அத்தியாயம் 28
விடுமுறை தினம் என்று வந்தால், இப்போதெல்லாம் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை. அதுவும் பிரார்த்தனாவும் இங்கே வந்துவிட்ட பிறகு, சீதாவுக்கும், அஞ்சலிக்கும் இன்னும் வசதியாகப் போய்விட்டது.
காலை, மதியம், இரவு என ஒரு நாளுக்கான சமையல் வேலையை சீதாவே ஆட்களை வைத்து செய்து விடுவார். பிரார்த்தனாவையும் “இங்கேயே சாப்பிடு…” என்று வற்புறுத்தி வர வைப்பார்.
ஆரம்பத்தில் அபிஷேக் மேல் இருந்த பயத்தில் கீழேயே வர சங்கடப்படுவாள் பிராத்தனா. ஆனால், அஞ்சலி இருக்கும் தைரியத்தில் அமைதியாக வந்து அவர்களுடன் இருப்பாள். இதைப் பார்க்கும் போது அபிஷேக்கிற்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.
கண்டும், காணாதது போல இருந்துவிடுவான். இல்லையேல், வெளியே கிளம்பிவிடுவான். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. அனைத்தும் மாறிவிட்டன. அபிஷேக்கைப் பொறுத்தவரை அவனது அனாவை தினமும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது கூட, காலை உணவை உண்டுவிட்டு டைனிங்க் டேபிளிலேயே அமர்ந்து மூவரும் கலகலவென பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன், அமைதியாக ஷோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பார்க்க நினைத்தது என்னவோ பிரார்த்தனாவைத்தான். ஆனால், பெயருக்கு தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான். லாவகமாக அவளைப் பார்ப்பதற்கு ஏதுவாக அமர்ந்துகொண்டு, ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்தான்.
பேச்சின் சுவாரஸ்யத்தில் பிரார்த்தனா அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அவளது அருகே இருந்த அஞ்சலி இப்போதெல்லாம் அபிஷேக்கின் ஒவ்வொரு செயல்களையும் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருக்கிறாள்.
ஒரே சேனலைப் பார்க்காமல் மாற்றிக்கொண்டே இருந்தவனிடம், “அபி… டிவில நீ என்ன பார்க்கற?” என்று அவனை வம்பிழுத்தாள்.
இவள் வழக்கம்போல் தன்னை வம்பிழுக்கிறாள் என்று நினைத்தவன், “சும்மா தான், ஏதாவது ஒரு நல்ல பாட்டா போடுறாங்களான்னு பார்த்துட்டிருக்கேன்.” என்று சமாளித்தான்.
“அபி… முதல்ல எல்லாம் சண்டேன்னா வீட்லயே இருக்கமாட்டியே. எப்பவும் வெளிய தான சுத்திட்டிருப்ப. இப்போ என்னடான்னா வீட்லயே இருக்க?” என்றார் சீதா அவர் பங்கிற்கு.
அதைக் கேட்டதும், “இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நான் இங்க இருக்கணுமா? இல்ல வெளிய கிளம்பணுமா?” என்றதும், மூவரும் சிரித்துக்கொண்டனர்.
அதற்கு மேல் அவனை மேலும் பேசி வெறுப்பேற்ற நினைக்காதவகள் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தனர். பல சேனல்களை மாற்றிக்கொண்டே இருந்தவனுக்கு ஒரு நல்ல பாட்டு கண்ணில் பட்டது.
அதனது ஒலியை சற்று அதிகமாக்கினான். அது அங்கே அமர்ந்திருந்தவகள் காதிலும் ஒலித்தது. முக்கியமாக இது பிரார்த்தனாவின் காதில் விழ வேண்டும் என்றுதான் அதிகமாக வைத்தான் அபிஷேக்.
“கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்………
காதல் முகம் கண்டுகொண்டேன்………
விரல் தொடும் தூரத்திலே………
வெண்ணிலவு கண்டுகொண்டேன்………”
ஒலியை அதிகப்படுத்தியவனை பிரார்த்தனா பார்க்க, இது உனக்கானது என்பதைப் போல அவளைப் பார்த்தான் அபிஷேக்.
இவர்களது பார்வை சம்பாஷணைகளைப் புரிந்துகொண்டவளாய் அஞ்சலி, அபிஷேக்கை எழுந்து நின்று இடுப்பில் கை வைத்தபடி பார்க்க, அவனோ “இவள் சரியான தொல்லை…” என்று புலம்பியபடி தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எரிச்சலோடு சென்றுவிட்டான்.
அதைப் பார்த்த சீதா, “இப்போவே இவங்க ரெண்டு பேரும் எலியும், பூனையுமா இருக்காங்க பிரார்த்தனா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்னதான் பண்ணுவாங்களோ?” என்று சலித்துக்கொண்டவரைப் பார்த்துச் சிரித்தாள் பிரார்த்தனா.
அவள் எங்கே தனது ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவாளோ என்று பயந்த அஞ்சலி, “ம்ம்… ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று பிரார்த்தனாவிற்கு சைகையில் உதட்டின் மேல் விரல் வைத்துச் சொல்ல, அமைதியாக இருந்துவிட்டாள் அவள்.
அடுத்த நாள் வழக்கம்போல கம்பெனியில் வேலை தொடங்க அதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர் மூவரும். மதிய இடைவேளையில் அபிஷேக்கை சந்திக்க வந்தார் பேக்கிங்க் செக்ஷன் ஊழியர்களின் தலைவன் சுந்தர்.
நல்ல உழைப்பாளி தான். ஆனால், எவராவது பின்னால் இருந்து எதையாவது சொல்லிவிட்டால் அதைப்பற்றி சிந்திக்காது அப்படியே நம்பி அதையே பின்பற்றுவார். இவர் எதற்காக தன்னைச் சந்திக்க வந்துள்ளார் என்ற கேள்வியுடனேயே பார்த்தான் அபிஷேக்.
கூடவே அவருடன் முத்துவேலும் அருகே நின்றிருந்தார். இருவரும் தயங்கியபடி நிற்க, அவர்களை ஏற, இறங்கப் பார்த்துக்கொண்டிருந்தான் அபிஷேக்.
“என்ன முத்துவேல் சார்? எதுக்கு இவர் என்னைப் பார்க்க வந்திருக்கார்? ரெண்டு பேரும் தயங்கி நிற்கறதப் பார்த்தா ஏதோ சரியில்லன்னு தோணுதே?” என்றான்.
“அது அபி சார், இவர் வேலை செய்யற பேக்கிங்க் செக்ஷன்க்கு இப்போ ஷிஃப்ட் நேரம் அதிகமாகியிருக்கு. அதனால, அவங்க சம்பளத்த கொஞ்சம் ஏத்திக் கேட்கறாங்க.” என்றார் முத்துவேல்.
அதைக்கேட்டு புருவம் சுருக்கியவன், “இப்போ தீபாவளி சீசன் இல்லையா? அதனால கொஞ்சம் வேலை அதிகமா தான் இருக்கும். மத்தபடி அவங்கவங்க ஷிஃப்ட்டுக்கான பணம் தான் வந்துடுமே. அப்பறம் எதுக்கு சம்பளத்தை அதிகமாக்கணும்?” என்றான்.
“சார்… நீங்க சொல்றது சரிதான். ஆனா, எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் பார்க்கும் போது, எங்களுக்குப் பணம் அப்பப்போ தான வருது. எப்பவும் வரது இல்லையே. சம்பளம் கொஞ்சம் அதிகமாக்கினா நல்லா இருக்கும். ரெண்டு வருஷமா இதே சம்பளம் தான் வாங்கறோம்.” என்று சுந்தர் சொன்னதும், சற்று கோபமானான் அபிஷேக்.
“நீங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா? ரெண்டு வருஷமா அதே சம்பளம் வந்தாலும், தீபாவளி போனஸ், பொங்கல் போனஸ்ன்னு எல்லாத்தையும் அதிகமா தான வாங்கறீங்க. அது உங்க கண்ணுக்குத் தெரியலையா?” என்று வாதிட்டான்.
“அது பொதுவா எல்லாக் கம்பெனிலயும் கொடுக்கறது தான சார். சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுங்கன்னு தான கேட்கறேன். ஒட்டுமொத்தமாவா கேட்கறேன்.” என்றவரை ஒரு பார்வை பார்த்தவன்,
“இது நீங்க ஒருத்தர் மட்டும் வேலை பார்க்கற கம்பெனி இல்ல. இங்க கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கா வேலை செய்யறாங்க. அவங்க எல்லாத்துக்குமே சம்பளத்தை உடனே அதிகப்படுத்தணும்னா எப்படி முடியும்? அதுவும், தீபாவளி பக்கத்துல வந்ததுனால எல்லாத்துக்குமே போனஸ் அலாட் பண்ணச் சொல்லியிருக்கேன். இப்போ வந்து அது, இதுன்னா நான் என்ன பண்ண முடியும்? பேசாமப் போய் உங்க வேலை என்னவோ அதைப் பாருங்க.” என்றான் எரிச்சலில்.
“சார், நான் தன்மையா தான கேட்கறேன். நீங்க என்னடான்னா எடுத்தெறிஞ்சு பேசறீங்க? இது நல்லா இல்ல.” என்றவரைப் பார்த்து முறைத்தான் அபிஷேக்.
“முத்துவேல் சார். இவரப் பேசாமப் போகச் சொல்லுங்க. அப்பறம் நான் என்னை அறியாம கத்திடுவேன்.” என்றதும், அவர் சுந்தரை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சென்றார்.
அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பிரார்த்தனா அவனிடம் வந்தாள்.
“சார்… நீங்க நினைக்கிற மாதிரி இது அவரா பேசல. பின்னால இருந்து செல்வா தான் தூண்டி விட்டிருக்கான். இவர் தான அவன வேலைக்கு ரெகமண்டேஷன்ல சேர்த்துவிட்டது. அதுக்குப் பிரதிபலன காமிச்சுட்டான். நீங்க இந்தப் பிரச்சினைய அதிகமா வளர விடாம எப்படி ஸ்மூத்தா முடிக்கலாம்னு பாருங்க. எனக்குத் தெரிஞ்சு அவன் இன்னும் அதிகமா தான் அவரத் தூண்டிவிடப் பார்ப்பான்.” என்றாள்.
அப்போதுதான் அவனுக்கு விவரம் புரிந்தது. “கரெக்ட் அனா… நான் அப்பவும் யோசிச்சேன். இதுவரைக்கும் நம்ம கம்பெனில சம்பளம் அதிகப்படுத்துங்கன்னு சொல்லி யாரும் என்கிட்ட வந்ததில்ல. ஆனா, இன்னைக்கு வந்திருக்காங்கன்னா, இது பின்னால இருந்து யாரோ பார்த்த வேலையா தான் இருக்கும்னு நினைச்சேன். நீ கரெக்ட்டா க்ளூ கொடுத்திட்ட. நான் இதை ஹேண்டில் பண்ணிக்கறேன்.” என்றவன், அப்போதே எழுந்து வேகமாகச் சென்றான்.
அடுத்த நாள் அவன் கம்பெனிக்குள் நுழையும் போதே, பேக்கிங்க் செக்ஷனுக்கான கட்டிடத்தின் முன்பாக ஒன்று திரட்டப்பட்டவர்கள் போல அனைவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே முத்துவேல் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தார்.
நேராக கோபத்துடன் அபிஷேக் அவர்களை நோக்கிச் செல்ல, பின்னாலேயே அஞ்சலியும், பிரார்த்தனாவும் பதட்டத்துடன் சென்றனர்.
“முத்துவேல் சார்… இங்க என்ன பிரச்சினை? ஏன் எல்லாரும் வேலையப் பார்க்காம, இங்க வந்து உட்கார்ந்திருக்காங்க?” என்று கத்த ஆரம்பித்தான்.
“சார்… நேத்து சுந்தர் வந்து கேட்டதும் நீங்க எந்த பாசிட்டிவ்வான பதிலையும் தரலன்னு சொல்லி, பேக்கிங்க் செக்ஷன்ல வேலை பார்க்கற எல்லாத்தையும் ஒண்ணாக் கூட்டிட்டு வந்து போராட்டம் பண்றான். நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். யாரும் மசியற மாதிரியே தெரியல.” என்றார்.
அதைக்கேட்டு கோபத்தில் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்தபடி செல்வா அவனையும், பிரார்த்தனாவையும் பார்த்து ஏளனமாய் நகைத்தான்.
அவன் சிரிப்பதைப் பார்த்த அபிஷேக், பிரார்த்தனா சொல்வதைப் போல் தான் இப்போது கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்துகொண்டவனாய் ஒரு நிமிடம் தன்னையே மனதினுள் சாந்தப்படுத்திக்கொண்டான். இதை எப்படி சுமூகமாகத் தீர்ப்பது என்று யோசித்தான்.
“இங்க பாருங்க. நீங்க என்ன நினைச்சு இந்த மாதிரியெல்லாம் பண்றீங்கன்னு எனக்குத் தெரியல. இங்க இருக்க எத்தனையோ பேர் ரொம்ப வருஷமா இங்க தான் வேலை செய்யறீங்க. உங்களுக்கு இங்க என்ன குறை இருக்கு? எல்லாத்துக்குமே காலைல டிஃபன், ஏதாவது விஷேசம்னா மதியானம் விருந்து, தீபாவளி, பொங்கல்க்கு போனஸ், ஸ்வீட், துணி, மணின்னு எல்லாமே தான கொடுக்கறோம். அதுமட்டும் இல்ல, மத்த கம்பெனிய விட இங்க தான் உங்க உழைப்புக்கான ஊதியத்த நாங்க சரியா கொடுத்துட்டிருக்கோம். அப்பறமும் ஏன் சம்பளம் ஏத்திக் கொடுங்கன்னு சொல்றீங்க?” என்றான்.
“அதெல்லாம் சரிதான் சார். அதையெல்லாம் நாங்க மறுக்கல. சம்பளத்தை கொஞ்சமா கூட்டிக் கொடுங்கன்னு தான சொல்றோம். அதுல என்ன உங்களுக்குப் பிரச்சினை?” என்றான் சுந்தர்.
“சம்பளம் எல்லாத்துக்குமே சரியானதா தான் இப்போவரைக்கும் கொடுத்திட்டிருக்கோம். நம்ம கம்பெனிக்கு வர லாப, நஷ்டக் கணக்கெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு எவ்ளோ நஷ்டம் வந்தாலும், உங்க எல்லாத்துக்கும் மாசா மாசம் சம்பளத்தை கரெக்ட்டா தான கொடுக்கறோம். அதையெல்லாத்தையும் காரணம் காட்டி உங்களுக்கு ஒரு மாச சம்பளத்துல ஏதாவது பாகுபாடு காட்டினோமா? இல்ல தராம தான் போனோமா? நீங்க அதையெல்லாம் யோசிச்சுப் பார்க்கணும். ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்களோட தீபாவளி போனஸ் எல்லாத்தையும் கொடுக்கறதப் பத்தி தான் பேசிட்டிருந்தோம். எங்களுக்காக இவ்வளவு வருஷமா உழைக்கிற உங்களுக்கு ஒரு மாச சம்பளம் இல்ல, ஒன்றரை மாச சம்பளத்த போனஸா கொடுக்க இருக்கோம். ஆனா, அதைப் புரிஞ்சுக்காம நீங்க இங்க வந்து போராட்டம் பண்ணி, உங்க நேரத்தை மட்டுமில்லாம, என்னோட நேரத்தையும் வீணடிக்கிறீங்க.” என்று நிதானமாகவே பேசினான்.
“என்ன தம்பி சொல்றீங்க? இந்த வருஷம் போனஸே இல்லைன்னு இல்ல சொல்லி எங்களப் போராட்டம் பண்ணக் கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா, நீங்க எங்கள மனசுல வச்சு இந்த வருஷம் ஒன்றரை மாச சம்பளத்த போனஸா தரேன்னு சொல்றீங்க. இவனுங்க பேச்சக் கேட்டுட்டு வந்தத நினைச்சா எனக்கே சங்கடமா இருக்கு. மன்னிச்சிடு தம்பி. இன்னும் என்னங்கடா உட்காந்திருக்கீங்க, எழுந்திரிங்க. இனிமேல் எவனாவது போராட்டம், அது இதுன்னு சொல்லட்டும் நானே துரத்தி விட்டுடறேன்.” என்று சொன்னபடி முதியவர் ஒருவர் எழுந்து செல்ல, அவருடனேயே பாதிக்கும் மேலானவர்கள் சென்றுவிட்டனர்.
மீதி இருந்தவர்கள் சொச்சம் பேர் மட்டுமே. அவர்களையும் பார்த்தவன், “உங்க மனசு இன்னும் மாறல இல்ல. நான் வேணும்னா உங்களுக்கு மதியம் வரைக்கும் டைம் தரேன். இங்க மட்டுமில்ல, இன்னும் எத்தனையோ கம்பெனிஸ் நம்ம கோயம்புத்தூர்ல இருக்கு. அங்கயும் போய் எங்க சம்பளம் அதிகமா தராங்கன்னு விசாரிச்சிட்டு வாங்க. அதே மாதிரி தீபாவளி போனஸ் கூட தராங்களான்னு கேட்டுட்டு வாங்க. அப்படி நம்ம கம்பெனிய விட பெஸ்ட்டா வேறா கம்பெனி இருக்குன்னு நீங்க சொல்லிட்டா, அதுக்கப்பறம் என்ன பண்றதுன்னு நானே முடிவு பண்றேன்.” என்றதும், அதிலிருந்த சில பேர் மறுபேச்சு எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்றுவிட்டனர்.
மீதம் இருந்தவர்கள் சுந்தரும், செல்வாவும், அவரால் சிபாரிசு செய்யப்பட்ட இருவர் மட்டுமே. இவர்கள் நால்வரை சமாளிப்பது ஒன்றும் அவனுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.
சுந்தரிடம் வந்தவன், “அண்ணா, உங்கள இங்க வேலை செய்யற எம்ப்ளாயின்னு நான் நினைக்கல. நம்ம கம்பெனியப் பொறுத்தவரைக்கும் எனக்கு எல்லாருமே என்னோட குடும்பம் மாதிரிதான். அப்படிச் சொல்லித்தான் என்னை தாத்தா வளர்த்தார். அவர் இருந்தவரைக்கும் இந்தக் கம்பெனிய எப்படிப் பார்த்துக்கிட்டாரோ, அதே மாதிரிதான் நானும் பார்த்துக்கணும்னு ரொம்பப் பாடுபடறேன். அதுக்கு உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் எனக்கு வேணும். நீங்களே யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு உங்க வைஃப்க்கு ஏதோ உடம்பு முடியல உடனே ஆபரேசன் பண்ணனும்னு சொன்னதும், அப்போவே முத்துவேல் சார்கிட்ட சொல்லி உங்களுக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன். அந்த மாதிரி யார் உங்களுக்கு உடனே உதவி செய்வா சொல்லுங்க? எதையுமே நினைச்சுப் பார்க்காம சம்பளம் கொடுக்கலன்னதும் போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க இல்ல? உங்களப் பத்தி தாத்தா எத்தனையோ தடவ பெருமையா பேசியிருக்கார். ஆனா, நீங்க அப்படி இல்லன்னு இன்னைக்கு நிரூபிச்சிட்டீங்க.” என்றான்.
அவன் பேசியதைக் கேட்டு மனமிறங்கியவர், “தப்பு தான் சார்… நான் அறிவிழந்து போய், கேட்கக்கூடாதவங்க பேச்செல்லாம் கேட்டுட்டு இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. அன்னைக்கு நீங்க உடனடியா பண்ண உதவிய நான் மறந்திருக்கக்கூடாது. என் பொண்டாட்டி அப்பவும் சொன்னா, நான் தான் முட்டாள்தனம் பண்ணிட்டேன். இனிமேல் இந்த மாதிரி எதுவும் நடக்காது.” என்றவர் அமைதியாக விலகிச் சென்றார்.
அவரே செல்வதைப் பார்த்த மற்ற இருவரும் எதற்கு வம்பு? என்று அவருடனேயே சென்று விட்டனர். முன்னர் ஆட்டு மந்தை போல் குவிந்திருந்த கூட்டம் ஒவ்வொன்றாக விலகிச் சென்றுவிட, இப்போது செல்வா மட்டுமே அங்கே தனித்து நின்றுகொண்டிருந்தான்.
(தொடரும்....)
உங்களது பொன்னான கருத்துக்களைக் கீழே உள்ள கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே……
கருத்துக்களை பகிர..
www.narumugainovels.com