அத்தியாயம் - 6
வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது வாஷ் ரூம் சென்றுவருவதாக கூறி மாணவர்களைவிட்டு விலகி வந்தாள் ஆதவி.
மெல்ல அரியநாச்சியின் அறைக்கு வந்தவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். அறையில் யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லாது இருந்தது.
ஆனால் அவள் வகுப்பில் இருக்கும் பொழுதும் இவர்களின் மீது கவனம் செலுத்தியபடியே தான் இருந்தாள். இருவரும் இந்த அலுவலக அறைக்குள் வந்தனர் அதன்பிறகு வெளியே செல்லவே இல்லை.
“இங்கதான இரண்டு பேரும் வந்தாங்க வெளியே போகவே இல்லையே! ஆனால் இப்போ காணோம் எங்க போயிருப்பாங்க?” என தனக்குள் புலம்பியவள் மெல்ல அறையை நோட்டம்விட ஆரம்பித்தாள்.
அப்பொழுது திடீரென ஒரு சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் ஆதவி. தியாஷ் அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.
அவன் எப்படி அறைக்குள் வந்தான் வாசல் வழியாக வரவில்லையே! வாசல் வழியாக வந்திருந்தால் தன்னை கடந்துதான அவன் தற்போது நின்றிருக்கும் இடத்திற்கு செல்ல முடியும் ஆனால் அவன் எப்படி இங்கே நின்று கொண்டிருக்கிறான். வேறேதும் இங்கே அறைகள் இருக்கிறதா என்று ஆலோசித்தபடி சுற்றி சுற்றி பார்த்தாள்.
“இங்க என்ன செய்ற?” என்ற கனீர் குரலில் தியாஷின் புறம் திரும்பியவள் “அது வந்து” என அவள் பதில் அளிக்க முடியாது திக்கினாள்.
“அடுத்தவங்க அறைக்குள்ள அனுமதியில்லாம வரக்கூடாதுனு அறிவு வேண்டாம்?” என அவன் கடுமையாக கேட்கவும் ஆதவியின் கண்களில் நீர் திரண்டுவிட்டது.
“இல்ல நான் அரியாநாச்சி மேடம் பார்க்க வந்தேன்”
“என் அம்மாவ நீ எதுக்கு பார்க்கனும்? நீ இங்க உன்னோட படிப்பு விசயமாதான வந்துருக்க உனக்கான கிளாஸ் வெளிய நடந்துட்டு இருக்கும் போது இந்த அறைக்குள்ள என்ன செய்ற பதில் சொல்லு?”
“சும்மா கத்தாதீங்க நான் அரியநாச்சி மேடம்கு இங்க வேலைக்கு உதவி செய்றது வழக்கம் அதனால தான் வந்தேன் ஏதோ பெரிய பொக்கிஷமும் ரகசியமும் இங்க மறைஞ்சு இருக்குற மாதிரி பதறுறீங்க” என்றாள் அழுகையுடன்
அவளது வார்த்தைகள் தியாஷை திகிலடைய செய்தது. அவனது கண்களில் அதன் சாயல் வெளிப்படாவண்ணம் மறைத்தவன் “இங்க என்ன ரகசியம் இருக்கபோது அடுத்தவங்க அறைக்குள்ள அனுமதி இல்லாம இப்படி நுழைய கூடாதுனு தான் சொல்றேன். போ போய் உன்னோட கிளாஸ் கவனி” என்றான்.
அவள் அழுகையுடன் மனதினுள் கோபமாக அவனை வசைபாடிக் கொண்டே வெளியே சென்றுவிட்டாள். அவள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும் பெருமூச்சுவிட்டபடி பின்னே திரும்ப கண்முன்னே நின்ற அரியநாச்சியை கண்டு திடுக்கிட்டான்.
“ஏன்மா இப்படி வந்து நிக்குறீங்க பயந்தே போயிட்டேன்”
“ஏன்டா அந்த பொண்ணுகிட்ட அவ்வளவு கடுமையா நடந்துகிற?”
“பின்ன இங்க இருக்குற ரகசியம் அவளுக்கு தெரிஞ்ச பரவா இல்லையா?”
“தெரிஞ்சா என்னடா இப்போ? எனக்கு அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசையா இருக்கு. ரொம்ப நல்ல பொண்ணு”
“அம்மா பிளீஸ் இன்னொரு முறை கல்யாணம் பத்தி பேசாதீங்க எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்ல”
“ஏன்டா இப்படி பேசுற எனக்கு எப்பவும் உன்னோட கல்யாணத்தை பத்தி தான் கவலை எல்லாருக்கும் ஒரே போல வாழ்க்கை அமையாதுடா எனக்கு இப்படி வாழ்க்கை அமைஞ்சதால எல்லாருக்கும் இது தான் நடக்குமா என்ன? எத்தனை பேரோட கல்யாண வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சு இருக்கு தெரியுமா? நீயும் இப்படி இருக்க உன் தங்கச்சியும் என்னை வெறுத்து ஒதுக்குற இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா?”
“அம்மா இந்த டாப்பிக்க நீங்க கன்டின்யூ பண்ணுனா நான் இப்போவே வெளிய போயிடுவேன்”
“டேய் நான் சொல்றதை தயவுசெஞ்சு கேளு கல்யாணம்….”
அவன் அதன்பிறகும் அங்கே நிற்காமல் வெளியே சென்றுவிட்டான். செல்லும் அவனை வெறித்த அரியநாச்சி “என் மகனோட வாழ்க்கைய நானே கெடுத்துட்டேனோ? எல்லாரும் சொல்றமாதிரி நான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு அந்த ஆளோட வாழ்ந்து இருக்கனுமோ!” என கவலைக் கொண்டாள்.
டைனிங் டேபிலில் அமர்ந்திருந்த தாழினி முன் சப்பாடை பரிமாறினாள் சௌமியின் அக்கா.
“கூச்சப்படாம சாப்பிடு!”
சரி அக்கா என்பதாக தலை அசைத்தவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்.
“வாவ் அக்கா சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கு”
“தாங்க்ஸ்டா!”
தாழினி வயிறு நிறைய உண்டு முடித்தாள்.
அப்பொழுது அங்கு வந்த ஆர்கஸ் “உமா! உன் புருசன் போன் பண்ணினான? நான் போன் பண்ணுனா எடுக்கமாட்டேங்குறான்” என்றான்.
கைகளை கழுவுவதற்கு எழுந்த தாழினி ஒருநிமிடம் அப்படியே நின்றுவிட்டாள். “என்ன உன் புருசனா? அவருதான அவங்க புருசன்! ஏன் இப்படி கேட்குறாரு?” என்று சிந்தித்தவள் அவர்களது உரையாடலை கவனித்தாள்.
“நான் கால்பண்ணி அவரு அப்படியே எடுத்துட்டாலும் ஏன்டா வெறுப்பேத்துற”
“ஓ அப்போ அவன் போன் எடுக்கல” என்றவன் மேசை மீது மூடி வைக்கபட்டிருந்த உணவு பதார்த்தங்களை திறந்து பார்த்தான்
“எல்லாம் அவனுக்கு பிடிச்ச ஐட்டமா இருக்கு அப்போ இன்னைக்கு அவன் வரான் இல்லையா? ஆனாலும் நீ ஏன் இப்படி கேவலமா பொய் சொல்ற”
“இல்லடா அது” என அவள் சமாளிக்க முயற்சிக்கவும் “சீ கேவலாம பண்ணாத” என்றபடி உணவை தட்டில் பரிமாறி உண்ண ஆரம்பித்தான்.
“அப்போ ஆர்கஸ் உமா அக்காவோட ஹஸ்பண்ட் கிடையாதா!” என உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் கைகளை கழுவிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்.
சோபாவில் அமர்ந்து தன்னுடைய கலரிங் புக்கில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த சிறுமியிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.
“குட்டி உன் பெயர் என்ன?” என ஆரம்பித்தவள் மெல்ல “உன் அப்பா அம்மா பெயர் என்ன?” என கேட்டாள். பின் “அங்க உட்காந்து இருக்காரே அவரு யாரு?” என ஆர்கஸை பார்த்து கேட்க “அவரு என் அப்பா பிரண்ட் ஆர்கஸ் அப்பா!” என்றாள் சிறுமி.
தாழினியால் தன்னுடைய சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியவில்லை. குழந்தையின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள். குழந்தை அழகாக சிரித்தது.
குழந்தை அவளிடம் “ஆன்டி இந்த பட்டாம்பூச்சிய பாருங்க நல்லா இருக்கா?” என தான் வண்ணம் தீட்டிய நீல வண்ண பட்டாம்பூச்சிய காட்டி கேட்டாள்.
“ம் அழகா இருக்குடா தங்கம்!”
“தாங்க்ஸ்” என்றவள் வேகமாக உணவருந்தி கொண்டிருந்த ஆர்கஸிடம் சென்றாள். “அப்பா இதோ பாருங்க இது நீங்க தான் இந்த பட்டாம்பூச்சியும் நீல கலர்ல இருக்கு உங்களோட கண்ணும் நீல கலர்ல இருக்கு அதான்!” என தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்பதற்கான கூடுதல் தகவலோடு அதனை காட்டினாள்.
அவனும் “தாங்க்ஸ்” எனக் கூறி குழந்தைக்கு முத்தமிடவும் அவர்களை ரசித்து பார்த்தாள் தாழினி. அவளது காதல் பார்வையின் போதே அவளது உடல் பச்சை, கருப்பு மற்றும் பழுப்பு கலந்த நிறமாக ஒருநிமிடம் மாறி பின் இயல்புக்கு திரும்பியது. அதை அவள் உணரவும் இல்லை.
அப்பொழுது அவளது கவனத்தை கலைக்கும் விதமாக “அம்மாடி தாழினி நீ இன்னைக்கு இங்கையே ஸ்டே பண்ணிடேன்! அவள் நாளைக்கு காலையில தான வருவ இருந்து பார்த்துட்டு போ” என்றாள் உமா.
“இங்கிருந்தால் ஆர்கஸ்கூட குளோஸ் ஆக வாய்ப்பு இருக்கு யூஸ் பண்ணிக்கோ தாழினி!” என மனதுக்குள் கூறிக் கொண்டாள்.
ஆனால் அடுத்தநிமிடமே “அவன் ஒருவேளை கமிட்டா இருந்தால் அப்போ என்ன பண்ணுவ?” என மனம் வாதாட “அப்படி இருக்காது! பாசிட்டிவ்வா யோசிக்க பழகு” என்று அதனை அதட்டி அடக்கினாள்.
அவள் வெகுநேரமாக பதில் கூறாமல் இருக்கவும் புருவத்தை சுருக்கிய உமா “என்னாச்சு தாழினி? அமைதியா இருக்க உனக்கு இங்க தங்க விருப்பம் இல்லையா?” என கேள்வி எழுப்பினாள்.
“அதுவந்து ஓகே தான் அக்கா! ஆனால் நான் சேஞ்ச் பண்ணிக்க டிரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே”
“அதான் உன் பிரண்ட் டிரெஸ் நிறைய இருக்கே! இரண்டு பேரும் ஒரே மாதிரி தான இருக்கீங்க அதுல ஒன்னு எடுத்துக்கோ”
“சரிங்க அக்கா!”
“சந்தோஷம்டா” என்ற உமா அவளுக்கு தங்குவதற்கான அறையை ஒதுக்க சென்றுவிட்டாள்.
அன்று மதியம் வரை தாழினி கொண்டாட்டமாக இருந்தாள். ஆர்கஸ்ம் அடிக்கொரு முறை இவளிடம் பேச்சுக் கொடுக்க என இருந்தான்.
அது மேலும் அவளுக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்க இந்தியா வந்ததில் முதல் முறையாக சந்தோஷம் அடைந்தாள்.
மதிய உணவின் போது முக்கிய வேலையாக உடனே தான் வெளியே கிளம்ப வேண்டும் திரும்பி வர எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என கூறினான்
உணவருந்தி கொண்டிருந்த தாழினிக்கு புரையேறியது. தலையை தட்டியபடி “என்னடா எல்லாம் நல்லா போகுதேனு நினைச்சேன் இதோ ஆரம்பிச்சுருச்சுல என்னோட பேட்லக்” என எண்ணிக் கொண்டாள்.
தொடரும்...