கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு அத்தியாயம் -13
நிரல்யா கண் விழித்து பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.அதுவரை அசந்து தூங்கிக் கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு எழுந்தான்.நிரல்யா விழித்து இருப்பதைப் பார்த்து “தன்வி கண் முழிச்சிட்டியா? உடம்பு இப்போ எப்படி இருக்கு?” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தவன் “ம்ம்… சூடு குறைஞ்சி இருக்கு. “ என்ற பொழுது திரும்பவும் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு “இரு யாருன்னு பார்த்துட்டு வரேன்” என்றான்.
அவளோ கண்ணிமைக்காமல் அவனையேப் பார்த்தாள். சைத்ரன் கதவை திறக்க விடுதியின் பணிப்பெண் மருத்துவரோடு வந்திருந்தாள்.
சைத்ரன் உள்ளே அழைத்து நிரல்யாவை பரிசோதிக்கச் சொன்னான்.மருத்துவர் பரிசோதித்ததில் அவளுக்கு இன்னும் காய்ச்சல் இருப்பதோடு உடம்பு பலகீனமாக இருப்பதால் குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளும் அடுத்து நடந்தது.வந்த பணிப்பெண் சைத்ரனை வெளியே அனுப்பி அவளுக்கு உதவி செய்து தன் காலைக் கடன்களை முடிக்க உதவினாள்.
அப்பொழுது இலக்கியனும் அவனது உதவியாளனும் உள்ளே வந்தனர்.சைத்ரனிடம் இலக்கியன் “என்னாச்சு சைத்ரன் சார் உங்க அறைக்கு டாக்டரை வரச் சொன்னீங்கன்னு கேள்விப் பட்டேன் அதான் என்னன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.
சைத்ரன் நடந்த விவரங்கள் எல்லாவற்றையும் சொன்னான்.அதைக் கேட்டவன் நிரல்யாவைப் பார்க்க உள் அறைக்குச் செல்ல கதவை தட்டினான்.பணிப்பெண் கதவை திறந்து விட்டாள்.அவளுக்கு அதற்கான ஏற்பாடுகள் முடிந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.
நிரல்யா விழித்துக் கொண்டிருந்தாள்.கையில் அந்த கைக்குட்டையை இன்னும் வைத்திருந்தாள்.இலக்கியன் அருகில் அமர்ந்து “இப்போ எப்படி இருக்கு நிரல் நேத்து உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?” என்று அக்கறையாகக் கேட்டான்.
அவளோ “இல்லை” என்று தலையசைத்தாள்.இலக்கியன் நிரல்யாவைப் பார்த்து “ஏன் எதுவும் பேச மாட்டீங்கிறீங்க நிரல்”
அவள் பார்வை எல்லாம் அவன் மீது இருந்தது.மெதுவாக “சார் முதல் தடவை இந்த மாதிரி டிராவல் செய்து வெளியூர் வந்து இருக்கேன் அதான் உடம்புக்கு ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை அதோட இது என்னோட வேலை தான் அதைத் தானே நான் செஞ்சேன்”
அவனோ மறுப்பாக “உங்களுக்கு ஹெல்ப்க்கு யாரையாவது நான் ஏற்பாடு செய்து இருக்கனும் அது என்னோட தப்பு தான் யாமினி மேம்க்கு இந்த விஷயம் தெரிஞ்சால் என் மேல ரொம்ப வருத்தப்படுவாங்க அதோட எனக்கு எப்பவும் உங்க மேல அக்கறை இருக்கு நிரல்” என்றான்.
இதைக் கேட்ட சைத்ரன் அதிர்ச்சியாக இலக்கியனைப் பார்த்தான்.மனதினுள்
‘என்னடா இது நான் ஒருத்தன் இங்கே இருக்கும் போது இவன் வேற ப்ராமான்ஸ் பண்றான் ஐயோ! இவ வேற அவனையே பார்க்கிறா’ என்று பொரிந்துக் கொண்டான்.
உடனே “இலக்கியன் சார் நிரல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்” என்று தற்போது ஒரு தடுப்பு போட்டான்.
உடனே இலக்கியனும் “சரி தான் நிரல் நீங்க ரெஸ்ட் எடுங்க இன்னைக்கு ஷீட்டிங் கேன்சல் ஏன்னா வெளியே ரொம்ப மழையா இருக்கு நாளைக்கு தான் திரும்ப ஷீட்டிங் அதனால நிரலை நான் பார்த்துக்கிறேன் சைத்ரன் சார் நீங்க வேணும்னா என் ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க நைட்லாம் தூங்காமல் இருந்து இருக்கீங்க” என்றான்.
உடனே சைத்ரன் அவசரமாய் “இல்லை சார் நான் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டேன் நிரல் தூங்கவும் நானும் தூங்கிட்டேன் நீங்க நாளைக்குள்ள ஷீட்டிங் வொர்க் பார்க்கலாம்ல நான் ப்ரீ தான் நானே பார்த்துக்கிறேன்” என்றான்.
இலக்கியன் “இல்லை சைத்ரன் சார் எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம் நேத்துல இருந்து நிரலை நீங்க தான் பார்த்துக்கிறீங்க” என்றான்.
இவனோ என்ன பதில் சொல்ல? என்று யோசித்தவன் “ஓகே இலக்கியன் சார் டிரிப்ஸ் ஏத்துனது முடிஞ்சதும் நான் டாக்டர்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு போறேன்” என்றான்.
இலக்கியனும் சரியென்று ஒத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதற்கு முன் நிரல்யாவிடம் “உடம்பை ரொம்ப ஸ்டேயின் பண்ணிக்காதீங்கா நிரல் எப்பவும் எதாவது உதவின்னா என்னை கூப்பிட மறக்காதீங்க” என்று
சொல்லி விட்டுச் சென்றான்.
சைத்ரன் நிரல்யா அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்ந்தான்.நிரல்யா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதைப் பார்த்தவன் “என்னாச்சு தன்வி என்கிட்ட எதாவது சொல்லனுமா?”என்று நேரிடையாக அவனே கேட்டான்.
அதற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தவள் ஆமாம் என்று தலையசைத்து கையில் மறைத்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து அவனிடம் காட்டியவள் “இது உங்களது தானே” என்றதும் அவனுக்கும் அவள் எதற்காக கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன் “ஆமாம்” என்று தலையசைத்தான்.
அவளுக்கோ சந்தோஷமாக இருந்தது.ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அன்னைக்கு பேசி உங்க கைக்குட்டையை கொடுத்தது” என்று அவள் முடிக்கும் முன்னே “ஆமாம் நான் தான் கொடுத்தேன் ஆனால் அங்கே நீ இருந்தேன்னு எனக்கு தெரியாது தன்வி கொஞ்ச நாள் கழிச்சு அதே இடத்துக்கு திரும்ப வரும் போது நீ வெயிட் பண்ணி நிற்கிறதைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.
அவளோ ஆர்வமாய் “ஏன் என்கிட்ட உண்மையை சொல்லலை அன்னைக்கு பேசினது நீங்க தான் சொல்லி இருக்கலாமே?” தன் மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டாள்.
அவனோ விரக்தியாய் ஒரு புன்னகை சிந்தியவன் “தன்வி ஏற்கனவே நம்ம சின்ன வயசு விஷயங்களை சொன்னதே நீ நம்பலை இதுல இந்த விஷயத்தைப் பற்றி நானே சொல்லி என்னை இன்னும் நிரூபிக்க எனக்கு விருப்பம் இல்லை அதனால இதை பெரிதாக நினைக்கலை எப்போ உனக்கு உண்மை தெரியனுமோ அப்போ தெரிந்தால் போதும்னு அமைதியாக இருந்துட்டேன்”என்றான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.'தன்னைப் பற்றியும் தனக்காகவும் ஒருவன் இவ்வளவு யோசிக்கிறானா!’ என்ற எண்ணம் தான் மனம் முழுக்க நிறைந்து இருந்தது.
அவளோ “சாரி ஆ…ஆதித் சார் நான் உங்களை இப்படி அழைச்சா தானே பிடிக்கும் எனக்கு பழசு இன்னும் ஞாபகம் வரலை தான் ஆனால் உங்க மேல நம்பிக்கை வந்திருக்கு என்னை மன்னிச்சிடுங்க யார்னு தெரியாத ஒருத்தியா இருந்தே ஆறுதலா பேசினீங்க இதுல உங்க மேல சந்தேகப்பட்டது தப்பு தான்” என்றாள்.
இதற்கு மேலும் தன் விருப்பத்தை தெரிவிக்காமல் நேரத்தைக் கடத்த அவன் என்ன முட்டாளா? அவனின் மனமோ சிறிதும் யோசிக்காமல் அவளிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கி அருகில் அமர்ந்தவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து “அன்றைக்கு நீ யாருன்னு தெரியாமத் தான் பேசினேன் அதே மாதிரி என்னன்னு விவரம் புரியாத வயதில் இருந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தன்வி அதைச் சொல்லத் தான் இத்தனை வருஷமா காத்திருந்து நீ யாருன்னு தெரிஞ்சதும் என் காதல் எனக்கு திரும்ப கிடைச்சிருச்சுன்னு நினைச்சேன் ஆனால் அது எனக்கானது இல்லையோன்னு நீ சொன்ன பதில்ல நான் கவலைப்பட்டேன் எது எப்படியோ என்னோட காதல் முப்பொழுதும் நீ தான் தன்வி” என்று அவள் அடுத்து என்ன?என்று யோசிக்கும் முன்னே தன் கரங்களால் பெண்ணவளின் இரு மென் கன்னங்களையும் பற்றிக் கொண்டவன் வறண்டு போய் இருந்த இதழ்களை தன் இதழ்களால் பற்றிக் கொண்டான்.
இதழ் மேல் இதழ் வைத்து ஆதிக்கம் செலுத்தாமல் தன்னவளின் இதழோடு இதழ் சேர்த்து தன் அன்பை பரிமாறிக் கொண்டான் மன்னவன்.
சட்டென்று நடந்த அதிர்ச்சி நிகழ்வில் விழிகளை விரித்து என்னவென்று யோசித்து சுயநினைவில் வந்தவளோ அவனை தன்னிடம் இருந்து வேகமாக விலக்கினாள்.
“என்ன பண்ணுறீங்க சைத்ரன்?”
கோபமாகக் கேட்டாள்.
அவனோ எந்தவிதமான பயமும் காட்டாமல் “என்னவளை எனக்கானவளாக மாத்திக்கிட்டேன் எனக்கு வேற வழி தெரியலை உன் பதிலையும் சீக்கிரம் சொல்லு ஏன் என்கூட பழக மாட்டியா? பழகிப் பாரு பிடிச்சி இருந்தால் நம்ம கல்யாணம் செய்து ஒன்றாக வாழலாம்” என்று அடுத்த அதிர்ச்சியையும் உடனே அவளுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாகச் செல்லும் முன்னே குளுக்கோஸின் அளவையும் அவன் கண்கள் மறக்காமல் அளவெடுத்துக் கொண்டதை எல்லாம் அவள் அறிந்துக் கொள்ள வாய்ப்பில்லை தான்.
இதயம் வேகமாக துடித்தது.மூச்சுக் காற்று விட்டு விட்டு வந்தது.அவனிடம் எதுவும் காட்டவில்லை என்றாலும் சட்டென்று ஒரு ஆடவனின் நெருக்கம் அவளை சொல்ல முடியாத உணர்ச்சியில் தள்ளி விட்டது.இனிமேல் அவன் முகத்தில் விழிக்கவே கூடாது என்று தனக்குள்ளே ஒரு முடிவெடுத்துக் கொண்டாள்.
ஆனால் எத்தனை நிமிடங்களுக்கு அது பொருந்தும் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவள்.நேரம் வேகமாக சென்றது. அடுத்த அரைமணி நேரத்தில் வந்து நின்றான் மருத்துவரோடு…
அவர் வந்து குளுக்கோஸ் முடிந்து விட்டது என்பதால் கையில் போட்டிருந்த ஊசி எல்லாவற்றையும் எடுத்து நிரல்யாவையும் சைத்ரனையும் மாறிப் பார்த்தப்படி “இனிமேல் உடம்பை கவனிச்சுக்கோங்க ஹெல்த்தே இல்லாமல் இருக்கு நல்லா சாப்பிடுங்க” என்றதும் சைத்ரன் சிரித்துக் கொண்டே “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் டாக்டர்” என்றான்.
அவரோ சிரித்துக் கொண்டே “ஹீரோ சார் இவங்க உங்களோட சொந்தமா?” என்றதற்கு அவனோ சிரித்துக் கொண்டே “ஆமாம் சின்ன வயசிலிருந்து ப்ரெண்ட்ஸ்” என்றான்.
“அப்போ சரி இந்த மருந்தை எல்லாம் கரெக்ட் டைம்க்கு கொடுத்துடுங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க” என்று நிரலைப் பார்த்து சொல்லி விட்டு அவர் வாசலை நோக்கி நடக்க இவனும் பின்னே சென்றான்.
அதுவரை அவனை பார்க்காதது போல் தலை குனிந்து இருந்தவள் அவன் சென்றதும் திரும்பி வருகிறானா? என்று எட்டிப் பார்த்தாள்.அங்கே யாரும் இல்லை போனவன் அப்படியே வெளியே சென்று விட்டான் போல என்று நினைத்தவள் மனதினுள் ‘'இதுக்கு மேல இங்கே இருந்தோம் அவ்வளவு தான் உடனே எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்’ எனறு முடிவெடுத்தவள் இலக்கியனை கைப்பேசியில் அழைத்து “டைரக்டர் சார் என்னை வேற ரூம் சேஞ்ச் பண்ணுறீங்களா?” என்றதும்
அவனோ “டிரிப்ஸ் முடிஞ்சிடுச்சா? நீங்க இப்போ நார்மலாகத் தானே இருக்கீங்க?” என்று அக்கறையாய் விசாரித்தான்.
அவளோ அவசரமாக “எல்லாம் முடிஞ்சிடுச்சு நீங்க ரூம் மாத்தி கொடுத்தால் நான் மாத்திரையைப் போட்டு ரெஸ்ட் எடுப்பேன்” என்றாள்.
இலக்கியன் அவனுடைய உதவியாளனும் சேர்ந்து சைத்ரன் அறைக்கு அடுத்த அறையில் அவளை மாற்றி விட்டனர்.இதற்கிடையில் நிரல்யா சைத்ரனின் அறையில் இருந்தது அங்குள்ள எல்லோருக்கும் தெரிய வந்தது.இருவருக்கும் ஏதோ தவறான உறவு இருப்பதாக வதந்தியாக பேசப்பட்டது.
சைத்ரன் வருவதற்குள் தனக்கான அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.தூங்கப் போகிறேன் என்று இலக்கியனிடம் சொல்லி விட்டு விழித்துக் கொண்டே நடந்ததை எண்ணியபடி சைத்ரனை நினைத்துக் கொண்டிருந்தாள்.
தன் அறைக்கு திரும்ப வந்தவன் அங்கே நிரல்யாவும் அவளுடைய பொருட்களும் இல்லாததை கவனித்தான்.ஒரு பக்கம் மனமோ அவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் போய் விட்டாளே! என்று கவலைப்பட்டாலும் இன்னொரு பக்கம் நீ செய்த வேலைக்கு அவள் உன்னிடம் சொல்லி விட்டு செல்லவில்லையே குறை வேறா? என்று மாறி மாறி கேள்வி கேட்டது அவன் மனம்.
இப்படியே அன்றைய பொழுது கழிந்தது.நிரல்யா அஸ்வதியிடம் பேச முடியவில்லை.எல்லாவற்றையும் குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டார்கள்.அஸ்வதி அலுவலகத்தில் விடுமுறை கேட்டிருப்பதால் வேலைகளை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.சைத்ரன் அவளிடம் சொன்னக் காதலை மட்டும் அஸ்வதியிடம் சொல்ல வெட்கப்பட்டுச் சொல்லவில்லை.
மறுநாள் சைத்ரன் தன் அறையை விட்டு வெளியே வருவதற்கு முன்னே நிரல்யா மற்றவர்களுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தாள்.அவளுடன் பணிபுரிய அந்த ஊரில் உள்ள ஒரு ஒப்பனை கலைஞரையும் உதவிக்கு வைத்தான் இலக்கியன்.
அங்கே இந்திராவும் வந்திருந்தாள்.அவளுக்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்தாள்.நிரல்யா மற்றும் சைத்ரனின் விஷயம் இவளின் காதிற்கும் அரசல் புரசலாக வந்தது.ஆனால் சைத்ரன் மேல் இருந்த நம்பிக்கையினால் அதை நம்ப மறுத்தாள்.
இருந்தாலும் என்ன நடக்கிறது? என்று அறிந்துக் கொள்ள எண்ணினாள்.படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தான் சைத்ரன்.
நிரல்யாவைப் பார்த்து அவளுக்கு அருகில் போய் அமர்ந்தான்.ஆனால் அவளோ அவனை கவனிக்காதது போல் இந்திராவிற்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவியாக வந்திருந்தவர் சைத்ரனுக்கு ஒப்பனையை ஆரம்பித்தார்.
கண்களை மூடி பேசாமல் அமர்ந்திருந்தவன் சிறிது நேரத்தில் விழிகளை திறந்து நிரல்யா பக்கம் திரும்பி “நிரல்யா பினிஷிங் டச்அப் செய்து விடுங்க” என்றான்.
இந்திராவிற்கு ஒப்பனை முடித்து விட்டதால் வேறு வழியில்லாமல் அவனருகில் வந்து மெதுவாக ஒப்பனையை ஆரம்பித்தாள்.அவன் விழிகள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தன.
அதை அவள் கவனித்தாலும் தெரியாதது போல் நடந்துக் கொண்டாலும் நெஞ்சம் படபடத்தது.ஆனால் கைகள் தன் வேலையை சரியாகச் செய்தன.எல்லாம் முடிந்ததும் “சார் முடிஞ்சிடுச்சு” என்றதும் அவளை ஆழ்ந்து ஓரப் பார்வை வீசியவன் மனதினுள்ளோ ‘என் காதலைத் தானே சொன்னேன் இதுல எந்த தப்பும் இல்லை கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்குவா இல்லை புரிய வைப்பேன்’ என்று நினைத்தபடியே எழுந்துச் சென்றான்.
இந்திராவிற்கும் சைத்ரனுக்கும் நடிக்க வேண்டியது காதல் காட்சியோடு கூடிய பாடல்களும் அதற்கான வசனங்களோடு இருவரும் நடித்துக் கொண்டிருக்க…. நிரல்யாவின் மனம் முழுவதும் நேற்று சைத்ரன் தன்னிடம் நடந்துக் கொண்டதையும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.
இந்திராவுடன் அவன் நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து இவளுக்கு கோபமாக வந்தது.அதை பார்க்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டாள்.அதை யார் கவனித்தார்களோ இல்லையோ? பார்வை முழுவதும் அவள் மீது வைத்திருந்த சைத்ரன் அதைக் கண்டுக் கொண்டான்.
இதழில் தோன்றிய புன்னகையை மறைத்தவன் குறும்புப் பார்வையோடு இந்திராவுடன் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நடித்துக் கொண்டிருந்தான்.
எதற்கும் இன்னொரு முறை திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்? என்று எண்ணியவள் திரும்பிப் பார்த்தாள்.அங்கே இருவரும் முத்தம் தருவதற்காக நெருங்கி வந்துக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்ததும் நிரல் அதிர்ச்சியில் அப்படியே விட்டால் அழுது விடும் நிலையில் இருக்க இலக்கியன் “கட் கட்…. சூப்பர் சூப்பர் சார் செம ரொமான்ஸ் பின்னிடீங்க உங்க பார்வையிலே அப்படி காதலை காட்டினீங்க பாருங்க அங்கே இருக்கீங்க சார்” என்று கையைத் தட்டி உற்சாகப்படுத்தினான் இலக்கியன்.அவனோ சிரித்துக் கொண்டே “தாங்க்யூ சார்” என்று சொல்லி விட்டு நிரல்யாவைப் பார்த்தான்.
நடப்பதை எல்லாம் பார்த்து ‘சைத்ரன் தன்னோடும் இப்படித் தான் நடித்து இருப்பானோ?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே விழிகளில் கண்ணீர் நிரம்பியிருக்க மெதுவாக அவள் அருகில் வந்தவன் துண்டு எடுப்பதைப் போல் குனிந்தவன் அவள் காதோரமாய் “இதே மாதிரி தானே உன்கிட்டயும் நான் நடிச்சேன்னு நினைக்காதே தன்வி, எதுல உண்மையான காதல் இருக்குன்னு கண்டுபிடிக்க தெரியாத பெண் நீ இல்லை” என்று அவளை அவன் பார்க்கும் பார்வையில் புரிந்துக் கொண்டாள்.சட்டென்ற தன் விழிகளில் தெரிந்த மாறுதலை அறிந்து அவளுக்கு சமாதானம் சொல்லும் தன்னவனின் அக்கறையை எண்ணி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
சைத்ரன் தன் நாற்காலியில் உட்கார்ந்து அடுத்த காட்சிக்கான வசனங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் வந்து அமர்ந்த இந்திரா சைத்ரனிடம் “சைத்ரன் ஷீட்டிங் முடிஞ்சதும் வெளியே எங்கேயாவது போய்ட்டு வரலாமா? கிளைமேட் நல்லா இருக்கு” என்றதும் அவனோ அவள் புறம் திரும்பாமல் “வேற ஒரு கமிட்மெண்ட் இருக்கு அதனால வர முடியாது” என்றான்.
இந்திராவால் அதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த முடியவில்லை.அதனால் அமைதியாக சென்று விட்டாள்.படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் அவர்களுக்கான அறைக்குச் செல்லும் நேரம் நிரல்யாவும் தன் அறைக்கு வரும் பொழுது ஒரு கரம் வந்து அவளைப் பிடித்து இழுத்தது.
யாரென்று திரும்பிப் பார்த்தால் அங்கே சைத்ரன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.இவளோ சத்தம் இல்லாமல் மெதுவாக “இப்போ எதுக்காக என் கையைப் பிடிக்கிறீங்க?”
அவனோ “என்னோடு வா” என்று அவளுடைய சம்மதம் இல்லாமலேயே தன்னுடன் அழைத்துச் சென்றான்.நிரல்யா பதறியபடி “ப்ச் ஆதித் யாராவது பார்த்தால் நம்மை தப்பா நினைப்பாங்க”
“இருக்கட்டும் பார்த்தால் என்ன நான் உண்மையைச் சொல்லுவேன் நான் என் தன்வியை காதலிக்கிறேன்னு ” என்றான் காதலோடு…
அவனின் பதிலில் ஆடிப் போனவள் “என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்றாள் நாணலோடு….
“எதுவும் நினைக்க மாட்டாங்க தன்வி அப்படியே நினைச்சா என்ன காசா பணமா போகட்டும் இது உன்னோட லைவ் அதைப் பற்றி மட்டும் யோசி மற்றவங்க என்ன நினைப்பாங்கன்னு பார்க்க ஆரம்பித்தால் கடைசில ஒன்னும் இருக்காது” என்று பேசியபடி இவர்களின் பயணம் தொடர்ந்தது.
அங்கே நடந்துப் பார்வையிடக் கூடிய இடங்களை சுற்றிப்பார்த்தபடியே அவள் கேட்கமாலேயே அங்கே சாப்பிட எல்லாம் வாங்கி கொடுத்தான்.
அவளோ “எதுக்கு இப்போ இதெல்லாம் வாங்கி தர்றீங்க? வேண்டாம் ஆதித் சார்”
அவனோ அதற்கும் புன்னகை ஒன்றை சிந்தியபடி “நான் தானே சொன்னேன் நம்ம ரெண்டுபேரும் பழகிப் பார்க்கலாம்னு அதான் நமக்கான நேரத்தை ஒதுக்கினால் தானே என்னைப் பற்றியும் நீயும் உன்னைப் பத்தி நானும் பேசிப் புரிஞ்சுக்கலாம் அப்புறம் உன் முடிவை சொல்லு” என்றதும் இவளோ நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.
உடனே பார்வையில் குறும்புத் தனத்தோடு “நோ டச்சிங் ரூல் தான் ஆனால் இதுக்கு மட்டும் தடையில்லை” என்று தன் கரங்களை தன்னவளின் கரங்களோடு கோர்த்துக் கொண்டான்.அவன் சொன்ன வார்த்தையின் படியே சரியாக நடந்துக் கொண்டான்.இந்த மாதிரி வெளியே தன்னை மட்டும் விரும்பும் ஒருவனோடு வருவது எல்லாம் நிரல்யாவிற்கு புதியதாக இருந்தது.அதோடு இவை எல்லாம் அவளுக்கு அழகான நினைவுகளைத் தந்தது.
இப்படியே பகலில் படப்பிடிப்பும் இரவில் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.இரவு நேரமாக இருப்பதால் இலக்கியன் நிரல்யாவை அவன் தொந்தரவு செய்யவில்லை.அஸ்வதியிடம் திரும்ப கைப்பேசியில் பேச வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அவளால் சரியாக பேச முடியவில்லை.குறுஞ்செய்தியிலும் சைத்ரனும் நிரல்யாவும் பேசிக் கொண்டார்கள்.
சொந்த ஊரில் இருக்கும் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் உடனிருந்து கவனிக்க ஐந்து நாட்கள் திருச்சி சென்று இருந்தாள் அஸ்வதி.அதற்குப் பிறகு தான் தன்னால் அந்தமான் வர முடியும் என்று முடிவோடு சொல்லி விட்டாள் அஸ்வதி.அதனால் தனிமையில் இல்லாமல் தன்னவனோடு அந்தமான் தீவினை இரவில் சுற்றிப் பார்த்தாள்.
நான்கு நாட்கள் கழித்து படப்பிடிப்பு சூரிய உதயத்திற்கு முன்பே ஆரம்பித்து விட்டது.அதனால் அன்று எல்லோருக்கும் நண்பகலிருந்து விடுமுறையைக் கொடுத்தான் இலக்கியன்.
அவன் அன்று அறிவிப்புக் கொடுத்ததும் சைத்ரன் நிரல்யாவின் கைப்பேசியில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினான்.
அவர்கள் எப்போதும் சந்திக்கும் விடுதியின் பின்பக்கம் உள்ள உணவகத்திற்கு வரச் சொன்னான் சைத்ரன்.இவளும் அவன் சொன்ன இடத்திற்குச் சென்றாள்.
அங்கே அவளுக்காக காத்திருந்தவன் நிரல்யா பார்த்ததும் “தன்வி இன்னைக்கு இந்த உலகத்தை விட்டு நாம இன்னொரு உலகத்தைப் போய் பார்க்கலாம்” என்றான்.
அவளோ புரியாமல் அவனைப் பார்த்து “என்னச் சொல்லுறீங்க?புரியலை” என்றாள்.
அவனோ புன்னகைத்துக் கொண்டே “என் மேல நம்பிக்கை இருக்குல்ல வா போகலாம்” என்று கையை நீட்ட அவளோ எதைப் பற்றியும் யோசிக்காமல் அவன் கரங்களோடு கோர்த்துக் கொண்டாள்.
இந்த ஒருவாரத்தில் அவனை வேறொருவராக அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இருவருமாக அந்தமானில் இருக்கும் நார்த் பே பீச்சிற்கு சென்றனர்.நீர் விளையாட்டுக்கு சிறந்த இடமான இங்கே ஆசியாவிலேயே கடல் நடைப்பயிற்சிக்கு சிறந்த இடமாகும்.இந்த நடவடிக்கைக்கு நீச்சல் பற்றி தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை கண்ணைடி ஹெல்மேட் கீழ் சுவாசிக்கலாம் இது பாதுகாப்பானது மற்றும் தொந்தரவு செய்யும் காற்று அழுத்தம் இல்லாததால் இது ஏதுவாக இருக்கும்.
நார்த் பே பீச்சில் கடலுக்கு அடியில் நடந்து இறுதியில் ஆக்டோபஸ் கார்டனை பார்வையிடலாம்.நீங்கள் இதுவரை பார்த்திராத கடல்வாழ் உயிரினங்கள் உங்களுக்காக அங்கே நீந்திக் கொண்டிருக்கும்.
அவன் கடலுக்கு அடியில் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.அவளை சமாதானம் செய்யத் துவங்கினான் சைத்ரன்.
“எனக்கு நீச்சல் தெரியாது ஆதித் சார் பயமா இருக்கு நான் வரலை” என்றாள் பயத்தோடு…
“உனக்கு தெரியலைன்னா என்ன? எனக்கு தெரியுமே நான் உன் கையை இதோ இப்படி கெட்டியா பிடிச்சுக்கிறேன்” என்று அழுந்த கரங்களை பிடித்துக் கொண்டான்.
அவன் கொடுத்த நம்பிக்கையில் இருவரும் ஒன்றாக கடலுக்கு அடியில் சென்று நடந்தனர்.முதலில் பயத்தினால் அவனையே பிடித்துக் கொண்டவள் கடலுக்கு அடியில் ஒரு அழகான உலகத்தைக் கண்டவள் அப்படியே தன்னையே மறந்தாள்.
நீலநிறக் கடலில் நீந்திச் செல்லும் வண்ணமயமான மீன்களும் இதுவரை பார்த்திராத அரிய வகை உயிரினங்கள் நீந்தும் அழகோடு கண்ணைக் கவரும் பவளப் பாறைகளும் அதன் மேல் ஒட்டியிருக்கும் உயிரினங்களைப் பார்த்து எல்லாமே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த உலகத்தில் அழகான இன்னொரு உலகமும் இருப்பதை அவள் அறிந்துக் கொண்டாள்.அழகு மீன்களை தொடும் ஆர்வத்தில் முன்னால் நடந்துச் சென்று அதை அப்படியே தொட்டு இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே நேரம் வேகமாக கடந்தது.எல்லாம் பார்த்து முடிந்து மேலே இருவரும் வந்து கடற்கரை மணலில் அமர்ந்திருந்தனர்.அங்கே எதுவும் பேச முடியாததால் இங்கே சைத்ரன் நிரல்யாவிடம் “எப்படி இருந்துச்சு தன்வி? உனக்கு பிடிச்சு இருக்கா?”
அவளோ அவனையேப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அமைதியா இருக்கே பிடிக்கலையா?” என்றதும் சட்டென்று அவனே எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்துக் கொண்டவள் “இந்த மாதிரி ஒரு உலகம் இருக்குன்னே எனக்கு தெரியாது எவ்வளவு அமைதியா அழகா இருந்துச்சு தெரியுமா? அந்த மீன்களைப் பார்க்கும் போதே நானும் இதே மாதிரி மீனாக இருந்திருந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சேன்” என்றாள்.
அவளின் அணைப்பு அவனுக்கு பதிலுரைத்தது.இருந்தாலும் அவளிடம் “அவ்வளவு தான் பிடிச்சு இருந்துச்சா?” ஏக்கமாய் கேட்டான்.
அவளோ நாணலோடு “இந்த உலகத்தை இன்னொரு வகையில் அழகா காட்டின உங்களையும் ரொம்ப பிடிச்சு இருந்தது ஆதித்” என்றாள்.
அவள் சொன்னதை நம்ப முடியாமல் தன்னவளின் நாடிப் பிடித்து உயர்த்தி தன் முகத்திற்கு அருகே கொண்டு வந்தவன் விழிகளாலே “உண்மையாகவா” என்றதற்கு இவளும் விழிகளாலே “ஆமாம்” என்பது போல் இமைகளை மூடித் திறக்கவும் மகிழ்ச்சியில் திளைத்தவன் தன்னவளின் இதழ்களை அழுந்தப் பற்றிக் கொண்டான்.
இம்முறை அவள் அவனை விலக்கி விடவில்லை.அவன் தந்த அன்புப் பரிசு முத்தத்தை முழுதாய் ஏற்றுக் கொண்டாள்.
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாமல் நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்….
சைத்ரனைப் பற்றிய சிறுவயது நினைவு நிரல்யாவிற்கு வரவில்லை என்றாலும் இப்பொழுதுள்ள அவனை அவள் முழுதாக ஏற்றுக் கொண்டது.அவனுக்கும் நிறைவாக இருந்தது.அந்த கடற்கரையிலேயே தன் மார்பில் தன்னவளை அன்பாய் தலை சாய்த்தி வைத்திருந்து இருவரும் எதிரே இருந்த கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அங்கே ஒரு ஜோடிக் கண்கள் அவர்கள் இருவரையும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது.
இருவரும் தங்களது அறைக்குள் சென்றனர்.அப்பொழுது சைத்ரனின் கைப்பேசி அழைக்க யாரென்று எடுத்துப் பார்க்க புது எண்ணாக இருந்தது. யாராக இருக்கும் பேசலாம் என்று அழைப்பை எடுத்தவன் “ஹலோ” என்றதும்
மறுமுனையில் சிரிப்பு சத்தத்தோடு
“ஹலோ ஆதித் சைத்ரன் ரொம்ப சந்தோஷமா இருக்க போல? என்னை இந்த நிலைமைக்கு தள்ளி விட்டுட்டு நீ மட்டும் நிம்மதியா இருக்க உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியோ?விட மாட்டேன் கூடிய சீக்கிரம் உன் நிம்மதி எல்லாத்தையும் இழக்கப் போற”என்றதும்
இவனோ “ஹலோ யாரு? யாரு?” என்று கேட்கவும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
https://www.narumugainovels.com/threads/10830/post-24708