priya pandees
Moderator
அத்தியாயம் 15
குரங்கு மனிதர்கள் அரக்கனை எரித்த கையோடு, யாஷிடம் முன் சந்தோஷ கூவலோடு வந்து வணங்கி நின்றனர்.
"எங்கள் அனுமன் சொன்ன வாக்கு எவ்வளவு உண்மை என இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் என்றும் கடமை பட்டிருக்கிறோம்" என கிடத்தினான் பேச,
"உங்க கடமையே வேணாம். நீங்க எங்கள விட்டா மட்டும் போதும் சாரே!" என்றாள் வருணி.
"சந்தோஷமா போய்ட்டு வாங்க. எப்ப வேணும்னாலும் நீங்க இங்க வரலாம். உங்களுக்காக எங்க எல்லை எப்போதும் திறந்தே இருக்கும்" என்றார் அவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன்.
"நாங்க வர்றது இருக்கட்டும். இனியாவது யாரையும் உள்ள விடாம உங்கள நீங்களே பாதுகாத்துக்கோங்க. உங்க தலைவர எப்படியோ இதோ இவன் ஊசிய போட வச்சு கொன்னுட்டீங்க பரவால்ல. ஆனா வெளில உங்கள தேடிட்டு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. அவங்க அத்தன பேரையும் நாங்க போய் ஸ்டாப் பண்றதுலாம் நடக்காத காரியம். அதனால் சேஃபா இருந்துக்கோங்க. மறுபடியும் என் மாமாவ ஊசி போட கூப்பிடாதீங்க ப்ளீஸ்"
"மானத்த வாங்காதடி. அந்த ஊசியையும் நா போடலனா அந்தரத்துல தொங்கிட்ருந்த நீ இந்நேரம் பக்கத்து கிரகத்துக்கு பறந்துருப்ப" என அவள் தலையில் கொட்டினான் யாஷ்.
"ஒருவருக்கு ஒருவர் அன்பை இப்படித்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் நான். நிச்சயமாக அதை எங்கள் தலைமுறைக்கும் கடத்துவேன். எங்கள் தலைவரை எதிர்ப்பது தான் எங்களுக்கு கடின செயல். வெளியிலிருந்து எத்தனை நரன்கள் வந்தாலும் எங்களுக்கு தான் அவர்கள் இறை" என சிரித்தார்.
"அட! மனுஷங்கள தின்னு தொலைய கூடாது தாத்தா" என வருணி சொல்ல,
"உங்க அனுமன். ஒரு சுத்த சைவ கடவுள் தெரியுமா? அவருக்கு பெண்கள் ஆகாதுன்னு தெரிஞ்சு வச்சுருக்க நீங்க அசைவமு ஆகாதுன்னு தெரிஞ்சுருக்க வேணாமா?" என்றான் யாஷ்.
"எங்களுக்கு எங்கள் மூதாதையர்கள் என்ன கற்றுக் கொடுத்தார்களோ அதைத்தான் இன்றளவும் பின்பற்றுகிறோம். வேட்டையாடி உண்பது தான் எங்கள் உடல் வலிமைக்கும் நல்வழிவகுக்கும்"
"ரிப்பீட் பண்ண ஆரம்பிச்சுட்டாருடா. இனி என்ன சொன்னாலும் அவர் சொன்னது தான் ஃபைனல்னு பேசுவாரு. நாம கிளம்புவோம் வா" என வருணி சொல்லவும், யாஷ் தலையை அசைத்துக் கொண்டான்.
சுற்றி ஒருமுறை அந்த இடத்தை பார்த்தவாறு, "கிளம்புறோம். அருமையான இயற்கை வாழ்க்கை உங்க கைல இருக்கு. இத வெளில இருந்து யாரும் வந்து அழிச்சுடாம பாத்துக்கோங்க" என யாஷ் சொல்லி அவன் கைப்பையை எடுத்து மாட்டிக்கொள்ளவும், "பை" என வருணியும் கையசைத்து கிளம்ப, க்ளாடியன் ஜனோமி இருவரும் அவர்கள் பின்னேயே மற்ற இரு பெண்களும் கிளம்பிவிட்டனர். குரங்கு மனிதர்கள் அவர்கள் எல்லை வரை உடன் வந்து விடை கொடுத்தனர்.
எல்லையை கடந்து வந்த வழியிலேயே இவர்கள் ஆறுபேரும் நடக்க துவங்கிய இரண்டு நொடியில், அமெரிக்கா, இந்தியா சேனல்கள் மொத்தமும் அவர்களின் முகங்கள் தான் ஒளிபரப்பபட்டுக் கொண்டிருந்தது. கடந்த பத்து நாட்களில் அவ்வளவு பெரிய காட்டில் அத்தனை 'சென்சார்' இயந்திரங்கள் சுற்றிவர துவங்கியிருந்தது. அது அத்தனையும் பல திசைகளில் இருந்தும் இந்த ஆறு பேர் திசையை நோக்கி வரத்துவங்க, அவர்கள் அருகிலேயே இருந்த இயந்திரங்கள் வளைத்து வளைத்து சுயமிக்களை தானாகவே இயக்கி காத்திருக்கும் மேலிடங்களுக்கு அனுப்ப துவங்கியது.
அடுத்த நொடி விமானத்தில் தேடுதல் வேட்டையில் இருந்தவர்களுக்கு விஷயம் பகிரப்பட, மேலிருந்து யாஷ் வருணியை அவர்களும் மேலேற்றி கொள்ள முயன்றனர்.
"ஹே!" என மேலே பார்த்து கையசைத்தாள் வருணி. யாஷும் அண்ணார்ந்து பார்த்து விட்டு, "அவங்க நமக்கு தான் ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க சரி. க்ளாடியனும் ஜனோமியும் அவங்க ப்ளேஸ் போகணுமே? அவங்கள சேஃபா விடாம நாம மட்டும் எப்படி போக முடியும்?" என்றவாறு யாஷ் திரும்ப, அங்கு அவர்களின் பாதையில் எதிரே வேட்டியின் முனையை இடது கையில் பிடித்தவாறு காலை அகட்டி நிலையாக நின்றிருந்தார் ஆரோன். அவர் அருகில் சலீம், அருணேஷோடு இன்னும் சில ஆங்கிலேயர்கள்.
யாஷ் உதட்டசைவில், "மாமா!" என்றவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு பரவசம். அதிக மாதங்கள் கழித்து அவரை நேரில் பார்க்கிறான். அதிலும் பல மாதங்களாக பேசாமல் முறுக்கிக் கொண்டு திரிந்த பின் இன்று தான் நேரில் பார்க்கிறான் என்பதால் கால்கள் தன்னைப் போல் அவரை நோக்கி வேக எட்டு வைத்தது.
மேலே பார்த்து கொண்டு வந்தவளும் திடீரென்று யாஷ் வேகமாக அவளை இழுத்து கொண்டு நடக்கவும் தான், "என்னடா?" என பார்த்தவளுக்கும் எதிரே அப்பா, தம்பி கண்ணில் பட, யாஷ் கையை உருவிக்கொண்டு அவள் முன்னே ஓட முயல, "கொன்றுவேன். சேர்ந்து தான் போறோம். சேர்ந்து தான் அவர ஹக் பண்றோம்" என்றவனும் அவளோடு ஓடிச்சென்று, இருவருமாக ஆரோனை வேகமாக அணைத்துக் கொண்டனர். ஆரோனும் ஆர தழுவிக்கொண்டார்.
"என்னடா பண்ணீங்க? ஒரு மாசமா தேடுறோம். கிட்டத்தட்ட மொத்த காடையும் தேடியாச்சு. எங்க தான் இருந்தீங்க?" என்ற ஆரோன் உண்மையிலேயே தேடிகலைத்து துவண்டு இந்நொடி தான் தெளிந்திருந்தார். அவர் தங்கையின் அன்றைய நிலைக்கு பின் பல வருடங்கள் கழித்து இந்த கடந்த தினங்களில் தான் மொத்தமாக கலங்கி தவித்துவிட்டிருந்தார்.
"அது ஒரு கிங்காங் க்ரூப் வித் டாக்டர் யாஷ் குட்டி ஸ்டோரிப்பா. நா உங்களுக்கு அத தெளிவா சொல்றேன்" என்க,
"நானும் இருக்கேன்" என்ற அருணேஷ் கண்ணெல்லாம் சிவக்க அவளை முறைத்து கொண்டு நின்றிருந்தான்.
"டேய் அரு" என அவனையும் பாய்ந்து கட்டிக்கொண்டாள்.
"இவந்தான் நீ நல்லாதான் இருக்க கண்டிப்பா நல்லா இருக்கன்னு எங்களுக்கு தைரியம் குடுத்துட்டே இருந்தான். உன்ன ரொம்ப தேடிட்டான்" என ஆரோன் இருவர் தலையையும் கோதி கொடுக்க, இந்தப்பக்கம், யாஷ் தன்னையே பார்த்து நின்ற சலீமை கட்டி அணைத்து விடுவித்தான்.
"ரொம்ப அலைகழிச்சுட்டீங்கடா. ப்யூலாக்குலாம் ரொம்ப டென்ஷனாகி ப்ரஷர் ஏறிடுச்சு. கிளம்பலாம் அங்க எல்லாம் வெயிட்டிங்" என்ற ஆரோன், யாஷை மறுபடியும் தோளோடு அணைக்க,
அதை கண்டு, யாஷ் முதுகில் அடித்து, "எங்கப்பாவால தான் எல்லாம்னு சொன்ன? அப்றம் ஏன்டா கட்டிட்டு நிக்ற தள்ளு" என்றாள் வருணி ஆரோன் கை வளைவில் அவளும் வந்து நின்று.
"ஆமா எல்லாம் உன் அப்பாவா இருக்கிறதால தான். என் மாமாவா இருந்த வரை அவர் எப்பவுமே பெர்ஃபெக்ட்டி" என்றான் யாஷும். மற்றவர்கள் அவர்கள் இருப்பை உணர்ந்து உள்வாங்கி கொண்டு அமைதியாக வந்தனர்.
மருத்துவ மாணவர்களை தேடிக் கொண்டு அவர்கள் சென்றது குரங்கு மனிதர்களை பார்த்தது, மாட்டிக் கொண்டு விழித்தது, அந்த மாணவர்களின் சதி, அந்த மூவரையும் அவர்கள் கொன்று தின்றது, என அனைத்தையும் தமிழில் கதையாக கூறிக்கொண்டே வந்தாள் வருணி.
"உங்க மருமகன காக்க வந்த கடவுள்னு உக்கார வச்சுட்டு அவங்க பண்ண பணிவிடை இருக்கே? அப்பப்பா பாக்க முடியலப்பா" திரும்பி ஆரோனிடமும்.
"ஏன் மாமா நீதான் பண்ணணும்னு சொன்னாங்க?" என்றான் அருணேஷ்.
"அது அவங்களுக்கு அவங்க கடவுள் சொன்ன வாக்குன்னு சொன்னாங்க அரு. தமிழ் பேசுர, அவங்க பூர்விகத்துல இருந்து வந்திருக்க கூடிய ஆளா இருக்கணும். அப்றம் அன்கான்ஷியஸா இருக்குற பொண்ணுக்குள்ள வந்த ஃபீட்டஸா(கரு) இருக்கணும்னு. நா அப்படிலாம் எங்க இந்தியாவிலேயே யாரும் கிடையாது. எங்கப்பா சும்மா விடமாட்டாருன்னு சண்டைக்கு போயிட்டேன். எனக்கு கூட மறந்துட்டு. அப்றம் தான் பாட்டி சொன்னதே ஞாபகம் வந்தது. நம்ம மாமா ப்யூலா அத்தைக்கு அவங்க அன்கான்ஷியஸ்ல இருக்கும் போது தானே எவனோ பாஸ்டார்ட் அப்படி பண்ணிட்டான்னு அப்பா இவ்வளவு ஸ்டிரிக்டா இருக்காங்கன்னு சொன்னாங்க? அப்ப கரெக்ட் தானோன்னு வேற வழியில்லாம அமைதியா இருந்தோம். இல்லைனாலும் அவங்கள மீறி வந்திருக்கமுடியாது. அவங்க ப்ளாக் ஹோல் மாதிரி அவங்க இருக்க இடத்தையே ஒரு பெரிய வலைக்குள்ள மறைச்சு வச்சுருக்காங்கடா அரு. நம்ப முடியல தான உனக்கு?" என அவள் போக்கில் சொல்லிக் கொண்டே வர, அரு கதை கேட்டபடி வர, யாஷ், ஆரோன் சலீம் இருவருக்கும் நடுவில் இருவரின் கைப்பிடியில் தான் நடந்து வந்தான்.
க்ளாடியனும் ஜனோமியும் இருந்த இடத்திற்கு வந்து அவர்களை விட்டுவிட்டு அடுத்து காட்டை விட்டு கிளம்பும் முன், அந்த இரு பெண்களையும் பிடித்தாள் வருணி, "நா உங்களுக்கு சொல்லி குடுத்தது. உங்களோட முடிய கூடாது. உங்க மூலமா உங்க பெண்கள் எல்லாருக்கும் போய் சேரணும். நீங்க வெளி உலகத்துக்கு வந்து வாழ வேண்டாம். இங்கேயே அடிப்படை சுதந்திரத்தோட வாழலாம். தப்பில்ல. உங்க இடம் அதுல உங்க சுதந்திரம்னு இருக்க உங்களுக்கு கண்டிப்பா படிப்பு அவசியம். அதுக்காக இன்னும் கத்துக்கோங்க, உங்களை சார்ந்த லேடீஸ்கும் கத்துகுடுங்க. வெளில இருந்தாலும் நா என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன். எக்ஸாம்ஸ் அட்டென்ட் பண்ணுங்க, உங்க மக்களுக்கு நீங்களே அரசாங்க சம்பளத்தோட பாடம் நடத்துங்க. என்ன க்ளாடியன் உங்க வைஃபுக்கு எக்ஸாம் எழுத ஹெல்ப் பண்ணுவீங்க தான?" என கேட்க, அவனும் தலையை அசைக்க, அந்த இரு பெண்களும் கூட தலையை பெரிதாக ஆட்டி, அவளுக்கு கண்ணீரோடு கட்டி அணைத்து விடை கொடுத்தனர்.
மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருப்பதால் மற்ற மருத்துவர்களும் முன்னரே கிளம்பி இருந்தனர். அங்கிருந்த காட்டுவாசி மக்களோடு அலவலாவியபடி இவர்களும் கிளம்பினர். க்ளாடியனும் ஜனோமியும் காட்டின் எல்லை வரை வந்து தான் விடை கொடுத்தனர். அவர்களை பிரிவது யாஷுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.
"மறுபடியும் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாக்கலாம்" என சொல்லியே கிளம்பினான்.
"எங்க இயற்கை மருந்து டாக்டர் மேடம்கு வேலை செஞ்சுருக்கான்னு கடிதம் போடுங்க டாக்டர். கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு நாளுக்கும் மேல சாப்பிட்ருக்காங்க. குடல்ல இருந்த புண்ணு முழுமையா சரியாகிருக்கும். சரியாகி இருக்கணும். அது நீங்க எங்க மக்களுக்கு செஞ்ச மருத்துவத்துக்கான பதில் மருத்துவம் மட்டுந்தான் டாக்டர்" என க்ளாடியன் சொல்ல, வருணி யாஷ் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
ஆரோனுக்கும் சலீமுக்கும் தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருக்க, அவர்கள் இருவரும் அமெரிக்க அதிபரை சந்திக்க கிளம்ப, யாஷ், வருணி, அருணேஷ் மூவரும் நான்சி, ப்யூலா மற்ற பிள்ளைகள் தங்கியிருந்த அறை வந்து சேர்ந்தனர்.
வந்து சேர்ந்ததிலிருந்து அநேக விசாரிப்புகள், இந்தியாவிலிருந்து இருவரின் நண்பர்கள், பல பெரிய தலைகள், அரசியல்வாதிகள், இங்கு அவர்கள் மருத்துவர்கள் ஜெனிலியா, பிஸ்மத் மற்றும் அவர்கள் மருத்துவமனை டீன் இன்னும் சிலர், அந்த மருத்துவ மாணவர்களின் மன்னிப்பு என மாற்றி மாற்றி அழைப்பு வந்து கொண்டிருந்தது. அதை விட்டார்கள் என்றால் இங்கும் நான்சியும் ப்யூலாவும் இருவரையும் கொஞ்சி தீர்த்தனர்.
இதற்கிடையில், அந்த ஆராய்ச்சி நிறுவனம் பற்றி ஆரோன் வெளியே சொல்ல வேண்டாம் என்றும், குரங்கு மனிதர்கள் என ஒரு குழுவினரின் நிம்மதியான வாழ்க்கையை நாமே அம்புலப்படுத்த வேண்டாம், என்றும் கூறிவிட்டார். ரகசியமாக அதை முடித்து வைக்க வேண்டியது என் பொறுப்பு என்றுவிட்டார், வெளி ஆட்களுக்கு மட்டுமின்றி அமெரிக்க அரசாங்கத்திடமும் இருவரும் ஒரு சிறிய குகைக்குள் மாட்டிக்கொண்டதாக மட்டுமே பகிரப்பட்டது. அதிலிருந்து மீட்கப்பட தான் இவ்வளவு காலம் என அமெரிக்க அரசாங்கமும் நம்பி மன்னிப்பு கேட்க, குரங்கு மனிதர்கள் பேச்சு குடும்ப ரகசியமாகவே இருந்துவிட்டது. ஆரோன் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தை யாஷ் வேலை பார்த்த மருத்துவமனையோடு சம்பந்தப்படுத்தி சிலபல பொய் புகார்களை அதன்மீது கொடுத்து தான் முடக்கினார். அந்த மருத்துவமனையிடமும் கொடுத்த புகாரை அவர் திரும்ப பெற வேண்டும் என்றால், அந்த ஆராய்ச்சி நிறுவனம் பொய்யாக நால்வரை அவர்களை ஏமாற்றி அனுப்பி வைத்ததை காரணமாக்க கூறினார். அவர்கள் இருவரையும் மோதவிட்டு பிரச்சினையை திசை திருப்பினார்.
இன்னும் சில அமெரிக்க நண்பர்களை பயன்படுத்தி வேறு வேறு விதமாக தான் மாட்ட வைத்திருந்தார். அவர்களுக்கும் வெளியே சொல்ல முடியாத நிலை என்பதால் தவறை ஒப்புக் கொண்டு அடங்கி போயினர்.
இதிலேயே பத்து நாட்கள் கழிந்திருக்க, இந்தியா கிளம்ப ஆயத்தமாகினர். நாடு திரும்ப வேண்டும் என்கையில் தான் வருணியின் கர்ப்பம் எல்லோருக்கும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, அவளுக்கு இருக்கும் குடல் சார்ந்த பிரச்சினை பற்றியும் அப்போது தான் எல்லாருக்கும் கூறினான் யாஷ்.
வருணி அவர்களின் திருமணத்திற்கு முதலிலும் அதைப்பற்றி யாருக்கும் தெரிவித்திருக்கவில்லை அவளாகவே பயத்தில் மறைத்து வைத்திருக்க, யாஷ் அவனின் காதலை சொல்லவும் அந்த காதலையாவது அனுபவித்துவிடும் ஆசையில் திருமணத்திற்கு கேட்க கூறினாள். அப்படி தான் யாஷ் வந்து கேட்டும் ஆரோன் அவர்கள் இருவரின் வயது வித்தியாசத்துக்காகவும், இருவரின் குணத்தின் அடிதடியை யோசித்தும் மறுத்திருக்க, இறுதியில் வருணி அவளே காதலிப்பதாக கூறி திருமண செய்து வைக்க கேட்க, அன்று இருவரின் விருப்பத்திற்காகவே ஆரோன் அவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆனாலும் இருவரும் வாழவில்லை என்பது போல யாஷ் காண்பித்து கொண்டே இருந்ததால் தான் அவரும் கண்டும் காணாமல் அவர்களை தொடர்ந்து கொண்டிருந்ததும். வருணியை கிளம்பி வரும்படி மிரட்டியதும். அதுவரை அவரும் அவளுக்கு நோய் இருப்பதை நம்பவில்லை, யாஷ் அமேசான் காடு கிளம்பும் முன் பேசியதில் தான் அவருமே நம்ப நேர்ந்தது.
அதன்பின் இன்று தான் அது, குடல் சார்ந்த பிரச்சினையாக அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மருத்துவமனை பேரில் கொடுத்த புகாரை ஆரோன் உடனே திரும்ப பெற முடியாது என மறுத்திருந்ததால், யாஷ் வருணியும் தற்சமயம் இந்தியா கிளம்பியாக வேண்டிய கட்டாயம் தான்.
"இந்தியாவிலேயே ட்ரீட்மெண்ட் பாத்துக்கலாம் கிளம்புங்க" என ஆரோன் முடித்துவிட, இதோ இந்தியா வந்திறங்கிவிட்டனர்.
பிரதமர் மாளிகையிலேயே வருணிக்கான பரிசோதனை ஆரம்பமானது. முதலில் அவள் கர்ப்பத்தை உறுதி செய்ய, ஸ்கேனுக்கு அழைத்து செல்ல, யாஷும் உடன் சென்று நின்றான்.
மூன்று மாத கரு, குட்டி கை, குட்டி கால், முதுகெலும்பு, இதய துடிப்பு என மருத்துவர் ஒவ்வொன்றாக காட்டியபடி வர, முகத்தில் சின்ன சிரிப்புடன் கண்கள் அலைபாய மானிட்டரை பார்த்திருந்தான் யாஷ், அவன் முகத்தயே ரசித்திருந்த வருணி, "நிஜமாவே கால் இருக்கா இல்ல மீனுக்கு இருக்க மாதிரி வால் இருக்கான்னு பாத்து சொல்லுங்க டாக்டர்" என கூறவும், மருத்துவரோடு யாஷும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன், அவள் உதட்டு சுழிப்பில் கண்ணை உருட்டி முறைத்தான்.
"என்ன கேக்குறீங்க மிஸஸ் வருணி?" மருத்துவர் புரியாமல் விழிக்க,
"ஜலக்ரீடை டாக்டர். உங்களுக்கு புரியாட்டியும் என் மிஸ்டர் மாமாக்கு நல்லா புரியும். நீ நல்லா பாத்து சொல்லு மாமா" என படுத்திருந்தவாறே கண்ணடிக்க, அவள் கண்ணை அடித்ததில் மருத்துவர் ஏதோ அவர்களுக்குள்ளான விளையாட்டு என புரிந்து யாஷை பார்த்து சிரித்து, "பார்த்துக்கோங்க டாக்டர்" என மானிட்டரை இன்னும் அவன்புறம் திருப்ப,
"நத்திங் டாக்டர். ஷீ இஸ் ப்ளாபரிங்(உளறுரா)" என மெலிதாக சிரித்து, "எழுந்து வாடி ஒழுங்கா" என அவளுக்கும் சொல்லி வெளியேற, மருத்துவரும் சிரிப்புடன், "ட்ரஸ்ஸப் பண்ணிட்டு வாங்க" என அவன் பின் எழுந்து சென்றார்.
முன்னே சென்ற யாஷ், அங்கு வரவேற்பரையில் அமர்ந்திருந்த நான்சி, ப்யூலா இருவரிடமும், "எல்லாம் நல்லாருக்கு அத்த. பேபி ஃபைன் க்ரோயிங்" என்க,
"நல்லது யாஷ். அந்த ஹெர்னியா அதையும் கையோட செக் பண்ணிடு. அதுக்கும் பேபிப்புக்கும் எதுவும் இஷ்யு ஆகாம பாரு"
"அதுக்கு இப்ப கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுக்க முடியாது அத்த. பேபி பிறந்த அப்பறமும் ஃபீடிங் இருக்கும். ஹெர்னியாக்குள்ள டேப்லெட்ஸ் அவங்க ரெண்டு பேரையும் அஃபெக்ட் பண்ணும். சோ இப்போதைக்கு உள்ள புண்ணு வளராம இருக்க என்ன பண்ணணுமோ அத மட்டுந்தான் பண்ண முடியும்" என்க,
"யாஷ்!" என்றார் அவரும் சோகமாக.
"பெருசா எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன் அத்த. இந்த த்ரீ மந்த்ஸா ஃபுட் கண்ட்ரோல் தான் அவளுக்கு எந்த சிம்டம்ஸும் வராம பாத்துக்கிச்சு. இனியும் அப்படி பாத்துகிட்டாலே போதும். சமாளிக்க முடியும்" என்ற யாஷின் வார்த்தைகள் தான் தைரியம் தந்தது. பின்னரே வந்த மருத்துவரிடமும் அப்போதைக்கு பேசி தைரியம் பெற்று கொண்டனர்.
அன்றே அவளுக்கு ஹெர்னியாவிற்கான எக்ஸ்ரே, ஸ்கேனும், ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளபட்டது. பெரிதாக எதுவும் இருக்க கூடாது என்பது தான் அனைவரின் வேண்டுதலாகவும் இருந்தது.
மொத்த மருத்துவ அறிக்கையும் மறுவாரத்தில் யாஷ் கைக்கு கிடைத்தது. அதில் உண்மையில் குடல் புண் இருந்ததற்கான எந்தவித மிச்சங்களும் இன்றி குடல் அதன் அளவீட்டில் அவ்வளவு சுத்தமாக இருந்தது. யாஷ் ஆச்சரியமாக அறிக்கையை பார்த்திருக்க, "அப்ப க்ளாடியன் தான் வின்னா?" என்றாள் வருணி யாஷ் முகத்தை வைத்தே,
"குடல் புண் எப்படி அரிச்சுரும் தெரியுமா? எதுவுமே செய்யாம சாப்பாடு, ரெண்டு மூணு இலைய வச்சு குடலையே சுத்தமாக்கிட்டான். இட்ஸ் ஸ்டனிங்" என்றான் யாஷ் வெளிப்படையாகவே.
"இயற்கை மருத்துவம் சும்மா இல்ல" என நான்சியும் சொல்ல, ஆமோதித்து தானே ஆக வேண்டும் என தலையை ஆட்டிக் கொண்டனர். ஆங்கில மருத்துவம் உடனடியாக குணப்படுத்தும், இயற்கை மருத்துவம் மெதுவாக தான் குணப்படுத்தும். ஆனால் இரண்டுமே மருத்துவம் தான். இன்றைய அவசர உலகில் உடனடி நிவாரணம் தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அதனால் இயற்கை மருத்துவம் கேட்பார் அற்று கிடக்கிறது அவ்வளவே வித்தியாசம்.
"ச்ச முன்னையே இப்படி ஈசியா சரியாகும்னு தெரிஞ்சுருந்தா அவசரபடாம உன்ன இன்னும் நல்லா அலையவிட்டு கட்டிருப்பேனே மிஸ்ஸாகிட்டியே மாமா" என்றதும், "அந்த வாய்க்கு இன்னைக்கு ப்ளாஸ்தர் தாண்டி" என கை சட்டையை ஏற்றிவிட்டுக்கொண்டு அவளை அவன் விரட்ட வர, அவள் ஓட முயலும் முன், "ஓடாதடி" என பிடித்து நிறுத்தியுமிருந்தான். இருவருக்கும் அடித்துக்கொண்டும் பிடித்துக்கொண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதை தான் ஆங்காங்கே இருந்த மொத்த குடும்பமும் பார்த்திருந்தது.
வானத்திலிருந்து பொழியும் மழை அமிர்தமாக ஒருவரை ஒருவர் அன்பு மழையில் நனைத்து நனைந்து குளிரட்டும். இதே சந்தோஷத்தோடும் ஆர்ப்பாட்டத்தோடும் ஆரோனின் விழுதுகள் நீடூழி வாழ வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.
நன்றி.