எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உண்மையான வாரிசு - கதை திரி

Krishna Tulsi

Moderator
உண்மையான வாரிசு

முரளியும் ரவியும் பாலிய சினேகிதர்கள். இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்று, ஒரே இடத்தில் வேலையும் செய்தார்கள். அவ்வளவு நெருங்கியது அவர்களது நட்பு. அதே போலவே இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையிலே திருமணமும் நடக்கவிருக்கிறது. “ ஹே முரளி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. இன்றைக்கு உனக்கும் எனக்கும் அவங்க அவங்க விரும்புனவங்களோட ஒரே மேடைல கல்யாணம். இந்த நாளுக்கு தான் காத்துகிட்டு இருந்தேன் டா” என்று ரவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அதற்கு முரளியும் ஒரு புன்னகையுடன் தன் தோழன் சொல்வதை கேட்டுகொண்டே இருந்தான்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது. இரு குடும்பமும் சென்னையில் அடுத்த அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்கள். ஒரு வருட காலம் இல்லற வாழ்கையை ஆனந்தமாக கழித்தனர் இரு தம்பதியர்களும். அடுத்த வருடம் ரவியின் மனைவி ஆனந்தி கருவுற்றாள். அனைவரும் ஆனந்தமாக இருந்தார்கள். முரளியின் மனைவி மாயா இந்த செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் ஆனந்தியை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டாள். “மாயா நீங்க எனக்கு ஒரு அம்மா மாதிரி இருந்து பாத்துகுறீங்க. ரொம்ப நன்றி” என்று அவள் கூறினாள். அதற்கு “இதுல என்ன இருக்கு ஆனந்தி, ஒரு பொண்ணு இந்த நேரத்துல ஒரு உயிரை சுமந்துகிட்டு இருக்கா. அவளுக்கு வேணும்ன்றத பக்கதுல இருக்குறவங்க தான செய்யனும். இதுக்குலாம் நன்றி சொல்லாத.” என்று கூறினாள் மாயா. “எனக்கு அம்மா இல்லாத குறைய நீங்க சரிசெஞ்சிடீங்க மாயா” என்று ஆனந்த கண்ணீருடன் அவள் தோளில் சாய்ந்தாள்.

ஒன்பதாவது மாதம் துவங்கியதும் ஆனந்திக்கு வளைகாப்பு நடத்தினர். அந்த விழாவில் ஆனந்தி அனைத்து அலங்காரங்களும் செய்து அழகாக அமர்ந்து இருந்தாள். மாயா அவளை பார்த்ததும் தனக்கும் இவ்வாறு தான் வளைகாப்பு நடக்கவேண்டும் என்று ஆசைபட்டாள். ஆனந்தி இருக்கும் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். விழாவில் ஆனந்திகுப் போடவேண்டிய வளையலை தொட்டுப் பார்த்து ஆனந்தம் அடைந்தாள். அந்த தாய்மை உணர்வுக்காக காத்துகொண்டு இருந்தாள்.

ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. மாயா அந்த குழந்தையை ஒரு நொடி கூட பிரியாமல் அருகில் இருந்தே இரவும் பகலும் கண்விழித்துப் பார்த்துக் கொண்டாள். ஒரு நாள் மாயா குழந்தையை பார்க்க வீட்டிக்கு சென்றிருக்கும்போது ஆனந்தி சோகமாக அமர்ந்திருந்தாள். “என்ன ஆனந்தி ஏன் சோகமா இருக்க?” என்று குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்தபடியே கேட்டாள். “மாயா, ரவிக்கு இந்த குழந்தை பிடிக்கவில்லையாம்.....” என்று கூறும்போது மாயாவின் விழிகள் ஆச்சரியத்தில் அகன்றன. “......அவருக்கு பெண் குழந்தை பிடிக்காதாம், ஆண் குழந்தை தான் வேண்டுமாம்.” என்று கூறினாள். இதை கேட்ட மாயா “என்ன முட்டாள் தனமான பேச்சு. பெண் குழந்தையா இருந்தா என்ன ஆண் குழந்தையா இருந்தா என்ன? அவரு இன்னு எந்த காலத்துல வாழ்ந்துகிட்டு இருக்காரு?” என்று கோபமாக பேசினாள். “நீ கவலைபடாத, உன் கணவருக்கு குழந்தை இருந்தும் அதோட அருமை தெரியல. அது இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமையும் பெருமையும் தெரியும். நேரம் வரும்போது உன் கணவரும் உணருவாறு.” என்று கூறி அவள் மனதை மாற்றினாள்.

மாயா, பேச்சை வேறுதிசையில் திருப்பினாள். சிறிது நேரம் பேசிவிட்டு மாயா தன் வீடு திரும்பினாள். இதை பற்றி முரளியிடம் கூறும்பொழுது, “மாயா, அவன் அவங்க அப்பா மாதிரியே யோசிக்கிறவன். அவங்க அப்பாவும் ஆண் குழந்தை தான் வேணும்னு நினைக்குற பழையகாலத்து மனிதர். நானும் அவன் கிட்ட இத பத்தி பேசி இருக்கேன் ஆனா அவன் எண்ணத்தை மட்டும் மாத்தவே முடியல” என்று வருந்தினான். “சரி கவலைபடாதீங்க அவரு மனசு மாறுகிற காலமும் வரும்” என்றாள்.

. திருமணமாகி எட்டு ஆண்டுகள் கடந்தும் மாயா-முரளி தம்பதியருக்கு மழலைச் செல்வம் இல்லை. குழந்தை இல்லாத பெண்ணுக்கு இந்த சமுதாயம் என்ன என்ன துயரங்கள் தருமோ அவை அத்தனையும் அவள் அனுபவித்தாள். அதனால் குழந்தை இல்லாத குறையைப் போக்க மாயா தினமும் ரவி-ஆனந்தி வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அவர்களின் குழந்தை வர்ஷா காலை பள்ளி செல்லும்போது இவளும் ஆனந்தியுடன் செல்வாள். பள்ளி முடிந்ததும் அவளே குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்துகொடுத்து, வர்ஷா உறங்கிய பின்னர் அவள் வீட்டில் கொண்டுவிடுவாள். இதுவே தினமும் நடந்தது.



இதை கவனித்த முரளி, அன்று இரவு அவளுடன் அதை பற்றி பேசினான். “மாயா நீ குழந்தைக்காக ஏங்குறனு தெரியும். எனக்கும் ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும்னு ஆச தான். அதுக்கு நீ எப்பவுமே ரவி வீட்டுக்கு போய் அவன் குழந்தைய பாக்குறது....எனக்கு என்னவோ சரியா படல”, என்றான். “ஏன் இப்படி சொல்றீங்க?” என்று கேட்டவளின் கேள்விக்கு “என்ன இருந்தாலும் அது அவங்க குழந்தை. அவங்களும் அவங்க குழந்தையோட தனியா நேரம் செலவிடனும்னு நினைபாங்கள? ஆனந்தி உன் மேல அளவுகடந்த அன்புவச்சிருகுரதுனால எதுவும் சொல்ல மாட்டா. ஆனா இது சரி இல்ல மா” என்று அவளுக்கு விளக்கினான்.

“நீங்க சொல்றதும் சரிதான். அப்போ நமக்குன்னு ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும்ல?” என்றாள். “அதுக்கு தான் நமக்கு கொடுத்துவைகலையே” என்று பெருமூச்சுவிட்டான். அதற்கு அவள் “ஒரு வழி இருக்குது. நாம ஏன் ஒரு குழந்தைய தத்தெடுக்ககூடாது. அப்படி எடுத்தா ஒரு குழந்தைக்கு நல்ல குடும்பமும், நமக்கு ஒரு குழந்தையும் கிடைக்கும்ல?” என்று தன் யோசனையை கூறினாள். “சரிமா நீ சொல்றதும் நல்ல யோசனைதான். அதுக்கு வேண்டியதை பற்றி நான் விசாரிக்கிறேன்” என்று அவன் கூறினான். அதை கேட்டு அவள் மிகவும் ஆனந்தம் அடைந்தாள்.

ஒருவர் நல்ல முடிவு எடுக்கும்போது அதை கலைப்பதற்கு நிறைய முயற்சி நடக்கும். அதுபோலத்தான் இங்கும் நடந்தது. அடுத்த நாள் அலுவலகத்தில் வேலை இடைவேளையின் போது இந்த எண்ணத்தைப் பற்றி ரவியிடம் முரளி ஆனந்தமாக கூறிக்கொண்டு இருக்கும்போது ரவி அவனை இடைமறித்து, “டேய், என்ன வார்த்த சொல்லீட்ட? தத்தெடுக்கபோரியா? அப்படி வர்ற குழந்த, எப்படி நம்ம ரத்தமா இருக்கும்? நம்ம ரத்தத்துல வர்ற குழந்தை தான் நம்ம வம்சம், நம்ம வாரிசு. நீ இப்படி ஒரு முடிவு எடுக்காத டா. இப்போ உள்ள காலத்துல எத்தனையோ முறைகள் இருக்கு குழந்தை பெத்துக்கருதுல. நீ அத எல்லாத்தையும் முயற்சி பண்ணிபாரு" என்று அவனுக்கு அறிவுரை வழங்கினான். முரளியின் வீட்டாரும் அவன் தத்தெடுக்கும் முடிவிற்கு எதிராக இருந்தார்கள்.

முதலில் ரவி கூறுவதை முரளியின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ஒரு ஓரத்தில், ‘இதையும் தான் முயற்சி செய்து பார்ப்போமே’ என்று கூறியது. ஏனென்றால் தன் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற ஒரு சிறு ஆசை அவனுக்குள்ளும் இருந்தது. இதை பற்றி அவன் தன் மனைவியிடம் கூறும்போது ஒரு சிறு தயக்கத்திற்கு பிறகு சம்மதித்தாள்.

ஆனால் இறைவன் போட்ட கணக்கோ வேறு. ‘எது நடக்க வேண்டுமோ அதுதானே நடக்கும்’, அதேபோல தான் இங்கும் நடந்தது. குழந்தை பெறுவதற்கான அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்தன. பெரும் சோகத்தில் இருந்தார்கள் முரளி-மாயா தம்பதியினர். அப்போது தான் முரளியின் வீட்டார் அவர்களை ஒரு ஜோசியரிடம் போக வற்புறுத்தினார்கள். அந்த ஜோசியரோ, “நீங்க கவலையே படாதீங்க. இருபத்தி ஐயாயிரம் கொடுத்து ஒரு ஹோமம் செஞ்சுட்டா உங்களுக்கு உடனே புத்திர பாக்கியம் கிடைக்கும். நாளைக்கே அத செஞ்சிருவோம்” என்று கூறினான்.

வரும் வழியில் உள்ள பூங்காவில் இருவரும் அமர்ந்துகொண்டு அதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த ஒரு ஐம்பது வயது நிரம்பிய மனிதர் அவர்களிடம் வந்து, “என்னை மன்னிக்கனும். என் பேரு சேகர். நீங்க பேசிக்கிட்டு இருந்தத நான் கேட்டேன். என் அனுபவத்துல நான் சொல்றேன், இந்த ஜோசியகாரங்க சொல்றதுலாம் உண்மையே கிடையாது. அப்படிலாம் செய்யாதீங்க. நீங்க தானம் தர்மம் செய்ங்க. உங்களுக்கு குழந்தை தான இல்ல, போய் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ங்க. உங்களுக்கும் ஒரு நல்லது நடக்கும். பெரியவங்க சொல்லுவாங்கல்ல ‘நல்லது செய்தால் நல்லதே நடக்கும்னு’. நீங்களும் செய்ங்க. நல்லதே நடக்கும்” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

அவர் கூறிய வார்த்தை அவன் மனதில் ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்கியது. அதன் விளைவாக அவன், அவர் கூறியது போலவே ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகழுகாக ஒரு நாள் முழுவதும் உணவிற்கு ஏற்பாடு செய்து இருந்தான். மதிய உணவு முடிந்த பின்னர் அவன் அந்த இல்லத்தில் உள்ள ஒரு மரத்தடி திண்ணையில் அமர்ந்து காற்றுவாங்கிக் கொண்டு இருந்தான்.அவன் மனைவி அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்தபடியே அமர்ந்திருந்த அவனை ஒரு குரல் அழைத்தது.

“நான் வேற யாரோன்னு நினைச்சேன் தம்பி. நீங்க தானா? நான் சொன்னமாதிரியே செஞ்சிடீங்க போல!” என்று கேட்ட குரலை திரும்பி பார்த்தான். அது அன்று பூங்காவில் பார்த்த அதே நபர், சேகர். “நீ கேக்க மாட்டியோனு நினைச்சேன். பரவா இல்லையே நீ நல்ல பையானா தான் இருக்க” என்று கூறினார். ஆச்சரியத்தில் அவரை பார்த்த அவன் மீண்டு நிதானத்திற்கு வந்து, “ஆமா சார், நீங்க சொன்னது என்னவோ சரியா தான் இருந்துச்சி அதான். ஆமா நீங்க இங்க எந்த வேலையா வந்தீங்க?” என்றான்.

அவர் பதிலளிக்கும் முன்பே ஓர் இளைஞன் வந்தான். அவன் முரளியை பார்த்து தலையசைத்து வணக்கம் தெரிவித்துவிட்டு தன் தந்தையுடன் பேசலானான், “அப்பா நான் அந்த உடைகள் டப்பாவை மட்டும் அங்க வச்சிட்டேன். நாம இன்னொரு நாள் வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு குடுத்துக்கலாம் பா” என்று கூறிவிட்டு, ”நாம வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், “நீ போப்பா நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்” என்று கூறினார். அதற்கு அந்த இளைஞன், “சரி பா, நான் உங்களுக்காக கார்ல காத்துகிட்டு இருக்கேன்” என்று கூறி அங்கிருந்த இருவரிடம் இருந்தும் விடைபெற்றுச் சென்றான்.

அவன் சென்ற பிறகு அவர்களது உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. “என்ன பா கேட்டுகிட்டு இருந்த.......ஆங் இன்னைக்கு என் பையனோட பிறந்தநாள். ஒவ்வொரு வருஷமும் அவன் பிறந்த நாளைக்கு இங்கு வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு, துணி மணிகள் எடுத்துகொடுபது உண்டு. அதேமாதிரி இந்த வருஷம் செய்யலாம்னு பார்த்தா நீங்க அந்த புண்ணியத்த பரிச்சிடீங்க” என்று கூறினார்.

உடனே அவன் “ஐயோ அப்படிலாம் இல்லை சார். நல்ல காரியத்த உடனே செய்யனும்னு சொல்லுவாங்க அதான்......ஆமா சார் உங்களுக்கு சமுகசேவைனா ரொம்ப பிடிக்குமோ?” என்றவனின் கேள்விக்கு, “ஆமா பா. என் பையன்…இப்போ பார்த்தியே அவன் கண்ணன். இவனுக்கும் சமூக சேவைனா ரொம்ப புடிக்கும். அப்படியே என்ன மாதிரி” என்று பெருமை பட்டார்.

அதற்கு முரளி, “உங்க பையன், உங்க ரத்தம், பிறகு உங்கள மாதிரி தான இருபாரு” என்றான். ஒரு சிறு வியப்பிற்குப் பின், “அவன் என்னமாதிரி இருக்குரதுக்கும், என் ரத்தத்துக்கும் என்ன சம்மந்தம்?. அவன் என்னோட வளர்ப்பு மகன் பா” என்றார். உடனே அவன், “என்ன மன்னிசிருங்க சார்” என்று கூறிவிட்டு சற்று தயங்கி நின்றான். அவரே பேச்சை துவங்கினர், “நீ ஏன் பா சொந்த குழந்தை தான் வேணும், அது தான் நம்மள மாதிரி இருக்கும்னு நினைக்குற?” என்றார். அதற்கு, “இல்லை சார், இப்போ உள்ள காலத்துல யாருகாவது குழந்தை இல்லேன்னா முதல்ல செயற்கை கருத்தரித்தல் மையம், இல்லனா வேற எதாவது வழில தான குழந்தைய பெத்துகிராங்க? அவங்களோட ரத்தமா இருந்தா தான அந்த குழந்தை அவன மாதிரி இருக்கும், அப்போ தான் அவனோட சந்ததியும் வளரும். இப்படி வேற யாரோ குழந்தைய வளத்தா அவன் அவங்க அம்மா அப்பா மாதிரி தான வருவான். நம்மள மாதிரி இருகமாட்டான்ல?” என்று தன் ஐயத்தை கேட்டான்.

அவர், “ஏன் பா படிச்ச நீயே இப்படி பேசலாமா? குழந்தைங்க எப்படி வளருதுன்னு நினைக்குற? நம்ம ரத்தத்துல இருக்குற குணம் தான் அவங்களுக்கு வரும்னா நம்புற? அப்படி கிடையாது. பிள்ளைகள் எப்போதும் நாம சொல்லி தரும் நல்ல பண்புகளால தான் வளருமே தவிர, அவங்கள ரத்ததால குறிப்பிட கூடாது. பெற்றோருக்கு எப்போ உண்மையான ஆனந்தம் வரும்னா பிள்ளைகள், அவர்கள் புகட்டிய நற்பண்புகளின் படி வாழ்ந்து, இந்த சமுதாயத்திற்கு எடுத்துகாட்டாக திகழும்போது தான்.”

“அவனே உண்மையான வாரிசு

“இத்தகைய எண்ணம் சமுதாயத்தில் உள்ள அனைவரின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். நான் காட்டிய நல்வழியில் வாழும் என் மகன் என்னுடைய வாரிசு......உண்மையான வாரிசு” என்று கூறிவிட்டு,

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே


என்று முணுமுணுத்தவாரே பாடிக்கொண்டே சென்றார். அன்று அவன் வாழ்வில் அவனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முரளியின் வாழ்வில் ஒளி தோன்றுவதற்கான முதல் அடியை அன்று எடுத்தான்.

முரளியும் மாயாவும் வீடு திரும்பும்போது ஒரு பிஞ்சு கால்களும் அவர்களுடன் வீடு சென்றது. இருவர் மூவராக மாறினர். வளையோசை கேட்காமலே வெகுநாட்களாக காத்திருந்த சிப்பிக்கு மழலை முத்து கிடைத்தது.

அவர்களின் இந்த முடிவை அனைவரும் எதிர்த்தனர், ஏன் ரவியும் எதிர்ப்பு தெரிவித்தான். ஆனால் முரளி அனைவர்க்கும் உண்மையான வாரிசின் உண்மையான அர்த்தத்தை விளக்கியதும் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்தனர். ரவியும் தன் தவறை உணர்ந்து தன் குழந்தையை கொஞ்சினான்.

அங்கு அறியாமை இருள் நீங்கி அறிவுப் பேரொளி பிறந்தது.

இவ்வாறு நம் சமுதாயத்தில் இத்தகைய விழிப்புணர்வு மிக்க செயல்களை செய்யும் போது ‘அனாதை’ என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கிவிடலாம்.

என் அருமை கண்ணணுக்கு நன்றி
 
Top