள்ளி முடிந்து அங்கு வந்து சேர்ந்தாள் மேக்னா. வந்தவள் ராயினை பார்த்து "அப்பா ஓகேவா?" என கேட்டாள்.
என்னதான் சோர்வாக இருந்தாலும் மகள் ஒரு வார்த்தை கேட்டவுடன் சட்டென அவளை பார்த்து சிரித்தவன் "அப்பா ஒகே தாண்ட, ஆனால் என் பம்கின் ஓகே இல்லை போலவே?" என கேட்டான்.
அதற்கு அவளோ முகத்தை சோகமாக வைத்து கொண்டு " ஹ்ம்ம் யெஸ், என் பள்ளியில் பிற மொழி மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியை கற்று கொடுக்க ஒரு கோர்ஸ் ஆரம்பிக்க போகிறார்கள்.
அதற்கு புதிய ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளனர். இன்னும் பதினைந்து நாட்களில் அந்த கோர்ஸ் ஆரம்பித்து விடும். என்னை தமிழ் பிரிவில் சேர்த்துள்ளனர்." என கூறினாள்.
ராயினுக்கு இப்போது சோர்வு எங்கு போனதென்று தெரியவில்லை. மகள் தாய் மொழி கற்றுக்கொள்ள போகிறாள் என நினைக்கும் போதே அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு பம்கின். எங்கட உனக்கு நம் தாய் மொழி தெரியாமல் போயிருமோ என பயந்தேன். இப்போதுதான் நிம்மதியாய் உள்ளது." என கூறினான்.
அவளோ வாய்க்குள் "தாய் இல்லாதவளுக்கு தாய் மொழியா" என முணுமுணுத்தாள்.
அவன் அவளை அதிர்ச்சியாய் பார்க்க, தொடர்ந்த அவளோ "அப்பா நான் உங்கள் ஓய்வு அறைக்கு செல்கிறேன். உங்கள் பயிற்சி முடிந்தவுடன் என்னை அழையுங்கள்.” என கூறி அங்கிருந்து அகன்று சென்றாள்.
இன்றுதான் முதல் முறை இவ்வாறான வார்த்தைகள் அவளிடம் இருந்து கேட்கிறான். 'பிள்ளை தாயை நினைத்து ஏங்குதோ' என நினைத்து அவன்தான் வாடி போனான்.
இவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ராகவியோ மேக் அங்கிருந்து சென்றவுடன் ராயினின் முகமாறுதலை பார்த்து
"சார் அவள் சின்ன பெண் எதோ புரியாமல் பேசுகிறாள். அதற்காக நீங்கள் வறுத்த படவேண்டாம். நான் அவளிடம் எடுத்து கூறுகிறேன்." என கூறி ராயினை சமாதான படுத்தினாள்.
சிறிது நேர பயிற்சிக்கு பின் ராகவி மேக்னாவை தேடி சென்றாள். மேக்னாவோ ராயின் ஓய்வு அறையில் அமர்ந்து அவளது பள்ளி பாடங்களை செய்து கொண்டிருந்தாள்.
அங்கே வந்த ராகவி அவள் அருகினில் அமர்ந்து அவள் செய்து கொண்டிருக்கும் பாடங்களை கவனிக்கலானாள். அதில் ஒரு கேள்விக்கு தவறான விடை அவள் அளித்திருக்க, அதனை திருத்தி சரியான விடையை சொல்லி குடுத்தாள் ராகவி.
மேக்னாவும் விடையை சரியாக எழுதி அவளுக்கு நன்றி சொன்னாள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என எண்ணி ராகவி மேக்னாவிடம்
“ஏன் உன் அப்பாவிடம் அப்படி பேசுன? நீ சென்ற பின் அவர் எவ்வளவு வறுத்த பட்டார் தெரியுமா?" என கேட்டாள்.
மேக்னா குனிந்த தலை நிமிராமல் அப்படியே இருந்தாள். அவளிடம் பதில் எதிர்பார்த்த ராகவி சற்று கடப்புற்று "ஏய் உன்னை தான் கேட்கிறேன்." என அவள் தலையை அவளது கைகளால் நிமிர்த்த அவள் கண்டது என்னவோ கண் கலங்கி இருந்த மேக்னாவைத்தான்.
ராகவி "என்னாச்சி மேக்னா? ஏன் இப்படி கண்கள் கலங்கி போய் இருக்கிறாய்?" என பதறிப்போய் கேட்டாள்.
அதற்கு மேக்னா " எனக்கு அம்மாவை பார்க்கணும் போல் இருக்கு அக்கா..." என விம்மி கொண்டே கூறினாள். மீண்டும் தொடர்ந்து " இங்கு எல்லோருக்கும் அம்மா உள்ளது அட் லீஸ்ட் சித்தியாவது(Step Mother) வைத்திருக்கிறார்கள்.
ஆனால் எனக்கு அம்மா யார் என்றே தெரியாது. உங்களுக்கு தெரியுமா அக்கா என்னுடைய பிறந்தநாள்தான் என் அம்மாவுடைய இறந்தநாள். என் பிறந்தநாளுக்கு காலையிலேயே நானும் அப்பாவும் கோவிலுக்கு சென்று அம்மாவுக்கு திதி கொடுப்போம்.
என்னிடம் அம்மாவுடைய புகைப்படம் கூட இல்லை. ஆனால் அப்பாவோ இத்தனை காலமும் நீ அம்மா மாதிரி இருக்கிறாய், உன் முடி அம்மாவை போல் உள்ளது. உனக்கு உன் அம்மாவின் கண்கள் என எப்பொழுதுமே என்னை அம்மாவுடன் ஒப்பிட்டே பேசுகிறார்.
அவருடைய பேச்சை கேட்டு எனக்கும் அம்மாவை காண ஆசையாக உள்ளது. அவர் மடி மீது தூங்க ஆசையாக உள்ளது. ஆனால் என்ன செய்வது எனக்குதான் அம்மா இல்லையே.
உங்களுக்கு கிடைத்த அம்மாவை போல் எல்லாம் எனக்கு ஏன் அம்மா கிடைக்கவில்லை. நான் என்ன பாவம் செய்தேன்." என இத்தனை நாள் அவள் மனதில் இருந்த அழுத்தத்தை எல்லாம் விம்மி வெடித்து அழுந்து கொண்டே ராகவியிடம் கூறினாள் மேக்னா.
கட்டி அனைத்து அவளை சமாதானம் படுத்த முயன்று கொண்டிருந்தாள் ராகவி. ராகவி மேக்னாவை சமாதானம் செய்தாலும் அவள் சொன்ன ஒரு விஷயத்தில் மட்டும் ராகவி மனம் ஏற்றுக்கொள்ள வில்லை...
'எனக்கு கிடைத்த அம்மா.. ஹ்ம்ம்ம் மேக் நீ அம்மா இல்லாமல் அழுகிறாய். நான் அம்மா இருந்தும் அழுகிறேன். எனக்கு கிடைத்த அம்மா உனக்கு வேண்டாம். பிள்ளை கேட்பதை மட்டும் செய்யும் அம்மா. அது அந்த பிள்ளைக்கு நல்லதா கெட்டதா என்று ஆராயாத அம்மா, பிள்ளையின் மேல் கவனம் கொள்ளாத அம்மா.' என அவளை சமாதான படுத்திக்கொண்டே அவள் அம்மாவை பற்றி யோசித்து கொண்டே உதட்டில் ஒரு ஏளன புன்னகையை தன் நிலைமையை நினைத்து சிந்த விட்டாள் ராகவி.
"சரி மேக் உன் வேதனை எனக்கு புரிகிறது. ஆனால் உன்னையே உலகமாக நினைக்கும் அப்பாவிடம் நீ அவ்வாறு பேசியது தவறுதானே. நீயே யோசித்து பார்… நீ கூறியதை கேட்டபின் உன் அம்மாவையும், உன்னையும் தவிர்த்து உன் அப்பாவுக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லையே. அப்படி இருக்கும் அவரை நீ காயப்படும் படி பேசலாமா?
உனக்கு என்ன வேண்டுமோ அதை நீதான் உன் அப்பாவிடம் கேட்க வேண்டும். நீ சொல்லாமல் உன் அப்பாவுக்கு எங்கனம் தெரியும் உனக்கு என்ன வேண்டும் என்று.
இப்போதைக்கு நீ தானே அவருக்கு எல்லாம்." என அவள் ராயினுகாகவும் பேசி அவளை சரி செய்ய முயன்றாள். அது ஒரு வழியே பயன் தர மேக்னாவின் அழுகையும் நின்றது.
'உண்மைதானே இது வரை அவளுக்கு இருக்கும் ஏக்கத்தை பற்றி அவள் ராயினிடம் கூறியதே இல்லையே . என யோசித்தவள், இதனை பற்றி சரியான நேரத்தில் அவனிடம் பேச முடிவெடுத்தாள்.
பின் தன்னை இயல்பு நிலைக்கு மாறி பாடத்தில் தெரியாத கேள்விகளை ராகவியிடம்கேட்டு தெரிந்து கொண்டு, பதில் எழுதினாள் . அவள் இயல்புக்கு திரும்புகிறாள் என தெரிந்து கொண்ட ராகவியும் அவளிடம் வேறு கதைகளை பற்றி பேசி அவளை சிரிக்க வைத்து பின் அங்கிருந்து சென்றாள்.
இப்படியே ஒருவாரம் செல்ல ஒரு நாள் பள்ளி முடிந்து மேக்னாவை வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான் ராயின். அப்போது அவனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் மேக்னா.
"அப்பா இன்னும் ஒரு வாரத்தில் தமிழ் மொழி வகுப்பு ஆரம்பித்து விடும்." என்று கூறினாள். ஆனால் ராயின் அதற்கு ஒன்றும் கூறவில்லை. மேலும் "ஆசிரியர்கள் எல்லாம் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்." என்று கூறினாள்.
அதற்கும் ராயின் ஒன்றும் கூறவில்லை. அவர்களின் வீடும் வந்து விட்டது. காரை பார்க் செய்து விட்டு, காரிலிருந்து இறங்கி வீட்டினுள் சென்றான் ராயின்.
இந்த ஒரு வாரம் இப்படித்தான் செல்கிறது அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே. தேவையை தாண்டி ராயின் மேக்னாவிடம் பேசுவதில்லை. அவளே சென்று பேசினாலும் பதில் கட்டையாகத்தான் வரும்.
இன்று டான்ஸ் வகுப்புக்கு விடுமுறை அதனால் பள்ளி முடிந்து அழைத்து கொண்டு நேரே வீட்டிற்கு வந்தான். அப்பாவிடம் பேசுவதற்கு இதுதான் சரியான நேரம் என்றும், அவரை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்து விட்டாள்.
செல்லும் அவன் முன் வந்து நின்றாள் மேக்னா. "உங்களிடம்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன்." என கோபமாக தொடங்கியவள் "அப்பா சாரிப்பா.... அன்று ஏதோ ஒரு யோசனை, ஏதோ ஒரு கோபம், அதுதான் அப்படி பேசிட்டேன்.
அப்பா இங்கு நீங்களும் நானும் மட்டும் தானே இருக்கிறோம். எனக்கும் நீங்கள் மட்டும் தானே இருக்குறீர்கள். நீங்களே என்னிடம் பேசவில்லை என்றால் நான் எங்கு போவேன்.
ப்பா ஐ அம் ரியல்லி சாரிப்ப." என கண்களில் கண்ணீர் மல்க மேக்னா கேட்கவும், தந்தை உள்ளம் தான் தாங்குமா? அவளை அனைத்து அவள் உச்சியில் முத்தம் ஒன்று பதித்து, " அழாதே மா.. நீ அழுவதை பார்க்க எனக்கு சக்தி இல்லை.
எனக்கும் உன்னை விட்டால் வேறு யார் இருக்க சொல். என ராயின் அவளை அனைத்து சமாதானம் செய்ய அவளும் அவள் அப்பாவின் தோள்வளைவில் சாய்ந்து கொண்டு அவனிடம் செல்லம் பாராட்டினாள்.
பின் ஒரு வழியாக மகளும் தந்தையும் சமாதானமாக, சிறிது நேரம் கழித்து அவளுக்கு பிடித்த உணவை தயார் செய்து கொடுத்து அவளை உன்ன வைத்தான்.
அவள் உண்டு முடித்ததும் அவளிடம் " பம்கின் இந்த அப்பா கிட்ட இருந்து உனக்கு என்ன வேண்டும்." என கேட்டான். அவளும் சிறு நிமிட அமைதியின் பின். பட்டென்று போட்டு உடைத்தாள் "நான் அம்மாவை பார்க்கணும்." என்று.
அவளிடம் இருந்து 'தமிழ் மொழி பிடிக்கவில்லை, நான் படிக்க மாட்டேன், நீங்கள் என்னை போர்ஸ் செய்யாதீர்கள்.' என்று தான் கூறுவாள் என நினைத்தான் ராயின்.
அதற்கும் அவன் ஒருவாறு அவனை தயார் செய்தே வைத்திருந்தான். அவர்கள் இருப்பதோ லண்டனில், இங்கு வளர்ந்த பெண்ணிடம் 'தமிழ் மொழி படிக்க வேண்டும், தமிழ் முக்கியம்' என வாதிட அவனுக்கும் இஷ்டமில்லை.
'பிறந்த முதல் அதன் முக்கிய துவத்தை சொல்லி வளர்ந்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டது நம் தப்பு. திடீரெனெ இப்போது வந்து தமிழ் மொழியை அவளுள் திணித்தாள் அவளும் என்ன செய்வாள்.' என அவனே அவன் மனதை சமாதானம் செய்துதான் வைத்திருந்தான்.
ஆனால் இங்கு அவன் மகளோ அவன் சிந்தனைக்கு சம்மந்தம் இல்லாமல் தாயை காண வேண்டும் என்று சொன்னது அவனுக்கு பேரதிர்ச்சியே.
அவன் முகத்தை பார்த்து, "அப்பா என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அம்மாவுக்கு திதி கொடுக்கிறோம். எனக்கு தெரியும் அம்மா உயிருடன் இல்லை என்று. அந்த நாளில் நீங்கள் படும் வேதனையை நானும் பார்க்கிறேன்.
அவரை பற்றி யோசிக்கும் போது உங்களுக்கு அவர் முகம் ஞாபகம் வரும் ஆனால் அந்த நாளில் என்னை வீட்டு நீங்கள் உங்கள் அறைக்கு சென்ற பின் நானும் அம்மாவை சிந்தித்து பார்ப்பேன்.
எனக்கு கிடைப்பது எல்லாம் முகம் தெரியாத உருவம் தான். கண்டிப்பாக உங்களுக்கு அம்மாவின் முகம் ஞாபகம் இருக்கும். ஆனால் எனக்கு அம்மா எப்படி இருப்பார் என்று கூட தெரியாதே." என தொடங்கி அன்று அவள் ரகவியிடம் சொல்லிய அனைத்தையும் அழுகையுடன் கூறி முடித்தாள்.
ராயினுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. மகள் இவ்வளவு தூரமா அவள் அன்னையை தேடியிருக்கிறாள் என்றும், அவள் ஏக்கத்தை புரிந்துகொள்ள முடியாதளவுக்கு நாம் இருந்திருக்கிறோமே என அவனை நினைத்தே கோபமுற்றான்.
ஏதும் சொல்லமால் அங்கிருந்து எழுந்தவன் நேரே அவன் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டான். அப்பா பதில் தராத சோகத்தில் இவளும் இவள் அறைக்கு சென்றாள். மெத்தையில் படுத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.