NNK 48
Moderator
டீஸர் 1
இல்லம் கலைக்கட்டி இருந்தது, நிகழப் போகும் திருமணத்திற்காக.
விஜயரங்கனின் அழைப்பின் பெயரில் வந்த குடும்பத்தின் மூத்த வாரிசு பார்கவ்வை, ‘வேண்டாம்னு போனவன், இப்ப எதுக்குடா வந்த.?’ என்று கேட்க எவரிற்கும் மனமோ வாயோ வரவில்லை.
மறப்பதும் ஏற்பதும் தானே, மனித இயல்பு. அவ்வகையில் அந்தக் குடும்பத்தார் அனைவரும் நேய மனதுடன் இருந்தனர்.
தனது மகளைத் திருமணம் செய்ய மறுத்திருந்தாலும், “வாடா மருமகனே! என்ன, இப்பதான் எங்க ஞாபகம் எல்லாம் வந்துச்சா? உன்னோட பொண்டாட்டி, எங்களைக் காட்டிலும் அவ்வளவு நல்லா பார்த்துக்கிறாளா.?” எனக் கேட்ட கீதாவின் சொற்களில் துளியும் வருத்தம் இல்லை. அவனைக் கடந்த எட்டு மாதங்களாய், காண இயலாத ஏக்கம் மட்டுமே நிறைந்து இருந்தது.
மாப்பிள்ளை அழைப்பிற்காகத் தயாராகி வந்த சரண், தமையனைக் கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.
“ரெண்டு நாளுக்கு முன்னாடியே வந்தா என்ன? விடிஞ்சா கல்யாணம், இப்ப வர்ற? நிச்சயத்துக்கு முன்னாடியாவது வந்தியே! சரி, அண்ணி எங்க.?” என வினவ, “அவ வரலடா!” என்றான் பார்கவ்.
“ஏன்.?”
“நீயும் தாத்தாவும் தான் கூப்பிட்டீங்க. அத்தைக் கூட, இப்பப் பேசிட்டாங்க. ஆனா.. அப்பா, பார்த்தும் பார்க்காதது மாதிரி போயிட்டாரு. அப்பாவை மீறி அம்மா பேச மாட்டாங்க. மாமா, எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு தெரியல. எனக்கே இந்த நிலைமைனா, அவளுக்குக் கஷ்டமா இருக்காதா.? அதான்.!” என்று சமாதானம் சொல்ல,
“வர்ற வெங்காயம்.. சம்சாரத்தைக் கூட்டிட்டி வராம, மொட்டையா வந்து நிக்கிறான் பாரு பத்மா? ஏண்டா, என் வயசுக்கு உனக்கு வெத்தலை பாக்குத் தட்டு வச்சு அழைக்கணுமா? அவ்வளவு பெரிய மனுசன் ஆகிட்டியா, நீ? நான் ‘வா’னு சொன்னா, நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரும் சொல்லுறதா தான அர்த்தம்? அப்ப, எனக்கு அவ்வளவு தானா மரியாதை.?” எனக் குடும்பத்தின் மூத்தவரான விஜயரங்கன் வினவ, தவிப்பும் துடிப்புமாய்த் தாத்தாவைப் பார்த்தான் பார்கவ்.
“கூட்டிட்டு வந்தா, அந்தப் பிள்ளைய போன்னு விரட்டியா விட்டுடுவோம்? எங்களை அப்படியா நினைச்சிட்டு இருக்க.?” என்று பத்மாவதியும் வினவ, “ஸாரி ஆச்சி, தப்புதான். நான் அவளைக் காலையில வரச் சொல்லிடுறேன்!” என உரைத்தவனின் கண்களில் நீர் கோர்த்து இருந்தது.
“அச்சோ! மாமா, என்ன இப்படி அழுமூஞ்சி பிள்ளையா ஆகிட்டீங்க?” என்று கேலியாய் உரைத்தவாறு வந்த அக்குடும்பத்தின் இளவரசி சீனியிடம் அனைவரது கவனமும் திரும்ப, இல்லத்தின் வாயிலில் மேளதாகம் ஒலிக்கத் துவங்கியது.
“பொண்ணு வீட்டுல இருந்து, அழைக்க வந்துட்டாங்க போல! கிருஷ்ணனையும் துளசியையும் கூப்பிடு சீனி!” என மகள் வயிற்றுப் பெயர்த்தியிடம் உரைத்து விட்டு வாயிலிற்குச் சென்ற விஜயரங்கனைத் தொடர்ந்து, மற்ற குடும்பத்தாரும் சென்றனர்.
இரண்டு எட்டுகளை எடுத்து வைத்த சரணின் கையைப் பற்றிய சீனி, “மாமா, எங்க போற? நீ, கல்யாணம் மாப்பிள்ள. இப்படி எல்லாம் முந்திரிக் கொட்டை மாதிரி, முன்னாடி ஓடக்கூடாது. அடக்க ஒடுக்கமா அமைதியா நல்ல பையனா இரு, வந்து கூட்டிட்டுப் போவாங்க. என்ன சரியா? கொஞ்சம் உன்னோட ஆர்வத்தைக் கண்ட்ரோல் பண்ணு!” என்றுவிட்டு, அவனது பெற்றோரை அழைத்து வர ஓடினாள்.
சடங்கு துவங்கிட.. சரணின் அருகே வந்து நின்றவள், “இதெல்லாம் யார் யாருனு சொல்லு மாமா.” எனப் பெண் வீட்டாரைப் பற்றி விசாரிக்க, ஒவ்வொருவர் அணிந்திருந்த உடையின் நிறத்தை உரைத்து, உறவு முறைகளைச் சொன்னான்.
“அது திவாகர், மஹியோட அண்ணா. அடுத்து, அவளோட தாய்மாமா. அவரு பக்கத்துல இருக்கிறது, என் மாமனாரோட தம்பி..” எனச் சொல்லிக் கொண்டே வர, இறுதியாய் நின்று இருந்தவனைக் கண்டதும், பேச்சு மூச்சற்று போனாள் அவள்.
அவனுமே.. சீனியைப் பார்த்து உள்ளம் தடதடக்க அவ்விடம் விட்டு அந்நொடியே அகன்று சென்றான்.

விழி முதல் மொழி வரை - கருத்து திரி
வணக்கம் நண்பர்களே.. கதையைப் பத்தின உங்களோட கருத்துகளை இந்த திரியில என்கூட பகிர்ந்துக்கோங்க. Thank you
narumugainovels.com
Last edited: