எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 14

Fa.Shafana

Moderator
மாலை ஆறு மணி.

மழை துளித் துளியாய் பூமியை வந்தடைய ஆரம்பித்திருந்தது.

முச்சக்கர வண்டியில் இருந்தவாறே பணத்தைக் கொடுத்தவள் தன் பிள்ளைகளுடன் இறங்கி அவசரமாக நடந்தாள்.

இளைய மகன் அவளது தோளில் தூங்கி இருக்க, மூத்தவன் தாயின் கைப்பையைத் தூக்கிக் கொண்டு பின்னால் ஓடினான்.

"கவனம் அஷு வழுக்கி விழுந்துடப் போற" என்றவள் அவனையும் கவனித்துக் கொண்டே நடந்து தன் வீட்டின் முன் நின்றாள்.

அவளது கணவன் வேலை முடிந்து வந்திருந்தாலும் இப்போது தூங்கி இருப்பான். அவன் ஒரு குட்டித் தூக்கம் போடும் நேரம் இது.

"கீய எடுத்து கதவைத்திற அஷு" என்று கூற வரும் போதே அஷ்வின் அவளது கைப்பையில் இருந்து திறப்பை எடுத்திருந்தான். அவன் கதவைத் திறக்க முற்பட கதவு தன்னால் திறந்து கொண்டது.

'லாக் பண்ணாமலே தூங்கிட்டாங்களா?' என்று அவள் நினைக்கும் போதே

"அப்பா.." என்று அஷ்வின் குரல் கொடுத்தான்.

அதிசயமாக இந்நேரத்தில் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.

"ம்ம்.." என்று ஓர் ஒலியில் மகனுக்கு பதில் கூறி மனைவியை ஏறிட்டவனது பார்வை அவளது கையில் தூங்கியிருந்த குழந்தையைத் தொட்டு மீண்டது.

'இப்போ தான் வந்தாங்காளா?' என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ள அதற்குள் தம்பியின் காலணிகளைக் கழற்றி அதற்குரிய இடத்தில் வைத்திருந்தான் அஷ்வின்.

"டாக்டர் வர லேட்டாகிடுச்சு. மருந்து எடுத்துட்டு கால் பண்ணினா ஆட்டோ அங்கிளும் வர லேட்" என்று அவன் கேட்காமலே கூறியவள் அறைக்குச் சென்று குழந்தை ஆதவ்வை கட்டிலில் படுக்க வைத்து, போர்த்தி விட்டாள்.

முகம், கை, கால் கழுவிக் கொண்டு வந்து சமையலறைக்குள் நுழைந்து, மூவருக்கும் தேநீரைத் தயாரித்தவள் கணவனுக்கும் மகனுக்கும் கொடுத்து விட்டு தனது தேநீர்க் கோப்பையுடன் சாப்பாடு மேசையில் அமர்ந்து கொள்ள ஏனோ கணவனின் பார்வை தன்னைத் துளைப்பதாய் ஓர் உணர்வு.

'ஏன் இப்படி பார்க்கறாங்க?' என்றெண்ணியவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.

தேநீரைக் குடித்து முடித்தவன் என்றும் இல்லாதவாறு அமர்ந்திருந்த நீல்விருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள,

'என்னடா இது?' என்று தான் பார்த்து வைத்தாள்.

ஏன்? என்ன? என்று அவனிடம் கேட்கவும் முடியாது. தன்னிடம் கேள்வி கேட்பதிலும் தான் அதற்கு விளக்கம் கூறுவதிலும் ராகவனுக்கு என்றுமே பிடித்தமில்லை.

'சரி தான். ஏதாவதுன்னா கேட்பாங்க, சொல்லுவாங்க தானே?' என்று நினைத்துக் கொண்டவளுக்குத் தெரியவில்லை அவள் சில வருடங்களாக மறைத்து வைத்த ரகசியம் இன்று அவனுக்குத் தெரிந்துவிட்டதென.

அவள் இரவு சமையலைத் தொடங்கியிருக்க, அறையில் ஆதவ்வின் அருகில் சாய்ந்திருந்த அஷ்வின் அப்படியே தூங்கியிருந்தான்.

சமையலறையில் இருந்த வானோலிப்பெட்டியில் மெல்லிய ஒலியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவளது சமையலறை சகபாடி அந்த வானொலிப்பெட்டி. வேலை மும்முரத்தில் பாடல் வரிகளில் கவனமில்லாவிடினும் அந்த இசை அவளுக்குத் துணையாக இருக்கும்.

தட்டுகளை வைத்து இடியாப்பம் ஊற்றிக் கொண்டிருந்தவள் சற்றும் எதிர்பாராத விதமாக ஓங்கி ஒலித்தது,

''ப்ரிய நிலா" என்ற ராகவனின் குரல்.

சமையலறை வாசலில் வந்து நின்று அவன் அழைத்த சத்தத்தை விட அழைத்த பெயரில் தூக்கிவாரிப் போட, கையில் இருந்தவை கீழே விழ திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அழைத்தது அவன் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு அவன் அமைதியாக இருக்க, பார்வையோ அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது.

சட்டென்று தொற்றிக் கொண்ட பதற்றத்திலும் பயத்திலும் இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, உள்ளங்கையுடன் சேர்ந்து முழு உடலும் வியர்த்து விட கண்கள் கலங்கிப் போய் அவனைப் பார்த்தவளுக்குள்,

'எப்படித் தெரியும்?' என்ற கேள்வி எழுந்தது.

"ஆக அந்த ப்ரிய நிலா நீ தான்ல? நான் கூட ஏதோ தவறுதலா இருக்கும்னு நினைச்சேன்" என்று தன் கையை நீட்ட புரியாமல் பார்த்தவளின் பார்வையை கண்ணீர் மறைத்தது.

சட்டென கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

"ம்ம்.. உன் ஃபோன்" என்றான். அவளை நோக்கி நீண்ட கை அப்படியே இருந்தது.

"அ.. அது என் ஹேண்ட்பேக்ல இருக்கு"

"சீக்கிரம் எடுத்துட்டு வந்து கொடு" என்றவன் அவள் வெளியே செல்ல வழிவிட்டு நின்றான்.

தெரிந்து கொண்டு கேட்பவனிடம் இதற்கு மேல் எதையும் மறைக்க முடியாதென்று புரிந்த அதேவேளை தன் ஆசைகள் கனவுகள் எல்லாம்? என்ற கேள்விகளும் எழுந்தன.

அனைத்தும் முடிந்தது, இதற்கு மேல் எதுவும் இல்லை என்ற எண்ணம் தான் அவளுக்கு.

'நடக்குறது நடக்கட்டும். கோபப்பட்டா படட்டும், சண்டை போட்டா போடட்டும். இதையும் ஏற்று, கடந்து.. கடவுளே!' என்று ஆயாசமாகவும் தன்னிலை எண்ணி கவலையாகவும் என்னவெல்லாம் பேசப் போகிறானோ என்று பயமாகவும் என அனைத்து உணர்வுகளும் தன்னை இறுக்குவது போல இருந்தது அவளுக்கு.

"ஓ.. உனக்கு தனியா ஃபேஸ்புக் க்ரூப் எல்லாம் இருக்கா? பரவாயில்லையே ரெண்டாயிரம் பேர் இருக்காங்க அதுல. ரைட்டர் ப்ரிய நிலா பெரிய ரைட்டர் தான் போல" என்றவன் அடுத்தடுத்து அவளது அலைபேசியை ஆராய முற்றிலும் ஓய்ந்து போன தோற்றம் அவளிடம்.

அவள் விளக்கம் எதுவும் கூறவே தேவையில்லாத விதத்தில் அத்தனையும் அவளது அலைபேசியில் இருந்தனவே.

இத்தனை வருடத்தில் அவளது அலைபேசியை அவன் எடுத்து, ஆராய்ந்து பார்த்தே இல்லை. அதனாலேயே அவளது உலகம் ரகசியமாக இருக்க இன்று அவன் தெரிந்து கொண்டிருந்தான்.
ஆனால் எப்படி அவனுக்குத் தெரியவந்தது? என்ற கேள்வி தான் அவளுள் வண்டாகக் குடைந்து கொண்டிருந்தது.

மாலை மூன்று மணியளவில் இவள் பிள்ளைகளுடன் மருத்துவமனைக்கு சென்றிருக்க வேலைவிட்டு வந்த ராகவன் உடை மாற்றிக் கொண்டு வர வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

"சார் குரியர்" என்று கொடுக்க,

வாங்கிப் பார்த்தவன் அதில் இருந்த பெயரைப் பார்த்து யோசனையாக

"ப்ரிய நிலா..?" என்க

"ஆமா சார். மேடம்க்கு தான் வந்திருக்கு" என்க அதில் இருந்த அவளது அலைபேசி எண்ணைக் கவனித்துவிட்டு, கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டான்.

ஆனாலும் மனதில் சந்தேகம். அனுப்புனர் பெயரில் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெயர், விலாசம் இருக்க அடுத்து எதையும் யோசிக்காமல் பொதியைப் பிரித்து விட்டான்.

'ப்ரிய நிலா' என்ற பெயரில் முதலாம் பரிசுக்கான சான்றிதழ், கேடயம் மற்றும் ஒரு புத்தகமும் இருந்தது.

அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அவனது அலுவலக அறையில் வைத்து விட்டு வந்து அமர்ந்து கொண்டவன் இப்போது விசாரணையை ஆரம்பித்திருக்க நடந்தவை எதுவும் தெரியாமல் அவள்.

"இப்படியே நின்னுட்டு இருந்தா டின்னர் யார் சமைக்கிறது? உன் கதைல இருந்து கேரக்டர் யாராவது வருவாங்களா?" என்றவனது கவனம் அப்போதும் அவளது அலைபேசியில் தான்.

"இல்ல.. நான்.. முடிஞ்சது" என்று உளறிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்து வேலையில் கவனமானாள்.

புலனத்தில் குறுஞ்செய்தி வந்த ஒலியில் திக்கென்றாலும் திரும்பியும் பார்க்காமல் வேலையைத் தொடர ராகவன் அலைபேசியுடன் வரவேற்பறைக்குச் சென்றுவிட்டான்.

முதல் கட்ட அதிர்ச்சி, பயம் அனைத்தும் விலகி கவலை மட்டுமே இப்போது.
இன்றோடு முடிந்தது தன் எழுத்துலகம் என்ற எண்ணம் கண்ணீரைச் சுரக்க வைக்க கன்னங்களை மாறி மாறி தோள்களில் துடைத்துவிட்டவாறே சமையலை முடித்தாள்.

ஆதவ் எழுந்தவன் காய்ச்சல் கொடுத்த அசதியிலும் உடல் வலியிலும் அழ அவனது சத்தத்தில் அஷ்வினும் எழுந்துவிட அடுத்து அவளது கவனம் பிள்ளைகளிடம் திரும்பியது.

இரவுணவு நேரம் முடிந்து பிள்ளைகளைத் தூங்க வைத்து, இவளது வேலைகள் முடிந்து தூங்கும் நேரமாகியும் அவன் அவளது அலைபேசியைக் கொடுக்கவில்லை.

தானாகச் சென்று கேட்கவும் முடியாது, கேட்கும் எ‌ண்ண‌மும் இல்லை அவளுக்கு.

அத்தனை நேரமும் அமைதியாக
கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் சட்டென்று தன்னுடையதை எடுத்து அவளது அண்ணனை அழைத்திருந்தான்.

"என்ன மச்சான் உங்க தங்கச்சி ரொம்பப் பெரிய வேலை எல்லாம் பார்க்குறா நீங்களும் அதுக்கு உடந்தையா இருக்கீங்க போல?" என்றவன் அலைபேசியின் ஒலிபெருக்கியை இயக்கிவிட கண்ணன் பேசியது கேட்டது.

"என்ன சொல்றீங்க? புரியல்லையே மச்சான்" என்றான்.

"என்ன நடந்தாலும் உங்க கிட்ட சொல்லிடுவாளே. இது தெரியாமலா இருக்கும் உங்களுக்கு? இல்ல உங்க கிட்டயும் மறைச்சுட்டாளா?" என்று ராகவன் கேட்க இடையே பதறியடித்துக் கொண்டு

"இல்ல.. இல்ல அவங்க யாருக்கும் தெரியாது. ப்ளீஸ் அவங்களை எதுவும் சொல்லாதீங்க" என்றாள் அவள்.

தங்கையின் குரல் கேட்டதும், "என்ன பண்ணின பாப்பா? மச்சான் என்ன சொல்றாங்க?" என்றான்.

"நாளைக்கு மார்னிங் வாங்க பேசலாம்" என்றவன் அழைப்பைத் துண்டிக்க அடுத்த நொடி அவளது அலைபேசி அலறியது.

அதையும் அவனே ஏற்று "நாளைக்கு பேசலாம் மச்சான்" என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து கொண்டான்.

அடுத்தடுத்து அவளது புலனத்தில் குறுஞ்செய்திகள் சில வர இணைய இணைப்பைத் துண்டித்தும் விட்டான்.

காலையிலேயே கண்ணன் வந்துவிட அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு.

"வாங்கண்ணா" என்று கூறினாலும் முகத்தில் அப்பட்டமான பதற்றம் அவனைக் கண்டதும்.

"என்னாச்சு பாப்பா?" என்று சற்று கடுமையாகவே அவன் கேட்க பதில் கூறும் முன்பே ராகவன் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்தான்.

முன்தினம் அவனது கை சேர்ந்தவற்றைக் கொண்டு வந்து கண்ணனின் கையில் கொடுக்க அவற்றைப் பார்த்து விழி விரிய பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.

மற்ற நாட்களில் அவளுக்கு வரும் அஞ்சல் பொதிகள், பரிசுகள் எல்லாம் அவள் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வருவதும், அப்படி வருமாறு வசதி செய்து கொள்வதுமாக இருக்க இந்த முறை நடந்த போட்டியின் பரிசுகள் அவளுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அனுப்பப்பட்டிருந்தன.

மருத்துவமனையில் வைத்து அலைபேசியின் ஒலியை அணைத்து வைத்திருக்க அழைப்புகளும் தவறி இருந்தன.

அன்றைய அவளது நேரம், அனைத்தும் ராகவனின் கையில் கிடைத்து வசமாக அவளை சிக்க வைத்து அவளது எழுத்துப் பயணத்திற்கு சிக்கலாகி இருந்தன.

"இன்னும் எழுதுறியா? உன் எழுத்த விடல்லையா நீ? அதுவும் போட்டி எல்லாம் எழுதி.. என்ன பாப்பா இது? வேணாம் விட்டுடுன்னு சொன்னேன் தானே?" என்று கண்ணன் கேட்க பதிலின்றி நின்றாள் அவள்.

"உங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்து எழுதுறா மச்சான். என்னைத் தவிர வீட்டுல யாருக்கும் தெரியாது. பிறகு எழுதாதன்னு சொல்லி எழுதாமத்தான் இருந்தா இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிருக்கா. எனக்கே தெரியாது" என்றான் கண்ணன்.

"நான் இருக்கும் போது அதிகமா ஃபோன் யூஸ் பண்ணமாட்டா. சில நேரம் வெச்சுட்டு இருந்தாலும் நான் இப்படி கதை எல்லாம் எழுதுவான்னு கொஞ்சம் கூட நினைக்கல்லை. நேற்று இவ ஃபோன செக் பண்ணும் போது தான் தெரியுது இவ பண்ணிட்டு இருந்த, இருக்குற வேலையெல்லாம்.
இப்படி போட்டில எழுதி ஜெயிக்கிறது எல்லாம் முதல் முறையில்ல. நிறைய இது போல வந்திருக்கு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்னு மேடம் கலக்கிட்டு இருக்காங்க" என்று ராகவன் கூற நம்ப முடியாத பார்வை பார்த்த கண்ணன்,

"ஆனா மச்சான் இவளோட ஃபேஸ்புக்ல நானும் இருக்கேன் அப்படி ஒன்னும்.." என்றவனை இடை மறித்து,

"அவளுக்கு இதுக்குன்னு தனியா ஃபேஸ்புக் இன்ஸ்டா எல்லாம் வேறயா வெச்சிருக்கா. வாட்ஸ்-அப் மட்டும் ஒரே நம்பர் யூஸ் பண்றா" என்றான்.

"தப்பில்லையா பாப்பா? நீ இப்படி பண்ணி இருக்க வேணாம்" என்றவன் தொடர்ந்து,

"வீட்டுல இருக்கும் போது சும்மா தானே எழுதிட்டு இருந்த இப்போ ஏன் போட்டில எல்லாம் எழுதிட்டு இருக்க? நம்ம வீட்டுல யாருக்கும் பிடிக்காது அதே போல மச்சானுக்கும் அவங்க வீட்டாளுங்களுக்கும் பிடிக்காம இருந்துடப் போகுது இதெல்லாம் வேணாம்னு நான் அவ்வளவு சொல்லி தானே எழுதுறத விட்ட. மறுபடியும் ஏன் ஆரம்பிச்ச? இப்போ மச்சான் சொல்ற மாதிரி இருந்தா இதுக்கு முன்னாடி வந்த கிஃப்ட் எல்லாம் எங்க? என்ன பண்ணின?" என்றான்.

ராகவன் சற்றே கோபக்காரனாக இருக்க இப்படி தன் அறிவுரைகளை மீறி இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டாளே, என்ற ஆதங்கம் கண்ணனுக்கு.

"உ.. உள்ள. கிட்சன் ஸ்லாப்ல" என்றவள் இனிமேல் அவற்றை மறைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அனைத்தையும் இருவரிடமும் காண்பித்து விட நினைத்து அவற்றை எடுக்கவென உள்ளே சென்றாள்.

அவளைப் பின் தொடர்ந்து வந்த கண்ணன் மேலே ஏறி அவள் காட்டிய அட்டைப் பெட்டியை எடுத்தான்.

அந்த பெட்டியில் நிறைய கேடயங்கள் அவளது புனைப் பெயர் தாங்கி இருந்தன. முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்றவை; பங்கேற்பு, நடுவரின் சிறப்புத் தெரிவு என பல வகைகளில் அவை இருக்க
அவற்றைப் பார்த்த இருவருக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது.

"கிஃப்ட், ராயல்டி கிடைச்ச புக்ஸ் எல்லாம் ரீடர்ஸ், ஃப்ரெண்ட்ஸ்க்கு கொடுத்தது போக மீதி ரூம்ல கட்டிலுக்கு கீழ இருக்கு, சர்டிபிகேட் எல்லாம் ஃபைல்ல போட்டு பீரோல மறைச்சு வெச்சிருக்கேன்" என்றவள் அவற்றையும் எடுத்துக் காட்டினாள்.

"பணமும் கிடைக்கும். அதை எ‌ல்லா‌ம் பேங்க் அக்கவுண்ட்ல போட்டு வெச்சிருக்கேன்" என்றாள் இறுதியாக.

"எவ்வளவு வேல பார்த்திருக்க நீ? பணம் எவ்வளவு இருக்கு" என்றான் கண்ணன்.

"இந்த போட்டில மட்டும் ஐயாயிரம். அதுக்கு முன்ன ஆயிரம், ரெண்டாயிரம், ஐயாயிரம்னு ஏகப்பட்டது வந்திருக்கு" என்றான் ராகவன்.

அலைபேசியில் இருந்த சில விபரங்களை வைத்து தெரிந்து கொண்டதை அவன் கூற,

"இந்த மூனு வருஷத்துக்கும் மொத்தமா முப்பத்தஞ்சாயிரம் கிடைச்சது அதுல கொஞ்சம் செலவு பண்ணிட்டு மீதி முப்பதாயிரம் வெச்சிருக்கேன்" என்றாள்.

மலைத்துப் போய் பார்த்தனர் அவளது அண்ணனும் கணவனும்.

"அவ்வளவு இருக்கா?"

"ம்ம்.." என்று தலை குனிந்து கொண்டாள்.

"உனக்கே நீ பண்ணினது தப்புன்னு தெரியுது அதானே இப்படி தலை குனிஞ்சு நிற்குற?" என்றான் கண்ணன்.

"நீங்க சொல்லவும் எழுதாம தான் இருந்தேன் ண்ணா. கதைகள் படிக்கிறதோட விட்டுட்டேன். கல்யாணம் முடிஞ்சு அஷ்வின் பிறந்து கொஞ்ச நாள் தான் என்னால அப்படி இருக்க முடிஞ்சது. அதுக்குப் பிறகு அப்படி இருக்க முடியல்லை. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்குற மாதிரி; எழுதின என் கையும் என் கற்பனையும் என்னை சும்மா இருக்கவிடல்லை. பார்க்குற ஒவ்வொரு விஷயமும் எனக்குள்ள ஒரு கதைக்கான கருவை, கற்பனைய உருவாக்க ஆரம்பிச்சது.

என் எழுத்து எனக்கு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். கிடைக்குற டைம்ல எழுதி ஃபோன்லயே வெச்சிடுவேன். நாலு கதை எழுதி அப்படியே இருந்தது. அதுக்குப் பிறகு முன்ன மாதிரி சைட்ல போடலாம்னு யோசிச்சேன்" என்றவள் ராகவனை ஏறிட்டு,

"இவங்க கிட்ட கேட்டு வேணாம்னா இவங்களை மீறி ஒன்னும் பண்ண முடியாது. அதான் யாருக்கும் தெரியாம எழுத ஆரம்பிச்சேன். முன்ன இருந்த பென் நேம் உங்களுக்குத் தெரியும் அதனால புதிய பெயர்ல எழுதினேன். முன்ன இப்படி கதைகளுக்கான போட்டிகள் இல்லை, ஆனா இப்போ நிறைய இருக்கு. எனக்கான ரீடர்ஸ் நிறைய இருக்காங்க, சப்போர்ட் பண்ண நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவங்க சொல்லவும் தான் போட்டிகள்ல எழுத ஆரம்பிச்சேன்" என்றாள்.

"சோ.. நேற்று என் கைல இது கிடைக்காம இருந்தா எங்களுக்குத் தெரியாமலே போய் இருக்கும்ல?" என்றான் ராகவன்.

ஆமோதிப்பாக தலையசைத்தாள் அவள்.

"எவ்வளவு தைரியம் உனக்கு? புருஷன் கிட்ட இத்தனை வருஷமா மறைச்சு, இனிமேலும் மறைச்சு இப்படி ஒரு விஷயம் கண்டிப்பா தேவையா உனக்கு? வேணாம் பாப்பா விட்டுடு.
இது கடைசி இது தான் கடைசி இதுக்குப் பிறகு நீ எழுதுறத நினைக்கவே கூடாது" என்றான்.

அவள் எதிர்பார்த்தது தானே இது. என்ன ஒன்று கணவனிடமிருந்து எதிர்பார்த்தது தமையனிடமிருந்து வந்தது.

ஆனால்,

"இல்லை நீ எழுது" என்று
முற்றிலும் எதிர்பாராத வகையில் கணவனிடமிருந்து வந்தது அவளுக்கான வார்த்தை.

"மச்சான்..!" என்றவனைப் பாராது தன்னையே விழி விரிய பார்த்து நின்றவளை ஏறிட்டு

"முன்னாடி நீ கேட்டிருந்தா என்ன சொல்லி இருப்பேன்னு தெரியாது. ஒருவேள இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு தான் சொல்லி இருப்பேன்.

ஆனா இப்போ அப்படி இல்லை உன் திறமை தெரியுது. உனக்கான, உன் எழுத்துக்கான அங்கீகாரமா, வெற்றியா இத்தனையும் பார்த்த பிறகும் உன்னை முடக்கி வைக்க நான் கிறுக்கன் இல்லை.

உன் ஃபோன்ல அத்தனை பாராட்டுகள், வாழ்த்துகள் இதெல்லாம் நீ வெளிய சொல்லி சந்தோஷப்பட்டுக்க முடியாம இத்தனை நாள் இருந்தது போதும் இனிமேலும் இப்படி இருக்க வேணாம்.

உன் திறமை உனக்கு இத்தனையும் கொண்டு வந்து சேர்க்குது அதை நான் ஏன் தடுக்கணும்? தாராளமா எழுது" என்றுவிட்டான்.


முன்தினம் இரவில் இருந்து இப்போது வரை மனதைப் பற்றிப் பிடித்திருந்த அத்தனை இறுக்கங்களும் தளர, மனம் இலகுவாக, இதன் பிறகு தனக்கில்லை என்று நினைத்த தன் உலகம் தன் கையிலேயே தான் என்று புரிந்ததும் கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

"மச்சான்.." என்றான் கண்ணன்.

அவனை அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தவன்,

"நம்ம கிட்ட மறைச்சுட்டா அது தப்பு தான். அதைத் தவிர வேற ஒரு தப்புமே இல்லை. ஃபோன்ல ஒரு தவறான மெசேஜ் கூட இல்லை.

முழுக்க முழுக்க ரைட்டர்ஸ் ரீடர்ஸ் கூட தான் பேசிட்டு இருந்திருக்கா. அவளோட உலகம் அதுவாகத்தான் இருந்திருக்கு. அவ சொந்தப் பெயரை மறைச்சு, வேற ஒரு பெயர்ல அவளுக்கான அடையாளத்தை, அவளோட திறமைய மட்டுமே வெச்சு தேடி இருக்கா. அது அவளுக்குக் கிடைச்சும் இருக்கு. அதுக்கு நாம எந்த உதவியும் செய்யல்லை தடுக்காமலாவது இருப்போம்.

கதை எழுதுறான்னு அவ அவளோட மத்த வேலைகள்ல குறை வெச்சதே இல்லையே? பிள்ளைகள கவனிக்கிறது, வீட்ட கவனிக்கிறது, எங்க ஊருக்குப் போனா அங்க அவளோட கடமை, வேலைன்னு எதுலயுமே ஒரு குறை சொல்ல முடியாது. டைம்க்கு எல்லாம் பக்காவா இருக்கும். அப்படி இருக்கும் போது அவ அவளோட சந்தோஷத்துக்கு எழுதுறா, அதுல ஒரு திருப்தி இருக்கு அவளுக்கு. அதை நாம கெடுப்பானேன்?" என்றான் நீண்ட விளக்கமாக.

"நீங்களே சொல்லிட்டீங்களே பிறகு எனக்கு என்ன பிரச்சினை? சந்தோஷமா எழுதட்டும்" என்றான் கண்ணன்.

காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் வெளியேற பிள்ளைகளின் வேலையையும் முடித்தவள் அலைபேசியை எடுத்தாள்.

முன்தினம் பரிசு வந்து சேர்ந்த தகவலையும் நன்றியையும் தெரிவித்து விட்டு, அவளும் தோழியர் இருவரும் இருக்கும் குழுவில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

அந்த இருவருக்கும் மட்டுமே அவளது திருட்டுத்தனம் அனைத்தும் தெரியும்.

அவர்கள் பதில் அனுப்பிய உடனே நடந்த அனைத்தையும் கூறி,

"நம்ம ஆன்டி ஹீரோ என்னை தொடர்ந்து எழுத சொல்லிட்டாரே" என்று அனுப்பிய குரல் பதிவில் குதூகலிப்பு.

"நான் சொன்னேன்ல.. ராகவ் அண்ணா அவ்வளவு எல்லாம் ஆன்டி ஹீரோ இல்லை. கொஞ்சமே கொஞ்சம் தான்" என்று பதில் வந்தது.

பரிசுகளின் நிழல்படங்களை முகநூலிலும் நண்பர்களிடையேயும் பகிர்ந்தாள்.

வழக்கம் போல வாழ்த்துகள் குவிந்தன.

உண்மையை மறைப்பதால் இத்தனை வருடங்கள் அவளுள் இருந்த நெருடல் நீங்கியிருக்க வழக்கத்துக்கு மாறாக ஒரு நிறைவும் பெரு மகிழ்ச்சியும் அவள் மனதில்.
***********************
ஆசைப்பட்டதை அடையவும், கனவுகள் கைசேரவும் பல இன்னல்கள் இடர்களை கடந்து வந்தவர்களும் வருபவர்களும் என நம்மிடையே பல 'ப்ரிய நிலாக்கள்' இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களுக்குத் துணையாக, இணையாக, ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்!
=================

மேலும் என் சிறுகதைகள் படிக்க :



எனது முகநூல் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்:

 
Last edited:

Fa.Shafana

Moderator
Super da. Ithu pola ethanai writers veetuku theriyama mugamudi potu eluthurangalo.
எனக்குத் தெரிய இப்படி இருக்காங்க அக்கா. அதான் இப்படி ஒரு கதை எழுதலாம்னு எழுதினேன்.
Thank you akka
 
Top