மகரனும் மங்கையும்

தேவ்ப்ரயாக்....
பிண்டர், நந்தாகினி, மந்தாகினியையும் தன்னுடன் இணைத்து கொண்டு கங்கையாக உருவெடுக்கும் ஆர்வத்துடன் மலைகளை சுற்றி சாந்தமாக மண்ணிறத்தில் வழுக்கி கொண்டு வந்தாள் அலக்நந்தா. அவளுக்கு மேற்கு புறத்தில் பகீரதனின் தவத்தில் சிவனின் சடையில் விழுந்து இமயத்தின் கோக்முக் க்ளாஸிரிலிருந்து உருவாகி தீவிர கதியுடன் மரகத நிறத்தில் பாய்ந்து விழுந்து எழுந்து வந்தாள் பகீரதி.
இரண்டு நதிகளும் சங்கமித்து கங்கையாக உருமாறும் புண்ணிய பூமி தேவ்ப்ரயாக்.
அந்த நதிகளின் சங்கமத்தின் பின்னிருந்த மலை உச்சியில் நின்றவாறு பார்த்து கொண்டிருந்தான் அவன். ஆறடி உயரம் அழகிய உருவம் என்ற பாடலுக்கு என்றே பிரம்மன் அவனை படைத்தது போல் நின்றிருந்தான், அவன் உபமன்யு.
தாயை தொலைத்த குழந்தையாய் அந்த அழகிய கூர் விழிகளில் ஏதோ சோகம் எதிரே தோன்றிய கங்கை போல் கரை புரள, அஸ்தமித்த சூரியனாய் முகமிருக்க பகீரதியை நோக்கி இறங்கினான். அக்கம் பக்கத்தில் போவோர் வருவோர் சற்று வித்தியாசமாக பார்த்து வைத்தனர். எதையும் சாட்டை செய்யாமல் அசட்டையாக நடந்தான்.
பின் தை மாதத்தின் பூரணை சந்திரன் முழு பிரகாசத்துடன் நடுவானை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க குளிர் எலும்பையே ஊடுருவியது. அவனோ வெறும் மேலின் மேல் சால்வையை மட்டும் போர்த்துக் கொண்டு நடந்தால் பிடித்து மெண்டல் ஹோஸ்பிடலில் சேர்க்காததே அதிசயம்.
பகீரதி அலக்நந்தாவுடன் சேர முன் உள்ள இடத்திலிருந்து நீரை இரு கைகளாலும் அள்ளி பருகினான். நதியில் நீந்திய மீன்கள் அவனை அடையாளம் கண்டது போல் கைகளில் தாவி விளையாட சிறு குழந்தையின் குறும்பாய் அதை ரசித்தவன் கண்களிலும் உதட்டிலும் விரியாத சிறு முறுவல். அதை தாண்டி நடந்து கங்கையின் தீரத்தை அடைந்தவன் குனிந்து கங்கையை தொட போனவன் வேகமாக கைகளை இழுத்து கொண்டான். சிறிது நேரம் மண்டியிட்டவாறு கங்கையையே பார்த்திருந்தான்.
அவன் கண்களிலும் கங்கை உருவாக அப்படியே நிலத்தில் விழுந்து வணங்கி அழைத்தான் "அம்மா" சலனமின்றி ஓடினாள் கங்கை.
மீண்டும் அழைத்தான் "அம்மா..... " கன்றின் தீனமான அலறலாய் ஒலித்தது அவன் குரல். சட்டென கங்கையில் ஒரு சலனம், உலகுக்கே அன்னை அவள் அந்த அழைப்பில் நின்றுவிட்டாள் போலும் எண்ணும் வண்ணம் அவனிருந்த பத்து மீட்டர் விட்டத்துள் கங்கையில் அசையவில்லையோ. "அம்மா நீயும் வெறுத்துவிட்டாயா இவனை, எத்தனை காலமானாலும் மன்னிப்பு இல்லையா? உன் மகன் இல்லையா?" கரையில் ததும்பிய கங்கை நீரை விட அவன் குரல் தளும்பியது அடைத்த சோகத்தில்.
சட்டென கங்கையில் ஓர் அசைவு சென்ற கங்கை நீர் எதிர் திசையில் பாய்ந்து அவனை நனைத்து துளிகளாக இல்லை வெள்ளமாக, தீடிரென வெள்ளமாக அவன் மேல் பாய்ந்த கங்கையின் நீரில் முழுதாக நனைந்தவன் நடுங்கவில்லை விறைக்கவில்லை கண்களில் ஆனந்த நீர் வழிய மனமும் முகமும் மலர புன்னகைத்தான். உதய சந்திரனுக்கு போட்டியாக இருந்தது அவனது புன்னகை முகம்.
மீண்டும் வணங்கியவன் "நன்றி தாயே நன்றி உன் ஆசிர்வாதத்தை விட வேறேது வேண்டும் அநீதியை அழிக்க, இது ஒன்று போதும் எனக்கு உன் மகன் மீண்டும் உன்னை சந்திப்பான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது எனக்கு" என்றவாறே எழுந்தது அங்கிருந்து நகர்ந்தான்.
அதுவரை அசைவின்றி இருந்த கங்கை அலையாய் கரையிலிருந்து உயரமாய் அவன் மண்டியிட்டிருந்த இடத்தை தடவி சென்றது.
அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். உபமன்யு அங்கிருந்து செல்லவும் கங்கை கரைக்கு வந்தவன் “நானும் பார்க்கின்றேன் என்னை மீறி எப்படி செய்து முடிப்பான் என்று” எக்காளமிட்டான். அவனைப் பார்த்தால் சாதாரண நவநாகரீக மனிதனை போல்தான் இருந்தான்.
அவன் எக்காளத்தில் திடிரென எழுந்த கங்கையின் நீர் கத்திபோல் மாறி அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. சட்டென விலக அந்த நீர்வாள் நிலத்தில் விழுந்து துளிகளாய் சிதறியது. சிதறிய சில துளிகள் அவன் உடலிலும் படவே திராவகம் பட்டது போல் எரிந்தது.
அனைவர் பாவங்களையும் கரைக்கும் கங்கையே எரிக்க நினைக்கும் அளவு பாவியா அவன்.
“எனக்குத் தெரியும் உன்னால் அவனுக்கு உதவ முடியாது, அவன் முத்தை எடுக்கமால் ஓய மாட்டான் இந்த பைரவன்” மார் தட்டிக் கூறினான் “அவள் பிறந்துவிட்டாள். அவளைக் கண்டு பிடித்துவிட்டேன் ஹாஹாஹா” அந்த இரவில் அவன் சிரிப்பு தேவ்ப்ரயாக்கையே ஊடுருவியது.