அத்தியாயம் 02
ஒரு பக்கம் பத்மலோசனா கனவிலேயே அவளது காதல் கண்ணாளனுடன் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்க,
அவளது தாய் காயத்ரியோ மகளின் வழமையான நிராகரிப்பில் நிம்மதியையும் உறக்கத்தையும்
இழந்து தலையணையில் முகம் புதைத்தபடி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.
அவரது மனவேதனையை குறைக்கும் விதமாக அந்தக் கரமும் தோளை லேசாக அழுத்தி விட
அக்கரத்துக்கு சொந்தக்காரரை அறிந்துக் கொண்டவர்போல் காயத்ரியும் அவரது தோள் வளைவில்
முகம் புதைத்தபடி
"ஐயோ அத்தான் நான் என்ன பண்ணுவேன் ? என் பொண்ணு என்னையே மாற்றாளா பார்க்குறாளே"
வழமைப் போலவே கதறியழ காயத்ரியை சமாதானம் செய்யும் விதமாக,
"காயு எல்லாம் சரியாகும் "என்று ஆறுதலாக அணைத்துக் கொண்டவரை,
சட்டென நிமிர்ந்து பார்த்த காயத்ரியோ,
"எப்போ ! அத்தான் சரியாகும் ? நான் செத்த பிறகா ?சொல்லுங்க "
என்றவர் கண்ணீர் வடித்துக் கொண்டே எழுந்து அமர, அவரை நெருங்கியமர்ந்த சிதம்பரமோ,
"காயு அவ உன்ன மட்டுமா வெறுக்குறா ? நம்ம எல்லாரையும் தானே வெறுக்குறா
எனக்கு மட்டும் அவ அப்பானு கூப்பிடணும்னு ஆசையா இருக்காதா ? என்னைக்கு
என்ன அப்பான்னு கூப்பிடறாளோ அந்தநாள் என் வாழ்நாளின் கடைசிநாளாயிருந்தா கூடச் சந்தோஷமா ஏத்துப்பேன் "
என்று கூற காயத்ரியோ கண் கலங்கியபடி,
"நம்ம கடைசி நேரத்துலயாவது நம்ம பொண்ணு நம்மள ஏத்துப்பாளா அத்தான் ?" என்று கேள்வியாக
நோக்கியவரை இறுக அணைத்துக் கொண்ட சிதம்பரத்தின் முகத்திலோ கவலையின் ரேகைகள்
'அவ பிடிவாதக்காரி எப்படியும் நம்ம செஞ்ச காரியத்துக்கு நம்மள ஏத்துக்குறது ரொம்ப கஷ்டம் காயு '
என்று மானசீகமாகக் காயத்ரியிடம் உரைத்தவரின் கண்களிலும் கண்ணீர் தடம், மனதில் பச்சை
ரணமாய் கடந்தக் காலத்தின் நினைவுகள், இவர்களின் இரவு இவ்வாறு கரைய,
பத்மாவின் காதலுக்கு உரியவனான ஆதித்த அருணனோ நாளை நடக்கவிருக்கும் அரசாங்க டெண்டருக்கான கொட்டேஷன் தொடர்பான பத்திரங்களை ஒழுங்குப்படுத்தி தனது வீட்டிலிருக்கும் சேப்டி
லாக்கரில் வைத்தவன் தனது அறையிலிருந்த சாய்விருக்கையில் அமர்ந்து விட்டத்தை வெறித்திருந்தபடியிருக்க,
அதிகமான வேலைப்பளுவின் நிமித்தம் அவனது உடல் ஓய்வை யாசிக்கச் சாய்விருக்கையில் சாய்ந்தபடியே அவனையுமறியாமல் அவன் கண்ணயர்ந்த நொடி,
"அருண் என்ன காப்பாத்து ஐயோ! அருண் அருண் "என்று பதினைந்து வயது நிரம்பிய,
சிறுமியின் ஓலக்குரல் காதில் ஒலிக்க வியர்வையில் குளித்தபடி அடித்துபிடித்துக் கொண்டு எழுந்தவன்
"நோ நோ" என்று தலையை இறுக பற்றிக் கொண்டு கத்த,
அதே சமயம் "அருண்" என்று அலறியபடியே
கனவிலிருந்து விழித்துக் கொண்ட பத்மலோசனாவோ விழிகளை அங்குமிங்கும் உருட்டியபடி நேரத்தைப் பார்க்கக் கடிகாரமோ மணி மூன்றை காட்டியது. அதைப் பார்த்து விட்டு அப்படியே கட்டிலின் மறுப்பக்கம் புரண்டு படுத்தவள் கண்களோ அவளது மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த அவளது பதினைந்தாவது பிறந்த தினத்தன்று எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தில் பதிய,
அடுத்த நொடியே கட்டிலிலிருந்து எழுந்த பெண்ணவளோ கோபத்துடன் அந்தப் புகைப்படத்தை ஓங்கி நிலத்திலடித்து உடைத்தவள், அந்தச் சிதறிய புகைப்படச் சட்டத்திலிருந்த புகைப்படத்தை மாத்திரம் தனியாகப் பிரித்தெடுத்து தீயிலிட்டு பொசுக்கிய பிறகும் கூட அவளது கோபம் குறைந்தபாடில்லை
எரியும் புகைப்படத்தை உறுத்தபடியே கோபத்துடனும் வெறுப்புடனும் பத்மா அவ்விரவை கழிக்க,
அவளைப் போலவே உறக்கமில்லா இரவைக் கழித்த அருணனுடைய மனநிலையோ அவளுக்கு எதிர்மாறாக
குற்றவுணர்ச்சியிலும் கவலையிலும் தான் கழிந்தது.
யாருடைய மனநிலையையும் கருத்தில் கொள்ளாத கதிரவனோ தனது கதிர்களைப் பரப்பிக் கொண்டு பூமிக்கு வர, பத்மலோசனாவின் இல்லமோ வழமைக்கு மாறாக அன்று பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
பத்மலோசனாவோ அதையெல்லாம் கண்டும் காணாமல் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
பத்மலோசனா, அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் "டாஸ்லிங்" என்னும் நிறுவனத்தில் வேதியியல் ஆய்வகத்தில் வேதியியலாளராகப் பணிபுரிந்து வருகிறாள். சம்பளத்திற்காக வேலைக்கு
போகிறாளோ இல்லையோ மன அமைதிக்காகப் போகிறாள்.
வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி படியிறங்கியவள் கண்கள் நடுக்கூடத்தை ஆராய்ந்தது
அங்கு அவளது தாய்மாமனும் அவரது குடும்பமும் அமர்திருக்க அவர்களை,
உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்தவள் அவர்களைக் கண்டும் காணாது
இருசக்கர வாகனம் நோக்கிச் செல்ல முற்பட,
"லோசனா ஒரு நிமிஷம் நில்லு" என்று அவளது அத்தையின் குரல் ஓங்கி ஒலிக்க,
தனது நடையை நிறுத்திவிட்டு தலையை மட்டும் பக்கவாட்டாகத் திருப்பி விழிகளாலேயே
'என்ன?' என்று வினவ,
அவளது தாய்மாமனின் மனைவி சிவகாமிக்கோ பெருத்த அவமானமாகத் தான் போனது
எட்டு வருடங்களுக்கு முன் அவர்கள் பார்த்த பத்மலோசனாவோ எதைக் கண்டாலும் பயந்து நடுங்குவாள்.
முக்கியமாக இவர்களைப் பார்த்தாலே அடக்கமாய் பெட்டி பாம்பாய் அடங்கிக் கிடப்பாள்.
இவளோ சீறிக் கொண்டு அல்லவா நிற்கிறாள்.
அவளது நிமிர்வில் தனது தன்மானம் அடிப்பட்டு போனதாக எண்ணிய சிவகாமியோ பத்மலோசனாவின்
அருகில் வந்தவர்,
"என்ன லோசனா ?பயம் விட்டுப் போச்சா ? உன் உடம்பு வளர்ந்து நிற்கிறதே நாங்க போட்ட பிச்சைல தான்
நியாபகம் இருக்கட்டும்" என்று ஏகத்துக்கும் நக்கலாகக் கூறியவரை
மேலிருந்து கீழாக ஒரு முறை நோட்டமிட, அவர் உடையிலிருந்த ஆடம்பரமும் கண்களில் மின்னிய ஆணவமுமே கூறாமல் கூறியது. அவர் தன் தவறை எண்ணி ஒருபோதும் வருந்தவில்லையென
அதை நொடிப்பொழுதில் அவதானித்த லோசனாவோ அவரிடம் திரும்பி
"மிசஸ் சிவகாமி சிவசுப்ரமணியம்" என்றதும் திடுக்கிட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தவரை
சொடுக்கிட்டு அழைத்த பத்மாவோ,
"உங்களத்தான் மிஸஸ் சிவகாமி வேற யாரும் இங்கே சிவகாமிங்குற பெயர்ல இருக்காங்களா ? நீங்க மட்டும்தானே சிவகாமி "
என்று நக்கலாக வினவிய பெண்ணைப் பார்த்த சிவகாமியின் கோபம் கரைபுரண்டு ஓட,
"ஏய் உன்ன" என்று கூறியபடி கையோங்கிய சிவகாமியின் கையை வளைத்துப் பிடித்து முறுக்கிய பத்மாவோ
"இங்கே பாருங்க மிஸஸ் சிவசுப்ரமணியம் உங்க பிச்சை காசுல உடம்ப வளர்த்தது அதோ அங்க
நிற்கிறாங்களே அவங்க மூணு பேரும் நானில்ல சோ அவங்ககிட்ட மட்டும் உங்க அதிகாரம்
அரட்டல் உருட்டலெல்லாம் வச்சிக்கோங்க என்கிட்ட வச்சிக்காதீங்க நான் இந்த வீட்டுல
போர்ட்டாகி இருக்கேன் அதனால என்கிட்ட மரியாதையா நடந்துக்கிட்டா ரொம்ப நல்லது"
என்று கூறியபடியே அவரது கையை உதறி விட்டவள் அதே நிமிர்வுடன் தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு தனது வேலைத்தளத்திற்கு சென்றுவிட,
சிவசுப்ரமணியமும் சிவகாமியும் காயத்ரியை பிடிப்பிடியெனப் பிடித்து விட்டனர். காயத்ரியின் மனமோ அவர்களது பாவத்தில் பங்கு கொண்டதால் தானே மகளின் அன்பும் பாசமும் எட்டாக்கனியாகி போய் விட்டது. எனக் கூக்குரலிட தான் செய்தது.,
இருந்தும் தனது அண்ணனையும் அண்ணியையும் பகைத்துக் கொள்ள காயத்ரிக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,
அலுவலகத்திற்கு வந்த பத்மாவிற்கோ உடலெல்லாம் பயத்தில் வியர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. இத்தனை காலமாய் உளிக் கொண்டு செதுக்கிய அவளது மன தைரியம் கூடப் புறமுதுகிட்டு ஓடித் தான் போனது சிவசுப்ரமணியத்தையும் அவரது மச்சான் சண்முகநாதனையும் கண்ட நொடி முதல்,
மீண்டும் என்ன செய்வதென்று தெரியாத கையாறு நிலையில் தவித்துப் போய் நின்றவளை
ஆதரவாகத் தடவிக் கொடுத்தது. ஒரு கரம் அக்கரத்திற்கு சொந்தக்காரியை அறிந்துக் கொண்ட பத்மாவோ,
"வானு எனக்குப் பயாமாயிருக்குடி எனக்கு மறுபடியும் அந்த வலிய அனுபவிக்க உடம்புலேயும் சரி
மனசுலயும் சரி தெம்பில்ல பயமாயிருக்கு உடம்பு உதறுதடி என்னால அந்த வீட்டுக்குப் போக முடியாது "
என்று கதறியழ, வானதியின் மனக்கண்ணுக்கு முன்னால் வந்துச் சென்றதென்னவோ பதினைந்து
வயதான சிறுமியாக வேதனையில் கதறி துடித்த பத்மலோசனாவின் விம்பம் தான் அவளை
இறுக்கி அணைத்துக் கொண்ட வானதியோ,
"பத்து அழாதடி இப்போ என்ன உன்னால அந்த வீட்ல தங்க முடியாது அவ்ளோ தானே
வா என் வீட்டுக்குப் போகலாம் நானும் அம்மாவும் மட்டும் தானே இருக்கோம் உனக்கும்
எந்தப் பிரச்சனையுமில்ல வா "
என்று உறுதியான குரலில் கூற கண்ணில் ஒரு வித அலைப்புறுதலுடன் வானதியை ஏறிட்டவள்
"ரொம்ப தேங்க்ஸ் வானதி நீ மட்டுமில்லன்னா" என்று விம்மியவளை
"அதுதான் நானிருக்கேனே" என்று அணைத்துக் கொண்டவளை பார்த்து
"இன்னைக்கு ஒரு ஹாப் டே லீவ் கேட்டுட்டு என் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருவோமா
ஏன்னா நைட் அந்த வீட்டுக்குப் போகவே எனக்குப் பயாமாயிருக்குடி"
என்று கூறியவளின் தேகம் வெளிப்படையாக நடுங்கியது.
அதைக் கண்டுகொண்ட வானதியோ பத்மாவின் முதுகை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தும்
பத்மலோசனாவின் பயம் குறைந்தபாடில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,
அதே சமயம் அரசாங்க டெண்டரை கைப்பற்றும் நோக்கில் பல தொழில் ஜாம்பவான்கள்
அந்தக் கன்பெரென்ஸ் அறையில் கூடியிருக்க அவர்களையெல்லாம் பொருட்டாகக் கூட
மதிக்காமல் நிமிர்ந்து கம்பீரமான தோற்றத்துடன் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்
தோரணையாக அமர்ந்தவனை ஆழ்ந்து நோக்கியது இருவிழிகள்,
அதையுணர்ந்த ஆதித்தனோ இன்னும் கம்பீரமாகக் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவாரே
அவரை நேருக்கு நேராக நோக்க எதிரிலிருந்தவரோ ஆதித்த அருணணின் ஜாடையில்
காம்பீரமாண தோற்றத்துடன் இருந்தாலும் வயது மூப்பின் காரணமாகச் சில நரைமுடிகள்
மாத்திரம் ஆங்காங்கே எட்டிப்பார்த்தது.
அதை ஒரு வித நக்கலுடன் நோட்டமிட்ட அருணனோ,
"என்ன வேதாச்சலம் சார் வயசாகிருச்சு போல வயாசன காலத்துல எதுக்கு இவ்ளோ சிரமப்படுறீங்க ? எப்படியும் இந்த டெண்டர் உங்களுக்கில்லைன்னு தெரியும் அப்பறோம் ஏன் வீண் அலைச்சல் ?"
என்று புருவத்தை ஏற்றி இறக்க, அருணன் அவரைக் கேலி செய்தாலும் அதைக் கூட ரசித்தது பெற்றவர்
மனம் அவன் ஒரு திட்டத்திற்கான செயல்முறையுடன் வருகிறான் என்று கேள்விப்பட்டால் போதும் அந்த டெண்டர் கிடைக்கிறதோ இல்லையோ மகனின் ஆளுமையை ரசிக்கும் ரசிகனாக வந்து
அமர்ந்து விடுவார்.
இப்போதும் கூட மகனைத் தான்ன் கண்கள் அளவிட்டது எதிரிகளைக் கூறுபோடும் விழிகள் அகன்ற
நெற்றி நேர்த்தியாகவும் சீராகவும் வெட்டப்பட்ட அளவான தாடி அழுத்தமான தடித்த உதடுகள்
கருமாநிற மேனி, திண்ணிய மார்பும் அகன்றிருந்த தோள்பட்டைகளுமாய் கன்னியர் மனதை களவாடும் மன்மதனாய் நின்றவனை பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவருக்கு,
ஓவியர்களுக்கு எப்படி தான் வரைந்த ஓவியம் அழகோ பெற்றவர்களுக்கும் தன் பிள்ளைகள்
எப்படி இருந்தாலும் அழகு தானில்லையா? அவரோ பேசாமல் தன் மகனை ரசித்துக் கொண்டிருக்க,
அவரது நினைவைக் கலைக்கும் விதமாக, அவர் முன் சொடுக்கிட்ட அருணனோ,
"என்ன வேதாச்சலம் சார் உங்க அப்பா வேதநாயகம் ஓதுன குடும்ப கௌரவ மந்திரத்துல
காது செவிடாகிருச்சா ?" என்றான் ஆச்சரியம் கலந்த நக்கலுடன்,
வேதாச்சலத்தின் முகத்தில் சற்று முன்னிருந்த இலகுத்தன்மை மறைந்தது முகம் கருத்து போக
அவனை ஏறிட்டவர்
"மிஸ்டர் ஆதித்த அருணன் நீங்களும் அந்த வேதநாயகம் பேமிலியோட மெம்பர் தான்னு நான் நினைக்குறேன் "
என்பதில் அழுத்தம் கொடுத்தவரை ஒருவித அதிருப்தியுடன் பார்த்தவனோ,
"அது பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி இப்போயில்ல "
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன் அதனைத் தொடர்ந்து அவர் பக்கம் திரும்பாது
மடிக்கணினியில் பார்வையை பதித்தான்.
பத்மாவோ வேலைத்தளத்தில் தலைமை வேதியியலாளனாகப் பணியாற்றும் அசேலவின் அருகில்
நின்றபடி,
"சர் அத மட ஹால்ப் டே லீவ் எகாக் ஒனே "
{சார் எனக்கு இன்னைக்கு ஹால்ப் டே லீவ் வேணும்}
என்றவளை பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்த அசேலவோ
"ரீசன் எக கீவோத் தமா தெனவாத நெத்த கியலா ஹித்தன்ன புளுவாங்"
{காரணத்தைச் சொன்னா தான் லீவை பற்றி யோசிக்கலாம்}
என்றவனை பார்த்து [இனி வரும் உரையாடல்கள் தமிழில்]
" ப்ளீஸ் சார் காரணம் இப்போ சொல்ல முடியாது அர்ஜென்ட்" என்று கண்கலங்கியவள்,
தலையை வருடிக் கொடுத்தவன்
"இங்கே பாரு உனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்ககிட்ட சொல்லு அதைத் தீர்த்து வைக்கத் தான்
நானும் உங்க அண்ணியும் இருக்கோம்"
என்றவனை வானதி கண்களால் எரிக்க அவனோ அதைக் கண்டுக்கொள்ளாமல்
"உனக்காக உங்க அண்ணியும் லீவ் எடுத்துருக்கா கூட்டிட்டு போ" என்றவனிடம் சிறு
தலையசைப்புடன் விடைப்பெற்றவள் வானதியை அழைத்துக் கொண்டு
தனது வீடு நோக்கிப் புறப்பட்டு விட அடுத்த கணமே யாரோ
ஒருவருக்கு அழைப்பையேற்படுத்திய அசேலவோ,
"அவ வீட்ட விட்டு வெளியே வரப் போறா பாஸ்" என்று கூற
"ம்ம் குட் டிசிஸிஷன் இன்னைக்கு தான் நல்ல முடிவெடுத்திருக்கா அவள பத்தி
எப்பயும் அப்டேட் பண்ணிகிட்டேயிரு "
என்று அழைப்பைத் துண்டித்தார். அந்தப் பக்கம் பேசிய மர்ம நபர்,
யாரையும் கவனிக்காது வீட்டிற்குள் நுழைந்த பத்மாவோ யாரோ ஒருவரில் மோதி விழப்
போக அவளது கரத்தை இறுக்கி பிடித்தது ஒரு வலிய ஆண்கரம் அதையுணர்ந்த பெண்ணவளோ
மெதுவாகத் தலையையுயர்த்தி அவரைப் பார்க்க
அது அவன், யாரை அவள் கனவில் கூடக் காண மறுத்தாலோ யாரை உலகில் அதிகம்
வெறுக்கிறாளோ அவன் தான் அவளுடைய ஆரூயிர் நண்பனாகயிருந்து துரோகியாக
மாறிய சிவேஷ்,
முகத்தில் வயதிற்க்கு ஏற்ற முதிர்ச்சி முதுகில் அவளைக் குத்தி சாய்த்தபோது அவன் பழுப்பு நிறகண்கள் பிரதிபலித்த அதே குற்றவுணர்ச்சியுடன் கூடிய மன்னிப்பை வேண்டும் பார்வை, தன்னை சமநிலைப்படுத்திக் கொண்ட லோசனாவோ அவனது கையை உதறிவிட்டு அவனை
கண்களால் அளவெடுக்கத் தொடங்கினாள்.
அடர்ந்த கேசமும் பாதி முகத்தை மறைத்த தாடியுமாய் ஒற்றை காதில் கடுக்கன் வளையமுமாய்
மார்டன் அரக்கனாய் நின்றவனை பார்த்து உதட்டைச் சுழித்தவளோ,
ஒன்றும் பேசாமால் அவனைத் தாண்டிச் செல்ல முற்பட
"குள்ளச்சி சாரிடி" என்ற குரல் அவளை ஒரு நொடி தடுத்து நிறுத்தியது.
அறியாமல் பூக்கும்...