எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கதை திரி

Status
Not open for further replies.

NNK102

Moderator
அத்தியாயம் - 1


“என்ன பொருத்தவரைக்கும் லவ் அப்படினா care and affection (அக்கறையும் அன்பும்) மட்டும் கிடையாது truth and honesty (உண்மையும் நேர்மையும்) சேர்த்து தான்! உண்மையான காதல்” என தன் முன் நீட்டபட்டிருந்த மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தாள் அரிய நாச்சி.

அவளை பேட்டிக் கண்டு கொண்டிருந்த பிரபல சேனலை சேர்ந்த தொகுப்பாளினி அவளது கூற்று மிகச் சரி என்பது போல் தலையை அசைத்தாள். அந்த பெண்ணுடன் இருந்த தொகுப்பாளனோ “மேம் இங்க இருக்குற முக்கால்வாசி பேர் காதல்னா care and affection தான் அப்படினு சொல்லி இருக்காங்க உங்களோட பதில் வித்தியாசமா இருக்கே” என்றான்.

“அவங்க அப்படி சொல்றதுல தப்பு கிடையாதே! அவங்க இப்ப தான் காதலோட முதல் கட்டத்துல இருக்காங்க அந்த சூழ்நிலையில அது தான் பெரிய விஷயமா தோணும். காலங்கள் கடக்கும் பொழுது இந்த வாழ்க்கை நமக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுக்கும்” என்றவள் கண்களுக்கு எட்டாத சிரிப்பொன்றை வழங்கிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

இன்று காதலர்கள் தினம் சென்ற வருடம் வரை இந்த நாள் அவளது வாழ்வில் மிக முக்கிய நாளாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு?

அவள் அதுவரை இருந்த பூங்காவைவிட்டு வெளியே செல்லும் முன் கடைசியாக உள்ளே திரும்பி பார்த்தாள். தன்னிடம் பேட்டிக் கேட்டவர்கள் தற்பொழுது வேறொரு ஜோடிகளிடம் தங்களது கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களிடமிருந்து பார்வையை திருப்பியவள் மௌனமாக வீடு இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளது எண்ண அலைக்குள் அனுமதியின்றி கடந்த கால நிகழ்வுகள் மேலெழும்ப ஆரம்பித்தது.

“நாங்க சொல்ல வருவதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு நாச்சி”

“நாங்க உன்னை பெத்தவங்கமா! உனக்கு கெட்டதா சொல்ல போறோம்”

“பொண்ணு புருஷன் கூட இருந்தால் தான் மரியாதைமா புரிஞ்சுக்கோ” என உறவினர்களும் அவளை பெற்றவரும் மாறி மாறி அறிவுரை கூறிக் கொண்டிருந்தனர்.

“உன் புருஷனுக்கு நேரம் காலம் சரியில்ல அதனால தான் இப்படியெல்லாம் நடந்துகிறாரு”

இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த அரிய நாச்சி தான் தாயின் கூற்றில் அதிர்ந்து எழுந்தாள்.

“போதும் நிறுத்துமா! என்ன நேரம் காலம் சரியில்ல உன் மருமகன் பண்ணியது போல நான் செய்துட்டு நேரம் காலம் சரியில்லா அதான் இப்படி ஆகிருச்சுனு சொன்ன ஏத்துபிங்களா?”

“என்ன வார்த்தை பேசுற நாச்சி கழுத்தை அறுத்து போட்டுடுவேன்” என்றார் அவள் தந்தை.

“நான் வாய் வார்த்தையா சொன்னதையே உங்களால எத்துக்க முடியல இல்லையா? ஆனால் அந்தாளு மட்டும் வேற பொண்ணுக் கூட பழக்கம் வச்சுட்டு வருவாரு நான் மட்டும் எல்லாத்தையும் மறந்துட்டு ஏத்துக்கனும் இல்லையா?”

“ஆம்பளைனா அப்படி இப்படி இருக்க தான் செய்வான். அதை பெருசு பண்ணினால் எப்படி? அதான் இப்போ தப்பை புரிஞ்சு திரும்பி வருகிறாரே வேற என்ன வேணும்?” எனத் தன்னிடம் கேட்ட தமையனிடம் பார்வையை திருப்பியவள் “ஓ அப்போ நீயும் ஆம்பளை தான அதையே தான் செஞ்சுட்டு இருக்கியா? அண்ணி எதுக்கும் நீங்களும் கொஞ்சம் விசாரிங்க” என்றாள் கோபமாக

அரியநாச்சியின் கூற்றை அவளது தமையனும் அண்ணியும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மனவருத்தத்தில் இருப்பவள் தன் ஆதங்கத்தை கொட்டுகிறாள் அப்படியேனும் அவள் மனபாரம் குறையட்டும் என்றே எண்ணினர்.

“உன் பிடிவாதத்தை விட்டு உன் பிள்ளைகளுக்காக யோசி புருஷன் துணையில்லாம அந்த பிள்ளைகள் இரண்டையும் எப்படி வளர்த்துவ?” எனக் கேட்ட தாயிடம்

“பிள்ளைகளை காரணம் காட்டி என் மனசை மாற்ற முயற்சி செய்யாதீங்க மா! என் பிள்ளைகளை எப்படி வளர்க்கனும்னு எனக்கு தெரியும்” என்றவள் வேகமாக அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அதன்பிறகும் அவளது பெற்றோர் தங்களது முயற்சியை கைவிடாமல் இருந்தனர். தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட யோசித்துவிட்டாள். ஆனால் அவளுக்கு கோலையாக இருக்க விருப்பம் இல்லை.

தற்கொலை முயற்சி முட்டாள் தனமானது என்று பலருக்கு அறிவுரை கூறியவள் அவள். அப்படியிருக்க தானும் அம்முட்டாள் தனத்தை செய்தல் கூடாது என எண்ணினாள். பிள்ளைகள் பற்றி கவலை மேலோங்கியது.

தன் அருகே படுத்து உறங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மகனின் தலை கோதிவிட்டவள் “என்னடா கண்ணா?” என்றாள்.

“அம்மா! ஏன் எப்பவும் அழுதுட்டே இருக்கீங்க? அப்பா உங்கள சீட் பண்ணிட்டாரா? சீட்பண்றது ரொம்ப தப்புனு சொல்லுவீங்க தான! உங்களுக்கு கஷ்டமா இருந்தால் அவரை மன்னிக்க வேண்டாம் அம்மா!” என்றான் அவளது மகன் தியாஷ்.

மகனது அக்கறையில் அவளது கண்கள் மென்மேலும் கண்ணீரை சொரிந்தது.

அவனை மாரோடு அணைத்துக் கொண்டவள் “கண்ணா உனக்கு எங்க இருக்க விருப்பம் சொல்லு?” என்றாள்.

“எனக்கு உங்களோட இருக்க தான் அம்மா விருப்பம் எப்பவும் உங்க கூட மட்டும் தான் இருப்பேன்”

கண்ணீரோடு அவனது தலையை தடவிக் கொடுத்தவள் உறங்கி கொண்டிருந்த தன் இரண்டாவது குழந்தையை பார்த்தாள்.

“அம்மா! பாப்பாவையும் நம்மளோடவே கூட்டிட்டு போயிடலாம் அம்மா”

“சரிடா கூட்டிட்டு போயிடலாம்” என்றவள் மறுநாள் மகன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.

அண்ணன் மனைவி இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள் அவளோடு இருந்து பணிவிடை செய்யமுடியாமல் போனதை எண்ணி வருத்தம் அடைந்தாள். அதேநேரம் தனது சுயநலத்துக்காக வெளியேறியதை எண்ணி குற்றஉணர்வும் உண்டானது.

தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணும் பொழுது அவளது கணவன் தனக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்த்துக் கொள்வாள். பின் தான் செய்தது சரி என்ற முடிவுக்கும் வந்துவிடுவாள்.

இவற்றையெல்லாம் எண்ணியபடி தற்போது தான் தங்கியிருக்கும் வீட்டை நோக்கி சென்றாள். பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பார்கள் என்ற எண்ணம் வேகமாக அவளை நடக்க செய்தது.

வீட்டின் அருகே நெருங்கி வரும்போதே அவளது கணவன் மகளிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதும் மகன் தன் சகோதரியை தந்தையிடம் இருந்து பிரித்து இழுத்து செல்ல முயல்வதும் தெரிந்தது.

வேகமாக அவர்கள் அருகே ஓடியவள் மகளை தன்புறம் இழுத்துக் கொண்டாள். மனைவியின் செயலில் அவளை அடிபட்ட பார்வை பார்த்தான் அவளது கணவன் தமோதரன்.

“நாச்சி!”

“சீ! என் பெயரை சொல்லி கூப்பிடாத! உன்னை பார்த்தாலே பத்திகிட்டு வருது. எத்தனை முறை சொல்வது எங்களை தேடி வராதனு உனக்கெல்லாம் சொரணையே இல்லையா?” என கத்தினாள்.

அவளது கத்தலில் வீட்டிற்குள் இருந்த அவள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வேகமாக வெளியே வந்து பார்த்தார்.

கணவன் மனைவி இருவரின் சண்டையை பார்த்ததும் அவருக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. கடினப்பட்டு தன்னை கட்டுபடுத்திக் கொண்டவர் பொறுமையாக காத்திருக்க ஆரம்பித்தார்.

“இப்படி பேசாத நாச்சி! கஷ்டமா இருக்கு! என்மேல எந்த தப்பும் இல்ல என்ன நம்பு!”

“எப்படி உன்னால இப்படி வாய் கூசாம பொய் சொல்ல முடியுது. என்னை முட்டாளக்க நினைக்காத! நீ அந்த பொம்பளையோட பேசுன வாட்ஸ் அப் வாய்ஸ் சாட்டிங் முதற்கொண்டு எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். இனிமேலும் உன்னோட நாடகத்தை அரங்கேற்றாத தயவு செய்து இங்கிருந்து போயிடு” என கத்தினாள்.

அவன் போக முடியாது என முரண்டுபிடித்தான். குழந்தைகளை கூட்டிக் கொண்டு தன்னோடு வந்துவிடு என்று கெஞ்சினான். நேரம் கடக்கவும் செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க ஆரம்பித்துவிட்டான்.

“நாச்சி நான் செய்தது தப்பு தான்! ஏதோ சபலத்துல அப்படி செஞ்சுட்டேன். என்னால நீயும் குழந்தைகளும் இல்லாம இருக்க முடியாது நாச்சி செத்துடுவேன் பீளிஸ் என்னோடு வா”

அவனது செத்துடுவேன் என்ற வார்த்தையில் ஆக்ரோசமாக அவன் புறம் திரும்பியவள் “செத்து தொலை! முதல அந்த நல்ல காரியத்தை பண்ணு வாழ்க்க முழுக்க என் நிம்மதிய கெடுக்குற காரியத்தை பண்ணிட்டு எப்படி உன்னால உயிர் வாழ முடியுது?” என்றாள்.

அரியநாச்சியால் கணவனின் துரோகத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன்மேல் உயிரையே வைத்திருந்த தன் மனைவி தன்னை செத்துவிடு என்கிறாளே என்று தமோதரன் உயிருடன் மரணித்தான்.

தான் செய்த காரியத்தின் வீரியம் என்னவென்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது. மனம் உடைந்து போனவன் மெதுவாக அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

அவன் அங்கிருந்த சென்ற நொடி வீட்டின் உரிமையாளர் அவள் அருகே வந்தார்.

“இனிமேலும் உன்னை இங்க தங்கவைக்க முடியாது மா வீட்டை சீக்கிரம் காலி பண்ணிடு” என்றார்.

“ஐயோ! ஆனா..” என அவள் ஏதோ கூற முனையவும் கை நிறுத்தி அவளது பேச்சுக்கு தடைவித்தவர் “உன்மேல இரக்கப்பட்டதால தான் நீ தங்க இடம் கொடுத்தேன் ஆனால் உன் புருஷன் அடிக்கடி இப்படி வந்து தகராறு பண்றாரு என் வீட்டுலையும் கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்காமா! அவள் வாழ்க்கைய பத்தி யோசிக்கனும்ல?” என்றார்.

சம்மதமாக தலை அசைத்தவள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினாள்.

தொடரும்

எல்லாரும் கதைய முடிச்சுட்டாங்க நான் இப்பதான் தொடங்குறேன். தொடர்ந்து உங்களுடைய ஊக்குவிப்ப கொடுங்க நிச்சயம் குறித்த தேதிக்குள் கதைய முடிக்க முயற்சி பண்றேன்

கதையின் நிறை குறைய பத்தி சுட்டிக்காட்டுங்கள் பிரண்ட்ஸ்
 

NNK102

Moderator
அத்தியாயம் - 2

சில வருடங்களுக்கு பிறகு

கொடைக்கானலுக்கு ஆரவாரத்துடன் வந்தது கல்லூரி பேருந்து ஒன்று. அதனுள் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தனர்.

தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அனைவரும் துள்ளி குதித்துக் கொண்டு இறங்கினர். ஒருவள் மட்டும் உடலை குறுக்கிக் கொண்டும் உள்ளங்கைகளை சூடுபறக்க தேய்த்து கன்னத்தில் வைத்தபடியும் இருந்தாள்.

உடன் இருந்த தோழிகளோ “ஏய் ஆதவி இப்பவே இப்படி நடுங்குற? இன்னும் ஒரு மாசம் நாம இந்த கொடைக்கானல்ல தான் இருக்க போறோம். நாம வீட்டுக்கு திரும்ப போகும் போது உயிரோட இருப்பதான!” என்று கேலி செய்தனர்.

அவர்களை செல்லமாக முறைத்த ஆதவி பேராசிரியரின் குரல் கேட்கவும் அவர் புறம் திரும்பினாள்.

“பசங்களா போதும் ஆட்டத்தை நிறுத்துங்க!” என பேராசிரியர் உரைக்கவும் மற்ற மாணவர்களும் அமைதியாகிவிட்டனர்.

“இங்க பாருங்க நம்மளோட ரிசர்ச்க்கு அவங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்! அவங்களோட கெஸ்ட் ஹவுஸ்ல தான் நாம தங்க போறோம். சோ எல்லாரும் அடக்க ஒடுக்கமா இருக்கனும்”

மாணவர்கள் அனைவரும் சம்மதமாக தலை அசைத்துவிட்டு அவர்கள் முன் இருந்த மிகப் பெரிய கெஸ்ட் ஹவுஸ்ஸை ஆவலாக ரசித்தபடி உள்ளே சென்றனர்.

இவர்கள் அனைவரும் Entomology ( பூச்சியல்) பற்றி படிக்கும் மாணவர்கள். அவர்களது இறுதி வருட படிப்பின் ஒரு அங்கமாக தற்போது கொடைக்கானலுக்கு ஒரு ஆய்வை மேற்கொள்ள வந்துள்ளனர்.

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்த ஆதவி தனது உடமைகளை எடுத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். அவளோடு தங்க இருந்த தோழியோ உள்ளே வந்ததும் பெட்டில் படுத்து கண்ணுறங்க ஆரம்பித்துவிட்டாள். மெல்ல மெல்ல தூக்கத்திற்கு செல்லவும் ஆரம்பித்தாள்.

பயணம் செய்து களைப்பு அவளை தூக்கத்திற்கு அழைத்து சென்றது. ஆதவிக்கு அப்படி களைப்பு ஏதும் இல்லையோ என அவள் அறைத் தூக்கத்தில் எண்ணி முடிக்கும் முன்னே “ஹச்!” எனத் தும்ம ஆரம்பித்தாள் ஆதவி.

ஆதவியின் தோழி திவ்யா சலிப்பாக கண்களை திறந்து தனது பையில் இருந்து இன்ஹெல்லரை அவளிடம் எடுத்துக் கொடுத்தாள்.

“ஏன்டி சைனஸ் பிராப்ளம் வச்சுகிட்டு நீ இப்படி கொடைக்கானல் வரைக்கும் வரனுமா? பேசாமா வேற டீம் கூட சேர்ந்து வேற ஊர் போயிருக்கலாம்ல!”

“ஆனால் எனக்கு கொடைக்கானல் பிடிக்குமே! இங்க வரனும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா அது இத்தனை வருஷத்துக் அப்புறம் இப்பதான் நிறைவேறி இருக்கு”

“என்னமோ போ ஆனால் ஓயாம தும்மி என் தூக்கத்தை கெடுக்காத அப்புறம் நான் உன் மூக்க கடிச்சு வச்சுருவேன்” என பூனை போல் சீறி காமித்தாள் திவ்யா.


செல்லமாக அவள் மீது தலையணையை தூக்கி எறிந்த ஆதவி தான் பாதியில் விட்ட வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு திவ்யா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்ட ஆதவி தன் உடமையிலிருந்து ஒரு பிரேம் செய்யப்பட்ட போட்டோவை கையில் எடுத்தாள்.

அவளது கண்ணீர் அந்த புகைப்படத்தில் பட்டு தெரிக்கவும் தன் கண்களை துடைத்துக் கொண்டு அதை மீண்டும் தன் உடமைக்குள்ளே பத்திரப்படுத்தினாள்.

மறுநாள் பத்து மாணவ மாணவிகளும் தங்களது பேராசிரியருடன் சேர்ந்து ஒரு வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சென்றனர்.

அப்பூங்காவை அடைந்ததும் வெகுநேரம் காட்டுபகுதி வழியாக மலை ஏறி வந்த களைப்பு தீர்ந்து போனது. காரணம் அவர்கள் கண்முன்பே பரந்து விரிந்திருந்த காட்சி அத்தகையது.

வண்ண வண்ண பூக்களும் அவற்றின் நிறங்களுக்கு சற்றும் குறைவில்லாத வண்ணங்களையும் அழகையும் கொண்ட விதவிதமான பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது.

அதனை பார்த்த அனைவருக்கும் புத்துணர்ச்சகயாக இருந்தது. பூங்காவை வேடிக்கை பார்த்தவர்களின் கவனம் “வாங்க! வாங்க!” என அழைத்த ஒரு பெண்மணியின் குரலின் புறம் திருப்பப்பட்டது.

தங்களை வரவேற்ற பெண்மணியிடம் பதில் வண்க்கம் செலுத்திய பேராசிரியர் “ஸ்டுடன்ஸ் இவங்க தான் அரியநாச்சி மேடம்! நம்ம எல்லாரும் இவங்களோட ஹெஸ்டவுஸ்ல தான் தங்கி இருக்கோம்” என்றதும் மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

சிறிது நேரம் உரையாடிவிட்டு அவர்களைவிட்டு அகன்றுவிட்டார் அரியநாச்சி. அரியநாச்சி அரசாங்க அனுமதியுடன் இந்த பட்டாம்பூச்சி பூங்காவை நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக அவரது மனதை அமைதியாக வைத்திருப்பதில் இந்த பூங்காவிற்கு பெரும் பங்கு உள்ளது.

செல்லும் அரியநாச்சியை விழி அகலாது பார்த்து நின்றாள் ஆதவி. அவளது அருகில் நின்றிருந்த அவளது வகுப்பு தோழனோ “வாவ் ரொம்ப அழகா இருக்காங்கள?” என்றான்.

ஆதவியின் அருகில் இருந்த திவ்யாவோ “டேய் ரொம்ப வலியாத! அவங்களுக்கு உன்னவிட பெரிய வயசுல பையன் இருக்கான்” என்றாள்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என ஆதவி கேள்வி எழுப்ப “ஒரு இடத்துல தங்க போறோம்னா உதவி பண்றவங்கள்ல இருந்த அங்க வேலை பார்க்குறவங்க வரை எல்லாரபத்தியும் தெரிஞ்சுவச்சுகனும்ல. நம்மளோட சேஃப்டிக்காக அதான்!” என்றாள்.

“ஓ! நம்மளோட சேஃப்டி பத்தி மேடம் யோசிச்சு இருக்கீங்க? அப்போ காலையில நம்ம ரூம்க்கு காபி கொண்டு வந்து கொடுத்தாங்களே அந்த அக்கா பேரு என்ன சொல்லு பார்ப்போம்” என்றாள் ஆதவி.

“அது ஏதோ கா எழுத்துல ஆரம்பிக்கும்” என அவள் மண்டையை சொரிய “திவ்யா!” என அழைத்த ஆதவி “தூ” என அவள் முகத்தில் காற்றை துப்பினாள்.

“சரிவிடுபா அந்த மேடம் பையன் செம ஸ்மார்ட்டா இருப்பானாம் கேள்விபட்டேன்”.

“இங்க வந்து இறங்கியதும் மேடம் என்ன சொன்னாங்க அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு சொன்னாங்க நினைவு இல்லையா?”

ஆதவி கூறியவை எதும் திவ்யாவின் காதுகளில் ஏறவே இல்லை. “அந்த பையன் நாளைக்கு இங்க வந்துருவானாம்! நாம போய் பார்க்கனும். அவனை பத்தி இங்க யார்கிட்ட கேட்குறது?” என அவள் முணுமுணுக்க அவை அனைத்தும் ஆதவியின் காதுகளில் தெளிவாக கேட்டது.

“சரியான பைத்தியம்!” என்றபடி தலையில் அடித்துக் கொண்டாள் ஆதவி.

அலுவலக அறையில் அமர்ந்திருந்த அரியநாச்சி தனது கைபேசி அழைக்கவும் புன்னகையுடன் பேச ஆரம்பித்தாள்.

“என் செல்ல கண்ணன் இப்போ என்ன செய்றாரு?”

“அம்மாவ பார்க்குறதுக்காக விமானத்துல பறக்க ரெடியா இருக்காரு” எனச் செல்லம் கொஞ்சினான் தியாஷ்.

“நிஜமாவா கண்ணா! உன் தங்கச்சி இந்தியா வர ஒத்துக்கிட்டாளா?”

தன் அருகில் அமர்ந்து ஹெட்செட்டில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டே “ஆமா அம்மா!” என்றான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா நான்! எனக்கு என்னை செய்றதுனே தெரியல! தலைகால் புரியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கு”

“சரிமா இதே சந்தோஷத்தோட இருங்க! நாங்க சீக்கிரமே ஊருக்கு வந்துடுவோம்” என்றவன் போனை அணைத்து உடமையில் வைத்தான்.

அப்பொழுது ஒரு குரல் தியாஷ் அருகில் அமர்ந்திருந்த அவனது தங்கையின் கவனத்தை பாடல் வரிகளில் இருந்து தன்னிடம் இழுத்துக் கொண்டது.

தொடரும்...

 

NNK102

Moderator
அத்தியாயம் - 3

தியாஷின் தங்கை தாழினி தனது டேப்போடு போராடிக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயற்சி செய்தும் அவளால் பாடல் வரிகளுக்குள் மூழ்க முடியவில்லை.


அண்ணன் வார்த்தைக்காக இந்தியா வர ஒப்புக் கொண்டாள். தற்போது அங்கே செல்வதை எண்ணி எரிச்சல் மேலோங்கியது.


கடினப்பட்டு ஒரு பாடலின் வரிகளில் தன்னை மூழ்கடிக்க முயற்சி செய்யும் நேரம் ஒரு ஆணின் குரல் அவளை மீண்டும் தோல்வியை தழுவச் செய்தது.


“யாருடா அது? தமிழ் பேசுறது கேட்கும் போது காது குளிருது” என்று எண்ணியபடி நிமிர்ந்து பார்க்க “குட்டிமா!” என்றபடி வெள்ளை நிற உடையில் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருந்தான் ஒருவன்.


அவனது தோள்பட்டையில் இருந்த கருநிற பட்டையின் மேல் இருந்த நான்கு மஞ்சள் நிற கோடுகள் அவன் ஒரு பைலட் என்பதை எடுத்துரைத்தது.


நேராக தாழினியின் முன்னே மண்டியிட்டு அமரவும் திடுக்கிட்டு போனாள் அவள். அவனது நீல நிற கண்கள் அவளை வசியம் செய்வது போல் தோன்றியது.


ஒருவித மோனநிலையில் இருந்தவளை “அப்பா!” என்று அழைத்த சிறு குழந்தையின் குரல் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.


சத்தம் வந்த திசையான ஜன்னல் ஓர இருக்கையை எட்டிப் பார்த்தாள். ஒரு பெண் குழந்தை சிரித்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தது. ஜன்னல் ஓர இருக்கையில் அக்குழந்தையும் அவளை அடுத்து தியாஷ் அதன் பிறகு தாழினி என அமர்ந்திருந்தனர்.


அதனால் குழந்தையை நோக்கி அவன் மண்டியிட்டு அமர்வது தாழினியை நோக்கி அமர்வது போன்ற பிரம்மை தோன்றிவிட்டது.


“என் குட்டிமா வசதியா உட்காந்துட்டாங்களா? எதாவது அன்கம்பஃர்ட்டா இருக்கா செல்லம்?”


"இல்லப்பா இங்க சூப்பரா இருக்கு"


"சரிடா செல்லம் அப்பா முன்னாடி போறேன்! நீங்க பயப்படாம தைரியமா உட்காந்துபீங்களா?"


"எஸ் அப்பா! நான் ரொம்ப ஸ்ட்ராங்"


"ஓகே செல்லம்" என்றவன் தியாஷ் புறம் திரும்பி "சார் கொஞ்சம் அவளை பார்த்துக்கோங்க!" என ஆங்கிலத்தில் கூறினான்.


"நீங்க சொல்லனும்னு அவசியம் இல்ல நான் பார்த்துக்கிறேன்" என புன்னகையுடன் தமிழில் பதில் கூறினான் தியாஷ்.


"தமிழா ?" என ஆச்சரியம் அடைந்தவன் "நான் ஆர்கஸ்! குழந்தைய நல்லபடியா கவனிச்சுக்குறேனு சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்" என்றபடி எழுந்து கொண்டான்.


தியாஷ்ம் அவனுடன் அறிமுகமாகி கொண்டான். தியாஷின் அருகில் இருந்த தாழினியோ ஆர்கஸ் எனும் பெயரை மனதிற்குள் சொல்லி பார்த்தாள்.


ஆர்கஸ் தியாஷிடம் விடைபெற்று கொண்டான். பின் விமான பணிப்பெண்களிடம் சென்று "டேக் கேர் ஆப் கேர் பிளீஸ் (Take care of her please)" என்றவன் முன்னே சென்றுவிட்டான்.


செல்லும் அவனை பார்த்துக் கொண்டிருந்த தாழினியோ "யார்டா இவன்? சந்தூர் டேடி (சந்தூர் சோப் விளம்பரம்) மாதிரி இருக்கான்!" என மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாள்.


விமானம் புறப்பட ஆரம்பித்தது. தியாஷ் அருகில் இருந்த குழந்தையிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
அக்குழந்தையை பார்த்து பெருமூச்சுவிட்ட தாழினி மீண்டும் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு பாடலில் மூழ்க முயற்சித்தாள். விமான பணிப் பெண்கள் அடிக்கொரு முறை குழந்தையின் நலனை விசாரித்து சென்றனர்.


இந்தியா வந்து சேர்ந்த உடன்பிறந்தோர் இருவரும் கொடைக்கானல் செல்ல தயாராகினர். அதேபோல் இங்கே நீல விழியனோடு சேர்ந்து நடந்து வந்த குழந்தை பிளைட்டில் தன் அருகில் அமர்ந்து வந்த தியாஷை பற்றி வாய் ஓயாது பேசிக் கொண்டே இருந்தாள்.


அனைத்திற்கும் தலையை அசைத்தபடி நடந்து வந்த ஆர்கஸ் தன் எதிரே வந்து கொண்டிருந்த பெண்மணியை பார்த்தும் புன்னகையுடன் குழந்தையின் தலையை திருப்பி அப்பெண்மணியை காணச் செய்தான்.


அடுத்த நொடி அவனது கைகளை விடுவித்துக் கொண்டு அம்மா! என கத்தியபடி அந்த பெண்மணியை நோக்கி ஓடினாள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்க அவர்கள் அருகே வந்து நின்றான் ஆர்கஸ்.


ஆர்கஸின் அரவம் உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து புன்னகைத்தபடி "இவள் உனக்கு தொல்லை எதுவும் கொடுக்கல தான ஆர்கஸ்!" என்றாள்.


"எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கல! இவள் ரொம்ப சமத்து! இல்லையா குட்டிமா?"


"ஆமா நான் ரொம்ப குட் கேர்ள்"


குழந்தையின் மொழியை ரசித்தவள் ஆர்கஸ் புறம் திரும்பி "உன் பிரண்ட்க்கு எப்போ தான் வீட்டுக்கு வந்து எங்களை பார்க்கனும்னு எண்ணம் வரும்?" என வினவினாள்.


"காமான்யா! அவனுக்கு திடீர்னு செட்யூல் மாறிடுச்சு இல்லனா குழந்தை கூட சேர்ந்து அவனும் வந்து இருப்பான். அவன் மேல கோபப்படாத!"


'ஆமா என்னை மட்டுமே கோபப்படாதனு சொல்லுங்க! அவரை எதுவும் சொல்லாதீங்க! கல்யாணம் ஆன நாளுல இருந்து இப்படி என்னை புலம்ப வைக்குறதே உன் பிரண்டுக்கு வேலையா போச்சு"


"இப்போ என் முன்னாடி இப்படி பேசு! நாளைக்கு உன் புருசன் வந்துட்டா அவன் பக்கம் பேசு! இதுக்கு தான் நான் உனக்கு இந்த விஷயத்துல சப்போர்ட் பண்றதே இல்ல! அப்படி என்ன லட்சணத்துல தான் இரண்டு பேரும் சண்டை போடுவீங்களோ?"


"உனக்கு இதெல்லாம் புரியாது நீயும் ஒரு கல்யாணம் பண்ணு இல்லனா லவ்வாவது பண்ணு அப்போ வேணும்னா உனக்கு புரிய வாய்ப்பு இருக்கு"


காதல் கல்யாணம் என்ற உடன் காதுகளை மூடியவன் முகத்தை சுழிக்க அவனது தோளில் செல்லமாக இரண்டு அடிகளை போட்டவள் சிரிப்புடன் முன்னே நடக்க அவள் கையில் இருந்த குழந்தையோ "நான் ஆர்கஸ் அப்பா கூட வரேன்!" என்றபடி அவனிடம் தாவியது.


அவனிடம் குழந்தையை கொடுத்துவிட்டு முன்னே சென்று காரை கிளப்பினாள் அப்பெண்மணி.


குழந்தையுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஆர்கஸின் மொபைல் ரிங்காக அதை ஏற்று காதில் வைத்தான்.


இரண்டு முறை ம் என்றவன் வெயிட் என்று கூறிவிட்டு "குட்டிமா இந்தா உன் அப்பா தான் பேசுறான்" என்றாள்.


குழந்தையும் போனை அவனிடம் வாங்கி காதில் வைத்துக் கொண்டு அப்பா என்று கூறி பேச ஆரம்பித்தாள்.


ஆய்வு கூடத்தில் ஏதோ வேலையாக இருந்த அரியநாச்சி தன் முன் வந்து நின்ற ஆதவியை பார்த்து புன்னகைத்தாள்.


"என்ன வேணும் பொண்ணே!"


"அது என் கிளாஸ் முடிஞ்சது சும்மா அப்படியே இந்த பக்கம் வந்தேன் உங்கள பார்த்ததும் உள்ள வந்துட்டேன்."


லேசாக சிரித்தவள் தன் பணியை தொடர்ந்து கொண்டே "ஆமா உன் பெயர் என்ன?" எனக் கேட்டாள்.


"ஆதவி" என்றாள் தயக்கத்துடன் "நல்ல பேரு" என கூறி புன்னகைத்தாள் அரியநாச்சி


"நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க!" என்றாள் ஆதவி.


"தாங்க்யூ!" என்றவள் அவளிடம் சிறு வேலைகள் கூறியபடி தன் பணியை தொடர்ந்தாள்.


ஆதவிக்கு பட்டாம்பூச்சிகள் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கவும் அவளுக்கு அங்கே பணி செய்வது மிகவும் பிடித்து போனது.


நேரம் போனதே தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டே வேலைகளை பார்த்து முடித்தனர். இருவருக்கும் இடையே நட்பு ரீதியில் சற்று நெருக்கமும் உண்டானது


வேலையை முடித்துக் கொண்டு இருவரும் ஆய்வு கூடத்தைவிட்டு வெளியே வரவும் அவர்களை இருண்ட வானம் தான் வரவேற்றது.


"ஐய்யோ! ரொம்ப நேரம் ஆயிடுச்சே!" என்றபடி தனது கைபையில் இருந்த மொபைலை வெளியே எடுத்தாள் ஆதவி.


திவ்யாவிடம் இருந்தும் அவர்களது வகுப்பு நண்பர்களிடம் இருந்தும் பேராசிரியரிடம் இருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தன.


தலையில் அடித்துக் கொண்டவள் வேகமாக பேராசிரியருக்கு அழைக்கவும் கடும் கோபத்தில் இருந்தவர் அவளை கண்டபடி திட்டி தீர்த்துவிட்டார்.


"எங்க போய் தொலைஞ்ச ஆதவி? பசங்க எல்லாரும் ஹெஸ்ட் ஹவுஸ் வந்துட்டாங்க நீ எங்க இருக்க போன் செஞ்ச எடுக்கமாட்டியா?" என்றபடி திட்டவும் "சாரி மேடம் நான் கவனிக்கல!" என்று கூறியவளின் கண்கள் கலங்கிட ஆரம்பித்தது.


ஆதவியின் கையில் இருந்து கைபேசியை பறித்த அரியநாச்சி நடந்ததை கூறி பேராசிரியடம் மன்னிப்பை கேட்டுவிட்டு ஆதவியை அழைத்துக் கொண்டு ஹெஸ்ட் ஹவுஸ் நோக்கி சென்றாள்.

தொடரும்
 
Last edited:

NNK102

Moderator
அத்தியாயம் -4

ஆதவியின் பேராசிரியரிடம் பேசி அவளை ஹெஸ்ட் ஹவுஸில் விட்டுவிட்டு தான் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார் அரியநாச்சி.

பேராசிரியர் தன் பங்கிற்கு அவளிடம் அறிவுரைகளை கூறி அறைக்கு அனுப்பி வைத்தார்.

சோகமாக அறைக்குள் வந்த ஆதவியை கண்டவுடன் திவ்யா வேகமாக எழுந்து அவளிடம் ஓடினாள்.

“எங்க போன ஆதவி? உன்னை தேடி ரொம்ப நேரமா அலைஞ்சேன்! போன் எடுக்கமாட்டியா?” என கத்தினாள்.

“நீயும் என்னை திட்டாத திவ்யா!” என அவள் அழுகையுடன் கூறவும் சலிப்பாக பெருமூச்சை இழுத்துவிட்டாள் திவ்யா.

“சரி கோபப்படல! ஆனால் நீ செஞ்சது சரியா? சரிவிடு நடந்தது நடந்து போச்சு போய் தூங்கு அதுக்கு முன்னாடி கொஞ்சம் இரு நான் போய் உனக்கு கசாயம் போட்டு எடுத்துட்டு வந்துடுறேன். நைட் ரொம்ப நேரம் வெளிய இருந்துட்டு வந்து இருக்க நார்மல் கிளைமேட்டே உனக்கு சேராது வெளியில பொழியுற பனி உன்னை மேலும் கஷ்டப்படுத்தும்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் “ஹச்” என தும்மினாள் ஆதவி.

“இதோ சொல்லி வாய மூடல அதுக்குள்ள தும்மிட்ட வெயிட்!” என்றபடி சமையல் அறைக்கு சென்றாள். அங்கே வேலை செய்யும் பெண்மணியிடம் கூறி கசாயத்தை செய்ய தொடங்கினாள்.

இங்கே தன்னை சுத்தப்படுத்தி கொண்டு நிலைகண்ணாடியின் முன்பு வந்து நின்றாள் ஆதவி. அப்பொழுது எதார்தமாக தன் கழுத்தை பார்க்க திடுக்கிட்டுவிட்டாள்.

“ஐயோ! என் செயின்! போச்சு! எங்க தொலைச்சேனு தெரியலையே! இது தொலைஞ்சு போச்சுனு அம்மாக்கு தெரிஞ்சால் அவ்வளவு தான் செத்தேன்” என்று புலம்பியவள் அறைமுழுவதும் நன்றாக தேடிப் பார்த்தாள்.

எங்கு தேடியும் கிடைக்காது போக நன்றாக யோசித்து பார்த்தாள். அரியநாச்சியுடன் வண்டியில் இருந்து இறங்கும் போது மிரரில் தன் முகத்தை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது செயின் கழுத்தில் தான் இருந்தது.

அதன்பிறகு தான் விழுந்திருக்க கூடும் என்ற முடிவுக்கு வந்தவள் வேகமாக வெளியே ஓடினாள்.

ஆதவி அவள் வந்த திசை எங்கும் தேடியபடி சென்றாள். வாசல் வரை வந்து அங்கும் தேடிக் கொண்டிருக்க ஒரு கார் ஒன்று அவர்களின் ஹெஸ்ட ஹவுஸ் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தது.

திடீரென கார் உள்ளே வரவும் தன்னுடைய தேடும் வேலையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ஆதவி.

கார் போர்டிக்கோவில் நிறுத்தப்பட்டதும் வாட்ச்மேன் வேகமாக உள்ளே ஓடிவந்தார். காரில் இருப்பவரிடம் ஏதோ கேட்க அந்த நபர் என்ன கூறியிருப்பாரோ அவளுக்கு தெரியவில்லை ஆனால் வாயிற்காவலர் மீண்டும் தன்னிடத்திற்கு சென்றுவிட்டார்.

நடப்பதை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதவியின் பார்வை கார் கதவு திறக்கப்படவும் கூர்மையானது.

காரின் உள்ளிருந்து இறங்கினான் தியாஷ். அவனது முகத்தை விழியெடுக்காமல் பார்த்தவள் அவன் தன்னை நோக்கி வருவது போல் தோன்றவும் வேகமாக தூண் பின்புறம் மறைந்து கொண்டாள்.

அந்த தூண் அவளது முழு உருவத்தையும் மறைக்க போதுமானதாக இல்லாததால் அவனது கண்களுக்கு தெரிந்துவிட்டாள்

“ஹலோ யார் அது? வெளிய வாங்க!” என அவன் கடுமையாக கூறவும் தலை குனிந்தபடி வெளியே வந்தாள் ஆதவி.

அவளை அலட்சியப் பார்வையுடன் பார்த்தான் தியாஷ். “யார் நீ? இந்த நேரத்துல இங்க என்னை செய்ற?” என கேட்டான்.

“அது நான் இங்க தான் தங்கியிருக்கேன் என் செயினை மிஸ் பண்ணிட்டேன் அதான் தேட வந்தேன்”

அவளை நம்பாத பார்வை பார்த்தான் தியாஷ். அவனது பார்வையின் பொருள் உணர்ந்து கொண்டவள் “நிஜமா உங்களுக்கு சந்தேகம் இருந்தா அரியநாச்சி மேடம்கிட்ட ஆதவினு கேட்டுப் பாருங்க” என படபடத்தாள்.

அவளையே விடாது உற்று பார்த்தவன் பின் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.

“என்ன மனுஷன் இவன் இப்படி பார்க்குறான் நான் ஏதோ திருடி மாதிரி! என்னை குற்றசாட்டுற மாதிரி பாக்குறான் திமிரு பிடிச்சவன்!” என வாய்விட்டே புலம்பினாள்.

இங்கே வீட்டின் உள்ளே சென்ற தியாஷ் அவ்வீட்டில் இருந்த தன் சில பொருட்களை மட்டும் பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டான்.

இங்கே தியாஷை திட்டிக் கொண்டிருந்த ஆதவியின் தோளை சுரண்டினாள் திவ்யா.

“ஏன்டி திட்டுனா மூஞ்ச மட்டும் ஒன்னரை முலத்துக்கு தூக்கி வச்சுகிறியே! நீ பண்ற காரியம் மட்டும் சரியா? உன்னை உள்ள ரெஸ்ட் தான எடுக்க சொன்னேன் ஆனால் நீ மறுபடியும் இப்படி வெளிய வந்து பனியில நிக்குற!”

“ஐயோ என் கோல்ட் செயின் தொலைஞ்சு போச்சுடி அதை தேடிட்டு இருக்கேன்”

“என்ன தொலைச்சுட்டியா? தங்கம் விக்குற விலைக்கு இப்படி தொலைச்சுட்டனு சொல்ற!”

திவ்யாவை முறைத்த ஆதவி மீண்டும் தரையில் தேடியபடி நடந்தாள். பின் திவ்யாவும் அவளுடன் இணைந்து கொள்ள அவர்களது பேராசிரியரின் குரல் கேட்டது.

“நான் போய் என்னனு பார்க்குறேன் நீ தேடு!” என்று கூறிவிட்டு திவ்யா உள்ளே ஓடினாள்.

அவள் உள்ளே சென்ற சில நிமிடங்களில் தியாஷ் வெளியே வந்தான். இன்னமும் தரையை நோட்டமிட்டுக் கொண்டிருந்த ஆதவியை பார்த்தவன் “நிஜமாவே செயின் தொலைஞ்சு போச்சா என்ன?” என சந்தேகம் கொண்டவாறு தனது காருக்கு சென்றான்.

அவன் நடந்து செல்லும் போது எதன் மீதோ மிதித்தது போன்று தோன்றவும் கீழே குனிந்து பார்த்தான். இருளில் நிலவு ஒளியோடு சேர்ந்து லேசான பிரகாசத்தோடு மினுமினுத்துக் கொண்டிருந்தது ஏதோ ஒரு பொருள்.

அதை கையில் எடுத்துப் பார்த்தான். செயினா? அநேகமா இது அந்த பொண்ணோடதா இருக்குமோ? என யோசித்தவன் “ஏய் பொண்ணே இது உன்னோடதா?” என்று கேட்டான்.

அவன் அழைத்ததில் திரும்பி பார்த்தவள் அவன் கையில் தூக்கிபிடித்திருந்த செயினை கண்டதும் முகம் மலர்ந்தாள்.

வேகமாக அவன் அருகில் சென்று கையில் இருந்ததை பிடுங்கி கொண்டாள். அவளது வேகமான இச்செயலை கண்டு ஒருநிமிடம் திடுக்கிட்டு போனான்.

தனது முகமாறுதலை சீர்படுத்திக் கொண்டவன் “கொஞ்சமாவது கவனா இரு!” என்று கூறிவிட்டு காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டான்.

கார் சென்ற நொடி வீட்டிற்குள் இருந்து ஓடிவந்த திவ்யா “ஏய் அவங்க அவங்களோட ரூம்க்கு போய்ட்டாங்க சீக்கிரம் தேடு!” என்றாள்.

ஆதவி பதில் பேசாமல் இருக்கும் இன்னும் நெருங்கி வர அப்பொழுது தான் அவள் கையில் இருந்த செயினை கண்டாள்.

“செயின் கிடச்சுருச்சா நல்ல வேளை! சரி வா உள்ள போலாம் கசாயம் ஆறி போறதுக்குள்ள குடிக்கனும் வா! வா!” என அவளை இழுத்துச் சென்றாள்.

தியாஷ் தான் தங்கியிருந்த காட்டேஜ்கு வந்து சேர்ந்தான். அவனது அறைக்கு பக்கத்து அறையில் இருந்த தங்கையிடம் சென்றான்.

அவள் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க அருகில் வந்து போனை பிடுங்கினான். “மணி என்ன ஆகுது? இன்னமும் போன் பார்த்துட்டு இருக்க! கண்ணுக்கு நல்லது இல்ல தாழினி” என்றான் கண்டிப்புடன்

“அண்ணா பிளீஸ்! இன்னும் கொஞ்ச நேரம் ஏனோ தூக்கமே வரல! அதுசரி நீ ஹெஸ்ட் ஹவுஸ் போயிருந்தியே திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா?” என மெதுவாக பேச்சுக் கொடுத்தபடி அவன் கையில் இருந்த போனை அவன் அறியாமலே வாங்கி கொண்டாள்

“ம் எடுத்துக்கிட்டேன்! அப்புறம் நீ நாளைக்கு அம்மாவ பார்க்க என்கூட பட்டர்ஃபிளை பார்க் வருவதான?”

“அண்ணா நீ கூப்பிட்டேனு தான் நான் இந்தியா வர ஒத்துக்கிட்டேன். எனக்கு அவங்கள பார்க்க விருப்பம் இல்ல. அந்த பொம்பளைய நினைச்சாலே!..” என மேற்கொண்டு அவள் சொல்லி முடிப்பதற்குள் “வாய மூடு தாழினி! இதுக்கு மேல அம்மாவ பத்தி ஏதாவது சொன்ன நான் என்னை செய்வேனே தெரியாது அப்புறம் உனக்கு அண்ணன் இருக்குறதை மறந்துரு” என்றான் கர்ஜனையான குரலில்

அமைதியாக தரையை பார்த்தவள் “சரி இனி பேசல! நான் உடனே அங்க வர முடியாது நாளைக்கு என் பிரண்ட ஒருத்திய பார்க்க போறேன் அதுக்கு அப்புறம் இந்த கொடைக்கானல் முழுசா துத்தி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அதுக்கப்புறம் நான் பார்க் வரேன்! பிளீஸ் அண்ணா உனக்காக நான் இந்தளவுக்கு தான் இறங்கி வர முடியும் இதுக்கு மேல போர்ஸ் பண்ணாதீங்க!”

தியாஷ் வேறெதுவும் பேசாமல் அமைதியாக அறையிலிருந்து வெளியேறி இருந்தான். அவனது கோப முகம் தாழினிக்கு புதிதல்ல. நன்கு பழக்கப்பட்டது. அவை அவளுக்கு பயத்தையும் ஏற்படுத்தாது. அதனால் அவள் தியாஷின் கோபங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

தன் அறைக்கு வந்த தியாஷ் தங்கையின் மேல் காட்ட முடியாத கோபத்தை தலையணையை அடித்து உதைத்து காட்டிக் கொண்டிருந்தான்.

தொடரும்
 

NNK102

Moderator
அத்தியாயம் -5

விழிகள் மூடி தூக்கத்திற்கு செல்ல காத்திருந்த தாழினி சலிப்பாக உணர்ந்தாள். கண்களை மூடும் வேலை எல்லாம் நீல விழியனே வந்து தொந்தரவு செய்யவும் தன்னையே வெறுத்தாள்.

வேறொரு பெண்ணின் கணவனை பற்றி இப்படி எண்ணிக் கொண்டிருப்பது மாபெரும் பாவம் அப்பெரும் பாவத்தை தானே செய்து கொண்டிருக்கிறோமே என்று குற்ற உணர்ச்சி அடைந்தவள் கட்டிலைவிட்டு இறங்கினாள்.

அறையில் இருந்து வெளியேறியவள் தமையனின் அறையை நோட்டம்விட்டாள். இரவு வெகுநேரம் ஆனதால் அவன் உறங்கிவிட்டான்.

மெல்ல பூனை நடை நடந்தவள் தோட்டத்தின் புறம் சென்றாள். இரவு நேரம் குளிர் அதிகமாக இருக்கவும் கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்தபடி கால் வலிக்க நடக்க ஆரம்பித்தாள்.

உறக்கம் கண்களை சுழட்டும் வரை நடந்தவள் அதன்பிறகு தன் அறைக்கு சென்றாள்.

மறுநாள் காலை

பட்டர்ஃபிளை பார்க்கில் பேராசிரியர் ஒவ்வொரு வகை பட்டாம்பூச்சிகளை சுட்டிக்காட்டி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க அவரை சுற்றி நின்று கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தனர்.

மணி பதினொன்றை கடந்திருக்கவும் “ஓகே ஸ்டூடண்ட்ஸ் ஒரு பத்து நிமிசம் பிரேக் எடுத்துக்கோங்க!” என்றார் பேராசிரியர்.

இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தது போல் மாணவர்கள் புன்னகையுடன் கலைந்து சென்றனர்.

சில மாணவர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த கல் இருக்கையில் சென்று அமர்ந்தனர். திவ்யாவும் வேகமாக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டவள் கால்களை பிடித்து நீவிவிட்டுக் கொண்டாள்.

“இவங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல ஆதவி! ஒன்பது மணிக்கு நிற்க ஆரம்பிச்கோம் இப்போ பதினொரு மணிக்கு மேல ஆச்சு கன்டின்யூஸ்ஸா நின்றது கால் பயங்கரமா வலிக்குது” என்றாள்.

அவளது கால்களை எடுத்த தன் மடியில் வைத்துக் கொண்ட ஆதவி மெல்ல அழுத்திவிட ஆரம்பித்தாள்

அவளது அழுத்தல் வலியை நீக்க “ரொம்ப தேங்க்ஸ் ஆதவி! என் செல்லம்!” என கொஞ்சினாள் திவ்யா.

புன்னகையுடன் தலை ஆட்டியடி அழுத்திவிடுவதை தொடர்ந்தாள் ஆதவி. அப்பொழுது திடீரென திவ்யா ஆ என்று கத்தினாள்.

அதில் பயந்து போன ஆதவி வேகமாக தன் கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள் “என்னாச்சு திவ்யா? ரொம்ப பலமா அழுத்திட்டேனா? சாரி!” என்றாள்.

திவ்யாவின் பார்வை ஒரு திசையில் நிலை குத்தி போயிருக்கவும் அப்புறம் தன் பார்வையை திருப்பினாள் ஆதவி.

அங்கே முன்தினம் அவள் சந்தித்த ஆடவனாகிய தியாஷ் அவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். புன்னகையுடன் அவன் ஓடிவரும் தோற்றம் சினிமாக்களில் காட்டப்படும் அழகிய நாயகனை போல் காட்சியளித்தது.

திவ்யா ஆதவி மட்டுமல்லாமல் இன்னும் சில மாணவிகளும் அவனது ஓட்டத்தை தான் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

திவ்யாவின் பின்புறம் இருந்த அரியநாச்சியிடன் வந்தவன் மூச்சிரைக்க “அம்மா” என்றபடி அவரை கட்டிக் கொண்டான். அரியநாச்சியும் வெகுநாட்களுக்கு பிறகு மகனை கண்ட உற்சாகத்தில் அவனை ஆரதழுவிக் கொண்டார்.

“இந்த மேடம் மட்டும் இல்ல அவங்க பையன் கூட ஸ்மார்ட்டா இருக்காரு இல்ல!” என மாணவ மாணவிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

ஆதவி தனக்குள் என்ன உணர்கிறாள் என்றே புரியவில்லை. கண் இமைக்காமல் அம்மா மகனின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவளது தோளை சுரண்டிய திவ்யா “ஆதவி நான் சொன்னேன்ல? மேடம் பையன் செம்ம ஹேன்ட்சம்மா இருப்பாருனு இப்ப ஒத்துக்குறியா?” எனக் கேட்டாள்.

“நான் இவரை ஏற்கனவே பார்த்து இருக்கேன்!”

“என்ன!” என அதிர்ச்சியாக அவள் புறம் திரும்பிய திவ்யா “என்ன சொன்ன நீ இப்போ?” என வினவினாள்.

“நான் இவரை நேத்து நம்ம தங்கியிருந்தோம்ல அங்க தான் பார்த்தேன். என் செயின்ன இவரு தான் எடுத்துக் கொடுத்தாரு”

“அடிப்பாவி முன்னமே சொல்லமாட்டியா! அப்போ நேத்து ஹெஸ்ட் ஹவுஸ்குள்ள என்டர் ஆன கார் இவரோடதா? நான் வேற யாரோ அங்க வேலை பார்க்குறவங்கனு நினைச்சேன்!” என அதிர்ச்சியாக ஆரம்பித்து சோகமாக முடித்தாள் திவ்யா

அரியநாச்சியும் அவளது மகனும் பேசியபடி அவர்களது அலுவலக அறைக்கு சென்றுவிட்டனர். அவர்கள் அங்கிருந்து சென்ற நொடி பேராசிரியர் அழைக்கவும் அனைவரும் பெருமூச்சுவிட்டபடி மீண்டும் பாடத்தை கவனிக்க பேராசிரியர் அருகே சென்றனர்.

தாழினி தன் தோழியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். கைபேசியில் உள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள கதவு எண்ணை சரிபார்த்தபடி நடந்து வந்தவள் குறிப்பிட்டுள்ள எண் உடைய வீட்டை பார்த்ததும் நடையை நிறுத்தினாள்.

தோழிக்கு அவள் எந்த தகவல்களையும் வழங்கவில்லை. இந்தியா வந்திருப்பதை கூட தெரியப்படுத்தவில்லை. ஆனந்த அதிர்ச்சி அடையசெய்வோம் என எண்ணத்துடன் காலிங் பெல்லை அழுத்தினாள்.

கதவை திறந்ததும் எதிர்பார்ப்புடன் உள்ளே பார்க்க தோழியின் அக்கா கதவை திறந்திருந்தாள். அவள் சில நிமிடம் தாழினியை உற்று பார்த்துவிட்டு “நீ என் தங்கச்சியோட பிரண்ட் தான?” என்றாள்.

“ஆமா அக்கா அவள் வீட்டுல இல்லையா?”

“முதல உள்ள வாடா!” என்றவள் அவளை அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தாள். பின் சமையலறை சென்று குளிர்பானத்தை எடுத்து வந்தவள் அதனை தாழினிக்கு கொடுக்க புன்னகையுடன் அவளும் எடுத்துக் கொண்டாள்.

“அக்கா! அவள் வீட்டுல இல்லையா?”

“வெளியூர் போயிருக்காடா! நாளைக்கு காலையில வந்துருவா” என்றாள்.

“ஓ நாளைக்கு தான் வருவாளா?” அவள் சிறிய குரலில் தனக்குள் சொல்லிக் கொள்ளவும் உள்ளிருந்து கேட்ட பாட்டுசத்தம் காதை கிழிக்கவும் சரியாக இருந்தது.

திடீரென கேட்ட சத்தத்தில் தாழினி திடுக்கிட்டு தன் கையில் இருந்த பழச்சாற்றை சிறிதளவு கீழே சிந்திவிட்டாள்.

“சாரிமா!” என தாழினியிடம் மன்னிப்பு கேட்ட அந்த பெண் உள்ள ஏன் இவ்வளவு சத்தம்? சவுண்ட குறைங்க” என கத்தினாள்.

“மாட்டோம்!” என்ற கோரசான குரல் சத்தத்தை மீறி மெலிதாக கேட்டது.

“இப்போ நான் அங்க வந்தேன் ரெண்டு பேருக்கும் அடிதான் கிடைக்கும்”

ஆனால் உள்ளிருந்த இருவரும் அவளது மிரட்டலுக்கு பயப்படவில்லை போலும் சத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தாழினி தன் இரு கைகளாலும் காதுகளை அடைத்து கொண்டாள்.

கடுப்பான அவளது தோழியின் சகோதரி “இதோ வரேன் இருங்க” என்றபடி எழுந்து கொள்ளவும் உள்ளிருந்த இருவரும் ஆடியபடி வெளியே வரவும் சரியாக இருந்தது.

உள்ளிருந்து வந்தவனை பார்த்த தாழினி அதிர்ச்சி அடைந்தாள். நீல விழியனும் அவளது குட்டிமாவும் பாடல் வரிகளுக்கு ஏற்றபடி ஆடி கொண்டிருந்தனர்.

“இரண்டு பேரும் ஆட்டத்தை நிறுத்துங்க!”

“முடியாது!” என இருவரும் மீண்டும் கோராஸ் பாட ஒரு மூலையில் இருந்த துடைப்பத்தை கையில் எடுத்தாள். அவளது செயலை கண்ட இருவரும் ஆளுக்கொரு திசையில் ஓட இவள் துரத்திக் கொண்டு ஓடினாள்.

வீடு முழுவதும் ஓடிய ஆர்கஸ் இறுதியில் கூடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கே அசையாது அமர்ந்திருந்த தாழினி பார்த்ததும் கூர் விழிகளால் அவளை ஆராய்ந்தபடி அவள் அருகே சென்றான்.

பின்னோடு சிறுமியவளை அடித்தபடி தூக்கி கொண்டு வந்தாள் அப்பெண்.

“ஏய் ஆர்கஸ் இவ நம்ம சௌமி பிரண்ட் அவளை பார்க்க வந்துருக்கா”

“ஓ!” என்றவன் “நான் ஆர்கஸ்” என அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். பின் சில நொடிகளில் “நாம ஏற்கனவே சந்திச்சு இருக்கோமா?” என கேள்வி கேட்டான்.

“அப்பா இவங்க பிளைட்ல இருந்தாரே ஒரு அன்கிள் அவருக்கு பக்கத்துல உட்காந்து இருந்தாங்க” என்றாள் சிறுமி.

“அப்படியா!” என்றபடி மற்றொரு சோபாவில் அமர்ந்து கொண்டான் ஆர்கஸ். தாயின் பிடியில் இருந்து துள்ளிகுதித்து இறங்கிய சிறுமியோ வேகமாக ஆர்கஸ் மடியில் சென்று அமர்ந்தாள்.

“அம்மா அடிச்சுட்டாங்க வலிக்குது” என அவனிடம் புகார் வசிக்கவும் அவன் குழந்தையின் தாயை முறைத்துப் பார்த்தான்.

“அவள் சொல்றதை நம்பாத! நான் மெதுவா தான் அடிச்சேன்!”

அவன் பார்வை அவளை நம்பவில்லை என்பது போல் இருந்தது.

“நம்பலனா போடா!” என்றவள் தாழினியின் அருகே அமர்ந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள். தாழினியின் மனதோ மீண்டும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.

தோழியின் சகோதரியை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தவித்தாள் தாழினி. புன்னகையுடன் தன்னிடம் பேச்சு கொடுத்து கொண்டிருப்பவளின் கணவனை பற்றி நினைத்து கொண்டிருக்கிறோமே என்று குற்ற உணர்ச்சி அடைந்தாள்.

ஆனால் தன் எதிரே அமரந்திருக்கும் பெண் அவனது மனைவி இல்லை என்பதும் ஆர்கஸிற்கு திருமணமே முடியவில்லை என்பதும் அவளுக்கு தெரியவில்லை.

தொடரும்..

லேட் அப்டேட்டிற்கு சாரி பிரண்ட்ஸ்

கருத்து திரி :
 

NNK102

Moderator
அத்தியாயம் - 6

வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது வாஷ் ரூம் சென்றுவருவதாக கூறி மாணவர்களைவிட்டு விலகி வந்தாள் ஆதவி.

மெல்ல அரியநாச்சியின் அறைக்கு வந்தவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். அறையில் யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லாது இருந்தது.

ஆனால் அவள் வகுப்பில் இருக்கும் பொழுதும் இவர்களின் மீது கவனம் செலுத்தியபடியே தான் இருந்தாள். இருவரும் இந்த அலுவலக அறைக்குள் வந்தனர் அதன்பிறகு வெளியே செல்லவே இல்லை.

“இங்கதான இரண்டு பேரும் வந்தாங்க வெளியே போகவே இல்லையே! ஆனால் இப்போ காணோம் எங்க போயிருப்பாங்க?” என தனக்குள் புலம்பியவள் மெல்ல அறையை நோட்டம்விட ஆரம்பித்தாள்.

அப்பொழுது திடீரென ஒரு சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினாள் ஆதவி. தியாஷ் அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.

அவன் எப்படி அறைக்குள் வந்தான் வாசல் வழியாக வரவில்லையே! வாசல் வழியாக வந்திருந்தால் தன்னை கடந்துதான அவன் தற்போது நின்றிருக்கும் இடத்திற்கு செல்ல முடியும் ஆனால் அவன் எப்படி இங்கே நின்று கொண்டிருக்கிறான். வேறேதும் இங்கே அறைகள் இருக்கிறதா என்று ஆலோசித்தபடி சுற்றி சுற்றி பார்த்தாள்.

“இங்க என்ன செய்ற?” என்ற கனீர் குரலில் தியாஷின் புறம் திரும்பியவள் “அது வந்து” என அவள் பதில் அளிக்க முடியாது திக்கினாள்.

“அடுத்தவங்க அறைக்குள்ள அனுமதியில்லாம வரக்கூடாதுனு அறிவு வேண்டாம்?” என அவன் கடுமையாக கேட்கவும் ஆதவியின் கண்களில் நீர் திரண்டுவிட்டது.

“இல்ல நான் அரியாநாச்சி மேடம் பார்க்க வந்தேன்”

“என் அம்மாவ நீ எதுக்கு பார்க்கனும்? நீ இங்க உன்னோட படிப்பு விசயமாதான வந்துருக்க உனக்கான கிளாஸ் வெளிய நடந்துட்டு இருக்கும் போது இந்த அறைக்குள்ள என்ன செய்ற பதில் சொல்லு?”

“சும்மா கத்தாதீங்க நான் அரியநாச்சி மேடம்கு இங்க வேலைக்கு உதவி செய்றது வழக்கம் அதனால தான் வந்தேன் ஏதோ பெரிய பொக்கிஷமும் ரகசியமும் இங்க மறைஞ்சு இருக்குற மாதிரி பதறுறீங்க” என்றாள் அழுகையுடன்

அவளது வார்த்தைகள் தியாஷை திகிலடைய செய்தது. அவனது கண்களில் அதன் சாயல் வெளிப்படாவண்ணம் மறைத்தவன் “இங்க என்ன ரகசியம் இருக்கபோது அடுத்தவங்க அறைக்குள்ள அனுமதி இல்லாம இப்படி நுழைய கூடாதுனு தான் சொல்றேன். போ போய் உன்னோட கிளாஸ் கவனி” என்றான்.

அவள் அழுகையுடன் மனதினுள் கோபமாக அவனை வசைபாடிக் கொண்டே வெளியே சென்றுவிட்டாள். அவள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும் பெருமூச்சுவிட்டபடி பின்னே திரும்ப கண்முன்னே நின்ற அரியநாச்சியை கண்டு திடுக்கிட்டான்.

“ஏன்மா இப்படி வந்து நிக்குறீங்க பயந்தே போயிட்டேன்”

“ஏன்டா அந்த பொண்ணுகிட்ட அவ்வளவு கடுமையா நடந்துகிற?”

“பின்ன இங்க இருக்குற ரகசியம் அவளுக்கு தெரிஞ்ச பரவா இல்லையா?”

“தெரிஞ்சா என்னடா இப்போ? எனக்கு அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசையா இருக்கு. ரொம்ப நல்ல பொண்ணு”

“அம்மா பிளீஸ் இன்னொரு முறை கல்யாணம் பத்தி பேசாதீங்க எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்ல”

“ஏன்டா இப்படி பேசுற எனக்கு எப்பவும் உன்னோட கல்யாணத்தை பத்தி தான் கவலை எல்லாருக்கும் ஒரே போல வாழ்க்கை அமையாதுடா எனக்கு இப்படி வாழ்க்கை அமைஞ்சதால எல்லாருக்கும் இது தான் நடக்குமா என்ன? எத்தனை பேரோட கல்யாண வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சு இருக்கு தெரியுமா? நீயும் இப்படி இருக்க உன் தங்கச்சியும் என்னை வெறுத்து ஒதுக்குற இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா?”

“அம்மா இந்த டாப்பிக்க நீங்க கன்டின்யூ பண்ணுனா நான் இப்போவே வெளிய போயிடுவேன்”

“டேய் நான் சொல்றதை தயவுசெஞ்சு கேளு கல்யாணம்….”

அவன் அதன்பிறகும் அங்கே நிற்காமல் வெளியே சென்றுவிட்டான். செல்லும் அவனை வெறித்த அரியநாச்சி “என் மகனோட வாழ்க்கைய நானே கெடுத்துட்டேனோ? எல்லாரும் சொல்றமாதிரி நான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு அந்த ஆளோட வாழ்ந்து இருக்கனுமோ!” என கவலைக் கொண்டாள்.

டைனிங் டேபிலில் அமர்ந்திருந்த தாழினி முன் சப்பாடை பரிமாறினாள் சௌமியின் அக்கா.

“கூச்சப்படாம சாப்பிடு!”

சரி அக்கா என்பதாக தலை அசைத்தவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

“வாவ் அக்கா சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கு”

“தாங்க்ஸ்டா!”

தாழினி வயிறு நிறைய உண்டு முடித்தாள்.

அப்பொழுது அங்கு வந்த ஆர்கஸ் “உமா! உன் புருசன் போன் பண்ணினான? நான் போன் பண்ணுனா எடுக்கமாட்டேங்குறான்” என்றான்.

கைகளை கழுவுவதற்கு எழுந்த தாழினி ஒருநிமிடம் அப்படியே நின்றுவிட்டாள். “என்ன உன் புருசனா? அவருதான அவங்க புருசன்! ஏன் இப்படி கேட்குறாரு?” என்று சிந்தித்தவள் அவர்களது உரையாடலை கவனித்தாள்.

“நான் கால்பண்ணி அவரு அப்படியே எடுத்துட்டாலும் ஏன்டா வெறுப்பேத்துற”

“ஓ அப்போ அவன் போன் எடுக்கல” என்றவன் மேசை மீது மூடி வைக்கபட்டிருந்த உணவு பதார்த்தங்களை திறந்து பார்த்தான்

“எல்லாம் அவனுக்கு பிடிச்ச ஐட்டமா இருக்கு அப்போ இன்னைக்கு அவன் வரான் இல்லையா? ஆனாலும் நீ ஏன் இப்படி கேவலமா பொய் சொல்ற”

“இல்லடா அது” என அவள் சமாளிக்க முயற்சிக்கவும் “சீ கேவலாம பண்ணாத” என்றபடி உணவை தட்டில் பரிமாறி உண்ண ஆரம்பித்தான்.

“அப்போ ஆர்கஸ் உமா அக்காவோட ஹஸ்பண்ட் கிடையாதா!” என உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் கைகளை கழுவிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்.

சோபாவில் அமர்ந்து தன்னுடைய கலரிங் புக்கில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த சிறுமியிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.

“குட்டி உன் பெயர் என்ன?” என ஆரம்பித்தவள் மெல்ல “உன் அப்பா அம்மா பெயர் என்ன?” என கேட்டாள். பின் “அங்க உட்காந்து இருக்காரே அவரு யாரு?” என ஆர்கஸை பார்த்து கேட்க “அவரு என் அப்பா பிரண்ட் ஆர்கஸ் அப்பா!” என்றாள் சிறுமி.

தாழினியால் தன்னுடைய சந்தோஷத்தை கட்டுபடுத்த முடியவில்லை. குழந்தையின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள். குழந்தை அழகாக சிரித்தது.

குழந்தை அவளிடம் “ஆன்டி இந்த பட்டாம்பூச்சிய பாருங்க நல்லா இருக்கா?” என தான் வண்ணம் தீட்டிய நீல வண்ண பட்டாம்பூச்சிய காட்டி கேட்டாள்.

“ம் அழகா இருக்குடா தங்கம்!”

“தாங்க்ஸ்” என்றவள் வேகமாக உணவருந்தி கொண்டிருந்த ஆர்கஸிடம் சென்றாள். “அப்பா இதோ பாருங்க இது நீங்க தான் இந்த பட்டாம்பூச்சியும் நீல கலர்ல இருக்கு உங்களோட கண்ணும் நீல கலர்ல இருக்கு அதான்!” என தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்பதற்கான கூடுதல் தகவலோடு அதனை காட்டினாள்.

அவனும் “தாங்க்ஸ்” எனக் கூறி குழந்தைக்கு முத்தமிடவும் அவர்களை ரசித்து பார்த்தாள் தாழினி. அவளது காதல் பார்வையின் போதே அவளது உடல் பச்சை, கருப்பு மற்றும் பழுப்பு கலந்த நிறமாக ஒருநிமிடம் மாறி பின் இயல்புக்கு திரும்பியது. அதை அவள் உணரவும் இல்லை.

அப்பொழுது அவளது கவனத்தை கலைக்கும் விதமாக “அம்மாடி தாழினி நீ இன்னைக்கு இங்கையே ஸ்டே பண்ணிடேன்! அவள் நாளைக்கு காலையில தான வருவ இருந்து பார்த்துட்டு போ” என்றாள் உமா.
“இங்கிருந்தால் ஆர்கஸ்கூட குளோஸ் ஆக வாய்ப்பு இருக்கு யூஸ் பண்ணிக்கோ தாழினி!” என மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

ஆனால் அடுத்தநிமிடமே “அவன் ஒருவேளை கமிட்டா இருந்தால் அப்போ என்ன பண்ணுவ?” என மனம் வாதாட “அப்படி இருக்காது! பாசிட்டிவ்வா யோசிக்க பழகு” என்று அதனை அதட்டி அடக்கினாள்.

அவள் வெகுநேரமாக பதில் கூறாமல் இருக்கவும் புருவத்தை சுருக்கிய உமா “என்னாச்சு தாழினி? அமைதியா இருக்க உனக்கு இங்க தங்க விருப்பம் இல்லையா?” என கேள்வி எழுப்பினாள்.

“அதுவந்து ஓகே தான் அக்கா! ஆனால் நான் சேஞ்ச் பண்ணிக்க டிரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே”

“அதான் உன் பிரண்ட் டிரெஸ் நிறைய இருக்கே! இரண்டு பேரும் ஒரே மாதிரி தான இருக்கீங்க அதுல ஒன்னு எடுத்துக்கோ”

“சரிங்க அக்கா!”

“சந்தோஷம்டா” என்ற உமா அவளுக்கு தங்குவதற்கான அறையை ஒதுக்க சென்றுவிட்டாள்.

அன்று மதியம் வரை தாழினி கொண்டாட்டமாக இருந்தாள். ஆர்கஸ்ம் அடிக்கொரு முறை இவளிடம் பேச்சுக் கொடுக்க என இருந்தான்.

அது மேலும் அவளுக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்க இந்தியா வந்ததில் முதல் முறையாக சந்தோஷம் அடைந்தாள்.

மதிய உணவின் போது முக்கிய வேலையாக உடனே தான் வெளியே கிளம்ப வேண்டும் திரும்பி வர எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என கூறினான்

உணவருந்தி கொண்டிருந்த தாழினிக்கு புரையேறியது. தலையை தட்டியபடி “என்னடா எல்லாம் நல்லா போகுதேனு நினைச்சேன் இதோ ஆரம்பிச்சுருச்சுல என்னோட பேட்லக்” என எண்ணிக் கொண்டாள்.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top