எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எந்தன் நேசம் கூடுதே! - கதை திரி

Status
Not open for further replies.

NNK 94

Moderator
எபி 1:

ஆதவன் தன் ஒளியால் பூமிதனை இருளின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டிருக்க,
குளிர்தென்றல் இதமாக வீசியபடி அன்றைய பொழுது அழகாய் புலர்ந்து கொண்டிருந்தது.

சுற்றிலும் செடிகொடிகளும், மரங்களும் என பசுமை போர்வையுடன் காணப்பட்ட அந்த அழகிய மாடிவீட்டின் கூடத்தினுள், ஊதுபத்தியின் நறுமணம் எங்கும் நிறைந்திருந்திருக்க, ஸ்பீக்கரில் ஒலித்த சாமி பாடல்கள்
அங்கு ஒரு தெய்வீக உணர்வை பரப்பியது.

பூஜையறைக்கு முன்னிருந்த குடும்பத்தினர் அனைவரும் இறைவனை வணங்கியபடி நின்றிருந்தனர். அவர்கள் யார்யாரென காண்போம் வாருங்கள்.

முதலில் நிற்பவர் விஜயா.
அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு மூத்தவர் மற்றும் முதன்மையானவர்.

பூஜையறையில் இருந்த தெய்வங்களை வணங்கி நின்றவரது மனம்முழுக்க,
தன் குடும்பத்திற்கான பிரார்த்தனைதான் வழக்கம்போல்.

அன்பும், ஆளுமையும், கம்பீரமும், கண்டிப்பும் என பல குணங்களை தன்னகத்தே கொண்ட இரும்பு பெண்மணி. அங்கு அவரின் பேச்சிற்கு மறுபேச்சு என்பது கிடையாது.

எனினும் தான் மட்டுமே இங்கு பிரதானம் என்று மற்றவர்களை அதிகாரம் செய்யாது அரவணைத்தே செல்வார். அதேசமயம் யாரும் எதுவும் தவறு செய்யும்போது, அதைச் சுட்டி கண்டிக்கவும் தவறமாட்டார்.

அடுத்து இருப்பவர் சுமதி.
விஜயாவின் ஓரகத்தி.
மிகவும் அன்பான, வெகுளியான பெண்மணி. ஓரகத்திகள் இருவரின் குணமும் அப்படியே நேரெதிர்.

ஆயினும் இருவருள்ளும் அத்தனை பிணைப்பு இருக்கும். அந்த வீட்டினுள் வாழ அடியெடுத்து வைத்த நாள் முதல், இன்றுவரையுள்ள மாறாத பிணைப்பு. இருவரும் உடன்பிறவா சகோதரிகளாகவே மாறிப்போயினர் என்றால் மிகையில்லை.

அடுத்ததாக இருப்பது வெங்கடாச்சலம். சுமதியின் கணவர். விஜயாவின் கொழுந்தனார். அண்ணியை அன்னையாய் மதித்து நடப்பவர். இனிமையான மற்றும் கனிவான மனிதர்.

அவர்களுக்கு நேரெதிரே நின்றிருந்தனர் அந்த வீட்டின் இரு இளவரசிகள்.

முதலாவதாக இருப்பது
வெங்கடாச்சலம் - சுமதி தம்பதியரின் புதல்வி நித்யா. அந்த வீட்டின் கடைக்குட்டி.

அவளைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்,
சரியான வாலு. பெரியம்மாவிடம் மட்டுமே சற்று பம்முவாள். மத்தபடி அதிரடி சரவெடிதான்.

அடுத்து நின்றிருந்தது அம்ருதா.
விஜயா - ரங்கநாதனின் தவபுதல்வி. நம் கதையின் நாயகி.

குறும்பும், பொறுப்பும் சரிவிகிதமாய் சேர்த்து செய்த கலவை.
தங்கையுடன் சேட்டையில் இணைந்துகொள்பவள், மகளாய் வீட்டு பெரியோர்களின் சொல்லை மிகவும் மதிப்பாள். குடும்பத்தினர் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டிருப்பவள்.

அனைவரும் பக்தியில் இருக்க, நித்யாவோ முதலில் ஒற்றைக் கண்ணை கள்ளத்தனமாக திறந்தவள், எதிரே இருக்கும் பெரியம்மா, அன்னை, தந்தை என அனைவரும் விழிகளை மூடிதான் இருக்கின்றனரென உறுதி செய்துகொண்டு அருகேயிருக்கும் அக்காளைச் சுரண்டி,
"அக்கா..." என கிசுகிசுப்பான குரலில் அழைத்தாள்.

விழிகளை மூடியபடி இரு கரங்களையும் கூப்பி தெய்வத்தை வணங்கியபடி நின்றிருந்த பெண்ணும், தங்கையின் அழைப்பில், அவளைப்போலவே எதிரே ஒருமுறை பார்வையை செலுத்திவிட்டு பின் அவள் புறம் திரும்பியவள்,
"உஷ்... நித்திக்குட்டி அம்மா இப்போ நாம பேசுறதை பாத்தாங்க அவ்ளோதான். சாமி கும்பிட்டவாட்டி பேசிக்கலாம்." என மெல்லிய குரலில் மொழிய, அதுவும் சரிதானென தலையசைத்துவிட்டு அமைதியானாள்.

தெய்வத்தை வணங்கும்வேளையில் அதில் திளைக்காது, எதுவும் பேசிக் கொண்டிருந்தால் அன்னைக்குப் பிடிக்காது என்று நன்கறிவாளே.
அதன்பொருட்டே தங்கையிடம் அவ்வாறு உரைத்தாள்.

தீபராதனை முடிய, அனைவரும் திருநீறை பூசிக்கொண்டு அதன்பின் கூடத்தில் போடப்பட்டிருக்கும் மெத்திருக்கையில் வந்து அமர்ந்தனர்.

வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் தவறாமல் நடக்கும் இந்த பூஜை வேளையில், அனைவருமாய் நேரமே எழுந்ததும் குளித்து இறைவனை குடும்பமாய் வணங்குவது என்பது வழக்கமே.

பூஜை முடியவும் ஒரு ஐந்து நிமிடமாவது உட்கார்ந்ததன் பிற்பாடே அவரவர் வேலைகளை கவனிக்கச் செல்வர்.

அதன்படி நிமிடங்கள் கடக்கவும்,
"நான் போய் எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வரேன்." என எழப்போன தனது சித்தியிடம்,

"சித்தி நோ... இங்கயே உட்காருங்க.
நான் நேத்து சொன்னேன்ல்ல, இனி டெய்லி நான்தான் எல்லாருக்கும் காலையில டீ போடுவேன்னு." என எழ,

"உனக்கு எதுக்குடா அம்மு சிரமம்?
வேலைக்கு வேற கிளம்பனும் நீ.
நானே எப்போவும் போல எல்லாருக்கும் டீ போடுறேன்." என்றவரிடம்,

"டீ போடுறதுக்கு எவ்ளோ நேரம் சித்தி ஆகிடப் போகுது? ஆபீஸ் கிளம்பறதுக்குலாம் இன்னும் டைம் இருக்கு. ஸோ இனி நான்தான் எப்போவும் டீ வைக்க போறேன்."
என மறுத்தவளை அவர் பாவமாய் பார்க்க, அவளோ அவரை கண்டிப்பாக நோக்கிவிட்டு சமையலறைக்குச் சென்றுவிட்டாள்.

அவளின் முறைப்பான பார்வை ஏனென புரிந்த மற்றவர்கள் சிரித்துக் கொண்டனர்.

"என்ன சிரிப்பு உங்களுக்கு?" என கணவரிடமும், மகளிடமும் அவர் கடுப்பாக கேட்க,

"ம்மா… வொய் டென்ஷன்?
அக்கா ஸ்பெஷலா போடுற டீயை இனி நீங்க மட்டும் டெய்லியும் குடிக்கணுமான்றதுதான உங்க கவலை. நோ ஒர்ரிஸ். அப்பாவும் இனி உங்களுக்கு கம்பெனி கொடுப்பாராம். என்னப்பா?"
என தந்தையை மாட்டிவிட, ஒரு யோசனையிலேயே இருந்தவரோ மகளின் பேச்சில் நிகழ்வுக்கு வந்து திகைத்து பார்த்தவர்,

"ஏன்டாமா?" என மெல்லிய குரலில் பாவமாக வினவ,

"என்னப்பா என்னவோ சொல்றீங்க..." என மீண்டும் சத்தமாக பேச ஆரம்பித்தவளை மேலே பேசவிட்டால் மாட்டினோம் என உணர்ந்து, 'அப்படியா?' என்று சந்தேகமாக பார்த்த மனைவியிடம்,

"ஆமானு சொன்னேன் மா." என சரண்டர் ஆனார் மனிதர். அதில் இளையவள் பக்கென்று சிரித்திருந்தாள்.

“எனக்காக ஒன்னும் நீங்களும் அதேமாதிரி டீ குடிக்க வேணாம். எப்போவும் போடுற போலவே குடிங்க.” என கூறியவர் பேச்சில் அவர் ஆசுவாசம் அடைய, மீண்டும் எதோ சொல்ல வந்தவளோ,
தகப்பன் கண்களாலே விட்டுவிடேன் என கெஞ்சுவதில் ‘பொழச்சு போங்க’ என விட்டுவிட்டாள்.

நடந்த கலாட்டாவில் இணையாவிட்டாலும்,
நடப்பதை ஒரு புன்னகையோடு எப்போதும்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா.

சற்று நேரத்தில் தேநீரை வைத்து எடுத்துவந்த அம்ருதா, எல்லாருக்கும் கொடுக்க, தனக்கு அளிக்கப்பட்ட குவளையில் இருந்த டீயை குடித்த சுமதிக்கு முகம் அஷ்டகோணலாகியது.

அது தேநீர் நன்றாக இல்லாததாலன்று. சர்க்கரை இல்லாததால்!

அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதலாக உள்ளதால்,
அதை கவனத்தில் கொள்ளும்படி மருத்துவர் கூறியிருக்க, தேநீரில்கூட சர்க்கரை சேர்க்காது குடிப்பது நல்லது என்ற டாக்டரின் அறிவுரையை பின்பற்றுகிறார் என்றே எல்லோரும் நினைத்திருந்தனர்.

ஆனால் நேற்று தவறுதலாய் அம்ருதாவின் கிளாஸ் கீழே விழுந்துவிடவும், "நீ இதை குடி அம்மு. இன்னும் டீ இருக்கு பாத்திரத்துல. நான் இன்னொரு கிளாஸ்ல எடுத்துக்கறேன்." என தான் அருந்தாததை அவளிடம் கொடுக்க,

"கொஞ்சம் சுகர் ஆட் பண்ணிக்குறேன் சித்தி." என இயல்பாய் சொல்லியவளும் கிட்சனுக்கு வர,

"எதுக்கு சுகர்? அதுலதான் ஏற்கனவே சரியான அளவு போட்ருக்கனேடா." என தன் வாயாலே வாக்குமூலம் கொடுத்து வசமாய் சிக்கியிருந்தார்.

அதனாலே இனி அவருக்கு,
தேநீரில் சர்க்கரை மட்டுமல்ல,
அதனை தயாரிப்பதற்கும் தடா போட்டிருந்தாள் அவரின் பெறா மகள்.

வேண்டா வெறுப்பாய் டீயை குடித்து முடித்தவர், "நான் இப்போவும், மதியத்துக்கும் சமைக்கறதுக்கு ரெடி பண்ணுறேன்." என முகம் சுருங்கியபடி சொன்னவரின் கையை பிடித்துக்கொண்டவள்,

"சித்தி... முகத்தை இப்படி வச்சிக்காதீங்க. உங்க
ஹெல்த்காகதான சொல்லுறேன். டாக்டர் அவ்ளோ அட்வைஸ் பண்ணினார்ல. ப்ளீஸ் சர்க்கரை சேர்த்துக்கறது குறைச்சிக்கோங்களேன்.
நான் ஸ்பெஷலா உங்களுக்கு சுகர்பிரீயா அப்பப்போ எதுவும் செஞ்சி தரேன்." என கொஞ்சி சமாதானம் சொன்னவளிடம் முகத்தை தூக்கி வைக்க பிடிக்காது,

"டீ நல்லா இனிப்பா குடிச்சாதான்டா குடிச்ச மாதிரியே இருக்கு. இல்லனா சுடுதண்ணி மாதிரி இருக்க அதை குடிச்சா என்ன, குடிக்காட்டாதான் என்னனு தோணுது." என பெருமூச்சுடன் சொன்னவர்,

"ஆனாலும் நீ என் நல்லதுக்காகதான சொல்லுற. அதால இனி கண்டிப்பா குறைச்சிக்கறேன்." என அவளின் கன்னம் வருடி சிரிப்புடன் சொல்ல, இதை கவனித்த விஜயாவிற்கு, மகளின் குடும்பத்தினர் மீதான அக்கறையில் மனம் நிறைந்தது.

காலை எழுந்ததுலிருந்தே அனைவருமாய் இருக்கும் சமயம்,
ஒரு விடயத்தை சொல்ல காத்திருந்த வெங்கடாச்சலமோ,
“அண்ணி ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றார்.

எதுவும் முக்கியமான விஷயத்தை ஒருவர் மட்டுமே முடிவு செய்யாது, அனைவருமாய் விவாதித்து அந்த நேரத்தில் பேசி முடிவெடுப்பது என்பது அவ்வீட்டின் வழக்கம். ஆனால் இளையவர்கள் பெரும்பாலான சமயங்களிலும் அதில் இருக்க மாட்டார்கள்.

இப்போது அவர்களையும் வைத்துக்கொண்டு அவர் இவ்வாறு சொல்லவும், அனைவர் கவனமும் திரும்ப அவரை கேள்வியாக நோக்கினர்,

"சொல்லுங்க தம்பி." என விஜயா சொல்லவும்,

"நம்ம ஜோசியக்கார ஐயாகிட்ட அம்முவோட ஜாதகம் பாக்க சொல்லிருந்தோம்ல அண்ணி. அம்முகுட்டி ஜாதகத்துல இப்போ கல்யாண யோகம் கூடி வந்துருக்குன்னு சொன்னாரு.” என சொல்லி நிறுத்தியவர்,

“மேலும் அவர்கிட்ட வழக்கமா ஜாதகம் பாக்குற குடும்பத்தை சேர்ந்தவங்க, அவங்க பையனுக்கு எதும் நல்ல இடமா வந்தா சொல்லுங்கனு சொல்லியிருப்பாங்க போல. அவருக்கு நம்ம அம்மு ஜாதகத்தை பாக்கவும், எதுக்கும் ஒருமுறை பொருத்தம் பாப்போம்னு பாத்துருக்காரு. ஜாதகம் நல்லா பொருந்தி வந்துருக்காம்.

நம்ம பொண்ணுக்கு இப்போ கல்யாணம் பண்ணுற அனுமானம் இருக்கானு கேட்டாரு அண்ணி. குடும்பம் மட்டுமில்ல பையனும் ரொம்ப நல்ல விதமாம்.
சொந்தமா தொழில் பண்ணுறாராம்.
நம்ம எண்ணம் என்னனு சொல்லவும் மேற்கொண்டு பேசலாம்னு கேட்டாரு.” என்றவரின் நீண்ட பேச்சில் அதில் சம்மந்தப்பட்டவளை விட, அவளுக்கு அருகேயிருந்த நித்யா தந்தை கூறியதில் அதிர்ச்சியாகி அக்காளை விழித்து நோக்க, அதை கவனித்தவளுக்கு அவர் சொன்னதில் சட்டென தோன்றிவிட்ட பதட்டம் கூட மறைந்து சிறு சிரிப்பு எட்டி பார்த்தது.

விஜயாவோ அவர் சொன்னதை மனதுள் அசைபோட்டபடி,
“நீங்க என்ன நெனைக்கறீங்க தம்பி?” என அவரிடம்தான் முதலில் அபிப்ராயம் கேட்டார்.

“அவர் ரொம்ப உறுதியா சொல்லுறதை பார்த்தா,
நல்ல குடும்பமா இருப்பாங்கனு தான் தோணுது அண்ணி. மேற்கொண்டு விசாரிக்கும் முன்ன,
அம்முவுக்கு இந்த விஷயத்துல விருப்பம் இருக்கனுமில்ல.
அவ என்ன நினைக்குறாளோ அதுக்கு தகுந்தமாதிரி என்ன செய்யணுமோ பாத்துக்கலாம்னு தோணுது.” என சொன்னவரை,

சுமதியும், “சரியா சொன்னீங்க.
அம்முகுட்டி மனசுல என்ன எண்ணம் இருக்குனு முதல்ல கேப்போம் க்கா.”
என ஆமோதிக்க, மகளின் மனதை முன்னிறுத்திய இருவரையும் வாஞ்சையாக பார்த்தவர் பார்வை இப்போது மகளை நோக்க,

பெண்ணவள் வதனமோ இயல்பாக எழுந்த பதற்றம் தவிர்த்து நிர்மலமாக இருக்க, “நீ என்னடா நினைக்குற?” என அவர் கேட்கவும், சட்டென அவளுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை.

படிப்பை முடித்த பிறகு இரண்டு வருடமாவது வேலைக்கு செல்லவேண்டும், அதன்பிறகு இதனையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் அதை வீட்டில் கூறியபோது, அனைவருமே அதற்கு சம்மதம் சொன்னது மட்டுமல்லாது உண்மையிலே கடந்துபோன இரண்டரை வருடத்தில், கல்யாணத்தை பற்றி அவளிடம் ஒருமுறை கூட பேசியதே இல்லை என்பது உண்மை.

அவள் மனம் புரிந்தவர்கள்,
பெண் நாட்டு நடப்பை அறியட்டும், ஒரு சூழலை சமாளித்து பழகட்டும் என அவளின் விருப்பபடியே விட்டுவிட்ட போதிலும், இருபத்தைந்து வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வது நன்று என அன்னையாக அறிவுரையும் சொல்லியிருந்தார்.

ஆனால் சட்டென திருமண விடயம் பற்றிய கேள்வி வரவும், என்ன சொல்லவென அம்ருதா யோசிக்க,

“வேற எதுவும் மனசுல எண்ணமிருந்தாலும் தயங்காம சொல்லுடா.” என பெண்ணுக்கு உடன் வேலை செய்யும் யார்மீதும் விருப்பம் இருக்குமோ என அவர் கேட்க,

அதில் வேகமாக மறுத்து தலையசைத்தவள், “அப்படிலாம் எதுவும் இல்லங்க மா.” என்றாள் பளிச்சென்று.

இந்த கேள்வியை பெண்ணை இலகுவாக்க கேட்டுவிட்ட போதும், மகளின் பதிலில் அவர் உள்ளம் நிம்மதி கொண்டது.

இனியும் பதில் சொல்லாது இருப்பது
நன்றாக இருக்காது என உணர்ந்தவள், “உங்களுக்கு என்ன சரின்னு தோணுதோ அதே எனக்கும் ஓகே ம்மா.” என மொழிய,

“ம்ஹும்… அப்படி சொல்லக் கூடாதுடா. இது உன் வாழ்க்கை. கண்டிப்பா உன் மனசுல உள்ளது ரொம்ப முக்கியம்.
இப்போ இந்த சம்மந்தமே சரிவருமானு நமக்கு தெரியாது.
விசாரிச்சுட்டு தான் அடுத்து என்னனு முடிவு பண்ண போறோம்.

உனக்கு கல்யாண விஷயம் ஆரம்பிக்கறதுல சம்மதமா இல்ல இன்னும் டைம் போகட்டும்னு நெனைக்கறியானு அம்மா கேட்கறேன்டா. நீ என்ன நினைக்கிறியோ அதை தயங்காம சொல்லு. உன் விருப்பத்தை நிறைவேத்தறதுதான் எங்க சந்தோஷம்.” என சொன்ன அன்னையின் வார்த்தையில் அவள் உள்ளம் அத்தனை உவகை கொண்டது.

உண்மையிலேயே இல்லை என்று சொல்ல அவளுக்கு காரணமெதுவும் இருக்கவில்லை. ஆனாலும் பெண்ணின் இயல்பாக சட்டென சரியென்றும் கூறமுடியவில்லை.

ஆனால் அனைவரது முகத்திலும் குடிகொண்டிருந்த எதிர்பார்ப்பும் அந்த தயக்கத்தை உடைக்கச் செய்ய,
“சரிங்க மா.” என்றுவிட்டாள்.
தாயின் சொல்படி எந்த காரணம் கொண்டுமில்லாமல் மனதாரவே சம்மதம் கூறியிருந்தாள்.

பெரியவர்களுக்கு அவளின் ஒப்புதலில் மிகுந்த மகிழ்ச்சியே. அவள் பதிலில் அவர்கள் முகமே புன்னகை பூசிக்கொண்டது.

அன்னையோ பெண்ணின் கரங்களை இறுக பற்றிக்கொள்ள,
சித்தியோ அவளின் கன்னம் பற்றி கொஞ்சிவிட்டு சமையலறை செல்ல, சித்தப்பா அவளது தலையை வருடிவிட்டு அடுத்து செய்யவேண்டியதை யோசித்தபடி, காலை உணவை முடித்தவர், நேரமாகவும் அவர்களது சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் விஜயாவும் கிளம்பவேண்டும்.

நகரின் முக்கியமான இடத்தில், அவர்களுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.

மக்கள் கூட்டம் செறிந்து காணப்படும் பகுதியில் அமையபெற்ற சூப்பர் மார்க்கெட்டில், நியாயமான விலையில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமாக கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். அதன்பொருட்டே வியாபாரமும் நன்றாகவே இருக்கும்.

விஜயாவும், வெங்கடாச்சலமும் கடையில் பொறுப்பெடுக்க, சுமதிக்கு அங்கு சென்று உட்கார்ந்திருப்பதில் அத்தனை பிடித்தம் இல்லாதபோதும்,
அவரும் விஜயா மற்றும் கணவரின் சொல்படி வாரத்தில் ஓரிரு நாள் தவிர்த்து கண்டிப்பா கடைக்கு வருவார். வார இறுதியில் பிள்ளைகளுமே அங்கு செல்வது வழக்கம்.

அந்த கட்டிடத்தின் நிலம் அவர்களுக்கு சொந்தமானது என்பதால் வாடகை இல்லை.
மேலும் மேல் மாடியில் ஒரு அழகு நிலையத்திற்கு வாடகைக்கு வீட்டிருந்தனர். எனவே வருமானத்திக்கு குறைவு இல்லை.
நல்ல வசதியான குடும்பமே.

வேலைக்கு தயாராக அம்ருதா அறையினுள் வர, அவள் பின்னேயே வால் பிடித்து வந்தாள் நித்யா.

வேண்டிய உடையை கப்போர்டிலிருந்து எடுத்தபடி திரும்பியவள் அப்போதே தங்கையை கவனித்தாள்.

மனதுக்குள் சட்டென சரியென்று விட்டோமே என தோன்றினாலும், அதை தவறு என நினைக்கவில்லை.

ஒருவாரத்திற்கு முன் தனது ஜாதகம் ஜோசியக்காரரிடம் செல்கிறது என அறிந்தபோதே, இந்த பேச்சை ஓரளவு எதிர்பார்த்தாள்.

ஆனால் பெரியோர்கள் முடிவு நீ சொல் எனவும், முதலில் சட்டென அதை எதிர்கொள்ள ஒரு தயக்கம் வந்தபோதும், ஒருவாரமாகவே யோசித்தி தெளிந்ததன் பொருட்டு மனதில் உள்ளதை சொல்லியிருந்தாள்.
இல்லாவிட்டால் யோசித்து சொல்கிறேன் என்றிருப்பாள்.

இதனையெல்லாம் சிந்தித்தபடி இருந்தவள் யோசனையை விடுத்து, அப்போதே தங்கை நேற்று முதல் இன்று காலை எழும்பியதிலிருந்து தன்னிடம் கேட்க சொன்ன விடயம் ஞாபகம் வர,
“அச்சோ நித்திகுட்டி டான்ஸ் ப்ரோக்ராமுக்கு நீ நேம் கொடுக்க அம்மாகிட்ட ஓகே சொல்ல வைக்க சொல்லிட்டே இருந்தல்ல. ப்ச்… மறந்தே போய்ட்டேன் சித்தப்பா சொன்னதுல…” என்றவள் பேச்சில்,

“அக்கா… இப்போ அது ரொம்ப முக்கியமா?” என்றாள் கடுப்பாக.

கீழே எவ்வளவு முக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது! அதைவிடுத்து என்ன பேசுகிறாள் தமக்கை என எழுந்த கடுப்பு அது.

“அது முக்கியமில்லையா பின்ன? லாஸ்ட் டே…” என மீண்டும் தொடங்கியவளை,

“க்கா… அதுக்குலாம் நேம் கொடுக்க இன்னும் நாலு நாள் இருக்கு. இப்போவே ஓகே வாங்கிட்டா, நேம் கொடுத்துட்டு இன்னையிலருந்து டான்ஸ் ப்ராக்ட்டிஸ்னு கிளாஸ் ஹவர் கட் அடிக்கலாம்னு ப்ரோக்ராம் சொன்னவுடனே பேர் கொடுக்கதான் அர்ஜ் பண்ணினேன்.” என்றவளை, இடுப்பில் கைகொடுத்து அம்ருதா முறைக்க, அதில் கொஞ்சமே அசடு வழிந்து ‘ஹிஹி’ என சிரித்து சமாளித்தவள்,

“அதை விட்டுத்தள்ளுங்க. அந்த பஞ்சாயத்தை அப்பறோம் பாப்போம்.”

“என்னக்கா பொசுக்குன்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடீங்க.” என இன்னும் நம்ப முடியாது கேட்டவளை,

‘தோ… கேட்டுட்டா. இவ இது பத்தி பேச ஆரம்பிக்கறதுக்குள்ள ஆபீஸ் போயிடலாம்னு நெனச்சேன்.’ என எண்ணினாலும், அதை விடுத்து தங்கைக்கு தன் மனநிலையை விளக்க ஆரம்பித்தாள்.

“ஏன் நித்திகுட்டி அப்படி கேட்குற?” என்றவள் பதில் கேள்விக்கு,

“இல்லக்கா வீட்ல சட்டுனு அப்படி ஒரு பேச்சு வரவும், நான் அதை எதிர்பாக்கலையா, ஸோ கொஞ்சமே ஷாக் ஆகிட்டேன். நீங்க வேற டக்குனு ஓகே சொல்லிடீங்களா, அதான் உண்மையிலேயே உங்களுக்கு ஓகேயானு தெரிஞ்சிக்கதான் கேட்டேன்.” என அக்காவின் மீதுள்ள அன்பில் உறுதிபடுத்த வினவியவளைக் கண்டு புன்னகைத்தவள்,

“நோன்னு சொல்ல உண்மையில எனக்கு எந்த ரீசணும் இல்லடா. ரெண்டு வருஷம் கழிச்சு வீட்ல எப்படியும் இந்த பேச்சு ஆரம்பிக்கும்னு தெரியும். ஏற்கனவே அதை பத்தி யோசிச்சுதான் வச்சிருந்தேன்.
ஸோ ஏன் வேணாம் வேணும்னு மாத்தி மாத்தி பேசிக்கிட்டுனு ஓகே சொல்லிட்டேன்.

ஓகேனா கல்யாணம் பண்ணுறதுக்கு நல்ல பையனா தேடுங்கனு. லைக் இப்போவே அந்த சம்மந்தம் பத்தி எதுவும் நினைக்கல.

பட் அம்மா, சித்தப்பா, சித்தி எல்லா சேர்ந்து ஒருத்தர பத்தி விசாரிச்சு சரினு முடிவு பண்ணினா, கண்டிப்பா அவர் நல்லவரா இருப்பாருனு நம்பிக்கை இருக்கு. அவங்க நல்லவங்களா,
முக்கியமா எனக்கு பிடிக்குமா இல்லையானுலாம் பாத்துட்டுதான் அடுத்து ஏற்பாடு பண்ணுவாங்க. ஸோ அதான்…” என்றவளின் பேச்சில் தான் பெரியோர்கள் மீது எத்தனை நம்பிக்கை. அது இளையவளுக்கும் புரிய ‘சரிதான்’ என எண்ணியவள் ஆசுவாசம் அடைந்தாள்.

அதன்பின் இருவரும் தயாராகி காலை டிபனை உண்டவர்கள், மதிய உணவையும் எடுத்துக்கொண்டு, விஜயா மற்றும் சுமதியிடம் விடைபெற்று அலுவலகம் மற்றும் கல்லூரி என கிளம்பிச் சென்றனர்.


தொடரும்…
 
Last edited:

NNK 94

Moderator
கதையின் முதல் அத்தியாயம் படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களை மறக்காம பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே 😻😻


நன்றி
😻🙏
 

NNK 94

Moderator
எபி 2:

காலை ஐந்து மணிக்கு வைத்த அலாரம் தனது கடமை தவறாது ஒலிக்க, அதனை கைநீட்டி அணைத்தவன் துயில் கலைந்தாலும், சற்றுநேரம் கட்டிலில் புரண்டு படுத்துக் கொண்டிருந்துவிட்டு மெல்ல சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தான்.

கொஞ்சமே உறக்கத்திற்கு சொக்கிய கண்களை லேசாக தேய்த்துவிட்டு ஒட்டிக்கொண்டிருந்த தூக்கத்தை விரட்டியவன்,

‘காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பதுன்தன் முகமே’

என்ற நெட்டிசன்களின் கிண்டலான மீம்மை பொய்யாக்காது, சில நிமிடங்கள் கைபேசியை நோண்டியபின்பே, அந்த அறைக்குள் அமைந்திருந்த ஓய்வறைக்குச் சென்றான்.

காலைக்கடனை முடித்து,
பல் துலக்கி, முகம் அழும்பிவிட்டு அங்கிருந்த ஒரு துண்டினால் முகத்தை துடைத்தபடி வெளியே வந்தவன்,

மேசை மேலிருந்த ஸ்பீக்கரில் புத்துணர்வை அளிக்கும் வகையில் அவனால் சேகரிக்கப்பட்ட
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பை போட்டுவிட்டு, அறையை ஒட்டி அமையபெற்ற பால்கணியில் வழக்கமான தனது உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தான்.

பிலீவர், அன் ஸ்டாப்பபுலில் தொடங்கி, எதிர்நீச்சலடி, டமக்கு டமக்கு டம் டம்மா என பாடல்கள் ஒலித்தவண்ணம் இருக்க,

முதலில் வார்ம் அப் செய்தபின்,
புஷ் அப்ஸ், புல் அப்ஸ், ப்லாங்க், மௌன்டெயின் கிளைம்பர்,
பை சைக்கிள் க்ரன்சஸ், ஸ்க்வாட், டம்பில்ஸ் என செய்துகொண்டே போனவனது எக்ஸர்சைஸின் பட்டியலும் முக்கால் மணி நேரம் நீண்டது.

முழுதாய் உடற்பயிற்சியை செய்து முடித்தபோது, அவன் உடல்முழுக்க வியர்வை துளிகள் வழிந்தோடியது.

அங்கிருந்த இருக்கையில் ஓய்வாக அமர்ந்தவன், நெற்றியிலிருந்த வியர்வை துளிகளை விரலால் சுண்டிவிட்டான். அவன் பார்த்தீபன். நம் கதையின் நாயகன்.

தொடர் உடற்பயிற்சியின் விளைவால் உருண்டு திரண்டிருந்த புஜங்கள், திண்ணிய மார்பு,
நரம்போடிய கரங்கள் என முறுக்கேரிய உடல்வாகுடன்,
அதற்கேற்ற ஆறடி இரண்டு அங்குல உயரத்துடன் ஆண்மையின் இலக்கணமாய் காணப்பட்டான்.

அவனது குணத்தை பற்றி கூறவேண்டுமென்றால்,

அன்பும், பொறுப்பும், நேர்மையும், நற்பண்பும் கொண்டவன்.

ஒரு நபரை, ஒரு விஷயத்தை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் புத்தி கூர்மையுடையவன். புதிதாக பார்க்கும் நபர்களிடம் கூட நன்றாக பேசும் எக்ஸ்ட்ரோவெர்ட் பர்சனாலிட்டி கொண்டவன்.

தொழில் என்று வந்தால் கொஞ்சமும் வளைந்து கொடுக்கமாட்டான். ஆனால் குடும்பம் என வரும்போது அனுசரித்து செல்லும் பக்குவமுடையவனே.

வீசுகின்ற காற்றினால் கலைந்த கேசத்தை கோதியபடி இருந்தவனது விழிகள், வீட்டின் பின்பக்கமாக இருந்த மாமரத்தையே ஆதுரமாக நோக்கி கொண்டிருந்தது.

பள்ளி படிக்கும் காலத்தில் அவனும் அவனது தந்தையுமாய் வைத்த சிறு செடி, இன்று வளர்ந்து உயர்ந்து மரமாய் நிற்கிறது. அவனுக்கு மிகவும் பிடிக்கும் அந்த மர நிழலுக்கு கீழேயுள்ள கல் இருக்கையில் அமர்ந்திருப்பது.

அப்படியே விழிகளை சுழலவிட்டவன் பார்வையில் ஆங்காங்கே இருந்த அலங்காரச் செடிகளை பட, ‘இப்போவும் தோட்டத்துல செடிகள் இருந்தாலும், இன்னும் அங்கங்க பிளாங்க் ஸ்பேஸும் இருக்கு. செடிகொடின்னு அப்படியே பாக்குற இடமெல்லாம் பசுமையா இருந்தா, காலையில இங்கருந்து பாக்க வியூ எவ்வளவு நல்லாருக்கும். இப்போ நினைக்கறோம். அப்பறோம் வேலை பிஸியில சொல்ல மறந்துடறோம்.

பின்பக்கமா இருக்க தோட்டத்துல இன்னும் சில செடி வைச்சு,
அதை ஒழுங்கா மேனேஜ் பண்ண சொல்லணும் சேகர் அண்ணாகிட்ட.’ என நினைத்தவன், கதவை தட்டும் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்து முகத்தை டி ஷர்ட்டில் துடைத்தபடி வந்து திறக்க, அவனுக்கான ப்ரோட்டின் ஷேக்குடன், அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் வனிதா நின்றிருந்தார்.

அன்னைதான் தான் இன்னும் கீழே செல்லாததில் கொடுத்து விட்டிருப்பார் என புரிந்துகொண்டவன்,
“தேங்க்ஸ் க்கா.” என சிறு சிரிப்புடன் அதனை வாங்கிகொள்ள,

அதில், “ஐயோ… தாங்க்ஸ்லாம் எதுக்கு தம்பி.” என பதறி மறுத்தபடி தலையாட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அவனது அன்னை துளசிமணி
வெகுநேரம் தொடர்ந்து நிற்கவும், நடக்கவும், படிக்கட்டில் ஏறவும் என இருந்தாரானால் மூட்டுவலி அவரை படுத்திவிடும்.

எனவே வீட்டு வேலைக்கும்,
தோட்ட வேலைக்கும் உதவியாக நடுத்தர வயதுடைய வனிதா மற்றும் சேகரை வேலைக்கு நியமித்திருந்தான். அவருக்கு மகிழுந்தும் ஓட்ட தெரியும் என்பதால் டிரைவரும் அவரே.

இவனும் மீண்டும் அதே இடத்திற்கு வந்தமர்ந்தவன், அதனை குடித்து முடிக்க, ‘ரொம்ப குஷியோ?’ என அவனது மனம் வடிவேலு தொணியில் கேலியாக வினவியது.

‘ச்சே ச்சே…’ என மறுத்தாலும் அவன் உள்ளம் நேற்று அன்னை பேசியதில் ஒரு குறுகுறுப்பை உணர்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையே.

நேற்று வேலை முடித்து வீடு வந்தவன் இரவுணவை உண்டபிறகு, கூடத்தில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்தபடி அன்னையுடன் பேசிக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனது அன்னை பேசியதை மனம் நினைத்து பார்த்தது.

“தம்பி… நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லவும் தள்ளி போட வேண்டாம்னு இன்னைக்கே போய் நம்ம ஜோசியக்காரரை பாத்து,
உன் ஜாதகத்தை பாக்க சொன்னேன்.” என்றதில் ‘அதுக்குள்ளவா?’ என கொஞ்சம் திட்டுக்கிடவே செய்தான்.

கடந்த ஒன்றரை வருடமாகவே, அதாவது அவன் இருபத்து ஆறு வயதை தொட்ட முதலே, ‘கல்யாணதுக்கு பாக்கலாமாயா?’ என அவனிடம் கேட்டுக்கொண்டே தான் இருந்தார். அவனது அக்காவும் அவ்வப்போது அன்னையை வால் பிடித்து கேட்பாள்.

அவனுக்குத்தான் அப்போது அதைப்பற்றி எண்ணமில்லாமல் இருக்க, “கொஞ்சநாள் போகட்டும்.” என மறுத்து தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தான்.

இப்படி நாட்கள் நகர்ந்து செல்ல, ஒருமுறை குரூப் காலில் அவர்களது கல்லூரி சகாகக்ளோடு பேசிக் பொதுவாக கொண்டிருக்கும்போது, கல்யாணம் கமிட்டிமென்ட் என்ற தலைப்பு வரவும் இவனும், “இப்போவே கல்யாணத்துக்கு பாக்கலாமானு அம்மா வேற அடிக்கடி கேட்டுகிட்டே இருக்காங்க.” என்றவன் சலிப்பாய் சொல்லும்போது,

அவனது பேட்ச் சீனியர் ராகவன்,
“இப்போ பாக்காம வேற எப்போடா பாக்கலாமானு கேட்பாங்க?
இப்பலாம் அரேன்சுடு மேரேஜ் செய்யுறதே பெரும் பாடா இருக்குடா. பொண்ணுங்க வீட்டுல ஆயிரத்தெட்டு எக்ஸ்பெக்ட்டெஷன் இருக்கு.

எனக்கு ரெண்டு வருஷமா வீட்டுல பொண்ணு தேடுறாங்க. எதுவும் காரணமா தட்டி தட்டி போயிட்டே இருக்கு.

எனக்கு என்ன வயசாகிருச்சு இப்போ? கொஞ்சநாள் போகட்டும்னுதான் நானும் சொன்னேன். ஆனா இப்போ வயசு முப்பது ஆகவும், என்ன பையனுக்கு முப்பது ஆச்சா? லேசா முடியெல்லாம் நரைச்சிருக்குனு எத்தனை சொல்லுறாங்க தெரியுமா?
அவங்க சொல்லுறது அவங்க பக்கம் நியாயமா கூட இருக்கலாம்.

ஆனா இப்போல்லாம் ஸ்கூல் படிக்குற பையனுக்கே முடி நரைச்சுதான் போயிருது. என்ன செய்ய?

ஆனா அவனுங்கலாம் காலேஜ் முடிக்கறதுக்குள்ளவே எந்த பொண்ணையும் உஷார் பண்ணி லவ் மேரேஜ்னு இழுத்துட்டு ஓடிறானுங்க. நம்மதாண்டா நயன்டீஸ் கிட் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண தெரியாம, வீட்டுல பாப்பாங்கனு உட்கார்ந்துட்டு இருக்கோம்.

அதால அனுபவஸ்தன் சொல்லுறேன் கேட்டுக்கோ. சொந்தமா தொழில் பண்ணுற.
உன் லைப் செட்டில்டு. ஸோ இப்போவே பாக்க ஆரம்பிக்க சொல்லிடு.” என்றவன் பேச்சை கேட்டு,

‘என்னையா பயப்படுத்தறீங்க?’ என எண்ணினாலும், நடைமுறை எதார்த்தத்தை மனதின் ஓரம் குறித்தும் வைத்தான்.

ஆனால் அந்த ஒரே காரணத்தைக் கொண்டு திருமணத்திற்கு பார்க்க அவன் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது, உயிரும் உணர்வும் கொண்ட ஒரு பெண்ணுடன் தன் வாழ்வை ஆத்மார்த்தமான ஒரு பந்தத்தில் என்றைக்குமாக இணைத்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு.

அதற்கு தன் மனம் தயாராகும் முன்னவே சரி என்று கூறுவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அதன்பின் திருமணம் பற்றி யோசிக்க ஆரம்பித்தவன்
ஒரு தெளிவை எட்டியிருக்க,
அடுத்தமுறை அன்னை அதைப்பற்றி பேசவும், “சரிம்மா பாருங்க.” என்று உளமாரவே சம்மதம் சொல்லியிருந்தான்.

அதை எதிர்பார்த்திருக்கவில்லை அவர். அவரது முகத்தில் வந்த மகிழ்ச்சியைக் காண தன் முடிவு சரியென எண்ணிக்கொண்டான்.

இவ்வாறான யோசனையில் சற்று நேரம் உழன்றவன் நேரமாவதை உணர்ந்து குளிக்கச் சென்றுவிட்டான்.

பிஸ்தா நிற சட்டையும், சந்தன நிற கால்சராயும் அணிந்து கம்பீரமே உருவாய் வேகநடையோடு உட்புற படிக்கட்டின் வழியே வந்தவன் நிச்சயம் கண்ணை கவரும் அழகனே.

இயல்பாய் விசிலடித்தபடி துள்ளல் நடையுடன் கிழே வந்தவனின் நடையின் வேகம், கூடத்தில் கேட்ட பேச்சு சத்தத்தில் மெல்ல குறைந்தது.

“அது எப்படிமா எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம நீயே போய் ஜோசியக்காரரை பாத்த?” என்ற அவனது அக்காவைத் தொடர்ந்து,

“அதுக்கு என்ன சவிம்மா இப்போ சொல்லிட்டேன்தான?” என்ற அன்னை, தமக்கையின் பேச்சுவார்த்தையில்,

‘காலையிலேயே பஞ்சாயத்தா?’ என உள்ளுக்குள் புலம்பியபடி அவ்விடம் வந்தான்.

அவனைக் காணவும், “மாமா…” என்று கத்தியபடி சிரிப்புடன் ஓடிவந்த அக்கா மகனை அப்படியே வாரி அணைத்து தூக்கிக்கொண்டவன்,

“வாடா மருமவனே…” என கொஞ்சியபடி உணவு மேசையை சுற்றி போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தவன்,

“வா க்கா…” என அக்காவிடம் சொல்லிவிட்டு அவனை மடியில் அமர்த்திக் கொண்டான்.

“அக்காவுக்கும், கவினுக்கும் டிபன் வைங்களேன் மா சேர்ந்தே சாப்பிடலாம். நீங்களும் உட்காருங்க.” என்றதற்கு,

“நான் அப்பறோம் சாப்படுறேன் பா.” என அன்னை எப்போதும் சொல்லும் பதிலை சொல்ல,

“இப்போதான் சாப்பிட்டோம் பார்த்தீ. நீ சாப்டு.” என அவளும் மறுத்துவிட்டாள்.

அடுத்த தெருவில் இருக்கும் ஒரு குடும்பத்தில் தான் அவளை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். எனவே காலை வேளையில் அல்லது சாயங்கால நேரம் சாவித்ரி அன்னையை, தம்பியை குழந்தைகளுடனோ அல்லது தனியாகவோ வந்து பார்த்துவிட்டு போவது அவ்வப்போது நடப்பதுதான்.

துளசி மகனுக்கு காலை உணவை தட்டில் வைக்க ஆரம்பித்துவிட, இப்போது எதையும் பேசாதே என அன்னை கண்களால் உணர்த்தியதில் அமைதியாக இருந்துவிட்டாள்.

தனது பாக்கெட்டிலிருந்து கைபேசியை கைப்பற்றவும் பக்கத்து இருக்கைக்கு மாறி
அதில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் அக்கா மகனுக்கும் ஓரிரு வாய் ஊட்டியபடி தானும் காலை உணவை உண்டு முடித்தான்.

அதன்பின் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்று சிங்க்கில் போட்டு அதை கழுவிவிட்டு ஒரு சிறிய டவலால் கரத்தை துடைத்தபடி மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தான்.

வீட்டில் அனைத்து வேலையும் செய்யாவிடினும், இதுபோல தான் உண்ட அருந்திய தட்டு, குவளையை அவனே வாஷ் செய்வது அவனது பழக்கம்.

“நீ கல்யாணத்துக்கு பாருங்கனு சொல்லிட்டியாம். அம்மா ஜோசியக்காரர்கிட்ட
பொருத்தமா பொண்ணு ஜாதகம் எதுவும் வந்தா சொல்லுங்கணு கேட்டாங்களாம். உங்களுக்கு எங்கிட்டலாம் ஒருவார்த்தை அதைப்பத்தி சொல்லணும்னு தோணவே இல்லையா பார்த்தீ? கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அப்போ நான் இந்த வீட்டு பொண்ணு இல்லையா?” என்றவளின் ஆதங்கமான கேள்வியில்,

“நேத்துதான் க்கா நான் பாருங்கனு சொன்னேன். அம்மா உடனே அவரை பாத்துட்ட வர கிளப்பிட்டாங்க போல.” என அவன் விளக்கம் முற்பட,

“நீ சம்மதம் சொன்னது,
ஜோசியகாரர்கிட்ட
உனக்கு கல்யாணத்துக்கு பொருத்தமா யார் ஜாதகமும் வந்தா சொல்லுங்கனு சொல்லிட்டு வந்தது கேட்க எனக்கு ரொம்ப சந்தோசம்தான் பார்த்தீ.

ஆனா இப்படி நீ சம்மதிச்சுட்ட,
நான் நம்ம ஜோசியக்காரர்கிட்ட போய்ட்டு வரேன்னு, எங்கிட்ட போன் பண்ணியாச்சும் பாக்க போகும் முன்ன அம்மா ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல? அடுத்த தெருவுலதான இருக்கேன்.” என்று வருத்தமாக ஒலித்த மகளின் குரலில், அன்னைக்கு தன் தவறு கொஞ்சமே புரிந்தது.

தம்பியைவிட பத்து வயது மூத்தவள். எனவே சிறுவயதிலிருந்தே அவனை வளர்த்தவளுக்கு அவன் மீது அதிக பாசம். அதையும் தாண்டி ஒரு உரிமையுணர்வு எப்போதும் உண்டு. அதுதான் இவ்வாறு என கேள்விப்படவும் மனதில் இருப்பதை படபடவென கொட்டிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே மகளின் புகுந்தவீட்டு சொந்தம் பக்கமாக ஒரு பெண்ணை மகனுக்கு பேசலாம் என அவர்கள் கேட்க, இவர் மகன் மனதை கொண்டு மறுத்திருக்க அது அவர்களுக்கு ஒரு ஈகோவைக் கொடுத்திருந்தது.

அவள் வீட்டில் விஷயத்தை இயல்பாய் சொல்லி அதை தெரிந்து எதுவும் ஆரம்பிக்கும் முன்னவே யாரும் எதுவும் அச்சாணியமாக நினைத்து விடுவார்களோ என்ற ஒரு பயத்தில்தான் மகளிடம் ஜோசியரை பாக்கும் முன் சொல்லவில்லை அவர்.

‘போய் பாத்துட்டு வந்து முதல்ல அவகிட்ட சொல்லிக்குவோம்.’ என விட்டுவிட்டார்.

ஆனால் இப்போது,
“உங்களுக்கும் எங்கிட்ட எதையும் கலந்து பேசணும்னு தோணலல்ல.“ என்றவளின் கலங்கிய குரல் அவர்களை வருந்த செய்ய,

“அப்படிலாம் இல்லக்கா.” என அவனும்,

“உன் தம்பி சட்டுனு சம்மதம் சொல்லவும் எனக்கு கைகால் ஓடல. அதான் உடனே எதையும் யோசிக்காம அவரை பாக்க புறப்பட்டுட்டுடேன் கண்ணு.” என்றவரின் மன்னிப்பு கோரும் பாவனையுடனான பேச்சிலும், தம்பியின் வருத்தம் தோய்ந்த முகத்திலும் ‘என்ன நேரத்தில் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்?’ என தன் தவறு புரிய,

“சாரி… என்னவோ சட்டுனு எமோஷனல் ஆகிட்டேன். விடும்மா… விடுடா.” என முகத்தை சட்டென மலர்வாய் மாற்றியவள்,

“அப்போ அடுத்து ஜாதகம் பொருத்தமா வரவங்கள பத்தி நல்லா விசாரிச்சு, சரின்னா அடுத்து அடுத்துன்னு நமக்கு நெறய வேலை இருக்கு இல்லமா?” என கேட்க,

“ஆமா சவிம்மா. அவர்கிட்டனு சொன்னது மட்டுமில்லாம நாமளும் தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சு பாக்கணும். விஷயம் முடிவாகிட்ட அப்பறோம் நெறய வேலை இருக்கும்தான்.” என ஒரு புன்னகையுடன் ஆமோதித்தார்.

“அப்போ சீக்கிரம் மாமியார் கெத்தை காமிக்கவும், நாத்தனார் கெத்தை காமிக்கவும் நம்ம வீட்டுக்கு ஒரு ஆள் வரப் போறாங்க.” என்றவள் கிண்டலில் கொஞ்சமே அவர்களும் இயல்பாக,

பார்த்தீபனோ,
“ஹான்… நீங்க கெத்து காமிக்க ஆள் வேணும்னா நான் கல்யாணம் பண்ண ஓகே சொன்னேன்.
அதுலாம் என் பொண்டாட்டிகிட்ட நடக்க விடமாட்டேன்.” என்று தானும் அதில் இணைந்தவனின் பேச்சில் அன்னை வாய்விட்டு சிரிக்க,

“ம்மா… பாத்தியா இப்போவே சப்போர்ட் பண்ணுறான். “ என புகார் போல சொன்னாலும், அவள் முகத்திலும் புன்னகை மட்டுமே இருந்தது.

அதன்பின் சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன், அவர்களிடம் விடைபெற்று தன் கடைக்கு கிளம்பினான்.

என்.எஸ் டெஸ்க்டாப் & லேப்டாப் சர்வீஸ் சென்டர் என்ற சர்வீஸ் சென்டரை கல்லூரி முடித்தபின்,
தன் தந்தையின் சப்போர்ட்டுடன் ஆரம்பித்து ஏழு வருடங்களாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான்.

இதனை ஆரம்பிக்க தன் தந்தை கொடுத்த பணத்தை கொஞ்ச கொஞ்சமாக சம்பாரிக்கவும் திருப்பி கொடுத்துவிடுவேன் என்ற
நினைப்பில் அவரிடம் கூறியே தான் அவருடைய உதவியை வாங்கினான். ஆனால் அதை திருப்பி கொடுக்க இப்போது அவர்தான் இல்லாது போனார்.

உடலளவில் அவர் அவனுடன் இல்லாதவிட்டாலும், உணர்வுரீதியாய் என்றும் அவனுடனேதான் இருப்பார் என தவிக்கும் மனதை ஆறுதல் படுத்திக்கொள்வான்.

அவனுக்கு கீழ் ஐந்து பேர் சர்வீஸ் சென்டரில் வேலையில் இருந்தார்கள்.

கணினி மற்றும் மடிக்கணினியை பழுது பார்ப்பது, ஓ.எஸ் மாற்றித் தருவது, சிஸ்டம் டேட்டாவை ரெகவரி செய்து தருவது, அலுவலகம், கல்லூரி, கடைகளில் இருக்கும் கணினியின் பழுதை சமயம் நேரில் சென்று சரி செய்து தருவது, அப்போதைய ட்ரெண்டில் இருக்கும் லேப் டாப் டேப்லெட்டை விற்பனைக்கு வைத்திருப்பது,
முக்கியமாக ஒருவரின் விருப்பத்திற்கும் வேலைக்கும் ஏற்ப காம்பொனென்ட்ஸை கொண்டு பிசி பில்ட் செய்து தருவது என பல வேலைகளை செய்து வந்தனர்.

ஒரு சின்ன பிரச்சனையென சர்வீஸ் சென்டருக்கு எதையும் கொண்டு சென்றாலே, ‘அதை அப்படியே மாத்தணும் இல்லனா ஒர்க் ஆகாது. இவ்ளோ செலவாகும்.’ என சிலரை போல பணத்தை பிடுங்க பார்க்காமல், என்ன பிரச்சனையோ அதை மட்டும் சரி செய்து தரும் அவர்களது நேர்மையில், நல்ல பெயரையும் நெறய வாடிக்கையாளரையும் காலங்கள் ஓட சேர்த்து வைத்திருந்தான்.

பேருந்து நிலையத்தின் அருகில் ரோட்டிற்கு மேலேயே அவனது கடையும் இருக்க, இதுவும் ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது.

சர்வீஸ் சென்டரின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியவன் உள்ளே நுழையவும் அன்றைய வேலைகள் எப்போதும் போல அவனை இழுத்துக் கொண்டது.


தொடரும்…
 
Last edited:
Status
Not open for further replies.
Top