Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 28
மூடப்பட்ட கதவுக்கு வெளியில் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்தான் சித்தார்த். உள்ளே மதுவுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அவளுக்கு இருக்கும் நீரிழிவு நோயும், அதீத இரத்த அழுத்தமும் சேர, இரத்தின் சர்க்கரை அளவு அதீதமாகக் குறைந்து மயக்க நிலைக்குத் தள்ளியது. பொதுவாகவே அவளுக்கு அதீத பயம் மற்றும் குழப்பம் இருந்தால் மயக்கம் வரும் தான் ஆனால் தண்ணீரைத் தெளித்தால் எழுந்துவிடுவாள் விரைவில் இயல்புநிலை திரும்பிவிடும்.
ஆனால் இன்று அவன் தண்ணீர் தெளித்து எழுப்பியும் அவள் எழுந்து கொள்ளவில்லை. நிமிடங்கள் கடக்க, அவன் பயிற்சியின்போது கற்றுத்தந்த முதலுதவிகளை செய்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துவந்திருந்தான் சித்தார்த்.
மருத்துவர் “ரொம்ப டென்சன் ஆகிட்டாங்க போல அதான் பிரஸர் ஜாஸ்தியாகி மயங்கிட்டாங்க. எழும்பவே இல்ல சி.பி.ஆர் தான் பண்ணனும். ஐ.சி.யூக்கு கொண்டு போங்க” எனக்கூறி, இங்கு நேர தாமதப்படுத்தாமல் சிகிச்சையை ஆரம்பித்தனர்.
அதே மருத்துவமனைக்கு அகிலாவை சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்த அஸ்வந்த் ஸ்டெச்சரில் யாரையோ அழைத்துச் செல்ல, பின்னாலே சென்ற சித்தார்த்தைப் பார்த்தான். அவனுக்கும் சிந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறாள் எனதெரியும். அதனால் அவளுக்குத் தான் பிரச்சனையென நினைத்தான்.
அகிலா அவளது பரிசோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வர, அஸ்வந்த் தான் பார்த்ததைக் கூறினான். “என்னனு பார்த்துட்டு வருவோமா? சித்தார்த் அண்ணன் மட்டும் போராருனு சொல்ற. எதுவும் உதவி தேவைப்பட்டா?”
“ஆமா அப்படியே அவன் நம்ம கிட்ட பேசிடுவான்”
“அவர் பேசலனா போறாரு. நம்ம பார்த்துட்டு என்னனு கேட்டுட்டு வருவோம். பாத்துட்டு பாக்காத மாதிரி போக ஒரு மாதிரி இருக்கு. பாவம் அவளுக்கும் இப்படி ஆகிடுக்க கூடாது. உங்க அத்தை இருந்தா தான் ரொம்ப ஆடும் சித்தார்த் அண்ணா தான ஒன்னும் சொல்லமாட்டார்”
“சரி வா.. என்ன பண்ணிடுவான் நம்மள.. பார்த்துக்கலாம்” என அகிலாவை அழைத்துக்கொண்டு சித்தார்த் சென்ற திசையில் அவனைத் தேடிக் கொண்டுவர, ஐ.சி.யூ வாசலில் நடந்து கொண்டிருந்தான்.
“என்ன இவன் ஐ.சி.யூ வாசல்ல நிக்கிறான்? அந்தப் புள்ளைக்கு தான் ஆபரேஷன் பண்ணி மூணு நாள் ஆச்சே.. இந்நேரம் ரூம்க்கு மாத்திருப்பாங்க.. எதுக்கு ஐ.சி.யூ?”
“வாங்க போய் என்னனு கேட்கலாம்” என அவனை நோக்கி வந்தனர். அவனோ ஐ.சி.யூ வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தான். அதீத பதட்டத்தில் இருந்தான். அவள் மூர்ச்சையானதிலிருந்து அவன் உயிர் அவனிடம் இல்லை. இருக்குற எல்லா தெய்வத்தையும் நினைத்துக்கொண்டு நின்றான்.
அவள்மீது அவன் கொண்ட கொள்ளை காதலில் தீடீரெனக் குண்டைத் தூக்கிப்போட்ட மாமன் குடும்பத்தை எதிர்த்து அவளைத் திருமணம் செய்து கொண்டதை தவிற என்ன செய்துவிட்டான் அவனும். அவனுக்குத் தெரிந்தது அந்த இரு குடும்பம் மட்டும் தானே. தன் மாமன் குடும்பத்தோடு தன்னிடம் மறைத்துத் தன் உயிரானவளை தன்னிடமிருந்து பிரிக்க முற்பட, அவளைக் கைப்பற்றித் தன் வீட்டுக்கே சென்றுவிட்டான். என்ன இருந்தாலும் அவர்கள் தாய் தகப்பனல்லவா அதனால் தன் வீட்டுக்கே சென்றான். ஆனால் அது எப்படியான மகாபிழை என்பதை இப்போது கண்கூடப்பார்க்கிறான். தன்னை நினைத்தே நொந்து கொண்டிருந்தான். தனியாகத் தத்தளிக்கும் படகு போனற மனநிலையில் இருந்தவனுக்கு,
“சித்தார்த்” என அஸ்வந்தின் அழைப்பில் ஏதோ ஒரு பிடிப்பு கிடைத்தாய் தோன்ற, அவன் கோபம், மனஸ்தாபம் எல்லாம் மறந்து அவனைத் தாவி அணைத்துக்கொண்டான். அஸ்வந்துக்கு என்னனு புரியவே இல்லை ஆனால் அவன் தோளில் ஈரம் உணரவும் தான் சித்தார்த் அழுகிறானெனத் தெரிந்தது. அவனைத் தன்னிடமிருந்து பிரித்து,
“என்னடா என்னாச்சு எதுக்கு அழற? சிந்துக்கு என்னாச்சு நல்லா தான இருக்கா?”
“தா.. தாராக்கு தான்” எனத் திக்கிக் தினறிக் கூற இப்போது அதிர்ந்தது அஸ்வந்தும், அகிலாவும்.
“ஏய் மதுக்கு என்னடா ஆச்சு?”
“மயக்கிட்டா”
“மயங்கிட்டாளா? ஏன்?”
“அ.. அம்மா சண்டை போட்டு மயங்கிட்டா”
“அதுக்கெல்லாம் அவ மயங்க மாட்டா என்ன நடந்துச்சு சொல்லு? என் தங்கச்சிய என்ன பண்ணிங்க அம்மாவும் மகனும் சேர்ந்து?” எனச் சித்தார்த்தின் சட்டையை ஏற்றிப் பிடித்துவிட்டான் அஸ்வந்த்.
அகிலா “என்னங்க விடுங்க அவரே அழுறாரு நீங்க வேற விடுங்க” எனப் பிரித்துவிட்டவள்,
“என்னாச்சுண்ணா?”
“தெரியல.. என்னனு தெரியல.. ஏன் சண்டைனு தெரியல.. நான் இப்போ தான் கோயம்புத்தூர்ல இருந்து வந்தேன். வீட்டு வாசலுக்கு வரும்போதே அம்மாவும், தாராவும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க.. நான் வந்ததும் தாரா என்னென்னவோ சொல்லிட்டு மயக்கமாயிட்டா.. எழுப்பினேன் எழும்பல”
அகிலா “டாக்டர் என்ன சொன்னாங்க?”
“சிபிஆர் பண்ணனும்னு சொன்னாங்க” எனத் தளர்ந்து அமர்ந்தான்.
அகிலா “சி.பி.ஆரா” என அதிர்ந்து பார்க்க,
அஸ்வந்த் “இதெல்லாம் நடக்கும்னு தான் நாங்க உனக்குக் குடுக்க வேணாம்னு இருந்தோம். பெரிய இவனாட்டாம் ஹீரோயிஷம் காட்டி கட்டிக்கிட்டா பத்தாது.. அவளைச் சரியா கவனிச்சிருக்கனும். விட்டுட்டு ஓடிருக்க கூடாது.. அதுவும் அவள பிச்சித்திங்க காத்திருக்கும் கழுகுக கிட்ட விட்டுட்டு போயிருக்க கூடாது” எனப் படபடவெனப் பேசினான்.
“என்னங்க இத பேச வேண்டிய நேரமா இது? முதல்ல அத்தை கிட்ட மெதுவா சொல்லி வரச் சொல்லுங்க. மாமாக்கு இப்போதைக்கு சொல்ல வேணாம்” எனக்கூற, அகிலாவை ஏறிட்டு பார்த்தான் சித்தார்த். அவனுக்குத் தான் அன்புவின் உடல்நிலை பற்றிய விபரமே தெரியாதே!
“ஹ்ம்ம்” என அஸ்வந்த் வீட்டுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான். ஈகையோ மகளுக்கு முடியவில்லை என்ற பதற்றத்தில் அன்புவிடமும் கூறி அவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டார்.
ஆனந்தி மதுவிடம் ஆத்திரத்தில் சண்டை போட்டுவிட்டார். அதை மகன் பார்க்கவும் தன் தவறை மதுவின் பக்கம் திருப்ப இட்டுக்கட்டிப் பல கதைகளைக்கூறி மகனைத் தன்பக்கம் இழுக்கப்பார்த்தார் ஆனால் மதுவுக்கு இப்படி ஆகுமென அவரும் நினைக்கவில்லை.
பயந்துவிட்டார். அதுவும் கூட அவளுக்கு என்னாகுமோ என்று இல்லை. அவளைப் பேசிவிட்டதால் தன் கணவரும், மகனும் தன்னை என்ன செய்வார்களோ எனத்தான் பயந்தார். உடனடியாக அங்கிருந்து கிளம்பி சிந்துவிடம் வந்துவிட்டார் அவருக்கு அதே மருத்துவமனையில் தான் மகன் மதுவை சேர்த்திருக்கிறானெனத் தெரியாது.
நேராகச் சிந்து இருக்கும் அறைக்குச் சென்றார். அவர் வரவும் சிந்து மாமியாரும் வீட்டுக்குக் கிளம்பிவிட, அவரின் பதட்டமான முகத்தைப் பார்த்து “இன்னாம்மா உன் முகமே சரியில்ல? இன்னா?”
“ஒன்னுமில்லடி”
“இல்லையே இன்னமோ சரியில்லையே? இன்னானு இப்போ சொல்றியா என்ன?”
“அது அந்தச் சீக்குக்காரிக்கிட்ட சண்டை கட்டினேனா அப்போ சித்தார்த்து வந்துட்டான். இவ அவே வரவும் மயக்கம் போட்ட மாதிரி வேற ஆக்ட்வுட்டு கவுத்திட்டா அவன.. அவேனும் என்னைய முறச்சுட்டே அவள இட்டுக்கினு ஆஸ்பத்திரிக்கு போனான். உங்கப்பன் வந்து இன்னா ஆட்டம் ஆடப் போறானோ.. அவேன் வந்து இன்னா ஆட்டம் ஆடப் போறானோனு அல்லுவிடுது எனக்கு”
“இப்போ இன்னாத்திக்கு நீ மதுவாண்ட சண்டைகட்டின?”
“அவளால தாண்டி உனக்கு இப்படி ஆச்சு. அவ கண்ணுல வச்சு வண்டா பறத்திட்டா உன்னைய அதேன்..”
“இன்னாம்மா நீயி. நானே அவள கஷ்டப்படுத்தினதுக்கு தான் அனுப்பவிக்கிறேன். இப்ப திரும்ப இப்படி பண்ணிட்டு வந்துக்கின நீ”
“வுடுடி சனியன் தொலையட்டும்”
“அண்ணே அப்பா வந்ததுக்கு அப்பால இருக்கீது உனக்கு”
“எனக்கே ஜெர்க்காக்கீது நீ வேற” என அவரும் இதே மருத்துவமனையில் தான் இருந்தார்.
இதற்கிடையில் அன்புவும், ஈகைசெல்வியும் மருத்துவமனை வந்துவிட்டனர். அன்பு அறக்க பறக்க ஓடிவந்தார்.
அன்பு “அஸ்வந்த் மது மதுக்கு என்னப்பா?” எனக் கேட்க, அவனுக்கு முந்திய அகிலா,
“மாமா ஒன்னுமில்ல சின்ன மயக்கம் தான். நீங்கப் பதட்டப்பதாதீங்க. இந்தாங்க தண்ணீய குடிங்க” என்றவள் மாமியாரை தீயாய் முறைத்தாள். அதில் தான் தான் செய்த தவறே விளங்கியது ஈகைக்கு.
தாய், தகப்பன், அண்ணன் அண்ணீயென அனைவரும் வந்துவிட்டனர் அவளைத் தேடி, கணவன் உயிரைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தான். யார் முகத்தையும் அவனால் ஏறிட்டு பார்க்கமுடியவில்லை. அஸ்வந்த் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவன் மனதில் முள்ளாய் குத்தியது.
உண்மைதானே அவன் கூறிய அத்தனையும் உண்மைதானே. தான் அவளைத் தன் தாயிடம் விட்டுவிட்டு சென்றிருக்கக் கூடாது தான. தன்னையும், மதுவையும் பிரிக்கத் தாய் என்னவெல்லாம் செய்தார் எல்லாம் தெரிந்தும் தந்தையை நம்பி விட்டுச் சென்றிருக்கக்கூடாதோ. அவளைத் தன்னுடனே அழைத்துச் சென்றிருக்கனுமோ!
அன்பு அவனிடம் பேசத் தயங்கினார். அவனுக்கோ அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவரை மட்டுமல்ல யாரையும் பார்க்க மனம் வரவில்லை. அவர்கள் மதுதாராவை தனக்கு கொடுத்தாத கோபத்தில் தான் அவர்களின் மேல் கோபத்தில் இருந்தான், இன்று அவர்கள் எதை நினைத்துத் தடுத்தார்களோ அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. அவன் உயிரானவள் காய்ந்த கொடியாய் கிடக்க, அவன் தவறு கண்முன்னே நிற்க, கூனிப்போய் நின்றான். கூடவே அவன் உயிரானவளின் நிலை என்னவெனத் தெரியாத நிலை வேறு.
அன்புவும் மகளுக்கு என்னவோ எனப் பதட்டமாக இருக்க, அஸ்வந்த் தான் அவருடனே இருந்து அவருக்குத் தைரியம் கூறினான். “ஒன்னுமில்லப்பா கொஞ்சம் டென்சன் ஆகி மயங்கிட்டா வேற ஒன்னுமில்லப்பா” எனத் திரும்பத் திரும்பக் கூறி அவரை நிதானமாகக் கூறிக்கொண்டே இருந்தான்.
அகிலா ஈகைச்செல்வியின் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டாள். நால்வரும் அவர்களின் வேதனையிலேயே இருக்க, சித்தார்த் தனியாக இருப்பது போலவே இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் இருந்தும் அவர்கள் எல்லாம் தூரமாக இருப்பதை உணர்ந்தான் அதுவும் தன் முட்டாள் தனத்தால் என்பதும் புரிந்தது.
முன்பு எப்படி இருந்தார்கள் அவர்கள் எல்லாம். ஈகையும் அன்பும் மகன்போல அவனைப் பார்த்துக்கொண்டனரே! பள்ளிக் கல்லூரி படிக்கும்போது கூட அவனுக்குத் தாய், தகப்பனாகவே எல்லா இடத்திலும் நின்றனரே! அஸ்வந்த்! அவனுக்கு இவன் தோழன் இவனுக்கு அவன் தோழன் என இருவரும் இணைபிரியாமல் சுற்றினரே. ஏன் அகிலா கூட அவனைக் கூடப்பிறந்தவன் போலத்தானே பார்த்தாள். ஆனால் இன்று அனைவரும் தன்னை விட்டுத் தூர சென்றதாய் உணர்ந்தான், ஆனால் அவர்களைத் தூர நிறுத்தியதே அவன் தான் என்பதை வசதியாக மறந்து போனான்.
ஐ.சி.யூ விலிருந்து வெளிவந்தார் மருத்துவர். அவரைப் பார்த்ததும் ஓடிச்சென்று கேட்டான் சித்தார்த் “டாக்டர் தாராக்கு என்ன ஆச்சு? சரியாகிட்டாளா? நான் பார்க்கலாமா?”
“வெயிட் வெயிட். அவங்களுக்கு சுகர் ரொம்ப லோகிடுச்சு, அதோட ரொம்ப பிரஸர் ஆனதுல மூளைக்கு இரத்தம் போறதுல பிரச்சனை ஆகி, கார்டியாக் அரெஸ்ட் ஆகியிருக்கு.. ஆனா உடனடியா ஃபஸ்ட்எய்ட் பண்ணியிருக்கீங்க கூடவே டைத்துக்கு இங்கயும் கொண்டு வந்ததால இப்போ பிரச்சனை இல்லாம காப்பாத்தியாச்சு. ப்ளாக் எல்லாம் இல்ல இது அதிக டென்சன்ல வந்தது தான். அப்ஸர்வேஷன்ல இருக்கனும்” எனக்கூற அதிர்ந்தான் சித்தார்த்.
“அய்யோ! தாரா! என்னால தான்.. எல்லாம் என்னால தான். நான் மட்டும் உன் வாழ்க்கைக்குள்ள வராம இருந்திருந்தா இந்த நிலைமை உனக்கு வந்துருக்காதே! என் காதல் பொல்லாத காதல் அதால தான உனக்கு இந்த நிலைமை. செஞ்சிருக்க கூடாது. நான் உன்னைக் கல்யாணமே செஞ்சிருக்க கூடாது. உன்னை விட்டுட்டு ஊருக்குப் போயிருக்க கூடாது.
அதுவும் உன்னைக் கண்டாலே பிடிக்காத என் அம்மாக்கிட்ட உன்னை விட்டிருக்க கூடாது. தப்பு பண்ணிட்டேன். ரொம்ப ரொம்ப தப்பு பண்ணிட்டேன். என்னாலாம் உன்னைக் கொடுமை பண்ணுச்சோ. நீயும் என்கிட்ட மறச்சிட்டியே தாரா. கடைசி நானே உன்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துட்டேனே” என வாய்விட்டே கதறிவிட்டான் அந்த ஆறடி ஆண்மகன்.
அவன் கதறலைக் கேட்டுக்கொண்டே இங்கு மார்பை பிடித்துக்கொண்டு சரிந்தார் அன்பு. அஸ்வந்த் “அப்பா! அப்பா! என்னாச்சுப்பா அப்பா” எனக்கதற, அப்போது தான் அனைவரும் அன்புவைப் பார்த்தனர்.
டாக்டர் “தள்ளுங்க!” என அவரைப் பார்க்க,
அஸ்வந்த் “சார் அவருக்கு ஏற்கனவே அட்டாக் வந்துருக்கு சார். டீரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கோம்” எனக்கூற அதிர்ந்தான் சித்தார்த். அவனுக்கு இது புது தகவல் அல்லவா? நர்ஸ் அன்புவை ஐ.சி.யூக்கு கொண்டுசெல்ல அவருக்குச் சிகிச்சை ஆரம்பமானது. இடிந்து போய் அமர்ந்தான் அஸ்வந்த்.
அவன் அருகில் சென்று அமர்ந்தான் சித்தார்த். சத்தியமா இப்படி ஒன்னு நடந்திருக்கும்னு அவன் நினைக்கவே இல்லை. ஏன் இவ்வளவு நாள் பேசிக்கொண்டிருந்த ஆதவனும், மதுதாராவும் கூட அன்புவுக்கு மாரடைப்பு வந்ததை கூறவில்லை. அவன் அப்பா இளங்கோ கூட மூச்சுவிடவில்லை இதைப் பற்றி. அவனுக்குத் தலையே வெடித்துவிடும் போல் ஆனது.
“ஒரு ஆறு மாசம் தானடா நான் இங்க இல்ல.. அதுக்குள்ள என்னடா இவ்ளோ நடந்துருக்கு. மாமாக்கு எப்போடா அட்டாக் வந்துச்சு? எனக்குச் சொல்லவே இல்லையேடா நீ. அப்படி என்ன தாண்டா நடந்தது சொல்லித் தொலையுங்களேண்டா” எனக்கத்த,
“நான் சொல்றேன் அண்ணா. யாரும் சொல்லமாட்டாங்க. என்னைத்தவிற வேற யாரும் சொல்லமாட்டாங்க” என்று அவன் முன் வந்து நின்றாள் சிந்து.